Friday, December 17, 2010

எனது பார்வையில் என் தாய் மண்.......இவ்வளவு நாள எங்க போகிட்ட நீ ? அப்டின்னு , நீங்க எல்லோரும் திட்டுறது எனக்கு கேட்குதுங்க, என்னங்க பண்றது?, ஆபிசுல மூட்டை மூட்டையா கொடுத்திருக்காங்க ஆணி, சுவத்துல அடிக்க சொல்லி, இது பத்தாதுன்னு பின்னாடி லாரி வந்துகிட்டு இருக்குங்குறாங்க...

சரி வாங்க போவோம் ........

9.30 அலுவலக வேலை தொடங்கும் நேரம். 7.30 க்கு எழுந்து அவசர அவசரமா உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று அதையும் , இதையும் முயற்சி பண்ணி முடியாம தூக்கிபோட்டுட்டு , ஓடி வந்து புறப்படுவேங்க, அட நமக்கு அலுவலகத்துக்கு புறப்படுறதுக்கு ரொம்ப நேரம்லாம் ஆகாதுங்க. தேவை கேத்த சம்பளமா இருந்தாலும் கொஞ்சம்(கொஞ்சம் இல்லைங்க மிக ) அடிமட்டத்துல இருந்து வந்தவன் நான்,

அதனால உடுத்துகிற ஆடைல இருந்து, அடிக்கிற வாசனை திரவியம் வரை பாத்து தேர்ந்துடுக்கிற அவசியம் இல்லைங்க, அதனால சீக்கிரம் புறப்பட்டுருவேன், ஆனா மனசுக்குள்ள இருக்குற கலாரசிகன் அப்பப்போ கொஞ்சம் நவீன முறையில் நம்மளும் இருக்கலாமென்று நினைப்பான், அதனால சில நேரங்களில் கொஞ்சம் ஆசை பட்டதை விலை அதிகமா இருந்தாலும் வாங்கிடுவான், ஆனா அதுக்கு குறைஞ்சது ஒரு மாசமாவது வேதனை படுவான், இது நமக்கு தேவையான்னு. அதனால அதிக ஆடைகள் என் ஆடை மாட்டும் கொக்கிகளை அலங்கரிப்பதில்லை,

புறப்பட்டு முடிச்சதும் சமையலறையை எட்டிப்பாத்தா, வாரத்துக்கு மூணு நாலு வந்து சமைக்கிறதே பெரிசா நினைசுகிட்டு இருக்கிற சமையல் செய்றவங்க அட இன்னைக்கும் வந்து இருக்கமாட்டாங்க, அட போங்கப்பா இதுக்காவாவது சீக்கிரம் கல்யாணம் முடிக்கணும் போல இருக்கு அப்டின்னு மனசுக்குள்ள புலம்பிகிட்டு, தோல்பையை எடுத்து தோளுல மாட்டிகிட்டு ( அட அப்டி என்ன தான் அந்த தோல்பையில வைச்சு இருக்க அப்டின்னு நீங்க கேட்குறது கேட்குதுங்க எனக்கு, அட அதுக்குள்ளே ஒன்னுமே இருக்காதுங்க, அலுவலகத்துல குறிப்பு எடுப்பதற்காக எப்பவோ வாங்கிபோட்ட குறிப்பேடு, சாப்பாடு இல்லைனாலும் உன்கூட தான் இருப்பேன் அப்டின்னு தோல்பையோடு தினம் அடம்பிடிக்கிற மதியஉணவு பாக்ஸ்.,அவ்வளவுதான் ) கிளம்பிடுவேனுங்க.

தூரம் குறைவா இருந்தாலும் அலுவலகத்துக்கு போற எளிதான ஒரே வழி பக்கத்துல இருக்குற ரயில் நிலையம் தானுங்க, அட ஆமாங்க ரயில தான் தினமும் அலுவலகம் போறேன், வீட்ல இருந்து நடக்க ஆரம்பிச்சதும் அக்காவோட அறிவுரையும், சில பாசமிக்க நண்பர்களோட அறிவுரையும் ஞாபகத்துக்கு வருமுங்க, சொல்றேன் சொல்றேன் என்ன அறிவுரைன்னு? அவசரபடாதீங்க..

ஒழுங்கா காலைல சாபிட்டுரனும், இல்லைனா குடல் புண் வந்துடும் அப்டின்னு அவுங்க சொன்ன அறிவுரை அபாய மணி மாதிரி அடிக்குமுங்க , அய்யயோ அப்டின்னு போற வழியில இருக்குற தள்ளுவண்டி கடைலபோயி நிப்பேன் , அண்ணா ஒரு சொம்பு கூழ் குடுங்க அப்டின்னு கேட்டதும் புன்னகையோட சிரிசுகிட்டு, இந்தாப்பா , கடிச்சுக்க மிளகாய் வேணுமா?, இல்லை மாங்காய் ஊறுகாய் வேணுமா அப்டின்னு, குடுக்குற கூழில் குடல் நிறையரத விட , காட்டுற புன்னகைல மனசு நிறையுதுங்க, இந்த புன்னகையும், இந்த அக்கறையும், குளிர்ச்சியான அறையில் சாப்பாடு பரிமாறுற போலி புன்னகையவிட கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்குதுங்க, இதைவிட இன்னொரு காரணமும் இருக்குதுங்க இந்தக்கடை என்னை ஈர்ப்பதற்கு,

நடுஇரவு ,அதிகாலையா மாறுவது, நடு இரவுக்கு தெரியுதோ இல்லையோ, பசங்கள பெரியபடிப்பு படிக்கவைச்சுபுடனும்னு வைராக்கியத்த மனசுல வைசுகிட்டு இருக்கிற என் அப்பாவுக்கு தெரிஞ்சிரும், அதிகாலை ரெண்டு மணிகெல்லாம் பதநீர் (பணம் கல்லு ) இறக்க கிளம்பிடுவாரு,அந்த இருட்டுல பாம்பு இருந்தாலும், பூரான் இருந்தாலும், தேள் இருந்தாலும் தெரியாதுங்க, அதை எல்லாம் ஒதுக்கிவைசிட்டு எப்படியாவது வாழ்க்கைல ஜெயச்சுபுடனும் அப்டின்க்ரத மட்டும் மனசுல வைச்சுக்கிட்டு, உயரத்த மனசுல வைச்சுக்காம, தவறி கீழ விழுந்தா வாழ்க்கை என்னாகும் என்பதையும் ஓரமா ஒதுக்கி வைச்சிட்டு மரத்துல ஏரி பதநீர் இறக்குறது அப்பாவோட வேலைனா! அம்மாவும் அதுக்கு சளைத்தவங்க இல்ல, அந்த இரவுளையும் எதுக்கும் பயப்படாம ஒவ்வொரு மரமா போயி நின்னு பதநீர சுமந்து வந்து, அதை காசாக்குற வரைக்கும் அவுங்க பொறுப்பு,

காலைல அவசர அவசரமா பள்ளி பயிற்சி வகுப்பு போறப்ப, சொம்புல பதநீர ஊத்திகொடுத்துட்டு ,அண்ணா சீக்கிரம் குடிச்சிட்டு காச கொடுங்க அண்ணா, நேரமாச்சு நான் போகணும்னு அடம்பிடிக்கிற என்னிடம், தம்பி நீ ஒரு சொம்பு குடிச்சு பாருன்னு சொல்றவங்ககிட்ட, என் பையன் குடிக்க மாட்டான் அப்டின்னு நம்பிக்கையா அம்மா சொன்ன வார்த்தைய இன்னும் மனசுல ஆழமா பதிச்சுவைச்சுஇருக்கேங்க.அம்மா நிஜமா சொல்றேன் இப்ப நான் பிடிச்சு இருக்க சொம்புல கூழ் தான் இருக்கு, ஆனா அப்போ நீ என்மேல வைச்ச நம்பிக்கை தான் என் மனசுமுழுவதும் இன்னமும் இருக்கு. .

அவசர அவசரமா கூழ குடிச்சிட்டு வேகமா ஓடிபோயி ரயில்யேரி , இறங்குற அந்த ஐந்து நிமிட அழகான நேரத்துல நான் பாக்குற நிகழ்வுகள் அத்தனையும் அப்டியே மனசுல பதியுமுங்க, அந்த அவசர கூட்டத்துல அப்படியும், இப்படியும் ஆடி அசைஞ்சு எப்படியாவது தலைய மேல கொண்டுவறதுக்கு நான் சிரமப்படுவேன் பாருங்க, ஐயோ நான் மட்டும் இல்லைங்க அங்க நிக்குற எல்லோரும் தான் கஷ்டபடுவாங்க, எப்படியோ ஒருவழியா தலைய மேல கொண்டு வந்து அந்த ஐந்து நிமிடத்துல பாக்குற கேட்குற யாவும் அழகாய் இருக்கும், வெறும் "தாயே பிச்சை போடுங்க அப்டின்னு கேட்பதிற்கு பதிலா", கண்ணுதெரியலைனாலும் ஏதாவது ஒரு திறமைய வளர்த்து, அத நம்மகிட்ட காட்டி, வயித்துக்கு உதவி கேட்கும் அவுங்களோட முயற்சி, அங்க ஓரமா உட்கார்ந்து இருக்குற ஏமாத்தி பிழைக்கிற ஒரு மனுசனோட மனச சத்தமில்லாம பாதிச்சிட்டு போற அழகே தனி தானுங்க,

இன்னைக்கு என் மனச பாதிச்சிட்டு போன ஒரு நிகழவ தானுங்க இப்ப சொல்லபோறேன், கூட்டத்துல தலைய தூக்கி மேல பார்த்தேன், அவர பாக்கவே ஆச்சாரமா இருந்தாரு , நெத்திமுழுசா திந்நீறு,அவசர அவசரமா அவரு கைல கட்டி இருக்குற சாமி கையிற (கருப்பு கையிற ) அவிழ்க்க முயற்சி பண்றாரு, எதுக்குன்னு எனக்கு புரியல, கொஞ்சம் ஆவலா நானும் இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு கூட்ட நெரிசலில் தலைய உயர்த்தி பாக்குரேங்க, இப்போ பார்த்த பக்கத்துல இருக்குரவரும் இப்போ அவருகூட சேர்ந்து அவிழ்க்க முயற்சிபன்ராறு, ஒன்னுமே புரியல என்ன பண்றாங்கன்னு, எதுக்கு இவ்வளவு அவசர படுராருன்னு..அதற்குள்ள நான் இறங்க போற இடமும் வர போகுது ,எப்படியோ அவுத்துட்டாங்க, சரி கையிற மாத்தபோராறு போல அதான் அப்டின்னு நினைச்ச எனக்கு நிஜமாவே கண்ணு கலங்கிடுசுங்க,அவசர அவசரமா ரயில் ஏறுறப்ப பாதி கால் இல்லா முதியவர், பிளாஸ்டிக் கால் கட்டிருந்த கயிறு துண்டாகிடுசுங்க, அந்த பெரியவர் அடுத்த நிறுத்தத்துல எறங்க போறாரு,அவருக்கு உதவி செய்யத்தான் அத்தனை பேரும் அவசரபட்டாங்க அப்டின்னு நினைக்கும்போது என் மக்கள் மேல ரொம்ப மரியாத வந்து ஒரு படி மேல போயி கலங்கின கண்ணீருல வணக்கம் வைச்சேங்க, அவசர அவசரமா அத்தனை பெரும் அவரு காலுல, அந்த பிளாஸ்டிக் காலை கட்டிவிட்டதும் அவரு சொன்ன நன்றி இன்னும் மறக்க முடியல ..

தையவு செய்து என் இந்திய மண்ணை குறை சொல்லாதீங்க,நிஜமா இங்கு கருணை உள்ளவர்கள் அதிகமுங்க, ஒருசில பேரை வைச்சு இந்த மண்ணை குறைச்சு சொல்லாதீங்க, எந்த நாட்டுலங்க பையனுக்கு ஐம்பது வயது ஆகுரப்பகூட, என்பது வயது அப்பா கஷ்டப்பட்டு உழைச்சு பையன் நல்லா இருக்கணும்னு காசு கொடுக்குறத பாத்து இருக்கீங்க ?.. பையன்கூட சண்டை போட்டுகிட்டு தனியா வந்து வாழ்ந்தா கூட , "என் பையன் நல்லா இருக்கானா அப்டின்னு பாக்க போறவங்ககிட்ட கேட்குறது எந்த நாட்டுலங்க இருக்கு என் இந்திய மண்ணைவிட?..உடலுறவு என்பது மணமானதற்கு பிறகு இருக்கவேண்டும் என்று மகளுக்கு சொல்லிகொடுக்கும் தாய் எந்த நாட்டுலங்க இருக்காங்க என் இந்திய மண்ணை தவிர அதிகமாய் ?..

கிரிக்கெட் விளையாட்டுல என் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடும்போது,கடைசி பந்துல மூன்று ரன் அடிக்கணும் இந்தியா, மூன்று ரன் அடிச்சிட்டா , கலக்கிட்டானுங்க அப்டின்னு பேசிக்கிறோம், அடிக்காம விட்டுட்டா வாய்க்கு வந்தபடி திட்டுறாங்க, சிலபேர் லஞ்சம் வாங்கிட்டு ஆடுறானுங்க அப்டின்னு திட்டுரோம், சிலபேர் ஒருபடி மேல போயி தகாத வார்த்தைல திட்டுரோம். எப்போ பார்த்தாலும் இந்திய தேசத்த குறை சொல்றதுக்குன்னே ஒரு கூட்டம் இருக்குதுங்க , அது ஏன் அப்டின்னு தான் புரியல ,

இதே இந்திய மண்ணுல இன்னொரு கூட்டம் இருக்குதுங்க , ஒரு பந்துல ஆறு ரன் அடிக்கணும் அப்டிங்கற பெரிய இலக்கா இருந்தா கூட, என் இந்தியா அடிக்கும்னு ஒரு நம்பிக்கையோட காத்து இருப்பாங்க , இந்த நம்பிக்கைய பாத்து கேலி பண்ண ஒரு கூட்டம், அட இந்த கேலிய பாத்து கவலைபடமாட்டாங்க .ஏங்க நம்ம அம்மா மருத்துவமனைல உயிருக்கு போராடிகிட்டு இருக்காங்க, மருத்துவர் வந்து தெளிவா சொல்றாரு , இனி உங்க அம்மா பிளைக்கமாட்டாங்கன்னு, அவ்ளோ படிச்சவரு, தெளிவா சொன்னதுக்கு அப்புறமும் நம்ம அம்மா பிளைச்சுருவாங்க அப்டின்னு ஒவ்வொரு பாசமுள்ள பையனக்கும் மனசுல ஏதோ ஒரு ஓரத்துல நம்பிக்கை இருக்குமேங்க, அந்த நம்பிக்கை தாங்க இந்த கூட்டத்துக்கும் என் இந்திய தேசத்துமேல , அடிக்காம விட்டுட்டா கூட, சூப்பர் கடைசி வரைக்கும் வந்துட்டாங்க அப்டின்னு சொல்வாங்க...


