Tuesday, December 31, 2013

உங்க அழைப்பேசி ரிங் ஆகுற சத்தம் கேட்குது, அவங்கதான் - எச்சரிக்கை பாஸ்.


31-Dec-2012 அன்னைக்கு ஆறு மணிக்கு அலுவலகத்துல இருந்து கிளம்பினேன் வீட்டுக்கு, அவசர வேலை எதுவும் இல்லை என்ற போதும் ஏதோ இனம் தெரியா கொண்டாட்டம்,அடுத்த நாள் பிறக்கவிருக்கும் புத்தாண்டிற்க்காக இன்றே ஏதோ சந்தோசம் மனதில், இந்த புத்தாண்டை தவற விட்டு விட கூடாது, ஏதாவது ஒருவகையான சந்தோசத்தில் திளைத்தே ஆக வேண்டும் என்ற என் ஆழ்மனத்தின் எண்ணத்திற்கேற்ப, பேருந்தில் செல்லும் போதே நண்பன் ஒருவன் அழைத்தான் அழைப்பேசியில்.

அவன்: டேய், வரியா எங்க ரூமுக்கு, புத்தாண்டை விமர்சியாக கொண்டாட திட்டம் போட்டு இருக்கோம்,

நான்: இல்லடா,வீட்டுக்கு போகணும் நான் வருவேன்னு எதிர்பார்த்துகிட்டு இருப்பாங்க

அவன்:ஏன்டா காரணமா சொல்லதெரியாது உனக்கு.

நான் : சரிடா, நான் ஏதாவது சொல்லிட்டு வரேன்.

வீட்டுக்கு அலைபேசியில் அழைத்து அலுவலகத்தில் வேலை இருப்பதாகவும், வர நேரம் ஆகும் என கூறிவிட்டேன்.

அடுத்த பேருந்தை பிடித்து, நேராக நண்பனின் ரூம்க்கு போயி சேர்ந்தேன். குறைந்தது ஒரு பத்து நண்பர்கள் ஒன்று கூடி இருந்தார்கள். சினிமா பாடல்களை ஒலிக்கவிட்டு ஆட்டம் ஆடிக்கொண்டு இருந்தார்கள். கொஞ்சம் வெட்கப்பட்ட நானும் ஆடத் தொடங்கினேன். நொடிகள் நிமிடங்கள் ஆகின, நிமிடங்கள் மணித்துளிகள் ஆகின,

அவன்: இந்த புத்தாண்டுக்கு என்னடா சபதம் எடுக்க போற, அதை கடை பிடிக்கபோற அடுத்த வருடத்திற்கு?

நான்: எதுவும் இல்லடா. நிமிட முள் பன்னிரெண்டை நெருங்கிகொண்டிருந்தன, அறைக்குள்ளே இருந்து ஒரு பெரிய பெட்டியை கொண்டு வந்து திறந்தனர், பாட்டில்களை பெட்டியில் இருந்து உருவினர்,

நான்: டேய் எப்ப இருந்துடா குடிச்சு பழகின (என்று நண்பனிடம்).

அவன் : அதெல்லாம் போன வருஷம் தாண்ட, அதை விடு, இந்தா பிடி.

நான்: ஐயோ வேண்டாம்ட, இந்த பழக்கம் இல்லடா,

அவன்: சும்மா ஒரு நாள் தானடா,இந்தா பிடி என்றான்.

நான் : வேண்டாம். வேண்டாம்.

அத்தனை பெரும் ஒற்றுமையாய் சும்மா அடிச்சு பாரு நண்பா, சகோதர என ஆளு ஆளுக்கு ஒரு அடைமொழியில் என்மீது கரிசனமாய். கையில் வாங்குவதற்கே தடுமாறிய மனது, வாங்கியதும் தாமதிக்காமல் குடிப்பதற்கு ஏதுவாய் நிமிட முள் பன்னிரெண்டை தொட்டது, புத்தாண்டு கோசம், நண்பர்கள் வேண்டுகோள், சினிமா பாட்டு, என அனைத்தும் தப்பு என்பது தப்பு இல்லை, தவற விட்டு விட்டதாய் பிறகு வருந்துவாய் என்பது போல் மாற்றியது.

குடித்தேன், குடித்தேன், வாந்தி எடுத்தேன், குடித்தேன், வாந்தி எடுத்தேன், இரவு முழுவதும் ஆட்டம் குடும்பத்தை நினையாமல், தப்புகள் அனைத்தும் நியாயம் ஆகின அன்று இரவு முழுவதும்.

தப்புகள் யாவும் தப்பாகவே தெரிந்தன. புத்தாண்டு பிறந்த அந்த அதிகாலை பொழுதில்..என்ன செய்ய தவறை உணர்ந்தவனாய் வீடு திரும்பினேன்.அனைத்து தவறிற்கும் என்னுள் மன்னிப்பு கேட்டுக்கொண்டு வருடத்தை தொடங்கினேன்.

வருடத்தை தொடங்கிய எனக்கு தெரியாது அன்று செய்த தவறு இந்த முழு வருடமும் என்னுடன் பயணிக்கும் என்று.

ஆம், சிறிய சண்டை, வேலைப்பளு,தவிர்க்க முடியாத சில நிகழ்வுகள், கோபம், சந்தோசம், தோல்வி, வெற்றி என்ற அனைத்திற்கும் பாட்டிலை கையில் பிடித்தேன்,குடித்தேன்.என்னுள் ஒன்றானது, என்னை மாற்றியது. சின்னதாய் கோவித்து கொண்ட மனைவியை,சமாதானப்படுத்த தெரியாமல் பாட்டிலை பிடித்துகொண்டு,பாட்டில் தான் என் மனைவி நீ இல்லை என்பதுபோல் சண்டையிட்டேன்.

இப்பொழுது தனிமையில் இருக்கிறேன். கடந்த வருடத்தில் கடைபிடிக்க வேண்டிய சபதம் ஏதும் இல்லாத எனக்கு, இந்த ஆண்டு ஒன்று இருக்கிறது. இந்த நான்கு நாட்களும் என்னை மாற்ற முயற்சித்தன,ஏதோ உணர்ந்தவனாய் இன்று புத்தாண்டு சபதம் எடுக்கிறேன் இந்த புது வருடத்தில் குடிக்க போவதில்லை என..

இன்று 31-dec-2013...... இப்பொழுது அழைப்பேசி ஒலிக்கிறது,

அவன்: "டேய் ஒரு நிமிடம் அப்டியே lineலையே இருடா , conferenceபோடுறேன்."

ஒரு நிமிடத்திற்கு பிறகு.

அவன்: " டேய் , சுரேஷ், ராமகிருஷ்ண, சிவா,கார்த்தி, அன்பு, விஜய் ..எல்லோரும் வந்துடுங்கட, இன்னைக்கு ரூம்ல புத்தாண்டு கொண்டாடலாம். ... Drinks party யும் உண்டு, மறக்காம வந்திடுங்க..

நான்: எதுவும் பேசாமல் அமைதியாய் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

விஜய்: டேய் நான் வருலடா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, கொஞ்சம் குடும்ப வேலை இருக்கு..அதுவும் Drinks partyலாம் வைக்கிறீங்க, அதனால அதுல எப்பவும் ஆர்வம் இல்லை எனக்கு,மன்னிக்கவும்...

நான்: (வெட்கி தலை குனிகிறேன், இதே காரணம் நமக்கு அன்னைக்கு கிடைக்காததுக்கு காரணம் ரெட்டை மன நிலை என்பது புரிந்தது, மெதுவாய் பேச ஆரம்பிக்குறேன்).எனக்கும் கொஞ்சம் வேலை இருக்குடா.

