Saturday, June 26, 2010

யார் கடவுள்?, கடவுள் இருக்கிறாரா ?..



வாங்க தோழர்களே இன்னைக்கு நீங்களும் நானும் விவாதிப்போம்...

எதை பற்றி பேச போறோம்.?

கடவுள் யாரு? , கடவுள் இருக்காற இல்லையா?, கொஞ்சம் கடினமான விவாதம் தான். இருந்தாலும் பதிவுக்குள்ள போவோம் வாங்க ...

கடவுள் இருக்கிறார் என்பது உங்களது விவாதாமாய் இருக்கட்டும்..



கோடி கணக்குல மக்கள் நேசிக்கிறாங்க அப்டினா நிச்சயம் கடவுள் அப்டிங்கறவரு ரொம்ப நல்லவராவும், வல்லவராவும் ,கருணை குணம் கொண்டவராகவும், நேசிக்கிரவராவும் இருக்கணும், சரிதானுங்களே நான் சொல்றது?.சரி,.படைத்தல் , காத்தல் , அழித்தல் ..இந்த மூணு செயலையும் கடவுள் செய்கிறாரு, அதனால இதில் என்ன தவறு நடந்தாலும் ,இந்த மூன்று செயல்களுக்கும் இவரு தான் பொறுப்பாளி, சரிதானுங்களே நான் சொல்றது?..சரி,



முதல்ல "படைத்தல் ", ஊனமுற்ற பிஞ்சு குழந்தைகள், கை இல்லை, கால் இல்லை, முகம் இல்லை, இதயம் இல்லை, வாழ்க்கை முழுவதும் மனசலவுளையும், உடலளவுளையும், ஏங்கி தவிக்கிற ஊனமுற்ற படைப்பு,

முன் ஜென்மத்துல பண்ணின தப்பு அதான் இப்படி படைச்சு இருக்காரு, இது தான உங்க கேள்வி நிறைந்த பதில் ?.. சரி ஊனமா இருக்குறவங்க கிட்ட கேட்கலாம் நீங்க என்னவா இருந்தீங்க போன ஜென்மத்தில?, பதில் நிச்சயம் "தெரியவில்லை" என்று தான் இருக்கும்...என்னவாய் பிறந்தோம், என்ன தவறு பண்ணினோம் என்று தெரியாதவனக்கு, தண்டனை கொடுத்து, புரியவைக்க இப்படி படைத்தேன் என்று கூறுவது , உங்களுக்கு எப்படி தோன்றுகிறது - (மடத்தனமாய்) ?....


இரண்டாவது "காத்தல்" , 16 வயசு நம்ம சகோதரி, 7 காமுகர்களால கற்பழிக்க படுகிறாள், கதறுவதை காக்க முடியாத கேவலமான காத்தல். இரக்கமே இல்லாம ஒரு தீவிரவாதியால அப்பாவியான மக்கள் சுடப்பட்டனர், மனசாட்சியே இல்லாத ஒரு அரசியல்வாதியால் ஒரு இனமே அழிந்துவிட்டது இலங்கையில்,

இந்த ஜென்மத்துல அல்லது போன ஜென்மத்தில பண்ணின தப்பு, இது தான உங்க கேள்வி நிறைந்த பதில் ?
முன் ஜென்மத்தில பண்ணின தப்புக்கு கதற கதற கற்பை பறிகொடுப்பது தான் பரிகாரமா?, தன்னை தாக்குவதுகூட தெரியாம தன் உயிரை கொடுக்கறது தான் பரிகாரமா?, போர்க்கலாமே போகாம என் சகோதர , சகோதரிகளின் அங்கங்கள் சிதறி உயிரோட துடிச்சு சாகுறது தான் பரிகாரமா, முன் ஜென்மத்தில் செய்த தவறு என்று கூறிகொள்ளும் கேவலமான காத்தல் ...
உங்களுக்கு எப்படி தோன்றுகிறது - (மடத்தனமாய்) ?....


மூன்றாவது "அழித்தல்", இன்னும் தானே சுற்றிக்கொண்டு இருக்கிறான் பல சின்னஞ்சிறு குழந்தைகளை கொன்றவனும், பல ஆயிரம் கோடிகளை தான் மட்டுமே தின்று, பல ஆயிரம் மனித உயிர்களை பட்டினியில் சாகடித்து, தான் மட்டும் வாழும் தமிழ் தலைவன் எனும் அரசியல்வாதி, இலங்கையில் என் சகோதரிகளின் கற்பை சூறையாடிய, இலங்கை ராணுவ வீரன் எனும் அயோக்கிய மிருகங்கள்,

இந்த ஜென்மத்துல அல்லது போன ஜென்மத்தில பண்ணின புண்ணியம் அதான் அவனுக்கு கடவுள் தண்டனை கொடுக்கவில்லை,இது தான உங்க கேள்வி நிறைந்த பதில் ?
உலகம் அறியா குழந்தைகள கொன்னு இருக்கான், ஒரு பொண்ணுகிட்ட இருந்து கட்டாயபடுத்தி கற்பை பெறுகிறான், தன் சுயநலத்துக்காக,உலகத்திலே மிக பெரிய கொடுமையான பட்டினி சாவுகளை செய்கிறான், அவன் எத்தனை புண்ணியம் பண்ணி இருந்தா என்னங்க, உடனே அழிக்கப்பட வேண்டாமா ? ,


இப்ப சொல்லுங்க ரொம்ப நல்லவரா? , வல்லவரா? ,கருணை குணம் கொண்டவரா? , நேசிக்கிரவரா? ...
இப்ப சொல்லுங்க கடவுள் இருக்காற இல்லையா?..பதில் உங்ககிட்ட இருக்கு, தேடுங்க...

இப்ப முடிவு பண்ணிடீங்க தானே கடவுள் இல்லைன்னு...

நாங்க எப்போ சொன்னோம் கடவுள் இல்லைன்னு , கடவுள் எங்களை எல்லாம் கஷ்டத்துல இருந்து காத்துக்கொண்டு தான் இருக்கிறார் அப்டின்னு சொல்றீங்களா?..
என்னங்க பெரிய காமெடியா இருக்கு உங்களால, சந்தோசமா வாழ்த்தி பாடுறீங்க, உங்க கஷ்டத்த தீர்த்து வைக்கிறாரு, அங்கங்கள் சிதைந்து,கதறி அழுதுகிட்டு கடவுள கூப்பிடுறாங்க, கடவுள் ஆளையே காணாம போயிட்டாருங்கலே, இது என்ன கணக்குங்க?, லஞ்ச கணக்கா ?,வாழ்த்தி பாடுகிறவன் கண்ணுக்கு வெண்ணை, கதறி கெஞ்சுறவன் கண்ணுக்கு சுண்ணாம்பா ? ..


சரி, அப்டினா தப்பு பண்றவங்க எல்லாம் தண்டிக்கப்படுறாங்களா ?, இல்லையா ?..

"ஒவ்வொரு வினைக்கும் அதற்க்கு சமமான எதிர் வினை உண்டு."
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்,"
"தன்வினை தன்னை சுடும் "
"வினை விதைத்தவன் வினை அறுத்தே தீர வேண்டும் "

நிச்சயம் தண்டிக்க படுறாங்க, ஏமாற்றி கோடி கோடியா சம்பாதித்தவன்,அதை அனுபவிக்க முடியாம, அனுபவிக்காம செத்து போயிடறான், எப்படின்னு தெரியுங்களா ?, தீராத நோய் வந்து, வாழ்க்கையின் கடைசி நாட்களை படுக்கையில் படுத்துக்கொண்டு , பையன் பக்கத்துல இருப்பான், மனைவி பக்கத்துல இருப்பாள், மருத்துவர் பக்கத்துல இருப்பாரு, சொந்தகாரங்க எல்லாம் பக்கத்துல இருப்பாங்க, ஆனா அவன் மட்டும் தான் வலியை உணர்ந்து, உணர்ந்து கதறி கதறி அழுது இறப்பதற்கு முன் தண்டனை பெறுவான்,
சரி அவன் சேர்த்து வைத்த சொத்து என்ன ஆகிறது, அவனக்கு ஊதாரி மகன், அல்லது ஊதாரி பேரன் எவனாவது ஒருத்தன் பிறந்து ,அதை அழித்து, எங்கு இருந்து எடுக்கப்பட்டதோ,அங்கேயே திருப்பி கொடுக்கப்படும்.

சரி, துடிக்க துடிக்க கொலை செய்தவனின் நிலைமை?, கண்டிப்பா அவனும் ஒரு நாள் துடிக்க துடிக்க சுட்டு கொல்ல படுகிறான்.அல்லது கொல்ல படவில்லை என்றால் துடிக்க துடிக்க கொல்லப்பட்டே தீர வேண்டும் நிச்சயம்.

என்னங்க என் கருத்த ஏற்றுகொள்ள முடியவில்லையா?, சரி வாங்க, நம்மலே நேரடியா முயற்சி செய்து பார்ப்போம். எங்காவது ஒரு இரண்டு ரூபாய் ஏமாத்திட்டு வந்துடுங்க, அந்த நாளோட இறுதி, மாதத்தோட இறுதி, வருசத்தோட இறுதியில் நீங்கள் ஏமாற்றிய அளவு நிச்சயம் இன்னொருவனிடம் ஏமாந்து இருப்பீர்கள். இது காமெடியான விஷயம் இல்லைங்க,

இப்ப முடிவு பண்ணிடீங்க தானே கடவுள் இல்லைன்னு...

சரி, யாரு கடவுள்?..

