Saturday, July 30, 2011

என் கன்னத்தில் ஒட்டிய உன் நினைவுகள்



புரண்டு படுத்தது போதும்........,

தொலைதூரம் நடந்தும் எண்ணிக்கை பனிரெண்டை தாண்டமுடியாமல் தவிக்கும் என் கடிகார முட்கள்,பாவம்!!!! காலை- ஐந்தை தொட்டுக்கொண்டு இருக்கிறது .என் படுக்கையறை வெப்பம் கூட குளிரிடம் தோற்றுக்கொண்டு இருக்கிறது மெதுவாய்.




வெள்ளைநிற என் இலவம்பஞ்சு படுக்கை கூட என்னைத் தாங்கிக்கொள்ள மறுதலிக்கிறது.
என் படுக்கைவிரிப்பும், இலவம்பஞ்சு போர்வையும் என்னோடு இரவு முழுவதும் கட்டிப்புரண்டு உறவாடிவிட்டு களைய ஆரம்பிக்கின்றன.விலகிஓடிய தலையணையை இழுத்துவந்து, கட்டியணைத்து, கண்கள்மூடி விழிக்க முயற்சிக்கிறேன்.



விடுதலை வாங்கிக்கொண்டு, என் வீட்டு சன்னலுக்குள் வந்து சிறைபடும், குளிரை தன்னுடன் அழைத்துவந்து, என் இமைதொட்டுசென்று,நான் உனக்காய் வந்துவிட்டேன் என்பதை உணர்த்த முயற்சிக்கிறது என் வீட்டு சன்னல் காற்று,இத்தனையும் உணர்ந்தவனாய், இப்போது நடைபலகியவனைப்போல்,தத்தி தத்தி சென்று,என் கட்டுப்பாட்டையும் மீறும் இயற்கை கடன்களை அடைக்கிறேன்.



சுவற்றில் இடப்பட்ட பந்தாய் மீண்டும் படுக்கையை அடைகிறேன். படுக்கை விரிப்பை இழுத்து,என்னோடு வரும்படி,அரைகுறையாய் என் உடலோடு சேர்த்து இருககட்டிக்கொண்டு சமையலறை எட்டிப்பார்க்கிறேன். கைகள்நடுங்க,உதடுகள் ஒட்டி ஒட்டி விரிய, சுக்கை கொன்று,சர்க்கரையை மூழ்கடித்து சுடச்சுட தேநீர் தயாரிக்கிறேன்.விலகி செல்லும் படுக்கைவிரிப்பை என் உடலோடு மீண்டும் இறுக்கி கட்டிக்கொண்டு ,நாவில் உமிழ்நீர் சுரக்க,ஆவிபறக்க குவளையில் தஞ்சம் புகுகிறது தேநீர்.



விரல்களை சுட்டு பாடம் கற்பிக்கிறது தேநீர் குவளை ,அவசரமாய் தொடநினைக்கும் என்னிடம், நிதானமாய் ரசிக்க பழகு என்று ,ஏதோ சொல்ல முயற்சிக்கும் என் படுக்கைவிரிப்பிடம்,சரி என்று தலை ஆட்டிவிட்டு, தேநீர் குவளையை இறுகப்பற்றிகொள்கிறேன் படுக்கைவிரிப்பின் உதவியோடு.மீண்டும் தத்தி தத்தி நடைபயில்கிறேன் என் வீட்டு கதவை நோக்கி. தன்னை நோக்கி வருகிறான் ,விடுவிக்க போகிறான் என கனவுகாணும் என்வீட்டு கதவை, தொடுகிறேன் . திறக்கிறேன் .