அவன்: என்னடா இப்டி சொல்ற, ரெண்டு கை குறையுதேடா, என்ன பண்ணறது..

சுரேஷ்: டேய் விடுடா, என் நண்பர்கள் ரெண்டு பேரு இருக்கானுக, அவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்வோம்.

அழைப்பு துண்டிக்க பட்டது...

என்ன பாஸ் உங்க அழைப்பேசி ரிங் ஆகுற சத்தம் கேட்குது, அவங்கதான் எச்சரிக்கை பாஸ் ....

Wednesday, December 25, 2013

உடைந்த ஏக்கங்கள்...அன்றைய காலை பொழுது விடிந்தது 15-மார்ச்-2007 என்ற அடையாளத்தை சுமந்து கொண்டு, பாதி கனவின் விழிப்பும் ஏதோ செய்து கொண்டிருந்தது விழித்த பின்னரும்,ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாய் வேகவேகமாய் கிளம்ப ஆரம்பித்தேன், பயணத்திற்கும் தயாராகும் ஒவ்வொரு கணமும் இரு சிந்தனைகள் மனதை துளைத்த வண்ணம் இருந்தன.

ஒன்று, இருபத்து மூன்று வருடங்கள் கட்டப்பட்ட கடிவாளத்துடன் நேர்ப்பாதையில் ஓடி,தனக்கான ஒரு அங்கீகாரத்தை எழுப்பி,அதற்கான சரியான வேலையில் அமர கடந்து இரண்டு வருடங்களாய் சென்னை நகரத்தின் சாலைகளை தேய்த்திருக்கிறேன்,அந்த தேடலை இன்றோடு கைவிட போகிறோமா?. 

மன்றொன்று, அவ்வப்பொழுது பொழுதுபோக்காய் எழுதியதின் பயனாய்,புதியதாய் அமையப்போகும் வழியைத்தேடி பயணிக்கும் வழியின் வலியை சந்திக்கபோகிறோமா? இரட்டை எண்ணச்சிந்தனையின் நடுவே எப்படியோ கிளம்ப தயாராகி கிளம்பிவிட்டேன்,பொழுதுபோக்கிற்காய் எழுதிய தாள்களை சுமந்துகொண்டு புறப்பட்டுவிட்டேன், கடந்த இரு ஆண்டுகளின் பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட பயணம் இப்பயணம், சன்னலோர காட்சிகளில் கண்கள் பதிய,எண்ணங்கள் எங்கோ சுற்றி திரிய பயணப்பட்டேன். 

என் கைகளுக்குள் அடைபட்டிருந்த பாதுகாப்பு அட்டைக்குள் இம்முறை சுயவிவர தாள்களுக்கு பதிலாய் பொழுதுபோக்கிற்காய் எழுதிய தாள்கள், ஒவ்வொன்றாய் படித்துக்கொண்டு செல்லும் வேலையில் வந்து சேர வேண்டிய இடமும் நெருங்கிக்கொண்டு இருந்தது.என்னையும் என் எண்ணங்களையும் சரி செய்துகொண்டு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அந்த பிரபல திரைப்பட இயக்குனரின் இல்லத்தை நெருங்கினேன். 

பெரிய இரும்பு கம்பி கதவுகளை நெருங்கிய சமயத்தில், காவலாளி என்னருகே நெருங்கினார், ஒரு வித பதட்டத்தினை மறைத்துக்கொண்டு, இயக்குனர் சார் அவர்களை பார்க்கணும், அவரை பார்த்து கொஞ்சம் பேசனும் அவரிடம் உதவி இயக்குனரா சேருவதை பத்தி கொஞ்சம் பேச வந்து இருக்கேன் என நான் முடிப்பதற்குள் அவர் பேச தொடங்கினார், 

அவரின் பதிலை ஆவலுடன் கேட்க முற்படுகிறேன், என் அலைபேசி சிணுங்கியது அந்த நொடியில்,அலைபேசியை செயல்பெற செய்யும் முன் அலைபேசி எண்ணை நோக்கினேன், பார்த்த நொடியிலே அழைப்பை துண்டித்தேன் மனதில் முனகியவாறு " ஆமா நேர்முகத்தேர்வுக்கு வா வா அப்டின்னு கூப்பிடுவாணுக, அங்க போனதும் காசுகட்டனும் வேலைக்கு அப்டினுவாணுக, இல்லைனா கேள்விகேட்டுபுட்டு உங்கள அப்புறம் அழைக்கிறோம் அப்டினுவாணுக, இல்லைனா சுயவிவரம் அடங்கிய தாள வாங்கிகிட்டு அப்புறம் கூப்பிடுறோம் அப்டினுவாணுக, ரெண்டு வருசமா தேடியாச்சு ஒன்னும் கிடைக்கல, படிச்ச அந்த வேலையே வேண்டாம்னு தானே இங்க வந்திருக்கோம் இங்க, இப்பவும் நிம்மதியா விட மாட்டானுக".. 

மன்னிக்கவும் ,என்ன சொன்னீங்க அண்ணே என்று காவலாளிய கேட்பதற்குள் மறுபடியும் அலைபேசி கூச்சலிட கோபத்தில் அலைபேசிய முற்றிலும் அணைத்துவிட முற்படும் நொடியில் "அப்பா" என்று எழுத்தை பார்த்த நொடியில் அய்யயோ அப்பா என்று சற்று தொலைவு விலகிவந்து பேச ஆரம்பிக்கிறேன், 

சொல்லுங்கப்பா , எப்படி இருக்கீங்க, என்ன விஷயம் சொல்லுங்க அப்பா... அது ஒன்னும் இல்லப்பா, என்ன பண்ற அப்டின்னு சும்மா நலம் விசாரிக்க தான், இப்போ சின்னபையன் மாமா இருக்காருல அவரு வீட்டுக்கு கோவில் திருவிழாவுக்கு வந்தேன், சும்மா பேசிகிட்டு இருந்தோம், உன்னைபத்தி கேட்டாரு ,அதான் உன்கிட்ட பேசலாம்னு,முக்கியமான விசியம்லாம் ஒண்ணும் இல்லப்பா ,நீ வெச்சிட்டு படிகிற வேலைய பாருப்பா.. ஏதோ நினைவில் அப்படியா வைத்துகொண்டு இருக்கிறேன் அழைப்பை துண்டிக்காமல் ..மறுமுனையில் அவரின் சத்தம் கேட்கிறது.. 


பாருடா சின்னபையா, இந்த பையன் வேலை வாங்கியே தீருவேன் அப்டின்னு இந்த சென்னைல தனியா ஒண்டியா கிடந்து கஷ்டப்பட்டுகிட்டு கிடக்கான், எப்படியும் இந்த கம்ப்யூட்டர் கம்பனில வேலை வாங்கியே தீருவான் என் பையன்,அதுவரைக்கும் யார் சொன்னாலும் மாற மாட்டான். நல்ல பையனுகள பெத்துபுட்டேன் அதான் இப்படி கவலை இல்லாம சுத்துறேன். கொஞ்ச நாளுல என் பையன் எனக்கு கம்ப்யூட்டர் கம்பனில வேலை கிடைச்சுருச்சு, கை நிறைய சம்பளம் அப்டினுகிட்டு ஓடி வருவான், அதை பார்க்குறப்ப என் உயிர் போன கூட தூசுக்கு சமம் ..... 

கலங்கிய கண்களுடன், இணைப்பை துண்டித்துவிட்டு, 

வேகமாய் சற்று முன் வந்த நேர்முகத்தேர்வு அழைப்பு விடுப்பு எண்ணை தொடர்புகொண்டு கூறுகிறேன்,Yes Madam I am on the way to your company.. 