எந்த நாட்டுலங்க ,அடிபட்டு சாககிடக்கரவண, சாலையோரத்துல பூ விக்குற அம்மாவோ , தள்ளுவண்டில வேலை செய்யுற கூலிக்காரரோ, மருத்துவமனைல சேர்த்திட்டு, அழுதுகிட்டே " காப்பாத்திடு நைனா " அப்டின்னு சொல்றவங்கள பார்த்துருகீங்க என் இந்திய மண்ணைவிட அதிகமாய் ?....

என் இந்திய மண்ணில் கருணை அதிகம், கனிவு அதிகம்,உழைப்பு அதிகம், திறமை அதிகம், சிறந்த பெண்மை அதிகம், காதல் அதிகம், நட்பு அதிகம், சிறந்த தாய்மை அதிகம்,சிறந்த கலாச்சாரம் அதிகம்...என் இந்திய நாடு சிறந்தது என்று ஏற்று கொள்ளும் மனதை தவிர ..... :( :(Saturday, November 20, 2010

இப்பூமியில் கால் தடம் பதித்த என் குட்டி நிலவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் (நவம்பர்-22)
நீ ஞானம் உள்ளவளாய் வளரவேண்டும் என வாழ்த்த போவது இல்லை,

தெளிந்த அறிவு, மேலோங்கிய சிந்தனை, சிறந்த குறிக்கோள் உடைய என் தேவாஅண்ணா, உன் சிறந்த பெருமைக்குரிய அப்பாவாய்,
கனிவும், கருணையும் , நற்சிந்தனையும், பாசமும் உடைய என் அண்ணி, உன்சிறந்த பாசத்திற்குரிய அம்மாவாய்,

பிறகெதற்கு என் குட்டி நிலவிற்கு வாழ்த்துக்கள், தீர்மானிக்கப்பெற்ற ஒன்றுதானே.

குட்டி நிலவு , உவமைக்காக வடித்த வார்த்தை இல்லை, அத்தனை அழகையும்கொட்டி நிரப்பிய குட்டி நிலவின் வார்ப்பு நீ,

முதல் முறை பேசுகிறாய் அலைபேசியில் என்னுடன், உன் வார்த்தைகள் புரியவேண்டும் என்று பிரார்த்தனையுடன் பேச தொடங்கும் என்னிடம்,
"எப்படி இருக்கீங்க, சாப்பிட்டீங்களா?".......பாசத்துடனும் ,மரியாதையுடனும்உதிர்க்கபட்ட வார்த்தைகளில் நிரம்பி கிடக்கிறேன் என் குட்டி நிலவே, எவ்வளவுஅழகான வளர்ப்பு இலக்கணத்தில் வார்க்கப்பட்டு இருக்கிறாய் என ,

சுட்டி அலைவரிசை நீ காண , இணைப்பை புதுபிக்க நிற்கும் என்னிடம் "சுட்டிஅலைவரிசை நிச்சயம் வேணும்பா " என அடம்பிடித்த ஒவ்வொரு கெஞ்சலிலும், உன் மிகச்சிறந்த பாசமுள்ள அப்பாவாய் தெரிகிறார் என் தேவா அண்ணா...

எவ்வளவு கொட்டினாலும் ஈடாக முடியாது என்று தெரிந்தும், என் சிறிய நன்றிகள்சமர்ப்பணமாய் இங்கே ..

நீ உருவாகிய அந்த கணத்தில் இருந்து உனக்காய்
ஒவ்வொரு அடியிலும் கவனம் காத்த உன் தாயிற்கு,

விரும்பி உண்ணும் உணவையும் கூட உனக்காய் தவிர்த்து இருக்கும் அந்தஉன்னத உயிர்க்கு,

உனக்காய் தூக்கம் தொலைத்த இரவுகளில், யாருமறியாமல் உன்னோடுஉரையாடிய களைப்பில் உறங்கிய உன் மாதாவிற்கு ..

தோல்களையும், சதைகளையும், எலும்புகளையும் , நரம்புகளையும் தாண்டிஉன்னுடன் முதன் முதல் உணர்வு பரிமாணத்தை கொட்டிய உன் அம்மாவிற்கு ..

நீ ஜனித்த அந்த நொடியில் தன் உடல் காயங்களை மறந்து, உன்னை கைகளில்ஏந்தி புன்னகை சிந்திய ஒப்பற்ற ஜீவனுக்கு...

உன் அழுகையிலும், உன் உடல்நலமின்மை நேரங்களிலும் , உன்ன மறந்து, உலகமே நீ என கிடந்த விலை மதிப்பற்ற மாணிக்கத்திற்கு.....

உன் சிரிப்பிலும், உன் செல்ல பேச்சிலும் தன்னை மறந்து கர்வம் கொண்ட உன்அன்னைக்கு....

நீ தட்டு தடுமாறி நடை பழக முயன்ற தருணத்தின் ஒவ்வொரு தோல்வியிலும், வெற்றிக்காக தனக்குள் பிரார்த்தனை செய்த அந்த தாய்மைக்கு ...

நற்பழக்கங்களை உணவோடு சேர்த்து ஊட்டி வளர்த்து, குட்டி நிலவைமிளிரசெய்து இருக்கும் மிகசிறந்த, விலைமதிப்பற்ற உன் அம்மாவாகியமுதன்மை கடவுள்க்கு...


உன்னை சுமந்த பத்து மாதத்தையும், இனி சுமக்கபோகும் நாட்களையும், பதிவு, கவிதை, தொடர் என்ற மிக நுண்ணிய அணுக்களால் விளக்கிவிட முடியாது, உருவக படுத்திவிட முடியாது,கற்பனை செய்துவிடமுடியாது, உணர்வைபுரிந்துவிட முடியாது ,

உணர்ந்த சிலதுளிகளை இங்கே சிந்தி இருக்கிறேன் எழுத்தாய்........

படிக்க வேண்டிய படிப்புகள் ஏராளம் உன் அம்மாவிடமும், அப்பாவிடமும்...


வாழ்த்துக்கள் என் குட்டி நிலவிற்கும்,நிலவின் அம்மாவிற்கும், நிலவின்அப்பாவிற்கும்(என் தேவா அண்ணா) இந்த நன்னாளில்......


ப்ரியங்களுடன்
விஜய்


Saturday, September 4, 2010

தனலஷ்மி - பாசம் என்றால்....இரண்டு மாதத்துக்கு முன்பே , நல்லவனாய், பவ்வியமாய் நின்று , என் மேல் அதிகாரியிடம் இரண்டு நாள் விடுமுறை கேட்டு, சரி என்ற அனுமதியும் வாங்கிவிட்டேன். நாளை விடுமுறை என்று வகுப்பாசிரியர் மாலை நேரத்தில் வாசிக்கும் தகவல் அறிக்கை கடவுளாய் தெரிந்து, தகவல் அறிக்கைக்கு நன்றி சொல்லிவிட்டு அருகில் அமர்ந்து இருக்கும் நண்பனை சந்தோசத்தில் அடித்துவிட்டு, நாளை என்ன செய்யலாம் என்ற ஓராயிரம் திட்டங்களை தீட்டும் பள்ளி நாட்களை ஞாபகப்படுத்தியது, சரி விடுமுறை எடுத்துகொள் என்று என் மேல் அதிகாரி கூறிய அந்த நிமிடத்தில் .

நிச்சயம் சந்தோசம் இருக்கத்தானே செய்யும்,ஆறேழு மாதத்துக்கு பிறகு சொந்த ஊருக்கு, அப்பா, அம்மாவை பார்க்க போகிறேன், முக்கியமாய் என் தனலஷ்மியை பார்க்க போகிறேன், "நீ திருவிழாவுக்கு கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என்ற தனலஷ்மியின் ஆணைக்கு தான் இந்த விடுமுறையே" . யார் இந்த தனலஷ்மி?, தான் ஒரு பெண்ணாய் இருந்தாலும் ,தன் கணவனோடு சேர்ந்து புழுதி க்காட்டிலும், சேற்றிலும்,வெய்யலிலும் வியர்வை சொட்ட சொட்ட விவசாயம் பார்க்கும் தருவாயிலும் கூட,என்னை சாப்பிட்டியா?, நல்லா சாப்பிட்டியா?,என்ன சாப்பிட்ட?, நல்ல உணவை சாப்பிட்டியா?,பார்த்து சூதனமா போகனும், பேருந்தில் தொங்கிக்கொண்டு போககூடாது.

நம்ம அப்பா, அம்மாவோட அலைபேசியில் பேசினியா?,உடற்பயிற்சி செய்யும்போது பார்த்து செய்யனும், அதிகஎடை தூக்கக்கூடாது, ரொம்ப நேரம் அரட்டை அடிச்சுட்டு நேரம் கழிச்சு தூங்கமா, சரியான நேரத்துல தூங்கணும் என்று ஆயிரம் அக்கறையை, அன்போடு அடுக்கடுக்காய் என் மேல் திணிப்பவள். அக்கா என்ற ஒற்றை உறவில் உலகம் காட்டியவள், அக்கா என்ற வார்த்தைக்கு அம்மா என்றொரு அர்த்தம் இருப்பதாய் பாசத்தால் உணர்த்தியவள்,

அம்முமா, புஜ்ஜிமா,தங்கம், செல்லம், மயிலு, என்று பாசத்தை- செல்ல பெயர்களாய் என் மீது ஒட்டிவிட்டவள், பூஜா, தினேஷ் என்ற அழகிய அவள் செல்லங்களுக்கு மூத்தவனாய், முதல் பையன் நீ என்று பூரிப்போடு புன்னகைத்து என்னை மார்போடு பாசமாய் அனைத்து ஆனந்த கண்ணீர் வடிப்பவள். அவள் பாசத்தை நம்பிக்கையாய் எழுத ஆரம்பித்துவிடலாம்,முடிக்கமுடியாது என்று

ஆசையாய் காத்திருந்த நாள், நிஜத்தில் நிழலாடும் தருணமாய் மலர்ந்தது . அவசர அவசரமாய், அலுவலக வேலைகளிடம் எனக்காய் நான்கு நாட்கள் காத்துஇருக்கும்படி கூறிவிட்டு , என்னோடு வாருங்கள் என் அக்காவை காணலாம் என்று என் உடைகளிடம் சொல்லிக்கொண்டே, அவைகளின் அனுமதியின்றி திணித்துக்கொண்டு புதன்கிழமை இரவு ஓடி சென்று சேலம் பேருந்தை பிடித்து இருக்கையில் அமரும்பொழுது வியர்வை துளிகள் அழகாய் கண்சிமிட்டி, என் தேகம் சுற்றி பார்க்க கிளம்பிவிட்டன. மனது மட்டும் ஏனோ என் அக்காவின் பாசத்தை நினைவில் நிரப்பிக்கொண்டிருக்க மறக்கவில்லை, நிச்சயம் ஒரு 100 பேரிடமாவது சொல்லி இருப்பாள்,என் தம்பி வருகிறான், தம்பி வருகிறான் என்று. என்னையும் மீறிய ஆவல் ஓட்டுனரின் வேகத்தை பார்த்து சலித்துகொண்டது அவ்வப்போது.

எப்படியோ வீடு சென்றுவிட்டது மனமும், உடலும் வியாழக்கிழமை அதிகாலையில் . அப்பா, அம்மாவோடு சந்தோசமாய் சில மணித்துளிகள்.சிறிதுநேரத்தில் அக்காவிடம் இருந்து அழைப்பு, எப்பொழுது இங்கே வருகிறாய் என்று, சிறிது விளையாட்டாய், நான் ஊருக்கு நாளைக்கு தான் வருவேன் என்றதும், அழுகையுடன் துண்டிக்கப்பட்டது அழைப்பு. அவசரமாய் புறப்பட்டு, அக்காவீட்டின் முன் நின்றேன், அக்கா கடைக்கு பொருள்கள் வாங்க போயிருப்பதாய் உணர்ந்தத தருணத்தில் உறவினர்களின் வரவேற்பு அனைத்தும் முற்றுபெராமல் தொக்கிநின்றது என் அக்காவின் பாச வரவேற்ப்பு இல்லாமல்.


வாசலை உற்றுநோக்கியே தோய்ந்த என் உடலும், மனுமும் மௌனமாய் கனத்துகொண்டே தூக்கத்தை கட்டிக்கொண்டது, அக்காவின் வருகையை உணர்ந்த தருணத்தில் பூத்த ஆவலை அழகாய் அக்காவிடம் கொண்டு சேர்க்க ஓடி சென்று அக்காவின் அருகே அமர்ந்து, சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என்று புன்னகைபூத்த என் உதடுகூட சுருங்கிகொண்டது அக்காவின் கலங்கிய கண்களை பார்த்ததும். என்ன சொல்ல?, அழகாய் சொல்லிவிட்டாள் என் அக்கா என் மேல் வைத்து இருக்கும் பாசத்தை கலங்கிய கண்ணீர்துளியால்,

அம்முமா எப்படி இருக்க?, என்பதில் ஆரம்பித்தது எப்பொழுது முடிந்தது என்று கணக்கில் வைத்து கொள்ளவில்லை,அத்தனை வேலைக்கு மத்தியிலும் ஓடி வந்து "சாப்பிடு விஜிமா" என்று கெஞ்ச மறக்கவில்லை என் அக்கா. எவ்வளவு பாசமுங்க என் அக்காவுக்கு என்மேல, இந்த பாசத்துக்கு தாங்க உலகத்துல அத்தனை உயிரும் ஏங்குதுங்க,என் கையை பிடிச்சு கூடவே சின்ன குழந்தை மாதிரி கூட்டிக்கிட்டு, சமைக்கிறதுல இருந்து, சாப்பாடு போடறது, துவைக்கிறது, பாத்திரம் கழுவறது, சொந்தகாரங்கள வரவேற்கிறது வரைக்கும் அத்தனை வேலையையும் சலிக்காம செய்ததுங்க.

சின்னதாய் என்னை யாரவது வேலை செய்ய சொன்னாகூட, ஓடி வந்து உன்னை யாரு விஜிமா செய்ய சொன்னது, நான் பார்த்துக்கிறேன், நீ ஒன்னும் செய்யகூடாதுன்னு சொல்றப்ப கண்ணீர் சொட்டுமுங்க, கண்ணீர துடைச்சு எரிந்துட்டு, அடம்பிடிச்சு என் அக்காவீட்டு திருவிழாவுல நானும் என்னால முடிஞ்சவேலை செய்யணும்னு செய்தபோது, கொஞ்சம் பெருமையா தான் என் அக்கா எல்லோர்கிட்டயும் சொல்லிகிட்டா "என் தம்பி பாரு ,முன்னாடி நின்னு எடுத்துக்கட்டி வேலை பார்க்கிறான்னு". .

எது சரி, எது தவறு அப்டின்னு பிரிச்சு பார்க்கிற பக்குவம் என்கிட்ட இருக்குங்க, யோசிச்சுமுடிவு எடுக்க தெரியுமுங்க, ஆனா இது எல்லாம் மறந்துபோகுமுங்க சிலநேரங்களில்,அந்த மாதிரி தருணங்கள் நிறையா உண்டு, அதுல ஒண்ணு தான் நான் அப்போகடந்து போனேன். சின்ன குழந்தைல ஆரம்பிச்சு, வயசாகி சாகுற மனுஷன் வரைக்கும் தன்னை நேசிக்கிற அம்மா, அல்லது நேசிக்கிற மனைவி, நேசிக்கிற பையன், நேசிக்கிற பொண்ணு, நேசிக்கிற அக்கா, நேசிக்கிற அண்ணா இவுங்க தன்னை தான் அதிகம் நேசிக்கணும் அப்டிங்கற ஒரு இனம்புரியா, பாசத்துல மிதக்குற ஒரு பிடிவாத உணர்வு இருக்கும்.