அதிகாலை பெய்த மழை, தடையமாய் மழைத்துளிகளை விட்டுசென்றிருந்ததை, எளிதாய் உணரமுடிந்தது என்னால் , சிட்டுக்குருவிகள் பேசிக்கொள்ளும் காதல் மொழிகள் இன்னும் சத்தமாய், இன்னும் அழகாய் என் செவிகளை எட்டுகிறது அழகாய். சுதந்திரமாய் சுற்றித்திரியும் இளங்காற்று,என் கன்னத்தில் ஈரத்தை அறைந்துவிட்டு செல்கிறது. என் உதட்டோரம் புன்னகை எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது இப்பொழுது என் உடலோடு நெருக்கமாய் ஒட்டிக்கொள்ளும் படுக்கைவிரிப்பை பார்த்து.

என் வீட்டு முற்றத்தில் சாய்கிறேன். படுக்கை விரிப்பை உடலோடு சேர்த்து பற்றிக்கொள்கிறேன் ஒரு கரத்தில், ஆவிபறக்கும் தேநீர் குவளை ஒருகரத்தில்.
ருசிக்கமுயற்சிக்கும் நாவிற்கு சுதந்திரம் தருகிறேன்,குவளையை தீண்டி தீண்டி காதல் பரிசாய்,தேநீர் பெறுகிறது என் தேகம். என் வீட்டு முன்னமாய் நிற்கும் மரத்தின், செடியின் ஒவ்வொரு நுண்ணிய இலைகளையும் உற்று ரசித்து காதல் கொள்கிறது என் கண்கள்.

தேநீரின் ஒவ்வொரு துளியும் என் உதிரத்தில்,நரம்புகளின் வழியே பாய்வதை கண்கள் மூடி உணர்கிறேன். கன்னத்தோடு கன்னம் வைத்து பேசினேன் ,இதுவரை எனக்கு துளியும் பரிச்சியம் இல்லா ஒருமென்மையான முகத்தோடு,இன்றைய அதிகாலை கனவில்.
மென்மையான முகம் இன்னும் என் கன்னத்தோடும், என் உள்மனதோடும் ஒட்டி இருப்பதாய் உணர்கிறேன்.

அதிகாலை கனவு, அதுவும் பெண்மையோடு மென்மையாய் பழகுவது போன்ற கனவு ,மனதை விட்டு விலக, குறைந்தது ஒரு நாள் பிடிக்கும் என்பதை உணர்கிறேன் இப்போது.
கண்களை மெல்லியதாய் திறந்து, காணும் ஒவ்வொரு காட்சியிலும், மென்மை முகம் ரசிக்க பழகுகிறேன். தேநீர், குவளையின் அடிப்புறத்தை தொட முயற்சிக்கிறது.மெதுவாய் வீட்டினில் நுழைகிறேன் மீண்டும் முகத்திலும், மனதிலும் புன்னகையோடு..

அலைபேசியை எடுத்து செயல்பெற செய்கிறேன், குறுந்தகவல்கள் மெதுவாய் என் அலைபேசியை எட்டிப்பார்க்கிறது.


1 Message Receievd

from: Manikandan-Team Lead
919894519062
01-Aug-2011 7:03am

"vijay where are you?. I think that you are in your forest house right?. ok come fast, Client sent some issues, you have to take care of that one. reach office as soon as possible.


நிஜங்கள் கரைய ஆரம்பிக்கிறது, போலிகளை போர்த்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் நிர்பந்தம்,எதற்காக இந்த வேலை,உதறித்தள்ள
யோசிக்கிறேன்.இன்னொரு குறுந்தகவல் எட்டிப்பார்க்க ஆரம்பிக்கிறது

1 Message Receievd
from: Gomathi-wouldbe
919884323651
01-Aug-2011 7:05am

"Hi Dear, How r u .I Love u so much .Take care dear.



மீண்டும் போலியை எடுத்து போர்த்திக்கொண்டு நகர ஆரம்பிக்கிறேன் எனக்கான குடும்பத்திர்க்காய்..

ஒற்றை நிமிடம் மௌனமாய் நின்று,இலவம்பஞ்சு படுக்கை,தலையணை,போர்வை, படுக்கைவிரிப்பு,தேநீர்குவளை, சன்னல் வழியே என் வீட்டில் சிறைபடும் இளங்காற்று,என் வீட்டு முற்றம், சிட்டுக்குருவியின் காதல்மொழிகள்,நுண்ணிய இலைகள் இவையனைத்திடமும் காதல்மொழி பகிர்ந்துவிட்டு மௌனமாய்.



