Saturday, February 13, 2016

கொட்டுகிறேன் முத்தமாய்…….

ஒரு மென்மையான உறவிற்கு பெயர் காதல் என்று அறியும் வயதில்லை. அரைகால் சட்டையோடு காடு மேடு சுற்றத்தெரியும், சுட்டெரிக்கும் வெய்யலிலும்,சுற்றித்திரியும் பம்பரமாய் விளையாடத்தெரியும், பொழுது போவது கூட தெரியாமல்..நகக்கண் பட்டு தோலுரிந்து ரத்தம் சொட்ட சொட்ட சண்டை போடத்தெரியும். அடுத்த நாள் நடக்கவிருக்கும் சாதாரண தேர்விற்கும் விழுந்து விழுந்து படிக்க தெரியும். வகுப்பில் இரண்டாம் மதிப்பெண் பெற்றபிறகும் பயப்பட தெரியும் அப்பாவின் மிரட்டல் கேள்விக்கு. சிதைந்து கிடக்கும் நோட்டுப்புத்தகங்களை எடுத்து, எழுதா பக்கங்களை கிழித்து, இந்தா வைத்துக்கொள் என்று நண்பனுக்காய் திருடனாவது பிடிக்கும். இப்படி இன்னும் கொத்து கொத்தாய் நினைவில் கொள்ளவும்,நெஞ்சில் புதைக்கவும் ஆயிரம் இருக்கிறது என்பதும் கூட தெரியும் அந்த பத்தாம் வகுப்பில்.

ஆனால் இவைகளைத்தாண்டியும் ஒன்று என்னுள் ஆழ பதிந்திருக்கிறது என்று தான், சரியாகத் தெரியவில்லை அப்பொழுது.. வா,போ என்று ஒற்றை வார்த்தையில் என்னை அழைக்கும் அவளைப்பற்றி ஒற்றை வார்த்தையில் கோர்த்து என்னுள் வைத்துகொள்ள முடியாது. அவளுக்காய் தனி வீடு இருந்த பொழுதும் என் வீட்டிலேயே கதியாய், என் அம்மாவிடமே வம்பு செய்ய பிறந்தவள் அவள். என்ன செய்கிறாய், படித்தாய இல்லையா, நானெல்லாம் படிச்சிட்டேன் என்று கூறியே பயமுறுத்தியவள்.

நெருங்கிய சொந்தாமாய் இருந்ததாலோ என்னவோ, அச்சமின்றி என்னோடும் என் குடும்பத்தோடும் கலந்தவள்.ஒன்றாம் வகுப்பு முதல், இந்த பத்தாம் வகுப்புவரை அவளோடு போட்டியிட்டுக்கொண்டே என்னை வகுப்பின் முதல் ஆளாக்க முயற்சித்தவள். அத்தகைய தருணங்களில் எல்லாம் “ச்சீ போ வந்துட்டா அட்வைஸ் பண்ண” என்ற வார்த்தைகளை எறிந்திருக்கிறேன் அவள் மேல்.

சரியாகத் தெரியவில்லை எப்பொழுதிலிருந்து என்று, ஆனால் பத்தாம் வகுப்பு அரையாண்டுத்தேர்விற்கு பிறகு, ஓரிருவாரங்கள் கழிந்து, மொத்தமாய் மாறியிருந்தோம் உடலவிலும் சரி மனதளவிலும் சரி. அதே கேலிப்பேச்சு, சண்டை, அன்பு, நட்பு,இப்படி அன்றாட நிகழ்வுகள் தான், இருந்தும் எதோ ஒன்று புதிதாய் என்னுள்ளும், அவளுக்குள்ளும்.. அக்கறை அதிகமாய் எடுத்துக்கொண்டாள், கோபமாய் சண்டையிட்ட பொழுதும் ஏதோ ஒன்று, இன்னும் வேண்டும் என்றது.கிட்டத்தட்ட எதோ ஒரு உணர்வு இருவரையும் நெருக்கமாக்க முயற்சித்தது, தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் திரைப்படங்களை பார்த்து அந்த உணர்விற்கு “காதல்” என்று பெயர் வைத்துகொண்டோம்.அடித்து பிடித்து சண்டை போட்ட காலங்களில் தோன்றாதது,வெறும் பார்வைக்கே ஏதோ செய்தது அப்பொழுது. உடல்கள் ஏதோ ஏதோ பேசிக்கொண்டிருந்திருக்கலாம், ஆனால் உணர்வுகள் ஏதோ ஒன்றை மட்டுமே திரும்ப திரும்ப எதிர்பார்த்துக்கொண்டிருந்தது என்பதே நிதர்சனமான உண்மை.

கிட்டத்தட்ட அவள்மீது நானும், என்மீது அவளும் கிருக்காகிப்போகினோம் என்பதை மெல்ல மெல்ல உணர ஆரம்பித்தோம், அவள் முகம் என்னுள் மெல்ல அழுத்தமாய் பதிய ஆரம்பித்தது. அவள் மீதான எண்ணங்கள் மெதுவாய் என்னுள் நிரந்தரமாய் படிய ஆரம்பித்தது. அவளை மீண்டும் காண்பதற்காய் எனது இரவுகள் விடிய ஆரம்பித்தது ஒவ்வொரு முறையும். என்மீதான அவள் சுண்டுவிரல் தீண்டல்கள் கூட என்னுள் அழுத்தமான சுவடுகளாய் பதிய ஆரம்பித்தது. எனக்கும் அவளுக்குமான உரையாடலின் பொழுது யார் அருகில் இருந்தாலும் கவலைப்படாத நாட்களை தாண்டி, யாருமருகிலில்லாத நேரங்கள் வேண்டும் என்று ஏங்கும் நாட்களை நெருங்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதை உணரும் தருணத்தில் உடல் முழுவதும் ஒருவித பயம் ஒட்டி இருந்த பொழுதும், அதை இன்னும் அதிகமாய் எதிர்பார்த்தோம் என்பதே உண்மை.

எதோ போகிக்கொண்டிருந்த வாழ்க்கையை திடீரென மொத்தமாய் புரட்டிபோட்டாள் தலைகீழாய். அன்று பள்ளி நடந்துசெல்ல,பட்டென்று கரம்பிடித்து, ஐ லவ் யு என்றாள். அடுத்த கணம் என்னிடம் இருந்தும் பதில் ஐ லவ் யு என்று. பிறகென்ன சரி தவறு என்று யோசிக்க எதுவும் இல்லை, அவளைப்பற்றிய எனது உணர்வுக்கு பெயர் தான் “காதல் ” என்று எப்பொழுதே என்னுள் விதைத்து வைத்திருக்கிறேனே!!!!.அந்த கனத்திற்கு பிறகும் அவளது ஒவ்வொரு செயலிலும் புது புது அர்த்தங்கள். இந்த அர்த்தங்கள் எனக்கு மட்டும் புரிந்ததாய் உணர்ந்தேன். எங்களது காலத்தை கடந்தவர்கள் அல்லவா எங்களது பெற்றோர்கள், மெதுவாய் பிரித்துவைக்கப்பட்டோம், எல்லைகள் இடப்பட்டே விடப்பட்டோம். என்ன உணர்வுகள் என்று உணரும் தருணத்தில் எத்தனை அணைக்கட்டு போட்டாலும் நின்றுவிடாது என்பதை உணர்ந்தோம்.

