Sunday, May 11, 2014

உன் உதிரம் உதிர்ந்து வளர்ந்ததடி...






கால் கொலுசணிந்து சென்றே தீர வேண்டும் பள்ளிக்கு, என அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு மத்தியில்,காலில் செருப்பில்லாமல் முட்கள் தைக்கும் கருவாலங்காட்டின் பாதை வழியே பள்ளிக்கு பயணித்த உன் கால்கள், தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, மாமா ,அத்தை, இப்படி அனைத்து உறவையும் பட்டினியில் இருந்து காக்க, வழி மாறி பருத்தி எடுக்க, கலை பறிக்க, கல்சுமக்க, மண்சுமக்க பயணித்தது உன் பதின் வயது ஆரம்பித்திலயே. பாவம் அத்தனையும் சுமந்து,சற்று நிமிர்த்தி போட்டாய் குடும்பத்தை கம்பீரமாய். இவள் பெண் அல்ல பெரும்தீ என்றுரைக்க எறிந்தாய் கொழுந்தாய்.


அத்தனை இன்னல்களை அடித்து நொறுக்கி கண் அயர நேரமில்லை உனக்கு., காதல் கொண்டாடும் பருவத்தில் கரை சேர்த்தாய் அத்தனை உறவையும் கம்பீரமாய் நின்று, ஊருக்கு ஒரு  பெண் வேண்டும் இவள் போல் குலம்காத்திட,எதிரியும் பிரார்த்திக்கும் வரம் காதில் விழும் இவள் போல் ஒரு மகள் வேண்டுமென. தலை நிமிர்ந்த குடும்பம் உன் சேவை இதுவரை போதும் என்று நிறுத்த, புருவம் உயர்த்தி காரணம் கேட்க., வயசுக்கு வந்த புள்ளைய கண்ணாலம் கட்டிகொடுக்க வேண்டாமா கால காலத்துல என் பதில் வர., பாவமாய் உன் விழி பெருக்கெடுத்து ஓடி,களைப்பாற என்னுகையிலே கழுத்தில தாலி ஏறியது..


குடை சாய்ந்து கிடக்குற குடும்பத்த நீ தான் காப்பாத்தனும்னு உன் காதில் யாரோ ஊதி விட்டார்கள்., உனக்கிது புதிதில்லை., தீயாய் எறிந்தவள் அல்லவா நீ, இந்த கானல் காற்று மண் உன்னை என்ன செய்துவிடும்?.உன்னை நம்பி குடும்பம் என ஒரு நிமிடம் உணர்ந்து, நேரம் காலமற்று காடே கதியாய், வயலே வாழ்க்கையாய், உன் உதிரம் உதிர்ந்து வளர்ந்ததடி அத்தனை பயிரும்.,பிறகென்ன வாழ்க்கையின் அருமை அறியா விளையாட்டுப்பிளையாய் சுற்றித்திரிந்த கணவனையும் சேர்த்தே சுமந்துகொண்டு, வேங்கையாய் போராடினாய் தனியாய் தாகம் தீரும் வரை, இந்த வாழ்க்கை உன்கைக்கு வரும் வரை.,


ஒருசுமை போதாது உனக்கு, இன்னும் இரண்டு சுமை தருகிறேன் என்ன செய்கிறாய் பார்ப்போம் என்ற இயற்கை பரீட்சைக்கு, புத்தகம் புரட்டாமல் முதல் மதிப்பெண் வாங்கினாய் சர்வ சாதரணமாய்., இரண்டு சுமைகளையும் இருகரம் பிடித்து ரௌத்திரம் கற்று கொடுத்தாய் உன் வாழ்க்கையிலிருந்தே, இது தான் உலகம், இந்த காட்டாற்று வெள்ளத்தில் தான் நீங்கள் நீச்சல் பழகியே தீரவேண்டும் என தூக்கி ஏறிய.,தண்ணீர் குடித்துக்கொண்டே ஒரு புள்ளை தாங்கிப்பிடிக்க.,இவன் மீதேறி இன்னொரு பிள்ளை நீச்சல் கற்க., கம்பீரமாய் கரை சேர இருபிள்ளையும், அசாதாரணமாய்,அவ்வளவு தான் உலகம் வா, என்று கரம் பிடித்து  அழைத்து சென்றாய்..