அப்பொழுது காவலாளியின் வார்த்தைகளும் என் காதில் விழுகிறது தொலை தூரத்திலிருந்து "கொஞ்ச நாள் கழிச்சு வா தம்பி, இயக்குனர் இப்போ ஊர்ல இல்ல,திரும்பி வர ஆறு மாசத்துக்கு மேல ஆகும் ... 


எத்தணை இயக்குனர்கள் இன்னும் கணினியை தட்டிக்கொண்டு இருக்கிறார்களோ அப்பாக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்காய்.....

Thursday, December 19, 2013

வாழ்க்கை(வலி)ன்னா என்ன? --ஒரு உண்மை சம்பவம் உங்களுக்காய் கலப்படமற்று (பாகம் - 8)நன்றிங்க எட்டாம் பாகத்தை படிக்க வந்ததிற்கு,
சரிங்க, வீட்டுக்கு நடைய கட்டின எனக்கு அங்க என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்...

முதல் பாகம் இணைப்பு இங்கே : -
முதல் பாகம்

இரண்டாம் பாகம் இணைப்பு இங்கே : -
இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம் இணைப்பு இங்கே : -
மூன்றாம் பாகம்

நான்காம் பாகம் இணைப்பு இங்கே : -
நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம் இணைப்பு இங்கே : -
ஐந்தாம் பாகம்

ஆறாம் பாகம் இணைப்பு இங்கே : -
ஆறாம் பாகம்

ஏழாம் பாகம் இணைப்பு இங்கே : -
ஏழாம் பாகம்

சென்னை வீதிகளில் நடமாடி ஜெயித்திருக்கும் ஒவ்வொரு தனிமனிதனுக்கு பின்னாடியும் நண்பர்கள் என்ற நங்கூரம் நிச்சயம் இருந்திருக்க வேண்டும் என்பதில் துளியும் ஐயமில்லை எனக்கு. அப்படி சென்னை வீதிகளில் ஜெயிப்பதற்காய் சுற்றி திரிந்த எனக்கான நங்கூரங்கள் தான் எனது அறைத்தோழர்கள்.

பாரதி ஞானசேகர் ராஜசேகர் பிரகாஷ் ஸ்டாலின்ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் மிகைபட்டவர்கள். என் வாழ்க்கை நிமிர்ந்து நிற்க தனது ஒவ்வொரு கரங்களையும் நீட்டியவர்கள். அவர்களை பற்றி இங்கு பகிர்ந்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாய் தெளிவாய் இருக்கிறேன்.

பாரதி , பெயருக்கு ஏற்றது போல் இவன் பாரதி தான். முதலில் தைரியம் பழகு என்று கற்றுக்கொடுத்தவன். தவறோ சரியோ இப்பொழுது இதை நீ செய்தே தீர வேண்டும், தாமதிக்காதே, உன்னால் முடியும் அனுபவம் உள்ளவன் போல் மாறவேண்டும், அதற்கான சான்றிதல்களை அப்புறம் தயார் செய்து கொள்ளலாம், முதலில் நேர்முகத்தேர்வுகளை தவறாமல் பயம் இல்லாமல் சந்தித்து பழகு என்று உரக்க கூறி கூறி என்னின் பயத்தை கொன்றவன் பாரதி .


எப்பொழுதெல்லாம் அவன் சொந்த ஊருக்கு செல்ல நேரிடுகிறதோ அப்பொழுதெல்லாம் ஐநூறு, ஆயிரம் ரூபாய் என்று எனது கைகளில் என்னிடம் கேட்காமல் திணிப்பவன்.செலவுக்கு வைச்சுக்க வேணும்னா மறக்காம கேளு என்பவன். ஏதாவது course போக விருப்பம் இருக்கா, இருக்குனா சொல்லு, நான் பணம் தருகிறேன் என்பான். அத்தனை அக்கறையை என் மீது கொட்டியவன் நான் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என..

ஞானசேகர்- நான் என்னுள் என்னவெல்லாம் நினைக்கிறேன், எங்கெல்லாம் பயப்படுகிறேன், என்னவெல்லாம் கேட்க, பேச தயங்குகிறேன் என்று நன்கு அறிந்தவன். அத்தனை அன்பாய் அருகில் அமர்ந்து தட்டிகொடுத்து இப்படி இருக்காத, இப்படி இரு என்றெல்லாம் என்னை வழிநடத்தி சென்றவன்.

செலவுக்கு பணம் வேண்டும் என்று கூச்சப்படும் என்னிடம் எதுவும் கேட்காமல் எத்தனை முறை எனது பணப்பையில் பணத்தை வைத்துவிட்டு நான் கண்விளிப்பதற்குள் அலுவலகம் கிளம்பி இருக்கிறான் என நன்கு அறிவேன்..

தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி 16 அடி பாயும் அப்டின்னு ஒரு பழமொழி உண்டு, அது மாதிரி இவன் 16 அடி அப்டினா அவுங்க அப்பா 32 அடி பாயுவாறு பாசத்துல. இப்படி ஒரு அப்பா நமக்கும் இருந்தா நல்லா இருக்குமே அப்டின்னு பலமுறை நினைச்சு பார்த்து இருக்கேன். அழகா அழைப்பாரு ,விஜி எப்டி இருக்க, என்ன பண்ற, ஏன்டா வேலை கிடைக்காம வீட்டுக்கு கூட போக மாட்டேன் அப்டின்னு அடம் பிடிக்கிரியாமம், வா விஜி எங்க வீட்டுக்கு போலாம், பொங்கல் கொண்டாடிட்டு வரலாம் அப்டின்னு ஒரு அன்போட, அக்கறையோட, உரிமையோட அதட்டுகிற அன்பு உள்ளம் கொண்ட அப்பா.

வார இறுதியில் விலை உயர்ந்த உணவகங்களில் உண்ண செல்லும் போது, தயக்கத்தில் எனக்கு கொஞ்சம் வெளியில் வேலை இருப்பதாய் சொல்லி தப்பிக்க நினைக்கும் என்னை கரம் பிடித்து அழைத்து சென்று அமர்த்தி உண்ணவைத்து அழகு பார்ப்பவன் தான் ஞானசேகர்.

ராஜசேகர் - இவன் கொஞ்சம் கோவக்காரன், அதனால அவன் சொல்லி நான் கேட்குல அப்டினா அடிச்சேபுடுவான் அப்டின்னு பயந்து இருக்கிறேன் பல நேரங்களில், என்ன வேணும்னு கேளுட இப்டியே இருக்காத அப்டின்னு சொல்லும்போது, எதுவும் வேண்டாம்ட அப்டினா, அடிவாங்க போற இந்த இத வாங்கிக்க, அத வாங்கிக்க அப்டின்னு பாசத்தை கொஞ்சம் முரட்டுதனாமாவே காட்டுற ஒரு நல்ல தோழன், இந்தா இந்த 500 ரூபாயா வைச்சுக்க பத்துலனா கேளு, அப்டியே இருக்காத அப்டின்னு அடிச்சே தன் அக்கறைய பதிவு செய்வான், resume அனுப்பி வை என் மின்னஞ்சல்க்கு, தேவைப்படுற புத்தங்கங்களை அனுப்பி வை அப்டின்னு சொல்லி, அத்தனையும் அலுவலகத்தில் நகல் எடுத்து வந்து இந்தா படி, நேர்முகத்தேர்வுக்கு போகும் போது பயன்படுத்திக்க அப்டின்னு பிரம்மிக்க வைப்பான் உதவி செய்து.

