Friday, December 17, 2010

எனது பார்வையில் என் தாய் மண்.......இவ்வளவு நாள எங்க போகிட்ட நீ ? அப்டின்னு , நீங்க எல்லோரும் திட்டுறது எனக்கு கேட்குதுங்க, என்னங்க பண்றது?, ஆபிசுல மூட்டை மூட்டையா கொடுத்திருக்காங்க ஆணி, சுவத்துல அடிக்க சொல்லி, இது பத்தாதுன்னு பின்னாடி லாரி வந்துகிட்டு இருக்குங்குறாங்க...

சரி வாங்க போவோம் ........

9.30 அலுவலக வேலை தொடங்கும் நேரம். 7.30 க்கு எழுந்து அவசர அவசரமா உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று அதையும் , இதையும் முயற்சி பண்ணி முடியாம தூக்கிபோட்டுட்டு , ஓடி வந்து புறப்படுவேங்க, அட நமக்கு அலுவலகத்துக்கு புறப்படுறதுக்கு ரொம்ப நேரம்லாம் ஆகாதுங்க. தேவை கேத்த சம்பளமா இருந்தாலும் கொஞ்சம்(கொஞ்சம் இல்லைங்க மிக ) அடிமட்டத்துல இருந்து வந்தவன் நான்,

அதனால உடுத்துகிற ஆடைல இருந்து, அடிக்கிற வாசனை திரவியம் வரை பாத்து தேர்ந்துடுக்கிற அவசியம் இல்லைங்க, அதனால சீக்கிரம் புறப்பட்டுருவேன், ஆனா மனசுக்குள்ள இருக்குற கலாரசிகன் அப்பப்போ கொஞ்சம் நவீன முறையில் நம்மளும் இருக்கலாமென்று நினைப்பான், அதனால சில நேரங்களில் கொஞ்சம் ஆசை பட்டதை விலை அதிகமா இருந்தாலும் வாங்கிடுவான், ஆனா அதுக்கு குறைஞ்சது ஒரு மாசமாவது வேதனை படுவான், இது நமக்கு தேவையான்னு. அதனால அதிக ஆடைகள் என் ஆடை மாட்டும் கொக்கிகளை அலங்கரிப்பதில்லை,

புறப்பட்டு முடிச்சதும் சமையலறையை எட்டிப்பாத்தா, வாரத்துக்கு மூணு நாலு வந்து சமைக்கிறதே பெரிசா நினைசுகிட்டு இருக்கிற சமையல் செய்றவங்க அட இன்னைக்கும் வந்து இருக்கமாட்டாங்க, அட போங்கப்பா இதுக்காவாவது சீக்கிரம் கல்யாணம் முடிக்கணும் போல இருக்கு அப்டின்னு மனசுக்குள்ள புலம்பிகிட்டு, தோல்பையை எடுத்து தோளுல மாட்டிகிட்டு ( அட அப்டி என்ன தான் அந்த தோல்பையில வைச்சு இருக்க அப்டின்னு நீங்க கேட்குறது கேட்குதுங்க எனக்கு, அட அதுக்குள்ளே ஒன்னுமே இருக்காதுங்க, அலுவலகத்துல குறிப்பு எடுப்பதற்காக எப்பவோ வாங்கிபோட்ட குறிப்பேடு, சாப்பாடு இல்லைனாலும் உன்கூட தான் இருப்பேன் அப்டின்னு தோல்பையோடு தினம் அடம்பிடிக்கிற மதியஉணவு பாக்ஸ்.,அவ்வளவுதான் ) கிளம்பிடுவேனுங்க.

தூரம் குறைவா இருந்தாலும் அலுவலகத்துக்கு போற எளிதான ஒரே வழி பக்கத்துல இருக்குற ரயில் நிலையம் தானுங்க, அட ஆமாங்க ரயில தான் தினமும் அலுவலகம் போறேன், வீட்ல இருந்து நடக்க ஆரம்பிச்சதும் அக்காவோட அறிவுரையும், சில பாசமிக்க நண்பர்களோட அறிவுரையும் ஞாபகத்துக்கு வருமுங்க, சொல்றேன் சொல்றேன் என்ன அறிவுரைன்னு? அவசரபடாதீங்க..

