Wednesday, November 30, 2016

தொலைந்து போக....2





மெதுவாய் நகர ஆரம்பிக்குறேன் நத்தைக்கு சொந்தக்காரனாய். வண்டுகளின் ரீங்காரமும், குருவிகளின் கூச்சல்களும், மெதுவாய் என்னை பயமுறுத்த முயற்சிக்கின்றன..அந்த தூரத்து குடிசைவீட்டை ஏதோ ஒரு அசைக்கமுடியா நம்பிக்கையில் நெருங்குகிறேன். நிலாவின் வெள்ளிப்புன்னகையும்,குடிசைவீட்டின் ஒற்றை மின்சார விளக்கும் எனக்குள் எதோ ஒருநம்பிக்கை தொடுக்க, தொடர்ந்து முயற்சிக்கிறேன். நெருங்கிவிட்டேன்., கிளுவம் மரத்திலான அந்த வீட்டின் வேலி என்னுள் ஒரு இருபது வருடம் காலம் பின்னோக்கி நகர்த்தியது சட்டென்று. என் கிராமத்தின் சாயலும் அடையாளமும் அதுவாய் தான் இருந்தது. ஒரு இரவில், பரிட்சயம் இல்லாத ஒரு குடிசையின் வாசலில் இருந்து சத்தமிட உள்ளுள் எதோ ஒன்று தயக்கத்தை கொடுக்க., சத்தமிடாமல் இருப்பது அதையும் தாண்டிய ஒரு முரணை ஏற்படுத்திவிடும் என்பதற்காய்,உதட்டை விரித்து அழைக்க முயற்சிக்கையில், எழுபதுகளைத்தாண்டிய ஒரு வயதான உருவம் குடிசைவீட்டின் வாசலை குனிந்து கடந்து,பின்  நிமிர்ந்து என்னை நோக்குகிறது. யாரு, என்ன வேணும் என கேட்க?, சட்டென்று கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழிக்க, மெதுவாய் தள்ளாடியபடி நெருங்குகிறார்.

ஒரு வேலையாய் இங்கே வந்தேன் பெரியவரே, இருட்டாகிடுச்சு, அதான் கடைசி பஸ் இங்க இருந்து எத்தனை மணிக்கு என கேட்க?.என்னை மேலும் கீழும் உற்றுநோக்கி, உண்மையில் நான் யார் என்பதை தெரிந்துகொள்ள முயற்சிக்கிறார். சற்றே ஈரம் காய்ந்த தலைமுடி,முதல் இரண்டு பொத்தான் இல்லாத மேல் சட்டை, துளியும் ஈரம் காயாத, தரையில் உரசி தேய்ந்து போன ஒரு கால் சட்டை,கருப்பும் வெள்ளையும் கலந்த ஒரு காலனி.. அவருள் எதோ ஒரு சந்தேகத்தை விதைத்திருக்கிறது போலும்., அத்தனை கேள்விகளை அடுக்கடுக்காய் வைத்தார் ஒரு சில நிமிடங்களில்..கடைசியில் எதோ நம்பிக்கை வந்தவராய்,மீனாட்சி என்றழைத்து குடிக்க தண்ணீர் கொண்டு வர சொல்கிறார். கிட்டத்தட்ட ஒரு இமாலய சாதனை செய்துவிட்ட திமிர் என்னுள் புன்முறுவலை திணிக்க. சுற்றியும் உற்று நோக்குகிறேன் ஒரு கணம்.

