Wednesday, March 19, 2014

துரத்தும் நரிகள்..




வாழ்தல் என்ற ஒற்றை வார்த்தைக்கு அர்த்தம் அறியாமல், வீழ்தல் என்ற வார்த்தையை இன்னும் கட்டிக்கொண்டு,அழுதுகொண்டு தான் இருக்கிறோம் நாம்.உலகத்தின் அத்தனை நெறிமுறைகளும், ஒழுக்க கோடுகளும் ஒவ்வொன்றாய் நமக்கு நாமே வரைந்து கொண்டவைகள் தான். இனம் சரியான பாதையில் செல்லவும், தழைத்தோங்கவும் வரையப்பட்ட கோடுகள் இப்பொழுது மறித்து மண்ணில் சாய காரணியாக அமைந்துவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை.

கல்லூரி முடித்து, கிட்டத்தட்ட இரண்டரையாண்டு கடுமையான தேடலுக்கு பின்னரே எனது சரித்திரத்தை எழுதினேன். எழுத தொடங்கும் முன்பு என்னுள் எண்ணிக்கொண்டேன், எப்படியாவது படித்த படிப்பிற்கு வேலைபெற்று விட்டால் போதும் எனக்கான அடையாளமும் கடமையும் முடிந்துவிடும், அவ்வளவே வாழ்க்கையும் கூட என்று பலமுறை நினைத்து நினைத்து என்னுள் விதையாகவே விழுந்து, மரமாய் விருட்சம் பெற்று இருந்தது இந்த எண்ணம். கஷ்டம் தீர்ந்துவிடும், முகம் பூத்துகொண்டே இருக்கும் ஒவ்வொருநாளும் புன்னகை என்ற பூவாய், என்ற கனவு கலையத்தொடங்கியது  சரித்திரம் ஆரம்பித்த சிறிது நாட்களிலே.

கிடைத்த வேலையை தக்க வைத்து கொள்வதில் தொடங்கி, திறமைசாலி என்ற பெயர் வாங்கியது வரை ஆயிரம் ஆயிரம் இலக்குகளை வைத்து வைத்து உடைத்தெறிந்தேன் ஒவ்வொன்றாய் வெற்றி என்ற கோடாரியுடன். மெதுவாய் சறுக்க ஆரம்பித்தது தனிப்பட்ட வாழ்க்கையிலும், வேலை முன்னேற்றத்திலும்.

அவ்வளவு தான் உடைய ஆரம்பித்தது அத்தனை சாதனைகளும் ஒன்றன் பின் ஒன்றாய்.கண்மூடித்தனமான இலக்கை நோக்கி ஓடிய மிருக பயணம், நம்பிக்கை என்ற பெரிய ஆயுதத்தை உடைத்தே போட்டது. விளைவு- கோபம், வெறுமை, நாட்டமின்மை என்ற ஒவ்வொன்றாய் விதைத்து வளர செய்தது. ஜீரணித்துக்கொள்ள முடியா மனநிலையுடன் ஏற்றுக்கொண்டேன் வேலையிலிருந்து தூக்கி எறியபட்டதை. எப்பொழுதெல்லாம் வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லையோ அப்பொழுதெல்லாம் மனித இனம் மட்டுமே எடுக்கும் தற்கொலை என்ற அதே முயற்சியை கையில் எடுக்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அதீதமான மனித இனமும் இப்படி தான் தன்னை மாய்த்துகொண்டிருக்கிறது.