தன்னையே நாட்டிற்காக அர்பணித்து இன்றும் வாழும் தலைவர்கள், தன் தேசம் காக்க,உயிரை கொடுக்கும் இராணுவ வீரன், பல அநாதை இல்லங்களில் சம்பளம் வாங்காமல் அன்பை காணிக்கையாக்கும் என் சகோதர்கள்,சகோதரிகள், தப்பு செய்பவர்களை தலை எடுக்க புறப்பட்டு இருக்கும் என் அண்ணன்களும், தம்பிகளும், எங்கோ கஷ்டபடுகிறார்கள் என்று தெரிந்ததும் தன்னால ஆனா உதவியை செய்யும் என் தேசத்து நண்பர்கள், குக்கிராமங்களில் வாழும் ஏழைகளின் படிப்பையும், வாழ்க்கையையும் நான் பார்த்து கொள்கிறேன் என்று தோல் கொடுக்கும் என் தேசத்து இளைஞன்,
தன்னால் முடிந்த விழிப்புணர்வை எழுத்துக்கள் மூலம் பற்றி எரிய செய்யும் வலைதளத்து நண்பர்கள்,

தன் எழுத்துக்களின் மூலம் ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் இருக்கும் உணர்வுகளை எரியவிடும் திரு வாசன் அவர்கள், திரு நேசமித்திரன் அவர்கள், என் தேசத்து மக்களை பக்குவபடுத்தும் முயற்சியாய், சாதிகள் போன்ற பேய்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் என் அண்ணா திரு தேவா அவர்கள், என் சகதோர்களுக்கு பாசத்தையும் விழிப்புணர்வு ஊட்டும் என் அக்கா நிலாமதி அவர்கள், பெண்ணாய் பிறந்து என் தேசத்து இளைஞர்களுக்கு வீரம் கற்பிக்கும் கலகப்ரியா அக்கா அவர்கள்,என் தேசத்து மக்களுக்கு அமைதியை கற்றுதரும் முயற்சியில் தன் மகனுக்கு அமைதி விரும்பி என பெயர் சூடி, சட்டம் படிக்க சொல்லும் அமைதிஅப்பா,

தன்னால் முடிந்த செய்திகளை கொண்டுவந்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயலும் என் தம்பி சௌந்தர் ,தன்னால் முடிந்தவற்றை என்தேசத்து மக்களுக்கு செய்யும் என் நண்பர்கள் சி. கருணாகரசு அவர்கள், கனிமொழி அவர்கள்,அன்புடன் மலிக்கா அவர்கள் ,ஜீவன்பென்னி அவர்கள்,புஷ்பா அவர்கள்,பட்டாசு அவர்கள் ,நாய்க்குட்டி மனசு அவர்கள்,cheena (சீனா) அவர்கள்,தமிழ் அமுதன் அவர்கள், தமிழ் மதுரம் அவர்கள், வீரமணி அவர்கள்,
சிவராஜன் ராஜகோபால் அவர்கள்,

(என்தேசத்து மக்களை தன்னால் முடியும் வண்ணங்களில் மாற்ற துடிக்கும் நல இதயங்களை இங்கு அறிமுகபடுத்தி இருக்கிறேன் , இந்த பட்டியல் இதோடு நிற்பதில்லை, புதிய நல் உள்ளங்களை சந்திக்கும் ஒவ்வொரு கணமும் இங்கே மாற்றம் செய்யப்படும் ) ,

இல்லாத ஒன்றை கடவுள் என்று சொல்வதிற்கு பதிலாய்
இருக்கும் இத்தனை நல் உள்ளங்களை கடவுள் என்று சொல்லலாமே..

வேண்டவே வேண்டாம்.

இல்லாத ஒன்றின் பெயரை எதற்கு இத்தனை நல் உள்ளங்களுக்கு வைக்க வேண்டும்?...இயற்கையை மாற்ற துடிக்கும், இயற்கையை நேசிக்கும், இயற்கைக்கு உதவும் இவர்களுக்கு "இயற்கையர் " என்று பெயர் வைக்கலாமே!,

அட இயற்கையர் ஆகிறது பெரிய விஷயம் இல்லைங்க, பசியில் துடிக்கிற ஒரு குழந்தைக்கு சாப்பிட ஒரு தேனீர் வாங்கிகொடுத்தா நீங்க கூட இயற்கையர் ஆகிடலாமுங்க

(குறிப்பு:கடவுள் இருக்கிறார் என்பதை பற்றி யாரவது சொல்ல விரும்பினால் , இந்த சிறுவனுக்கு புரிய வையுங்கள், நிச்சயம் ஏற்றுகொள்கிறேன் கடவுள் இருக்கிறார் என்று அல்ல, நீங்களும் இயற்கையர் என்று")

                                                                                         
                                             

Wednesday, June 23, 2010

வாழ்க்கை(வலி)ன்னா என்ன? -- சொந்த மண்ணில் என்ன நடந்தது? (பாகம் - 4 )



நன்றிங்க நான்காம் பாகத்தை படிக்க வந்ததிற்கு...


முதல் பாகம் இணைப்பு இங்கே : -
முதல் பாகம்

இரண்டாம் பாகம் இணைப்பு இங்கே : -
இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம் இணைப்பு இங்கே : -
மூன்றாம் பாகம்


அன்றைய பேருந்தின் பயணம் உடல்வலியோடு , மனவலியும் சேர்த்து சுமந்து சென்றது . கால்கள் நடக்க மறுத்து கெஞ்ச ஆரம்பித்தன, வீட்டை அடைந்தபோது அம்மா சமையலறையில் எதோ செய்து கொண்டு இருந்தாங்க, என்னை பார்த்ததும் ஓடி வந்து, என்னை பிடித்து படுக்கவைத்துவிட்டு, அழுதாங்க, அதை இன்னும் மறக்க முடியல, அப்பா கடைல இருந்து வேகமா வந்து என்னை மருத்துவமனைக்கு கூட்டி சென்றார்..

அவர் உள்ளுக்குள் அழுததை என்னால் உணரமுடிந்தது ..ஒரு வார காலம் என்னை அமரவைத்து விட்டது டைபாய்டு .இந்த ஒரு வாரம் என்னை நலம் விசாரிக்க வந்தவர்கள் அம்மாவிடம் கேட்டவை "இன்னும் வேலை கிடைக்கலையா உன் பையனுக்கு , நாங்க அப்பவே சொன்னோம் இருக்குற காச வைச்சு கடை வைச்சு கொடு நல்ல பிளைசுக்குவான்னு , நீ தான் கேட்குல, இப்ப பாரு பையன் எப்படி வந்து நிக்குறான்" என விசாரித்தார்கள் , அம்மாவும் விட்டு கொடுக்காமல், "வேலை கிடைச்சுரும் , கிடைக்காம எங்க போய்ட போகுது" என எனக்காக வாதாடினாங்க.

நிற்க , நடக்க, ஓட, தகுதி ஆகிவிட்டதை உணர்ந்தேன்...

திடீரென எனது உடைமைகளை எடுத்துகொண்டு அம்மாகிட்ட சொல்லிட்டு கிளம்ப ஆரம்பிச்சேன், " இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு போட அப்படினு அம்மா சொன்ன வார்த்தைக்கு பதில் சொல்லாம, இந்த முறை கொஞ்சம் அதிக வெறியோட ..

சென்னை வந்து சேர்ந்தேன், இந்தமுறை தேடல் கொஞ்சம் அதிகமா இருந்துச்சு , அட நீங்க வேறங்க ,தேடல் மட்டும் தான் அதிகமா இருந்துச்சுங்க , ஆனா எப்பவும் போல இழப்பு தான். 6 மாதம் தோல்வி தோல்வினு நகர்ந்து போய்டுச்சு...அன்னைக்கும் எப்பவும் போல தான் விடிஞ்சுது , ஆனா கொஞ்சம் வித்தியாசாமான நாள் , நண்பன் ஒருத்தன் சொன்னான் சென்னைல இருந்து காஞ்சிபுரம் போற வழியில் ஒரு கம்பெனி ஆரம்பிச்சு இருக்காங்க , நிறையா பேர் தேவைபடுதாம்,அதனால எழுத்து தேர்வில் வெற்றி பெற்றால் போதும், அப்புறம் 10,000 கட்டனும் ,அதுவும் நம்ம கம்பெனிய விட்டு ஒரு வருடம் எங்கயும் போக கூடாது என்பதற்காக தான் என கூறினான்...உடனே கிளம்பிட்டேன், முதல் சுற்றை அழகாய் முடித்தேன் ,

அப்பாவிடம் கூறி 10,000 பணத்தையும் கட்டிவிட்டேன், கைகளில் வேலையில் சேருவதற்கான கோப்புகளை வாங்கிவிட்டேன்,வானத்துக்கும், பூமிக்கும் குதிச்சேன் அப்டின்னு சொல்வாங்களே அந்த மாதிரி உணர்ந்தேன். அதில் ஒரு மாதத்திற்கு பிறகு வேலையில் சேருவதற்கான நாளும் குறிப்பிட்டு இருந்தது , ஆரம்ப சம்பளம் 7500. காஞ்சிபுரத்தில் தங்குவதற்கு வீடு எடுத்தேன்...

குறிப்பிட்ட நாள் அன்று, வேகமாய் பேருந்தை பிடித்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கினேன்.... நிஜமாய் நினைக்கவில்லை இப்படி நடக்கும் என்று , சினிமாக்களில் தான் இப்படி ஒரு திருப்பம் வரும், ஆனால் என் நிஜ வாழ்க்கையில் பார்த்தேன் அப்பொழுது..

பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும் பெரிய கூட்டத்தை காண்கிறேன்,என்ன நடக்கிறது என்று தெரியாமல் நடக்க ஆரம்பிக்கும் என்னை காவல் துறை அதிகாரிகள் தடுக்கிறார்கள், அங்கு செல்ல தடை விதித்து இருக்கிறோம் என்று, புரியாமல் அவர்களிடம் கேட்டேன்,
மூன்று மாதமாய் வேலை செய்தவர்களுக்கு ஊதியம் தரவில்லை என்று பணிபுரியும் ஊழியர்கள் இன்று காலை அலுவலகத்தையும் , கணினியையும் அடித்து நொறுக்கி போராட்டம் செய்துவருகிறார்கள் என்று அவர்கள் சொல்லி முடிக்கும் முன் வியர்த்து கொட்டியது, என்ன செய்வது என்று தெரியவில்லை, அந்த கூட்டம் இருக்கும் இடத்தை நெருங்கினேன், என்னை போல் நிறையா பேர் அங்கு இருந்தார்கள், அவர்கள் நம்ம கொடுத்த காசு அவ்வளவு தான் என கூறினார்கள்,

இதயம் வேகமாய் துடிக்க ஆரம்பித்துவிட்டது, என்ன செய்வது என்று தெரியவில்லை,அருகே இருந்த பெட்டிக்கடையில் குடிக்க தண்ணீர் வாங்கிகொண்டு, கொஞ்சம் தூரம் விலகி சென்று, தண்ணீரால் முகத்தை நிரப்பிவிட்டு தேம்பி தேம்பி அழுதேன், கண்ணீர் தனியாய் தெரியாமல் இருக்க தண்ணீரால் முகத்தை அவ்வப்பொழுது நிரப்பி கொண்டே இருந்தேன்,

அப்பா 10,000 நோட்டு கட்டுகளை என்னிடம் கொடுக்கும்பொழுது எதையோ வங்கியில் அடமானாமாய் வைத்து தருகிறார் என்று தெரிந்த மனசு அப்பொழுது பயங்கரமாய் வலித்தது,
ஏமாந்து விட்டேன் என்று சொல்வது எவ்வளவு கஷ்டமான ஒரு விசயம் என்பது எனக்கு புரிந்தது, அளவுக்கு அதிகமா கஷ்டத்த அனுபவிக்கும் பொழுது அழுகை அதிகமாகி சிரிப்பு வர ஆரம்பிக்கும் அப்டின்னு சொல்வாங்களே அதை அப்பொழுது அனுபவிச்சேன்..

அங்க இருந்தவங்க பணத்தை திருப்பி கொடுக்க சொல்லி போராடினாங்க, நானும் சேர்ந்து கொண்டேன், அன்று இரவு வரை அதற்க்கு ஒரு தீர்வும் கிடைக்கல,மீண்டும் அடுத்த நாள் கூடினோம், போராடினோம், உண்ணவே இல்லை நான், மறந்துவிட்டது..அன்றும் இரவு வரை போராடினோம், முடிவு கிடைக்கவில்லை..பாதிபேர் ஏமாற்ற பட்டுவிட்டோம் என ஒப்புக்கொண்டு , கிளம்பிவிட்டனர்..

ரெண்டு நாளுக்கு அப்புறம் எனது கைபேசியை செயல் பெற செய்கிறேன், அப்பாவை அழைக்கிறேன்.எப்படி இருக்க?, கம்பெனில சேர்ந்து விட்டாயா ?, எப்படி இருக்கு கம்பெனி?.... என கேள்விகளை கேட்ட என் அப்பாவிடம் நான் எப்படி சொல்ல நடந்ததை,அழுகை என் மௌனத்தை உடைத்தெறிந்தது, நடந்ததை கூறினேன்..நிச்சயம் என் அப்பாவிற்கு தெளிவாய் புரிந்து இருக்க வாய்ப்பே இல்லை,என் அழுகை தான் தெளிவாய் புரிந்து இருக்கும்,

என் அப்பாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, என் அம்மாவை அழைத்து பையன் அழுகிறான் என்று கூறினார், அம்மா என்னிடம் காரணம் கேட்கவில்லை ,"ஆம்பிள பையன் அழகூடாது, தைரியாமா இருக்கணும் என சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே, அப்பா என்னிடம் கூறிய வார்த்தை பிரமிக்க வைத்தது,

" காசுபோனா போய்ட்டுபோது உடனே கிளம்பி வந்துடு" ...

அப்பா,கஷ்டப்பட்டு பனைமரம் ஏறி பதநீர் விற்று பார்த்து பார்த்து சம்பாதித்த காசுங்க,அம்மா வெய்யலில் களைவெட்டி சம்பாதிச்ச காசுங்க, ஒரு நிமிடத்துல, போனா போயிட்டு போகுது நீ ஊருக்கு கிளம்பிவா அப்டின்னு அப்பா சொல்லும்போது எப்படிங்க அழாம இருக்க முடியும்?...



ஐந்தாம் பாகம் இணைப்பு இங்கே : -
ஐந்தாம் பாகம்



                                                                                         
                                             

Monday, June 21, 2010

காதலியை கள்ளத்தனமாய் சந்தித்த சந்தோஷத்தில்...




வயது 26 ஐ தொட்டுவிட்டு அடுத்து நகர ஆரம்பித்துவிட்டது,
இன்னும் ஒவ்வொரு மழை தூறும் மாலை பொழுதையும்,
கைகளை நான் மட்டுமே இருக்க கட்டிக்கொண்டு ரசித்து கொண்டு செல்கிறேன்..
என் கரங்களை இன்னொரு கரம் பற்றிக்கொண்டு நடக்க விரும்பவில்லை,
மழையின் வாசத்தையும், தீண்டலையும், விலகளையும் நான் மட்டும் ரசிக்க வேண்டும் என்ற சுயநலமாய் இருக்கலாம்,



என் உணர்வுகளை புரிந்து கொள்ளாத கரமாய் இருந்துவிட்டால் என்ற அச்சமாய் இருக்கலாம்,
இலக்கு இல்லாத பயணத்திற்கு எதற்கு இன்னொரு கரம், இருக்க
கட்டிக்கொண்டு செல்வதே மேல் என்ற என்னமாய் இருக்கலாம்,
சரி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், என் உடல் தீண்ட முயற்சிக்கும் மழை துளிக்கு வழிவிட முயற்சிக்கிறேன்,
"மழையில் நனையாதே" என்று திட்ட அம்மா அருகே இல்லை, "நீ பைத்தியகாரனா மழையில் நனையற" என்று திட்ட நண்பன் அருகே இல்லை, ஓடி வந்து குடைபிடிக்க காதலி இல்லை,



நான் அர்த்தமற்றவனா என்ற ஆராய்ச்சிக்கான நேரம் அல்ல, அதிர்ஷ்டக்காரன் என்று மழை இதழ் முததமிடும் நேரம்,
மலை இடுக்குகளில்,சரிவான பாதைகளில் ஓடி, விழும் துளிகளை என் மீது வாங்கிகொள்ளும் முயற்சியில் தோற்கவில்லை நான்,
தேகம் தீண்ட வாடும் மழைதுளிக்கு தடைவிதிப்பதில்லை, உடைகளை களைகிறேன் என் நெற்றியில் விழுந்து,என் பாதத்தில் மரிக்க..
என் உடல் மறுக்கும் வரை மழைதுளியை என் தேகம் தீண்ட அனுமதிக்கிறேன்,
மறுத்த நொடியில் என் தேகம் சுருக்கி, பாறை இடுக்குகளில் பதுங்கி கொள்கிறேன்.
தீண்டலில் தாகம் அடங்கிய என் உடல், பார்வையில் காதல் கொள்கிறது, நடுக்கத்துடன் கண்ணிமைக்காமல் காதல் கொள்கிறேன், ரசிக்கிறேன் ஒவ்வொரு துளியையும்.





என் உடலை பிரிய மறுக்கும் ஈரத்தை இருக்கமாய் கட்டியணைத்து,என் சுவாசத்தின் வெப்பம் பாறை இடுக்குகளை பற்றி எரிய செய்கிறேன்,என் கண்கள் மரணிக்க முயற்சித்து, வெற்றியும் பெறுகின்றன. எனக்கும் மழைக்குமான காதல் மறித்து மௌனம் பரவத்தொடங்க, மழையும் நின்று, என்னிடம் தோற்றுப்போனதை ஒப்புக்கொள்கிறது,

காலை கண்விழித்ததும் அவசர அவசரமாய் வீடு வந்துசேர்கிறேன் , என் காதலியை கள்ளத்தனமாய் சந்தித்த சந்தோஷத்தில்...





                                                                                         
                                             

Friday, June 18, 2010

நானும் உங்களை மாதிரி தானுங்க ......



நானும் உங்களை மாதிரி தாங்க பத்து மாசம் சுமக்கபட்டேன்,
நல்லா தாங்க பிறந்தேன் , நல்லா தாங்க வளர்ந்தேன்,
எட்டாம் வகுப்பு படிக்கரவரைக்கும் எனக்கு "செல்வன்" அப்டிங்கற பெயர் தாங்க.

என்னமோ தெரியலைங்க பொண்ணுங்கள மாதிரி இருக்கணும்னு தோனுச்சு,முகத்துக்கு பூச்சு,கண்ணிற்கு மை,காதிற்கு தோடு இப்படி ஆசை வந்துச்சு,
நான் மாறிகிட்டே வருவது கூட படிக்கிற பசங்க கேலி பண்ணும்போது தாங்க புரிய ஆரம்பிச்சுது, என்ன பண்றதுன்னு தெரியல,

நான் அப்பா அம்மாகிட்ட அதிகம் பேசறது இல்ல சின்ன வயசுல இருந்தே,அதனால என் பிரச்சனைய அவுங்ககிட்ட சொல்லவும் முடியல.
ரொம்ப வலிச்சுது கூட படிக்கிற பசங்க கிண்டல் பண்ணும்போது , பல பெயர்களை வைச்சு என்னை அழைக்கிற போது , என்ன பண்றதுன்னு தெரியல, எங்க அப்பாவும், அம்மாவும் எவ்வளவு நாள் தான் கேட்கறவங்க கிட்ட எல்லாம் சொல்லி சமாளிப்பாங்க, அவுங்க கஷ்டப்படுரத பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சுங்க,அதான் ஒரு நாள் சென்னைக்கு யாருக்கும் தெரியாம பஸ் பிடிச்சு வந்துட்டேன் .

இங்க வந்து ஒரு கார்த்திக் உணவகம்,தி.நகர்ல வேலைக்கு சேர்ந்தேன்,கொஞ்ச நல்ல வேலை பார்த்தேன்,இங்கயும் அதே தொந்தரவு ஆரம்பிச்சுது,என்ன பண்றதுன்னு தெரியலங்க, என்னை மாதிரி பிறந்தவங்க எல்லோரும் உங்களால வினோதமா பார்க்க படுகிறோம்ங்க, கிண்டல் பண்ண படுகிறோம், இன்னும் சில பேரு வினோதமா பார்ப்பதற்கும் கொஞ்சம் மேல போயி படுக்க கூப்பிடுறாங்க,

ஆணாவும், பெண்ணாவும் பிறந்த உங்களுக்கு எங்கள மாதிரி பிறந்தவங்கலோட வலி தெரியலைங்க, உலகம் தெரியா குழந்தைங்க கூட எங்கள பார்த்து கிண்டல் பண்ற மாதிரி உங்களை போன்ற உயிர்களை கொண்ட எங்களை வேடிக்கை பார்க்க உதவும் பொருளாய் மாற்றி விட்டீர்கள்.