குடிசைக்கு சற்று தொலைவில் ஒரு பெரிய கிராமம் இருப்பதை மின்விளக்குகள் அப்பட்டமாய் காட்டியது. எதோ ஒரு கணக்கை போட்டுக்கொண்டு திரும்ப, அதே எழுபதுகளைத்தாண்டிய ஒரு ஒல்லியான தேகம், கையில் தண்ணீரோடு வந்து நிற்க., சட்டென்று இந்த வயசில் நானெல்லாம் இருப்பேனா என்று தெரியவில்லையே என உள்ளில் முனகிக்கொண்டு, தண்ணீரை வாங்குகையில், யாரு?, காங்கேயம் மவனா? என கேட்க., அட இவ ஒருத்தி, அந்த தம்பி ஒரு சோலியா இந்த பக்கம் வந்து இருக்காப்டி, பஸ் எப்போன்னு  கேட்கவந்து இருக்காப்டி அப்டினு சொல்லி முடித்தார்..இந்நேரத்துல ஏது பஸ்சு,ஆவரங்காடு போனாதான் பஸ்சு என்று சொல்லிமுடிக்க, அது எவ்வளவு தூரமுங்க என கேட்கிறேன், அதுபோகணும் ஐஞ்சாறு கல்லுன்னு சொல்ல. ரொம்ப தூரம்னு மட்டும் புரிந்தது. சரி, நிலா நடை நமக்கொன்றும் புதிதில்லை என உள்ளுள் நிறுத்திக்கொண்டு, சரி நான் வருகிறேன் நன்றிங்கய்யா, நன்றிங்கம்மா என்று புன்னகையோடு பதிலளித்துவிட்டு நகருகையில், இப்படியே போகலாமுங்களா என ஒற்றையடிப்பாதையை நோக்கி எனது கேள்வியை நீட்டுகிறேன்

எனது கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன், பெரியவர் ஏதோ ஒன்றை கேட்க எத்தனிக்கிறார்.. சொல்லுங்கய்யா என்று அவருக்கு வழிவிடுகிறேன். அஞ்சாறு கல்லு தூரத்துக்கு மேல போகணும்,  இந்நேரத்துல போயிடுவியா தம்பி?..இதெல்லாம் பழக்கப்பட்டது தான் பெரியவரே., வேற என்ன பண்றது இங்கேவா தூங்குறது என்று விளையாட்டாய்க்கூறியதை பிடித்துக்கொண்டனர்., வேணும்னா இருந்துட்டு காலைல போறாதா இருந்தா கூட போ என்று கூறி முடிக்க.. என்ன சொல்ல சில நேரங்களில் இப்படியும் நடக்கும் கிராமத்தில் மட்டுமே. இந்த விலாசம் எப்படி போகணும் என்று அவசரமாய் நீட்டும் ஏதோ ஒரு ஊழியனுக்கு விவரம் தெரிவிக்க கூட நேரமில்லாத, பயப்படும் நகரத்தை தூக்கி மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிடுகிறது என் தேசத்து கிராமத்தின் அப்பழுக்கற்ற அன்பின் அடையாளம்.

ஒன்று மட்டும் நன்றாய்ப்புரிந்தது, சில நேரங்களில், சில தாங்கிக்கொள்ளமுடியா அழுத்தம் நிறைந்த தருணங்களில் இருந்து தப்பிக்க நினைத்தால் மட்டும் போதுமானதாகிவிடாது, அதிலிருந்து வெளியில் வர முயற்சிக்க வேண்டும், அந்த முயற்சி புதியதொரு அனுபவத்தை உருவாக்கித்தருவதோடு , அந்த அழுத்தத்திற்கான தீர்வாகவும் கூட மாறிவிடுகிறது. அப்படி பட்ட தருணத்தை தான் உணர்ந்தேன் அப்பொழுது.,ஒரு அறிமுகமில்லாத மனிதர்களை தன் வசப்படுத்தி தன் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதே ஒரு அலாதி சுகம் தான். கிட்டத்தட்ட நட்பு, காதல், காமம்., அழகாகவும், ஆழமாகவும் இருப்பதற்கு அறிமுகமில்லாதவர்களிடத்தில் ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் இந்த அழகியல் கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.