மென்மையான தொடல், உனக்காய் நான் எப்போழுதுமிருக்கிறேன் என்பதான அழகிய முத்தம், இவை ஒவ்வொன்றும் ரகசியமாய் எங்களுக்குள் பரிமாறிக்கொள்ள ஆரம்பித்தது, ஒரு ஆணும் பெண்ணும், உனக்காய் உயிரை கொடுப்பதை தாண்டியும்,உனக்கென கொடுக்க ஒன்று இருக்கிறதென்று அவர்கள் உணரும் தருணத்தில், அந்த ஒன்று கற்பை தவிர புனிதமான ஒன்று வேறென்ன இருக்க முடியும் இவ்வுலகத்தில். நான், நீயாகி விட தயார் என்ற கணத்தில், என் உடல் உன்னுடன் ஒப்படைக்கிறேன் என்ற ஒற்றை வார்த்தைக்கு பின் அத்தனை உலகம் அல்லவா இருக்கிறது. நினைவு தெரிந்து உடைகளுக்கு மட்டுமே தன் உடல்காட்டிய உயிர், இன்னொரு உயிர்க்கு தன் உடல் காட்ட சம்மதிக்கும், எப்பொழுது முழுதாய் நேசிக்கிறதோ அப்பொழுது மட்டுமே இது சாத்தியம்.

இந்த சாத்தியம் எங்களுக்குள் நிகழ முயற்சித்தது இன்று. எப்பொழுது உள்மனது பயப்படுகிறதோ அப்பொழுது தவறு செய்கிறோம் என்றே அர்த்தம் என்பதை உணர்ந்தவனாய்,பயத்தில் மெல்ல முயற்சிக்க. பளாரென்று கன்னத்தில் அரை விழுந்தது அம்மாவிடமிருந்து. அழுதுகொண்டே நிற்க, காதைபிடித்து இழுத்து அறையில் தள்ளி, கம்பி காயவைத்தாள்.சிறிது நேரத்தில் வந்து கதவை திறந்து மனதை கல்லாக்கி கொண்டு எனது கணுக்காலில் வைக்க..அத்தனை வலியோடு கத்தினேன்.

என் கனவு களைந்து போகும் அளவிற்கு கத்திஇருக்கிறேன். கண்களை உருட்டி பார்க்கிறேன் கடிகாரத்தை நேரம் அதிகாலை ஐந்து மணி, இருபத்திரண்டு நிமிடம்.நாள் ஏப்ரல் 30 – 2015. அட கடவுளே இத்தனையும் கனவா, சத்தியமாய் நம்ப முடியவில்லை.என்னடா காதல் எல்லாம் பண்ணினோம் ,அப்போ அந்த பொண்ணுகூட கனவா!!!!!. இல்லை எங்கோ பார்த்த முகமல்லவா அந்த முகம். நன்றாய் நினைவுபடுத்தமுயற்சிக்கிறேன். நினைவுக்கு வர, வேகமாய் எழுந்து என் வீட்டின் இன்னொரு படுக்கையறைக்கு ஓடுகிறேன்.

அழுது தடம் பதிந்த முகத்தோடு உறங்கிக்கொண்டிருக்கும் என் மணைவியை உற்றுநோக்க,அதே முகம்..காதலை நெஞ்சுள் வைத்து என்ன புண்ணியம், இப்படி கனவாய் மட்டும் வரும், பிறகு கலைந்தும் போகும்.கோபம் காட்டி சுக்கு நூறாய் அல்லவா உடைத்துபோட்டு இருக்கிறேன் அவளை. பணம் தேடல்,புகழ் தேடல், பொருள் தேடல் இவைகளில் கிடைக்காத ஒரு சந்தோசம் இருக்கிறதென்றால் அது உருகி உருகி காதலிக்கும் காதலை தவிர சத்தியமாய் வேறொன்றுமில்லை என்பதை பதியவைத்துவிட்டேன் என்னுள். அவள் கன்னத்தில் சுவடு பதித்த கண்ணீர் தடையங்களை மெதுவாய் அழிக்க ஆரம்பிக்குறேன்.

அவளை உள்ளுள் மட்டுமே நேசிக்கும் எனது காதலை முதல் முறை பகிங்கிரமாய் ஒப்புக்கொண்டு அவள் கன்னத்தில் கொட்டுகிறேன் மொத்தமாய், முத்தமாய்…….

அப்பா - கண்ணன் (1964-2015)

இப்படி ஒரு பதிவை, அதுவும் இவ்வளவு சீக்கிரம், தகப்பனை இழந்த மகனாக எழுதுவேன் என்று கனவிலும் நினைத்து பார்த்ததில்லை.

ஆறுமுகம் என்பது உனது பெயர். எப்பொழுதிலிருந்து,எப்படி கண்ணன் என்று உன்னை அழைக்க ஆரம்பித்தார்களோ, அந்த நொடிகளிலிருந்து அப்படியே வாழ்ந்து இருக்கிறாய்.எவ்வளவு பெரிய மனிதானாய் இருந்தாலும் சரி பணத்திலும் பலத்திலும், தவறு செய்யும் பொழுது தட்டி கேட்டு இருக்கிறாய். கண்ணன் எவனக்கும் பயப்படமாட்டேன் என்று நீ நிற்கும் பொழுது என் அப்பன் என்று பெருமை பட்டுக்கொண்டிருக்கிறேன்...

உன்னுடன் பயணம் செய்த இந்த முப்பது வருடங்களில் அடுத்தவர்களை கெடுக்கும் எண்ணமும், பொறாமை குணமும் ஒரு தருணத்தில் கூட நான் கண்டதில்லை. கடவுளின் மேல் சத்தியமாய் நான் ஒருமுறை கூட கண்டதில்லை.எண்ணத்தில் நீ எப்பொழுதும் கண்ணனே...

கிட்டத்தட்ட நம் கிராமத்தை சுற்றியுள்ள குறைந்தது 30 கிராமத்து மனிதர்களுக்கும் நீ யாரென்றும் எதற்கும் பயப்பட மாட்டாய் என்று நன்றாகத்தெரியும் . கடைக்கோடி மனிதனுக்கு ஒன்று என்றால் கூட நீ ஓடி இருக்கிறாய், உன்னால் வாழ்ந்தவர்கள் நிச்சயம் பல ஆயிரங்களை தாண்டி இருக்கும். என்னை பொறுத்தவரை உன்னிடம் நான் கண்ட ஒரே குறை நீ மதுவுக்கு அடிமையாய் சில காலம் கடந்தாய். அப்படி இருந்தும் உனது மகன்களை சொக்கதங்ககளாய் வளர்த்தாய். வளர்ப்பு என்றால் அப்படி ஒரு வளர்ப்பு, உன்னிடம் அடிவாங்காத நாட்கள் என்றால் அது இந்த கடைசி ஐந்து வருடங்களாய் தான் இருக்கும்.உன்னை பயத்துடன் பார்த்தே பழக்கப்பட்டு விட்டோம். ஒன்று இரண்டு என விரல் விட்டு என்னும் எண்ணிக்கை கொண்ட இரு சக்கர வாகனங்கள் இருந்த காலகட்டத்தில் இருந்தே இருசக்கர வாகனம் வைத்து இருந்தாய். உனது அதிவேக சத்தத்தை வைத்தே ஊர் மக்கள் கணித்து விடுவார்கள் கண்ணன் வருகிறான் என்று.