சுமைகலென்று இயற்கை கொடுத்த இன்னல்களை சுக்குநூறாய் உடைத்தெறிந்து, எதிரியும் பெருமூச்சு விடும் இடத்திற்கு தூக்கிபிடித்தாய் உன் இரண்டு செல்வங்களான என்னையும்,உன் அச்சில் முழுமையாய் வளர்ந்த, பயமறியா குட்டிவேங்கையாய் என் தம்பியையும்., பக்கத்து நகரத்தை தாண்ட பயம்கொள்ளும் கிராமத்து கூட்டத்துக்கு நடுவே, படிக்க பல மைல் தூரம் வழியனுப்பி பெருமிதம் கொள்ளும் வேளையில்., படிக்க இம்புட்டு தூரம் போறானுக, கெட்டுப் போயிடபோறாங்க பார்த்து, சூதனமா ஏதாவது சொல்லி அனுப்பு என்ற ஊர் பெரியவர்களிடம், அவுங்க என் வளர்ப்பு, தடம் மாறுறவங்க இல்ல என் புள்ளைக, தடம் உருவாக்குறவங்க என்று ஒற்றை புன்னகையை பதிலாய் எ(ரி)றிந்தவள்.


இருபுள்ளையையும் ஆளாக்கிவிட்டு, கண்ணயர்ந்து இளைப்பாறுவாய் என்று இயற்கையும் நாங்களும், காத்திருக்க., உன் உடல் மட்டும் ஏனோ இன்னும் உன் உழைப்பில் மட்டுமே வாழ ஏங்குகிறது, விடை தேடி விடை தேடி சலித்து போய்விட்டேன் அம்மா.,கண் துடித்து வெடிக்கும் கோபம் என்னில் பலமுறை வந்துபோய்விட்டது தேடிய கேள்விக்கு விடைகிடைக்காமல்..பிறகென்ன வாழ்க்கையின் முதல் பாதியும், பிற்பாதியும் தேய்ந்தே போய்விட்டது, என்ன கொடுத்தால் எங்கள் நிழலில் ஓய்வெடுக்க சம்மதிப்பாய்.,இன்னும் எத்தனை நாட்கள் தான் பெரும்தீயாய் எரிந்துகொண்டிருப்பாய், என் காலில் நிற்கவேண்டும் என்று அடம்பிடித்து.,சூரியனையும் தோற்கடிப்பாய் நீ வாழும் வரை, வாழ்ந்த பின்பும்.


பிஞ்சிலே ரௌத்திரம் பழகிய உன் நெஞ்சம், உன் உழைப்பிலே வாழ்ந்து முடிக்க மட்டுமே பெருமித கர்வம் கொள்ள விரும்பும் என்று தெரிந்தும், மீண்டும் ஒருமுறை கேட்கிறேன் அன்னையே, என்ன கொடுத்தால் எங்கள் நிழலில் இளைப்பாற சம்மதிப்பாய்?. நமக்குள், அன்னையர் தின வாழ்த்துக்கள் எல்லாம் பரிமாறி மகிழ்ந்த பழக்கம் இல்லை இதுவரை., நீயும் எதிர்பார்த்ததுமில்லை., நான் நல்லா இருக்கிறேன் அம்மா என்ற ஒற்றை அழைப்பேசி வார்த்தையில் உச்சி குளிர்ந்து, "நல்லா இரு குமாரு" என்று அத்தனை சந்தோசப்புன்னகையில் நீ வாழ்த்த, நான் மகிழ., உன் அத்தனை உழைப்பும் உயிர்பெறுகிறது, தியாகம் என்றால் உன்னை தவிர வேறு யார் என்ற கம்பீரத்துடன்...