அண்ணா நகர்ல என்னை மாதிரி பிறந்த மனிதஉயிர்கள் இருக்கிறதா கேள்விபட்டு அங்கே போனேன்.ஒவ்வொருத்தர் கதைய கேட்குறப்ப மனசு வலிச்சுது, யாரும் எங்களுக்கு வேலை கொடுக்கறது இல்ல, வேலை கொடுக்கறவங்க எதுக்கு கொடுக்றாங்க அப்டின்னு உங்களுக்கு சொல்லி தான் புரியணும்னு அவசியம் இல்ல.


எங்களுக்கும் வயிறுன்னு ஒன்னு இருக்குதுங்களே என்ன பண்றது, சில பேரு உடம்பவிக்குறோம், சிலபேரு மனச விக்குறோம், இதோ 6.30 ரயில்ல உங்ககிட்ட பிச்சை கேட்கிறோம், ஆண் ,பெண் அப்டிங்கற தகுதிய தவிர எல்லாமே எங்ககிட்ட இருக்குங்க, ஆனா இந்த சமுதாயம் எங்களை பிச்சை எடுக்கவும், இச்சையை களித்துகொள்ளவும் உபயோகப்படுதுறாங்க....

தயவு செய்து குழந்தைங்க கிட்ட தப்பு தப்பா சொல்லி வைக்காதீங்க,.உயிர்களை மதிக்க கற்று கொடுங்க...
சரி இதை எல்லாம் கேட்குறீங்களே , நீங்க எங்களுக்காக என்ன பண்ண போறீங்க,

சரிங்க நான் வரேன், அடுத்த ரயில் வர நேரம் ஆகிடுச்சுங்க,


என் பெயர் இப்ப "செல்வி"ங்க ...உங்க பெயர் என்னங்க..


என் பெயர் "விஜய்" ங்க அக்கா....

                                                                                         
                                             

Thursday, June 10, 2010

வாருங்கள், வதம் செய்தே தீர வேண்டும் --- நிறைவுப்பாகம்




நன்றிங்க நிறைவுப்பாகத்தை படிக்க வந்ததிற்கு...


முதல் பாகம் இணைப்பு இங்கே : -
முதல் பாகம்


மூன்றாம் காரணம்-- ஊடகங்கள், செய்தித்தாள்கள், திரைப்படைதுறைகள் - இந்த ஊடகங்கள் மக்களுக்கு இப்பொழுது என்ன ஊட்டிக்கொண்டு இருக்கிறது?,

தொடர்கள் (கள்ளக்காதல், ஒருத்தன் மனைவிமீது இன்னொருவன் ஆசைப்படுவது, போட்டி போட்டு ஒரு இளைஞனை பல பெண்கள் காதலிப்பது, ஜூம் மந்திர காலி மாதிரி வித்தை காட்டுவது, என்னும் எத்தனையோ அசிங்கங்களை விளம்பரத்தோடு காட்டுவது),

செய்திகள் (சாமியார்கள் செய்த தவற்றை வினாடிக்கு ஒருமுறை விளம்பரபடுத்தி, நமது வீட்டிற்குல்லையே வந்து சிறுகுழந்தைகளின் மனதில் விஷமத்தை வளர்ப்பது).

நடன போட்டிகள் (சிறு பிஞ்சு குழந்தைகளுக்கு திரைப்படத்துறை மட்டும் தான் வாழ்க்கை என்று பிஞ்சு நெஞ்சில் விஷம் ஊட்டுவது,தொடர் நயாகிகள் கொஞ்சமும் வெட்கப்படாமல் மேடைகளில் தன் அங்கங்களை காட்டியும்,அழுதும், அதற்கும் சேர்த்து மறைமுகமாக பணத்தை வாரிக்கொண்டு செல்வது).

விருது வழங்கும் விழாக்கள் (கதையே இல்லாத படத்திற்கு ,கதை இருக்கிறது , அங்கே சிரிக்க வைத்து இருக்கிறோம்,இங்கே அழ வைத்து இருக்கிறோம், லண்டனில் பாடல்களை ஒளிப்பதிவு செய்து இருக்கிறோம்,மயிர்கூச்செறியும் சண்டைகளை படமாக்கி இருக்கிறோம், முக்கியமாக இப்பட நாயகனையும், நாயகியையும் சிரமப்பட்டு நடிக்க வைத்து இருக்கிறோம், கடைசியாக படத்தை பார்க்கவைத்து உங்களையும் முட்டாள் ஆக்க இருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்லி , தனக்கு தானே விருதும் வழங்கிக்கொள்கிறார்கள் , இவற்றை அணைத்தையும் நொடிக்கொரு முறை விளம்பரம் செய்து பணமீட்டுகிறார்கள் இந்த பாழாய் போன ஊடங்களை சேர்ந்தவர்கள்.)

திரைப்படைதுறைகள்-- 2 ரிப்பன்களை மட்டும் உடைகளாய் கட்டிக்கொண்டு 5 பாடல்களுக்கு ஆடுவது, ஒரே அடியில் உயர பறக்க வைப்பது, படிப்பதை விட்டுவிட்டு எப்படி தறுதலையாய் சுற்றுவது, காதலிப்பது, இப்படி அர்த்தமற்ற படங்களை இயக்கிவிட்டு நானும் பெரிய இயக்குனர் என்று விழா எடுத்து கொள்வது, இப்படி அல்லவா செல்கிறது இந்திய திரைப்படத்துறை, சில நல்ல கருத்துகளை சொல்கின்ற படங்கள் ஒன்றிரண்டு வரத்தான் செய்கின்றன. திரைப்படத்தின் மூலம் ஒரு ஒளிமயமான இந்தியாவை உருவாக்க கூடிய ஒரு துறை இப்படியா மக்களை மடச் சாம்பிரானிகலாக்குவது,

செய்தித்தாள்கள் -- இவைகள் முதல் பக்கத்தில் சிந்தும் செய்தி என்னவாக இருக்கிறது என்றால்?, எப்போதோ வெளியிடப்படும் படத்தின் விளம்பரம், அல்லது மொக்கையாக ஓடிக்கொண்டு இருக்கும் படத்தின் விளம்பரம், அரைகுறை ஆடையுடன் நிற்கும் உள்ளாடை விளம்பரங்கள், தலைவனை புகழ்ந்து வண்ணப்படமும், வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம் என்கிற பழைய புளிச்சு போன வசனம்.

ஒரு ஊடகம் சமுதாய முன்னற்றதிற்காக இல்லாமல், மக்களை மந்திகளாக்கி,நாளை என்ன ஆகும் என்று புதிது புதிதான கேவலமான தொடர்களை காண மக்களை அவரவர்கள் வீட்டிலே கட்டிபோடும் நிலையை செய்து கொண்டு இருக்கிறது. எப்படி தெரியும் எங்கு எங்கோ நடக்கும் பட்டினி சாவுகளும், பசி கொடுமைகளும், ஏழை ஒருவனுக்கு இழைக்கப்படும் அநீதி,பேருந்தில் தொங்கிக்கொண்டு உயிரை, பேருந்தின் படிக்கட்டில் வைத்து பயணம் செய்யும் அடிப்படை இந்திய குடிமகனின் வலி. இலங்கையில் ஒரு இனமே அழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது , அவைகளை மக்களுக்கு எடுத்து சொல்லி உண்மை நிலையை அறியவைத்து, மக்களை ஒருமைப்படுத்தி அதற்கு ஒரு தீர்வு காணச்செய்யாத ஒரு ஊடகம், ஒரு மிகப்பெரிய தலைவனக்கு பாராட்டு விழா, அதில் குத்தாட்டம் போடும் மானம்கெட்ட பிச்சைகாரிகள், அதையும் அமர்ந்து உற்று நோக்கும் தமிழனத்தலைவர்கள், இப்படி மனிதனை சிந்திக்க விடாமல் மந்திகலாகவே வைத்து தனது காரியங்களை சாதித்து கொள்கிறது.

ஒரு திறமையான, உண்மையான ஊடகம் என்ன செய்ய வேண்டும்? என்பதை படிப்பறிவு இல்லாதவனை கேட்டால் கூட சொல்வான். அப்படி இருக்க ஊடகம் நடத்துவோருக்கு தெரியவில்லை என்றால் அவர்கள் ஊடகம் நடத்த அருகதை அற்றவர்கள் என்று நேரடியாகவே திட்டலாம்.சரி , ஊடகம் என்ன செய்யவேண்டும்?.எங்கே அநீதி இலைக்கபடுகிறதோ அங்கே சென்று உண்மை நிலையை ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கை எடுக்க அரசியல்வாதிகளை உந்த வேண்டும்.

மக்கள், இப்படிப்பட்ட உறவுகளை தவறாக காட்டும் தொடர்களையும் , இப்படிப்பட்ட காமவெறிகள் நிறைந்த செய்திகளையும், ஆடைகள் குறைத்து ஆடப்படும் நடனப்போட்டிகளையும், தகுதியே இல்லாத தரம்கெட்ட படங்களின் விருதுகள் வழங்கும் விழாக்களையும் தான் காண விரும்புகிறார்கள் அதனால் தான் இப்படி ஒளிபரப்புகிறோம் என்று தயவு செய்து என் தேசமக்களை நோக்கி உங்கள் அசுத்த கரங்களை நீட்டி விடாதீர்கள், என் தேசமக்கள் பிறக்கும்போதே தொடர்களையும்,செய்திகளையும்,விருதுகள் வழங்கும் விழாக்களையும் பார்த்து வளரவில்லை, தவறான ஊடகங்கள் தான் என்தேச மக்களை தன் பாதைக்குள் வரவழைத்து , அடிமையாக்கிவிட்டன. அதனால் அணைத்து ஊடகங்களும் ஒன்றுபோல் மாறவேண்டும், நாட்டின் உண்மை நிலையை துல்லியமாக படம் பிடித்து காட்ட வேண்டும் .

