Wednesday, March 26, 2014

உதிரத்தில் ஊறிய விச(வசா)யம்அலுவலகத்தில் விடுமுறை கேட்டுவிட்டு, சொந்த ஊரிற்கு, கல்லூரிமாணவர்கள் சந்திப்பிற்கு சென்றிருந்தேன்.கிட்டத்தட்ட கல்லூரி முடித்து ஒன்றரை வருடங்கள் கழித்து, தொடர்பில் இல்லாமல் தொலைந்து போன நண்பர்களை கண்டெடுக்கவும், தொலைப்பேசி தொடர்பில் இருக்கும் நண்பர்களை நேரில் கண்டு ஒருவரையொருவர் முகம்மலர்ந்து, அகம்மலர்ந்து, நலம் விசாரிக்கவும்., எங்கள் நலனுக்காய், எங்கள் விருப்பமின்றி எங்களை செதுக்க பாடுபட்ட, ஆசான் எனும் சிற்பிகளை மீண்டுமொருமுறை காணவும் ஏற்பாடு செய்யப்பட்டது.  கல்லூரிக்கு சில மைல்களே அப்பால் இருக்கும் எனது வீட்டிலிருந்து பைக்கில் கிளம்ப ஆரம்பித்தேன்.,ஒரு சில தொடர்பில் இருக்கும் நண்பர்களிடம் நான் வந்து சேரும் சரியான நேரத்தை கூறிவிட்டு, கல்லூரியை நோக்கி..

வேகமாய் பறந்து சென்றாலும், சரியாக அடையாளம் கண்டுவிடும் ஒரு சில உறவினர்களின் கண்களிலிருந்து தப்ப முடியாது. அப்படி தான் நானும் மாட்டிக்கொண்டேன் அப்பொழுது.ஏதோ ஏதோ கேள்விகளை தொடுத்துக்கொண்டே போனார், "முடியல" என்ற என் உள்மனதின் சத்தம் அவருக்கு கேட்டபோதும் விடவில்லை. "எப்படிப்பா இருக்கு சென்னை?" என்றதில் ஆரம்பித்து, "எப்போ கல்யாணம் " என்பதில் கொண்டு வந்து நிறுத்தினார்.கிட்டத்தட்ட எனக்கான அரைமணி நேரத்தை விழுங்கியிருந்தார் என் அனுமதியின்றி. என்ன சொல்ல?., மிச்சம் வைத்தவரைக்கும் லாபம் என்று பறக்க ஆரம்பித்தேன்.கல்லூரியை அடைந்து பைக்கை நிறுத்திவிட்டு, நடைகட்ட ஆரம்பித்த நிமிடத்தில் அத்தனை எதிர்பார்ப்புகள், ஆசைகள் என ஒவ்வொரு காலடியிலும் ஒரு மிகப்பெரிய தேடல் இருந்தது.

தூரத்தில் நண்பர்கள் கூட்டம் தெரிய, ஒரு சில எட்டிகள் அதிகம் வைத்து ஓட ஆரம்பித்தேன். ரமேஷ், மாணிக்கம், செந்தில், கலையழகன், சந்துரு, ஜெகன், வடிவேல், பிரபாகரன், எழில், கேசவமூர்த்தி என ஓவ்வொரு முகமும் ஒவ்வொன்றாய் என் விழியில் வந்து விழ,தாங்கிக்கொள்ள திராணியற்று வழிந்தோடியது எனது விழி, கண்ணீராய்.கைகுலுக்கி அன்பை பரிமாறும் அதே நேரத்தில், "போன் பண்ண கூட நேரம் இல்லையா உனக்கு, என செல்ல அடிகள் விழ, ஆசையோடு சுமந்தேன்". ஒவ்வொருவரின் தற்போதைய நிலையை அறிந்துகொண்டதில் அத்தனை ஆனந்தம்.

ஒழுக்கத்திலும் சரி, உழைப்பிலும் சரி எப்பொழுதும், முதல் நான் தான் என்று பாடுபடும் "மாணிக்கம்" எனக்கு பிடித்த நண்பன். இத்தனை கலாட்டாக்களிலும், பவ்வியமாய், ஓரமாய் நின்றுகொண்டு கூச்சத்தோடு ரசித்துகொண்டிருந்த நண்பனை இழுத்து, எப்படி இருக்கிறாய்? என கேட்க.அதே புன்னகை, அதே கூச்சம் பேச்சில், அதே அமைதி, அதே நேர்மை ,உழைத்து உழைத்து, இரும்பாய் மாறி இருக்கும் அதே கரங்கள் என அவனுக்கான அடையாளங்கள் மறையாமல் நின்றான் என் கண்ணெதிரே.

"என்னடா மாணிக்கம், உன் நம்பர்க்கு எப்போ call பண்ணினாலும்,  Not Reachable அப்டினே வருது?. என்று முடிப்பதற்குள், "நம்பர் மாத்திட்டேன்" என அவன் கூற, கோபத்தின் உச்சிக்கே சென்று "ஏன்டா நம்பர் மாத்தினா கொடுக்கமாட்டியா” என்று திட்ட ஆரம்பித்தேன். அவனோ எப்பொழுதும் அவனுக்கே உரிய மெதுவான, தெளிவான குரலில் பேச ஆரம்பித்தான்."

சென்னைல வேலை தேடி கிடைக்கலைன்னு, ஊருக்கு வந்தேன்ல., அப்போ அப்பாவுக்கு உடம்புக்கு முடியாம போய்டுச்சு கொஞ்ச நாளுல., காட்டுல வெங்காயம், கீரை, இஞ்சி, மஞ்சள், நெல்லு அப்டி இப்டினு நிறையா போட்டு இருந்தாங்க.அப்படியே விட்டு வர மனசு இல்லாம, நான் தான் பாத்துகிட்டேன், அப்போ வயலுக்கு தண்ணி பாய்ச்சுரப்ப விழுந்துடுச்சு போல, நானும் தேடி தேடி பார்த்தேன் கிடைக்கல.அப்புறம் தான் ரெண்டு நாலு கழிச்சு கண்டெடுத்தேன் வயல்ல இருந்து, ஒண்ணுக்கும் ஆகுல cellphone .,அப்புறம் தான் புதுசு வாங்கினேன். யார் நம்பரும் ஞாபகம் இல்ல. நானும் ஞாபகப்படுத்த விரும்புல அப்படியே விட்டுபுட்டேன் என அவன் முடிக்க.

கொஞ்சம் தழு தழுத்த குரலில், அப்போ சென்னை வருலையா நீ மறுபடியும் என்று நான் கேட்டுமுடிப்பதற்குள், தெளிவாய் கூறினான். "இப்போ விவசாயம் தான் பாக்குறேன்" என கூறினான்... அவன் மீண்டும் சென்னை வந்து சாதிக்கவில்லை என்று ஏதோ ஒரு ஏக்கம் என்னுள் இருந்தபோதும், கொஞ்சம் பெருமிதம் உள்ளுள் மலரச்செய்தது , விவசாயம் பார்க்கிறேன் என்ற அவனது பதில்." எல்லோரும் Third year computer classக்கு வாங்க என்ற சத்தம் வந்ததும் நகர ஆரம்பித்தோம்.

ஒன்றாய் அமர்ந்தோம் நானும் அவனும். ஒவ்வொருவராய் தான் பணிபுரியும் நிறுவனம், அதில் தனது பணி என்ன என்று விவரித்துச்சென்றனர். அனைவரும் கைதட்டி பாராட்டினர் ஒவ்வொருவருக்கும். இப்பொழுது மாணிக்கத்தின் முறை, பேச ஆரம்பித்தான்," நான் அப்பாவோட  Business பார்க்கிறேன், கொஞ்சம் அப்பாவுக்கு முடியாததால இப்போ நான் பார்த்துகிறேன்" என அவன் முடித்த பொழுது , எதற்காக  இப்படி businessன்னு சொன்னான் என யோசிப்பதற்குள், என் முறை வர, எழுந்து சென்று பேச ஆரம்பித்தேன்.