Wednesday, May 7, 2014

முதல் கணை….


ஏறக்குறைய ஒரு மாதங்களாய் உங்கள் உணர்வுகளை, எழுத்தின் மூலம் தொடமுடியாமல் திணறிவிட்டேன், சில தவிர்க்க இயலாத அலுவலக மற்றும் சொந்த வேலைகளின் நிமித்தம், இன்னும் சிற்சில காரணங்களால். மன்னிக்க கோரிவிட்டு ஆரம்பிக்கிறேன்  இந்த பதிவை.

நாள் 23 – ஏப்ரல் மாதம் 2014., அலுவலக பணிகளை கொஞ்சம் வேகமாக முடித்துவிட்டு, கிட்டத்தட்ட 8 மணிக்கெல்லாம் சிறுசேரியிலிருந்து பேருந்தை பிடித்தேன் கேளம்பாக்கத்திற்கு. எப்படியோ ஆடி அசைந்து செல்வதற்குள் மணி 8.30 ஐ தொட்டது. நேரம் ஆகிவிட்டதே என்ற படபடப்புடன் பெருங்களத்தூர் பேருந்தை பிடித்தேன் சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தே தீர வேண்டும் என்ற ஆசையுடனும், கர்வத்துடனும். கேளம்பாக்கத்தில் கிளம்பிய பேருந்து அத்தனை நளினத்துடன் ஊர்ந்து செல்ல செல்ல, பெருங்களத்தூர் என்பது அயல் நாட்டில் இருப்பதை போல் உணர்ந்தேன். எப்படியோ 10 மணிக்கு  பெருங்களத்தூர் சென்ற எனக்கு அத்தனை அதிர்ச்சி காத்திருந்தது.

நாட்டின் நலனில் அக்கறை இருக்கும் சிலரில் நானும் ஒருவன், சுயஉரிமையை நிறைவேற்றுவதில் தான் சரியாக இருப்பதாய் என்னில் என்னுள் காலரை தூக்கிவிட்டு கொண்டிருந்த கர்வம், சடீரென கைகளை கட்டிக்கொண்டு சொல்லுங்க சாமி எனும் தோரணையில் சப்தமும் அடங்கிப்போயிருந்தது பெருங்களத்தூரில் இறங்கி அங்கிருந்தவர்களை கண்டவுடன். கிட்டத்தட்ட 8 வருடங்கள் சென்னையில் குப்பைகொட்டி இருக்கிறேன், அதீத நாட்களில் முன்பதிவு செய்யாமலே பேருந்து நிறுத்தத்திற்கு வந்து அடிச்சு புடிச்சு சேலம் பேருந்தை பிடித்து இருக்கிறேன்.இத்தனை கூட்டத்தை இதுவரை நான் கண்டதில்லை தீபாவளி பொங்கல் திருவிழா நாட்களில் கூட.

அன்று பெருங்களத்தூர் சென்ற அனைவரும் நிச்சயம் அறிந்து இருப்பார்கள் அத்தனையையும். மூட்டை தூக்குற மனிதர்களில் ஆரம்பித்து, கட்டிட தொழிலாளி, அலுவலக தொழிலாளி, கணினி துறை சேர்ந்தவர்கள் வரை அத்தனை மனிதர்களையும் நிற்க கூட இடமில்லாமல் பேருந்திற்காக காத்திருப்பவர்களையும், ஏற்கனவே ஊர்ந்து வரும் பேருந்துகளில் ஈக்களை போன்று தொங்கிக்கொண்டுசெல்லும் மனிதர்களையும் பார்த்து என்ன செய்வதென்று தெரியாது திகைத்தே விட்டேன் ஒரு சில நிமிடங்கள்.