அதேதாங்க எனக்கும், என் அக்கா ,என்னை கவனிக்க தவறிய சில நிமிடங்கள், உறவினர்களை சிரிசுகிட்டே வரவேற்கிற தருணங்கள் என்று நிறையா தருணங்கள் என் பிடிவாதத்தை அதிகரிக்க தான் செய்தது, என் அக்கா என்னை மட்டும் தான் நேசிக்கணும், என்னை கவனிக்க தவறக்கூடாது என்ற பிடிவாதம் , ஓவ்வொரு மனிதனுக்குள்ளும் குழந்தைதன பிடிவாதங்கள் சில நேரங்களில் இருக்கத்தான் செய்கிறது, ஆயிரம் பேர் அறிவுரை கூறலாம். அம்மாகிட்ட போயி தீருவேன்னு அடம்பிடிக்கிறதும் ,அம்மாகிட்ட வேறஒருத்தங்க குழந்தை கையில இருக்குறப்ப வர பிடிவாதமும், சின்ன குழந்தைல இருந்தே ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் உயிராய் கலந்துவிடுகிற, தவிர்க்க முடியாத ஒரு உணர்வு.

என் முகத்தில் இருக்கும் கோபத்தை புரிந்து, ஓடி வந்து,

"விஜிமா, எதுக்கு கோபம்?." என்ற கேள்வியை கேட்கும்பொழுதே தெரிந்திருக்கும் என் அக்காவிற்கு எதற்காய் என் கோபம் போராடுகின்றன என்று?. இது முதல் முறை அல்ல, ஆச்சர்யபடுவதற்கு, பல லட்சகணக்கான முறை பார்த்த பிடிவாதம் தான். என் அருகே அமர்ந்து, என் கன்னங்களை பிடித்து,

"விஜிமா, நான் உன் அம்மா, நீ தான் எனக்கு முதல்,அப்புறம் தான் இந்த உலகமே, மற்றவர்களிடம் சிரிச்சு பேசுவதாலோ, உன்னை சில நேரங்களில் கவனிக்க தவருவதாலோ உன்மேல் என் பாசம் குறைஞ்சுடுச்சு என்று அர்த்தம் இல்லை விஜிமா "என்று கூறிமுடித்து, கன்னத்தில் முத்தம் இடும்பொழுது கண்ணீர் சிந்தியது என் கண்கள்.

விஜிமா எதுக்கு அழுகுற?, அழகூடாது, என்று என் கண்ணீரை துடைத்துவிட்டு, அவள் கண்கள் கலங்குவதை காணும்பொழுது இதயம் கனக்க செய்தது, வா விஜிமா, இனிமேல அம்மா உன்னை கவனிக்க தவறமாட்டேன் என்று, என்னை கூடவே கைபிடிச்சு சுத்தினது , இந்த உறவுகாரங்களால புரிஞ்சுக்க முடிஞ்சுதான்னு தெரியல, "இந்த பையன் என்ன குழந்தையா இப்படி கூடவே சுத்துறான், இந்த பொண்ணுக்காவது அறிவுவேணாம் , இப்படியா கூடவே கூட்டிகிட்டு சுத்துறது" என உறவுகாரங்க மனசுக்குள்ள கேட்ட கேள்விகளுக்கெல்லாம் என் அக்கா சத்தமா சொன்னா பதில் "விஜிமா என் முதல் பையன், எத்தனை வயசானாலும் 3 மாச குழந்தை தான் இவன் எனக்கு"

அழகாய்,சந்தோசமாய் நகர்ந்த மூன்று நாட்களும், என்னை சோகமாய் நான்காம் நாளின் கையில் ஒப்படைத்தது. என் அக்காவை விட்டு பிரிந்து செல்ல போகிறேன், என் அக்காவோட பாசத்துல கலங்கிபோன என் மனசு அடம்பிடிச்சுது அங்கிருந்து புறப்பட்டு செல்ல, அவ்வளவு பாசம் காட்டின என் அக்காகிட்ட, போயிட்டு வருகிறேன் என்று சொல்லிட்டு, திரும்பிபார்க்காம வீட்டுக்குவந்து தேம்பி தேம்பி அழுது, சொட்டிய ஒவ்வொரு கண்ணீரிலும் என் அக்காவோட பாசத்தை பார்க்க முடிஞ்சுது.சேலத்துல இருந்து சென்னைக்கு பேருந்து புடிச்சு அமர்ந்து, அக்காகிட்ட அலைபேசியல் அழுதஅழுகை பேருந்தில தூங்கிக்கொண்டு இருந்தவங்கலோட காதுகளை எட்டி இருக்கும்,


இயல்பு வாழ்க்கைக்கு வர மூன்று நாட்கள் பிடித்தது, பார்த்து பார்த்து சாப்பிடு, தூங்கு, அங்க போகாத, அந்த வேலை செய்யாத என்று பாசம் காட்டிய அம்மா அருகே இல்லை எனும்பொழுது, இந்த வாழ்க்கை எதுக்கு?,பாசத்தை பத்திரமாய் வீட்டில் மடித்துவைத்து விட்டு இங்கே எதைதேடுகிறேன் என்ற ஆயிரம் கேள்விகள் மனதை இன்னும் கனப்படுத்தியது . இந்த மூன்று நாட்களும் அக்காவை அழைக்கும் பொழுதெல்லாம் , அக்கா கூறிய முதல் வார்த்தை " நீ எங்கு இருந்தாலும், அம்மா நான் உன்னோடு இருக்கிறேன்".நான் அனுப்பிய அதிக குறுந்தகவல் "I Love U Akka, I Miss U Akka" .இந்த ஒற்றை வார்த்தையால் என் அக்காவின் பாசத்தை அடக்கிவிடமுடியாமல், உணர்த்தமுடியாமல்,சரியாக சொல்லிவிட முடியாமல் தவித்ததின் விளைவாய் "தனலஷ்மி -பாசம் என்றால்." இதுவும் முழுமையாய் உணர்த்தியாதாய் ஏற்றுகொள்ளமுடியாமல் கனத்த இதயத்தோடு சுற்றிகொண்டிருக்கிறேன்...


ஒரு வார்த்தையிலும், ஒரு பதிவிலும் முடிந்துவிடுவதாய் உணரமுடியவில்லை என் அக்காவின் பாசம் ...ஜென்மங்கள் தாண்டியது ...


                                                                                         
                                             

Tuesday, August 17, 2010

என்னை எனக்கே அறிமுகம் செய்த அந்த நாட்கள்...வாழ்க்கை புத்தகத்தின் "சந்தோசம் "எனும் ஒரு பக்கத்தை தேடிக்கொண்டிருந்த நாட்களில் நான் படிக்காமலே விட்டு சென்ற பக்கங்கள் ஏராளம், அப்படி இருந்தும் வாழ்க்கையின் சில பக்கங்கள், வாழ்க்கையின் முக்கியத்துவத்தை கற்று தர மறக்கவில்லை,வாழ்க்கையை கற்று தந்த பக்கங்களைத்தான் இப்பொழுது உங்களுக்காய் திறந்து வைக்கிறேன்.மிகச் சிறந்த மனிதனில்லை நான், சரித்திரங்களும், சாதனைகளும் இருப்பதற்கு. இயல்பான மனிதன், என் வாழ்க்கை பக்கத்தில் படிக்க போகும் யாவும் உங்களுக்குள் கடந்த சென்ற ஒன்றாகத்தான் இருக்கும்.

என்னை பொறுத்தவரை அனைத்து நாட்களும் ஒன்று தான், நான் என் வாழ்க்கையை தேடிய அந்த 2007 ஆம் ஆண்டில். அவசர அவசரமாய் உடுத்தும் ஆடைகளை பையில் திணித்துக்கொண்டு, "சரி வருகிறோம், அலுவலகத்திலிருந்து அப்படியே (சொந்த) ஊருக்கு போய்விடுவோம்" என்று அதிகாலையில் அறை தோழர்கள் சொல்லி முடிக்கும் பொழுது, அன்றைய தினம் வெள்ளிகிழமை என்பது புரிந்திருக்கும் என் மனதிற்கு, இரவு பகல் என அனைத்து நேரங்களிலும் தனது சந்தோசத்தை கணினியோடு பகிர்ந்துவிட்டு, நிஜ சொந்தங்களோடு பகிர்ந்துகொள்ள அத்தனை ஆனந்தமாய் விடியும் ஒவ்வொரு வெள்ளிகிழமைகளும் அவர்களுக்கு. வேலை கிடைத்த பின்பு தான் ஊருக்கு செல்வேன் என்று முடிவை மூச்சாய் சுவாசிக்கும் எனக்கு, நீ தனிமை படுத்தபடுகிறாய் என்பதை சொல்லும் ஒவ்வொரு வெள்ளிகிழமைகளும் எனக்குள் கற்றுத்தந்த பாடங்களை பத்திரமாய் இருக்கி கட்டியணைத்து வைத்து இருக்கிறேன் இன்றும். அப்படி தான் அந்த வெள்ளிகிழமையும், எனக்கான ஒரு பாடத்தையும், உணர்வு பரிமாற்றத்தையும் கையில் வைத்து காத்து கொண்டிருந்தது...

நண்பர்கள் அலுவலகத்திற்கு கிளம்பும் வரை எழுவதில்லை நான், அதற்கான காரணங்கள் மிகப்பெரியதாய் ஒன்றுமில்லை, சென்னையில் வாடகை வீட்டில் தங்கும் அனைவரும் சந்திக்கும் ஒன்று தான், குளியலறையும், கழிவறையும் ஒன்றாக கட்டி, ஒரே கதவில் காசை மிச்சபடுத்தி இருக்கும் நுட்பம் தெரிந்தவர்கள் வீட்டுசொந்தக்காரர்கள் என்று பெருமூச்சை மட்டுமே விட்டுசெல்லும் சராசரி மனிதனில் தான் நானும் .

அன்றும் வழக்கம் போல், பொய்யாய் கண்விழித்த சிறிது நேரத்தில்,அனைத்தையும் முடித்துவிட்டு, காலை உணவு என்பதை சாலையோர தேனீர் கடையின் ஒற்றை கோப்பை தேநீரில் வழக்கம் போல் முடித்தேன், மதிய உணவு என்பதும் தூக்கத்தில், படித்ததை திரும்ப திரும்ப நேர்முகத்தேர்விற்காய் முயற்சி செய்த தருணத்தில் முடிந்தது. எங்கெங்கோ அமைதிக்காய் தெருக்களை தனிமையில் சுற்றி, சில இடங்களில் அமர்ந்து சுமைகளை துளைத்ததாய் நினைத்து, சுற்றி முடித்து வீடு திரும்பினேன்,

என் அறைகதவை திறக்க முயற்சி செய்கிறேன், கதவருகே வாழ்க்கையின் நிமிடங்களை எண்ணிக்கொண்டு இருக்கிறது அணில்குட்டி, கால்கள் அடிபட்ட நிலையிலும் என்னை கண்டதும், நகர்ந்து ஓட முயற்சிக்கும் அதன் இயலாமையை கண்டதும் கண்கள் கலங்கித்தான் போகின, அதன் கூரிய கண்களில் தான் அதன் வலியை என்னால் உணர முடிந்தது, அவ்வளவு முயற்சித்தும் நகர்ந்த தொலைவு மிகக்குறைவே, ரத்தம் கசியும், வலியை தாங்கமுடியா அந்த தருணத்தில் கூட இன்னொரு ஜீவன் ஆதாயம் தேடுகிறது இந்த அணில்குட்டியிடமிருந்து, என் அத்தனை கோபமும், அணில்குட்டியின் காயத்தில் ஆதாயம் தேடிய எறும்புகளின் மீது திரும்பியது, அவசரமாய் காப்பாற்றும் எண்ணத்தில் என் அறிவுக்கு எட்டாமல் போய்விட்டது அணில்குட்டிக்கு கடிக்க தெரியும் என்று, ரத்தம் சொட்டும் அளவுக்கு கடித்துவிட்டது, அவசரமாய் அறைக்குள் ஓடி, கைகள் முழுக்க துணியை கட்டிக்கொண்டு, அணில்குட்டியை கையிலெடுத்து எறும்புகளை தட்டிவிட்ட நேரத்தில் அதற்க்கு புரிந்ததோ இல்லையோ நான் காப்பாற்ற வந்தவன், கொல்லவந்தவன் அல்ல என்பது, காப்பாற்றிவிட்டேன் என்ற சந்தோசத்தில் ஓரிரு நிமிடம் நகர்ந்தது எனக்கு.

இப்படி காப்பாற்ற பாடுபடும் நான் உண்மையில் எப்படி பட்டவன்?..

பள்ளிவிடுமுறை நாட்களை, பயிற்சிவகுப்புகள் தின்ற மீதியை, அணில்பிடிக்கவும், ஓனாய் அடிக்கவும் உபயோகபடுத்துபவன், இடுப்பில் நிற்க அடம்பிடிக்கும் கால்சட்டையை,அரைஞான்கயிறைக்கொண்டு இருக்கி கட்டிவிட்டு, மேல்சட்டை இல்லாமல், கால்களில் காலனி இல்லாமல், நெறிஞ்சி முற்களையும், தீயாய் சுடும் காட்டு மண்ணிலும், சுட்டெரிக்கும் வெய்யலிலும்,துரு துருவென ஓடி, துரத்தி துரத்தி கொல்வதில், சாதித்த திமிரு ஒட்டிக்கொண்டு மீண்டும் அடுத்த விடுமுறைக்கு வித்திடும் கொஞ்சம் கொடூரமான மிருகம் தான் நானும், அணில்களை பிடிப்பதற்காக, தந்திரமாய் யோசித்து வலைகளை விரித்து வைத்துவிட்டு, துரத்தி வந்து வலையில் விழ செய்து சாதித்ததாய் பெருமிதம் கொள்ளும் திமிர்பிடித்த சிறுவன் தான் நானும். அவற்றை என் நண்பர்கள் கொன்று பையினுள் போடும்பொழுது கொஞ்சம் கனக்கத்தான் செய்யும் அந்த கணங்களில், ஆனாலும் அவ்வளவாய் பாதிப்பதில்லை அந்த சாவுகள்,இப்பொழுது மட்டும் இவ்வளவு கனமாய் கனக்கிறது ஏன்?, காயத்தை கண்ட அந்த கணத்தில்.