ஒரு பெரிய தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை வாங்கிவிட்டதாகவும், தனது நிறுவனம் மிகச்சிறந்தது என்றும், நிறையா பேசினேன் நிறுவனத்தை பற்றி பெருமையாய்.அத்தனை கைதட்டல்கள்.., முடித்துவிட்டு வந்து அமரும்பொழுது மெதுவாய் புரிய ஆரம்பித்தது, என்னையும் அறியாமல் என்னுள் கர்வம் ஒட்டியிருந்தது, நிறுவனத்தை பற்றிய பெருமையான பேச்சில்.”இதில் என்ன இருக்கு, நம்ம சாதிச்சத சொன்னோம்”, என நியாயத்தை ஒருபுறம் மூளை எடுத்துவைத்த பொழுது, பெருமை விரும்புகிறாய் என்று உள்ளம் அடித்து கூறியது ...விரும்பி செய்யும் வேலையாய் இருந்த பொழுதும் சமுதாய அந்தஸ்துக்காய் கொஞ்சம் கூட்டி சொல்லவேண்டி இருக்கிறது என உணர்ந்த தருணத்தில், "மாணிக்கத்தின் பேய்ச்சின் மீது உருவாகிய businessஅஹ எனும் "அதிருப்தி", திருப்தியானது.

மதிய உணவு, சிறிய விளையாட்டுகள் என அனைத்தும் முடிந்து கிளம்பும் தருவாயில், மாணிக்கம் கேட்ட கேள்வி கொஞ்சம் எதிர்பார்க்காது தான் .," என்ன விஜய்,அப்படியே சென்னைலையே செட்டில் ஆகிடுவியா?., "அப்படியே, வெளிநாடு கிளம்பிடுவ" . என மாணிக்கம் கேட்க, பதில் கூற ஆரம்பித்தேன். "எங்கே போனாலும் ஒரு ஆறு வருசத்துல என் மண்ணுல வந்து கிடப்பேன்" என.

சிரித்துக்கொண்டே பேச ஆரம்பித்தான் .,"இந்த மாதிரி சினிமா டயலாக் பேசுறவங்க நிறையா பேர பார்த்துட்டோம், இப்படி தான் சொல்வாங்க, கொஞ்சம் லைப் ஸ்டைல் மாறினதும், ஆளே மாறிடுவாங்க, ஊர்ல வந்து எப்படி சமாளிக்கிறதுன்னு கேட்பாங்க, அது என்ன ஆறு வருஷம்?, வரணும்னு நினைக்கிறவன் இப்பவே வரலாமே, அதென்ன ஆறு வருசக்கணக்கு" என ஏதோ ஏதோ கேட்டான்.

என்னவாகப்போற அப்டின்னு எட்டாவது படிக்கிறப்ப வாத்தியார் கேட்க, ஒவ்வொரு பயலுகளா "டாக்டர்", "Engineer" ஆக போறோம்னு சொல்ல சொல்ல.,Very good, very goodனு வாத்தியாரும், மத்த பசங்களும், பொண்ணுங்களும் பயங்கரமா, கைதட்ட.., நாமளும் அதையே சொல்லிடலாம், அப்போ தான் நம்மளையும் பெருமையா நினைப்பாங்க என பொய்யாய் "Engineer " என கூற ஆரம்பித்தது, பிறகு யார் கேட்டாலும் இப்படியே சொல்லி பெருமைப்பட என்னுள் பதிந்ததோடு நில்லாமல், என் விவசாய அப்பாவிற்குள்ளும் பதிந்து, என்னை உயர்த்திபிடிச்சு, பையன் கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சு எப்படியோ கல்லூரி சேர்த்தி அகமகிழ்ந்தார்.

அப்பாவின் உழைப்பை உயர்த்திபிடிக்க, உண்மையாய் படிச்சு, வேலையெல்லாம் வாங்கிபுட்டேன். " வயலோடு  வாழ்ந்து, விவசாயத்தோடு கலந்து, பயிரோடு உரையாடி, ரசித்து ரசித்து உழைத்த அவரது விவசாயம் மட்டுமே என்னுள் இனித்தபோதும்.,பிடிக்காத வேலையை,கட்டிப்பிடித்து உறவாடிக் கொண்டிருக்கிறேன்., "என் புள்ள engineer .,கை நிறையா சம்பாதிக்கிறான், வெளிநாடு எல்லாம் போவான்" என, காணும் மனிதரிடமெல்லாம் பெருமிதம் கொள்ளும் எனது அப்பாவுக்காய்…அவரது ஆசைக்கு ஆறுவருடம் போதும். “எனக்கப்புறம் யார்பார்த்துக்குவா இந்த வயல? விற்று விட வேண்டிய நிலைமை வந்துவிடுமோ!!!!, என சத்தமே இல்லாமல் சலனப்பட்டு கண்ணீர்விடும் அவரது ஏக்கத்திற்கு, பதிலாய் தரப்போகிறேன் எனது resignation letter யை பணிபுரியும் நிறுவனத்திடம்.

கேள்வியற்ற எஜமானன், துளிரும் பயிரை கானும்பொலுதெல்லாம் தானும் ஒரு கடவுளாய்.,உழைத்து கலைத்து, வயிற்றை கிழிக்கும் பசிக்கு, பழையசோறு நீரும், கடிச்சுக்க வெங்காயமும் அத்தனை ருசியாய். இரவு கயித்து கட்டிலில் சாய்ந்து, நிலவை, கண்கள் முத்தமிட்ட நொடியில், தூக்க தேவதை நெஞ்சில் கலக்க, பிணத்தை போன்றொதொரு அசையா தூக்கம் எங்கு கிடைக்கும் இங்கேயன்றி..

என்னை ஆளாக்க, என் அப்பாவிற்கு பலம் கொடுத்த, என் தாய்(தந்தை) மண்ணின் தேகத்தை துண்டு துண்டாய், உதிரம் சொட்ட சொட்ட, கூறு போட்டு விற்க ஒருபோதும் விடமாட்டேன். என் உதிரத்தில் ஊறிய விச(வசா)யம் அல்லவா, எப்படி மறப்பேன்?..விரைவில் வந்து விழுவேன் என் தாய்(தந்தை)மண்ணில். என பதில் கூறிவிட்டு பைக்கை மெதுவாய் நகர்த்தினேன். கண்ணில் பட்டது அந்த விளம்பரம்.

" கொங்கு பள்ளிக்கு அருகே, திருச்செங்கோடு, நாமக்கல் பிரதான சாலையில் "கோல்டன்" வீட்டுமனைகள் உள்ளது. சதுர அடி ரூ 250 மட்டுமே". முந்துங்கள்"...

"ஆறு வருடம் என்பதே, அதிகமோ!!!! " என்ற வினா என்னுள் விழுந்தது விதையாய்..   