பருந்தை கண்டு அஞ்சும் பாம்புகுட்டிகளாய் பதறியடித்து பதுங்கிக்கொண்டு இருப்போம் உன் வாகன சத்தத்தை கேட்கும்பொழுது. வந்து மெதுவாய் அமர்ந்து மீசை முறுக்கி சத்தமிடுவாய் சாப்பிடீங்களாடா? என்று.வாய் பேச பயந்து தலைமட்டுமே ஆட்டுவோம் நாங்கள்.அடுத்த கேள்வி அதிரச்செய்யும், "படிச்சீங்களாடா"?,மணி 10 வரைக்கும் படிக்கணும், படிக்கிற சத்தம் என் காதுக்கு கேட்கணும், போயி படி என்று சொல்லும் பொழுது வியர்த்தே இருக்கும் எங்களுக்கு.

இருசக்கர வாகனம் ஓட்டும்பொழுது மட்டுமின்றி நீ எடுத்துக்கொண்ட அத்தனை செயல்களிலும் வேகம் தான்.வேகம் வேகம் வேகம்..கிட்டத்தட்ட ஒரு 20 பெரிய விபத்துகளில் சிக்கி இருப்பாய், பல பெரிய காயங்களுடன் பிழைத்துக்கொள்வாய்.ஊரார் நீ செய்த புண்ணியம் காப்பாற்றிக்கொண்டதாய் கூறுவார்கள். அப்படி தான் ஜூன்-7-2015 அழைப்பு வந்தது விபத்தில் நீங்கள் சிக்கிகொண்டதாய், பதறியடித்து என்னுள் சமாதானம் செய்து முடிப்பதற்குள், அடுத்த அழைப்பு, "விஜி அப்பா இறந்துட்டார்"

கதறி கதறி அழுதேனப்பா,உடைந்தே போயிவிட்டேனப்பா.தந்தை இழப்பு என்ன என்பதை உணர்ந்தேனப்பா.தந்தை இழந்த மகன்களின் ஒட்டு மொத்த வலியை ஒரே நொடியினில் உணர்ந்தேன். இதுவரை உடல் வலியை உணர்ந்து இருக்கிறேன், உள்ள வலியை உணர்ந்து இருக்கிறேன், முதல் முறையாய் உயிரின் வலியை உணர்ந்தேன், கத்தி அழுதேன், கண்ணீர் துடைக்க நீ இல்லை. பத்தாயீரம் ரூபாயை தொலைத்துவிட்டு அழுதுகொண்டே அலைப்பேசியில் உன்னை அழைத்தேன், ஒரே வார்த்தையில் கம்பீரமாய் கூறினாய் "காசு என்னடா சீம காசு, நீ அழாம கண்ண துடைச்சுக்கிட்டு உடனே ஊருக்கு கிளம்பி வா, உன் அப்பன் நான் இருக்கிறேன்" என்று. இப்பொழுது உன் மகன் நீ இன்றி கதறி கதறி அழுகிறேன், "நான் பாத்துகிறேன் அழாத குமாரு" என்று கண்ணீர் துடைக்க நீங்கள் இல்லையே

என்னுள் இருக்கும் ஒரு துளி வீரத்துக்கும் நீயே பொறுப்பு.உன் இழப்பு தைரியமாய் இருக்கவிடாமல் என்னை உடைந்து விழவைத்துவிட்டது. உன் வேகம் தான் எனக்கு பிடிக்கும், அதே வேகத்தில் பேருந்தில் மோதிய அடுத்த கணமே உயிரிழந்து விட்டாய்.அந்த கடைசி நொடியிலும் கூட எங்களை நினைத்து இருப்பாய் தானே அப்பா??.. 'பைக்கு உனக்கு வேண்டாம் குமாரு, உனக்கு காயம் ஆகிடும், கார் வாங்கிக்க,காசு நான் தறேன்' என்று படிச்சு படிச்சு என்னிடம் கூறினீர்கள். எப்படியப்பா நான் மட்டும் தாங்கிக்கொள்வேன் நீங்கள் காயம் பட்டு துடி துடித்து இறந்ததை?..  

உன்னை உயிரற்று மருத்துவமனையில் பார்த்த நிமிடத்திலிருந்து உயிரற்றல்லவா கிடக்கிறேன். எதைச்சொன்னாலும் "நான் பார்த்துகொள்கிறேன், உனக்கெதுக்கு கவலை குமாரு, உன் அப்பன் நான் இருக்கும்பொழுது எதுக்கும் கவலைப்படாத" என்பாய். இப்படி தகப்பனை இழந்த மகனாக்கி விட்டாய். உன் உடலை காண கதறி அழுத அவ்வளவு கூட்டத்தில் நான் துலைந்தே போனேன் உனைத்தேடி தேடி.இன்று முதல் உன் முகம் காண முடியாது என்று நினைக்கும் நொடிகளில் எல்லாம் நெஞ்சு கனக்கிறது தாங்க முடியாமல்.

இன்று உன் பிரேத பரிசோதனை சான்றிதல் வாங்க கூட தெரியாமலும், முடியாமலும் தடுமாறிக்கொண்டு இருக்கிறோம். அத்தனையும் நீயே செய்தாய்,அதுவும் அத்தனை வேகமாய் முடிப்பாய், உன்னை தெரியாத ஆட்கள் ஏது கிட்டத்தட்ட நமது 30 கிராமங்களில். எனக்கெதுக்கு பதவிகள் என்று தன்னலமற்று உழைத்து இருக்கிறாய் கட்சிகளிருந்து கொண்டு நமது கிராமத்து மக்களுக்கு. இனி நீ இன்றி நடைபோட நீ மட்டுமே உதவமுடியும் அப்பா. எங்களோடு எப்பொழுதும் இருங்கள், கண்ணீர் சிந்தும் எங்களை, காற்றாகவாவது வந்து அணைத்து முத்தமிட்டு கண்ணீர் துடைத்து எங்கள் முன் செல்லுங்கள் நாங்கள் உங்களை பின்பற்றுகிறோம். 

என் அப்பாவின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்ட தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

கனவே இன்னும் ஒருமுறை...



இன்று ரிமோட்டில் விளையாடும் காரை எனது வீட்டின் முன்பு உள்ள சிமெண்ட் சாலையில் விளையாடிக்கொண்டிருந்தேன். அதிவேகமாய் இயக்க பிடிக்கும் என்பதால் அத்தனை வேகமாய் ஓட்டிக்கொண்டிருக்க, திடீரென சாலையோர சாக்கடையில் விழ, காரை அவ்வளவு பிடிக்கும் என்பதால் சற்றும் யோசிக்காமல் முழுவதுமாய் மூழ்குவதர்க்குள் ஓடிச்சென்று சாக்கடைக்குள் கைவிட்டு எடுக்கும் கணம் வேகமாய் ஒரு டிவிஎஸ் வண்டி என்முன் வந்து நிற்க, நிமிர்ந்து பார்க்கிறேன்.