அறைக்குள் அங்கும் இங்கும் ஓடி ஒரு அட்டை பெட்டியை கண்டுபிடித்துவிட்டேன், அதற்குள் அணில்குட்டியை விட்டுவிட்டு, பதற்றத்தில் யோசிக்க ஆரம்பித்தேன் , என்ன செய்வது, எப்படி காப்பாற்றுவது என்று ஆயிரம் கேள்விகள் , அங்கும் இங்கும் அறைக்குள் ஓடுகிறேன், அவசர அவசரமாய் அனைத்தும் நடக்கிறது, வெட்டு காயத்திற்கு போடும் மருந்தை நீண்ட நேரத்திற்கு பிறகு கண்டுபிடித்ததில் அத்தனை சந்தோசம், மருந்தை காயத்தின் மேல்இட்டுவிட்டு, அதற்கு சாப்பிட தக்காளி பழத்தை சிறு துண்டுகளாக்கி அட்டைபெட்டியில் வைத்துவிட்டு, சாப்பிடு சாப்பிடு என்று கெஞ்சுகிறேன், வலியின் வேதனையில் சாப்பிட மறுக்கிறது அணில்குட்டி, கொஞ்சமாவது சாப்பிடு என்று கெஞ்சுகிறேன், சிறிது நேரத்தில், தக்காளியை அணில் உண்ணாதோ என்ற கேள்வி?,என்னை அடுத்து ஒரு முயற்சிக்கு அவசரப்படுத்தியது, அடுத்த நாள் காலை உணவிற்கு என தேற்றிவைத்து இருந்த தேநீருக்கான சில்லரைகள் அவசரமாய் சாலையோர கொய்யாக்காய் விற்கும் பாட்டியிடம் சேர்க்கப்பட்டது, சேர்த்துவைக்கப்பட்ட சில்லரைகளின் தியாகத்திற்கு இணையாய் கொய்யாக்காய் என் கைகளில். ஓட்டமும் நடையுமாய் வந்து சேர்ந்தது என் உயிர், இறந்துவிடக்கூடாது மற்றொரு உயிர் என்ற நினைவில்.

சிறு சிறு துண்டுகளாக்கி வைத்துவிட்டு, ஒன்றையாவது சாப்பிடு, ஒன்றையாவது சாப்பிடு என்று ஏங்கிக்கொண்டு இருக்கிறது ஏதோ ஒன்று என்னுள் , உண்டால் உயிர்பிழைத்துவிடும் என்று எதேதோ கணக்கு போட்டுகொண்டு இருக்கிறது, உயிர் போகும் வலியை உணர்ந்துகொண்டு இருக்கும் அதனால் உண்ண முடியாது என்பதை ஏதோ ஒன்று ஏற்க மறுக்கிறது, சாப்பிடு சாப்பிடு என்று அதனுள் திணிக்க முயற்சிக்குறேன் தோல்வி தான் கிட்டும் என்று தெரிந்தும். முட்டாள் தனமாய் யோசிக்க செய்தன என்னுள் அந்நேரத்தில்,தனியாக விட்டால் சாப்பிடுமோ என்ற ஏதோ ஒரு நப்பாசையில் ஒளிந்துகொண்டு பார்த்தேன், சாப்பிடுமோ என்று.

என் அனைத்து திட்டமும் பலிக்கவில்லை, நேரம் கடக்க என்னுள் ஏதோ ஒரு இனம் தெரியா சோகம் என் கன்னத்தோடு ஒட்டியிருந்ததை என்னால் உணரமுடிந்தது, ஏனோ சாப்பிட பிடிக்கவில்லை, நேர்முகத்தேர்வுக்கான பயிற்சியும், படித்தலும் நடக்கவில்லை, எண்ணங்கள் முழுதும் நிரம்பியிருந்தது அதன் மேல் மட்டுமே, பெட்டியை என் படுக்கைக்கு பக்கத்தில் வைத்துகொண்டே கவனித்துக்கொண்டே உறங்கிப்போனேன், திடீரென கண்விழித்த தருணத்தில் எறும்புகள் மீண்டும் ஆதாயம் தேடிக்கொண்டு இருந்தன உயிருக்கு போராடும் அணில்குட்டியின் காயத்திலிருந்து ,இரவு முழுவதும் பெட்டி இடம் மாற்றம் செய்ய பட்டுகொண்டேயிருந்தது, கண்கள் திறக்கும் தருனங்களிளெல்லாம் அதன் நிலையை அறிய முயற்சிக்க மறக்கவில்லை.

அடுத்த நாள் கண்விழிப்பில், அவசர அவசரமாய் பெட்டியை பார்த்த எனக்காய், கண்ணீரை விட்டு சென்று இருக்கிறது அந்த அணில்குட்டி, என் அத்தனை முயற்சியும் தோற்றுவிட்டது, நான் உறங்கிக்கொண்டு இருந்த எந்த நிமிடத்தில் தன் உயிரை விட்டதோ?, அசைவுகளோடு பாவமாய் உற்று நோக்கிய அதன் கண்கள், அசைவற்று.. அழுதுகொண்டே எனக்குள் கேட்டுக்கொண்டேன் , அன்று அறியா வயதில் உயிரை எடுக்கும் உரிமை கிடைத்த எனக்கு, இன்று அறிந்த வயதில் உயிரை கொடுக்கும் உரிமை இல்லாமல் போயிற்று, எனக்குள்ளும் மனிதம் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக்கிடக்கிறது என்று புரிய வைக்க ஒரு உயிர், உயிரை விட்டு இருக்கிறதா?, பற்களை கடித்துக்கொண்டு துரத்தி துரத்தி கொன்ற கொடூரன் இப்பொழுதில்லை, என்னுள் மனிதம் துளிர்க்கசெய்து ,மரித்துவிட்டது அணில்குட்டி. இதயம் கனக்கிறது...இன்னும் மறையாமல்...

                                                                                         
                                             

Sunday, August 1, 2010

வாழ்க்கை(வலி)ன்னா என்ன? --இலக்கை நோக்கிய பயணத்தில் (பாகம் - 6 )நன்றிங்க ஆறாம் பாகத்தை படிக்க வந்ததிற்கு,
சரிங்க, கண்டிப்பாக ஆவலோடு வந்து இருப்பீங்கன்னு தெரியும், அப்படி என்ன தான் என் அம்மாவிடம் சொல்லிவிட்டு வந்தேன், ஏன் வழக்கமானதை விட அதிகமா அழுதாங்க ?..உங்கள் கேள்விக்கான விடை கீழே.......

முதல் பாகம் இணைப்பு இங்கே : -
முதல் பாகம்

இரண்டாம் பாகம் இணைப்பு இங்கே : -
இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம் இணைப்பு இங்கே : -
மூன்றாம் பாகம்

நான்காம் பாகம் இணைப்பு இங்கே : -
நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம் இணைப்பு இங்கே : -
ஐந்தாம் பாகம்


வாழ்க்கையோடு போராடிய வலியும், வாழ்க்கைல ஜெயிக்கணும் அப்டிங்கற தீயும் எரிஞ்சுக்கிட்டு இருந்தது மனசுக்குள்ள,என்னை அப்படி பேச வைத்ததும் அதுவே தான் "இனி இந்த மண்ணில் காலெடுத்து வைக்கமாட்டேன் - வேலை கிடைப்பதற்கு முன், உங்களையும் கூட இனி காண வரமாட்டேன், வேலை கிடைப்பதற்கு முன் வந்தால், இறந்து தான் வந்து இருக்கிறேன் என புரிந்துகொள்ளுங்கள் அம்மா", என்று சொல்லிவிட்டு பேருந்தில் அமர்ந்தேன்.

பேருந்து புறப்பட ஆரம்பித்தது, பழைய அறை நண்பர்களுக்கு எனது கைபேசியில் அழைப்பு விடுத்தேன், சென்னை வருகிறேன் என்றேன்,அறை நண்பன் கூறியது - மனதை ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்தது, "நாங்கள் அறையை காலி செய்து விட்டு என்னுடன் வேலை செய்யும், சக ஊழியனின் அறைக்கு மாற்றலாகிவிட்டோம் ." கைபேசியை அணைத்துவிட்டு எங்கே செல்வது என்று யோசித்தேன்,நான் அமர்ந்திருந்த பேருந்திற்கு கூட தெரிந்து இருக்கும் அது எங்கே போய் சேரவேண்டும் என, அதில் அமர்ந்திருக்கும் எனக்கு தெரியவில்லை எங்கே செல்வது என.

ஏறக்குறைய கைபேசியில் இருக்கும், அனைத்து சென்னையில் தங்கியிருக்கும் நண்பர்களையும் அழைத்துவிட்டேன், பதில்கள் அனைத்தும் என்னை ஏமாற்றம் செய்வது போலவே அமைந்தது, என்ன செய்ய?..மீண்டும் ஒரு முறை முயற்சி செய்தேன் ," ஒரு வாரம் மட்டும் தங்கிகொள்வதாய்" , சரி என ஒரு நண்பனிடம் இருந்து வந்த பதில் ,நிஜமாய் நான் எங்கே செல்ல வேண்டும் என்ற இலக்கை பேருந்திடம் துணிச்சலாய் சொல்லிக்காட்டி கொண்டு இருந்தது.


சென்னை மண்ணை மிதித்தேன், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாய், திரும்பிச்செல்ல இனி வழி கிடையாது என்னிடம். என் வாழ்வையும் சாவையும் இந்த மண் தான் தீர்மானிக்க வேண்டும். நண்பன் அறைக்கு சென்றதும் என் அத்தியாவசிய தேவைகளை முடித்த பின், மீண்டும் படிப்பும், செய்தித்தாளில் வேலை விளம்பரத்தை புரட்டுவதுமாய் அந்த நாளும், வாரமும் கழிந்தன ,கூர்மையற்ற கத்தியால் 10 மணி நேரம் ஒரு மரத்தை வெட்டுவதைவிட, கத்தியை கூர்மையாக்க 8 நேரம் செலவழித்துவிட்டு 1மணிநேரத்தில் வெட்டுவதே கூர்மையான அறிவு சார்ந்த வழியாகும். அதை தான் நானும் செய்தேன், படித்து படித்து கற்றுக்கொண்டு இருந்தேன் எனக்கான நேர்முகத்தேர்வுக்கான வாய்ப்பு கிடைக்கும் வரை.

எனது ஒரு வேலை உணவை நான் தான் வாங்கிக்கொள்ள வேண்டும் இனி, என்று முடிவு செய்த ஓரிரு நாட்களில் படிப்பிற்கும், வேலைக்கும் சம்பந்தம் இல்லாத ஒரு பகுதிநேர வேலையில் அமர்ந்தேன், என் முயற்சியை, எனக்குள் எறிந்த தீயை வேறுதிசை நோக்கி பயணிக்க செய்ததை போல் உணர்ந்தேன்,அங்கிருந்து வெளியே வந்தேன் எனக்கான இலக்கை இனி அடையாமல் வீழப்போவதில்லை என்று.மீண்டும் தேட ஆரம்பித்தேன், ஆரம்பித்த சில நாட்களிலேயே

இனி வாய்ப்பே கிடைக்காது என்பதை நாட்காட்டியின் தேதி உறுதி செய்தது, ஆம் நான் கல்லூரி முடித்து ஒருவருடம் ஆகிவிட்டது,இதற்குமேல் புதிதாய் கல்வியை முடித்துவரும் அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்,நிறுவனங்களால்..கொஞ்சம் துவண்டு தான் போய்விட்டேன். இருப்பினும் வாழ்ந்து ஆகவேண்டும், ஜெயித்தாக வேண்டும் என்ற எண்ணம் என்னை யோசிக்க வைத்தது, யோசனையின் முடிவு என்னவாய் இருந்து இருக்கும் என்று ஒவ்வொரு மென்பொருள் வல்லுனருக்கும் தெரியும்.ஆம் அதுவே தான்,("fake"-ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதாய் "பொய்" சொல்வது. தன் திறமையை நிரூபித்து, பணிபுரிவதற்கான சான்றிதழ்களை காட்டி மற்றொரு நிறுவனத்தில் சேருவது).

இது நிஜமாய் குற்றம்தாங்க, ஆனா வேற வழியில்லை, என்னை மாதிரி தமிழ் வழிகல்வியில் பயின்று, ஆங்கிலத்தை தடுமாறி உச்சரிக்கும், யார் உதவியும் கிடைக்காம, தானாய் புதியதொரு ஊரில், பெற்றோர்களின் 1500 ரூபாய் பணத்தில் ஒரு மாதத்தை கழிக்கவேண்டும் என்று போராடுபவர்களுக்கு வேற வழியில்லை, நாட்கள் நீள நீள, அம்மாவின் ஒவ்வொரு நகையும் வங்கிக்கு சொந்தாமாகி போயி கொண்டு இருக்கும் தருணங்களில் நியாயம் எது, அநியாயம் எது என்று யோசிக்க நேரமில்லைங்க.

சரி என்ன பண்றதுன்னு யோசிச்சா இன்னொரு வருடம் போயிடும்னு தெரியும், உடனே செயலில் இறங்க ஆரம்பிச்சேன், பல தேடல்களுக்கு பிறகு அனைத்தையும் தயார் செய்தேன், வேலை கிடைத்தவுடன், பொய் சான்றிதழ் வாங்க பணம் கொடுத்தால் போதும் என்பது உறுதியானது, சரி இனி திறமையை நிரூபித்து நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும், ஒரு வருடம் பணிபுரிந்ததை போன்ற திறமையோடு பேச வேண்டும், அனைத்து விதமான கேள்விக்கும் பதிலளிக்க வேண்டும்,

சரி பணிபுரியும் நண்பர்களிடம் நிறுவனத்தில் என்ன நடக்கும்,எப்படி ஒரு வேலையை செய்து முடிக்கிறார்கள் என்பதை கேட்டால் ஒவ்வொருவரின் பதிலும் வித்தியாசமாய் இருக்கும், ஒருவன்,வேலையே கிடையாது மச்சி, சும்மா தான் உட்கார வைச்சு இருக்கிறான் என்பான், இன்னொருவன் நான் செய்யுற வேலையை 12 ஆம் வகுப்பு முடிச்சவன் பண்ணுவான் என்பான், இன்னொருத்தனை கேட்டா,அவன் என்ன சொல்றான்னே புரியாது, புரியுற மாதிரி சொல்லுடா மச்சி என்றால், உனக்கு புரியாதது மாதிரி தான், எனக்கும் ஒன்னும் புரியாது மாப்புள என்பான்,

சரி இனி யாரையும் நம்பி பலனில்லை என தோன்றியது,ஒரு வருட அனுபவம் உள்ளவர்களுக்கு எப்படி நேர்முகத்தேர்வில் கேள்விகளை தொடுக்கிறார்கள் என்பதை தேடிப்படித்தேன் வலைத்தளங்களில் இருந்து,நன்றாக படித்தேன், அதற்குள் நான் ஒருவாரம் மட்டும் தங்குவதாய் கேட்டுவந்திருந்த நாட்களை தாண்டி பல வாரங்கள் ஓடிவிட்டன, நண்பர்கள் ஒன்றும் சொல்லவில்லை, இருந்தபொழுதும் மனதின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒன்று தவறு என உணர்த்தியது, குறைந்த வாடகையில் வீடு தேட ஆரம்பித்தேன், வீட்டின் ஆரம்ப வாடகையே 1500 ரூபாயில் ஆரம்பித்தது, முன்பணம் பல ஆயிரங்களை சாதாரணமாய் தாண்டியது, சாப்பாட்டிற்கே வீட்டில கையேந்துகிறேன், இதில் எப்படி இவ்வளவு ரூபாயில் வாடகை, சரி கொஞ்சம் தன்மானத்தை விட்டுவிட்டு நண்பர்களிடம், இன்னும் சிறிது காலம் தங்கிக்கொள்வதாய் கேட்ட அடுத்த நொடியே, மறுப்பு சொல்லாமல் தங்கிக்கொள் என்றார்கள்,

எப்படியோ அங்கேயே அட்டை போல் ஒட்டிக்கொண்டேன், வேறவழி இல்லைங்க என்ன பண்றது நீங்களே சொல்லுங்க, எல்லோரும் தன் ஊதியம் பத்தவில்லை என நிறுவனங்களிடம் வாதாடி கொண்டு இருக்கும் வேளையில் நானும் வாதாடினேன் என் அம்மாவிடம் 1000 ரூபாய் மட்டும் கொடுங்க அம்மா போதும், நான் சமாளிச்சுக்கிறேன் என. அம்மா அப்பாவோட ரத்தத்தை உறிவதைப்போன்ற உணர்வு ,நான் அவர்களிடம் மாதம் மாதம் பணம் கேட்கும் பொழுதெல்லாம்..

