Sunday, May 11, 2014

உன் உதிரம் உதிர்ந்து வளர்ந்ததடி...


கால் கொலுசணிந்து சென்றே தீர வேண்டும் பள்ளிக்கு, என அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு மத்தியில்,காலில் செருப்பில்லாமல் முட்கள் தைக்கும் கருவாலங்காட்டின் பாதை வழியே பள்ளிக்கு பயணித்த உன் கால்கள், தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, மாமா ,அத்தை, இப்படி அனைத்து உறவையும் பட்டினியில் இருந்து காக்க, வழி மாறி பருத்தி எடுக்க, கலை பறிக்க, கல்சுமக்க, மண்சுமக்க பயணித்தது உன் பதின் வயது ஆரம்பித்திலயே. பாவம் அத்தனையும் சுமந்து,சற்று நிமிர்த்தி போட்டாய் குடும்பத்தை கம்பீரமாய். இவள் பெண் அல்ல பெரும்தீ என்றுரைக்க எறிந்தாய் கொழுந்தாய்.


அத்தனை இன்னல்களை அடித்து நொறுக்கி கண் அயர நேரமில்லை உனக்கு., காதல் கொண்டாடும் பருவத்தில் கரை சேர்த்தாய் அத்தனை உறவையும் கம்பீரமாய் நின்று, ஊருக்கு ஒரு  பெண் வேண்டும் இவள் போல் குலம்காத்திட,எதிரியும் பிரார்த்திக்கும் வரம் காதில் விழும் இவள் போல் ஒரு மகள் வேண்டுமென. தலை நிமிர்ந்த குடும்பம் உன் சேவை இதுவரை போதும் என்று நிறுத்த, புருவம் உயர்த்தி காரணம் கேட்க., வயசுக்கு வந்த புள்ளைய கண்ணாலம் கட்டிகொடுக்க வேண்டாமா கால காலத்துல என் பதில் வர., பாவமாய் உன் விழி பெருக்கெடுத்து ஓடி,களைப்பாற என்னுகையிலே கழுத்தில தாலி ஏறியது..


குடை சாய்ந்து கிடக்குற குடும்பத்த நீ தான் காப்பாத்தனும்னு உன் காதில் யாரோ ஊதி விட்டார்கள்., உனக்கிது புதிதில்லை., தீயாய் எறிந்தவள் அல்லவா நீ, இந்த கானல் காற்று மண் உன்னை என்ன செய்துவிடும்?.உன்னை நம்பி குடும்பம் என ஒரு நிமிடம் உணர்ந்து, நேரம் காலமற்று காடே கதியாய், வயலே வாழ்க்கையாய், உன் உதிரம் உதிர்ந்து வளர்ந்ததடி அத்தனை பயிரும்.,பிறகென்ன வாழ்க்கையின் அருமை அறியா விளையாட்டுப்பிளையாய் சுற்றித்திரிந்த கணவனையும் சேர்த்தே சுமந்துகொண்டு, வேங்கையாய் போராடினாய் தனியாய் தாகம் தீரும் வரை, இந்த வாழ்க்கை உன்கைக்கு வரும் வரை.,


ஒருசுமை போதாது உனக்கு, இன்னும் இரண்டு சுமை தருகிறேன் என்ன செய்கிறாய் பார்ப்போம் என்ற இயற்கை பரீட்சைக்கு, புத்தகம் புரட்டாமல் முதல் மதிப்பெண் வாங்கினாய் சர்வ சாதரணமாய்., இரண்டு சுமைகளையும் இருகரம் பிடித்து ரௌத்திரம் கற்று கொடுத்தாய் உன் வாழ்க்கையிலிருந்தே, இது தான் உலகம், இந்த காட்டாற்று வெள்ளத்தில் தான் நீங்கள் நீச்சல் பழகியே தீரவேண்டும் என தூக்கி ஏறிய.,தண்ணீர் குடித்துக்கொண்டே ஒரு புள்ளை தாங்கிப்பிடிக்க.,இவன் மீதேறி இன்னொரு பிள்ளை நீச்சல் கற்க., கம்பீரமாய் கரை சேர இருபிள்ளையும், அசாதாரணமாய்,அவ்வளவு தான் உலகம் வா, என்று கரம் பிடித்து  அழைத்து சென்றாய்..