வெள்ளை சட்டை, வெள்ளை வேஸ்ட்டி,முறுக்கி நிற்கும் கம்பீர மீசை , ஆனால் பார்வையில் சாந்தம். என் அப்பாவே தான். 'குமாரு அங்க என்னடா பண்ற, என்னடா கையெல்லாம் சாக்கடை தண்ணி, இங்க வா' என்று கூறி முடிப்பதற்குள், ஓடிச்சென்று அப்பாவை அப்படி இருக்கியணைத்து, நல்லா இருக்கீங்களாப்பா?, எங்கப்பா இருந்தீங்க?, ஏன்ப்பா இளைச்சுட்டீங்க? என ஆயிரம் கேள்வி அவர் முன் வைக்க, அவ்வளவு பக்குவமாய் பதில் சொல்கிறார்.'அப்பா ஹாஸ்பிட்டல்ல இருந்தேன்ல, இப்ப தான் அப்பா காயம் சரி ஆகுச்சு குமாரு' என்று கூறிக்கொண்டே அவரது வெள்ளை வேஸ்ட்டியில் எனது கையை துடைத்துவிட்டார்.

அப்பா வாங்க போலாம் வீட்டுக்கு, அம்மா, குட்டி எல்லாம் உங்கள காணாம அழறாங்க என்று கூறிக்கொண்டே அவரை இழுத்து வண்டியில் அமர்த்த முயற்சிக்கையில், சிரித்துக்கொண்டே கூறுகிறார். 'உன் அம்மா திட்டுவாளே டா நான் வீட்டுக்கு வந்தா, இவ்வளவு நாளா எங்க போன குமாரு' அப்டின்னு....
'இல்ல அப்பா, அம்மா திட்ட மாட்டாங்க,நீங்க இல்லாத இந்த நாட்களில் ரொம்ப அழுது மனமுடைந்து இருக்காங்க, வாங்க போகலாம் சீக்கிரம் என அவசரப்படுத்த, வண்டியில் அமர்ந்து வீடு நோக்கி பயணித்தோம்.. சீக்கிரம் போங்கப்பா, இன்னும் வேகமா போங்க, நான் அம்மாகிட்ட உங்கள காட்டனும் என வேகப்படுத்த, 'நிதானமாய் தான் குமாரு போகணும் எப்பவும், சரியா!!, வேகம் எப்பவும் தப்புடா' என கூறிக்கொண்டே வண்டியை மெதுவாய் ஓட்டுகிறார்.'அப்பா, நான் என் ஆபீஸ்ல வொர்க் பண்றவங்க கிட்ட சொல்லணும், உங்களுக்கு ஒன்னும் ஆகல நீங்க வந்துட்டீங்கன்னு' என கூறிக்கொண்டே வருகிறேன்.அவ்வளவு அழகாய் சிரித்துக்கொண்டே வருகிறார். 'சரி குமாரு ' என தலையசைத்துக்கொண்டே..

படாரென கண்ணில் ஏதோ பூச்சியடிக்க, கலங்கிய கண்களை மூடி, வலியில் மெதுவாய் கண்திறந்தேன். எனது அறைக்காற்றாடி வேகமாய் சுழல,அறைமுழுவதும் இருட்டியிருக்க.கொஞ்சம் கொஞ்சமாய் நிஜம் உடைய உடைய, இத்தணையும் கனவு என மனம் உணர உணர உள்ளம் உடைந்து வெடித்து அழத்தொடங்கினேன். அப்பா விபத்தில் இறந்தது தான் உண்மை,நம்மிடம் இல்லை, அவரைத்தொட்டு பாசம் உதிர்க்க இயலாது என உணர உணர வெடித்து அழத்தொடங்கினேன். 

அப்பா என்பது இன்னொருஉயிரல்ல, மகன்களிடமிருந்து என்றும் பிரித்தறிய முடியா உயிரே.தேம்பி தேம்பி அழுகிறேன், 'உன்னை தொலைத்துவிட்டேனே அப்பா'. இனி உன்னை எங்கு கண்டெடுக்க!!!!! ..அப்பா என்பது துளியும் அசைத்துப்பார்த்திட முடியா ஒரு உறவு. அப்பாவை இழந்த மகன்களே எப்படியப்பா கடக்குறீர்கள் அப்பாவை நினைவுபடுத்தும் தருணங்களை?.சத்தமில்லாமல் மனதினில் வெடித்து அழுது கடந்து போவீர்கள் என உணர்கிறேன் இப்பொழுது ... கடினமாய் இருந்தாலும் அழுகையோடே தூங்க முயற்சிக்குறேன். பிறகெப்படியப்பா உன்னைக்கட்டிபிடித்து பேசுவேன், கனவைத்தவிர, இந்த வரம் வேறெங்கு கிடைக்கும் இனி,. கனவே இன்னும் ஒருமுறை... 

கணக்கு PT – வாசுதேவன் சார் - “The Legend”

ஒரு சாதாரண மனிதன் ஹீரோ ஆவதற்கு, தரையில் படாமல் ஆகாயத்தில் சுழன்று சுழன்று அடிக்கவேண்டும், அழகிய பெண்களுடன் காதல் நடனம் ஆட வேண்டும், அனைவரின் கவனத்தை ஈர்ப்பதை போன்று கோடி கோடியாய் அள்ளிக்கொடுக்க வேண்டும், பொதுக்கூட்டங்களில் பேச வேண்டும், பொது நிகழ்வுகளில் அசத்த வேண்டும், இது போன்ற ஹீரோ ஆவதற்கான இலக்கணங்களை எல்லாம் சுக்கு நூறாய் உடைத்தெறிந்து, ஒரு ஆசிரியராய் இருந்தால் போதும், ஒரு தலைமுறையை உயர்த்திபிடித்து, தரமானதாய் மாற்றுவதன் மூலம், அந்த தலைமுறைக்கே ஹீரோ வாகிவிட முடியும் என்று நிரூபித்தவர், என் கணித ஆசிரியர் வாசுதேவன் சார் அவர்கள்.

எப்பொழதும் சிரித்த முகம்,பெல்பாட்டம் பேண்ட், எப்பொழுதும் தலைக்கு குளித்து மிளிரும் அவரது தலைமுடி, அதிபட்ச நாட்களில் திருநீர் வைத்திருக்கும் அவரது நெற்றி, எப்பொழுதும் உற்சாக நடை, பேச ஆரம்பிக்கும்பொழுது முதல் வார்த்தை, "சொல்லுடா தம்பி " எனும் நெருக்கமான கனிவான பேச்சு, அனைத்திற்க்கும் மேலாக உண்மையை கடைபிடிக்கும் அவரது சிறந்த குணம், மாணவன் தவறுசெய்தால் கூட மன்னித்துவிடும் அவர், மாணவன் பொய் சொல்வதாய் தெரிந்தால் கொதித்தெழும் அவரது நேர்மை, இவை எல்லாம் இவரது அடையாளம்.

பள்ளி நாட்களில் அனைத்து பாடங்களிலும் சாதாரணமாய் 80 மதிப்பெண்களை தாண்டி விடும் எனக்கு, கணிதபாடத்தில் மட்டும் 80 மதிப்பெண்களை தாண்டி விட கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும், எனக்கும் கணிதத்திற்கும் அத்தனை தொலைவு என்றே சொல்லலாம். எட்டாம் வகுப்புவரை கணிதத்தை மனப்பாடம் செய்து மதிப்பெண்களை அள்ளிக்கொண்டிருந்த்தேன். எனக்கும் கணிதத்திற்குமான தொடர்பு அவ்வளவே. முதல்முறை ஒன்பதாம் வகுப்பில் அவரை கணிதவகுப்பில் காண்கிறேன்.