அவர்கள் வார்த்தை விழுந்த நேரத்தில் எதோ ஒரு மரியாதையும், தயக்கமும் என்னை தடுமாற வைத்தது. விளையாட்டாய் கேட்டதாகவும், நான் கிளம்புகிறேன் என்றும் கூறுகிறேன்,உள்ளுக்குள் எதோ ஒன்று இருந்துவிட்டு போக நினைக்க., அவர்களின் ஒரு சில வற்புறுத்தலிலே சரி என்று கூறிவிட்டு தயக்கமாய் அமர்கிறேன் குடிசையின் திண்ணையில். சாப்பிட்டியா தம்பி என்று ஆரம்பிக்கும் முன்னரே , சாப்பிட்டுவிட்டதாகவும், பசிக்கவில்லை என்று சத்தமாய் கூற, பரவால்ல சாப்பிட்டாலென்ன கொஞ்சம் சாப்பிடுங்க என்ற வார்த்தை பசிக்க செய்தது. அதற்குமேல் வேண்டாமென்று அடம்பிடிக்க எனது பசி அனுமதிக்கவில்லை. பட்டென்று சரி கொஞ்சமாய் என்று முடிக்கும் பொழுது தான் யோசித்தேன், சாப்பாடு இருக்கான்னு தெரியாம சொல்லிவிட்டோமே என்று சங்கடமாய் போக., பசிக்கலங்க வேண்டாமென்று மீண்டும் ஒருமுறை அழுத்தமாய் கூறுகிறேன்.

மருமவ கொண்டாந்து கொடுத்துட்டு போனது அப்டியே தான் இருக்கு,, இவருக்கு இதெல்லாம் புடிக்கிறது இல்ல, கரைச்சி தான் குடிப்பாங்க  தம்பி..சாப்பாடு இருக்கு நீ சாப்பிட்டு என்று உணவோடு வந்து நிற்க ,எவ்வளவு அழகான உலகம் இது, தேடிப்பிடித்து நரகத்தில் அமர்ந்துகொண்டு குத்துது, குடையுது என்பதில் எப்படி நியாயம் இருக்க முடியும்..வெறும் நீரைக்கொண்டு கரைத்து வைத்திருக்கும் ஆகாரத்தில் அவ்வளவு திருப்தி அடைகிறார்கள், நமக்கோ விதவிதமான காய்கறிகளை உணவாய் பார்க்கும்பொழுது கூட உண்ணதோணாமல் அலுவலக வேலைகளும், அவன் அண்ணாநகர்ல ஒரு வீடு வாங்கிட்டான், நம்ம இப்படி இருக்கோம், என்னமோ வாழ்க்கை என்று, அந்த உணவிற்கான ஒரு மரியாதையை கொடுக்க தவறிவிடுகிறோம் என்பது என்னில் உறுத்தியது..

நடப்பதை நம்பிவிடாமல் இருக்கமுடியவில்லை என்பது போல் என்னில் எதோ ஒரு தயக்கமோ,சந்தோசமோ என்னில் திரும்ப திரும்ப ஓடியது. மெதுவாய் தயக்கத்தை என் கையோட கழுவிவிட்டு அமர்கிறேன் அத்தனை நன்றியோடு அவர்கள் முன். ஒவ்வொரு பருக்கையும் அவர்கள் மீது ஒரு நன்றி உணர்வை ஏற்படுத்த, ஒரு வித சிலிர்ப்போடு உண்டுவிட்டு எழுகிறேன். அதற்குப்பிறகான உரையாடலில் என் முழுமையும், அவர்களின் முழுமையும் அறிந்து நெருங்கினோம் அன்பால். எத்தனையோ நாட்கள் அன்பை கொடுப்பதற்கு முன் வாங்குவதிலேயே குறியாக இருந்திருக்கிறேன், முதல் முறை கற்கிறேன் முதலில் கொடுப்போம்,பிறகு பெறுவோம் என்று.. ஆசையாய் இருக்கிறது கற்றுக்கொள்ள,எவையெல்லாம் அழகென்று திரிந்து,தழுவி,உருகி முடித்தோமோ அவையெல்லாம் சுருங்கி,தளர்ந்து, வீழ்ந்து போவதும், திகட்ட திகட்ட கொட்டிய காதல் மட்டும் அப்படியே மறையாமல் ஒவ்வொரு நொடியும் புதிது புதிதாய் முளைத்து ஆயிரமாய் பெருக்கெடுப்பதை உணர்கிறேன்.இந்த வாழ்க்கை இதையல்லவா கற்றுக்கொடுத்து இருக்கவேண்டும் , மாறாக அழுத்தத்தையும், போட்டி என்ற பொய்யான பிம்பத்தில் பொறாமையையல்லவா வளர்த்துவிட்டுள்ளது, பணம் பணம் என்றே  என்னை அழுத்திக்கொன்றுள்ளது. சில நேரங்களில் என்ன  பிரச்சினை என்றே என்னால் யூகிக்க கூட முடியாமல் உயிரோடு சமாதியாக்கியிருக்கிறது.
பேசிக்கொண்டிருக்கையில் சட்டென்று....
தொடரும்...