சுமைகலென்று இயற்கை கொடுத்த இன்னல்களை சுக்குநூறாய் உடைத்தெறிந்து, எதிரியும் பெருமூச்சு விடும் இடத்திற்கு தூக்கிபிடித்தாய் உன் இரண்டு செல்வங்களான என்னையும்,உன் அச்சில் முழுமையாய் வளர்ந்த, பயமறியா குட்டிவேங்கையாய் என் தம்பியையும்., பக்கத்து நகரத்தை தாண்ட பயம்கொள்ளும் கிராமத்து கூட்டத்துக்கு நடுவே, படிக்க பல மைல் தூரம் வழியனுப்பி பெருமிதம் கொள்ளும் வேளையில்., படிக்க இம்புட்டு தூரம் போறானுக, கெட்டுப் போயிடபோறாங்க பார்த்து, சூதனமா ஏதாவது சொல்லி அனுப்பு என்ற ஊர் பெரியவர்களிடம், அவுங்க என் வளர்ப்பு, தடம் மாறுறவங்க இல்ல என் புள்ளைக, தடம் உருவாக்குறவங்க என்று ஒற்றை புன்னகையை பதிலாய் எ(ரி)றிந்தவள்.


இருபுள்ளையையும் ஆளாக்கிவிட்டு, கண்ணயர்ந்து இளைப்பாறுவாய் என்று இயற்கையும் நாங்களும், காத்திருக்க., உன் உடல் மட்டும் ஏனோ இன்னும் உன் உழைப்பில் மட்டுமே வாழ ஏங்குகிறது, விடை தேடி விடை தேடி சலித்து போய்விட்டேன் அம்மா.,கண் துடித்து வெடிக்கும் கோபம் என்னில் பலமுறை வந்துபோய்விட்டது தேடிய கேள்விக்கு விடைகிடைக்காமல்..பிறகென்ன வாழ்க்கையின் முதல் பாதியும், பிற்பாதியும் தேய்ந்தே போய்விட்டது, என்ன கொடுத்தால் எங்கள் நிழலில் ஓய்வெடுக்க சம்மதிப்பாய்.,இன்னும் எத்தனை நாட்கள் தான் பெரும்தீயாய் எரிந்துகொண்டிருப்பாய், என் காலில் நிற்கவேண்டும் என்று அடம்பிடித்து.,சூரியனையும் தோற்கடிப்பாய் நீ வாழும் வரை, வாழ்ந்த பின்பும்.


பிஞ்சிலே ரௌத்திரம் பழகிய உன் நெஞ்சம், உன் உழைப்பிலே வாழ்ந்து முடிக்க மட்டுமே பெருமித கர்வம் கொள்ள விரும்பும் என்று தெரிந்தும், மீண்டும் ஒருமுறை கேட்கிறேன் அன்னையே, என்ன கொடுத்தால் எங்கள் நிழலில் இளைப்பாற சம்மதிப்பாய்?. நமக்குள், அன்னையர் தின வாழ்த்துக்கள் எல்லாம் பரிமாறி மகிழ்ந்த பழக்கம் இல்லை இதுவரை., நீயும் எதிர்பார்த்ததுமில்லை., நான் நல்லா இருக்கிறேன் அம்மா என்ற ஒற்றை அழைப்பேசி வார்த்தையில் உச்சி குளிர்ந்து, "நல்லா இரு குமாரு" என்று அத்தனை சந்தோசப்புன்னகையில் நீ வாழ்த்த, நான் மகிழ., உன் அத்தனை உழைப்பும் உயிர்பெறுகிறது, தியாகம் என்றால் உன்னை தவிர வேறு யார் என்ற கம்பீரத்துடன்...

1 comments:

yathavan nambi said...
அன்பு தமிழ் உறவே!
வணக்கம்!

இன்றைய வலைச் சரத்தின்,
திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
"எல்லோருக்கும் பிடித்த ஹீரோ"

சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துகள்!

வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
(குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

வலைச் சரம்

கவி மழை புவி புகும்
இல்லம் வலைச் சரம்!
கதை நல் விதை விதைக்கும்
விளை நிலம் வலைச்சரம்!
கட்டுரைத் தேன் தென்றல் தழுவிடும்
மேனி வலைச் சரம்
செந்தமிழ் இலக்கியம் பைந்தமிழ் இலக்கணம்
பிறக்கும் கருவறை வல்லோர்
நிறைந்த வலைச்சரம் வாழி!

புதுவை வேலு

Post a Comment