ஒழுங்கா காலைல சாபிட்டுரனும், இல்லைனா குடல் புண் வந்துடும் அப்டின்னு அவுங்க சொன்ன அறிவுரை அபாய மணி மாதிரி அடிக்குமுங்க , அய்யயோ அப்டின்னு போற வழியில இருக்குற தள்ளுவண்டி கடைலபோயி நிப்பேன் , அண்ணா ஒரு சொம்பு கூழ் குடுங்க அப்டின்னு கேட்டதும் புன்னகையோட சிரிசுகிட்டு, இந்தாப்பா , கடிச்சுக்க மிளகாய் வேணுமா?, இல்லை மாங்காய் ஊறுகாய் வேணுமா அப்டின்னு, குடுக்குற கூழில் குடல் நிறையரத விட , காட்டுற புன்னகைல மனசு நிறையுதுங்க, இந்த புன்னகையும், இந்த அக்கறையும், குளிர்ச்சியான அறையில் சாப்பாடு பரிமாறுற போலி புன்னகையவிட கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்குதுங்க, இதைவிட இன்னொரு காரணமும் இருக்குதுங்க இந்தக்கடை என்னை ஈர்ப்பதற்கு,

நடுஇரவு ,அதிகாலையா மாறுவது, நடு இரவுக்கு தெரியுதோ இல்லையோ, பசங்கள பெரியபடிப்பு படிக்கவைச்சுபுடனும்னு வைராக்கியத்த மனசுல வைசுகிட்டு இருக்கிற என் அப்பாவுக்கு தெரிஞ்சிரும், அதிகாலை ரெண்டு மணிகெல்லாம் பதநீர் (பணம் கல்லு ) இறக்க கிளம்பிடுவாரு,அந்த இருட்டுல பாம்பு இருந்தாலும், பூரான் இருந்தாலும், தேள் இருந்தாலும் தெரியாதுங்க, அதை எல்லாம் ஒதுக்கிவைசிட்டு எப்படியாவது வாழ்க்கைல ஜெயச்சுபுடனும் அப்டின்க்ரத மட்டும் மனசுல வைச்சுக்கிட்டு, உயரத்த மனசுல வைச்சுக்காம, தவறி கீழ விழுந்தா வாழ்க்கை என்னாகும் என்பதையும் ஓரமா ஒதுக்கி வைச்சிட்டு மரத்துல ஏரி பதநீர் இறக்குறது அப்பாவோட வேலைனா! அம்மாவும் அதுக்கு சளைத்தவங்க இல்ல, அந்த இரவுளையும் எதுக்கும் பயப்படாம ஒவ்வொரு மரமா போயி நின்னு பதநீர சுமந்து வந்து, அதை காசாக்குற வரைக்கும் அவுங்க பொறுப்பு,

காலைல அவசர அவசரமா பள்ளி பயிற்சி வகுப்பு போறப்ப, சொம்புல பதநீர ஊத்திகொடுத்துட்டு ,அண்ணா சீக்கிரம் குடிச்சிட்டு காச கொடுங்க அண்ணா, நேரமாச்சு நான் போகணும்னு அடம்பிடிக்கிற என்னிடம், தம்பி நீ ஒரு சொம்பு குடிச்சு பாருன்னு சொல்றவங்ககிட்ட, என் பையன் குடிக்க மாட்டான் அப்டின்னு நம்பிக்கையா அம்மா சொன்ன வார்த்தைய இன்னும் மனசுல ஆழமா பதிச்சுவைச்சுஇருக்கேங்க.அம்மா நிஜமா சொல்றேன் இப்ப நான் பிடிச்சு இருக்க சொம்புல கூழ் தான் இருக்கு, ஆனா அப்போ நீ என்மேல வைச்ச நம்பிக்கை தான் என் மனசுமுழுவதும் இன்னமும் இருக்கு. .