சண்டைக்கு தேவையான அனைத்தையும் தயார்செய்து விட்டேன், இனி போர்களத்தில் குதிப்பது தான் மீதம், எனது சுயவிவரம் , பணிபுரிந்துகொண்டு இருக்கும் அனுபவம், நிறுவனத்தின் விவரம் என அனைத்து விவரங்களையும் ,வேலை வாய்ப்பு வலைதளத்தில் பதிவு செய்துவிட்டேன். பதிவு செய்த சில மணி நேரங்களிலேயே எனது கைபேசி ஒலிக்கத்தொடங்கியது,

என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் காண்போம்...


                                                                                         
                                             

Friday, July 23, 2010

நான் சந்தியா,


நான் சந்தியா,

உன்னை எனக்கு நன்றாய் தெரியும் நீ என் அத்தை மகன் என்பதால்,என் ஒவ்வொரு பள்ளி கோடை விடுமுறையும் - என் அம்மாவின் அம்மாவை காண ,என்னைச் சுமந்து வரும் - உன் வீட்டிற்கு,உன்வீட்டிற்கு வர கொஞ்சம் தயக்கம் தான்,

அப்படி தான் அந்த பத்தாம் வகுப்பு கோடை விடுமுறைக்கும், வெட்கத்தை வென்றுவிடும் ஆர்வத்தை, மறைக்க முடியாமல் வந்து விழுந்தேன் உன் வீட்டில் - காற்றில் ஊதிவிடப்பட்ட வேலிச்செடியின் பட்டுஇறகாய்.- நான்கைந்து ஆண்டுகளுக்கு பிறகு ,உன் வீட்டை நெருங்க நெருங்க எதோ ஒன்று மூச்சு விட சிரமப்படுத்தியது,அது சந்தோசமாய் இருக்கலாம், அளவுக்கு மிஞ்சிய வெட்கமாய் இருக்கலாம், நீண்ட நாட்களுக்கு பின் உன்னை காணும் ஆர்வமாய் இருக்கலாம்.எது என்று உணரும் முன் உன் வீட்டை அடைந்து விட்டேன்,

உன் அம்மாவிடம் பேசும்பொழுதே, என் கண்கள் நீ எங்கே? என்று கேட்டுக்கொண்டிருந்தது - அதற்கு தெரிந்த ஏதேதோ பாவனைகளில் பாவமாய், பாவம் உன் உன் அம்மாவிற்கு தான் புரியவில்லை,உடை மாற்றிக்கொண்டு வருவதாய் சொல்லி, உன் வீட்டின் அனைத்து அறைகளையும் தேடிவிட்டேன்,

என் கலங்கிய கண்கள் நீ காணவில்லை என்பதை உணர்த்தியது,உன்னை கண்டதும் எதுவும் பெரிதாய் பேசிவிடப்போவதில்லை என்பது என் உதட்டிற்கு தெரியும் தான் ,என் கண்களுக்கு தெரியவில்லை என்ன செய்ய...

எப்படி கேட்க உன் அம்மாவிடம் நீ எங்கே என்று?, எப்படி சொல்ல என் இதயம் கனக்கிறது என்று.என் கைபிடித்து இழுத்து, சாப்பிட அழைத்த உன் அம்மாவிற்கு தெரியாது கனத்த இதயத்தில் காற்று நுழைவதே கடினம் என்று, இதில் சாப்பாடு எப்படி.....

நான் வருவது தெரியாது உனக்கு, எங்கே சென்று இருப்பாய் என்ற கேள்வி, உணவோடு சேர்ந்து என் உடலுக்குள் சென்றது,சிறிது நேரத்தில் உன் சத்தம் கேட்டது "அம்மா பசிக்குது, சீக்கிரம் சாப்பாடு போடு, திரும்பவும் விளையாட போகணும்",வார்த்தைகள் உணர்ந்த அடுத்த கணம், வெட்கம், சந்தோசம் , சொல்ல முடியா உணர்வுகள் ஒருபுறம் இருக்க, கைகள் தானாய் முகத்தை, தலைமுடியை சரி செய்தது, நீ சமையலறைக்குள் வந்த அந்த நிமிடம் என்னை அறியாமல் வெட்கம் என் முகத்தில் ஒட்டிக்கொண்டது,

என் பெண்மையை உணரவைத்தது, என் முகத்தில் ஒட்டி யிருந்த அத்தனை வெட்கமும்,
சமையறையில் வேகமாய் எடுத்துவைத்த உன் காலடி, வேகமாய் பின்னோக்கியது என்னைப் பார்த்ததும்,"அம்மா நான் அப்புறம் சாப்பிட்டுகொள்கிறேன் " என்ற சத்தம் மட்டும் தான் அங்கிருந்தது ,உன்னைத்தவிர. திட்டிகொண்டு இருந்தேன் , உன்னை காண முடியாமல் செய்த- என் வெட்கத்தை ,

உனக்காய் காத்துகொண்டு இருந்த என்னை, சிரிக்க வைத்தது உன் அம்மாவின் முனகல்
"என்ன ஆச்சு இவனக்கு இன்னைக்கு , சாப்பிடாம கூட விளையாட ஓடிட்டான் "

கண்கலங்க செய்ததது ,"சரி கிளம்புகிறோம்" என்ற என் அம்மாவின் விடை பெரும் வார்த்தை ."நாளைக்கு போகலாம்" என்று உன் அம்மா கூறிய வார்த்தையில் அமர்ந்து கொண்டு அடம்பிடித்தது என் இதயம்,

நீ வந்துவிட வேண்டும் என்று ஏங்கிய மனதை புரிந்தவன் போல வந்து நின்றாய் , நாங்கள் நகரப்போகிற அந்த நொடியில் ,இந்தமுறை முகத்தோடு ஒட்டி இருந்த வெட்கத்தை பிய்த்து, மனதுக்குள் புதைத்துகொண்டு உன்னை பார்த்தேன்,

உன் வெட்கத்தை மறைக்க உன் அம்மாவின் கழுத்தை இருக்கமாய் உன் அம்மாவின் பின்புறம் இருந்து பிடித்துகொண்டு ,உன் உதட்டை மெல்லியதாய் விரித்து, உன் பற்களை வெட்கத்தில் காட்டினாய், உன் கண்ணும் என் கண்ணும் தெரியாமல் மோதிக்கொண்ட அந்த சில நிமிடத்தில் உன்னிடம் பேச நினைத்த அனைத்தையும் பேசியதாய் தோன்றியது,

விடைபெற்ற அந்த வினாடியில் தான் தெரியும் , பேசியும் - தீராத வார்த்தைகள் என்னுள் இருக்கிறது என்று,நான் நகரும்பொழுது நீ கையசைத்து வழி அனுப்பி வைத்தது எதோ வலியை என்னுள் திணித்தது .

பேருந்தின் வேகம் என் கலங்கிய கண்ணீரினை காற்றுடன் கலக்க செய்தது ,

எத்தனை முறை உன் வீட்டிற்கு வந்து இருக்கிறேன், இதற்கு முன் என்றாவது உன் வெட்கத்தை காட்டி ,இப்படி அழ செய்ததுண்டா?.என்ற கேள்வியோடு என் வீட்டை அடைந்தேன்.

காதலிக்கும் வயதுமில்லை, காமமறியும் வயதுமில்லை அது , இதயம் கனத்த அந்த வினாடிகள், இன்றும் என்னுள் இனிமையாய், காதலும் இல்லாமல், காமமும் இல்லாமல் கண்ணியமாய் பசுமை நிறைந்த கனவாய் மட்டும் ....

                                                                                         
                                             

Wednesday, July 14, 2010

தயவு செய்து என்னை ஒருநாள் பின்தொடருங்கள் , இன்னொரு உலகம் காண முடியும் உங்களால்...என் அரைகுறை தூக்கத்தில் கனவு வருவதில்லை,
கால்கள் உடைந்து, கோனல்மானலாய் நடப்பதாய் நான் காண்பதில்லை கனவுகளை,
விதவிதமான காலணிகளைத்தான் காண்கிறேன் என் ஒவ்வொரு வேலை பட்டினியிலும்,
காலணிக்குச்சொந்தமான முகங்களைக்காணமுடிவதில்லை எப்போதும்,முகம் காட்ட மறுத்து, முந்திச்செல்லும் உங்களிடம் எப்படிச்சொல்லுவது, நான் ஊனமாக்கப்பட்டு இருக்கிறேன் என்று.

உரக்க கத்திக்கொண்டு இருக்கும் சென்னைக்கு உங்களைப்போல் நானும் வந்தவன் தான்,
என்னை முடமாக்கிய நேரத்தில் நீங்கள் தப்பித்துக்கொண்டு இருக்கிறீர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்ற ஆயுதத்தால்,

அனாதையான எனக்கு பணம் கொடுத்துச்சென்னை அனுப்பிய தோழனுக்கு, விலாசம் கொடுக்க,எனக்கான முகவரியை சென்னையின் எல்லா இடங்களிலும் தேடி இருக்கிறேன் , தி.நகர் கோவில் வாசல் தான் என் நிரந்தர முகவரி என்று தெரியாமல்,

என்னை யாரும் உற்று நோக்கவில்லை, அந்த இரக்கமற்றவர்களைத்தவிர,
நான் சிந்திய வேர்வையில் அறிந்து இருக்கிறார்கள், நான் அனாதையென்று,

அனாதைக்குச்சொந்தமான பட்டினியையும், வாழ்க்கைத்தேடலையும்
இரக்கமற்ற அவர்கள் கவனித்து இருக்கிறார்கள்,இரக்கமுள்ள நீங்கள் கவனிக்கத்தவறியதை.

கவனிப்பதை நிறுத்திவிட்டு, வீழ்த்தினார்கள் எளிதாய், உதவி செய்கிறேன் என்ற ஆயுதத்தால்,

காதுகள் செவிடாகின, கத்திய சத்தத்தில்,கருணையற்ற மிருகங்களாய் எங்களை காயப்படுத்தினர்,ஒவ்வொருவருக்கும் விதவிதமாய் வழங்கப்பட்டன காயங்கள், எனக்கான தருணத்தில் கால்களும், கழுத்தும்...

கண்ணீர் துளித்தது, எனக்கான நிரந்தர முகவரியை நிர்ணயத்துவிட்டார்கள் தி.நகர் கோவில் வாசல் என, கால்களைப்பரப்பி, கழுத்தை மண்ணில் புதைத்து,சுட்டெரிக்கும் வெய்யலில் உடைகளற்று வெற்று உடம்பில் உங்கள் காலணிகளை பார்த்து பிச்சை கேட்கவேண்டும்,எனக்கான வேலையும் கொடுக்கப்பட்டுவிட்டது, நீங்கள் கொடுக்க தவறியதை, செய்தே முடித்து விட்டார்கள் கருணையற்றவர்கள்.

என் இதழ்கள் சொல்லத்துடித்தது, கேட்க தயாராக இல்லாத உங்களிடம், எதையோ நோக்கிய உங்கள் அவசர பயணத்தில் என் இதழ் நிரப்பிய சத்தத்தின் சாவு வாசனையை நுகர மறந்துவிட்டீர்கள்.கேட்க நேரமில்லாத, கேட்க தயாராக இல்லாத உங்கள் செவிகளை தொடும்முன் என் சத்தமும் மறித்து போகிறது.

என்னைத்தேடி, என் நண்பன் கூட உங்களில் ஒருவராய் என்னைக்கடந்து போகக்கூடும்,
ஒவ்வொரு நாணயத்திலும் அவன் முகம் தேடுகிறேன்,கருணையுள்ளவன் என் தோழன் நிச்சயம் எனக்கு நாணயத்தை போட்டு சென்று இருப்பான்.

உங்களின் ஒவ்வொரு ரூபாய் கருணையும், இரக்கமற்றவனின் காலடியில் மௌனமாய் எண்ணப்படுகின்றன,என் வயிரும் அளவிடப்பட்டே, தப்பித்து செல்லாதவாறு நிரப்பபடுகிறது கருனையற்றவர்களால் ,

உங்கள் செவிகளும், உங்கள் மனங்களும் எங்களுக்காய் திறக்கபடதாவரை எங்களின் நிரந்தர முகவரி -கோவில் வாசல், நெரிசல் நிறைந்த சாலை, பேருந்து நிறுத்தம் என்று கருனையற்றவர்களால் தீர்மானிக்கப்படும்...

சுட்டெரிக்கும் வெய்யலில் உடைகளற்று கிடக்கும் என் தேகத்தில் எங்கோ ஒரு மூலையில் பிச்சை எடுக்கிறேன் எனும் அவமானம் கொஞ்சம் கொஞ்சமாய் அரித்துகொல்கிறது.முழுவதுமாய் அரித்துகொல்லும் முன் தயவு செய்து என்னை ஒருநாள் பின்தொடருங்கள் , இன்னொரு உலகம் காண முடியும் உங்களால்...


இப்படிக்கு
ஒவ்வொரு நாணயத்திலும் தன் உயிர்நண்பனை தேடுபவன் .


                                                                                         
                                             

Friday, July 9, 2010

விரல் பிடித்து வலைதளத்தில் கால் ஊன்றி நடக்க செய்த தேவா அண்ணாவுக்கு தம்பிகளின் வாழ்த்துக்கள்
தேவா அண்ணா..................

இவர் தான் எழுத்து எனும் என் கரம் பிடித்து , பதிவுலகம் என்னும் இன்னொரு கிரகத்தை காட்டியவர் , என்னைப்போல இன்னும் பல தம்பிகளுக்கு கரம் கொடுத்து கற்றுக்கொடுத்தவர். முகம் தெரியா எங்களை ,விலைமதிக்க முடியா வாசகர்களாகிய உங்களுக்கு அறிமுகப்படுத்தியவர், உங்களிடம் எங்களை கொண்டு வந்து சேர்த்தியவர்.