அன்று முதல் நாள், வகுப்பில் நுழைகிறார், வகுப்பே அமைதியாய் இருக்கிறது., முதல் வார்த்தை உதிர்க்கிறார் "இந்த பாருடா தம்பிகளா, கணக்கும் ஒன்னும் இல்லடா, சந்தேகம்னா கேளு, எத்தனை டைம் வேணும்னாலும் சொல்லித்தறேன், புரிஞ்ச மாதிரி தலை மட்டும் ஆட்டாத" என்று சொல்லி முடித்ததும் நிமிர்ந்து உட்கார்ந்தேன், நான் மட்டும் அல்ல, அவரை முதல் முறை வகுப்பில் சந்திக்கும் அணைவருமே. நடத்த ஆரம்பித்தார்.

எப்பொழுது ஒரு ஆசிரியர் தனது மாணவனை முதல் வகுப்பிலையே, தனது திறமையால் கட்டிபோட்டுவிடுகிறாரோ அப்பொழுதே அவர் வென்றுவிடுகிறார். அப்படித்தான் அவர் என்னை வென்றார், கொஞ்சம் குழப்பமான பார்வையில் மாணவன் பார்க்கும் அடுத்த நிமிடமே, ஓடி சென்று எழுதியதை அழித்துவிட்டு, இருடா தம்பி, முதலில் இருந்து வறேன் என்று மீண்டும் முதலில் இருந்து வருவார். 

ஒரே கணக்கிற்கு நான்கைந்து முறைகளை வைத்து இருப்பார். கிட்டத்தட்ட அத்தனை தன்னைவருத்திக்கொண்டு பசங்களுக்கு புரியணும் அது தான் முக்கியம் என தன்னை தயார்படுத்திக்கொள்ளும் ஒரு சிறந்த ஆசிரியர். அவர் வகுப்பை முடித்து செல்லும் நேரம் chalk piece துகள்களால் நனைந்திருப்பார், அதைப்பற்றி ஒரு நொடிகூட என்னிப்பர்த்திருக்க மாட்டார், முடிந்து செல்லும் பொழுதும் அத்தனை மனநிறைவோடு செல்வார்

எனக்கு தெரிந்து எந்த கணக்கையும் விட்டதில்லை அவர், என்னால் அடித்து சொல்லமுடியும் கணிதத்தை வெறுக்கும் எவராக இருந்தாலும் சரி, அவரது முதல் வகுப்பை சந்தித்து விட்டால் போதும் நிச்சயம் பட்டைய கிளப்ப முடியும். வந்தோம்,வேலை செய்தோம் என்று சென்றவர்களுக்கு மத்தியில், தன் ஆத்ம திருப்தியோடு சேர்த்து, எப்படியாவது தன் மாணவனுக்கு உணர்த்திவிட விட வேண்டும் , கணிதம் பயம் கொள்ளும் அளவிற்கு பெரிய பேய் இல்லை என்று உழைத்தவர்.

இன்னும் கூட என பத்தாம் வகுப்பு மொத்த மதிப்பெண்கள் சற்று வித்தியாசத்தில் 400 யை தொடமுடியாமல் போனதை நினைவு கூறுகையில் எல்லாம், என் வாசுதேவன் சார் அவர்கள் பத்தாம் வகுப்பில் எனது பி பிரிவிற்கு வர முடியாமல் போனதே காரணம் என உள்ளுள் உணர்ந்துகொண்டு தான் இருக்கிறேன். பாடங்களை தாண்டி ஒவ்வொரு மாணவனும் உண்மை பேச வேண்டும் என்றும், ஒழுக்கம் நிறைந்தவனாய் வர வேண்டும் என்றும் தாகத்தோடு திரிந்தவர். அத்தனை சொல்லிகொண்டே போகலாம், அவ்வளவு பெரிய பாடம் தான் என் வாசுதேவன் சார் அவர்கள்.

இன்று அவர் சமூக வலைதளத்தில் இருக்கிறார் என்பதையறிந்து, அவரை கண்டறிந்து, அவருக்கு அழைப்புவிடுத்து அவரது ஒப்புதலுக்கு காத்திருக்கிறேன். ம்ம் என்னைப்போல் பல லட்சகணக்கான மாணவனை செதுக்கியிருக்கிறார், இதில் நான் என்பதை எப்படி அவரால் கண்டறிய முடியும். இருந்தும் அவரது ஒப்புதலுக்காய் காத்து இருக்கிறேன். ஒவ்வொரு மனிதனும் சமூகத்தில் சிறந்த மனிதராய் இருக்கும் ஒருவரை தன்னோடு தொடர்புபடுத்திக்கொள்ள முற்பட்டு, நண்பன் என்றோ, சொந்தக்காரன் என்றோ, தன் சமூகத்தை சேர்ந்தவன் என்றோ, எனக்கு தெரிந்தவன் என்றோ எதோ ஒரு புள்ளியில் தன்னோடு அந்த சிறந்த மனிதரை தொடர்புபடுத்திக்கொள்ள முயற்சிப்பதுண்டு. 

என்னை செதுக்கிய, என்னுள் கணிதத்தை விதைத்த, நன்னெறிகளை வித்திட்ட என் ஆசிரியர் வாசுதேவன் சார் அவர்களை என்னோடு சேர்த்துக்கொண்டு பெருமைகொள்ள விரும்பும் யதார்த்த மனிதனில் தான் நானும் இருக்கிறேன். அவரோடு என் தம்பி உரையாடிவிட்டு அதைப்பற்றி சொல்லும் நாட்களில் எல்லாம் அத்தனை பொறாமை கொண்டு இருக்கிறேன், பட்டென்று பேசிவிடும் யதார்த்த இயல்பு என்னிடம் இல்லாதாலோ என்னவோ அவருடன் இதுவரை பேசியதில்லை.இனியும் பேசுவேனோ என்று தெரியாது, அதனாலென்ன என் தந்தையிடம் கூட நான் அதிகம் பேசியதில்லை, அதற்காய் அவரின் மீதான் அன்பும், மாரியாதையும் எப்பொழுதும் குறைந்ததில்லை, அதுபோலத்தான் எனக்கும் என் ஆசானாகிய வாசுதேவன் சார் அவர்களுக்கும்.
“The Legend” என்ற வார்த்தை மிக கச்சிதமாய் பொருந்தகூடிய சில மாமனிதர்களுள் ஒரு அசாத்திய மனிதராய் என் வாசுதேவன் சார் அவர்களும் இருக்கிறார் என்று காலரை தூக்கி பெருமை கொள்ளும், அவர் செதுக்கிய பல லட்சகணக்கான ஒளிரும் சிலைகளில் நானும் ஒருவன்.

நான்,உம்மைப்போல் ஒரு நாளாவது வாழ்ந்துவிட்டு மடிந்துவிடவேண்டும் - என்னுள் நெருடிக்கொண்டிருக்கும் நெடுநாள் ஆசை.

எப்பா தம்பி, நீ திருந்தவே மாட்டியா...