பிரகாஷ் - வெள்ளை உள்ளம், பிள்ளை குணம் அப்டின்னு சொல்வாங்களே அந்த மாதிரி ஒரு மனிதர் அப்டினா இவர சொல்லலாம். இவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்ல, இவர் என் கல்லூரி தோழர் இல்லை என்பதால கொஞ்சம் பேச கூச்சப்பட்டேன் ஆரம்பத்துல, ஆனா பிரகாஷ் நல்லா பேசுவாரு, என்னைவிட வயதில் மூத்தவர் அப்டினாலும் வாங்க போங்க அப்டின்னு எனக்கு மரியாதை கொடுத்து அசத்தியவர் கடைசிவரை.. எதோ அவசரத்துக்கு அவரிடம் காச வாங்கிட்டு , திருப்பி கொடுக்கறப்ப கோபபட்டாருங்க பாருங்க, பாஸ் சும்மா இருங்க, திருப்பி கொடுக்கிறதா எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.இப்போ வேண்டாம் அப்டின்னு அதட்டி பாசத்தை காட்டியவாறு. அவ்வளவா ஆரம்பத்தில பழக்கம் இல்லாதபோது கூட ஒரு தோழமையோட உதவி பண்றத எப்படி சாதாரண ஒரு நிகழ்வா எடுத்துகிறது?. உண்மையில் மிகசிறந்த மனிதர் பிரகாஷ்.

சோர்ந்து போறப்ப தன்னம்பிக்கை கொடுக்குற மாதிரி இருக்கும் அவரோட வாழ்க்கை பயணம், அவர் கடந்து வந்த பாதைய சொல்லி நமக்கு ஒரு energy கொடுப்பாரு. வாழ்க்கைய நினைச்சு கவலைப்பட்டு அமர்ந்து இருக்குறப்ப வாங்க ஒரு board போடலாம் அப்டின்னு என்னை திசைதிருப்பி carromல என் கவனத்த கொண்டு போவாரு.

ஸ்டாலின் - வெற்றி, வாழ்க்கை, செயல், எண்ணம் இப்படி எவ்வளவு நிகழ்வுகள் நம்மை சுற்றி திரிந்தாலும், பொழுதுபோக்கு என்பது நிச்சயம் நம்மை தொட்டுகொண்டாவது இருக்க வேண்டும் இல்லை என்றால் நொறுங்கி போய்விடுவோம் என்பது மிகசிறந்த உண்மை. அப்படி என்னுடன் அதிகம் பழகியவன் ஸ்டாலின், அண்ணா அண்ணா என்று மரியாதையோடு அழைப்பவன். வாங்க ஒரு சூப் சாப்பிட்டுவரலாம், வாங்க சும்மா ஒரு வாக் போயிட்டு வரலாம் அப்டின்னு ஒரே மாதிரியான வாழ்க்கையை மாற்றி கொஞ்சம் புதுமையாய் வாழ பழகிக்கொள்ள கற்றுகொடுத்தவன்..

மிகவும் பொறுப்பு நிறைந்தவன், இளம் வயதிலையே பொருப்புள்ளவனாய் இருந்துஇருக்கிறான் அவனது குடும்பத்திற்கு. நிறையா கற்றுக்கொண்டு இருக்கிறேன் ஸ்டாலினிடம்.

இத்தனை பேரும் தான் எனக்கு நங்கூரமாய் இருந்தார்கள் நான் தள்ளாடும்போது.

வெறும் வார்த்தைகளை போட்டு கூறிவிட்டு சொல்வதால் மட்டும் என் நன்றியை முழுதாய் உணர்த்திவிட முடியாது என்பது எனக்கு நன்றாய் தெரியும். வார்த்தைகளற்று நிற்கிறேன் முழுமையான நன்றியை உணர்த்திவிட, நன்றாய் தெரியும் என் வாழ்க்கை முழுவதும் தேடினாலும் வார்த்தைகள் கிடைக்க போவதில்லை, ஏனென்றால் உங்கள் உதவிகளை வார்த்தைகளில் அடைக்க முடியாது என..

என்ன நடக்கும் என்பதை அடுத்த பதிவில் காண்போம்...


                                                                                         
                                           

Thursday, December 12, 2013

அன்புள்ள அப்பாவிற்கு,....
எனக்கு நன்றாகத்தெரியும் அப்பாக்கள் அணைவரும் தியாகிகள் என்று, ஏனென்றால் முகத்தை விறைப்பாய் வைத்து தன் மகனை பயமுறுத்துவதற்காக பழக்க பட்டவர்கள் என, இன்னும் முழுதாய் அப்பா என்று அழைக்க அத்தனை பயம் உங்களிடம் ,அப்... அவ்வளவு தான் வார்த்தை வரும்..அத்தனை முறை வாங்கி இருக்கிறேன் ஒழுக்க அடியை உங்களிடம்..

ஒரு பென்சில் உங்களிடம் கேட்டால் போதும், வேற என்ன எல்லாம் வேணும் குமாரு என்பீர்கள், ஒரு நடுத்தர குடும்ப பின்னணியில் இருந்துகொண்டு இதுவரை எந்த கட்டணத்தையும் இரண்டாம் நாள் கட்டியதில்லை, முதல் நாளே இருப்பீர்கள் கல்லூரியில்..

எதுக்கப்பா கல்லூரியெல்லாம் பையன  படிக்க வைச்சுக்கிட்டு என்று முணுமுணுத்த ஊர் பெரியவர்களிடம், கடன் வாங்கியாவது என் பையன படிக்கவைச்சு பெரியாளாக்கிபுடுவேன் அப்டின்னு நிமிர்ந்து சொன்ன உங்களை தலை குனியவைக்க விடமாட்டேன்னு மனசுக்குள்ள தன்னம்பிக்கைய விதைக்க வைச்ச உங்க நம்பிக்கை தான் என் பலம் இப்பொழுதும்..

பத்தாயிரம் ரூபாய் பணத்தை தொலைச்சுபுட்டு வந்து நின்னப்ப, அசராம, போயிட்டு போகுது குமாரு, நீ உடனே வீடு வந்து சேரு அதுபோதும் எனக்கு  என்ற ஒற்றை வார்த்தை தான் இன்னும் பாசமா ஒட்டிக்கிடக்கு...

 எத்தனை கோபமாய் இருந்தாலும் சரி உங்கள் மேல், என்னை உயர்த்தி பிடிக்க நினைத்து உங்கள் தோளை கொடுப்பதிற்கு பதிலாய் உங்கள் வாழ்க்கையையே கொடுத்த உங்களை நினைத்த தருணமே மாறும் கோபமும் பாசமாய்..

குறைந்தது இருபது முறையாவது நீங்கள் பெரிய விபத்துகளில் சிக்கி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்,  அத்தனை தருணங்களிலும் உங்கள் மன தைரியத்தை கண்டு வியந்து இருக்கிறேன், அப்பொழுதெல்லாம் கலங்காத நீங்கள், முதல் முறை என்னை கல்லூரி விடுதியில் சேர்த்து விட்டு விடை பெறும்போது அழுத அழுகை சொல்லிவிட்டது அப்பா நீங்கள் என் மீது வைத்து இருக்கும் உலகங்களை தாண்டிய பாசத்தை  .

இப்பொழுது புரிகிறது , அப்பாக்கள் பாசத்தை பக்குவமாய் மறைத்து வைப்பதால் தான் அம்மாக்கள் முதலிடம் பாசத்தில் எப்பொழுதும் ....

அன்புள்ள அம்மாவிற்கு,....
உன்னுடன் பகிர்ந்து கொள்ள நினைத்ததை இப்படி தான் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன்.உணவுக்காக ஓடிய மனிதப்பரிமானம் இப்பொழுது சுயகௌரவம்,குடும்ப கடன்,சமுதாய அந்தஸ்து,தன்குடும்பம்,தன்குழந்தை என்ற பந்தயத்தில் வேகமாய், நானும் தான் ஓடிக்கொண்டு இருக்கிறேன் எனக்கான அடையாளத்திர்க்காய் என்ன செய்ய.