Friday, March 21, 2014

முதல் பார்வையின் உச்சம் – 2மெதுவாய் நகர ஆரம்பித்தேன்., “சீக்கிரம் ஓடிடும் இந்த நாலு மாதமும்., தேர்வு முடிந்ததும் இங்கு மறக்காமல் வந்திட வேண்டும்” என்று பலமுறை என்னுள் புலம்பிக்கொண்டிருந்தது இதயம்.ஏதோ ஒரு அழகிய உணர்வு மெதுவாய் கனக்க ஆரம்பித்தது, சுமந்து செல்ல முடியாமல் திணறியபடி ஊர் வந்து சேர்ந்தேன்.ஜன்னல் ஓர பயணத்தில், கண்கள் ஏதோ ஏதோ காட்சிகளை  காண, உள்ளம் மட்டும் அடுத்த விடுமுறைநாட் கனவிலே ஒட்டிக்கொண்டு, வெளிவர அடம்பிடித்தது ஒவ்வொரு நிமிடமும்.
வீடுவந்து சேர்ந்திருந்த போது மூச்சு விட சிரமப்படுத்தியது கருணைமலரின் பிரிவு. எப்படியோ இரண்டு மூன்று நாட்கள் சமாளித்து கொண்டு, பள்ளி சென்றேன். விடுமுறை நினைவுகளை அசைபோட்டுக்கொள்ள அனுமதி அளித்தது போல், காலை நேர வகுப்பு ஆசிரியர் விடுப்பு எடுத்திருந்தார்.. ஒவ்வொரு நண்பனாய், விடுமுறை நாட்கள் குதூகலப்படுத்திய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டிருந்தனர்.
ஏதோ ஒரு நண்பன், புதிதாய் சொந்தகார பெண்ணை கண்டதாகவும், வெகுநேரம் பேசியதாகவும் பகிர்ந்து கொள்ள, கூடி இருந்த நண்பர்கள் கூட்டம், கேலி செய்தும், அப்பெண்ணின் பெயரையே அவனக்கு சூட்டியதும், கொஞ்சம் என்னை எச்சரிக்கை செய்தது, "உனக்காகவும் சில ரகசியங்களை மறைத்து வைத்துக்கொள் , அதை யாரிடமும், எப்பொழுதும் சொல்லாதே" என. வழக்கமாய் பொழுதுபோக்க நினைக்கும் நேரங்களில், புத்தகத்தை எடுத்து, அதில் உள்ள ஏதாவது ஒரு படத்தை தேர்வு செய்துகொண்டு,  Natraj ரப்பரை எடுத்து, நன்றாய் எண்ணெய் தலையில் தேய்த்து, படத்தின் மீது வைத்து, புத்தகத்தை மூடி, ஒவ்வொரு பக்கமாய் திறந்து, ஒரு குத்து விடுவோம் அத்தனை பக்கத்தோடு சேர்த்து ரப்பரின் மேல்.ஒவ்வொரு பக்கமும் இப்படி செய்து கடைசியில் காணும்போது ரப்பரில் அந்த படம் இருக்கும் ஒட்டிக்கொண்டு. படத்திற்கு பதில் "கருணை மலர்" என பென்சிலில் அழுத்தி எழுதி, ரப்பரில் ஒட்டவைத்து பார்த்து, உள்ளம் உவகையுற்றேன்.
அவள் பெயரை எழுதி எழுதி பார்த்து, அடித்து வைத்த புத்தகத்தின் பக்கங்கள் அத்தனை அழகாய் இருந்தது. புத்தகத்தை எடுத்துகொண்டு தனியாய் மரத்தடியில் அமர்ந்துபடிக்கும்பொழுது, மூன்றாவது ரேங்க் வாங்கும் என்னைப்பார்த்து முதல் ரேங்க் வாங்கும் நண்பன் கூட கொஞ்சம் பயந்து போயி தான் இருந்தான், "கொஞ்சம் ஓவரா படிக்கிறானே, நம்மள முந்திபோய்டுவான் போல இருக்கே"  என்று.சரி அவனக்கு எப்படி தெரியும் இனம் புரியா உணர்வு என்னை ஆட்டிப்படைத்ததென்று. "எனக்கும் ஒரு ஆள் இருக்கு" என்று ஒவ்வொருவனாய் பெருமிதம்கொள்ளும் நேரங்களில் கூட, உண்மை சொல்லாமல் உள்ளுள் அனுபவித்தேன் அந்த அழகிய உணர்வை. 
தெருவோர கடைகளில் காதல் பாட்டுகள் ஒலிக்கும்பொழுதெல்லாம்,ஒரு நிமிடம் நின்று, குறைந்தது ஒரு 5 வரிகளையாவது மனப்பாடம் செய்ய வைத்தது அவள் மீதான இனம் புரியாத உணர்வு. அவளின் நினைவில் அந்த 5 வரிகளை, காலம் நேரம் இல்லாமல் முணுமுணுத்த போது, நிச்சயம் அந்த பாடல் வரிகள் கூட அழுது இருக்கும், இப்படி வந்து இவனிடம் மாட்டிக்கொண்டோமே என நினைத்து. இனம் புரியாத அந்த உணர்வு வரும்பொழுதெல்லாம் மீதமுள்ள நாட்களை எண்ணி எண்ணி, கைவிரல்கள் களைத்தே போயிருக்கும்.
அழகிய உணர்வு புது தெம்பாய் தானிருந்தது என்னுள், தேர்வுக்கு என்னை தயார்செய்த பொழுது கூட. ஒவ்வொரு தேர்வாய் ஆசையில் எழுதி, ஆவலில் முழ்கியிருந்தேன் விடுமுறைக்காய். கடைசி தேர்வு எழுதும்பொழுதெல்லாம் ஒருமுறை வாசித்த பாடங்கள் கூட ஒவ்வொன்றாய் ஞாபகம் வர, புரிந்துகொண்டேன் இதயம் இலகும்போழுது,எதுவும் சாத்தியமே என்று..
"என்ன கண்ணு இந்த முறை, முதல் மார்க் வாங்கிடுவ தானே!!!!... நல்லா மார்க் வாங்கின அப்டினா, பதினொன்னாம் வகுப்புக்கு கொங்கு பள்ளிகூடத்துல சேத்துறதா அப்பா சொல்லி இருக்காரு" என்ற அம்மாவின் வார்த்தையை கேட்கும்பொழுது, அத்தனை ஆனந்தம். "வாங்கிவிடுவேன் என்று நம்பிக்கையாய் கூறிவிட்டு செல்லும்பொழுது கொஞ்சம் பயமும் ஒட்டிக்கொண்டு தான் இருக்கும். "அம்மம்மா வீட்டுக்கு போறேன் நாளைக்கு" என்று கூறிய நிமிடத்தில், அம்மா குறிக்கிட்டு "அங்க எல்லாம் போக வேண்டாம், ஒழுங்கா வீட்டுலையே இரு, கிரிக்கெட் விளையாட போறேன்னு ஊர் ஊரா சுத்திரியாம்" என்று கூறிய வார்த்தை ஏதோ பயம் திணிக்க என்னுள், வழக்கமான எனது அஸ்திரத்தை தொடுத்தேன், " அம்மா, அம்மா, இந்த ஒருமுறை மட்டும் சரியா, அதுக்கப்புறம் எங்கேயும் போக மாட்டேன் நீயே சொன்னாலும், பன்னிரெண்டாவது எல்லாம் நல்லா படிக்கணும்ல, சரி சொல்லுமா, சரி சொல்லுமா" என முந்தானை பிடித்து கெஞ்ச, "சரி பத்திரமா இருக்கணும்" என்று புன்னகையுடன் உத்தரவு கொடுத்தாள். அது என்னவோ, மகனின் கெஞ்சல் ரசித்து, பிறகு அனுமதிப்பதில் அத்தனை ஆனந்தம் ஒவ்வொரு தாய்க்கும்...
அவ்வளவு தான், ஐந்து நிமிடத்தில் பயணத்துக்கு தேவையான அனைத்தும் தயாராகிவிட்டது.அந்த இரவுப்பொழுது நாளைய பயணத்தை எண்ணியே கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்தது பிறைநிலவு போல். அடுத்த நாள் பயணத்தில், ஆயிரம் கேள்விகள் என்னில், "விடுமுறைக்கு இங்கு தான் வருவாள?, இல்லை அங்கேயே இருந்துவிடுவாள?" என்று துளைத்துகொண்டே இருந்தது. எப்படியோ போய் சேர்ந்தேன், அம்மம்மாவை கண்டு நலம் விசாரித்து விட்டு, அவசர அவசரமாய் நண்பர்களை காணப்போவாதாய் கூறிவிட்டு, தெருக்களை மேய ஆரம்பித்தேன் படபடப்புடன்.
காணமுடியாத ஏக்கத்துடன் முடிவெடுத்தேன், அம்மம்மாவிடம் எப்படியாவது கருணை மலர் விடுமுறைக்கு வரும் வீடு எது என்று கேட்டுவிட வேண்டும், என்ற எனது தைரியத்திற்கு பரிசாய்., "சிவன் தெரு, கைஓடு போட்ட நாலாவது வீடு" என்று தெரிந்த நிமிடத்தில் உடல்முழுவதும் மென்மையாய் பரவும் அழகிய உணர்வை அறியமுடிந்தது.அவ்வளவு தான், அந்த தெரு, நாய்கள் கூட அத்தனை முறை கால்பதித்திருக்காது என நம்புகிறேன்.
அத்தனை முறை சுற்றி சுற்றி வந்தேன் பம்பரமாய். ஒவ்வொரு நாளும் காலையில் தேடிபார்த்து, அவள் இல்லா வீட்டை பலமுறை உற்று நோக்கிவிட்டு, நிச்சயம் மதியம் வந்துவிடுவாள் என்ற சமாதானத்துடன் கிளம்பும் எனக்கு தெரியும், மதியமும் இதே தான் நடக்கும் என. ஒரு வாரம் முழுதாய் ஓடியது. ஏதோ சோகம் முகத்தில் தொற்றிக்கொள்ள, ஏதோ ஏக்கம் நினைவில் தொற்றிக்கொள்ள,சுமக்க முடியா பாரத்துடன் இதயம் கனக்க, வாடும் என்னை, மலரச்செய்ய, நடந்துவந்தாள் அவள் வீடு நோக்கி தெருவில்.
சந்தனநிற தாவணியில், படியவாரி உச்சி வகுந்தெடுத்து, கொத்து மல்லிகையை வைத்து, நீண்டு வரும் புருவங்களை அத்தோடு நிற்கவும் என்று தடுத்து நிறுத்தும் குங்குமச்சிவப்பு நிற பொட்டு, அவள் கால் பிடித்து, கதைகள் பேசும், ஜல் ஜல் கொலுசு. அடையாளத்துடன் அவள் வருகையை உணர்ந்த தருணம், உடல் முழுவதும் ஓராயிரம் மாற்றங்கள் ஒரு நிமிடத்தில் அரேங்கேற, சொக்கித்தான் போனேன். ஆணிற்கும் வெட்கம் வரும் என்பதை தலைகுனிந்து தலைகுனிந்து அவளை ஓரப்பார்வையில் காண முயற்சித்த போது உணர்ந்தேன், அவளிடம் பேசிவிட வேண்டும் என்று எங்கிருந்தோ வந்த அசட்டு தைரியத்தில் ஓடினேன் அவளை நோக்கி. யாரென அவள் திரும்பி பார்த்த நொடியில் அத்தனை தைரியமும் என்னை விட்டு தெறித்து ஓட, செய்வதறியாது அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு நடையை கட்டிய என்னைப்பார்த்து இதழோரம் சிரிப்பை உதிர்த்தாள்.
அவ்வளவு தான் :):) மறுகணமே, உலகம் மறக்க, உள்ளம் பூரிக்க, உணர்வுகள் உடைந்து தேகம் சிலிர்க்க, முதல் முறை பூத்ததடி உடல்முழுவதும் ஏதோ...என்னதென்று பெயர்சூட்ட, மறுபடியும் வருவேனடி உனைக்கான, என என்னுள் எண்ணி, அவளில் நினைவை வைத்துவிட்டு, வழியில் பாதம் வைத்தேனடி பார்வையற்று...    
 