காலம் காலமா நீங்களும் இதே கேள்விய தான் என்ன பார்த்து கேட்குறீங்க, ஏன் நானுமே கூட இத தான் கேட்கிறேன் என்னை பார்த்து. சரி அத விடுங்க, இப்போ மேட்டர்க்கு வருவோம். என்னதாண்ட உன் பிரச்சனை அப்டின்னு நீங்க கடுப்பா ஆரம்பிக்குறதுக்குள்ள நானே சொல்லிடறேன்.
இன்னைக்கு எனக்கு பிறந்த நாள்(அதுக்கு என்னடா இப்போ)..

ஒழுங்கா நேரத்துலையே எழுந்து கோவில்களுக்கு போயிட்டு,அர்ச்சனை பண்ணிட்டு வா அப்டின்னு மேலிடத்திலிருந்து கட்டளை வந்து சேர, கொஞ்ச நேரம் யோசிச்சேன், நமக்கு எதுடா கோவில்னு.. டக்குனு தோனுச்சு நம்மலுடைய கோவில்களே ஐடி கம்பனிகள் தானே, இப்போதைக்கு.அதில் அர்ச்சனை என்பது நேர்முகத்தேர்வுகள் தானே என்று தோன்ற.. அடுத்த சில மணித்துளிகளில் கிளம்பிவிட்டேன் சர்டிபிகேட் பைல தூக்கிகிட்டு .அட ஆமாங்க நேர்முகத்தேர்வுக்கு தான். அங்க போயி நின்னா உள்ள கூப்பிட்டாங்க..
எப்பா தம்பி உனக்கு வேற வேலையே இல்லையா, இப்போ தான ஒரு கம்பெனில சேர்ந்த,அப்புறம் எதுக்கு இது அப்டின்னு தோன்றினாலும், வேலை தேடுற காலத்துல என்னை தொரத்தி அடிச்ச கம்பெனி இது, இப்போ போயி பாப்போம் ஜெயிக்க முடியுதானு என்று சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொண்டு உள்ள போனேன்.

கேட்ட கேள்விக்கெல்லாம் கடகடன்னு பதில் சொல்ல, திடீர்னு ஒரு கேள்விக்கு நான் சொன்ன பதில் தப்புன்னு அந்தம்மா சொல்ல, இல்ல சரின்னு நான் சொல்ல. சிஸ்டம் எடுத்துவாங்க ரன் பண்ணி காட்டுகிறேன் அப்டின்னு நான் சொல்ல. அந்தம்மா கடுப்பாகி ஏதோ ஏதோ சம்பந்தம் இல்லா கேள்வி கேட்டு கழுவி கழுவி ஊத்துனாங்க. விடுவனா மாமன் அப்டிங்கற கதையா நானும் சமாளிக்க.கடைசியில் நேர்முகத்தேர்வு முடிஞ்சுருச்சுனு அவுங்க சொல்ல, சரி கிளம்பறேன்னு நான் சொல்ல காத்திருக்க்கவும்னு சொன்னாங்க..எம்மா ஒன்றை மணிநேரமா உள்ள வைச்சு என்னை கும்மி எடுத்தது பத்தாத...

என்னடா இது, எதுக்கு வெயிட் பண்ண சொல்றாங்க அடிக்க ஆள் கூட்டிவருவான்களோ, ஒரு 75 பெர்சென்ட் தான ஒழுங்கா attend பண்ணினோம் , நம்ம ஏதும் ஒரு flow ல திட்டி இருப்போமோ, இருந்தாலும் இருக்கும் கிளம்பிடுவோம்னு எழுந்தரிக்க, அந்தம்மா வந்து நீங்க செலக்ட் அப்டின்னு சொல்லிட்டு,HR round க்கு அனுப்ப, HR ரவுண்டு போனா,ஓகே நீங்க கேட்டத தரோம்னு சொல்ல நான் அப்டியே ஷாக் ஆகிட்டேன் அப்டின்னு வடிவேல் சொல்ற கதையா நானும் ஷாக் ஆகிட்டேன்..

ஒரே குழப்பத்துலையே வீடு வந்து சேர்ந்தேன் எப்படி செலக்ட் ஆனோம், நம்ம தான் அடிக்காத குறையா சண்டை போட்டோமே, நம்ம answer சரியாவே இருந்தாலும் அந்த அளவுக்கு வாக்கவாதம் பண்ணி இருக்க கூடாது அப்புறம் எப்படி அப்புறம் எப்படின்னு கேள்வி என்ன துளைத்து எடுக்க, மெதுவாய் system on பண்ணி பார்த்த அத்தனை wishes என் பிறந்த நாளுக்கு அத்தனை நல் உள்ளங்களிலிருந்து.. அப்புறம் என்ன நிம்மதியா படுத்துட்டேன், தூங்க போறேன்..
அட அதான் எனக்குள்ள துளைத்துகொண்டே இருந்த கேள்விக்கு தான் பதில் கிடைச்சுருச்சே நான் எப்படி select ஆனேன் அப்டிங்கற கேள்விக்கு... அட இன்னுமாங்க புரியல என்ன காரணம் அப்டின்னு... ஆமாங்க அதே தான் நீங்க தான், நீங்களே தான்..

எனது பிறந்த நாளில் என்னை வாழ்த்திய அத்தனை உள்ளங்களுக்கும் எனது மனதார நன்றி...

தாயே உனக்கொரு கடிதம்....

இந்நாளில் உனை நினையாமல் யாரை நினையேன் . இவ்வுலகத்திற்கு என்னை அறிமுகப்படுத்திய உனை நினையாமல் பிறகு வேறுயார்..பத்து திங்கள் என்னை சுமந்து, தினம்தினம் மணித்துளிகள் கரைவது கூட தெரியாமல் அடுக்கடுக்காய் ஆயிரம் வேலைகளை செய்துகொண்டு, என்னைசுமந்து கொண்டு எப்படி எல்லாம் சிரமப்பட்டு இருப்பாய். நீ என்னை சுமையாய் கூட உணர்ந்திருக்க மாட்டாய்.உள்ளம் உவகையுற்று காத்திருந்திருப்பாய் எனைக்காண. 

உன் வாழ்க்கை போர்க்களத்தில் என்னை ஒருகையில் ஏந்திக்கொண்டு, இன்னொரு கையில் நம்பிக்கை என்னும் வாளை ஏந்திக்கொண்டு அத்தனை இன்னல்களையும் வெட்டி வீழ்த்தினாய்.இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறாய் நாங்கள் சிறுபிள்ளைகளென்றே,அதனாலோ என்னவோ எங்களுக்கு ஒன்றும் தெரியாதென்று ஒவ்வொரு செயலிலும் எங்கள் முன் செல்கிறாய்.

அதீதமான நாட்களில் உன் கைகளை உதறிவிட்டு நான் வளர்ந்ததை உனக்கு நிரூபிக்க முயற்சித்து உன் கோபத்தை சம்பாதித்து இருக்கிறேன். அதனாலென்ன அம்மாவிடம் தோற்பதை விட ஆனந்தம் வேறெதில்.இன்றும் உழைத்துக்கொண்டு இருக்கிறாய் உன் உழைப்பில் மட்டுமே நிற்க வேண்டுமென.நீண்ட காலமாய் வாழ்க்கை கடலில் மிதந்து கொண்டிருக்கிறாய் எங்களை கரை சேர்க்கும் கட்டுமரமாய். நாங்கள் கரை சேர்ந்துவிட்டோம்.உனக்காக காத்து இருக்கிறோம், மிதந்துகொண்டிருப்பதே எனது வாழ்க்கை என இன்னும் உழைத்துக்கொண்டே இருக்கிறாய்..நீ எங்கள் நிழலில் இளைப்பாற ஏங்கிகொண்டிருக்கிறோம்..