எனக்கு தெரியும் உனக்கும் எனக்குமான முகவரி சினிமா தாய்களை போன்றது அல்ல. அன்பு காட்டியதில் தொடங்கி,அடித்து ஒழுக்கநெறியை கற்பிதம் செய்தது வரை அத்தனையிலும் உன் பாசத்தை கண்டு இருக்கிறேன்....

 ஒற்றை கையில் என்னையும்,மற்றொரு கையில் உழைப்பையும் பிடித்து இன்றும் உனக்கென தனி அகராதியை எழுதி இருக்கிறாய் ... சத்தியமாய் சொல்லிவிடமுடியும் கண்ணீரோடு, உன் கால் தடம் பதியாத வயல்கள் நம் கிராமத்தில் இல்லை என, அத்தனை உழைப்புகளை கொட்டி இருக்கிறாய் எனக்காய், களை எடுத்ததில் தொடங்கி,பருத்தி எடுத்து இருக்கிறாய்,சோள தட்டுகளை அறுத்து இருக்கிறாய்,நாற்று நட்டு இருக்கிறாய்,மண் சுமந்து இருக்கிறாய்,கடலை பறித்து இருக்கிறாய்,பணை வெள்ளம் காய்ச்சி இருக்கிறாய்,கள் விற்று இருக்கிறாய்,நெறிமுறையோடு அனைத்து கூலி தொழில்களையும் செய்து இருக்கிறாய், நான் இப்படி குளிர் அறையில் இருந்து பட்டனை தட்டுவதற்காய்...

பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறி விட்டு உன்னை அழைக்கிறேன் தொலைபேசியில்,அம்மா, எனக்கு பிறந்த நாள் மறந்து விட்டாயா என, ஐயோ மறந்தே போய்ட்டேன் குமாரு,நல்லா இரு குமாரு என்றாய்,அத்தனை சந்தோசத்தையும் அடுத்த ஐந்து வினாடியில் அழித்தாய் அம்மா, " இரு குப்பாயி நானும் வந்துடுறேன்,இந்த போன் எப்படி கட் பண்றதுன்னு தெரில,இன்னைக்கு எங்க மண் சுமக்கணும் பள்ளிகூடத்து பின்னாடி இருக்குற ஓடை கிட்டயா"....

ஐம்பது வயதிலும் உன் உழைப்பில் வாழ நினைக்கும் உன் வைராக்கியம் என்கிற கர்வம் தான் நீ எனக்கு ஊட்டிய முதல் மார்பு சீம்பால்...

உடைந்த குடைக்கம்பியாய்...
இரவு உறக்கத்தின் நிம்மதியிழந்து, கண்விழித்த காலையில் தன் குடும்பங்களின் தேவையை அங்குமிங்கும் தாவி தாவி பூர்த்தி செய்கிறான், கட்டளையிடாமல் செய்து முடிக்கும் கூலியாளாய். பருக்கைகளை எண்ணி வயிற்றுக்குள் போட்டுக்கொள்ள மட்டுமே மணித்துளிகள் ஆணையிட்டதை நினைவில் கொண்டு,நிஜத்தில் செய்துவிட்டு ஓடுகிறான் -தூக்கிசெல்லும் தொலைதூர வண்டிக்காய்..


பயணச்சீட்டில் செல்லரிக்கும் செல்களாய் திரியும் நடத்துனரிடம் ,சண்டையிட்டும், மண்டியிட்டும், அரிப்பதற்கு முன் தன் சட்டைப்பையில் பிடிங்கிப்போட்டதும் சிரிக்கும் ஒரு ரூபாய் சில்லறையை பார்த்து பெருமூச்சு விட்டு, மூச்சுமுட்ட கூட்ட நெரிசலில் பயணிக்கிறான் பணியிடம் நோக்கி..


முகம் தெரியா வெளிநாட்டு எஜமானின், கண்டகனவுகளையும் , காணாத கனவுகளையும், சாத்தியமில்லா கனவுகளையும், சாத்தியமாக்க, சத்தியமாக்க அங்கும் இங்கும் தேடுகிறான் கணினி வலையில் பிணம் தேடும் கழுகாய்..


இரவுகள் கூட இவனுக்காய் நிற்பதில்லை, கடிகாரத்தின் முட்கள் இவனை விட வேகமாய் ஓடியதுண்டு, மனிதர்கள் தூங்கியிருக்கும், மிருகங்கள் விழித்தெழும்,நிலவொளியில் ஒளிரும் விண்மீன்கள் பார்க்க இவன் நடையிருக்கும் தன் வீடு நோக்கி, உறக்கத்தில் உதடுகளை குவித்து, தொட்டிலில் பால் தேடும் மகனை உற்று பார்த்து புன்னகை உதிர்த்துவிட்டு ,பெருமூச்சு விட்டு, அரைத்தூக்கத்தில் இருக்கும் அவளையும் உற்று நோக்கி சைகையில் சொல்கிறான், நான் பரிமாறி உண்டுகொள்கிறேன் நீ தூங்கவும் என்று..

இப்படியாய் வாரங்களை தாண்டுவான், வாழவேண்டும் என்ற வாழக்கையை தொலைத்து,பிழைத்து போக ஒரு வாய்ப்பை கொடுக்கும் இந்த வாரத்தின் முதல் மற்றும் கடைசி நாளை ,இவனும் வாழ நினைத்ததுண்டு, நினைத்தது மட்டுமே..

உழைத்து பலகியவனல்லவா, உட்கார்ந்திட உடல் சம்மதிப்பதில்லை,காய்கறிகள் வாங்குவதில் தொடங்குகிறான், வாழ்ந்துகொள்ள வழங்கிய அந்த இரண்டு நாட்களில் ,புன்னகைபுரியும் தன்குழந்தை தூக்கத்திலும் முகம் சுளிக்காமலிருக்க அவனுக்கானதாய் தேடி தேடி பதசுவடுகள் பதிக்கிறான்- பளீரென மின்னும் கடைகளில் தொடங்கி, குடிசை வேய்ந்திருக்கும் பெட்டிக்கடைகள் வரை..

தூக்கம் மறந்து கூச்சலிடும் இளங்குருவியை,அங்கும் இங்கும் தூக்கியும், கோமாளியாய் மாறியும் கதைபாடுகிறான் அசைக்கமுடியா பருந்தாய் மாற்ற, பாவம். பாடவும் செய்கிறான் எதை எதையோ பாடலாய் .

தனக்கென தாளாது நிற்கும் ,கனல் ததும்பும் எட்டிபிடிக்க நினைக்கும் மைல் கற்களான இலட்சியத்தையும் தள்ளிவைக்கிறான் பிறகு பார்த்துக்கொள்வதாய்,காய்கறிகள் நறுக்குவதில் தொடங்கி,பாத்திரம் பளிச்சிட வைப்பதுவறைக்கும் சமையலறை சங்கீதங்களை ஏதோ பாடுகிறான் தாளங்கள் இல்லாமலே. சிதறிப்போன சின்ன சின்ன சில்லறைகளை அடுக்குவதுபோல்,வாரம் முழுவதும் சிதறிய பொருட்களை அதன் இடம் கொண்டு சேர்க்கிறான் பத்திரமாய் அலமாரியிலும், மேசைகளிலும். ..

தன்மகன் சுவடு பதித்த வீட்டுதரைகளை அளித்திட மனமில்லாமல் அளிக்கிறான் அத்தனை கிருமிநாசினிகளை கலந்து, தன்மகன் அடுத்த கால்தடம் பதிக்க...