தொலைந்துபோக......1




ஏதோ ஒன்று என் தலையை இருகப்பற்றிக்கொண்டு அசைக்கவிடாமலும் ,நினைக்கவிடாமலும், விழிக்கவிடாமலும் ஏதேதோ செய்ய,தொடர்ந்தேன் அந்த பேருந்து பயணத்தை எதுவரையோ அதுவரை. பரபரப்பான பேருந்துகள் இயங்கும் இடத்தில் இறக்கப்பட்டதும், கண்ணில்பட்ட அடுத்த தொலைதூர பேருந்தை பற்றிக்கொள்கிறேன். பயணிக்கிறேன் ஜன்னல் வழியாய் பார்வையை கிடத்திவிட்டு...

நகரங்களைத்தாண்டி மெதுவாய் கிராமத்தின் அமைதியை தொடஆரம்பித்த பேருந்தினை நிறுத்தி இறங்கினேன்..அத்தனையும் என்னிலிருந்து தொலைக்க வேண்டும்,சாலையை ஒட்டிய வாய்க்காலை தொடர்கிறேன்... அடர்ந்த காட்டின் வழியே பயணிக்கும் வாய்க்கால் நீரை இதற்க்கு மேல் தனியாய் பயணிக்க விட போவதில்லை. இதற்குமேல் சுமக்கத்தயாராயில்லை என்னை பிடித்துக்கொண்டிருக்கும் ஏதோ ஒன்றை..அது வேலை அழுத்தமோ, சூழல் அழுத்தமோ, காதலோ, நட்போ, காமமோ, தேடலோ ஏதுவாய் வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்....




சிலிர்க்கத்தொடங்குகிறது உடல், காதல் பரவுகிறது மென்மையாய்..நீரோடு உறவாட உடல் ஏங்க,சட்டைபொத்தான்களை பிய்த்து எறிந்துவிட்டு, அத்தனை நினைவுகளையும் களைந்துவிட்டு, ஆடைகளணிந்தும் நிர்வாணமாய் தாவுகிறேன்...சட்டென்று தொலைகிறேன்,தொலைக்கிறேன்.. எழுந்துவிட மனமில்லாமல் முழுவதுமாய் தொலைகிறேன்..ஆசையாய் இருக்கிறது இன்னும் கொஞ்சம் முகம் புதைக்க, தடுக்க யார்?..மீண்டும் புதைகிறேன்,புதைக்கிறேன் என்னை.படர்கிறேன் அத்தனை ஆசையாய்... நீரோடு வெகுதூரம்,வெகுநேரம் உறவாட மலர்கிறேன்..நெடுநேர ஆதீத காதலில் மெதுவாய் எட்டிப்பார்க்கிறது நடுக்கம்..உடல் முழுவதும் நடுக்கம் படர..மெதுவாய் காதல் தணிகிறது..மெதுவாய் வாய்க்கால் கரை மீது சாய்கிறேன்..அடர்ந்த காட்டின் குரூர காற்று மெதுவாய் என்னை மொய்க்கின்றது..கொஞ்சமாய் கொஞ்சமாய் கொத்தி தின்கிறது..இரக்கமின்றி மிக நெருக்கமாய் அணைத்துக்கொள்(ல்)கிறது..ஆசையாய் இருக்கிறது இந்த நெருக்கத்தில் மூச்சு முட்டி,மடிந்துபோக.....