Saturday, June 18, 2011

பத்திரமாய் திறந்து வைக்கப்பட்ட ரகசியம்




ரொம்ப நாள் ஆச்சு உங்களை சந்திச்சு , சில நேரங்களில் சிலவற்றை தேடிசெல்ல வேண்டி இருக்கும், அத்தகைய தருணங்களில் நம்மை நேசிக்கும் அன்புள்ளம் கொண்டவர்களை விட்டுச்செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருப்போம், அத்தகைய தருணம் தான் உங்களுக்கும் எனக்கும் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது என எதோ ஒரு கணக்கில் நம்பிக்கொண்டிருக்கிறேன், இக்கனக்கையும் உடைத்துபோட்டுவிட்டு உங்களை இப்பதிவின் மூலம் நெருங்க ஆசைப்பட்டேன், நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுகிறோம், எத்தனை பேர் இதைவாசிக்கபோகிறார்கள் என்ற மனதின் எதோ ஒரு கேள்விக்குறியை தாண்டியும், எழுதியே ஆகவேண்டும் என்ற மனதின் எதோ இன்னொரு மூலையிலிருந்த வந்த பிடிவாதத்தின் பிரதிபலிப்பு தான் இங்கே நீங்கள் வாசிக்க போகும் எழுத்தாய்.


இங்கே உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறேனா என்று தெரியவில்லை, அனால் இப்பதிவு நிச்சயம் நீங்கள் கடந்தவைகளாகவும், கடக்கபோவைகளில் ஒன்றாய் தான் இருக்கும் என உறுதியாய் கூறி ஆரம்பிக்கிறேன் ......

ஆரம்பிப்பதற்கு முன் தெளிவாய் உங்கள் முன் ஒன்று கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன், அழகாய் இயங்கிக்கொண்டு இருக்கும் உங்கள் மனதின் மீது ஏதோ ஒன்றை திணிக்க முயல்வதாய் என்ன வேண்டாம், திணிக்க போவதும் இல்லை, இவைகள் யாவும் உங்கள் மனிதில் அழகாய் இயங்கிகொண்டு இருக்கும் எண்ணங்களை போன்று என் மனதில் அழகாய் அசைந்து கொண்டு இருந்தவைகள், அவைகளைத் தான் இப்பொழுது வார்த்தைகளில் அசையா வண்ணம் அடித்துவைத்து இருக்கிறேன்...

வாழ்க்கை என்றால் என்ன?....ஆயிரம் விடைகள் இந்த வினாவிற்கு பதிலாய். புத்தகத்தில் எழுத்துக்களாய், அறிஞர்களின் அற்புத சொற்களாய், ஞானிகளின் வாழ்க்கைகளாய், இப்படி பலவிதங்களில் நமக்கு விடைகளாய் நம்மை வந்தடைந்திருக்கும். படிக்கும், கேட்கும், தருணங்களில் மட்டும் அந்த விளக்கங்கள் நமக்கு புரிந்தவைகளாய் இருக்கும். சில விளக்கங்கள் இவ்வாறு உணர்த்தும் " வாழ்க்கை அப்டிங்கறது ஒரு சவால், அதனால் எதிர்க்கணும்", "வாழ்க்கை அப்டிங்கறது ஒரு போர், அதில் போராடனும்", "உன் வாழ்க்கை முழுவதும் உன் கையில் "........... இப்படி பல விளக்கங்கள்.

கொஞ்ச நேரம் இந்த விளக்கங்களை மறந்துவிடுவோம்.......

