Saturday, September 4, 2010

தனலஷ்மி - பாசம் என்றால்....



இரண்டு மாதத்துக்கு முன்பே , நல்லவனாய், பவ்வியமாய் நின்று , என் மேல் அதிகாரியிடம் இரண்டு நாள் விடுமுறை கேட்டு, சரி என்ற அனுமதியும் வாங்கிவிட்டேன். நாளை விடுமுறை என்று வகுப்பாசிரியர் மாலை நேரத்தில் வாசிக்கும் தகவல் அறிக்கை கடவுளாய் தெரிந்து, தகவல் அறிக்கைக்கு நன்றி சொல்லிவிட்டு அருகில் அமர்ந்து இருக்கும் நண்பனை சந்தோசத்தில் அடித்துவிட்டு, நாளை என்ன செய்யலாம் என்ற ஓராயிரம் திட்டங்களை தீட்டும் பள்ளி நாட்களை ஞாபகப்படுத்தியது, சரி விடுமுறை எடுத்துகொள் என்று என் மேல் அதிகாரி கூறிய அந்த நிமிடத்தில் .

நிச்சயம் சந்தோசம் இருக்கத்தானே செய்யும்,ஆறேழு மாதத்துக்கு பிறகு சொந்த ஊருக்கு, அப்பா, அம்மாவை பார்க்க போகிறேன், முக்கியமாய் என் தனலஷ்மியை பார்க்க போகிறேன், "நீ திருவிழாவுக்கு கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என்ற தனலஷ்மியின் ஆணைக்கு தான் இந்த விடுமுறையே" . யார் இந்த தனலஷ்மி?, தான் ஒரு பெண்ணாய் இருந்தாலும் ,தன் கணவனோடு சேர்ந்து புழுதி க்காட்டிலும், சேற்றிலும்,வெய்யலிலும் வியர்வை சொட்ட சொட்ட விவசாயம் பார்க்கும் தருவாயிலும் கூட,என்னை சாப்பிட்டியா?, நல்லா சாப்பிட்டியா?,என்ன சாப்பிட்ட?, நல்ல உணவை சாப்பிட்டியா?,பார்த்து சூதனமா போகனும், பேருந்தில் தொங்கிக்கொண்டு போககூடாது.

நம்ம அப்பா, அம்மாவோட அலைபேசியில் பேசினியா?,உடற்பயிற்சி செய்யும்போது பார்த்து செய்யனும், அதிகஎடை தூக்கக்கூடாது, ரொம்ப நேரம் அரட்டை அடிச்சுட்டு நேரம் கழிச்சு தூங்கமா, சரியான நேரத்துல தூங்கணும் என்று ஆயிரம் அக்கறையை, அன்போடு அடுக்கடுக்காய் என் மேல் திணிப்பவள். அக்கா என்ற ஒற்றை உறவில் உலகம் காட்டியவள், அக்கா என்ற வார்த்தைக்கு அம்மா என்றொரு அர்த்தம் இருப்பதாய் பாசத்தால் உணர்த்தியவள்,

அம்முமா, புஜ்ஜிமா,தங்கம், செல்லம், மயிலு, என்று பாசத்தை- செல்ல பெயர்களாய் என் மீது ஒட்டிவிட்டவள், பூஜா, தினேஷ் என்ற அழகிய அவள் செல்லங்களுக்கு மூத்தவனாய், முதல் பையன் நீ என்று பூரிப்போடு புன்னகைத்து என்னை மார்போடு பாசமாய் அனைத்து ஆனந்த கண்ணீர் வடிப்பவள். அவள் பாசத்தை நம்பிக்கையாய் எழுத ஆரம்பித்துவிடலாம்,முடிக்கமுடியாது என்று