 


Wednesday, March 19, 2014

துரத்தும் நரிகள்..
வாழ்தல் என்ற ஒற்றை வார்த்தைக்கு அர்த்தம் அறியாமல், வீழ்தல் என்ற வார்த்தையை இன்னும் கட்டிக்கொண்டு,அழுதுகொண்டு தான் இருக்கிறோம் நாம்.உலகத்தின் அத்தனை நெறிமுறைகளும், ஒழுக்க கோடுகளும் ஒவ்வொன்றாய் நமக்கு நாமே வரைந்து கொண்டவைகள் தான். இனம் சரியான பாதையில் செல்லவும், தழைத்தோங்கவும் வரையப்பட்ட கோடுகள் இப்பொழுது மறித்து மண்ணில் சாய காரணியாக அமைந்துவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை.

கல்லூரி முடித்து, கிட்டத்தட்ட இரண்டரையாண்டு கடுமையான தேடலுக்கு பின்னரே எனது சரித்திரத்தை எழுதினேன். எழுத தொடங்கும் முன்பு என்னுள் எண்ணிக்கொண்டேன், எப்படியாவது படித்த படிப்பிற்கு வேலைபெற்று விட்டால் போதும் எனக்கான அடையாளமும் கடமையும் முடிந்துவிடும், அவ்வளவே வாழ்க்கையும் கூட என்று பலமுறை நினைத்து நினைத்து என்னுள் விதையாகவே விழுந்து, மரமாய் விருட்சம் பெற்று இருந்தது இந்த எண்ணம். கஷ்டம் தீர்ந்துவிடும், முகம் பூத்துகொண்டே இருக்கும் ஒவ்வொருநாளும் புன்னகை என்ற பூவாய், என்ற கனவு கலையத்தொடங்கியது  சரித்திரம் ஆரம்பித்த சிறிது நாட்களிலே.

கிடைத்த வேலையை தக்க வைத்து கொள்வதில் தொடங்கி, திறமைசாலி என்ற பெயர் வாங்கியது வரை ஆயிரம் ஆயிரம் இலக்குகளை வைத்து வைத்து உடைத்தெறிந்தேன் ஒவ்வொன்றாய் வெற்றி என்ற கோடாரியுடன். மெதுவாய் சறுக்க ஆரம்பித்தது தனிப்பட்ட வாழ்க்கையிலும், வேலை முன்னேற்றத்திலும்.

அவ்வளவு தான் உடைய ஆரம்பித்தது அத்தனை சாதனைகளும் ஒன்றன் பின் ஒன்றாய்.கண்மூடித்தனமான இலக்கை நோக்கி ஓடிய மிருக பயணம், நம்பிக்கை என்ற பெரிய ஆயுதத்தை உடைத்தே போட்டது. விளைவு- கோபம், வெறுமை, நாட்டமின்மை என்ற ஒவ்வொன்றாய் விதைத்து வளர செய்தது. ஜீரணித்துக்கொள்ள முடியா மனநிலையுடன் ஏற்றுக்கொண்டேன் வேலையிலிருந்து தூக்கி எறியபட்டதை. எப்பொழுதெல்லாம் வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லையோ அப்பொழுதெல்லாம் மனித இனம் மட்டுமே எடுக்கும் தற்கொலை என்ற அதே முயற்சியை கையில் எடுக்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அதீதமான மனித இனமும் இப்படி தான் தன்னை மாய்த்துகொண்டிருக்கிறது.

தோல்வி எப்படியோ நம்மை பலவழிகளில் தொட்டிருக்கும்,நட்பாகவோ, காதலாகவோ, பிரிவாகவோ, இயலாமையாகவோ, சரிந்த தொழிலாளவோ, குடும்ப வாழ்க்கையின் சிக்கலாகவோ இப்படி மாறுபட்ட வழிகளில்.தோல்வியின் வலியை நம்மில் அதிகம் உணரும் அதீத தருணங்களை இந்த சமூகம் தான் தந்திருக்கும்.நடை பயிலும் குழந்தை கூட, தடுக்கி விழுந்துவிடும் தருணங்களில் தன் தோல்வியை உணர்வதில்லை, இந்த சமூகம் கவனிக்காதவரை. அழ ஆரம்பித்துவிடும் தான் வீழ்ந்ததை, சமூகம் கவனித்துவிட்ட அந்த தருணத்தில்.

இதுவரை கடந்து சென்ற தலைமுறை, நம்மோடு பயணிக்கும் மனிதஇன வாழ்க்கை முறை இவற்றை கவனித்து கவனித்து நமது வாழ்க்கையை அதற்கேற்றார் போல் சரி செய்துகொண்டு வந்ததில் தான் பிழை இருப்பதை உணரமுடியவில்லை.பணம், கௌரவம், சுயமரியாதை இதனை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் கூட்டத்தை தொடர்ந்துகொண்டிருந்திருக்கிறேன், இந்த பயணத்தில் சிறிது சறுக்கலில் விழுந்து, பயணத்தை தொடர முடியாமல் போனதிற்கு வாழ்க்கை அவ்வளவு தான் என்ற முடிவில் முடித்துக்கொள்ள முயற்சித்திருக்கிறேன் வாழ்க்கையை.

கிணத்துல விழுந்த இந்த உசுர, கொஞ்சமும் யோசிக்காம குதிச்சு முழுகி, காப்பத்திபுட்டு கரையேறின 60 வயசு முதியவர பார்த்து "சந்தோசம் பெரியவரே,ஏனுங்க பெரியவரே வயசான காலத்துல இவ்ளோ பெரிய கெணத்துல குதிச்சீங்களே பயமா இல்லையா?" என்று கேள்வி கேட்டவங்கள பார்த்து, "மிஞ்சி மிஞ்சி போனா என்ன தம்பி ஆகும் இந்த உசிர் போகும் அவ்வளவு தானே, பயம் எதுக்கு தம்பி" என்று நடை கட்டின பெரியவர நானும் மிரட்சியுடன் பார்த்தேன்.