ஆடைகள் இருந்தும் குறைவான ஆடைகளை உடுத்தி நடனமாடும் நமீதா, இன்னும் எத்தனையோ மீதா-க்களை படம் பிடித்து காட்டும் நேரங்களில் உடுத்த ஆடை இல்லாமல் மானம் காப்பாற்ற தவிக்கும் என் சகோதரிகளின் , சகோதர்களின் வலிகளை ஊடகங்களின் வழியாக நாட்டு மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உணர்த்த வேண்டும். தவறு செய்யும் அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான இன்னொரு பக்கத்தை ரகசியமாய் பதிவு செய்து அம்பலப்படுத்த வேண்டும். செய்தித்தாள்களில் சாதித்தவர்களின் முகவரியை முன்னுரையாக கொடுத்து நம் தேசத்தின் பெயரை,உலக ஏட்டில் முதன்மை பெற உறுதுணையாக இருங்கள், சாதித்த தூய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுங்கள், தேவை இல்லாத செய்திகளை கடைசி பக்கத்தில் போடுங்கள் .



நான்காம் காரணம்-- பல பொறுப்பற்ற இளைஞர்கள் (என்னையும் சேர்த்துதான்).

ஐ.டி துறை இளைஞர்கள்- அதாவது பணத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாத அளவுக்கு பணம் அதிகமீட்டும் திறமை மிகுந்தவர்கள், தன் இளமையை அந்நிய நாட்டிற்கு விற்றவன்.சரி இவர்கள் செய்யும் தவறு என்ன?.நிறையா தவறுகள் இருக்கின்றன, அதில் சில- மாதங்களில் பல 1000 ரூபாய் ஈட்டும் இவன், அதே பல 1000 ரூபாய் ஈட்டும் உடன் பணிபுரிவோரிடம் தொட்டதுக்கெல்லாம் பல 1000 ரூபாய் செலவழித்து விருந்து உபசரிப்புகள் நடத்துகிறார்கள், வெளி உலகத்தில் நடக்கும் அவலங்கள் தெரியாமல் இருக்க தோழிகளிடம் பேசுவதிலும், ஒலி நாடக்களில் பாடல் கேட்பதிலும் தங்களது நேரங்களை சுருக்கி கொள்கிறார்கள்.(ஒரு சில பொறுப்புள்ள ஐ.டி துறை இளைஞர்களும் இருக்கிறார்கள், நான் அவர்களை பற்றி எழுதவில்லை இங்கே)

அறிவியல் துறைசார்ந்த இளைஞர்கள்-- தனது அறிவின் திறமையால் நிலவிலும், கண்ணுக்கு தெரியா கிரகங்கள் கண்டறிவதிலும், புதிய புதிய மருந்துகள் தயாரிப்பதிலும் கில்லாடிகளான இளைஞர்கள் இவர்கள் தான். சரி இவர்கள் செய்யும் தவறு என்ன?. இந்திய மண்ணில் படித்து அறிவை பெருக்கிக்கொண்டு, அயல் மண்ணில் வேலை செய்யும் கொஞ்சம் சுயநலம் கொண்ட இளைஞர்கள்..(ஒரு சில பொறுப்புள்ள அறிவியல் துறைசார்ந்த இளைஞர்களும் இருக்கிறார்கள், நான் அவர்களை பற்றி எழுதவில்லை இங்கே)

படிப்பறிவில்லா இளைஞர்கள்-- கல்லையும் உடைத்து தூளாக்கும் பலம் கொண்டவர்கள்,மழையிலும், பணியிலும்,வெய்யலிலும் ஓய்வின்றி உழைப்பவர்கள். சரி இவர்கள் செய்யும் தவறு என்ன?. குடித்துவிட்டு மானம்கெட்டு தெருக்களில் கிடக்கிறார்கள்,சமுதாய சிந்தனை இல்லாமல் கெட்டு குட்டிசுவராய் போகிறார்கள், இவர்களால் குடும்பத்தில் சண்டை தான் மிச்சமாய் இருக்கிறது. ..(ஒரு சில பொறுப்புள்ள படிப்பறிவில்லா இளைஞர்களும் இருக்கிறார்கள், நான் அவர்களை பற்றி எழுதவில்லை இங்கே)

ஹீரோக்களின் ரசிகன்கள்-- தனது ஹீரோக்களை பற்றி தவறாக பேசும்பொழுது ஒருவனாய் நின்று தனது ஹீரோ சிறந்தவன் என்று சமாளிக்கும் திறமை படைத்தவன், தனது ஹீரோவின் உயர்ந்த பட விளம்பரங்களை தனது உயிரை துச்சமாய் நினைத்து இரும்பு கம்பிகளில் தொங்கி கட்டி முடிப்பவன்.முண்டியடித்து முதல் நாளே தனது ஹீரோவின் மொக்கை படங்களையும் பார்ப்பவன்.சரி இவர்கள் செய்யும் தவறு என்ன?. இவர்களைப்பற்றி மேலே பெருமையாய் சொன்னவைகள் தான் இவர்கள் செய்யும் தவறுகள், தனது வீட்டிற்கு மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் நிற்காதவன் ,தன்னை யாரென்றே தெரியாத ஒரு ஹீரோவுக்காக உயிரை கொடுக்க துணியும் முட்டாள் தனம் தான் இவர்கள் செய்யும் தவறு . ..(ஒரு சில பொறுப்புள்ள ஹீரோக்களின் ரசிகன்கள் இருக்கிறார்கள், நான் அவர்களை பற்றி எழுதவில்லை இங்கே)

ரோமியோக்கள்-- ஒருமுறை தன்னை பார்த்து கண் இமைத்தவளுக்காக, பல இரவுகள் கண்விழித்து கனவில் காத்திருப்பவன், பேருந்து படிக்கட்டுகளில் தன் உயிரை வைத்துவிட்டு தலைகீழ் சாகசம் செய்து தன் காதலியை அசத்துபவன்.சரி இவர்கள் செய்யும் தவறு என்ன?.நினைத்தவள் கிடைக்கவில்லை என்று குடித்துவிட்டு, தாடியோடும்,தண்ணியோடும் அலைவதை பெருமையாய் கருதிக்கொண்டு இருப்பது, சமூக சிந்தனை இல்லாமல் சுயநலத்தில் தன்னை மாய்த்துகொள்வது.

சரி இவர்கள் என்ன செய்ய வேண்டும்?எப்படி செய்ய வேண்டும்?.இதற்க்கான தீர்வு என்ன?

ஐ.டி துறை இளைஞர்கள்: இவர்கள் வெட்டியாய் விருந்து உபசரிப்பு மற்றும் பலவகைகளில் விரயம் செய்யும் பணத்தை ஒரு நாள் உணவிற்கு தடுமாறும் ஏழைகளுக்கு கொடுத்து உதவ வேண்டும்.தனது வலைதளங்களில் கஷ்டப்படும் ஏழைகளை பற்றி மக்களுக்கு தெரியபடுத்தும் பொறுப்புள்ள செயல்களை செய்ய வேண்டும்.

அறிவியல் துறைசார்ந்த இளைஞர்கள்: இவர்கள் தாய் நாட்டிற்காக தன் சுயநலத்தை தியாகம் செய்து இந்தியாவில் அறிவியலை மேன்மை அடையசெய்ய வேண்டும்.

படிப்பறிவில்லா இளைஞர்கள்: இவர்கள் குடும்பத்தின் நிலைமை அறிந்து குடும்பத்தின் தரத்தை உயர்த்த வேண்டும்.அவ்வப்பொழுது தங்களை சமூக பணிகளிலும் ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்.

ஹீரோக்களின் ரசிகன்கள்: தன்னை யார் என்றே தெரியாத ஒருவனுக்காக உயிரை பணயம் வைப்பதைவிட்டுவிட்டு , தன்னை சார்ந்த ஊர் மக்களின் குறைகளை கேட்டு அதற்கான நல்வழிகளை செம்மைப்படுத்தவேண்டும்.

ரோமியோக்கள்: காதலை இழந்தவர்களும் சரி,காதல் செய்பவர்களும் சரி , தன் காதலோடு சேர்த்து சமூக அக்கறையும் எடுத்துக்கொண்டால் ,உங்கள் காதல் வளர்வது போல் நம் இந்தியாவும் வளரும் அல்லவா.இதை இவர்கள் செய்ய வேண்டும்


கடைசியாக அணைவரும் நம் பாரதியின் பாடலை நினைவில் வைத்துகொண்டு வாழ்ந்தால் போதும் வலிமையான இந்திய தேசத்தை படைக்கலாம்...

தேடி சோறு நிதம் தின்று பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி மானம்வாடி
துன்பம் மிக உலான்ற்று பிறர்வாழ
பல செயல்கள் செய்து நரைகூடி
கிழப் பருவம் எய்தி -கொடும்கூற்றுக்கு
இரையென மாயும்பல வேடிக்கை
மனிதரை போல நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?


வாருங்கள் புதியதோர் இந்தியாவை படைப்போம்...நீங்கள் இல்லாமல் நம் இந்தியதேசம் இல்லை..

                                                                                         
                                             

Wednesday, June 9, 2010

வாருங்கள், வதம் செய்தே தீர வேண்டும்

நிறையா விசயம்(விஷம்) இருக்கு தோழர்களே, நம்ம பகிர்ந்துகொள்ள

அதில் கவனிப்பாரற்று கிடக்கும் சிலவற்றை பற்றி விவாதம் நடத்த, நல்லதொரு முயற்சியை ,நல்லதொரு முடிவை காண உங்களை அழைக்கிறேன்..

இதைப்பற்றி நிறையா பேர் பேசிட்டாங்க , இருந்தாலும் என்னுடைய கருத்தை முன்வைக்க விரும்புகிறேன் ..