உண்மையில் நம் வாழ்க்கை நம் கையில் தான் தீர்மானிக்கபடுகிறதா?.நமது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடிகளும் நம்மால் தான் கடக்கிறதா?. அனைத்து வெற்றிகளும், தோல்விகளும் நம்மால் தான் தீர்மானிக்கபடுகிறதா?.பிறப்பும் இறப்பும் மட்டும் தான் நம்மால் தீர்மானிக்க படவில்லையா?..

நம் தந்தையின் ஒருதுளி விந்தணுவில் ஒருகோடி நமது சகாக்கள்( ஒரு கோடி உயிரணுக்கள் ), நமது தாயின் உயிரணுவில் நுழைய போட்டி இட்டு, நாம் மட்டும் நுழைந்து அத்தனை சகாக்களையும் வென்று இன்று நான் என்று கூறிகொள்ளும் முதல் வெற்றியில் ஆரம்பிக்கிறது நமது அதிர்ஷ்டம்..

பிறகு நமது பணக்கார அப்பாவால், ஏழையான அப்பாவால் தீர்மானிக்கபடுகிறது நம் ஆரோக்கியமான, ஆரோக்கியமற்ற குழந்தை பருவ வளர்ச்சி, பிஞ்சுவிரல்கள் பளிங்குத்தரையில் படுகிறதா, சுல்லிபொருக்கும் பொட்டல்காட்டில் பதிகிறதா என்பதை தீர்மானிப்பதும் , கதர்சட்டையில் கட்டுகட்டாய் பணம் என்னும் பணக்கார அப்பாவாலோ, கசங்கிக்கிடக்கும் கோமணத்துணியில் சத்தம் எழுப்பும் நாணயங்களுக்கு எஜமானான ஏழை அப்பாவாலோ.... அடடா இந்த குழந்தை பருவவளர்ச்சியும் அதிர்ஷ்டத்தில் தான் ஆரம்பிக்கிறதா?

அடுத்து, கல்வியும், காதலும், கலந்து மாறிமாறி வரும் , புற்றிஈசலுக்கு இறக்கை முளைத்து சுற்றிதிரியும் இறப்பின் அச்சம் அறியா இளம்கன்று பருவம். புத்தகத்தோடு,கலப்பையையும் இருக்கபிடித்து, கலப்பை தின்று,எஞ்சிய கைரேகைகளில் எழுதுகோலை இருகபிடித்து அழகாய் எழுதியபின்பும்,வடை தின்றுகொன்று,ஏதோ வீட்டுச்சன்டையில் நமதுவிடைத்தால் தண்டனைபெற்று முற்றுபுள்ளிவைக்கப்பட்டு இருக்கும், கதைகளை கட்டி இருக்கும் விடைத்தாள் நேற்று நடந்த சுமூக உறவில் மதிப்பெண்களை வாரிகுவித்திருக்கும். அட இந்தபருவமும் அதிர்ஷ்டத்தில் தான் வளர்கிறதா?...

தான் உண்ணாமல் நமக்கு கொடுத்து ,தன்னை குடல் திங்கும் அமிலத்திற்கு தாரைவார்த்துவிட்டு முகம்மலரும் தாயின் கருணையில் கிடைத்த பழையசோறும், ஊறுகாயிலும் வளர்ந்த உடல் மினுமினுப்பதில்லை, மரங்கள் கூட மினுமினுக்கும் வண்ணங்களில் மயங்குவதுண்டு, அப்படியிருக்க ஆறறிவுகொண்ட மனிதன் தோல்மினுமினுப்பதில் மயங்குவதில் ஆச்சர்யம் இல்லை, ஆப்பிளையும், ஆரஞ்சையும் முதன்முதல் உண்டுபலகிய ஆதி மனிதன்கூட பலாப்பழத்தை உண்ண பயம்கொண்டிருக்கிறான்..இங்கே அழகிய காதலும் அழகைவைத்தே ஆரம்பிக்கிறது, அட இந்தபருவமும் அதிர்ஷ்டத்தில் தான் மலர்கிறதா ?...