எனக்குள் மெதுவாய் புரிய ஆரம்பித்தது, இலக்கு என்ற ஒன்றை நோக்கி ஓடும்போது, நான் இயந்திரமாய் மாற ஆரம்பித்திருப்பது.வாழ்க்கையை ரசித்துக்கொண்டல்லவா பயணித்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட அதிகபட்சம் இன்னும் ஒரு 40 ஆண்டுகாலம் தான் வாழ்ந்துவிட போகிறோம். சரியாக நாட்களில் எண்ணினால் 14600 நாட்கள் அவ்வளவே. நிச்சயம் இயற்கை நிகழ்வுகள் ,பிரச்சனை என்ற  ஒருவிதத்தில் நம்மை துரத்திகொண்டே தான் இருக்கும்.தீர்வு-, சில நேரங்களில் ஓடுவதும், சில நேரங்களில் நெஞ்சு நிமிர்த்தி போராடுவதுமாய் இருக்க வேண்டுமே தவிர,ஆட்டதிற்கு நான் வரவில்லை என்று மாய்த்துகொள்வதாய்  இருக்க கூடாது

இலக்கு என்பது எப்பொழுதும் தானாய் தன்னுள் விரும்பி அமையவேண்டும். எப்பொழுதெல்லாம் சமுதாய பிம்பம் பார்த்து, தனக்குள் கட்டாய ஒன்றாய் அமர்கிறதோ அப்பொழுதெல்லாம் இலக்கே நம்மின் இறுதிஊர்வலத்திற்கு    அச்சாரமிட்டு விடும் என்பதை உணர்ந்தவனாய் பயணிக்கிறேன், வாழ்க்கையை ரசித்துக்கொண்டு...   

Wednesday, March 12, 2014

வங்கியில் ஒருநாள்….


வழக்கம்போல் இன்றும் வங்கி ஒன்பது மணிக்கு சரியாக திறக்கப்பட்டது.ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து வங்கி ஊழியர்களும் வந்து சேர இன்னும் அரைமணி நேரம் பிடித்தது.திறப்பதற்கு முன்பு இருந்தே இந்த கிராமத்து கூட்டம் அலைமோதியது, பணம் எடுக்கவும், பணம் பாதுகாக்கவும், கடன் பெறவும், கடனை அடைக்கவும் இப்படி ஏதோ ஏதோ காரணங்களுக்காய்.காத்திருக்கும் மக்களுக்கு வேண்டுமென்றால் பதட்டமும் அவசரமும் இருக்கலாம், அனால் எனது வங்கி ஊழியர்கள் எப்பொழுதும் நிதானத்தையும், பொறுமையையும் கைவிட்டதில்லை.

“லட்சுமியம்மா, சீக்கிரம் டீ வாங்கிட்டு வாங்க” என்று ஒவ்வொரு ஊழியராய் மனு கொடுத்துக்கொண்டே இருந்தார்கள் வங்கி உதவி பணியாளரிடம்”. அவரும் இதோ வருகிறேன் என்று அவசர அவசரமாய் ஓடுவார், அவர் வரும்வரை காத்திருந்து, டீ பருகியவுடன் மட்டுமே தனது வேலை நோக்கி செல்வார்கள்.அதுவரை பதட்டத்துடனோ, அவசரத்துடன் வந்து கெஞ்சும் சாமன்ய கிராமத்து மனிதன் “அர்ச்சனை” வாங்கிகொண்டு அமர்ந்திருக்கும் சூழல் மட்டுமே இங்கே வழக்கமாய் நிகழும்.

இன்றும் அப்படி தான் நடந்தது.சாமன்ய கிராமத்து மனிதனுக்கு எப்படி இத்தனை விதிமுறைகளும், படிவங்களும், பூர்த்தி செய்யும் முறை தெரிந்திருக்கும்?.. தெரிந்திருக்காதல்லவா, அதனால் அவன், எனது வங்கி கடவுள்களிடம் “அர்ச்சனை” வாங்கியே தீரவேண்டும் சாமான்ய பக்தனாய். வேறு வழியில்லை என்பது இந்த நிகழ்வுகளை கடந்து செல்லும் அவர்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும் இது புதிதல்ல என்று..சில நேரங்களில் அவமானங்களை தாங்கியே ஆக வேண்டிய கட்டாயங்கள் இருக்கிறதல்லவா.

ஏறக்குறைய 50 வயதுகளை தாண்டிய,உடைகளில் ஏழ்மை காட்டும், கிழிந்த உடைகளில் அங்கம் மறைக்க பாடுபடும், கிட்டத்தட்ட ஒரு 30 தாய்மார்கள் கையில் வங்கி அட்டையுடன், வங்கி திறப்பதற்கு முன்பே காத்திருந்தனர். “காசு எடுக்கணும் சாமி” என்று கெஞ்சிய ஒரு முதியவளிடம் எனது வங்கி ஊழியர் ஒரு படிவத்தை கிழித்து கொடுக்க, “அப்படியே புல்லப் பண்ணிகொடுங்க சாமி” என்ற கெஞ்சியவளிடம், “ம்ம் அப்படியே பண்ணிடறேன், நீ வந்து என் இடத்துல உட்கார்ந்துகிறியா, நான் வேணும்னா வெளிய போய்டுறேன், வந்துட்டாங்க சாமி, பூமினுகிட்டு ” என்று கர்ஜித்தார். அவமானத்தை சுமந்தாலும் ஒவ்வொருவராய் கெஞ்ச இதே அர்ச்சனை தான் கிடைத்தது அனைவரிடமும். பாவமாய் கைகளில் ஏந்திக்கொண்டு அங்கும் இங்கும் அத்தனை தாய்மார்களும் அலைந்துகொண்டே தான் இருந்தார்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்.

வரிசையில் நின்ற மற்ற மனிதர்களும் தனக்கான வேலைகளை முடித்துவிட முண்டியடித்துகொண்டிருந்த நேரத்தில், கெஞ்சும் இவர்களை கவனிக்க விரும்பவில்லை என்பது தெளிவாய் தெரிந்தது. இது தினந்தோறும் அரங்கேறும் நிகழ்வு தான் இது ஒன்று புதிது இல்லை எனது வங்கிக்கு. சிறிது நேரத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன், கையில் தனது குழந்தை, மனைவி, அப்பாவுடன் வந்து இருந்தான்.

கொஞ்சம் நாகரிகமான உடை, வழக்கமாய் நிற்கும் கிராமத்து வேட்டி, சட்டைகளுக்கு மத்தியில் கொஞ்சம் வேறுபட்டிருந்தது. அந்த வயதான மனிதரைப் பார்த்ததும் அலுவலர்கள், “வாங்க” என்று புன்னைகைத்துவிட்டு, “என்ன இந்த பக்கம்” என்ற கேள்வியை வைத்தவரிடம், ” மருமகள் வந்து இருக்காங்க, பேங்க் லாக்கர்ல கொஞ்சம் நகைகள் வைக்கணும்” என்ற பெரியவரிடம்.” சரிங்க கொஞ்சம் காத்திருங்க, நான் முடிச்சுதறேன்” என்று பவ்வியமாய் பதுங்கினார் ஒரு அலுவலர்.

அந்த நேரத்தில் மீண்டும் கெஞ்ச ஆரம்பித்தது அந்த தாய்மார்கள் கூட்டம் ஒரு அலுவலரிடம், மீண்டும் அதே அர்ச்சனை . இந்த முறை “என்ன உங்க பிரச்சனை” என்று ஒரு குரல் கேட்க, அவர்களுடன் நானும் பார்த்தேன் யாரென்று ஆவலாய்.அந்த இளைஞன் கையில் குழந்தையுடன் அவர்களை நெருங்கினான். “இதை புல்லப் பண்ணனும் சாமி, காலைல இருந்து நிக்குறோம்” என்று கூறியதும், வேகமாய் குழந்தையை மனைவியிடம் ஒப்படைத்து விட்டு, “வாங்க நான் முடிச்சுதறேன்” என்று பேனாவை எடுத்ததும், அலுவலர் “தம்பி நீங்க எதுக்கு இந்த வேலைலாம் பாக்குறீங்க, அவுங்களுக்கு வேற வேலை இல்லை, சும்மா நம்ம உயிரை வாங்குங்க, விடு தம்பி” என்று அலுவலர் கூறிய நிமிடத்தில். “இதுல்ல என்னங்க சிரமம்” என்று கூறினான் இளைஞன். கோபத்தின் உச்சிக்கு சென்ற அலுவலர், “வெளிய போயி சத்தம் போடுங்க, தம்பி நீயும் கிளம்புப்பா என்றதும், சரியென்று கிளம்பினான் அவர்களை கூட்டிக்கொண்டு வெளியே.