வாழ்ந்துகொள்ள கொடுத்த இரண்டு நாட்களையும் இப்படி கொடுத்துவிட்டு இரண்டாம் நாள் இரவு உணவை மனைவியின் கரங்களில் பரிமாறி சாப்பிட பாவியாய் அமர்கிறான்.

நியாமான வேலைகளை அவள் செய்துகொண்டிருந்தாலும், தனக்கென கேட்கிறான் பரிமாறிவிட்டு செல்ல-அவள் சொல்கிறாள் சைகையில் பாரிமாரி சாப்பிட்டு கொள்ளவும் ....

ஆசைகள் இடிந்ததாய் அமர்ந்து சாப்பிடும் அவனிடம் சொல்கிறாள் -எதை எதையோ உனக்காய் இழந்து வந்து இருக்கிறேன் என பட்டியலிட்டு சொல்லிக்கொண்டே அழுகிறாள், எதற்காக அழுகிறாள் என யூகிப்பதர்க்குள் வாழ்க்கையில் சந்தோசம் தொலைத்தேன், சொந்தங்களை தொலைத்தேன், உணவுபரிமார முடியாமல் போனதற்கு இப்படி கோவிக்கிறாய் என்று, ஏதோ ஏதோ சொல்கிறாள் ,வார்த்தைகளை கொட்டுகிறாள் அழுகையோடு கலந்து, தான் குடும்பத்திற்க்காய் உழைப்பதை...

அவளுக்காய் மட்டுமே வாழ்வதை ,தான் தொலைத்த லட்சியங்களையும், தான் தொலைத்த வாழ்க்கையும் சொல்லமுடியாமல் ,சொல்ல விரும்பாமல் இரவு உணவு நனைக்கா வெற்றுக்குடளுடன்,முகம் புதைத்து கலங்கிய கண்களுடன் படுக்கையறை தாளிட்டு தொங்குகிறான் கயிற்றில், உடைந்த குடைக்கம்பியாய் .....

அலைபேசி நிழற்படத்தில் - ஏங்கும் நம் நினைவுகளை ...


ஏறக்குறைய என் எழுத்தை தடுத்தே நிறுத்திவிட்டாய், உன்னை பற்றியே உயிர் உருகும் நிலை, உன் அசைவுகளில் உச்சம் கண்டதாய் உணர்வு மேலிட-வெற்றிடமாய் நான், உன் ஒவ்வொரு நகர்வுகளும் என்னை பிரதிபலிப்பதாய்,அழகாய் சிரிக்கிறாய்,அழகாய் அழுகிறாய் - காண குரங்காய் தவ்வுகிறேன் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின் முடிவிலும், எதற்காகவோ சிரிக்கிறாய் - எனக்காய் சிரித்ததாய், எதற்காகவோ அழுகிறாய் -எனக்காய் அழுததாய்.

இரண்டு நாட்களும் இரண்டு நிமிடமானதை ஞாயிற்றுகிழமை முடிவின் பேருந்து பயணம் நினைவுபடுத்த - திங்கள்கிழமையில் பாவமாய் அலுவலகம் கிளம்புகிறேன் நீ இல்லா வெற்று வீட்டின் வாசற்படியில் வைத்து விட்டு செல்கிறேன் -நம் மகனை கையில் ஏந்தி நிற்கும் அலைபேசி நிழற்படத்தில் - ஏங்கும் நம் நினைவுகளை ...

நீண்டுகொண்டு சென்ற பயணத்தில் கருப்புக்கோடிட்டு....நீண்ட நாட்களுக்கு பிறகு வேலைகலற்று நுழைகிறேன் இத்தளத்தில்,தனிமை முழுதாய் அரித்து கொன்றுவிடுவதற்குள் இடம் நகர வேண்டும் அல்லவா ஆதாலால்.

இங்கு நுழைவதற்கும் கொஞ்சம் அச்சம் தான்,ஆமாம் தொடக்க பள்ளியில் தொலைந்துபோன நண்பனை கண்டெடுக்க இங்கே நுழைந்த நான், இன்னொரு தொடக்கப்பள்ளி நண்பனை எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன் என்னை கண்டெடுக்க இத்தளத்திலிருந்து.

உடல் முழுவதும் புலம்பெயரும் குருதியின் ஏதோ ஒரு நுனியில் ஒட்டிக்கொண்டிருக்கும் எழுத்து தாகம்,அவ்வப்போது எழுதத்தூண்டுவதுண்டு, எழுதிபோட்டுவிட ஆயிரம் இருக்கிறது அத்தனையும் முடித்துவிடவேண்டிய தாகம், முடிக்க இயலா ,எண்ணங்கள் தாக்கும் நொடியில் தீர்ந்துவிடுகிறது தாகம்.

தீர்ந்த நொடியில் பக்குவமாய் வீட்டைபூட்டிவிட்டு,நகர்ந்து என்னை உயிர்பித்து கொள்கிறேன்.இலக்கில்லா பயணமும் அழகுதான் மனம்முழுவதும் வெற்றிடமாய் பரவிக்கிடக்கும் நேரங்களில். என் பாதமும்,பாதையும் முத்தமிடும் தருணங்களை தடுக்கும் மிதியடிகளை என்னுடன் ஒட்டிக்கொண்டு உறவாட அனுமதிப்பதில்லை இத்தகைய இலக்கில்லா அழகிய பயணங்களில்.

காற்றுப்பூகாத மிதியடிகளில் வாரங்கள் முழுவதும் சிறைபற்றிருக்கும் என் பாதங்களும் கூட விரும்புவதில்லை அவைகளை. அந்திவானம் அத்தனை அழகு என்று எத்தனை கவிஞர்கள் பாடியவை என்னுள் நுழையும் பொழுதெல்லாம் அறியாதவை இப்பொழுது உணரப்படுகிறது இப்பயணத்தில்.

இப்பொழுது தான் நடை பழகியவனை போல் ஒவ்வொரு அடியும் நிதானமாய்,ஒவ்வொரு பார்வையிலும் தெளிவான காட்சிகள்.அவசர அவசரமாய் வேலை முடித்துவிட்டு அழுதுகொண்டு இருக்கும் உறவுகளை கையில் ஏந்தி முத்தமிட ஏங்கும் உடைகளில் ஏழ்மை காட்டும்,அன்பில் உச்சம் காட்டும் என் தாயின் சாயல்கள்.

வேகமாய் உருளும் மிதிவண்டியின் சக்கரத்தோடு புன்னகையையும் உருளச்செய்யும் வயதின் எண்ணிக்கையை இப்பொழுது தான் தொடங்கும் பிஞ்சுகள்.

என்னைப்போன்று தற்காலிக தனிமை இல்லாமால்,நிரந்திரமாய் தனிமையை சுவாசிக்கும், வயதின் எண்ணிக்கையை முடிக்கவிருக்கும் விழுதுகளை சுமக்கும் நடைகளில் தனிமையை தவிக்க விட்டதாய் எண்ணிக்கொள்ளும் வயதானவர்களின் மாலை நேரநடைகள் ஆழமாய் கண்களில் பதிகின்றன.இன்னும் சிலகாலங்கலே என மனதில் கணக்கை போட்டுவிட்டு எட்டி நகர்கிறது கண்கள்.

அழகாய் மணிசத்தம்,சத்தம் நிறைந்த இடத்தில் அமைதியை தேடி சில நகரல்கள்.என் முன்னோர்கள் அமைதியை தேட அழகாய் செதுக்கிய தெய்வசிலைகள், அமைதியை ரசிக்கும் தெருமுற்றத்து கம்பீர கோவில்களில் சில நின்றுகொண்டும், சில அமர்ந்துகொண்டும், சில படுத்துக்கொண்டும்.