ஆசையாய் காத்திருந்த நாள், நிஜத்தில் நிழலாடும் தருணமாய் மலர்ந்தது . அவசர அவசரமாய், அலுவலக வேலைகளிடம் எனக்காய் நான்கு நாட்கள் காத்துஇருக்கும்படி கூறிவிட்டு , என்னோடு வாருங்கள் என் அக்காவை காணலாம் என்று என் உடைகளிடம் சொல்லிக்கொண்டே, அவைகளின் அனுமதியின்றி திணித்துக்கொண்டு புதன்கிழமை இரவு ஓடி சென்று சேலம் பேருந்தை பிடித்து இருக்கையில் அமரும்பொழுது வியர்வை துளிகள் அழகாய் கண்சிமிட்டி, என் தேகம் சுற்றி பார்க்க கிளம்பிவிட்டன. மனது மட்டும் ஏனோ என் அக்காவின் பாசத்தை நினைவில் நிரப்பிக்கொண்டிருக்க மறக்கவில்லை, நிச்சயம் ஒரு 100 பேரிடமாவது சொல்லி இருப்பாள்,என் தம்பி வருகிறான், தம்பி வருகிறான் என்று. என்னையும் மீறிய ஆவல் ஓட்டுனரின் வேகத்தை பார்த்து சலித்துகொண்டது அவ்வப்போது.

எப்படியோ வீடு சென்றுவிட்டது மனமும், உடலும் வியாழக்கிழமை அதிகாலையில் . அப்பா, அம்மாவோடு சந்தோசமாய் சில மணித்துளிகள்.சிறிதுநேரத்தில் அக்காவிடம் இருந்து அழைப்பு, எப்பொழுது இங்கே வருகிறாய் என்று, சிறிது விளையாட்டாய், நான் ஊருக்கு நாளைக்கு தான் வருவேன் என்றதும், அழுகையுடன் துண்டிக்கப்பட்டது அழைப்பு. அவசரமாய் புறப்பட்டு, அக்காவீட்டின் முன் நின்றேன், அக்கா கடைக்கு பொருள்கள் வாங்க போயிருப்பதாய் உணர்ந்தத தருணத்தில் உறவினர்களின் வரவேற்பு அனைத்தும் முற்றுபெராமல் தொக்கிநின்றது என் அக்காவின் பாச வரவேற்ப்பு இல்லாமல்.


வாசலை உற்றுநோக்கியே தோய்ந்த என் உடலும், மனுமும் மௌனமாய் கனத்துகொண்டே தூக்கத்தை கட்டிக்கொண்டது, அக்காவின் வருகையை உணர்ந்த தருணத்தில் பூத்த ஆவலை அழகாய் அக்காவிடம் கொண்டு சேர்க்க ஓடி சென்று அக்காவின் அருகே அமர்ந்து, சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என்று புன்னகைபூத்த என் உதடுகூட சுருங்கிகொண்டது அக்காவின் கலங்கிய கண்களை பார்த்ததும். என்ன சொல்ல?, அழகாய் சொல்லிவிட்டாள் என் அக்கா என் மேல் வைத்து இருக்கும் பாசத்தை கலங்கிய கண்ணீர்துளியால்,

அம்முமா எப்படி இருக்க?, என்பதில் ஆரம்பித்தது எப்பொழுது முடிந்தது என்று கணக்கில் வைத்து கொள்ளவில்லை,அத்தனை வேலைக்கு மத்தியிலும் ஓடி வந்து "சாப்பிடு விஜிமா" என்று கெஞ்ச மறக்கவில்லை என் அக்கா. எவ்வளவு பாசமுங்க என் அக்காவுக்கு என்மேல, இந்த பாசத்துக்கு தாங்க உலகத்துல அத்தனை உயிரும் ஏங்குதுங்க,என் கையை பிடிச்சு கூடவே சின்ன குழந்தை மாதிரி கூட்டிக்கிட்டு, சமைக்கிறதுல இருந்து, சாப்பாடு போடறது, துவைக்கிறது, பாத்திரம் கழுவறது, சொந்தகாரங்கள வரவேற்கிறது வரைக்கும் அத்தனை வேலையையும் சலிக்காம செய்ததுங்க.