(நண்பரின் உதவியுடன் வெளியில் நடந்ததை உங்களுக்கு மீண்டும் பகிர்கிறேன்).” ஒவ்வொருத்தரா கொடுங்கம்மா, எழுதித்தறேன்”. என்றான் அவன். இடையிடையே கேள்விகளை கேட்டான் அவர்களை நோக்கி ,” இதுக்கு முன்னாடி யார் எழுதி தருவாங்க” என்றான் .” ஒவ்வொரு மாதமும் இப்படி தான் தம்பி திட்டு வாங்கிகிட்டு தான் இருப்போம், வீட்டுல யாரையாவது கூட்டிட்டு வரலாம்னு பாத்தா, இங்க வந்தா ஒரு நாள் வீணா போகிடும் தம்பி.அதான் ஆம்பிளைங்க இங்க வரது இல்ல. ஒரு நாள் கூலியாவது மிச்சம் ஆகும்ல அதான் நாங்களே வந்துடுவோம். இந்த கவர்ன்மெண்ட் தான் தம்பி வேலை செஞ்ச காச கைல கொடுக்காம இப்படி பேங்க்ல போட்டு எங்கள கொல்றாங்க” என்று முடித்ததும், கொஞ்சம் பெருமூச்சு விட்டுவிட்டு உங்களை மாதிரி யாரவது வந்தா நாங்க பொழச்சோம் தம்பி, இல்லைனா அவ்ளோ தான்”. என்றார் அந்த முதியவள்.”சரி உங்களில் யாருக்காவது எழுத படிக்க தெரியும் என்றால் கூறுங்கள், நான் சொல்லித்தருகிறேன்” என்றான் அவன். அனைவரும் ஒன்றாய் கூறிய அந்த வாக்கியம் ,” எழுத படிக்க தெரிஞ்சா நாங்க ஏன் சாமி இவுங்ககிட்ட இப்படி திட்டு வாங்குறோம்”.

பேசிக்கொண்டு இருந்த அந்த நிமிடம் அந்த இளைஞனின் அப்பா, உள்ளிருந்து அழைத்தார்.இவனோ “கொஞ்சம் பொறுங்கப்பா, முடிசிட்டு வரேன்” என்ற பதிலை தன் அப்பாவை நோக்கி அனுப்பிவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.சிறிதுநேரத்தில் உள்ளிருந்து குழந்தை கதறும் சத்தம் நோக்கி அலுவலகமே திரும்ப, அவனது மனைவி உள்ளிருந்து வந்தாள்,கதறிய குழந்தையுடன், “என்னங்க, பத்து நிமிசத்துல முடிஞ்சிடும்னு குழந்தைக்கு பால் கூட எடுத்து வரல, அதான் அழுகுது” என்ற மனைவியிடம், கொஞ்சம் பொறுத்துக்க, வந்துவிடுகிறேன் என்று மீண்டும் எழுத ஆரம்பித்தான். வேகமாய் முடித்துவிட்டு, “கவலைப்படாதீங்கம்மா, உங்க பிரச்சனையை பத்தி அதிகாரியிடம் பேசுகிறேன்” என்று கூறிவிட்டு வந்தான் உள்ளே.

வந்த வேலையை முடித்துவிட்ட வெளி வர முயற்சிக்கையில், வங்கி அலுவலர் மீண்டும் ஒருமுறை கூறினார்.”ஏன் தம்பி, நீங்க வந்த நேரத்துக்கு, எப்பவே வீட்டுக்கு போயிருக்கலாம், குழந்தையும் அழுவாது, நமக்கு எதுக்கு தம்பி இதெல்லாம், இவுங்க எல்லாம் இப்படி தான் எப்பவும், அதுகெல்லாம் கவலைப்பட்டா, நம்ம வேலை தான் கேட்டு போகும்” என்றவரிடம், ” இதுல என்னங்க இருக்கு, நம்ம அப்பா அம்மா இப்படி கெஞ்சினா அப்படியேவா விட்டுட்டு போய்டுவோம்?” என்ற பதிலால் கன்னத்தில் அறைந்தான்.

மீண்டும் மேலதிகாரி அறைக்குள் நுழைந்து ஏதோ எதோ பேசினான். எனக்கு நன்றாய் தெரியும், இப்படி எத்தனை பேர் அவரிடம் பேசினாலும், அவர் கூறும் ஒரே வார்த்தை “ஓபீசுல இதெல்லாம் சாதாரணம்” என்று தனக்கே உரிய மலையாள வாடையில் பதில் சொல்லி இருப்பார். ஏதோ திருப்தியுடன் அறை வெளியே வந்த அவன், திடீரென என்னை நோக்கி உரக்கமாய் கூறினான்,

“எப்பா மேலதிகாரிகளா, கொள்ளை, ரத்தம் சிந்தும் கொலைக்கு மட்டும் தான் இதை கவனிப்பீங்களா?, அநீயத்துக்கும், அவமான கொலைக்கு எல்லாம் இதை கவனிச்சு நடவடிக்கை எடுக்க மாட்டீங்களா”?. கூறி முடித்துவிட்டு அழுதுகொண்டிருக்கும் தனது குழந்தையை கையில் வாங்கி தட்டிகொடுத்துகொண்டே கிளம்ப ஆரம்பித்தவனிடம், ” மவராசனா இருக்கணும் தம்பி, நீ” என்று கைபிடித்த முதியவளிடம், வெறும் புன்னைகையை மட்டும் உதிர்த்துவிட்டு வெளியேறினான்.

இவன் ஒருவனால் மொத்த தேசத்தையும் திருப்பி போட்டு விடமுடியாது என்று தெரிந்தாலும், சில உள்ளங்களை மகிழச்செய்ய முடியும் என்பதை உணர்ந்தவனாய், நானும் எனது நண்பனும் உள்ளம்கனிந்த நன்றியை தெரிவித்து கொண்டு, இவனைப் போன்றொரு இன்னொரு மனிதனுக்காய் காத்திருக்கிறோம் மீண்டும்

நட்புடன்,
Camera 02,Camera 05
இந்தியன் வங்கி,Wednesday, March 5, 2014

மடி சாய்ந்து கதைகள் பேச..


தனிமைப்படுத்துதல் (நிராகரிக்கப்படுதல்) என்பது அணு அணுவாய் ஒரு மனிதனை உயிரோடு துண்டு துண்டாய் வெட்டி எறிவதற்கு சமம் என்று தனிமையை உணர்ந்த(வாழ்ந்த) ஒவ்வொரு மனிதனுக்கு தெரியும் என நம்புகிறேன்.தனிமை என்ற ஆயுதம் மட்டுமே, சதைகளை தாண்டி, மனதை துளைத்து, உணர்வை,சொட்டு சொட்டாய் உருக்கி, நிலைகுலையச்செய்து, சாய்த்துவிடும் ஒரு கொடிய ஆயுதம்.

பெண்மை என்ற அழகிய கதாபாத்திரத்தை சுமந்து கொண்டு இந்த உலக மேடைக்கு வந்து இருப்பாய் என்று எனக்கு நன்றாகத்தெரியும். பதின்வயதுகளை கடந்து, பல உலக இன்னல்களையும், பெண்மை என்ற கதாபாத்திரத்திர்கே உரிய அந்த நாட்கள் என்ற இன்னலையும் கடந்து வந்து இருப்பாய் சர்வமும் தாங்கும் ஒப்பற்ற சக்தியாய்.விரும்பியோ அல்லது விரும்பாமலோ, மணவாழ்க்கை என்றொரு புதிய கதாபாத்திரத்தையும் சேர்ந்தே சுமந்திருப்பாய். கட்டயமாவோ அல்லது காமத்தோடு தாம்பத்யம் சமர்பித்திருப்பாய் என அறிவேன்.

அந்த நாட்கள் அடங்கி, உன்னுள் விழுந்திருப்பேன் நான் விதையாய், அந்த கணமே அம்மா என்றொரு இன்னொரு கதாபாத்திரத்தையும் சேர்ந்தே சுமந்திருப்பாய் ஆசையாய். உன்னுள் மாறிய ஒவ்வொரு உணர்வு மாற்றத்தையும், உடல் மாற்றத்தையும் கண்டு ரசித்திருப்பாய், உன்னுள் அசௌகரியத்தை ஏற்படுத்திய போதும்.