வாசற்படியில் வயிற்றை நிரப்பிக்கொள்ள தவிக்கும்,பார்வை மங்கிய நிலையிலும் பதுமானமாய் கட்டிய மல்லிகையை ஏந்திக்கொண்டு உளைப்பைகற்றுதரும் என் பாட்டியின் சாயல்கள்.

நீண்டுகொண்டு சென்ற பயணத்தில் கருப்புக்கோடிட்டு தடுத்து நிறுத்திய இரவை மன்னித்துவிட்டு வீடுதிரும்பி,வீட்டை தாளிட்டு,நகரல்களை நான்குசுவற்றில் சுருக்கிக்கொண்டு,மெல்ல அமர்ந்து,தனிமையுடன் எனக்கு தெரிந்த மொழிகளில் இருவரும் உரையாடிக்கொண்டேகணிப்பொறியை திறந்து மெல்ல தட்ட ஆரம்பிகிறேன் www.facebook.com என, மீண்டும் தொலைந்துபோக :(

சுதந்திரத்தை உடைத்துக்கொண்டு....என் வாழ்க்கை பயணம் இங்கு தான் தொடங்கிற்று. நான் கண்விழித்ததும் ,கை கால் முளைத்து வாழ பழகியதும் இங்கு தான். நானும் எத்தனையோ குடும்பங்கள் வந்து தங்குவதையும், பின்பு காணமல் போவதையும் பார்த்து இருக்கிறேன்எதிர்வீட்டில்.

அப்படி தான் அன்றைய பொழுதும் கவனித்தேன்.புதிதாய் திருமணமான சுவடு மறையாமல் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றார்கள் , சில மாதங்களாய் தனிமையில் சுதந்திரமாய் வாழ்ந்து கொண்டிருந்த அந்த வீட்டிற்குள் அதன் சுதந்திரத்தை உடைத்துக்கொண்டு .

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் சுப்ரபாதம் ,5:10 க்கு அழகாய் லட்சணமாய் கோலம் கொட்டப்பட்டு இருக்கும் . சமையல் மனம் தூங்கிக்கொண்டு இருக்கும் கணவனை எழுப்புவதுமுண்டு .கணவனை அலுவலகம் அனுப்பி வைக்கும்வரை துரு துறுவென்று வேலைகள் நடக்கும் .அன்றாட அவர்களது வாழ்க்கையை ரசித்துக்கொண்டு தான் இருக்கிறேன் .

விடுமுறை நாட்களில் பலநேரங்களில் சிரிப்பு சத்தம் , சிலநேரங்களில் மிகப்பெரிய வாக்குவாதங்கள் ,அதன் பிறகு பெண் அழகும் சத்தம் ,சிறுது நேரத்தில் சமாதான சத்தம் ,கேர்ரம் விளையாட்டு சத்தம் ,இப்படி ஒவ்வொன்றையும் உற்று கவனிப்பதுண்டு .

கடந்த சிலவாரமாய் மீண்டும் அந்த வீடு தனிமையில் சுதந்திரமாய் வாழ்கிறது இவன் இருக்கும்போதும் .கோலம் கொட்டிகிடப்பதில்லை ,சுப்ரபாதம் கேட்பதில்லை ,சமையல் சத்தம் இல்லை , சிரிப்பு சத்தம் இல்லை ,அந்த பெண்ணும் இல்லை . சண்டை சத்தம் இல்லை ,சமாதனசத்தம் இல்லை .

ஒரே சத்தம் மட்டும் தெளிவாய் கேட்கிறது ,9 மணி வரை மின்விசிறி ஓடிக்கொண்டிருக்கும் சத்தம் மட்டும் . காலை 8 மணிக்கெல்லாம் எதிர்வீட்டு சுவற்றில் அங்கும் இங்கும் நடந்து நடந்து கத்தி கத்தி அவளிடம் என் வயிற்றை நிரப்பிகொண்டதுண்டு .

அவள் இல்லா இத்தருணத்தில் அங்கும் இங்கும் நடப்பது மட்டும் உண்டு சுவற்றின் மீது ,கத்தி உணவை கேட்பதில்லை ..

நீங்க வேணும்னா விஜய்கிட்ட கேட்டு பாருங்க , நான் வழக்கமா "கா கா " ன்னு கத்தி சாப்பாடு கேட்குறது மாதிரி எல்லாம் இப்போ கேட்கிறது இல்ல..

ஏனென்றால் நான் ஆணல்லவா ...உன்னை ஊரில் விட்டுவிட்டு, திரும்பி வந்து கதவை திறக்கிறேன். முதல் காலடியை எடுத்துவைக்கிறேன்....

வழக்கமாய் அதிகாலை நேரத்தில் நீ என் நெற்றியில் இடும் முத்தங்கள்,

எவ்வளவு சிறியதாய் உண்ணக்கொடுத்தாலும்,போதும் என்று மீதம் வைக்கும் தருணங்களில் நீ கோபித்துகொள்ளும் கோபங்கள்,

குளித்து ஈரத்தில் மிதக்கும் என் தலைமுடியை துடைத்துவிடும் அன்புமிகுந்த அக்கறைகள்,

விடுமுறை நேரத்து மாலை நேரத்தில் உன் கண்கள் பேசும் காதல்கள், தெரிந்தவர்களிடம் பேசும்போதும் என்னை விட்டுக்கொடுக்காமல் நீ பேசும் வார்த்தைகள்,

துவண்டு நிற்கும் தருணங்களில் தோல்கொடுக்கும் உனது கைகள், எதிர்காலம் பற்றிய திட்டமிடலில் உனது நம்பிக்கையான அறிவுரைகள்,

வீடு முழுவதும் நிரம்பிக்கிடக்கும் இத்தனையும் என் முதல் காலடியில் உன்னை தேடுகின்றன,உன் வழியே என்னை வந்து சேர. பாவம் அவைகளுக்கு தெரிய நிச்சயம் வாய்ப்பே இல்லை நீ திரும்பி வர குறைந்தது ஆறேழு மாதங்களுக்கு மேல் ஆகும் என்று.

ஒவ்வொரு அறையாய் சென்று பார்த்தேன் நீ இருக்கமாட்டாய் என்று தெரிந்தும் , மெதுவாய் தண்ணீரை பருகினேன் குடல் மறுத்த போதும், மெதுவாய் படுக்கையில் அமர்ந்தேன்,இதயம் கணக்க தனிமையை போர்த்திக்கொண்டு உன் நினைவில் உறங்க பழகினேன்.

காலை எழுந்ததும் கட்டிபிடித்து உறங்கிக்கொண்டு இருக்கும் தனிமையை பிரித்து எறிந்துவிட்டு மெல்ல அலுவலகம் கிளம்பினேன், உனக்காய் காத்து இருக்கும் அனைத்திடமும் உண்மையை சொல்லாமல், காத்திருக்கும்படி அறையை பூட்டிவிட்டு வந்துவிட்டேன்.

பேருந்து நிறுத்தம் செல்லும் வழியில் உன்னை அழைத்தேன் அலைபேசியில், நான் பேச ஆரம்பிப்பதற்குள் உன்னிடமிருந்து அழுகை சத்தத்தை மட்டும் மொழியாய் அனுப்பிவைத்தாய் என்பக்கம். நீ பெண் என்பதால் எளிதில் அழுது உன் அன்பை தெரிவித்துவிட்டாய்,

நானோ எச்சில் விழுங்குவதையும்,கண்சிமிட்டல்களையும்,உதடுகளை கடித்துக்கொண்டும் பேச ஆரம்பிக்குறேன்,"நல்லா இருக்கிறேன்" என்று அழுகையை மறைத்துக்கொண்டு,....