நேர்மையின் ஒப்பற்ற பிரதிபலிப்பாய், நம் படைப்பு சரியாக இருக்கிறது என்றால் , முதல் ஆளாய் நின்று நன்று என்று சொல்லி பாராட்டுவதும், தவறாக இருந்தால் திருத்த முயலச் சொல்லி அருகில் நிற்பதும் தேவா அண்ணாவின் கடமையாய் இருக்கும் எப்பொழுதும்..

இரண்டு வரி கவிதைகளை எழுதினோமா , போனோமா என்று இருந்தவன் நான், எழுத்து என்பது காதலைச் சொல்ல மட்டும் தான் என்று புரியாமல் கிடந்தவன் நான், எழுத்து என்பது எங்கு இருந்தோ, ஏதோ ஒரு மூலையில் இருந்து படிப்பவனையும் சுட்டெரிக்க வேண்டும்,உள்ளுக்குள் தீப்பிடித்து எரியச் செய்ய வேண்டும் , எழுத்துகளின் உச்சரிப்பில் தன்னை மறந்து கிடைக்க வேண்டும் வாசகன் என்றும்,

சாதிகளையும், தீண்டமையயும் அடித்து நொறுக்க நம் எழுத்து ஒரு பாலமாய் இருக்க வேண்டும்,படித்து முடித்துவிட்டு சென்ற பிறகும் அசைக்கமுடியா ஆணியை நடப்பட்டு இருக்க வேண்டும் என்று உணர்த்தியவர்..

20 வரிகளில் சொல்வதை நான்கே வார்த்தைகளில் நடப்பட்டு இருக்கவேண்டும், ஸ்டாலின், லெனின் ,போன்றோர்கள் மக்களை சென்றடைய அவர்கள் பயன்படுத்திய கூர்மையான ஆயுதங்கள் எழுத்தும் , பேச்சும் தான், அத்தகைய பெருமையுடைய எழுத்துக்கள் மிகவும் கூர்மையானதாய் இருக்க வேண்டும் எப்பொழுதெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்குறோமோ அப்பொழுதெல்லாம்,

அதே எழுத்துக்கள் பூவை விட மென்மையானதாய் இருக்க வேண்டும் எப்பொழுதெல்லாம் அன்பையும், காதலையும் சொல்ல முயற்சிக்குறோமோ அப்பொழுதெல்லாம்,

அதே எழுத்துக்கள் அசுத்தமற்றதாய், மேன்மையானதாய் இருக்க வேண்டும் எப்பொழுதெல்லாம் ஒழுக்கத்தையும், கருத்துக்களையும் , நம் தேசத்து மக்களுக்கு புகட்ட முயற்சிக்குறோமோ அப்பொழுதெல்லாம்,

அதே எழுத்துக்கள் புரிந்துகொள்ள இலகுவானதாய் இருக்க வேண்டும் எப்பொழுதெல்லாம் ஆன்மா, தேடல், உயிர், கடவுள், இறப்பு, பிறப்பு இவைகளை பற்றி விளக்க முயற்சிக்குறோமோ அப்பொழுதெல்லாம் ,

இங்கே வலைத்தளத்தில் எழுதி போட்டுவிட்டு செல்லும் ஒவ்வொரு வார்த்தையும், வாசகனின் மனதில் பதிந்து இருக்க வேண்டும், முளைத்தும் இருக்க வேண்டும், வாசகனோட நின்றுவிடாத வரிகளாக இருக்கு வேண்டும், அவன் மனதில் விதைத்த வரிகள் முளைத்து வெளிவர வேண்டும், அதன் மனமும், கிளைகளும் ஒவ்வொரு அடிப்படை கல்வியரிவாளன், கல்வியரிவற்றவனையும் தொட வேண்டும், உண்மையை போதிக்க வேண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் , சமூக கொடுமைக்கு எதிராய் தீபந்தந்தை சுற்றி எரிய வேண்டும் ,
அன்பை மலரச் செய்ய வேண்டும், பகுத்தறிவை புகட்ட வேண்டும், உலக நடப்புகளை அறியச்செய்ய வேண்டும்,

இப்படி தான் எழுத வேண்டும் என்று பதிவுலகில் கால் ஊன்றி நடை பயில கற்றுக்கொடுத்தவரக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் மற்றும் என்னை போல் கால் ஊன்றி நடை பயில தேவா அண்ணாவிடம் கற்றுக்கொண்ட தம்பிகளின் சார்பாகவும் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதின் விளைவாக கீழே காணும் விருதை அவருக்கு அளிக்க உள்ளோம்..
நிச்சயம் அவரது எழுத்துக்கள் உங்களுக்குள் காதலையோ, விழிப்புணர்வையோ, புரிதலையோ , தாக்கத்தையோ ஏற்படுத்தி இருக்கும் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை...

அண்ணனின் எழுத்தை பார்த்து பிரமித்து நிற்கும் தம்பிகள்

சௌந்தர் (ரசிகன் )
ஜீவன் பென்னி (பதிவுகள் )
வில்சன் (தமிழ் தலைமகன் )
சிவராஜன் ராஜகோபால் (கொஞ்சம் புன்னகை செய்யுங்கள்..! )
வீரமணி (மனித மனங்களின் ஒரு அராய்ச்சி.. )
செல்வா (கோமாளி )
ஜெயந்த் (வெறும்பய)
ரமேஷ் (சிரிப்பு போலீஸ் )
யோகேஷ் (ஜில்தண்ணி)
விஜய் (விஜய் கவிதைகள்)


                                                                                         
                                             

Thursday, July 8, 2010

வாழ்க்கை(வலி)ன்னா என்ன? -- வங்கியின் வாசலில் பிச்சைக்காரனாய்...(பாகம் - 5 )நன்றிங்க ஐந்தாம் பாகத்தை படிக்க வந்ததிற்கு...


முதல் பாகம் இணைப்பு இங்கே : -
முதல் பாகம்

இரண்டாம் பாகம் இணைப்பு இங்கே : -
இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம் இணைப்பு இங்கே : -
மூன்றாம் பாகம்

நான்காம் பாகம் இணைப்பு இங்கே : -
நான்காம் பாகம்

எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லைங்க, 5 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன் , எழும்பொழுதே துக்கம் என் கன்னத்தோடு ஒட்டியிருந்தது, வாழ வந்தாச்சு வாழ்ந்து தான் ஆகணும், சிங்கம் இருக்கும் கூண்டில் தள்ளப்பட்டத்துக்கு அப்புறம் எதுக்கு சிந்தனை, பலம் இருக்கும் வரை மோதி உயிரை காப்பாத்த வேண்டியது தானே. அதை தான் நானும் பண்ணினேன், யாரும் வருவதிற்கு முன்னமே என் "கால்கள்" அந்த அலுவலகத்தை சுற்றி நடந்துகொண்டிருந்தது, "கண்கள்" யாராவது வருகிறார்களா என்று பாதையை நோக்கிக்கொண்டிருந்தது , "மூளை",பணம் கிடைக்குமா என கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தது , "மனது" அப்பா,அம்மா வருந்திக்கொண்டு இருப்பார்களோ என ஏங்கிக்கொண்டிருந்தது,

நேரம் மாற மாற ஏமாந்தவர்களின் கூட்டம் அதிகமாகியது, நீண்ட நேரப்போராட்டத்திற்கு பிறகு, நிறுவனத்தின் உரிமையாளரை பார்க்க முடிந்தது, கூடி நின்ற கூட்டங்களின் கோபத்தைப்பார்த்ததும், பணம் தருவதாய் ஒப்புக்கொண்டார், ஆனால் நாங்கள் விடுவதாய் இல்லை, "எப்போது" என்ற கேள்வியையும், "எப்படி" நம்புவது என்ற கேள்வியையும் முன்வைத்த பிறகு , நிறுவனத்தின் உருவம் பதித்த தாளில் எப்பொழுது தருகிறேன், என்ற விவரத்துடன் கையொப்பமிட்டு கொடுத்தார்..

ஏதோ பணம் வந்த திருப்தி எங்களுக்கு வந்திருந்தது, வாங்கிக்கொண்டு கிடைச்சுருமா?, ஓடாம இருப்பானா என 1000 கேள்விகள் நெஞ்சை சுட்டுக்கொண்டேயிருந்தன, அந்த தாள் அவ்வப்பொழுது மருந்து போட்டுக்கொண்டே இருந்தது சுடப்பட்ட என் நெஞ்சிற்கு.


வாரங்கள் கடந்து மாதம் ஆகின, பணத்தைத்திருப்பி தருவதாய் சொல்லியிருந்த தேதியும் வந்தது, எப்பொழுது எழுந்தேன் என்று தெரியாது , ஆனால் நான் 5 மணிக்கெல்லாம் நிறுவனத்தின் வாசலில் இருந்தேன், மணி 9 ஐ நெருங்கியதும் நிறுவனத்தின் காவலாளி வந்திருந்தார், மன்னித்துக்கொள் என்று அவர் ஆரம்பித்ததும் கண்கலங்க ஆரம்பித்தது, அதற்குள் அவர், இன்னைக்கு பணம் கொடுப்பதாய் அறிவிக்கப்பட்ட எல்லோரையும் நாளைக்கு வரச்சொல்லிவிட்டார்கள் என்று கூறினார்,

இல்லை என்று சொல்வதற்கு பதிலாக நாளை வா என்று கூறியது கொஞ்சம்,உயிரை மிச்சம் வைக்காமல் கொன்றதிற்கு பதில் வெறும் காயங்களுடன் வெட்டிச்சென்றது போலிருந்தது ..

வேலைத்தேடும் நேரத்தில் இப்படி ஒரு பிரச்சனை நமக்கு தேவையா என்று மனசு சொல்லிக்கொண்டேயிருக்கும் ..எப்படியோ விடிந்தது , சரியான நேரத்தில் அங்கே இருந்தேன், அந்த நாளில் 100 பேருக்கு மட்டும் கொடுப்பதாய் அறிவித்திருந்தார்கள், சிறிது நேரத்தில் நிறுவன உரிமையாளர் வந்தார், சிறிய உருவம், சரியாக சாப்பிடவில்லை, இப்படி நான் இருந்தாலும் , என் பெற்றோர்கள் கஷ்டப்பட்ட பணம் பரிபோகக்கூடாது என்று கூட்டத்தில் முண்டியடித்து 4 ஆம் இடத்தைப்பிடித்தேன், ஒவ்வொருவராய் அறைக்குள் அழைக்கப்பட்டு காசோலை வழங்கப்பட்டது, அதை நான் வாங்கிய நிமிடத்தில், கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு நன்றி தெரிவித்துவிட்டு வெளியேறினேன்...

அப்பொழுது யாரென்றே தெரியாத ஒரு நண்பர் என்னை அழைத்து சீக்கிரம் வங்கிக்கணக்கு ஆரம்பித்து காசோலையை உன் கணக்கில் போட்டுவிடு, ஒரு வேலை நிறுவனத்தின் கணக்கில் பணம் குறைவாகக்கூட இருக்கலாம் என்றார்...

சொல்லி முடிப்பதற்குள் வேகமாகிவிட்டேன், நான் தங்கியிருந்த அறைக்கு கூட செல்லவில்லை, ஒவ்வொரு வங்கியின் படியை மிதித்த அடுத்த சில நிமிடங்களில் ,சுவற்றில் எறியப்பட்ட பந்தினை போல் எறியப்பட்டு இருப்பேன்,நிரந்திர இருப்பிட முகவரி சான்றிதழை அளிக்க வேண்டும் என்ற காரணத்தினால் துப்பி எறியப்பட்டேன், அனைத்து வங்கிகளிலும் சொல்லி வைத்தாற்போல். ஒரே ஒரு வங்கியில் மட்டும், இந்த வங்கியில் கணக்கு வைத்து இருக்கும் பிரபலமான ஒருவர் கையொப்பமிட்ட இருப்பிட சான்றிதல் இருந்தால் வங்கிக்கணக்கை துவக்கி தருகிறோம் என்றார்,

யாரைத்தேடுவது , யாரைப்பிடிப்பது என்று தெரியாமல் வங்கியின் வாசலில் அமர்ந்து அழ ஆரம்பித்தது இன்னும் இதயத்தைக்கலங்கச்செய்யும்.நண்பனிடம் பென்சில் வாங்கவே பல நூறு முறை யோசித்து விட்டு, கடைசியில் கடன் வாங்க பிடிக்காமல் ஆசிரியரிடமே அடி வாங்கிக்கொள்வது மேல் என்று செல்பவன் நான், இப்பொழுது யாரை, எங்கே கேட்பது எனக்கு உதவி செய் என்று, முதல் முறையாய் மனசாட்சி சொல்வதை கேட்க மறுத்துவிட்டு வங்கிக்கு வரும் சிலபேரிடம் கெஞ்சிப்பார்த்தேன், விவரத்தை கூறியும் பார்த்தேன், ஒருவரும் உதவ முன்வரவில்லை, உண்ண வேண்டும் என்ற ஒன்றே எனக்கு மறந்து போயிருந்தது.

மாலையில் எனது அறைக்குத்திரும்பினேன், கோவிந்தராஜ் என்ற ஒரு அண்ணன் அங்கே தங்கியிருந்தார், நிலைமையறிந்த அவர் எனக்குத்தெரிந்த ஒருவர் இருக்கிறார் என்று என்னை அழைத்துச்சென்று , நான் அவரிடம் ஓட்டுனராக வேலை செய்கிறேன் என்றும், இந்த விலாசத்தில் தான் தங்கியுள்ளான் என்றும் ஒரு கடிதம் எழுதி கையொப்பமிட்டு கொடுத்தார்,

எப்படியோ கணக்கை ஆரம்பித்து காசோலையையும் கணக்கில் போட்டுவிட்டேன், இன்னும் 5 நாள் கழித்து வாருங்கள் என்று சொன்னார்கள். இந்த 5 நாளும் காலையில் 2 தேனீர் , மதியம் 3 தேனீர் , இரவு 2 பரோட்டா என்று நகர்ந்தது... உறங்கும் பொழுது ரம்பா, சிம்ரன்லாம் கனவுல வரவேண்டிய வயசுங்க, ஆனா வேலை கிடைக்குற மாதிரியும், நேர்முகத்தேர்வில் தோற்கிற மாதிரியும், ஜெயிக்கிற மாதிரியும் காண்கிற கனவுல , இந்த ஐந்து நாட்களில் பணம் கிடைக்குற மாதிரியும், கிடைக்காத மாதிரியும் சேர்ந்துகிடுசுங்க .இரவுளையும் என்னைச்சுத்தி அவ்வளவு வெளிச்சமுங்க, கண்ணை இருக்கிமூடித்தூங்கினா கூட தோல்வியும், ஏமாற்றமும் துருத்துசுங்க கனவா வந்து.

அவர்கள் சொன்ன அந்த நாளில் முதல் ஆளாய் வங்கியின் வாசலில் நின்றேன், வங்கியும் திறக்கப்பட்டது, ஓடி விசாரித்தேன், உங்கள் கணக்கில் 10,000 வந்துவிட்டது என்றார்கள்... நிச்சயமாய் அந்த கணம் உணர்ந்த சந்தோசம் , நான் கல்லூரியில் 96% எடுத்து முதல் மாணவனாய், மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து, மாநில அளவில் நான்காம் இடத்தை பிடித்து, செய்தித்தாளில் எனது பெயரை அப்பா எனது தெருவில் உள்ளவர்களிடம் காட்டிய பொழுது இருந்ததை விட மிகப்பெரிய சந்தோசமாய் இருந்தது..