உயிரையும்,வியர்வையையும் விற்று விற்று சேர்த்த சில்லறையில் பட்டபடிப்பை முடித்து பட்டணம் சென்று, ஒவ்வொரு வீதியில் தன் கால்தடம் பதித்தும் கிடைக்காத வேலை, ஓய்ந்து உட்காரும் பொழுதில் கிடைத்து இருப்பதை நாம் உணர்ந்திருப்போம், போதும் என்று வீடும் செல்லும் வேளையில்,ஓடிவந்து உனக்கும் சொந்தம் என்று நம்மோடு ஒட்டிக்கொண்டு உறவாடும் வேலையை நம்மில் அனைவரும் நிச்சயம் உணர்ந்திருப்போம்.இரவில் விளிக்கா நண்பன் வேலைகிடைத்த சந்தோஷத்தில் முழக்கமிடும் சத்தத்தில், இரவிலும் உறங்கா உழைத்தநண்பன் தோல்வியின் சத்தமில்லா சத்தில் கரைந்து போவதை உணர்ந்திருப்போம்,

முன்னும் பின்னும் அலையும் கண்களை கட்டிவைத்து காதல்வலையில் விழாமல், கொஞ்சம் விழுந்தும், விழாமலும் எப்படியோ தனக்கென நிச்சயித்த பெண்ணிடம் கொண்டு சேர்த்திருப்போம், பொண்ண நல்லா பார்த்துக்க..பிடிச்சுருக்கா? என்ற கேள்விக்கு அவசர அவசரமாய் எதோ ஒரு கணக்கை மனதில் எதிர்பார்ப்புகளை கூட்டியும்,எதிர்பார்ப்பு அற்றவைகளை கழித்தும் ஒரு ஐந்து நிமிட நேரத்தில் நம்வாழ்க்கையை ஒரு அதிர்ஷ்டத்தின் ஒப்படைத்துவிடுகிறோம், அன்பான துணையும் கூட ஒரு ஐந்து நிமிட பார்வையில் நிச்சியக்கபடுகிறது, அடடா இல்வாழ்க்கையும் கூட அதிர்ஷ்டத்தில் தான் வாழ்கிறதா?...

இப்படியாக வாழ்க்கை என்பதே ஒரு அதிர்ஷ்டத்தில் பயணிக்கும் பாய்மர கப்பல் என்று அதிர்ஷ்டத்தின் தலையில் கட்டிவிடலாம?..பிறகு வாழ்க்கை என்பதன் பொருள் தான் என்ன?..


வாழ்க்கை வாழ்க்கை அப்டின்னு பெரிதா இழுத்து, பயங்கரமாய் பயமுறுத்தும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு வார்த்தையில் சுருக்கமாய் சொல்லிவிட்டு நடைகட்டலாம் அந்த அளவிற்கு எளிதானது தான் வாழ்க்கையும்..

இன்னும் அழகாய் புரியும் வண்ணம் கூறியே ஆகவேண்டும்.அவசர அவசரமாய் பேருந்து நிறுத்தத்தை அடைந்திருப்போம் .நம்மைபோன்ற குறைந்தது ஒரு முப்பது பேரையாவது காணலாம் அதே பேருந்துநிருத்ததில்.சிறுவயதில் விளையாடியிருப்போம் காந்ததுண்டை வைத்துகொண்டு,மண்ணில் போட்டு புரட்டியதும் ஓராயிரம் இரும்புத்துகள்கள், காந்தத்தை கட்டிபிடித்துகொண்டும், சிலவகைகள் தொங்கிக்கொண்டும் இருக்கும். அந்த இளம் பருவத்தை ஞாபகபடுத்துவது போன்று வந்து நிற்கும் அந்த அழகிய அரசுப்பேருந்து.இந்த பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் நாமும் ஓடி ஒட்டிக்கொண்டு,அடித்துபிடித்து உள்ளே சென்று ஒரு இருக்கைக்கு அருகே நின்றுவிடுவோம் வெகுதூரம் நின்று கொண்டு வரும் ஒரு ஐம்பது பேரில் ஒருவனாய்..பேருந்து நகர ஆரம்பித்து ஒரு மூன்று நிறுத்தத்தை தாண்டி இருக்கும், சரியாக நாம் நிற்கும் இருக்கைக்கு அருகே அமர்ந்து இருப்பவர் எழுந்துசெல்வார் நம்மை அமரசொல்லிவிட்டு.நாமும் சிரித்துகொண்டே அமருவோம் நமக்கு முன் அரைமணி நேரம் கால்கடுக்க நின்றவனை நிற்கவைத்துவிட்டு.இது தாங்க வாழ்க்கையோட தத்துவம் கூட ....