நமது தாய் நாடு ஏன் இன்னமும் மற்ற நாடுகளுக்கு சவால் விடும் நிலையில் கொஞ்சம் பின் தங்கி உள்ளது.எனக்கு நிஜமாய் அரசியல் தெரியாது, ஒரு அடிப்படை கல்வியரிவாளன் நினைப்பதை இங்கே எழுதுகிறேன்




முதல் காரணம் -- நமது தாய் நாட்டின் மக்கள்தொகை 1,027,015,247. எந்த ஒரு திட்டமும் கடைசிநிலை மனிதனை சென்றடைவது மிகக்கடினமான ஒன்று தான். ஒரு குழந்தையை நாம் நினைத்தார் போல் வளர்ப்பதே, கட்டுக்குள் கொண்டு வருவதே மிகச்சிறந்த செயலாக கருதுகிறோம், அந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இவ்வளவு மனிதனையும் ஒருமித்த கருத்தோடும், நல்எண்ணத்தோடும் வளர்ப்பதும், மாற்றுவதும் மிகக்கடினமான ஒன்று தான். ஒரு நாள் உணவிற்கு தடுமாறும் பிச்சைகாரர்கள் கூட 4 அல்லது 5 குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்கள், அதை நான் தவறு சொல்ல முடியாது,அவர்களுக்கு கிடைக்கும் ஒரே சந்தோசம் அவை தான் என்று நம்புகிறேன்.படித்த, பணக்கார தம்பதிகள் கூட கருத்தடை சாதனம் வாங்கவே கூச்சபடுகிறார்கள்,யோசிக்கிறார்கள் இப்படி இருக்க எப்படி பிச்சை எடுக்கும் அவர்கள் வாங்கி உபயோகப்படுத்துவார்கள் என்பது நிச்சயம் கேள்விக்குறியான ஒன்று தான்.

அதுமட்டும் அல்லாது சில படித்த மனிதர்களே தம் மதத்தின் எண்ணிக்கையை பெருக்க,அதிக குழந்தைகளை பெற்றுகொள்கிறார்கள் என்பதும் வெட்கப்பட வேண்டிய ஒரு பொறுப்பற்ற செயல் தான் .

சரி இதன் தீர்வு தான் என்ன?,நான் முன்பே கூறியது போல், ஒவ்வொரு அடிப்படை இந்தியனும் மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்துஇருக்க உதவி செய்தே ஆகவேண்டும்.



இரண்டாம் காரணம்-- அரசியல்வாதிகள் எனும் பணம் தின்னும் மனிதப்பேய்கள், இவர்களை குற்றம் கூறுவதற்கு முன் நிச்சயம் நாம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம், யார் இந்த அரசியல்வாதிகள்? , எங்கு இருந்து முளைத்தார்கள்?,எப்படி இப்படி மாறினார்கள்? இன்னும் எந்த வகையில் இவர்களை கேள்விகள் கேட்டாலும் ,அதற்கான பதில் " நீங்கள் (நாம்) " தான் என்றுவரும்.ஒரு 100 ரூபாய் நோட்டு, கேட்க ஆளின்று கிடந்தாலே, உடனே அதை சட்டை பையில் எடுத்து மறைத்து வைத்துகொள்கிறோம், இப்படி இருக்க பல்லாயிரம் கோடி பணம், கேட்க ஆளின்று பணம் தின்னும் பேய்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இவர்கள் தின்று போடும் மிச்சம் தான் அடிப்படை மனிதனுக்கு, இவைகள் எப்படி அடிப்படை மனிதனை சென்றடையும்?. நிச்சயம் முடியாது.நாம் கண்கூடாக பார்க்கிறோம் குடும்பம் மட்டுமே அரசியலாக இருப்பதையும், தோழிகளின் விளையாட்டிற்கு எனது தமிழகம் கால்பந்தாக மாறி சின்னாபின்னம் ஆக்கபடுவதையும். தனக்கென ஒரு நிலையான சொந்தமான கொள்கைகூட இல்லாத சில மூன்றாம் நிலை ஜாதிகட்சிகள்,வருஷம் ஒரு கட்சிக்கு தாவும் குரங்கு கட்சிகள்.
இவற்றை படிக்கும்போது ஒரு உண்மை நிலை புரியாமல் தனது கட்சியை தவறாக எழுதுகிறான் என்று கோபப்படும் அப்பாவி தொண்டர்கள் இருக்கும் வரை இந்த பணம்தின்னும் பேய்கள் நிச்சயம் கொண்டாடிக்கொண்டு தான் இருக்கும். வாய் திறக்கும் எம்.எல்.ஏ களுக்கும், எம்.பி களுக்கும் பணங்கள் கட்டு கட்டாக திணிக்கபடுகின்றன, பிறகு எப்படி இவர்கள் மக்களிடம் வாய் திறப்பார்கள்?

சரி, நோட்டுகளை வாங்கிக்கொண்டு வாக்குகளை பதிவு செய்யும் மக்களை தவறு என்று சொல்வதா?.நிச்சயம் கூடாது ஒரே ஒரு ஆடையை தாயும், மகளும் மாற்றி உடுத்திக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வரும் அவலம் உள்ள ஒரு அடிப்படை இந்திய குடிமகன், குடிமகள் நோட்டை வாங்கிக்கொண்டு தான் வாக்கை பதிவு செய்வாள்,செய்வான்.பணம் போதுமான அளவுக்கு இருக்கும் பணக்காரர்கள் கூட நோட்டுகள் வாங்கிக்கொண்டு வாக்குபதிவு செய்கிறார்கள் என்றால் நிச்சயம் அவர்கள் நினைத்து இருக்ககூடும் நாம் உழைத்தால் தான் பணம், உணவு, உடை அனைத்தும் கிடைக்கப்பெறும் ,எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நமக்கொன்றும் நடக்கபோவதில்லை என்று. நியாயம் தானே,ஆளும் கட்சியும்,எதிர் கட்சியும் தின்று எறியும் மீதி இந்த அடிப்படை மக்களை சென்றடையவா போகிறது?..

சரி இதற்க்கு என்ன தான் தீர்வு?..காந்தியடிகள் வழிகளில் செல்ல அல்லது சொல்ல வேண்டுமானால் , நோட்டுகள் வாங்கிக்கொண்டு வாக்களிக்கும் அடிப்படை இந்தியகுடிமகன் , எம்.எல்.ஏ, எம்.பி ,இவர்களை திருந்த சொல்லிவிட்டு கையை கட்டிக்கொண்டு, வாயை பொத்திக்கொண்டு அமைதியாய் ஓரமாய் நிற்க வேண்டும்.

தலைவர் சுபாஷ் சந்திர போஸ் வழிகளில் செல்ல அல்லது சொல்ல வேண்டுமானால் தப்பு செய்கிறவனை தகர்த்து எறி,எங்கு இருந்தோ வந்த வெள்ளைகாரர்களை பின்னங்கால் பிடறி அடிக்க ஓட செய்த நம்மால், ஏன்? ,நம்முள் பிறந்து, நம்மை ஏமாற்றி, நம்மை அழிக்கும், அரசியல் எனும் போர்வையை தவறாக போர்த்திக்கொண்டு பல திருட்டுகளையும், கொலைகளையும், துரோகங்களையும் செய்யும் இந்த மனிதர்களை ,இந்தியாவின் முதன்மை துரோகிகளாய் கணக்கெடுத்து, தடயமே இல்லாமல் அழித்துவிட முடியாது?.நிச்சயம் துளி கூட தடயம் இல்லாமல் அழிக்க முடியும் .

எப்படி அழிப்பது?. இந்திய அடிப்படை குடிமகன்களின் படிப்பறிவை உயர்த்தி,நாடு எங்கே செல்கிறது என்பதை, அ, ஆ ,எ,ஏ சொல்லிகொடுக்கும் போதே இதையும் குழந்தைக்கு சேர்த்து ஊட்டுங்கள்,இது ஒவ்வொரு இந்திய குடிமகளின் பணி., அடுத்ததாக இந்திய குடிமகனின் பணி- நீங்கள் சட்டங்களை பாதுகாக்கும் பணிகளையும், தவறு செய்பவர்களை மிச்சமின்றி அழிக்கும் உரிமை உள்ள உயர்பதிவிகளையும் தேர்ந்தெடுங்கள்.மீதம் உள்ள இளமை சொட்டும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பணம் தின்னும் அரசியல்வாதிகளின் இன்னொரு பக்கத்தை இவ்வுலகிற்கு காட்ட போராடுவோம், தேவை என்றால் அரசியல்வாதிகள் எனும் பணம் தின்னும் மனிதப்பேய் களைகளை நீக்கவும் உயிர் கொடுப்போம்.முதலில் என் கரத்தை நீட்டுகிறேன் இதற்கு தயார் என்று இப்பொழுதே, உங்களில் யார் அந்த சுபாஷ் சந்திர போஸ் என்னை போன்ற இரத்தம் கொதிக்கும் இளைஞர்களை வழிநடத்த தயாராக இருக்குறீர்கள்?..தேவை இன்னொரு சுபாஷ் சந்திர போஸ்...


நிறைவுப்பாகம் இணைப்பு இங்கே : -
நிறைவுப்பாகம்



                                                                                         
                                             

Thursday, June 3, 2010

வாழ்க்கை(வலி)ன்னா என்ன? -- பாகம் 3




நன்றிங்க மூன்றாம் பாகத்தை படிக்க வந்ததிற்கு...


முதல் பாகம் இணைப்பு இங்கே : -
முதல் பாகம்

இரண்டாம் பாகம் இணைப்பு இங்கே : -
இரண்டாம் பாகம்

8 பேரும் தங்களுக்கான இருக்கையில் அமர்ந்தோம்.விவாதிப்பதற்கான தலைப்பு கொடுக்கப்பட்டது,எனக்கு தலைப்பை புரிவதற்கே 10 நிமிடம் தேவைப்பட்டது.ஒவ்வொருவரும் கருத்துக்களை வீசினார்கள் , மனசு - ஏதாவது பேசு, பேசினாலே நீ இந்த சுற்றில் வெற்றி அடைந்துவிடலாம் என்கிறது, இதுவரை ஆங்கிலமே அதிகம் பேசியதில்லை,சண்டை போட்டு விவாதித்து கொண்டு இருக்கும் இவர்களுக்கிடையில் நான் எப்படி பேசுவது?, இருந்தும் தோற்று விடக்கூடாது என்று பேசினேன்.