அசைவின்றி, இசைவோடு துணிந்து கிடக்கும் என்னை இரக்கமின்றி உரித்து தின்றுவிட்டு, நடுக்கத்தை தன்னோடு தூக்கிக்கொண்டு பறந்துவிட்டது அடர்ந்த காற்றின் குரூர காற்று. மெதுவாய் கண்கள் திறக்க, முழுவதுமாய் இருட்டியிருக்க,மெதுவாய் நடக்கிறேன் நிலாவோடு பேசிக்கொண்டே...தொலைதூரத்து குடிசை என் கண்களில் வந்து அமர்கிறது சட்டென....

Friday, November 18, 2016

ஒரு சந்திப்பில் அவளும் நானும்....


இதற்கு முன்பு சில சமயங்களில் அவளும்  நானும் சம்பிரதாய புன்னகையை உதிர்த்திருக்கிறோம் நாங்கள் சந்தித்த அந்த எதேச்சை தருணங்களில்... எதோ பிடித்திருக்கும் அந்த புன்னகையும், புன்னகையின் முகமும் அப்பொழுதெல்லாம்... வாழ்க்கையின் சில நிகழ்வுகள் சாமானிய மனிதன் எதிர்பார்த்திராத தருணத்தை பரிசாய் கொடுத்து விடும். அப்படியொரு தருணத்தில் தான் சந்தித்தேன் அவளை...

"யாரடி உரைத்தது, ஆண் என்பவன் அசைக்கமுடியாதவனென்று.......,
உன் ஒற்றை பூவே அசைத்ததடி என்னைக்கட்டிப்பிடித்து மொத்தமாய்.....,
உடை களையா நடையில் கலைந்தே போனேனடி மொத்தமும் களைந்து....,
மடிய அடம்பிடிக்கும் உன் புடவையில் மடிந்தே போனேனடி.....
என்ன பதில் சொல்ல, மிச்சம் வைக்காமல் கொன்ற உன் புன்னகைக்கு....
விழித்தேன்,மௌனித்தேன், வெட்கித்தேனடி"

அவளோட நடக்க ஆரம்பித்தேன், என் பக்கத்துவீட்டு ரெண்டு வயது ஆனந்தி நடக்கையில் அவளுக்கு பிடித்த நாய்க்குட்டியை தன் இடுப்பில் அரைகுறையாய் தூக்கிக்கொண்டு போவாள்,நாய்க்குட்டிக்கு வலித்தால் என்ன, அசௌகரியமாய் இருந்தாலென்ன என்றவளாய்..எங்கெல்லாமோ கூட்டிக்கொண்டே போவாள் அவ்வப்பொழுது "ஏய் கத்தாம இரு" என்று கத்தியபடி....
என்ன செய்ய, நானும் அப்படித்தான் அவளோடு அப்பொழுது..... பிடித்திருந்தது அவளோடு மௌனமாய் நடந்தது, அன்பு,நட்பு, காதல், காமம், ஈர்ப்பு, பிரிவு, ஏக்கம், முதல் காதல், கடைசி காதல், சந்தோசம், ஏமாற்றம் இப்படி எத்தனையோ உறவுகளை பொருத்திக்கொண்டு மௌனமாய் நடந்தேன் ஆதலால்....
பிரிவிற்கான இடங்களில் பிரிந்தாகவேண்டும், வெவ்வேறு இருக்கைகள், வெவ்வேறு வேலை உலகங்கள்,சிறிது நேரம் மட்டுமே அவளிடமிருந்து என்னை பிரித்துவைக்க முடிந்திருந்தது.. அவள் இருக்கை நோக்கிய சில நேரங்களில் இதயம் கனக்க ஆரம்பித்தது,அவளில்லாமல்... "சாப்பிட போகலாம்" என்றொரு அவளின் அழைப்பை இறுக்கியணைத்துக்கொண்டு நடக்கிறேன்,சட்டென்று மௌனத்தை உடைத்து சில கேள்விகள், பதில்களை எதிர்பார்க்காமல்....மீண்டும் இணைந்தோம் இடைவேளையில்இரண்டு இருக்கைகளுக்கு இருமருங்கிலும்...

