Monday, March 3, 2014

முதல் பார்வையின் உச்சம் – 1


நமது வாழ்க்கையின் சில யதார்த்த நிகழ்வுகள், நம்முள் அசைபோடும் தருணங்களில் அத்தனை இன்பத்தை விதைத்துவிடும் என்பதை உணர்ந்திருக்க முடியும் கடந்து சென்ற ஒவ்வொரு மனிதனாலும். பதின் வயது பருவங்கள் கடந்து சென்ற அதீத நிகழ்வுகளில், காதல் என்ற உணர்வே அதிகமாய் வாழ்ந்திருக்கும் என்று நம்புகிறேன் நம்முள்.

“கடவுளை கும்பிடு, உனக்கு நல்லது” என்று கோடி முறை, என்னுள் ஒழுக்கத்தை விதைக்க பாடுபடும் எனது தாய்க்கு தெரிந்திருக்குமோ என்னவோ, என்றாவது ஒருநாள் என் பாதம் கோவிலை சுற்றிவரும் என. பதின்வயதுகளில், கடவுள் என்பவர் அம்மாவால் பரிந்துரை செய்யப்படும், பிடிக்காத எதிரி என்றே என்னுள் விதைத்திருந்தேன். அதனாலோ என்னவோ என்னுள் வெற்றிடம் எப்பொழுதும், இன்பத்திலும், துன்பத்திலும் கூட ஒரு தெளிவு இருந்ததில்லை.

அப்படித்தான் வழக்கமான கோடைவிடுமுறை என்னை ஈரோட்டிற்கு கொண்டு சென்றது. கொஞ்சும் கொங்கு தமிழ் அனைவரது உதட்டிலும் அழகாய் ஜனிக்கும். தெருக்களில் இறங்கி, அம்மம்மா வீட்டிற்கு செல்லும் பாதை எல்லாம், கொங்கு தமிழ் சிதறி விழும், “என்ன கண்ணு , அம்மம்மாவ பார்க்க ஓடி வந்துட்ட போல இருக்கு.எத்தனை நாளு லீவு? என்ற கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ளாமல் அடுத்த அடிகூட நகர விடுவதில்லை தூரத்து சொந்தங்கள்.

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, இந்த பழமொழியில் கிரிக்கெட் அப்டிங்கற ஒரு வார்த்தையை முதலில் சேர்த்தால் அது மிகையாகாது. ஊருக்கு ஒரு இருபது பேராவது இப்படி பார்க்கலாம் கிரிக்கெட் மட்டையுடன்.” நானும் வரலாமுங்களா ஆட்டத்துக்கு” என ஆரம்பித்த பவ்வியம், சிறிதுநாட்களில் தொலைந்து போய்விட்டது என்றே கூறலாம், விஜய் என்பக்கம் தான் என்று சண்டைபோட்டுகொள்ளும் அளவிற்கு கொண்டு சேர்த்தது விளையாட்டின் மீதான அதீத ஆர்வம்.

“சரி, நாளைக்கு கிளம்புறேன் அம்மம்மா, அம்மா சொல்லித்தான் விட்டுச்சு போயிட்டு சீக்கிரம் வந்திடு அப்டின்னு”.என்று சொல்லிமுடிக்கும் பொழுது, “இன்னும் பத்து நாலு இருந்துட்டு தான் போகணும் கண்ணு, காப்பு கட்டிட்டாங்க, பூவு வைச்சிட்டாங்க கோவில்ல,கோவில் திருவிழா முடிஞ்சுதான் போகணும் கண்ணு” என்று அம்மம்மா கூறியது சந்தோசம்தான். விளையாட்டின் மீதான அதீதத்தால் எங்கள் மீது விழுந்தே சூரிய ஒளி கருத்து போனது என்றே அடித்துகூறிடலாம். அதன் மீதான மோகமோ என்னவோ,என்னுள் உடல்முழுவதும் மகிழ்ச்சியை பரவச்செய்தது.

கோவில் பண்டிகைக்கும் எனக்கும் வெகுதொலைவு எப்பொழுதும்.இறைவன் பாடல்களில் தொடங்கி, சமீபத்திய சினிமாப்பாடல்கள் வரை ஒலிக்க ஆரம்பித்தது ஊரெங்கும். ஒவ்வொருவரின் உணர்வுகளிலும் பாடல்கள் சந்தோசத்தை ஊற்றின, அவ்வப்பொழுது ஒலிபெருக்கியில் வேண்டுகோள் விடுத்துகொண்டே இருந்தார்கள், “எப்பா, இந்த தீர்த்த குடம் எடுக்குறவங்க எல்லாம் சீக்கிரம் வாங்கப்பா கோவிலுக்கு, தீர்த்தம் எடுக்க போகணும்”. அம்மம்மா வேகமாய் வந்து, கண்ணு நீ நல்ல மார்க் எடுக்கனும்னு வேண்டியிருந்தேன், போயிட்டு வா என்றதும் அத்தனை கோபத்துடன் “உன்னைய யார் இதெல்லாம் பண்ண சொன்னாம்மா” கூறிக்கொண்டே கிளம்பினேன் கோவிலுக்கு குடத்துடன்.