திகட்டிய போதும் தேடி தேடி உண்டு இருப்பாய் நான் வளர.கொஞ்சம் நிறைஞ்சும், கொஞ்சம் சிந்தியும் ஆயிரம் இன்னல்களை தாங்கி இருப்பாய் எனக்காய். உன் வயிறு தடவி உள்ளம் மகிழ்ந்திருப்பாய், என்னை தொட்டு பார்க்கும் ஆசையில். ஆளில்லா தருணங்களில் அன்பாய் பேசி இருப்பாய் என்னிடம், ஆர்வத்தில் வார்த்தைகளில் கொஞ்சி இருப்பாய், “என் உயிர், நீ தான்” என்று.ஏதோ ஒரு இரவில் தெரியாமல் நீ குறுக்கி தூங்கியதற்கு உன்னை நீயே திட்டிக்கொண்டிருப்பாய். அப்பாவின் அந்தரங்க தேவையை கூட மறுத்திருப்பாய் என் நலனுக்காய். வாரங்கள் மாதங்கள் ஆக ஆக நீ தேய்ந்தே போகி இருப்பாய் என்னைக்கானும் ஏக்கத்தில் பிறை நிலவாய்..

பத்து திங்கள் பறந்தோடிட உன்னுள் கனவுகள் ஏராளம் கண்டு இருப்பாய். என்னை வளர்க்க இயற்கை தந்த உணவாய்,உன் மார்பு மாற்றங்களை, உடல் சிலிர்த்து, உள்ளம் பூரித்து கர்வமாய் ஏற்று இருப்பாய் தாய்மையாய். என் ஒவ்வொரு அசைவுகளிலும், எட்டி உதைத்த நொடிகளிலும், கண்கள் கலங்கி, மீண்டும் உதைக்கும் தருனத்திற்க்காய் காத்திருந்திருப்பாய். உன் ஓருடலில், என் உடலை சேர்த்து, ஈருடலும் ஓருடலே என்று தாய்மைக்கே உரிய இலக்கணத்தை நீயும் ஒருமுறை நிரூபித்திருப்பாய் நெஞ்சை நிமிர்த்தி. நான் வெளிவர துடித்த கடைசி நாட்களில், உள்ளம் உவகையுற்று,கடவுளிடம் மன்றாடியிருப்பாய் எனக்காய்.

உன் உடல் உடைத்து, இவ்வுலகை காண நான் செய்த முயற்சியில், உன்னை காயம் செய்த போதும், என்னை ஆசை ஆசையாய் முத்தமிட்டு இருப்பாய். உன் கரம் தொட்ட நொடியினில் கண்டுகொண்டிருப்பேன் நீ என் அம்மா என. சந்தோசத்தில் நீயும் உறங்க, நானும் உறங்க.., தண்டிக்கபெற்றேன்.

என் தேகம் கிழிந்து ரத்தம் கொட்டியபோதும், என்னை சுற்றி நாற்றம் அடித்தபோதும் கதறாத நான், நீ அருகில் இல்லை வெகுநேரம் என்றுணர்ந்த தருணத்தில் நான் கதறிய என் குரல், சாலையோர குப்பைத்தொட்டியை மட்டுமே தாண்டி ஒலித்தது. வெறும் உணவை கொட்டும் இடமாய் உணராமல் உனக்குமெனக்குமான பிணைப்பாய் எண்ணி, உன் மார்பைத்தேடி, வாய் பிளந்த என் உதடுகள் காய்ந்து போனது நீ இன்றி.

வெகுநேர கதறலுக்கு பிறகு எங்கோ போய் சேர்ந்தேன் . கதறி இருப்பாய் நெருப்பாய், கொதித்திருப்பாய் எனக்காய். உன் கதறல் அடக்க கோடி கோடி உக்திகளை கையாண்டிருப்பார்கள் உன்னிடம். மனமுடைந்து பித்துபுடித்து உண்ண மறுத்து, தூக்கம் மறந்து, என்னை நினைத்து வெடித்தழுதிருப்பாய் பாவம் என் முகம் காண மீண்டுமொருமுறை.

மாதங்கள் நகர்ந்து வருடங்கள் ஓட, எனக்கானதை நானே செய்துகொண்டேன் நீயின்றி. தாய் தலைவார குழந்தை தலையசைக்க காட்சிகளை பார்த்தொனரும் தருணங்களில் கண்ணீர் சொட்டுகிறதடி தாயே உனைக்கான. தன் மகள் அழுக்காக்கிய துணிகளை திட்டிக்கொண்டே துவைக்கும் தாயை காணும் கணத்தில் எங்கிப்போகுதடி உள்ளம் உன் மொழி தேடி. முந்தானையில் மறைத்து, தன் மார்பில், மகள் உதடு பதித்து,தன் முகம் மலரும் தாயை காணுகையில், ஓராயிரம் மையில்களாய் இருந்தாலும் ஓடி வந்து உன் மடி தேடி விழுவேன் தாயே.

தெரிந்தோ தெரியாமலோ தனிமைப்படுத்தப்பட்டேன் பாவமாய்.அன்பெனும் உணர்வை வெறும் வார்த்தையாய் காதிலும், காகிதத்திலும் மட்டுமே உணர்கிறேன்.வெளியாட்கள் கேட்கும்பொழுது சமாளித்துவிடுகிறேன், அம்மா ஊரிலிருப்பதாய். ஆனாலும் பழகிய பத்துநிமிடங்களில் புரிந்துகொள்கிறார்கள் அனாதையென்று, அன்பறியா என் முரடுத்தனத்திலிருந்து.என்ன செய்ய, நானும் தேடுகிறேன் கற்பனையில் உன் முகம் வைத்து ஒவ்வொரு பெண்ணிற்கும்.

அனாதை தழும்பை உடைக்க,முகம் தெரியாமல் உனைத்தேடும் நானும், தாய்மை பந்தம் பதிக்க, உயிரில்லாது எனைத்தேடும் நீயும், எப்படி சந்திப்போம் தாயே?. எப்பொழுதாவது சந்திப்போமா!!!!!!!! …ஏக்கத்துடன் காத்திருக்கிறேன் மடி சாய்ந்து கதைகள் பேச….

Monday, March 3, 2014

முதல் பார்வையின் உச்சம் – 1


நமது வாழ்க்கையின் சில யதார்த்த நிகழ்வுகள், நம்முள் அசைபோடும் தருணங்களில் அத்தனை இன்பத்தை விதைத்துவிடும் என்பதை உணர்ந்திருக்க முடியும் கடந்து சென்ற ஒவ்வொரு மனிதனாலும். பதின் வயது பருவங்கள் கடந்து சென்ற அதீத நிகழ்வுகளில், காதல் என்ற உணர்வே அதிகமாய் வாழ்ந்திருக்கும் என்று நம்புகிறேன் நம்முள்.

“கடவுளை கும்பிடு, உனக்கு நல்லது” என்று கோடி முறை, என்னுள் ஒழுக்கத்தை விதைக்க பாடுபடும் எனது தாய்க்கு தெரிந்திருக்குமோ என்னவோ, என்றாவது ஒருநாள் என் பாதம் கோவிலை சுற்றிவரும் என. பதின்வயதுகளில், கடவுள் என்பவர் அம்மாவால் பரிந்துரை செய்யப்படும், பிடிக்காத எதிரி என்றே என்னுள் விதைத்திருந்தேன். அதனாலோ என்னவோ என்னுள் வெற்றிடம் எப்பொழுதும், இன்பத்திலும், துன்பத்திலும் கூட ஒரு தெளிவு இருந்ததில்லை.

அப்படித்தான் வழக்கமான கோடைவிடுமுறை என்னை ஈரோட்டிற்கு கொண்டு சென்றது. கொஞ்சும் கொங்கு தமிழ் அனைவரது உதட்டிலும் அழகாய் ஜனிக்கும். தெருக்களில் இறங்கி, அம்மம்மா வீட்டிற்கு செல்லும் பாதை எல்லாம், கொங்கு தமிழ் சிதறி விழும், “என்ன கண்ணு , அம்மம்மாவ பார்க்க ஓடி வந்துட்ட போல இருக்கு.எத்தனை நாளு லீவு? என்ற கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ளாமல் அடுத்த அடிகூட நகர விடுவதில்லை தூரத்து சொந்தங்கள்.

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, இந்த பழமொழியில் கிரிக்கெட் அப்டிங்கற ஒரு வார்த்தையை முதலில் சேர்த்தால் அது மிகையாகாது. ஊருக்கு ஒரு இருபது பேராவது இப்படி பார்க்கலாம் கிரிக்கெட் மட்டையுடன்.” நானும் வரலாமுங்களா ஆட்டத்துக்கு” என ஆரம்பித்த பவ்வியம், சிறிதுநாட்களில் தொலைந்து போய்விட்டது என்றே கூறலாம், விஜய் என்பக்கம் தான் என்று சண்டைபோட்டுகொள்ளும் அளவிற்கு கொண்டு சேர்த்தது விளையாட்டின் மீதான அதீத ஆர்வம்.