அதற்குள் நன்றி கலந்து கொண்டதற்கு, முடிவை அறிவிக்கிறோம் என்று சொன்னவுடன்,
ஏழை சிறுமி பார்ப்பளே ஏக்கத்துடன் கடைத்தெருவு இனிப்பை ,அவ்வாறு என் பெயரும் வந்துவிடாத என்று ஏக்கத்துடன் நின்றேன்.வாசிக்க ஆரம்பித்தவுடனே, முடித்துவிட்டார்கள்..நிஜமாய் கண்கலங்கிவிட்டது,கிடைத்த வாய்ப்பை விட்டுவிட்டோமே என்று, இருந்தாலும் என் மனசு பெரியா ஆளுங்க, ஆமாங்க இதுவரைக்கும் நீ வந்ததே வெற்றி தான் என சமாதானம் கூறியது.என் அறை செல்லும் வரை எனது மூளைக்கும் , மனதிற்கும் பெரிய போராட்டமே நடந்துச்சுங்க.

தோல்வி உனக்கு புதுசு இல்ல என என்னையே தேற்றிக்கொண்டது என் மனசு..அதே கடை , அதே நேரம், அதே "அண்ணா ஒரு பாதம் பால்"...மனசு வலி நின்றுடுசுங்க.சில மாதங்கள், ஏன்? பல மாதங்களே ஓடின...இதற்கிடையில் பல தோல்விகள், ஒன்றும் செய்ய முடியவில்லை என்னை- தோல்வியால்.

திடிர்னு ஒரு நாள் தோணுச்சுங்க, காலை 9.30 க்கு பேருந்தை பிடிச்சு தி.நகர் என ஒரு பயணச்சீட்டை கேட்டு , தி.நகர்ல இறங்கினேன்.எனது சுயவிவிரம் அடங்கிய தாளை நகல் எடுக்கும் கடையில் கொடுத்து 30 நகல் போடச் சொன்னேன்.

வாங்கிகிட்டு , காலைல 7 மணிக்கு வீடு வீட்டுக்கு பால் போடுகிற பையன் மாதிரி, மென்பொருள் நிறுவனம் மாதிரி தெரிகிற எல்லா நிறுவனத்திற்கும் கொடுத்தேன், சில நிறுவன காவலாளிகள் வாங்கிகிட்டாங்க, சிலர் சொன்னா புரியாதா அப்டின்னு திட்டி அனுப்பினாங்க , சில பேர் கண்முன்னாடியே குப்பைய போடுற மாதிறி உள்ள தூக்கி போட்டாங்க,வலிக்கத்தான் செய்தது.என்ன பண்றதுங்க வாழ வந்தாச்சு, இனி வாழ்ந்து தான் ஆகணும், திரும்பிப்போனா,"அப்பவே சொன்னேன் இருக்குற காசவைச்சு கடை வைச்சு புளைச்சுக்க ,படிக்காத" அப்டின்னு சொன்ன, சொந்தக்காரன் எல்லாம் காரி துப்புவான்ல அப்டின்னு நினைக்கும் போது வலி மறைந்திடும்ங்க. தி.நகர் முழுவதும் சுற்றி எப்படியும் ஒரு 25 நகல விற்றுவிடுவேங்க.

பசிக்க ஆரம்பிச்சுடும் , தள்ளுவண்டி கடைய தேடி தேடி அதிகம் பசிக்க ஆரம்பிசுடும், எப்படியாவது கண்டுபிடிச்சு சாப்பிடும்பொழுது ருசிக்கும்ங்க. நிறையாத பாதி வயித்துக்கு தண்ணீர் தாங்க உணவு.தண்ணீருக்கு அங்க காசு இல்ல, அறை போனதும் படிப்பு, மாலை ஆனதும் அதே கடை,அதே "அண்ணா ஒரு பாதம் பால்"..வாழ்க்கை இனிக்கிறதே அப்பதாங்க..இதற்கிடையில வீட்ல இருந்து தினமும் இரண்டு அழைப்பு அப்பா ,அம்மாகிட்டு இருந்து, நல்லா சாப்பிடு அப்டின்னு , உதட்டலவுல நல்லா சாப்பிடுறேன் அப்டின்னு பொய் சொல்ல வேண்டி இருக்கும் .


இந்த "சுயவிவரம் அடங்கிய நகல்" விற்பனை தொழில் தி,நகரோட நிற்கவில்லை, தினமும் தொடர்ந்தது நுங்கம்பாக்கம் , கோடம்பாக்கம்,சைதாபேட்டை,வேளச்சேரி,
அண்ணாசாலை, திருவான்மியூர், ஆனா பாருங்க இந்த டைடல் பார்க்குக்குள்ள மட்டும் கடைசி வரைக்கும் போக முடியலங்க, பார்த்தாவே துரத்திடுவான், சரி நம்ம கஷ்டம் அவனுக்கு எப்படி தெரியும். இதுல முக்கியமான விசயம் என்னன்னா ஒரு நேர்முகத்தேர்வு அழைப்பு கூட வரல அப்படிங்கறதுதாங்க.ஆனா ஒண்ணு மட்டும் சரியா வந்துச்சுங்க,சென்னைல திருவல்லிகேனிக்கு வர எல்லோருக்கும் கிடைக்கிற, இங்கே தங்க தகுதியானவன் அப்டிங்கற பச்சை அட்டை , அட இன்னும் புரியலைங்களா? அது தாங்க "டைபாய்டு" காய்ச்சல்.

நானும் ஒரு ரூபாய் மாத்திரை எல்லாம் வாங்கி போட்டு பாத்துட்டேங்க, மாலை நேரம் வர வர அதிகமாகிகிட்டே போனதா பார்த்தா எதோ பெரிய காய்ச்சல்னு தெரியும் , இருந்தாலும் சரி ஆகிடாதா அப்டின்னு ஒரு ஆசை தான். தி.நகர்ல ஒரு நேர்முகத்தேர்வு இருந்துச்சுங்க , காலைல காய்ச்சல் அவ்வளவா இருக்காது அதனால் கிளம்பி போய்ட்டேன்.மதியம் 3 மணி வரைக்கும் நிற்க வைச்சுட்டு கடைசியில், 20,000 கட்டனும், நாங்க பயிற்சி தருவோம், அப்புறம் வேலை வாங்கி தருவோம் அப்டின்னு சொல்வாங்க , கண்ணுல தண்ணி வராதுங்க, ஜெய்த்துவிடலாம் இன்னைக்காவது அப்டின்னு உடல்வலியும் தாங்கிக்கிட்டு வந்த மனசுதாங்க வலிக்கும்.

குளிர்காய்ச்சல் அதிகமாகிடுச்சு, கையில் காசும் குறைவா இருக்கிறதால பெரிய தனியார் மருத்துவமணைக்கு போக முடியல, ஒரே வழி தான் , அது நான் என் சொந்தமண்ணை மிதிக்குறது தான் , நண்பர்களிடம் ஒரு தொகைய கடனா வாங்கிகிட்டு, சென்னை புறநகர் பேருந்து நிலையத்தில, சேலம் பேருந்தில் உட்கார்ந்து அழுத அழுகை இன்னும் நான் ஒவ்வொருமுறையும் செல்லும்பொழுது நினைவில் இருக்கும் .

ஜெய்க்க வந்த நான் தோல்வியோட என் சொந்தமண்ணை மிதிக்க வேண்டி வந்தத நினைச்சப்ப தான் ரொம்ப வலிச்சுதுங்க.60 பேரு தூங்கிகிட்டு போற பேருந்துல ஒருத்தன் மட்டும் உறக்கத்தையும்,வலியையும், தோல்வியையும் ,எதிர்பார்ப்பையும், சுமந்துகிட்டு கிளம்பினான்...

நான்காம் பாகம் இணைப்பு இங்கே : -
நான்காம் பாகம்


                                                                                         
                                             

Wednesday, June 2, 2010

ஏழைச்சிறுவனான நானும்,எனது ஹட்ச் டாக் (hutch dog) கனவும்.



இரவு- கண்விழிக்கும் முன்பே கோணிப்பையை எடுத்துக்கொண்டு, நீங்கள் போதையிலும், யார்மேலையோ இருக்கும்கோபத்திலும்,பணம் அதிகம் இருக்கிறது என்ற பகட்டிலும் வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட உணவிலும், பொருளிலும், என் பசியை ருசிக்க செய்யும் ஆதாயம் தேடுபவன் நான்.

காலை- கண்விழிக்கும் பொழுது பல தெருக்களை கடந்து இருப்பேன்,சிறுவர்கள் நிறைந்த அந்ததெருக்களை கடக்கும் பொழுதுதான் நானும் சிறுவன் என்பது புரியும் எனக்கு, அங்கே அந்த சிறுவர்கள் ஹட்ச் டாக் உடன் நடந்து செல்வார்கள், காலைச்சுற்றிக்கொண்டு ஓடும் அழகை காண வேண்டும் என்பதற்காக தினந்தோறும் சரியாக அந்த தெரிவிற்கு சென்றுவிடுவேன்.

தெருக்களின் விளம்பரபலகைகளிலும், உயர்ந்த கடைகளின் தொலைகாட்சிகளில் காணும்போதும் ஆசை அதிகமாகியது, என்னோடு குப்பைப்பொறுக்கும் ரவி சொன்னான் அதன் விலை நாம் வருடம் முழுவதும் குப்பைப்ப்பொறிக்கினால் கூட அதனை அடைய முடியாது என்று,

என் எலும்பு, சதைகளின் மொத்த எடைகளை விட ,அதிகம் கணக்கும் குப்பைகளை சுமந்த பொழுது கூட இந்த வலி இல்லை எனக்கு , அவன் அடைய முடியாது என்று சொன்ன பொழுது இருந்த வலியை இன்னும் எத்தனை நாள் என் கோணிப்பையோடு சேர்த்து சுமப்பேன் என்று தெரியவில்லை அந்த நேரத்தில் .