ஊர்பெரியவங்க எல்லாம் முறுக்கு மீசையோட உட்கார்ந்து இருந்தாங்க வண்டியில. என்னடா இது வேலை என்ற சலித்துக்கொண்டு ஏறி அமர்ந்தேன்.சிறிது நேரத்தில் தாவணியுடன் கையில் குடத்துடன் கொங்கு நாட்டிற்கே உரிய அடக்கத்துடன், அத்தனை மங்களகரமாய் வந்து நின்றாள் வண்டியின் அருகே. குடம் கொடுக்க வந்திருப்பா யாருகிட்டயாவது எனநினைத்து முடிப்பதற்குள் வண்டியில் ஏறினாள். அருகே வந்துநின்றுகொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் கையில் குடத்துடன். சந்தோசத்தில் சில நொடிகள் விட்டுவிட்டு பார்க்க தொடங்கினேன்,அங்கும் இங்கும் பார்ப்பதுபோல்.

நடுவாகு, குளித்துமுடித்த கூந்தல், தன்னை உணர்த்திகொள்ள அத்தனை ஆசையுடன் காற்றுடன் தொட்டு பேசிய நேரத்தில். ஊஞ்சலாய் அசைந்தாடிய மனத்தை கட்டுப்படுத்த, எதோ சினிமாபாடல்களை எல்லாம் யதார்த்தமாய் முனுமுனுக்க வேண்டியிருந்தது. என்ன செய்ய?. கலைந்த கூந்தலோடு நான் களைந்து போய்விடாமல் இருக்க என்ன என்ன செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்ய வேண்டியிருந்தது. இடையிடையே “கடவுள் கண்ண குத்திட போறாருன்னு வேற பயம்”.முகம் பார்க்கும் ஆவலில் ஒருசில வினாடிகள் அதிகமாய் உற்று பார்த்த நொடியில், அவளது கண்ணோடு நேருக்கு நேர் மோதிவிட வேண்டியதாயிற்று, அடுத்த நொடியில் இரண்டு முகங்களும் வெவ்வேறு எதிர் திசையில் திரும்பிய நிமிடத்தில் அத்தனை மாற்றங்கள் கண்களிலும் உணர்விலும்.

பதிந்தது முகம் முழுவதும் மூன்றே வினாடிகளில். அந்த மூன்று மணிநேரமும் இந்த மூன்றே வினாடிப்பர்வையில் திளைத்தது. இடையிடையே உற்று நோக்கியதில் புரிந்தது, எப்பொழுதும் ஒழுக்கம் மட்டுமே பேசும் கண்கள், உண்மையை மட்டுமே பார்க்கும் உதடுகள், கோபத்தின் உச்சியை காட்டும் கூர்மையான மூக்கின் நுனியில், கொஞ்சம் கிறங்கியும், பயந்தும்போயி இருந்தேன் என்பது வாகனத்தின் பலகைக்கு தெரிந்து இருக்கும் எனது இறுக்கமான பிடியிலிருந்து. கோவில் நெருங்கியபோது பேச எத்தனித்த என்னை திரும்பி பாராமல் கிளம்பினாள்.

தொடர்ந்து செல்ல முயற்சிக்கையில், ” என்ன கண்ணு கருணைமலர், இந்த வருசமுமா” என்ற சத்தம் வந்த திசையை நோக்கி தலை திருப்ப, எனது அம்மம்மா அவளிடம் ஏதோ பேசிவிட்டு, என்னை வரவேற்று “கண்ணு, போயிட்டு வந்துட்டியா, வீட்டுக்கு போலாம் வா” என்று கூறிய நிமிடத்தில், நூறு ஆண்டுகள் வாழ்ந்த ஏதோ ஒரு நம்பிக்கையில், பிரிய மனமின்றி நகர்ந்தேன். “கண்ணு, இந்த கருணைமலர் இருக்குல, நல்ல பொண்ணு, படிப்புல கெட்டிக்காரி, கஷ்டப்பட்டு மேல வந்து இருக்காங்க அவுங்க குடும்பம், ஒழுக்கமான பொண்ணு, பாரு தீர்த்த குடம் ஒவ்வொரு வருசமும் தவறாம எடுக்குறா, என்று அடுக்கடுக்காய் அடுக்கி வைத்ததை எல்லாம் முன்பே உணர்ந்தவனாய், ஒப்புக்கு கேட்டுக்கொண்டே வீட்டிற்கு நடந்தேன்.

வீடு எங்க இருக்கிறது என கேட்க பயமுற்று, தேடினேன் சில தெருக்களில். பண்டிகை முடிஞ்சு வெறிச்சோடி கிடந்த கோவிலை சுற்றி சுற்றி வர ஆரம்பித்தேன் பாவமாய்,ஒரு முறை பார்த்துவிட.

எப்படியோ பயத்தை மறைத்துக்கொண்டு, “ஏன் அம்மம்மா எந்த பள்ளியில படிக்குது அந்த பொண்ணு, நல்ல பள்ளிக்கூடமா அது, எங்க இருக்குது” மொட்டையாய் உதிர்த்த என் கேள்விக்கு பதிலாய் இன்னொரு கேள்வியை வைத்தாங்க என் அம்மம்மா. “எந்த பொண்ணுடா?”. “அதான் கருணைமலர்” .என்றதும், அந்த பொண்ணா?., அவுங்க சொந்த ஊர்ல படிக்கிறா, பள்ளிக்கூடம் பேர் எல்லாம் தெரியாது, லீவு விடுறப்பா எல்லாம் இங்க வந்துட்டு போகும்.

ஒற்றை பார்வையில் விழுந்துவிட்ட என்னை, அவள் மீண்டும் மீட்டெடுக்க,அடுத்த விடுமுறையில் நிச்சயம் வருவாள் என்ற நம்பிக்கையில்,மெதுவாய் விரல்களை மடக்கி எண்ண ஆரம்பித்தேன், அடுத்த தேர்வுக்கான மாதத்தை., “ஜனவரி,பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்”..0 comments:

Post a Comment