சின்னதாய் என்னை யாரவது வேலை செய்ய சொன்னாகூட, ஓடி வந்து உன்னை யாரு விஜிமா செய்ய சொன்னது, நான் பார்த்துக்கிறேன், நீ ஒன்னும் செய்யகூடாதுன்னு சொல்றப்ப கண்ணீர் சொட்டுமுங்க, கண்ணீர துடைச்சு எரிந்துட்டு, அடம்பிடிச்சு என் அக்காவீட்டு திருவிழாவுல நானும் என்னால முடிஞ்சவேலை செய்யணும்னு செய்தபோது, கொஞ்சம் பெருமையா தான் என் அக்கா எல்லோர்கிட்டயும் சொல்லிகிட்டா "என் தம்பி பாரு ,முன்னாடி நின்னு எடுத்துக்கட்டி வேலை பார்க்கிறான்னு". .

எது சரி, எது தவறு அப்டின்னு பிரிச்சு பார்க்கிற பக்குவம் என்கிட்ட இருக்குங்க, யோசிச்சுமுடிவு எடுக்க தெரியுமுங்க, ஆனா இது எல்லாம் மறந்துபோகுமுங்க சிலநேரங்களில்,அந்த மாதிரி தருணங்கள் நிறையா உண்டு, அதுல ஒண்ணு தான் நான் அப்போகடந்து போனேன். சின்ன குழந்தைல ஆரம்பிச்சு, வயசாகி சாகுற மனுஷன் வரைக்கும் தன்னை நேசிக்கிற அம்மா, அல்லது நேசிக்கிற மனைவி, நேசிக்கிற பையன், நேசிக்கிற பொண்ணு, நேசிக்கிற அக்கா, நேசிக்கிற அண்ணா இவுங்க தன்னை தான் அதிகம் நேசிக்கணும் அப்டிங்கற ஒரு இனம்புரியா, பாசத்துல மிதக்குற ஒரு பிடிவாத உணர்வு இருக்கும்.

அதேதாங்க எனக்கும், என் அக்கா ,என்னை கவனிக்க தவறிய சில நிமிடங்கள், உறவினர்களை சிரிசுகிட்டே வரவேற்கிற தருணங்கள் என்று நிறையா தருணங்கள் என் பிடிவாதத்தை அதிகரிக்க தான் செய்தது, என் அக்கா என்னை மட்டும் தான் நேசிக்கணும், என்னை கவனிக்க தவறக்கூடாது என்ற பிடிவாதம் , ஓவ்வொரு மனிதனுக்குள்ளும் குழந்தைதன பிடிவாதங்கள் சில நேரங்களில் இருக்கத்தான் செய்கிறது, ஆயிரம் பேர் அறிவுரை கூறலாம். அம்மாகிட்ட போயி தீருவேன்னு அடம்பிடிக்கிறதும் ,அம்மாகிட்ட வேறஒருத்தங்க குழந்தை கையில இருக்குறப்ப வர பிடிவாதமும், சின்ன குழந்தைல இருந்தே ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் உயிராய் கலந்துவிடுகிற, தவிர்க்க முடியாத ஒரு உணர்வு.

என் முகத்தில் இருக்கும் கோபத்தை புரிந்து, ஓடி வந்து,

"விஜிமா, எதுக்கு கோபம்?." என்ற கேள்வியை கேட்கும்பொழுதே தெரிந்திருக்கும் என் அக்காவிற்கு எதற்காய் என் கோபம் போராடுகின்றன என்று?. இது முதல் முறை அல்ல, ஆச்சர்யபடுவதற்கு, பல லட்சகணக்கான முறை பார்த்த பிடிவாதம் தான். என் அருகே அமர்ந்து, என் கன்னங்களை பிடித்து,

"விஜிமா, நான் உன் அம்மா, நீ தான் எனக்கு முதல்,அப்புறம் தான் இந்த உலகமே, மற்றவர்களிடம் சிரிச்சு பேசுவதாலோ, உன்னை சில நேரங்களில் கவனிக்க தவருவதாலோ உன்மேல் என் பாசம் குறைஞ்சுடுச்சு என்று அர்த்தம் இல்லை விஜிமா "என்று கூறிமுடித்து, கன்னத்தில் முத்தம் இடும்பொழுது கண்ணீர் சிந்தியது என் கண்கள்.