“அட நான்கு நாள் லீவ் போட்டுட்டு ஊர பார்க்க கிளம்பிட்டாங்க ஓட்டு போடுற சாக்குல”, “அட ஓட்டுக்கு ஏதாவது துட்டு வாங்கி இருப்பானுங்க அதுக்காக போறானுங்க”, என்றெல்லாம் கூட்ட நெரிசலில் மனிதர்கள் புலம்பும் வார்த்தைகள் காதுகளில் விழுந்தாலும், அவற்றை ஓரளவிற்கு தான் என்னால் ஏற்று கொள்ள முடிந்தது.,

பிறகென்ன, காரணம் எதுவாகவும் இருக்கட்டும் தவறில்லை, ஓட்டிற்கு காசே வாங்கி இருக்கட்டும், நாலு நாலு லீவு என்பதற்காகவே இருக்கட்டும், இன்னும் ஏதேதோ காரணமாகவே இருக்கட்டும், இத்தனை கூட்டத்தை பார்த்த பின்பும் ஏதோ காரணத்திற்காவது, பின்வாங்காமல் தனது கடமையை ஆற்றிவிட வேண்டும் என்ற இந்த மனிதர்களின் பிடிவாதம் அத்தனை அழகு.

எச்சிலை விழுங்கிக்கொண்டு, சரி ஏதாவது சாப்பிட்டுவிட்டு மெதுவா பேருந்தை பிடிப்போம். இவ்ளோ கூட்டம் கொஞ்சமாவது குறையும் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள என்று உணவு விடுதியை நோட்டமிட, பயமே வந்துவிட்டது, இன்னைக்கு பட்டினி தான் போல இருக்கு என.., வெளிய நிக்குற கூட்டத்த விட, ஹோட்டல்குள்ள நிக்குற கூட்டம் தான் அதிகம்., எப்படியோ ஒரு சிலநிமிடம் வரிசையில் நின்று, எப்படியோ அடித்து பிடித்து இடம் பிடித்து அமர்ந்து,நமக்கு பிடிச்சத சொல்ல எத்தணிக்கையில், பரிமாறுபவரிடமிருந்து “fried ரைஸ் தான் இருக்கு” என்று பதில் வர, சரி எழுந்தா இதுவும் போய்டும் போல இருக்கு என எதையோ சாப்பிட்டுவிட்டு முடித்து வெளியே வர., அய்யயோ என்று என்னையும் அறியாமல் சொல்லும் அளவிற்கு கூட்டம் இன்னும் அதிகமாகி இருந்தது.

சரி போவோம், இன்னா பண்றது!!!!! என்ற காமெடி வசனத்தை பேசிகிட்டே களத்துல இறங்க ஆரம்பிச்சாச்சு., எப்படியும் அடிச்சு பிடிச்சாவது எறிடனும் என தயாராய் இருந்தாலும், வந்து சேரும் அத்தனை சேலம் பேருந்திலும், படிக்கட்டில் கூட பத்து பேருக்குமேல் நின்று கொண்டிருந்ததை கண்டு கொஞ்சம் ஏமாற்றமே என்னுள். எப்பொழுதும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கொஞ்ச நேரம் அல்லது கொஞ்சம் காலம் தாங்கிக்கொண்டு நின்றோமேயானால், வெல்லும் உக்தி மெதுவாய் தென்படும் எத்தகு சூழலிலும் கூட. அப்படி தான் மெதுவாய் சூட்சமம் அறிந்தேன்., மெதுவாய் நிறுத்தத்தை நோக்கி ஊர்ந்து வரும் பேருந்தை, நிறுத்தத்திற்கு வரும் முன்னமே மடக்கினால் ஏறிவிடலாம் என்பதே (பாருங்க மக்களே எப்படி எல்லாம் யோசிக்கிறோம்னு). கிட்டத்தட்ட பேருந்து நிறுத்திற்கு முன்பு நகர்ந்து நகர்ந்து சில கிலோ மீட்டர் முன்பாக நின்று மடக்க ஆரம்பித்தேன் ( மன்னிக்கவும் மடக்க ஆரம்பித்தோம், முன்பின் தெரியாதவர்கள் நண்பர்கள் ஆனோம், சேலம் பேருந்தை பிடித்தே தீரவேண்டும் என்ற ஒற்றை இலக்கில் என்னைப்போல் பல பேர்…)