“சரி, நாளைக்கு கிளம்புறேன் அம்மம்மா, அம்மா சொல்லித்தான் விட்டுச்சு போயிட்டு சீக்கிரம் வந்திடு அப்டின்னு”.என்று சொல்லிமுடிக்கும் பொழுது, “இன்னும் பத்து நாலு இருந்துட்டு தான் போகணும் கண்ணு, காப்பு கட்டிட்டாங்க, பூவு வைச்சிட்டாங்க கோவில்ல,கோவில் திருவிழா முடிஞ்சுதான் போகணும் கண்ணு” என்று அம்மம்மா கூறியது சந்தோசம்தான். விளையாட்டின் மீதான அதீதத்தால் எங்கள் மீது விழுந்தே சூரிய ஒளி கருத்து போனது என்றே அடித்துகூறிடலாம். அதன் மீதான மோகமோ என்னவோ,என்னுள் உடல்முழுவதும் மகிழ்ச்சியை பரவச்செய்தது.

கோவில் பண்டிகைக்கும் எனக்கும் வெகுதொலைவு எப்பொழுதும்.இறைவன் பாடல்களில் தொடங்கி, சமீபத்திய சினிமாப்பாடல்கள் வரை ஒலிக்க ஆரம்பித்தது ஊரெங்கும். ஒவ்வொருவரின் உணர்வுகளிலும் பாடல்கள் சந்தோசத்தை ஊற்றின, அவ்வப்பொழுது ஒலிபெருக்கியில் வேண்டுகோள் விடுத்துகொண்டே இருந்தார்கள், “எப்பா, இந்த தீர்த்த குடம் எடுக்குறவங்க எல்லாம் சீக்கிரம் வாங்கப்பா கோவிலுக்கு, தீர்த்தம் எடுக்க போகணும்”. அம்மம்மா வேகமாய் வந்து, கண்ணு நீ நல்ல மார்க் எடுக்கனும்னு வேண்டியிருந்தேன், போயிட்டு வா என்றதும் அத்தனை கோபத்துடன் “உன்னைய யார் இதெல்லாம் பண்ண சொன்னாம்மா” கூறிக்கொண்டே கிளம்பினேன் கோவிலுக்கு குடத்துடன்.

ஊர்பெரியவங்க எல்லாம் முறுக்கு மீசையோட உட்கார்ந்து இருந்தாங்க வண்டியில. என்னடா இது வேலை என்ற சலித்துக்கொண்டு ஏறி அமர்ந்தேன்.சிறிது நேரத்தில் தாவணியுடன் கையில் குடத்துடன் கொங்கு நாட்டிற்கே உரிய அடக்கத்துடன், அத்தனை மங்களகரமாய் வந்து நின்றாள் வண்டியின் அருகே. குடம் கொடுக்க வந்திருப்பா யாருகிட்டயாவது எனநினைத்து முடிப்பதற்குள் வண்டியில் ஏறினாள். அருகே வந்துநின்றுகொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் கையில் குடத்துடன். சந்தோசத்தில் சில நொடிகள் விட்டுவிட்டு பார்க்க தொடங்கினேன்,அங்கும் இங்கும் பார்ப்பதுபோல்.

நடுவாகு, குளித்துமுடித்த கூந்தல், தன்னை உணர்த்திகொள்ள அத்தனை ஆசையுடன் காற்றுடன் தொட்டு பேசிய நேரத்தில். ஊஞ்சலாய் அசைந்தாடிய மனத்தை கட்டுப்படுத்த, எதோ சினிமாபாடல்களை எல்லாம் யதார்த்தமாய் முனுமுனுக்க வேண்டியிருந்தது. என்ன செய்ய?. கலைந்த கூந்தலோடு நான் களைந்து போய்விடாமல் இருக்க என்ன என்ன செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்ய வேண்டியிருந்தது. இடையிடையே “கடவுள் கண்ண குத்திட போறாருன்னு வேற பயம்”.முகம் பார்க்கும் ஆவலில் ஒருசில வினாடிகள் அதிகமாய் உற்று பார்த்த நொடியில், அவளது கண்ணோடு நேருக்கு நேர் மோதிவிட வேண்டியதாயிற்று, அடுத்த நொடியில் இரண்டு முகங்களும் வெவ்வேறு எதிர் திசையில் திரும்பிய நிமிடத்தில் அத்தனை மாற்றங்கள் கண்களிலும் உணர்விலும்.

பதிந்தது முகம் முழுவதும் மூன்றே வினாடிகளில். அந்த மூன்று மணிநேரமும் இந்த மூன்றே வினாடிப்பர்வையில் திளைத்தது. இடையிடையே உற்று நோக்கியதில் புரிந்தது, எப்பொழுதும் ஒழுக்கம் மட்டுமே பேசும் கண்கள், உண்மையை மட்டுமே பார்க்கும் உதடுகள், கோபத்தின் உச்சியை காட்டும் கூர்மையான மூக்கின் நுனியில், கொஞ்சம் கிறங்கியும், பயந்தும்போயி இருந்தேன் என்பது வாகனத்தின் பலகைக்கு தெரிந்து இருக்கும் எனது இறுக்கமான பிடியிலிருந்து. கோவில் நெருங்கியபோது பேச எத்தனித்த என்னை திரும்பி பாராமல் கிளம்பினாள்.

தொடர்ந்து செல்ல முயற்சிக்கையில், ” என்ன கண்ணு கருணைமலர், இந்த வருசமுமா” என்ற சத்தம் வந்த திசையை நோக்கி தலை திருப்ப, எனது அம்மம்மா அவளிடம் ஏதோ பேசிவிட்டு, என்னை வரவேற்று “கண்ணு, போயிட்டு வந்துட்டியா, வீட்டுக்கு போலாம் வா” என்று கூறிய நிமிடத்தில், நூறு ஆண்டுகள் வாழ்ந்த ஏதோ ஒரு நம்பிக்கையில், பிரிய மனமின்றி நகர்ந்தேன். “கண்ணு, இந்த கருணைமலர் இருக்குல, நல்ல பொண்ணு, படிப்புல கெட்டிக்காரி, கஷ்டப்பட்டு மேல வந்து இருக்காங்க அவுங்க குடும்பம், ஒழுக்கமான பொண்ணு, பாரு தீர்த்த குடம் ஒவ்வொரு வருசமும் தவறாம எடுக்குறா, என்று அடுக்கடுக்காய் அடுக்கி வைத்ததை எல்லாம் முன்பே உணர்ந்தவனாய், ஒப்புக்கு கேட்டுக்கொண்டே வீட்டிற்கு நடந்தேன்.

வீடு எங்க இருக்கிறது என கேட்க பயமுற்று, தேடினேன் சில தெருக்களில். பண்டிகை முடிஞ்சு வெறிச்சோடி கிடந்த கோவிலை சுற்றி சுற்றி வர ஆரம்பித்தேன் பாவமாய்,ஒரு முறை பார்த்துவிட.

எப்படியோ பயத்தை மறைத்துக்கொண்டு, “ஏன் அம்மம்மா எந்த பள்ளியில படிக்குது அந்த பொண்ணு, நல்ல பள்ளிக்கூடமா அது, எங்க இருக்குது” மொட்டையாய் உதிர்த்த என் கேள்விக்கு பதிலாய் இன்னொரு கேள்வியை வைத்தாங்க என் அம்மம்மா. “எந்த பொண்ணுடா?”. “அதான் கருணைமலர்” .என்றதும், அந்த பொண்ணா?., அவுங்க சொந்த ஊர்ல படிக்கிறா, பள்ளிக்கூடம் பேர் எல்லாம் தெரியாது, லீவு விடுறப்பா எல்லாம் இங்க வந்துட்டு போகும்.

ஒற்றை பார்வையில் விழுந்துவிட்ட என்னை, அவள் மீண்டும் மீட்டெடுக்க,அடுத்த விடுமுறையில் நிச்சயம் வருவாள் என்ற நம்பிக்கையில்,மெதுவாய் விரல்களை மடக்கி எண்ண ஆரம்பித்தேன், அடுத்த தேர்வுக்கான மாதத்தை., “ஜனவரி,பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்”..