"நீ வந்து அமர, பிடித்து வைத்திருந்த இருக்கை கடைசிவரை ஏமாந்தே நின்றது என்னைப்போலவே....
நொடிக்கொருமுறை விழுங்கினேன் உன்னை, உணவோடு சேர்த்து.... 
உண்ட உணவு ஜீரணித்துவிட்டதடி, ஆனால் பக்கத்து இருக்கையோடு உன் உரையாடல் மட்டும்....                                                                         
உணவை முடித்து நடக்கிறேன் பேசமுடியாமல் விட்டவைகளை பொறுக்கி பையில் போட்டுக்கொண்டு..
கடைசி வரை திறக்கவில்லை என் உதடும்,பையும்."

"வேலை முடித்துவிட்டு வா, பார்ப்போம்" என்ற கணத்தில் அவள் கண்கள் பேசிய கவிதைகளை, புரண்டும், விழுந்தும், அமர்ந்தும், படுத்தும், நின்றும், பொருத்திப்பார்க்கிறேன், ஒன்றும் புரியாதவனாய் கடைசியில் அவளிடமே நின்றேன்..பேச ஆரம்பிக்கிறாள்.. அவள் விழிகள் பேசியதை நிச்சயம் அவள் பேசிவிடவில்லை...பேசினாள் என்னோடு அவள் கவிதையாய்...அவளை கவிதையாக்கினேன்,வாசித்தேன்.திகட்டவில்லை வாசித்தேன்..சின்ன புன்னகை, என்னை அவளோடு, அவளாக்கியது.. புன்னகையா, ஈர்ப்போ, அழகோ,வார்த்தையோ எதோ ஒன்று இறுக்கப்பிடித்திருந்தது என்னை அவளோடு சில மணி நேரங்கள்..நேரம் தொலைந்தது, களைந்தோம்.. நடந்தோம் சாலையோர பேருந்து நிறுத்தத்திற்கு,.

"என்ன பெயர் வைக்க உனக்கும் எனக்குமான இந்த நிலா நடைக்கு.....             
எதுவாக இருப்பினும் இப்போதைக்கு தொலைந்து போகிஇருக்கிறேன்,.              
மீண்டும் கண்டெடுக்க படும்பொழுது யோசித்துக்கொள்கிறேனடி.. 
இப்போதைக்கு உன் பெயரையே வைத்துக்கொள்கிறேனடி....
உன் முத்தம் பெறமுடியாதென்று தெரியும்,ஆகையால் உன் முகம்பார்த்தே நடக்கிறேனடி...