ஒவ்வொரு பேருந்தாய் மடக்கி விசாரிக்க ஆரம்பித்தோம், “அண்ணா  சீட் இருக்கா என”. இதில் பாரபட்சம் இல்லாமல் அரசு பேருந்தாக இருந்தாலும் சரி, தனியார் பேருந்தாக இருந்தாலும் சரி என. தனியார் பேருந்துகள் ஒரு சீட், இரண்டு சீட் இருப்பதாக கூறுவார்கள், அத்தனை ஆனந்தத்துடன் ஏற முயற்சிக்கையில் “மதுரை தான நீங்க” என்பார். அடப்போங்கப்பா என்று சலித்துக்கொண்டு “இல்லை ” என்போம். கிட்டத்தட்ட நூறுகளை தாண்டி இருக்கும் எண்ணிக்கை, அத்தனை தனியார் பேருந்தும் “மதுரை, மதுரை” என்று மட்டுமே கூவ, அப்பொழுதுதான் புரிந்தது, “மதுரை” ரொம்ப பெரிய ஊரு தான் போல இருக்குடா சாமீ என., ஏன் இந்த வசனம் அடிக்கடி சினிமாக்களில் வருகிறது என, “நானும் மதுரகாரன் தாண்ட”…

கிட்டத்தட்ட நீண்ட நேர போராட்டத்திற்கு பின், அரசு பேருந்து ஒன்றில் ஒரு சீட் இருப்பதாய் கூற, ஏறி உள்ளே சென்றால்., இரண்டு இருக்கைக்கும் நடுவில் நடை பாதையிலும் ஆட்கள் நிற்க, நடத்துனரிடம் கேள்வி கேட்டேன் “எங்க அண்ணா சீட் என?”. இதோ இங்க இருக்குப்பா என ஓட்டுனருக்கு அருகில் இருக்கும்  என்ஞினைக்காட்ட, “என்னனா சொல்றீங்க இதுவா”, இதுமேல எப்டினா 8 மணி நேரம் உட்கார்ந்துகிட்டு போறது என்று கேட்க, இஷ்டம் நான் வா, இல்லைனா இறங்கிக்க என்று கூற, இறங்கிக்குறேன் என கூறிவிட்டு, இறங்க முயற்சிக்கையில். வாங்க பாஸ் இப்டி பாத்தீங்கன்ன வீடு போயி சேர முடியாது என ஒரு குரல் கேட்க, குரல் வந்த திசையை நோக்கி பார்க்க ஆரம்பித்தேன். ஏற்கனவே அந்த  என்ஞின் மேல மூணு பேரு உட்கார்ந்து இருக்காங்க, அதுல நாலாவது ஆளுக்கு தான் என்னை கூப்பிட்டிருக்கிறார் அந்த இளைஞன் அக்கறையோடு.

ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, உடல் மொழியை கேட்காமல் மனதின் மொழியை கேட்டு அமர்ந்துவிட்டேன். “இன்னைக்கு சிவ ராத்திரி” தான் என உள்ளுள் கூறிவிட்டு அமர்ந்துகொண்டேன். சிறிது நேர பயணத்திற்கு பிறகு ஒவ்வொருவராய் பேச ஆரம்பிக்குறார்கள். ” எதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு ஓட்டு போட போறீங்க எல்லாம், நீங்க போடுற ஓட்டுல தான் எல்லாம் மாறப்போகுதா ?, எவன் நல்லவன் சொல்லு, நம்ம சம்பாதிச்சா தான் நமக்கு சாப்பாடு, அதான்  நான் எல்லாம் ஓட்டு போட போகுல சொந்த ஊருக்கு,” என்று சத்தமாய் பேசினார் ஓட்டுனர்.. “அப்படி இல்லைங்க, இவன் சரி இல்ல, அவன் சரி இல்ல அப்டிங்க்ரத சொல்ல நமக்கு ஒரு தகுதி வேணும்ல,நம்ம  கடமைய முடிச்சுபுட்டு, இப்படி கேட்குறதுல ஒரு நியாயம் இருக்கு, முதல்ல கடமையே செய்யாம, இவன் சரி இல்ல, அவன் சரி இல்ல அப்டின்னு சொல்றதுக்கு தகுதியே இல்லாம போகுதுல்ல” என்று பதில் ஒருவரிடம் இருந்து வர., கொஞ்சம் வேகமாய் ஆவேசமாய் பேச ஆரம்பித்தார் ஓட்டுனர். “ஏப்பா, போன தடவை ஓட்டு போட்டேன், ஒன்னும் நடக்கலையே., இதுல என்ன தகுதின்னு கிட்டு, ஓட்டு போட்டா எதுவும் நடக்க போறது இல்ல, அவ்ளோ தான் என்று அவர் முடிக்க”.,