தோல்வி எப்படியோ நம்மை பலவழிகளில் தொட்டிருக்கும்,நட்பாகவோ, காதலாகவோ, பிரிவாகவோ, இயலாமையாகவோ, சரிந்த தொழிலாளவோ, குடும்ப வாழ்க்கையின் சிக்கலாகவோ இப்படி மாறுபட்ட வழிகளில்.தோல்வியின் வலியை நம்மில் அதிகம் உணரும் அதீத தருணங்களை இந்த சமூகம் தான் தந்திருக்கும்.நடை பயிலும் குழந்தை கூட, தடுக்கி விழுந்துவிடும் தருணங்களில் தன் தோல்வியை உணர்வதில்லை, இந்த சமூகம் கவனிக்காதவரை. அழ ஆரம்பித்துவிடும் தான் வீழ்ந்ததை, சமூகம் கவனித்துவிட்ட அந்த தருணத்தில்.

இதுவரை கடந்து சென்ற தலைமுறை, நம்மோடு பயணிக்கும் மனிதஇன வாழ்க்கை முறை இவற்றை கவனித்து கவனித்து நமது வாழ்க்கையை அதற்கேற்றார் போல் சரி செய்துகொண்டு வந்ததில் தான் பிழை இருப்பதை உணரமுடியவில்லை.பணம், கௌரவம், சுயமரியாதை இதனை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் கூட்டத்தை தொடர்ந்துகொண்டிருந்திருக்கிறேன், இந்த பயணத்தில் சிறிது சறுக்கலில் விழுந்து, பயணத்தை தொடர முடியாமல் போனதிற்கு வாழ்க்கை அவ்வளவு தான் என்ற முடிவில் முடித்துக்கொள்ள முயற்சித்திருக்கிறேன் வாழ்க்கையை.

கிணத்துல விழுந்த இந்த உசுர, கொஞ்சமும் யோசிக்காம குதிச்சு முழுகி, காப்பத்திபுட்டு கரையேறின 60 வயசு முதியவர பார்த்து "சந்தோசம் பெரியவரே,ஏனுங்க பெரியவரே வயசான காலத்துல இவ்ளோ பெரிய கெணத்துல குதிச்சீங்களே பயமா இல்லையா?" என்று கேள்வி கேட்டவங்கள பார்த்து, "மிஞ்சி மிஞ்சி போனா என்ன தம்பி ஆகும் இந்த உசிர் போகும் அவ்வளவு தானே, பயம் எதுக்கு தம்பி" என்று நடை கட்டின பெரியவர நானும் மிரட்சியுடன் பார்த்தேன்.

எனக்குள் மெதுவாய் புரிய ஆரம்பித்தது, இலக்கு என்ற ஒன்றை நோக்கி ஓடும்போது, நான் இயந்திரமாய் மாற ஆரம்பித்திருப்பது.வாழ்க்கையை ரசித்துக்கொண்டல்லவா பயணித்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட அதிகபட்சம் இன்னும் ஒரு 40 ஆண்டுகாலம் தான் வாழ்ந்துவிட போகிறோம். சரியாக நாட்களில் எண்ணினால் 14600 நாட்கள் அவ்வளவே. நிச்சயம் இயற்கை நிகழ்வுகள் ,பிரச்சனை என்ற  ஒருவிதத்தில் நம்மை துரத்திகொண்டே தான் இருக்கும்.தீர்வு-, சில நேரங்களில் ஓடுவதும், சில நேரங்களில் நெஞ்சு நிமிர்த்தி போராடுவதுமாய் இருக்க வேண்டுமே தவிர,ஆட்டதிற்கு நான் வரவில்லை என்று மாய்த்துகொள்வதாய்  இருக்க கூடாது

இலக்கு என்பது எப்பொழுதும் தானாய் தன்னுள் விரும்பி அமையவேண்டும். எப்பொழுதெல்லாம் சமுதாய பிம்பம் பார்த்து, தனக்குள் கட்டாய ஒன்றாய் அமர்கிறதோ அப்பொழுதெல்லாம் இலக்கே நம்மின் இறுதிஊர்வலத்திற்கு    அச்சாரமிட்டு விடும் என்பதை உணர்ந்தவனாய் பயணிக்கிறேன், வாழ்க்கையை ரசித்துக்கொண்டு...   

0 comments:

Post a Comment