 ஏனென்றால் நான் ஆணல்லவா....

Wednesday, December 11, 2013

அன்புள்ள மகனுக்கு,
அன்புள்ள மகனுக்கு,

பள்ளிபருவ நாட்களில் ஏதோ ஒரு ஞாயிற்றுகிழமை மாலை நேரப்படத்தில் ஒரு காட்சி. ஹீரோ, ஹீரோயின் வயிற்றில் கைவைத்து பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் முகத்தில் மலர்ச்சியுடன்,சிரிப்புடன் குழந்தை உதைக்கிறது என்று சந்தோசத்துடன் கூறிவிட்டு, துள்ளிகுதித்துவிட்டு  பாட்டுபாடுகிறார்.சண்டைகாட்சிகள் வரும் வரும் என்று எதிர்பார்த்து காத்து இருந்த எனக்கும் என் நண்பர்களுக்கும் அத்தனை கோபம்.இதெல்லாம் ஒரு ...படம்,குழந்தை உதைக்குதாம இதைகேட்டஉடனே இவருக்கு சந்தோசமாம.முடியலட சாமி, வில்லன இவன் உதைப்பான்னு பார்த்த, இவன இவன் குழந்தை உதைக்குதாம,இதை கேட்டு சந்தோசத்துல பாட்டு பாடுகிறாராம அப்டின்னு இடத்தை விட்டு கிளம்பிய ஞாபகம்.

நமது வாழ்க்கையில் சில நிகழ்வுகளை கேட்டறிவதிலும், பார்த்தறிவதிலும், எத்தனை படத்தினாலும்,யதார்த்தமாய் நுண்ணியதாய் உணர்த்திவிடமுடியாது, நாம் அதை கடந்து செல்லும் கணம் மட்டுமே முழுமையாய் உணர முடியும் என்பதை என் வாழ்க்கைபயணத்தின் ஒவ்வொரு நொடியிலும் உணர்கிறேன்.மனைவியின் வயிற்றில் இருக்கும் தன் குழந்தை உதைப்பதை உணர்கிற கணவனின் முகத்தில் எத்தனை மாற்றங்கள்,உடம்பு முழுவதும் ஏதோ ஒரு அசட்டு தைரியம் தீடிரென பாய்ந்து நரம்புகளில் சீறி தன் குழந்தை உதைத்து பழகுகிறது,உள்ளே விளையாடிக்கொண்டிருக்கிறது,காண முடியாமல் தவிக்கும் நிகழ்வை, எப்படி ஒரு கேட்குமறிவாலும், பார்க்குமறிவாலும், சினிமாவாலும் நூறுசதவீதம் முழுமையாய் கொண்டுவந்து சேர்க்கமுடியும் என்பதை இப்பொழுது உணர்கிறேன் உன் அப்பாவான என்னை நீ உதைக்கும் இத்தருணத்தில் .

இப்படிக்கு,
உன் அப்பா..

நமக்கான மறுபக்கத்தில் ......
இவை இவை தவறு என்று, வாழ்ந்து முடித்தவர்களால் வடித்துவைத்து விட்டு சென்றவைகளில் ஏதேனும் ஒன்றை நாமும் தான் செய்துகொண்டு இருக்கிறோம் முன்பக்கத்தில் அல்ல, நமக்கான மறுபக்கத்தில்(இந்த பக்கங்கள் பிரித்து படிக்காமல் செல்லும் வரை நாமும் நல்லவர் தான்(தவறு என்று வடித்தவர்களையும் சேர்த்து தான் )).

ஆதியும் சரி, மரணமும் சரி ........எப்போதாவது சில நேரங்களில் வெறுமை உன்னையும் தொடும்,அப்பொழுதெல்லாம் உன் கனவுகளுக்கும்,தாகத்திற்கும்,தீனி போட முயற்சி செய், வெறுமை விலகிய கணம் கொழுந்துவிட்டு எரிய தொடங்கி இருக்கும் உன் கனவும், தாகமும் நிதானமாய்.. ஆதியும் சரி, மரணமும் சரி, நிமிடக்கணக்கில் நிகழ்ந்துவிட்டு மெல்ல நகரும் கருக்கோலை நத்தை தான். அறுத்த பின்பும் விதைத்துவிட்டு செல்லும் இயல்பும்,பக்குவமும் உன்னிடமும் நிகழும் உன் வாழ்க்கையை உற்று நோக்கும் ஒவ்வொரு கணமும்..

நீ எனக்கு குழந்தை தான் என்பதை மறந்துவிடாதே ....
நேற்றைய தொலைபேசி உரையாடலில்,ஊடு கதிர்ப்படம்(Scan)மூலம் என் குழந்தையின் அசைவை கண்டதாய் உன்னிடம் பகிர்கிறேன். தலை,கை, கால், விரல்கள் அசைவை பற்றி சொல்லிகொண்டே போகிறேன் பெருமையாய், எதுவும் பேசாமல் சிரித்துகொண்டே இருந்துவிட்டு கடைசியில் கேட்கிறாய். கோமதி சொல்லிச்சு நல்லா சாப்பிட மாட்டீங்கற அப்டின்னு .சாப்பிடாமா எலும்பா கடக்காதட நாயீ, அடுத்த தடவை ஊருக்கு வரும்போது பாப்பேன்,அப்டியே வந்த தோஷ திலுப்பில காலு கால சூடு வைச்சிருவேன் பாத்துக்க...

அழகாய் சொல்லிவிட்டாய் உனக்கு குழந்தை பிறந்தாலும் நீ எனக்கு குழந்தை தான் என்பதை மறந்துவிடாதே என்று..

உன் முழுச்சாயல் இல்லாமல் நானெப்படி ?..

அவசர கூலிவேலை நேரத்திலும், என் கன்னம் பிடித்து அழகாய் தலை வாரிவிடுவாய்.உன் சுமை குறைக்க நானே பழகிக்கொண்டேன் தலைவாரிட முதன்முறை அன்று. நீ சமத்து என்பாய் என நினைத்து காட்டினேன் உன்னிடம்.

ஏதும் பேசாமல் வேலைக்கு சென்று வருகிறேன் என்று கை அசைத்தபொழுது கவனித்தேன் உன் கலங்கிய கண்களை. மறுநாள் என் தலை வாரும் உன்னிடம் 'நான் தலைவாரின எனக்கு பிடிக்கலம்மா' என சொல்லிக்கொண்டே உன் முகம் காண்கிறேன்.புன்னகையுடன் சிறு கர்வம் கொண்டாய் "என்னைவிட யார் உன்னை பார்த்துக்கொள்ள முடியும்" என்று. உன் உதிரம் அல்லவா நான்,உன் முழுச்சாயல் இல்லாமல் நானெப்படி ?..

பூந்து விளையாடு நைனா .... :)Eclipseஇருக்குல்லே நைனா Eclipse...அது நம்ம life environment மாதிரி, அதாண்டா துணிஞ்சு இறங்குன்னன்னு வையேன் சும்மா Problemஎல்லாம் Warningகா ஓரங்கட்டி நிக்கும்,அப்பால நீ வாழ்க்கைய செம சோக்கா நத்துலாம் நைனா...அதே பயந்து நின்னைன்னு வையேன் அப்பால Warningஎல்லாம் வேட்டிய மடிச்சு கட்டிக்குனு Errorஆ வந்து நிக்கும் நைனா , இன்னா சொல்ற நீ அப்டின்றையா?.. இன்னா தான் வரட்டுமே ,நீம்பாட்டுக்கு பயப்படாம கெடாசித் தள்ளுன்றேன் ..ம்ம்ம் பூந்து விளையாடு நைனா,