“நாட்டோட கல்வித்தரம் உயர உயர எல்லாம் மாறியே தீரும், மாறும் என்பதே விதி., நாட்டுல நடக்குற ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு சராசரி மனிதனையும் சென்றடைவதில் இப்பொழுது கொஞ்சம் முன்னேறி இருக்கிறது, இது முழுமை அடையும் தருணத்தில் நிச்சயம் மாறும் அனைத்தும் .முழுமையாய் மாற கொஞ்ச வருடங்கள் ஆகலாம், அனால் மாறியே தீரும் என்பது நிச்சயம்., கொள்ளையடிக்குற அரசியல் கூட்டம் கூட  தனது கொள்கையை மாற்றியே தீரும், மேலும் இந்த அரசியல் உலகத்தில் தொடர்ந்து பயணிக்க. 

ஜனநாயகத்த ஒருத்தனால எப்பொழுதும் மாற்ற முடியாது என்பது தாங்க யதார்த்தம். எல்லோரும் ஒண்ணா இருந்தா தான் மாத்த முடியும், எல்லோரும் ஒரு நாள் ஒண்ணா மாறுவாங்க அப்போ இந்த ஜனநாயகத்த மாத்துவாங்க., அந்த “எல்லோரும்” அப்டிங்கற  வார்த்தைக்குள்ள தான் நீங்களும் இருக்கீங்க, அத மறக்காம, உங்க கடமைய செய்யுங்க, எதுவும் பிடிக்கலன்னா “நோட்டா” வுக்காவது போட்டுட்டு பெருமையா சொல்லிக்கங்க,சமுதாயத்து மேல எனக்கு அக்கறை இருக்குன்னு, மத்தபடி பேசுறது எல்லாம் வீண் தான்” என்று அழுத்தமாய் அந்த இளைஞன் கூற சிறிது நேரம் அமைதி நிலவியது.

வலுவான, தெளிவான அந்த இளைஞனின் விவாத வார்த்தைகள் மெதுவாய் என்னையும் சேர்த்து, அனைவரின் காதுகளிலும் ஆழப்பதிந்தது. ” நாட்டையே கொள்ளை அடிக்கும் அசகாய சூரனாக இருந்தாலும் சரி, தேசத்தை இரண்டாக்க கனவு காணும் ராட்சசனாக இருந்தாலும் சரி, தெளிவான சிந்தனையோடு, புதுயுக விஞ்ஞான அறிவோடு தயாராகி கொண்டிருக்கும் என் இளைய தலைமுறைக்கு பதில் சொல்லியே தீர வேண்டும், அந்த நாள், சில ஆண்டுகளில் இருந்தாலும் சரி, சில யுகங்கள் தாண்டி இருந்தாலும் சரி, நீங்கள் வீழ்ந்தே தீருவீர்கள் என் தலைமுறைக்கு முன்னால்.,” என்ற நம்பிக்கை எனது பயண வலியை மெதுவாய் மறைக்க ஆரம்பித்தது…..