இதைப்படிக்கிற எத்தனைப்பேரால் இந்த வழிய புரிஞ்சுக்க முடியும்னு தெரியல, என்னை மாதிரி லட்சக்கணக்கில் இந்த சென்னையை தினமும் சுத்திசுத்தி வராங்க.உயிரை பணயம் வைத்து பனை மரத்தில்ஏரி, பதநீர்இறக்கி சம்பாதித்த பணம், காலை 8 மணியில் இருந்து 4 மணி வரை வெய்யலில் கலைவெட்டி அம்மா சம்பாதித்த பணம் என்னை விட்டுப்போகுல, என் கையில் தான் இருக்கு, பணத்தை எடுத்துக்கிட்டு கிளம்பிட்டேன் என் சொந்த மண்ணுக்கு,

ஏமாறவில்லை நான் அப்டிங்கற ஒரு சின்ன திமிரோட என் சொந்தமண்ணில கால் எடுத்துவைச்சேன், வீட்டுக்குப்போனதும் முதல் வேலையா பணத்தை எடுத்து அம்மா கையில் கொடுத்ததும் கொஞ்சம் கண் கலங்கிட்டேன், என் அம்மா பக்கத்து வீட்டு அக்காகிட்ட சொன்னங்க " பையன் இந்த காச வாங்கிறதுக்காக சாப்பிடமா கூட இருந்து இருக்கான் போல, காசு போனா கூட பரவாயில்லை, இப்படிப்பாவமாய் வந்து இருக்கானேன்னு" அழுதாங்க..

அடப்போங்க, அப்பா, அம்மா பாசத்த அடிச்சுக்க இந்த உலகத்துல எதுவுமே இல்லைன்னு மனசுல ஆழமா பதிஞ்சுபோய்டுச்சுங்க அந்த நேரத்துல.அன்று இரவே சென்னைத்திரும்ப முடிவு செய்துவிட்டேன், இரவு ஆனதும் பையைத்தூக்கிக்கொண்டு கிளம்பும்பொழுது ,அம்மா அழுதுகொண்டே இன்னும் ஒரு 2 வாரம் இருந்து நல்லா சாப்பிடுட்டு அப்புறம் போயி தேடுடா என்று சொன்னாங்க, அப்பாவும் பக்கத்துல நின்னுகிட்டு மெதுவா போலாம் ஒன்னும் அவசரம் இல்லைன்னு சொன்னாங்க,

ஆனா நான் இப்படி ஒரு வார்த்தை சொல்வேன், அவுங்கள அழ வைப்பேன்னு அவுங்க கனவுல கூட நினைச்சு இருக்க மாட்டங்க, அப்படி என்ன சொல்லிவிட்டு சென்னைக்கு வந்தேன்?..

ஆறாம் பாகம் இணைப்பு இங்கே : -
ஆறாம் பாகம்

                                                                                         
                                             

Thursday, July 1, 2010

கணவன் (என்கிற) காதல்உன்னை மணந்த நாள் முதல் இன்று வரை உன்னை நேசிக்கிறேன்

நாம் இருவரும் ஒன்றாய் நின்று கொண்டு இருப்போம்,நமக்கு முன்னே இருக்கும் ஒரு இலக்கை காட்டி,
அதை தொடுபவர் வெற்றியாளர் என்பாய், நான் 1,2 3 சொல்லியவுடன் ஆரம்பிக்க வேண்டும் என்பாய் ..
3 சொல்லி முடித்து இருப்பாய்... சிறுது நேரம் கழித்து இருவரும் சிரித்துகொண்டு இருப்போம் சிறிதும் நகராமல்,
நீ முதலில் அல்லது நான் முதலில் வருவோம் என்று நினைத்து ஏமார்ந்து போன இலக்கை பார்த்து ....

என்னுடன் மோதிப்பார் என்று என் கைபிடித்து நாற்காலியில் வைத்து சாய்த்து பார் என்பாய், ஆரம்பிப்பதற்கு முன் சொல்வாய் இருமுறை மோத வேண்டும் என்று, ஆளுக்கொரு முறை வெற்றிபெற்றுவிட்டு சிரித்துகொண்டே செல்வோம், இன்னும் அந்த நாற்காலி எத்தனை முறை தான் ஏமாறும், யாரவது ஒருவர் ஒருநாள் வெற்றிபெறுவார்கள் என்று...

சமைக்கும் பொழுது விரல்களை சுட்டுக்கொண்டு சத்தம்போடுவாய்,பதறிக்கொண்டு ஓடிவந்து, கலங்கிய கண்களுடன் மருந்து தடவி முடிக்கும் பொழுது, அழ ஆரம்பிப்பாய்,
நிமிர்ந்து பார்க்கும் என்னிடம் ஒன்றுமில்லை என்பாய், உன்னை சுட்டுவிட்ட பாத்திரம் கூட நிச்சயம் மன்னிப்பு கேட்டு இருக்கும்...

அதிகாலையில் நீ என் நெற்றிபொட்டில் சத்தமில்லாமல் உன் முத்தங்களை விட்டு செல்லும் பொழுது முணு முணுக்கிறாய்,நன்றி கடவுளே என்று, நான் கடவுளை நம்பாதவன், நான் யாருக்கு நன்றி சொல்வது என்று தவித்த தருணங்கள் உண்டு.நீ கொடுத்த முத்தங்களை பத்திரமாய் வைத்து இருந்து, நீ உறங்கிய பின்பு உனக்கு திருப்பிதந்து இருக்கிறேன்.

நீ ஊருக்கு சென்ற நாட்களில் உன் பிரிதலின் வழியால் கண்கலங்கி இருக்கிறேன், ஏன் அழுதும் இருக்கிறேன், உண்மையை சொல்ல வெட்கம் ஒன்றும் இல்லை எனக்கு.ஊரிலிருந்து தொலைபேசியில் நீ என்னிடம் கேட்கும் பொழுதெல்லாம், நான் நன்றாக இருக்கிறேன் என்று என் உதடுகள் பொய்யை உதிர்க்கும், நீ திரும்பி வந்து நிற்கும் பொழுது ,என் கண்கள்- உதடுகள் கூறிய பொய்யை உடைக்கும்.அன்றும் அப்படி தான் உன்னை மருத்தவமனை அறைக்குள் அனுப்பி வைத்துவிட்டு, கலங்கிய கண்களோடு காத்திருந்தேன்.நீண்ட நேரங்களுக்கு பிறகு வந்த மருத்துவர், நம் குழந்தையை கையில் கொடுத்துவிட்டு, மன்னிக்கவும் என்றார்கள், சந்தோஷத்தில் சிரிக்க ஆரம்பித்த என் உதடுகள், கண்கள் கேள்வியுடன் மருத்துவரை பார்த்தன, கால்கள் முந்திக்கொண்டு ஓட ஆரம்பித்து உன் அறையில் நின்றது.

உறங்கியது போன்ற உன் முகம், சொல்லவந்து ஏமாந்ததின் தோற்றமாய் உன் கண்கள் மூடி இருந்தன.புரிந்ததடி புரிந்ததடி உனக்கு இனி வலிக்காது என்று தெரிந்த போதும் உன்னை அடித்தேன், என்னை சுற்றி அத்தனை பேர் இருந்தும் நீ மட்டும் வேண்டும் , நீ மட்டும் வேண்டும் என்று கதறிநேனடி,என் அருகிலே இருந்தாய் பேசமுடியவில்லையடி,

கணவாய் இருக்ககூடாதா என்று மனம் ஏங்கியதடி, நீ என்னை அழ விடாமல் பாதுகாத்து வைத்து இருந்த கண்ணீரெல்லாம்,இப்பொழுது கரைந்து கொட்டுதடி,விழித்து என் கண்ணீரை துடைக்கமாட்டாய என்று ஏங்குதடி , உன்னோடே இறக்கவிடாமல் எனக்காக ஒரு இளம் உயிரை தந்து விட்டாய்.எப்படி உன்னோடு இறப்பேனடி....இன்றோடு 20 வருடங்கள் ஆகுதடி, நான் உன்னை எனக்குள் புதைத்து, இன்னும் நீ மட்டுமே மனம் வீசிக்கொண்டு இருகிறாய், இப்பொழுது நானும், நம் மகளும் தானடி இங்கு வந்து இருக்கிறோம், அவள் பிறந்தநாளை சமர்பிக்க...

பிறந்த நாள் வாழ்துக்கள் "சுருதி ", நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய் , நான் உன்னை காதலிக்கிறேன் "சுருதி ",நீ என்னை காதலிக்கிறாயா என்று சொல் ,

இல்லை அருண், நான் உன்னை காதலிக்கவில்லை , .....

உனக்கு என் காதலின் அர்த்தம் புரியவில்லை சுருதி,அதான் என்னை வெறுக்கிறாய்...

காதலின் அர்த்தம் புரிய வேண்டுமா அருண் , பார் அங்கே,அவர் தான் காதலின் அர்த்தம், இறந்த பின்பும் மனைவியின் காதலை இன்னும் நினைவிலும், கல்லறையிலும் தேடுகிறார்.என்னில் அழகை தேடிய உன்னிடம் எப்படி காதலை தேடுவது ? ...திரும்பி பார்க்கிறேன் என் மகள் யாரோ ஒரு பையனிடம் என்னை நோக்கி கையை நீட்டிக்கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறாள் ....

                                                                                         
                                             

Saturday, June 26, 2010

யார் கடவுள்?, கடவுள் இருக்கிறாரா ?..வாங்க தோழர்களே இன்னைக்கு நீங்களும் நானும் விவாதிப்போம்...

எதை பற்றி பேச போறோம்.?

கடவுள் யாரு? , கடவுள் இருக்காற இல்லையா?, கொஞ்சம் கடினமான விவாதம் தான். இருந்தாலும் பதிவுக்குள்ள போவோம் வாங்க ...

கடவுள் இருக்கிறார் என்பது உங்களது விவாதாமாய் இருக்கட்டும்..கோடி கணக்குல மக்கள் நேசிக்கிறாங்க அப்டினா நிச்சயம் கடவுள் அப்டிங்கறவரு ரொம்ப நல்லவராவும், வல்லவராவும் ,கருணை குணம் கொண்டவராகவும், நேசிக்கிரவராவும் இருக்கணும், சரிதானுங்களே நான் சொல்றது?.சரி,.படைத்தல் , காத்தல் , அழித்தல் ..இந்த மூணு செயலையும் கடவுள் செய்கிறாரு, அதனால இதில் என்ன தவறு நடந்தாலும் ,இந்த மூன்று செயல்களுக்கும் இவரு தான் பொறுப்பாளி, சரிதானுங்களே நான் சொல்றது?..சரி,முதல்ல "படைத்தல் ", ஊனமுற்ற பிஞ்சு குழந்தைகள், கை இல்லை, கால் இல்லை, முகம் இல்லை, இதயம் இல்லை, வாழ்க்கை முழுவதும் மனசலவுளையும், உடலளவுளையும், ஏங்கி தவிக்கிற ஊனமுற்ற படைப்பு,

முன் ஜென்மத்துல பண்ணின தப்பு அதான் இப்படி படைச்சு இருக்காரு, இது தான உங்க கேள்வி நிறைந்த பதில் ?.. சரி ஊனமா இருக்குறவங்க கிட்ட கேட்கலாம் நீங்க என்னவா இருந்தீங்க போன ஜென்மத்தில?, பதில் நிச்சயம் "தெரியவில்லை" என்று தான் இருக்கும்...என்னவாய் பிறந்தோம், என்ன தவறு பண்ணினோம் என்று தெரியாதவனக்கு, தண்டனை கொடுத்து, புரியவைக்க இப்படி படைத்தேன் என்று கூறுவது , உங்களுக்கு எப்படி தோன்றுகிறது - (மடத்தனமாய்) ?....


இரண்டாவது "காத்தல்" , 16 வயசு நம்ம சகோதரி, 7 காமுகர்களால கற்பழிக்க படுகிறாள், கதறுவதை காக்க முடியாத கேவலமான காத்தல். இரக்கமே இல்லாம ஒரு தீவிரவாதியால அப்பாவியான மக்கள் சுடப்பட்டனர், மனசாட்சியே இல்லாத ஒரு அரசியல்வாதியால் ஒரு இனமே அழிந்துவிட்டது இலங்கையில்,

இந்த ஜென்மத்துல அல்லது போன ஜென்மத்தில பண்ணின தப்பு, இது தான உங்க கேள்வி நிறைந்த பதில் ?
முன் ஜென்மத்தில பண்ணின தப்புக்கு கதற கதற கற்பை பறிகொடுப்பது தான் பரிகாரமா?, தன்னை தாக்குவதுகூட தெரியாம தன் உயிரை கொடுக்கறது தான் பரிகாரமா?, போர்க்கலாமே போகாம என் சகோதர , சகோதரிகளின் அங்கங்கள் சிதறி உயிரோட துடிச்சு சாகுறது தான் பரிகாரமா, முன் ஜென்மத்தில் செய்த தவறு என்று கூறிகொள்ளும் கேவலமான காத்தல் ...
உங்களுக்கு எப்படி தோன்றுகிறது - (மடத்தனமாய்) ?....


மூன்றாவது "அழித்தல்", இன்னும் தானே சுற்றிக்கொண்டு இருக்கிறான் பல சின்னஞ்சிறு குழந்தைகளை கொன்றவனும், பல ஆயிரம் கோடிகளை தான் மட்டுமே தின்று, பல ஆயிரம் மனித உயிர்களை பட்டினியில் சாகடித்து, தான் மட்டும் வாழும் தமிழ் தலைவன் எனும் அரசியல்வாதி, இலங்கையில் என் சகோதரிகளின் கற்பை சூறையாடிய, இலங்கை ராணுவ வீரன் எனும் அயோக்கிய மிருகங்கள்,

இந்த ஜென்மத்துல அல்லது போன ஜென்மத்தில பண்ணின புண்ணியம் அதான் அவனுக்கு கடவுள் தண்டனை கொடுக்கவில்லை,இது தான உங்க கேள்வி நிறைந்த பதில் ?
உலகம் அறியா குழந்தைகள கொன்னு இருக்கான், ஒரு பொண்ணுகிட்ட இருந்து கட்டாயபடுத்தி கற்பை பெறுகிறான், தன் சுயநலத்துக்காக,உலகத்திலே மிக பெரிய கொடுமையான பட்டினி சாவுகளை செய்கிறான், அவன் எத்தனை புண்ணியம் பண்ணி இருந்தா என்னங்க, உடனே அழிக்கப்பட வேண்டாமா ? ,


இப்ப சொல்லுங்க ரொம்ப நல்லவரா? , வல்லவரா? ,கருணை குணம் கொண்டவரா? , நேசிக்கிரவரா? ...
இப்ப சொல்லுங்க கடவுள் இருக்காற இல்லையா?..பதில் உங்ககிட்ட இருக்கு, தேடுங்க...

இப்ப முடிவு பண்ணிடீங்க தானே கடவுள் இல்லைன்னு...