எப்பொழுதெல்லாம் உடைந்து தனியாய் நிற்கிறேனோ அப்பொழுதெல்லாம் திரும்பிப்பார்ப்பேன், உயர்ந்து அசாத்தியமாய் நின்று கொண்டு, ம்ம்ம் செல் நாங்கள் நிற்கிறோம் என்று என்னுள் ஒரு அசைக்கமுடியா தைரியமாய் நிற்கும் உன்னையும்,அப்பாவையும் பார்த்துவிட்டு நடைபோடுவேன். அதில் ஒரு ஆசாத்தியமாகிய அப்பாவை இழந்துவிட்டேன் வேரோடு.. இப்பொழுதெல்லாம் தைரியத்தை தாண்டி என்னோடு உன்னை அழைத்து செல்லவே ஆசைப்படுகிறேன் அன்னையே..

எனக்காக என்னோடு நடை போடு அன்னையே, உன்னை அருகில் வைத்து உனை சுமக்க ஏங்குகிறேன்.ஒரு வரம் வேண்டும் இனிவரும் நாட்களில் நான் தாயாய் என் இறகில் உன்னை காத்திட...

உன் வாசனையில் சில நாழிகை... -1


 


படித்த படிப்புக்கு அடையாளம் தேட சென்னை வருகிறேன் முதன்முறை. "கோயம்பேடு வந்தாச்சு எல்லோரும் இறங்குங்க,இதுதான் கடைசி ஸ்டாப்" என்று பேருந்து நடத்துனர் கூறி முடிக்கும்பொழுது, ஆம் இது தான் எனக்கும் கடைசி நிறுத்தம், இதில் வென்றாகவேண்டும், எனக்கு கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பு என்பதை மனதில் அமர்த்திக்கொண்டு நான் எழுந்து நடக்க ஆரம்பித்தேன் திருவெல்லிக்கேணி செல்லும் பேருந்தை நோக்கி.....

தேடிப்பிடித்து தங்கும் வீட்டை அடைவதற்குள் நண்பன் வந்து கூட்டிசென்றான் நான் இருந்து சாதிக்க வேண்டிய அந்த அறைக்கு. கொஞ்சம் ஓய்வு, பின் உணவு , பின் படித்த பாடங்களை புரட்டிப்பார்ப்பது, சில வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வு முயற்சிகள் என்று நாட்கள் கடந்தது.கடிவாளம் இட்ட குதிரையாய் அந்த ஒற்றை அறையையும், நேர்முகத்தேர்வு இடங்களையும் சுற்றி சுற்றி வந்தேன்.மெல்ல இந்த நகரமும், இந்த மக்களும் பழக்கப் பட ஆரம்பித்தார்கள். நண்பர்கள் ஆறு பேர்கள் சுற்றி இருந்தாலும் ஒரு வெறுமை, மெதுவாய் வாழ்க்கை கசக்கத் தொடங்கியது தொடர் தோல்விகளால்.நம்பிக்கை சிறிது சிறிதாய் உடையத் தொடங்கியது.

என் கடிவாள வாழ்க்கை, என்றாவது உடையும் என்று நம்பிக்கையிலிருந்த எனக்கு, அந்த நாள் வெகு அருகாமையில் இருக்கிறது  என நான் அறிந்திருக்கவில்லை. ஒரு அதிகாலை, என்னை ஒரு நிறுவனத்தின் வாசலில் நிறுத்தியது ஒரு நேர்முகத்தேர்வுக்காய்.வந்திருந்த அனைவரும் அமர்த்தப்பட்டோம் ஒரு அறையில். எங்கும் அதிகம் பேசிப்பழகாதவன் என்பதால் உதடுகளுக்கு பதில், கண்களை அதிகம் உபயோகப்படுத்திக்கொண்டிருந்தேன். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உற்று நோக்கியே பழகியவன்.அவ்வளவு நிசப்தம் நிலவியது அந்த அறையில்.ஒவ்வொருத்தனின் எதிர்கால வாழ்க்கையும் அந்த அறையில் அத்தனை நிசப்தமாய் சத்தமிட்டுக்கொண்டிருந்தது ஒவ்வொருவனின் உள்ளுள் மட்டுமே.

என் அருகில் அமர்ந்து இருந்தவன் பட்டென்று உடைத்தான் நீங்க எந்த ஊரு பாஸ் என்று, நான் நாமக்கல் என்றேன்.நான் ஜெயம்கொண்டம் என்று முடித்தான்.எழுத்துத்தேர்வு நடந்துமுடிந்தது.முடிவுக்கு காத்திருந்தோம். விஜய் என்று எனது பெயரை வாசிக்க, அத்தனை பல்லும் சிந்திவிடும் அளவுக்கு நீளப்புன்னகை.நாளை நேர்முகத்தேர்வு என கூறிவிட்டு அனுப்பினார்கள்.மெதுவாய் நடக்க ஆரம்பித்தேன் சந்தோசத்தில்.. விஜய்" என்று முதன் முறை சென்னையில் ஒரு பெண் குரல் அழைக்க, சற்று சந்தேகத்தில் திரும்ப்பிப்பார்க்கிறேன்.

படிய சீவி வகுந்தெடுத்த கூந்தல்,புருவங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்திராமல் தடுத்து நிறுத்தும் கருமை நிற பொட்டு,அதிகம் அலங்காரம் இல்லாத, என் கிராமத்து சாயல் அதிகம் ஒட்டியிருக்கும் முகம். பார்த்த மாத்திரத்தில் அட நம்ம ஊரு பொண்ணு என சினிமா ஹீரோக்கள் சொல்லும் அதே வசனம் என்னுள் கேட்க. என்னைய நிச்சயமா இருக்காது என சந்தேகத்தோடு பார்க்க ஆரம்பித்தேன். முதல் முறை பேசுகிறாள் "தப்பா எடுத்துக்காதீங்க" என்று ஆரம்பித்தாள். நான் பேச ஆரம்பிப்பதற்குள்,நீங்கள் நாமக்கல் அப்டின்னு கேள்விப்பட்டேன் அப்படியா? என்றாள். "ஆம்" என்று கூறி முடிப்பதற்குள் நானும் தான் என்றாள்.அதற்கடுத்து அவளிடமும் என்னிடமும் கேள்விகள்  இல்லை. ஒருவர் மாறி ஒருவர் தலைகவிழ்ந்து கொண்டே,கடைசிவரை பேசவில்லை. சரி பார்ப்போம் என இருவரும் வேறு வேறு திசையில் நடைகட்ட ஆரம்பித்தோம்.