அவசர அவசரமா கூழ குடிச்சிட்டு வேகமா ஓடிபோயி ரயில்யேரி , இறங்குற அந்த ஐந்து நிமிட அழகான நேரத்துல நான் பாக்குற நிகழ்வுகள் அத்தனையும் அப்டியே மனசுல பதியுமுங்க, அந்த அவசர கூட்டத்துல அப்படியும், இப்படியும் ஆடி அசைஞ்சு எப்படியாவது தலைய மேல கொண்டுவறதுக்கு நான் சிரமப்படுவேன் பாருங்க, ஐயோ நான் மட்டும் இல்லைங்க அங்க நிக்குற எல்லோரும் தான் கஷ்டபடுவாங்க, எப்படியோ ஒருவழியா தலைய மேல கொண்டு வந்து அந்த ஐந்து நிமிடத்துல பாக்குற கேட்குற யாவும் அழகாய் இருக்கும், வெறும் "தாயே பிச்சை போடுங்க அப்டின்னு கேட்பதிற்கு பதிலா", கண்ணுதெரியலைனாலும் ஏதாவது ஒரு திறமைய வளர்த்து, அத நம்மகிட்ட காட்டி, வயித்துக்கு உதவி கேட்கும் அவுங்களோட முயற்சி, அங்க ஓரமா உட்கார்ந்து இருக்குற ஏமாத்தி பிழைக்கிற ஒரு மனுசனோட மனச சத்தமில்லாம பாதிச்சிட்டு போற அழகே தனி தானுங்க,

இன்னைக்கு என் மனச பாதிச்சிட்டு போன ஒரு நிகழவ தானுங்க இப்ப சொல்லபோறேன், கூட்டத்துல தலைய தூக்கி மேல பார்த்தேன், அவர பாக்கவே ஆச்சாரமா இருந்தாரு , நெத்திமுழுசா திந்நீறு,அவசர அவசரமா அவரு கைல கட்டி இருக்குற சாமி கையிற (கருப்பு கையிற ) அவிழ்க்க முயற்சி பண்றாரு, எதுக்குன்னு எனக்கு புரியல, கொஞ்சம் ஆவலா நானும் இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு கூட்ட நெரிசலில் தலைய உயர்த்தி பாக்குரேங்க, இப்போ பார்த்த பக்கத்துல இருக்குரவரும் இப்போ அவருகூட சேர்ந்து அவிழ்க்க முயற்சிபன்ராறு, ஒன்னுமே புரியல என்ன பண்றாங்கன்னு, எதுக்கு இவ்வளவு அவசர படுராருன்னு..அதற்குள்ள நான் இறங்க போற இடமும் வர போகுது ,எப்படியோ அவுத்துட்டாங்க, சரி கையிற மாத்தபோராறு போல அதான் அப்டின்னு நினைச்ச எனக்கு நிஜமாவே கண்ணு கலங்கிடுசுங்க,அவசர அவசரமா ரயில் ஏறுறப்ப பாதி கால் இல்லா முதியவர், பிளாஸ்டிக் கால் கட்டிருந்த கயிறு துண்டாகிடுசுங்க, அந்த பெரியவர் அடுத்த நிறுத்தத்துல எறங்க போறாரு,அவருக்கு உதவி செய்யத்தான் அத்தனை பேரும் அவசரபட்டாங்க அப்டின்னு நினைக்கும்போது என் மக்கள் மேல ரொம்ப மரியாத வந்து ஒரு படி மேல போயி கலங்கின கண்ணீருல வணக்கம் வைச்சேங்க, அவசர அவசரமா அத்தனை பெரும் அவரு காலுல, அந்த பிளாஸ்டிக் காலை கட்டிவிட்டதும் அவரு சொன்ன நன்றி இன்னும் மறக்க முடியல ..