இதுபோன்று தான் வாழ்க்கையில் சில நேரங்களில் அதிர்ஷ்டம் நம்கரத்தை இருகபற்றிக்கொள்ளும்.இந்த அழகிய அதிர்ஷ்டத்திற்கு வித்திட்டதே நம் முயற்சி தான் என்பதே நிதர்சனமான உண்மை.ஐயோ கூட்டம் என்று நிறுத்ததிலே நின்றவர்களுக்கு மத்தியில்,சென்று தான் பார்ப்போம் என ஒரு அழகான முயற்சி எடுத்திருக்கிறோம் அவைதான் தான் நமக்கு இந்த அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

எப்பொழுது வாழ்க்கை பற்றிய அதிக எதிர்பார்ப்புகளையும், தேடல்களையும்,முன் எச்சரிக்கைகளில் நம் மனம் முழுவதுமாய் அர்ப்பணிக்கப்பட்டு இருக்கிறதோ அப்பொழுது இயற்க்கை தீர்மானிக்கும் சில முடிவுகளை எப்படி எதிர்கொள்வதென்று தெரியாமல் மனம் திக்கிமுக்காடி தான் போகிறது , கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்கிறோமா?????? சரியாக செய்கிறோமா என்றால் ஏதோ சாதனை செய்யும் அளவிற்கு செய்ய வேண்டும் என்றில்லை, உன்னால் முடிந்தவரை சரியாக செய்கிறாய் என்று நம் உள்மனதின் ஒற்றை வார்த்தை போதும்.அவ்வளுவுதான் வாழ்க்கை.

ஏதோ இரண்டாம் வாழ்க்கை (ஜென்மம்) என்றெல்லாம் படித்திருக்கிறோம், அப்படி படித்ததை மனதில் போட்டுகொண்டு, அதற்காய் கண்ணைமூடிக்கொண்டு, இளகிய மனதில் வாழ்க்கைபற்றிய சுமைகளை சுமந்துகொண்டு இந்த அழகிய வாழ்க்கையை துளைத்துவிடவேண்டாம்.

இப்ப சொல்லுங்க வாழ்க்கை பற்றிய பயம் நமக்கு தேவையான ஒன்றுதானா?..வரும்போது எதிர்கொள்வோம், அது வீழசெய்யும் மரணமாக இருந்தாலும் சரி, வாழசெய்யும் வெற்றியாக இருந்தாலும் சரி ...வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ரசிக்க முயற்சிப்போம்,நமக்குகொடுக்கபட்ட வேலையை மிகசரியாக செய்ய முயற்சித்திக்கொண்டு.....

நம்மையும் மீறி இயற்கை தீர்மானிக்கும் சில முடிவுகளுக்கு நாம் எப்படி பொறுப்பாளி ஆக முடியும், அதற்காய் கவலை கொள்ளமுடியும்.
ஆனால் நிச்சயம் ரசிக்கமுடியும் ஒவ்வொரு முடிவையும்,நம் மனதை அழகிய வெற்றிடத்தால்(ரசிக்கும் திறன் ) நிரப்பி இருக்கும் தருனத்தால் மட்டுமே..

"கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்ய முயல், ஒவ்வொரு நொடியையும் ரசிக்க பழகு" இந்த ஒற்றை வரி தான் வாழ்க்கை !!!!!!!