மறுநாள் அடுத்தகட்ட நேர்முகத்தேர்விற்கு அதே நிறுவனத்திற்கு சென்று நேர்முகத்தேர்வை முடித்துவிட்டு காத்திருக்கிறேன் முடிவிற்காய்.சிறிதுநேரத்தில் இன்னொரு அறையிருந்து வந்து அமர்கிறாள். என்னை நோக்கிய அடுத்தநிமிடத்தில் அத்தனை புன்னகையோடு, முடிஞ்சுதா விஜய் ? என்றாள். உள்ளுள் ஏதோ ஏதோ பேச தோன்றுகிறது, அவள் கண்ணைப் பார்த்து அவள் பெயரை கேட்பதற்கு வராத தைரியத்தை எந்த கடையில் வாங்குவது?.பேசாமல் இருப்பதே மேல் என அமைதியாகிவிட்டேன். இதற்கு மேல் அவளிடமும் என்னிடமும் கேள்விகள் இல்லை. நிசப்தமாய் அமர்ந்திருந்தோம். "விஜய், HR will get back you , now you can  leave  " என நிறுவன அதிகாரி கூறிமுடிக்க.. ஓங்கி அறைந்தது போல் இருந்தது. படாரென கிளம்பிவிட்டேன் இடத்தை விட்டு.ஒரு பத்து அடி கிளம்பி இருப்பேன். விஜய் என அதே குரல்,திரும்பிப்பார்க்க அதே அவள். "என்னையும் கிளம்ப சொல்லிட்டாங்க". என்று கூறி முடிப்பதற்குள் அவள் கண்கள் கலங்கியிருந்தது."சரி விடுங்க அடுத்தத பார்ப்போம் ",என்று நான் முடிப்பதற்குள்,வேறு ஏதாவது interview இருந்தா எனக்கு update பண்றீங்களா ப்ளீஸ் என்றாள்.

சரிங்க என்று கூறிவிட்டு நடை கட்டினேன். உங்க நம்பர் சொல்லுங்க நான் ஏதாவது இருந்தா update பண்றேன்.முதல் முறை ஒரு பெண் நம்பர் கேட்கிறாள். என் மீதான அவள் நம்பிக்கை, என்னுள் எனக்கான மதிப்பை கூட்டியது. பேருந்தில் அமர்ந்தது மட்டும் தான் தெரியும், என் மீதான அவளின் நம்பிக்கை என்னை ஏதேதோ செய்துகொண்டிருந்தது. எனக்கும் ஒரு பெண் நட்பில் இருக்கிறாள் என்பதை கூறி பெருமை கொள்ளும் சாதாரண மனிதனில் தான் நானும் இருக்கிறேன்.


எனக்கு எப்படியும் அவள் நம்பரை கேட்கும் தைரியம் இருக்காது என்பதை புரிந்தவளாய்,அவளது நம்பரை என்னிடம் கூறிவிட்டு,தமயந்தி என save பண்ணிக்கோங்க என்றாள். உள்ளுள் உணர்வுகள் உயிர்பெற்றது போன்றதொரு அத்தனை ஆனந்தம் என்னுள்.எப்பொழுதெல்லாம் நேர்முகத்தேர்விருக்கிறதோ அப்போதெல்லாம் ஒரு குறுந்தகவல் அவளிற்கு. அதற்குமேல் அனுப்ப முடியா வண்ணம் எனது  பொருளாதாரம் வீழ்ச்சியிளிருக்கும். 50 பைசா ஒரு குருந்தகவளிற்கு,அப்பொழுதெல்லாம் அப்பா அனுப்பும் பணத்தை பத்திரப்படுத்ததுவதுதான் அப்பொழுதைய முதல் வேலை,பிறகு தான் மற்றவை எல்லாம்...

இப்படி ஒவ்வொரு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடத்திலும்,ஹாய்  என்ற சாங்கிய சம்பிரதாய நிகழ்வுகள்,அப்புறம் மறுபடியும் நேர்முகத்தேர்வு தோல்விகள் என்று ஓடிக்கொண்டிருந்தது.அவள் எனக்கு அதிகம் பழக்கப்பட்டவள் ஆகிவிட்டாள்,ஹாய்,எப்படி பண்ணி இருக்கீங்க interview ?,விடுங்க அடுத்த interview ல பார்த்துக்கலாம்,ஏதாவது interview இருந்தா நிச்சயம் அனுப்புறேன் " இந்த வட்டத்தில் மட்டுமே சுழன்றோம்.

ஒருநாள்  ஒரு நிறுவனத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கிறோம்,"இது தான் நான் முயற்சி செய்கிற கடைசி interview என்றாள்" ..பட படவென ஆயிரம் கேள்விகள் கேட்க தோன்றுகிறது ஏன்?,எதற்காக?, கிடைக்கும், முயற்சி பண்ணுங்க, என்றெல்லாம் சொல்ல தோன்றுகிறது. சாதாரண வார்த்தைகளையே என்னால் பேச இயலாது இதில் உணர்வுப்பூர்வமான வார்த்தைகள் எங்கே?.. மௌனமாய் முதல் முறை அவள் கண்களை பார்த்து பேச முயற்சிக்குறேன்,அவளின் கலங்கிய கண்ணில் எதைப் பேச,
சற்று நேரம் வார்த்தைகளற்று அனாதையாய் விடப்பெற்றேன்...

நான் எதையும் கேட்க மாட்டேன் என்ற புரிந்ததாலோ என்னவோ,முதல் முறை சாங்கிய சம்பிரதாய வார்த்தைகளை தாண்டி பேச ஆரம்பிக்குறாள்."நான் காலேஜ் முடிச்சதும் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க, வேலைக்கு போகணும்,உங்களுக்கு ஏதாவது சேர்த்து வைக்கணும் என எவ்வளவு கூறினாலும் சமாதானம் ஆகாத என் பெற்றோரிடம் கொஞ்ச நாள் அவகாசம் கேட்டு இங்கு வந்து இறங்கினேன்,தோற்றுக்கொண்டே இருக்கிறேன்.இப்பொழுது அவர்களுக்கான நேரம்,அதனால் கிளம்புகிறேன் என்கிறாள். interview முடிச்சிட்டு நேரம் இருந்தா பார்க்கலாம்.,சரி விஜய் பார்க்கலாம் என்று கூறி முடிக்கும்பொழுது அவளது கண்களில் கண்ணீர் படர்ந்திருந்தது..

நேர்முகத்தேர்வு முடித்துவிட்டு காத்திருக்கிறேன் அவளுக்காய். காணவில்லை. ஏதோ ஒரு உணர்வில் இதயம் பட படக்க ஆரம்பிக்கிறது அவள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. விஜய் you will get offer letter with in 4 days you can check your mail .என்று நிறுவனம் என்னிடம் கூற திகைத்துப்போனேன்.அத்தனை கர்வத்துடன் புன்னகைத்துவிட்டு,வேகமாய் வெளியில் சென்று தமயந்திக்கு கூற முயற்சிக்குறேன். switched off செய்யப்பட்டுள்ளது என்ற வாசகத்தை கேட்க கேட்க வியர்த்துக்கொட்டுகிறது. ஒரு அரைமணி நேர முற்சிக்குப்பிறக்கும் தோல்வியே. குடும்பத்தில் ஆரம்பித்து, சொந்தம், நட்பு வட்டாரங்கள் என அனைத்திற்கும் வேலைகிடைத்ததை பகிர்ந்த பிறகும் கூட இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒரு வெற்றிடம். தொடர்ந்து முயற்சித்தேன் அவளிற்கு ,மீண்டும் தோல்வியே.

என்ன நடந்தது அடுத்த பதிவில் பகிர்கிறேன்