அவளுக்கும் எனக்குமான பாதையும்,சந்திப்பும் முடியப்பெற பயணித்தோம் இரு பாதைகளில்.. பேருந்தில் அமர்கிறேன் தனியாய்..பல நூறு சத்தங்களுக்கிடையில் அவள் பேசியவை தனியாய் எதோ செய்ய, என்ன நடக்கிறது என்னுள் என்று நிதானமாய் பொருத்திப்பார்க்கிறேன் அவளை என்னுள்..புரியாமல் தவிக்கிறேன்..எதோ ஒரு உறவில் என்னுள் மிகச்சரியாக பொருந்துகிறாள்...என்னுள் புதைத்துவைத்து ஓடிச்சென்று ஒரு நிலா வெளிச்சத்தில், யாருமற்ற ஒரு புல் தரையில் சறுக்கி முட்டியிற்று ஓவென்று கத்தி மகிழ்கிறேன்..இதுவரை என்னுள் இருக்கும் அந்த மௌனத்தை உடைத்தது அவள் மட்டுமே...
ஏதோ சிரிக்கிறேன், ஏதோ பேசுகிறேன் எனக்குள்.... அத்தனை அழகாய் இருக்கிறது இந்த அனுபவம் என்னில்.... ச்சே இப்படி பேசி இருக்கக்கூடாது, இப்படி  பேசி இருக்க வேண்டும்.. ச்சே இப்படி உடல் மொழிகளை செய்து இருக்க கூடாது, இப்படி இருந்திருக்க வேண்டும் என்று எதற்காக இத்தனை ஒத்திகைகள் என்னுள்.. முடிந்த கதைக்கு எதற்கு இத்தனை விளம்பரம், இத்தனை சீர்மை....தேவையில்லை என்கிறது அறிவு, தேவை என்கிறது இதயம்.... இரண்டும் என்னிடமிருந்துதான் பிறக்கிறதென்றாலும் ,ஏதோ ஒன்றில்மட்டும் லட்சம் மலர்களை ஒன்றாய் பிடித்து நுகர்ந்த ஆனந்தம், உடலின் ஒவ்வொரு நரம்பில் பாயும் சிலிர்ப்பு... அத்தனை மனிதர்களுக்கு நடுவிலும் நான் அவளோடு இருப்பதாய் உணர்கிறேன் தனியாய்..



      "மிக அருகில் நீ, உன் உதடுகளும் உன் கண்களும் பேசும் 
      வார்த்தைகள்..

      திணறுகிறேன், புரியாமல் விழிக்கிறேன்,என்ன 

      பேசுகின்றன...

      ஈர்ப்பும், நட்பும், காதலும், காமமும் எங்கே பிறக்கிறது?,

      உடலிலா?...மொழியிலா?...
 
      என்னை முழுவதுமாய் உன் கண்களும், உதடுகளும் தின்பதற்குள்
      விழித்துக்கொள்ள முயற்சிக்கிறேன் கனவு என்னும் 

      உள்மனதின் சிறையிலிருந்து...

      பிறகென்ன, ஏதோ ஒன்று மிச்சம் வைக்காமல் 

      கொன்றுவிடுவதற்குள் நான் தப்பித்துக்கொள்ள வேண்டுமல்லவா.   

      தயவு செய்து உன் விழிகளை மூடிக்கொள், நான் விழிக்க வேண்டும் 
      இப்போதே இங்கிருந்து...

எனக்கான இடம் வந்ததும், நிர்பந்தத்தில் வலுக்கட்டாயமாய் இறக்கப்படுகிறேன் எனது கனவுகள் கலையவிடப்பட்டு பேருந்திலிருந்து... எத்தனை வேற்றுமைகள் எனக்கான உலகத்திற்கும், யதார்த்த உலகத்திற்கும்.. ஓடிக்கொண்டிருக்கிறார்கள், கத்திக்கொண்டிருக்கிறார்கள், வெறும் இயந்திரத்தனத்தை ஒட்டிக்கொண்டே திரிகிறார்கள்...புன்னகையை தொலைத்ததே தெரியாமல் வேறெதையோ தேடுகிறார்கள்...நிதானமாய் நின்றோம் நானும் அவளும்,மௌனமாய் பேசினோம், யாதார்த்ததை ரசித்தோம், ஒவ்வொரு பார்வையிலும் சிரித்தோம்..மெதுவாய் நடந்தேன் தனிமையில் அவளோடு உறவாடிக்கொண்டே...

"இலக்கணம் உடைத்து உனக்கும் எனக்குமான உறவை என்னுள் செதுக்கிக்கொண்டு....  
யாருமில்லா தனிமையில் அவ்வப்பொழுது படித்து மூடிவைத்துக்கொள்கிறேன் பத்திரமாய்... 
என் உலகம், என் தனிமை, என் கனவு, யாரும் எட்டிப்பார்க்கக்கூட விட்டதில்லை...  