அன்று ரவி வேகமாய் ஓடி வந்து என்னை இழுத்துச்சென்று புதரைக்காட்டினான்,7அழகான நாய்குட்டிகள்,ஹட்ச் டாக் கனவு விடிந்துவிட்டது தெருஓர நாய்குட்டியால்,அதிலிருந்து ஒன்றை கையில் எடுத்துக்கொண்ட
அப்பொழுதே எனக்கு ரவிக்கும் ஒரு ஒப்பந்தம் , இனி நீ பொறுக்கும் அணைத்து பால் உரைகளும் எனக்கு வந்தாக வேண்டும் என்று ,அதில் மிச்சம் ஒட்டிக்கொண்டு இருக்கும் பால் தான் இதற்கு உணவு என்பதை சீக்கிரம் புரிந்துகொண்ட ரவியும் சரி என்று தலை ஆட்டினான்....

சாப்பிடுவதும்,தூங்குவதும்,கண்விளிப்பதும், விளையாடுவதும், சண்டையிடுவதும், பாசம் காட்டுவதும், முத்தங்கள் கொடுப்பதும், இப்படி நாட்கள் நகர்ந்தன, சீக்கிரம் பெரியவனாக வேண்டினேன் அப்பொழுது தானே அந்த தெரு சிறுவர்களிடம் எனது ஹட்ச் டாக்கை காட்ட முடியும்,

சீக்கிரமாய் வளர்ந்தான், அன்று என்னோடு சேர்ந்து ஏழைகள் ஏழைகளாகவே, பணக்காரர்கள் பணத்திமிரோடும் இருக்கும் வீதிகளை என்னோடு சேர்ந்து சுற்றிக்கொண்டு இருந்தான் , வேகமாய் அந்த தெருவை அடைந்தேன், குறுக்கும் நெருக்குமாய் என்னுடைய ஹட்ச் டாக்கை பாருங்கள் என்று சொல்லாமல் சொல்லிக்காட்டிக்கொண்டு இருந்தேன்.

அந்த நொடிகளில் என் கோணிப்பையை வைத்துவிட்டு குட்டிக்கரணம் போட்டேன்.சந்தோஷத்தில் கலைத்து வீடு திரும்பியது அன்று தான் முதல் முறை.

நேற்று என்னோடு வர மறுத்த என் ஹட்ச் டாக்கை பார்த்தேன்,என்ன ஆகிற்று என்று தெரியவில்லை படுத்தேகிடந்தது, எழுப்ப முயற்சிக்கிறேன்,கண்களை எறும்புகள் மொய்த்துகொண்டு இருந்ததை பார்த்து, கண்ணீரோடு எறும்புகள்தான் தான் காரணம் என்று கோபத்தில் எறும்புகள் அணைத்தையும் வெறியுடன் கொன்று தீர்த்த எனக்கு, என்னைப்போல் என் ஹட்ச் டக்கால் இரவுப்பசியை தாங்கிக்கொண்டு இருக்க முடியாது என்று தெரியவில்லை. முதல் முறையாக நானும் வேண்டாம் என்று தூக்கி எறிந்தேன் எனக்கு பிடித்த என் ஹட்ச் டாக்கை,என் மனசுல வைச்சுக்கிட்டு..

இப்ப எல்லாம் அந்த தெருப்பக்கம் போறது இல்ல,


                                                                                         
                                             

Tuesday, June 1, 2010

வாழ்க்கை(வலி)ன்னா என்ன? -- பாகம் 2





நன்றிங்க இரண்டாம் பாகத்தை படிக்க வந்ததிற்கு...

முதல் பாகம் இணைப்பு இங்கே : -
முதல் பாகம்


அங்க போயி நிக்கும்போது அடிவயிரே கலக்குற மாதிரி இருக்குங்க, ஆமா அங்க பார்த்தா என்னை மாதிரி குறைஞ்சது ஒரு 500 பேராவது நிற்பாங்க,திரும்பி போன வாழ்க்கை இல்ல அப்டின்னு மனசு சொல்லும், சரின்னு காத்து இருப்பேன்.கடைசில எல்லோரும் உங்க சுயவிவரம் அடங்கிய தாளை கொடுத்துவிட்டு செல்லுங்கள், உங்களை விரைவில் அழைக்கிறோம் அப்டின்னு சொல்வாங்க,


வெற்றி அடைந்திடலாம் என நினைத்த வெள்ளந்தி மனசு அப்டியே உடைந்து போகும் பாருங்க,மணி 4 ஆகி இருந்தும் சாப்பிட கூட மறந்துடும்ங்க இந்த வயிரும். 1 மணிக்கு சாப்பிட வேண்டிய மதிய உணவை 12 மணியில் இருந்து ,சாப்பிடு,சாப்பிடு அப்டின்னு சொல்ற அம்மா கண்முன்னாடி வந்து வந்து போவாங்க பாருங்க. என் தன்னம்பிக்கையை என்கூட இருக்க சொல்லிட்டு என் கண்ணீர் துளி மட்டும் என்னைய விட்டு வெளியே போகும்ங்க அந்த நேரத்துல ...

எப்படி வீடு திரும்பி போவேன்னு தெரியாதுங்க, 5.30 மணிக்கு டீ கடைல "அண்ணா ஒரு பாதம் பால்" அப்டின்னு ,சொல்றப்ப ஏதோஒரு இனம் தெரியா ஆறுதல்,போற-வர மக்களை பார்க்கும் போது நாமும் ஒரு நாள் சாதிச்சுடலாம்னு மனசு எனக்குள்ளே சொல்லிக்கும். இரவு சாப்பிட்டுட்டு படுக்கிறதோட சரிங்க, தூக்கத்த முந்திகிட்டு, கஷ்டப்பட்டு படிக்க வைச்ச அப்பா அம்மாவோட நினைவுதாங்க வரும்,அந்த மொட்டை மாடி தரைக்கு நிச்சயம் தெரியும்ங்க என் கண்ணீரோட முகவரி,

இப்படிதான் பல நேர்முகத்தேர்வுகளின் தோல்விகளை, மாலை நேரத்து சூடான பாதாம் பால் குளிர வைக்கும்ங்க..அன்றைய ஒரு மாலை நேரம் அழகானதாய் மாற்றிவிட்டது "நீங்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்க படுகிறீர்கள்" என்ற அந்த மின்னஞ்சல்..

வேகமாய் எனது அறைக்கு வந்து படிக்க ஆரம்பித்துவிட்டேன், அரைகுறையாய் இரவு உணவு, அரைகுறையாய் அனைத்தும் முழுமையாய் இந்த முறை ஜெய்த்துவிடவேண்டும் என்பதற்காக..
தூங்கியதாய் ஞாபகம் இல்லை விழிக்கும்போது, மீண்டும் அரைகுறையாய் அணைத்தும்,சரியான தேர்வு நடைபெறும் இடத்தில் ஆஜராகியதை தவிர,

இம்முறை ஆட்களை கண்டு பயம் இல்லை, காரணம் டீ கடைக்காரன் கூட கண்விழித்துஇருக்காத நேரம் அல்லவா அது. நிச்சயம் நான் தான் அங்கே முதல்வனாய், தேடலில் பசிக்ககூடவில்லை, காத்திருந்தேன் காத்திருந்தேன்.சக போட்டியாளர்களின் எண்ணிக்கை நிச்சயம் 1000 தொட்டு இருக்கும்,பெரிய நிறுவனம் நடத்திய நேர்முகத்தேர்வு என்பதால்,

எப்படியோ முதல் கட்ட கணிதவியல் தேர்விற்கு உள்ளே அனுப்பப்பட்டேன்,கழித்தும்,கூட்டியும், பெருக்கியும்,வகுத்தும் என் எதிர்கால வாழ்க்கைக்கு போராடினேன். சிறிது நேரத்தில் முதல்கட்ட தேர்வு முடிந்தது ,அனைவரும் பெரிய அரங்கில் காத்திருக்கவும்,மதிய உணவை முடித்துவிட்டு வரவும் என அறிவிப்பு செய்யப்பட்டது,

கனவுகளோட காத்திருந்த அந்த நொடிகளில் நிஜமாய் பசிக்கவில்லை, எதிர்காலத்திற்காக என்னோடு என்னைபோல் என் வயிரும் கூட என்னோடு ஆவலாய் காத்து இருந்தது பசிக்காமல்,

சிறிது நேரத்தில் முடிவை வாசிக்க வந்தார்கள், இருக்கையின் நுனியில் அமர்ந்து, என் பெயரை நான் கேட்க்க ஆசைப்பட்டேன், சிறிது நேரத்தில் வாசிக்கப்பட்டு முடிந்துவிட்டது எனது பெயரை கேட்கமுடியவில்லை,எழுவதற்குமுன் இன்னொரு தகவல் அறிக்கை வந்தது, மீண்டும் வாசிக்க தொடங்கினார்கள் பெயர்களை, மீண்டும் கடவுளை பிரார்த்திக்கிறேன் , என் பெயரும் வாசிக்கப்பட்டது, நிஜமாய் இதயம் கனத்தது சந்தோஷத்தில்,வென்று விட்டதாய் குதித்தேன்,

வாசிக்கபட்டவர்கள் அந்த அறைக்கு செல்லும்படி அறையின்
பெயரை வாசித்தவுடன் அங்கே இருந்த முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன், இரண்டாவது தேர்வு, குழுவாக அமர்ந்து கருத்துகளை ஆங்கிலத்தில் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று சொன்னதும் கால்கள் நடுங்கத்தொடங்கின,

இவ்வளவு சீக்கிரம் வெற்றி வீழ்ந்துவிடும் என்று நினைக்கவில்லை இருந்தும் போராட தயாராகிவிட்டேன்..அறைக்குள் சென்றோம் நானும் சக போட்டியாளர்களும்..

அறையில் என்ன நடந்தது, அடுத்த பதிவில் பார்ப்போம்....

மூன்றாம் பாகம் இணைப்பு இங்கே : -
மூன்றாம் பாகம்