விஜிமா எதுக்கு அழுகுற?, அழகூடாது, என்று என் கண்ணீரை துடைத்துவிட்டு, அவள் கண்கள் கலங்குவதை காணும்பொழுது இதயம் கனக்க செய்தது, வா விஜிமா, இனிமேல அம்மா உன்னை கவனிக்க தவறமாட்டேன் என்று, என்னை கூடவே கைபிடிச்சு சுத்தினது , இந்த உறவுகாரங்களால புரிஞ்சுக்க முடிஞ்சுதான்னு தெரியல, "இந்த பையன் என்ன குழந்தையா இப்படி கூடவே சுத்துறான், இந்த பொண்ணுக்காவது அறிவுவேணாம் , இப்படியா கூடவே கூட்டிகிட்டு சுத்துறது" என உறவுகாரங்க மனசுக்குள்ள கேட்ட கேள்விகளுக்கெல்லாம் என் அக்கா சத்தமா சொன்னா பதில் "விஜிமா என் முதல் பையன், எத்தனை வயசானாலும் 3 மாச குழந்தை தான் இவன் எனக்கு"

அழகாய்,சந்தோசமாய் நகர்ந்த மூன்று நாட்களும், என்னை சோகமாய் நான்காம் நாளின் கையில் ஒப்படைத்தது. என் அக்காவை விட்டு பிரிந்து செல்ல போகிறேன், என் அக்காவோட பாசத்துல கலங்கிபோன என் மனசு அடம்பிடிச்சுது அங்கிருந்து புறப்பட்டு செல்ல, அவ்வளவு பாசம் காட்டின என் அக்காகிட்ட, போயிட்டு வருகிறேன் என்று சொல்லிட்டு, திரும்பிபார்க்காம வீட்டுக்குவந்து தேம்பி தேம்பி அழுது, சொட்டிய ஒவ்வொரு கண்ணீரிலும் என் அக்காவோட பாசத்தை பார்க்க முடிஞ்சுது.சேலத்துல இருந்து சென்னைக்கு பேருந்து புடிச்சு அமர்ந்து, அக்காகிட்ட அலைபேசியல் அழுதஅழுகை பேருந்தில தூங்கிக்கொண்டு இருந்தவங்கலோட காதுகளை எட்டி இருக்கும்,


இயல்பு வாழ்க்கைக்கு வர மூன்று நாட்கள் பிடித்தது, பார்த்து பார்த்து சாப்பிடு, தூங்கு, அங்க போகாத, அந்த வேலை செய்யாத என்று பாசம் காட்டிய அம்மா அருகே இல்லை எனும்பொழுது, இந்த வாழ்க்கை எதுக்கு?,பாசத்தை பத்திரமாய் வீட்டில் மடித்துவைத்து விட்டு இங்கே எதைதேடுகிறேன் என்ற ஆயிரம் கேள்விகள் மனதை இன்னும் கனப்படுத்தியது . இந்த மூன்று நாட்களும் அக்காவை அழைக்கும் பொழுதெல்லாம் , அக்கா கூறிய முதல் வார்த்தை " நீ எங்கு இருந்தாலும், அம்மா நான் உன்னோடு இருக்கிறேன்".நான் அனுப்பிய அதிக குறுந்தகவல் "I Love U Akka, I Miss U Akka" .இந்த ஒற்றை வார்த்தையால் என் அக்காவின் பாசத்தை அடக்கிவிடமுடியாமல், உணர்த்தமுடியாமல்,சரியாக சொல்லிவிட முடியாமல் தவித்ததின் விளைவாய் "தனலஷ்மி -பாசம் என்றால்." இதுவும் முழுமையாய் உணர்த்தியாதாய் ஏற்றுகொள்ளமுடியாமல் கனத்த இதயத்தோடு சுற்றிகொண்டிருக்கிறேன்...


ஒரு வார்த்தையிலும், ஒரு பதிவிலும் முடிந்துவிடுவதாய் உணரமுடியவில்லை என் அக்காவின் பாசம் ...ஜென்மங்கள் தாண்டியது ...