ஆதலால் பத்திரமாய் நீ இருக்கிறாய்...          
 முடியாதடி நீ வந்து கேட்டாலும், உன்னுள் நான் யாரென்று???...

வயிற்றை நிரப்பிக்கொண்டதும், கண்கள் மூடி தூங்கவேண்டும் எனும் மாத்திரத்திலே தூக்கம் இருக்க பற்றிக்கொள்ளும் வரம் கிடைத்ததை நினைத்து எத்தனையோ நாட்கள் கர்வம் கொண்டிருக்கிறேன். அத்தனையும் இன்றுடைந்தது. இது எனக்கான நாளில்லையோ என்றெல்லாம் நினைக்கத்தோணுகிறது. உருண்டும்,புரண்டும் நெளிந்தும் முயற்சித்த பின்னும் தோல்வியே, யாரோ என்னை திருடியிருக்கிறார்கள்..அவளைத்தவிர வேறு யாராய் இருக்கமுடியும்!!.
 
     என்னடி செய்யப்போகிறாய்!!!..

     கண்களை மூடி உன் எதிரே நிற்கும் என்னை....

     எப்படியும் என் அருகில் வரப்போவதில்லை நீ.....

     பிறகெப்படி திருடினாய் முழுவதுமாய் என்னை!!!!!!!!!.....

     கண்களை திறக்க சொல்கிறாய், சரி என்கிறேன்.....

     உன் புருவத்தை சுருக்கி புன்னகைக்கிறாய்.....

     என்ன செய்கிறாய்?..புரியவில்லை என்ற என் கேள்விக்கு
     பதிலளிக்காமல், சாதாரணமாய் இருக்கிறாய்..

     மூச்சு முட்ட, வியர்த்துக்கொட்ட நிற்கும் என்னை நோக்கி,
     புருவம் உயர்த்தி, என்ன என்பதுபோல் கண்களால்
     கேட்கிறாய்......

     நீயும் நானும் எந்த புள்ளியில் நிற்கிறோமென்றே

     தெரியவில்லை  இன்னும்,

     அதற்குள் எப்படி பதிலளிக்க?!!!!!..

     ஆகையால் நிற்கிறேன் மௌனமாய்......

     கெஞ்சுவதுபோல் நிற்கிறேன் என்னைக்கொடுத்து விடு,

     இல்லையேல் தூக்கத்தையாவது இப்போதைக்கு என்று.......

     முடியாது என்பதுபோல் சிரிக்கிறாய்....

     செல்ல கோபத்தில் மீண்டும் கண்களைமூடுகிறேன்,

     திறந்துவிடுகிறாய் மீண்டும்.....

     உனக்காய் அவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்கிறேன்

     என்கிறாய்...

     இதயம் கனக்க,அத்தனை சந்தோசத்தை இருக்க

     அழுத்திபிடித்திக்கொண்டு,

     யதார்த்தமாய் கேட்கிறேன், எதற்காக வந்தாய் என்று........

     கோபப்படுகிறாய், மெதுவாய் தலைகுனிகிறாய்..

     வெடித்து அழுகிறாய்.......

     துடித்துப்போனேன்...    

மொத்தமாய் நான் மாறியிருந்தேன்., எங்கு தேட?!!!... இந்த நிசப்தத்தை உடைத்துக்கொண்டு சுழன்றுகொண்டிருக்கும் அறைக்காற்றாடியோடு சேர்ந்தா?!!... நிச்சயம் வாய்ப்பில்லை.. இன்னுமொருமுறை அவளைக்காண்டால், கிடைத்துவிடுவேனா நான், நானாக அவளிடமிருந்து முழுவதுமாய்... ஒருமுறை பாதிப்பே, அகலாமல் அல்லவா நிற்கிறேன்.இன்னுமொருமுறையா...
     "உன்னிடமிருந்து என்னை மீட்டுவிட்டாலும் சரி,... 
     நிரந்தரமாய் உன்னில் தொலைத்தாலும் சரி,.... 
     இதோ புறப்படுகிறேன் மீண்டும் உன்னை நோக்கி".