தையவு செய்து என் இந்திய மண்ணை குறை சொல்லாதீங்க,நிஜமா இங்கு கருணை உள்ளவர்கள் அதிகமுங்க, ஒருசில பேரை வைச்சு இந்த மண்ணை குறைச்சு சொல்லாதீங்க, எந்த நாட்டுலங்க பையனுக்கு ஐம்பது வயது ஆகுரப்பகூட, என்பது வயது அப்பா கஷ்டப்பட்டு உழைச்சு பையன் நல்லா இருக்கணும்னு காசு கொடுக்குறத பாத்து இருக்கீங்க ?.. பையன்கூட சண்டை போட்டுகிட்டு தனியா வந்து வாழ்ந்தா கூட , "என் பையன் நல்லா இருக்கானா அப்டின்னு பாக்க போறவங்ககிட்ட கேட்குறது எந்த நாட்டுலங்க இருக்கு என் இந்திய மண்ணைவிட?..உடலுறவு என்பது மணமானதற்கு பிறகு இருக்கவேண்டும் என்று மகளுக்கு சொல்லிகொடுக்கும் தாய் எந்த நாட்டுலங்க இருக்காங்க என் இந்திய மண்ணை தவிர அதிகமாய் ?..

கிரிக்கெட் விளையாட்டுல என் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடும்போது,கடைசி பந்துல மூன்று ரன் அடிக்கணும் இந்தியா, மூன்று ரன் அடிச்சிட்டா , கலக்கிட்டானுங்க அப்டின்னு பேசிக்கிறோம், அடிக்காம விட்டுட்டா வாய்க்கு வந்தபடி திட்டுறாங்க, சிலபேர் லஞ்சம் வாங்கிட்டு ஆடுறானுங்க அப்டின்னு திட்டுரோம், சிலபேர் ஒருபடி மேல போயி தகாத வார்த்தைல திட்டுரோம். எப்போ பார்த்தாலும் இந்திய தேசத்த குறை சொல்றதுக்குன்னே ஒரு கூட்டம் இருக்குதுங்க , அது ஏன் அப்டின்னு தான் புரியல ,

இதே இந்திய மண்ணுல இன்னொரு கூட்டம் இருக்குதுங்க , ஒரு பந்துல ஆறு ரன் அடிக்கணும் அப்டிங்கற பெரிய இலக்கா இருந்தா கூட, என் இந்தியா அடிக்கும்னு ஒரு நம்பிக்கையோட காத்து இருப்பாங்க , இந்த நம்பிக்கைய பாத்து கேலி பண்ண ஒரு கூட்டம், அட இந்த கேலிய பாத்து கவலைபடமாட்டாங்க .ஏங்க நம்ம அம்மா மருத்துவமனைல உயிருக்கு போராடிகிட்டு இருக்காங்க, மருத்துவர் வந்து தெளிவா சொல்றாரு , இனி உங்க அம்மா பிளைக்கமாட்டாங்கன்னு, அவ்ளோ படிச்சவரு, தெளிவா சொன்னதுக்கு அப்புறமும் நம்ம அம்மா பிளைச்சுருவாங்க அப்டின்னு ஒவ்வொரு பாசமுள்ள பையனக்கும் மனசுல ஏதோ ஒரு ஓரத்துல நம்பிக்கை இருக்குமேங்க, அந்த நம்பிக்கை தாங்க இந்த கூட்டத்துக்கும் என் இந்திய தேசத்துமேல , அடிக்காம விட்டுட்டா கூட, சூப்பர் கடைசி வரைக்கும் வந்துட்டாங்க அப்டின்னு சொல்வாங்க...


எந்த நாட்டுலங்க ,அடிபட்டு சாககிடக்கரவண, சாலையோரத்துல பூ விக்குற அம்மாவோ , தள்ளுவண்டில வேலை செய்யுற கூலிக்காரரோ, மருத்துவமனைல சேர்த்திட்டு, அழுதுகிட்டே " காப்பாத்திடு நைனா " அப்டின்னு சொல்றவங்கள பார்த்துருகீங்க என் இந்திய மண்ணைவிட அதிகமாய் ?....

என் இந்திய மண்ணில் கருணை அதிகம், கனிவு அதிகம்,உழைப்பு அதிகம், திறமை அதிகம், சிறந்த பெண்மை அதிகம், காதல் அதிகம், நட்பு அதிகம், சிறந்த தாய்மை அதிகம்,சிறந்த கலாச்சாரம் அதிகம்...என் இந்திய நாடு சிறந்தது என்று ஏற்று கொள்ளும் மனதை தவிர ..... :( :(