நாங்க எப்போ சொன்னோம் கடவுள் இல்லைன்னு , கடவுள் எங்களை எல்லாம் கஷ்டத்துல இருந்து காத்துக்கொண்டு தான் இருக்கிறார் அப்டின்னு சொல்றீங்களா?..
என்னங்க பெரிய காமெடியா இருக்கு உங்களால, சந்தோசமா வாழ்த்தி பாடுறீங்க, உங்க கஷ்டத்த தீர்த்து வைக்கிறாரு, அங்கங்கள் சிதைந்து,கதறி அழுதுகிட்டு கடவுள கூப்பிடுறாங்க, கடவுள் ஆளையே காணாம போயிட்டாருங்கலே, இது என்ன கணக்குங்க?, லஞ்ச கணக்கா ?,வாழ்த்தி பாடுகிறவன் கண்ணுக்கு வெண்ணை, கதறி கெஞ்சுறவன் கண்ணுக்கு சுண்ணாம்பா ? ..


சரி, அப்டினா தப்பு பண்றவங்க எல்லாம் தண்டிக்கப்படுறாங்களா ?, இல்லையா ?..

"ஒவ்வொரு வினைக்கும் அதற்க்கு சமமான எதிர் வினை உண்டு."
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்,"
"தன்வினை தன்னை சுடும் "
"வினை விதைத்தவன் வினை அறுத்தே தீர வேண்டும் "

நிச்சயம் தண்டிக்க படுறாங்க, ஏமாற்றி கோடி கோடியா சம்பாதித்தவன்,அதை அனுபவிக்க முடியாம, அனுபவிக்காம செத்து போயிடறான், எப்படின்னு தெரியுங்களா ?, தீராத நோய் வந்து, வாழ்க்கையின் கடைசி நாட்களை படுக்கையில் படுத்துக்கொண்டு , பையன் பக்கத்துல இருப்பான், மனைவி பக்கத்துல இருப்பாள், மருத்துவர் பக்கத்துல இருப்பாரு, சொந்தகாரங்க எல்லாம் பக்கத்துல இருப்பாங்க, ஆனா அவன் மட்டும் தான் வலியை உணர்ந்து, உணர்ந்து கதறி கதறி அழுது இறப்பதற்கு முன் தண்டனை பெறுவான்,
சரி அவன் சேர்த்து வைத்த சொத்து என்ன ஆகிறது, அவனக்கு ஊதாரி மகன், அல்லது ஊதாரி பேரன் எவனாவது ஒருத்தன் பிறந்து ,அதை அழித்து, எங்கு இருந்து எடுக்கப்பட்டதோ,அங்கேயே திருப்பி கொடுக்கப்படும்.

சரி, துடிக்க துடிக்க கொலை செய்தவனின் நிலைமை?, கண்டிப்பா அவனும் ஒரு நாள் துடிக்க துடிக்க சுட்டு கொல்ல படுகிறான்.அல்லது கொல்ல படவில்லை என்றால் துடிக்க துடிக்க கொல்லப்பட்டே தீர வேண்டும் நிச்சயம்.

என்னங்க என் கருத்த ஏற்றுகொள்ள முடியவில்லையா?, சரி வாங்க, நம்மலே நேரடியா முயற்சி செய்து பார்ப்போம். எங்காவது ஒரு இரண்டு ரூபாய் ஏமாத்திட்டு வந்துடுங்க, அந்த நாளோட இறுதி, மாதத்தோட இறுதி, வருசத்தோட இறுதியில் நீங்கள் ஏமாற்றிய அளவு நிச்சயம் இன்னொருவனிடம் ஏமாந்து இருப்பீர்கள். இது காமெடியான விஷயம் இல்லைங்க,

இப்ப முடிவு பண்ணிடீங்க தானே கடவுள் இல்லைன்னு...

சரி, யாரு கடவுள்?..

தன்னையே நாட்டிற்காக அர்பணித்து இன்றும் வாழும் தலைவர்கள், தன் தேசம் காக்க,உயிரை கொடுக்கும் இராணுவ வீரன், பல அநாதை இல்லங்களில் சம்பளம் வாங்காமல் அன்பை காணிக்கையாக்கும் என் சகோதர்கள்,சகோதரிகள், தப்பு செய்பவர்களை தலை எடுக்க புறப்பட்டு இருக்கும் என் அண்ணன்களும், தம்பிகளும், எங்கோ கஷ்டபடுகிறார்கள் என்று தெரிந்ததும் தன்னால ஆனா உதவியை செய்யும் என் தேசத்து நண்பர்கள், குக்கிராமங்களில் வாழும் ஏழைகளின் படிப்பையும், வாழ்க்கையையும் நான் பார்த்து கொள்கிறேன் என்று தோல் கொடுக்கும் என் தேசத்து இளைஞன்,
தன்னால் முடிந்த விழிப்புணர்வை எழுத்துக்கள் மூலம் பற்றி எரிய செய்யும் வலைதளத்து நண்பர்கள்,

தன் எழுத்துக்களின் மூலம் ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் இருக்கும் உணர்வுகளை எரியவிடும் திரு வாசன் அவர்கள், திரு நேசமித்திரன் அவர்கள், என் தேசத்து மக்களை பக்குவபடுத்தும் முயற்சியாய், சாதிகள் போன்ற பேய்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் என் அண்ணா திரு தேவா அவர்கள், என் சகதோர்களுக்கு பாசத்தையும் விழிப்புணர்வு ஊட்டும் என் அக்கா நிலாமதி அவர்கள், பெண்ணாய் பிறந்து என் தேசத்து இளைஞர்களுக்கு வீரம் கற்பிக்கும் கலகப்ரியா அக்கா அவர்கள்,என் தேசத்து மக்களுக்கு அமைதியை கற்றுதரும் முயற்சியில் தன் மகனுக்கு அமைதி விரும்பி என பெயர் சூடி, சட்டம் படிக்க சொல்லும் அமைதிஅப்பா,

தன்னால் முடிந்த செய்திகளை கொண்டுவந்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயலும் என் தம்பி சௌந்தர் ,தன்னால் முடிந்தவற்றை என்தேசத்து மக்களுக்கு செய்யும் என் நண்பர்கள் சி. கருணாகரசு அவர்கள், கனிமொழி அவர்கள்,அன்புடன் மலிக்கா அவர்கள் ,ஜீவன்பென்னி அவர்கள்,புஷ்பா அவர்கள்,பட்டாசு அவர்கள் ,நாய்க்குட்டி மனசு அவர்கள்,cheena (சீனா) அவர்கள்,தமிழ் அமுதன் அவர்கள், தமிழ் மதுரம் அவர்கள், வீரமணி அவர்கள்,
சிவராஜன் ராஜகோபால் அவர்கள்,

(என்தேசத்து மக்களை தன்னால் முடியும் வண்ணங்களில் மாற்ற துடிக்கும் நல இதயங்களை இங்கு அறிமுகபடுத்தி இருக்கிறேன் , இந்த பட்டியல் இதோடு நிற்பதில்லை, புதிய நல் உள்ளங்களை சந்திக்கும் ஒவ்வொரு கணமும் இங்கே மாற்றம் செய்யப்படும் ) ,

இல்லாத ஒன்றை கடவுள் என்று சொல்வதிற்கு பதிலாய்
இருக்கும் இத்தனை நல் உள்ளங்களை கடவுள் என்று சொல்லலாமே..

வேண்டவே வேண்டாம்.

இல்லாத ஒன்றின் பெயரை எதற்கு இத்தனை நல் உள்ளங்களுக்கு வைக்க வேண்டும்?...இயற்கையை மாற்ற துடிக்கும், இயற்கையை நேசிக்கும், இயற்கைக்கு உதவும் இவர்களுக்கு "இயற்கையர் " என்று பெயர் வைக்கலாமே!,

அட இயற்கையர் ஆகிறது பெரிய விஷயம் இல்லைங்க, பசியில் துடிக்கிற ஒரு குழந்தைக்கு சாப்பிட ஒரு தேனீர் வாங்கிகொடுத்தா நீங்க கூட இயற்கையர் ஆகிடலாமுங்க

(குறிப்பு:கடவுள் இருக்கிறார் என்பதை பற்றி யாரவது சொல்ல விரும்பினால் , இந்த சிறுவனுக்கு புரிய வையுங்கள், நிச்சயம் ஏற்றுகொள்கிறேன் கடவுள் இருக்கிறார் என்று அல்ல, நீங்களும் இயற்கையர் என்று")

                                                                                         
                                             

Wednesday, June 23, 2010

வாழ்க்கை(வலி)ன்னா என்ன? -- சொந்த மண்ணில் என்ன நடந்தது? (பாகம் - 4 )நன்றிங்க நான்காம் பாகத்தை படிக்க வந்ததிற்கு...


முதல் பாகம் இணைப்பு இங்கே : -
முதல் பாகம்

இரண்டாம் பாகம் இணைப்பு இங்கே : -
இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம் இணைப்பு இங்கே : -
மூன்றாம் பாகம்


அன்றைய பேருந்தின் பயணம் உடல்வலியோடு , மனவலியும் சேர்த்து சுமந்து சென்றது . கால்கள் நடக்க மறுத்து கெஞ்ச ஆரம்பித்தன, வீட்டை அடைந்தபோது அம்மா சமையலறையில் எதோ செய்து கொண்டு இருந்தாங்க, என்னை பார்த்ததும் ஓடி வந்து, என்னை பிடித்து படுக்கவைத்துவிட்டு, அழுதாங்க, அதை இன்னும் மறக்க முடியல, அப்பா கடைல இருந்து வேகமா வந்து என்னை மருத்துவமனைக்கு கூட்டி சென்றார்..

அவர் உள்ளுக்குள் அழுததை என்னால் உணரமுடிந்தது ..ஒரு வார காலம் என்னை அமரவைத்து விட்டது டைபாய்டு .இந்த ஒரு வாரம் என்னை நலம் விசாரிக்க வந்தவர்கள் அம்மாவிடம் கேட்டவை "இன்னும் வேலை கிடைக்கலையா உன் பையனுக்கு , நாங்க அப்பவே சொன்னோம் இருக்குற காச வைச்சு கடை வைச்சு கொடு நல்ல பிளைசுக்குவான்னு , நீ தான் கேட்குல, இப்ப பாரு பையன் எப்படி வந்து நிக்குறான்" என விசாரித்தார்கள் , அம்மாவும் விட்டு கொடுக்காமல், "வேலை கிடைச்சுரும் , கிடைக்காம எங்க போய்ட போகுது" என எனக்காக வாதாடினாங்க.

நிற்க , நடக்க, ஓட, தகுதி ஆகிவிட்டதை உணர்ந்தேன்...

திடீரென எனது உடைமைகளை எடுத்துகொண்டு அம்மாகிட்ட சொல்லிட்டு கிளம்ப ஆரம்பிச்சேன், " இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு போட அப்படினு அம்மா சொன்ன வார்த்தைக்கு பதில் சொல்லாம, இந்த முறை கொஞ்சம் அதிக வெறியோட ..

சென்னை வந்து சேர்ந்தேன், இந்தமுறை தேடல் கொஞ்சம் அதிகமா இருந்துச்சு , அட நீங்க வேறங்க ,தேடல் மட்டும் தான் அதிகமா இருந்துச்சுங்க , ஆனா எப்பவும் போல இழப்பு தான். 6 மாதம் தோல்வி தோல்வினு நகர்ந்து போய்டுச்சு...அன்னைக்கும் எப்பவும் போல தான் விடிஞ்சுது , ஆனா கொஞ்சம் வித்தியாசாமான நாள் , நண்பன் ஒருத்தன் சொன்னான் சென்னைல இருந்து காஞ்சிபுரம் போற வழியில் ஒரு கம்பெனி ஆரம்பிச்சு இருக்காங்க , நிறையா பேர் தேவைபடுதாம்,அதனால எழுத்து தேர்வில் வெற்றி பெற்றால் போதும், அப்புறம் 10,000 கட்டனும் ,அதுவும் நம்ம கம்பெனிய விட்டு ஒரு வருடம் எங்கயும் போக கூடாது என்பதற்காக தான் என கூறினான்...உடனே கிளம்பிட்டேன், முதல் சுற்றை அழகாய் முடித்தேன் ,

அப்பாவிடம் கூறி 10,000 பணத்தையும் கட்டிவிட்டேன், கைகளில் வேலையில் சேருவதற்கான கோப்புகளை வாங்கிவிட்டேன்,வானத்துக்கும், பூமிக்கும் குதிச்சேன் அப்டின்னு சொல்வாங்களே அந்த மாதிரி உணர்ந்தேன். அதில் ஒரு மாதத்திற்கு பிறகு வேலையில் சேருவதற்கான நாளும் குறிப்பிட்டு இருந்தது , ஆரம்ப சம்பளம் 7500. காஞ்சிபுரத்தில் தங்குவதற்கு வீடு எடுத்தேன்...

குறிப்பிட்ட நாள் அன்று, வேகமாய் பேருந்தை பிடித்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கினேன்.... நிஜமாய் நினைக்கவில்லை இப்படி நடக்கும் என்று , சினிமாக்களில் தான் இப்படி ஒரு திருப்பம் வரும், ஆனால் என் நிஜ வாழ்க்கையில் பார்த்தேன் அப்பொழுது..

பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும் பெரிய கூட்டத்தை காண்கிறேன்,என்ன நடக்கிறது என்று தெரியாமல் நடக்க ஆரம்பிக்கும் என்னை காவல் துறை அதிகாரிகள் தடுக்கிறார்கள், அங்கு செல்ல தடை விதித்து இருக்கிறோம் என்று, புரியாமல் அவர்களிடம் கேட்டேன்,
மூன்று மாதமாய் வேலை செய்தவர்களுக்கு ஊதியம் தரவில்லை என்று பணிபுரியும் ஊழியர்கள் இன்று காலை அலுவலகத்தையும் , கணினியையும் அடித்து நொறுக்கி போராட்டம் செய்துவருகிறார்கள் என்று அவர்கள் சொல்லி முடிக்கும் முன் வியர்த்து கொட்டியது, என்ன செய்வது என்று தெரியவில்லை, அந்த கூட்டம் இருக்கும் இடத்தை நெருங்கினேன், என்னை போல் நிறையா பேர் அங்கு இருந்தார்கள், அவர்கள் நம்ம கொடுத்த காசு அவ்வளவு தான் என கூறினார்கள்,

இதயம் வேகமாய் துடிக்க ஆரம்பித்துவிட்டது, என்ன செய்வது என்று தெரியவில்லை,அருகே இருந்த பெட்டிக்கடையில் குடிக்க தண்ணீர் வாங்கிகொண்டு, கொஞ்சம் தூரம் விலகி சென்று, தண்ணீரால் முகத்தை நிரப்பிவிட்டு தேம்பி தேம்பி அழுதேன், கண்ணீர் தனியாய் தெரியாமல் இருக்க தண்ணீரால் முகத்தை அவ்வப்பொழுது நிரப்பி கொண்டே இருந்தேன்,

அப்பா 10,000 நோட்டு கட்டுகளை என்னிடம் கொடுக்கும்பொழுது எதையோ வங்கியில் அடமானாமாய் வைத்து தருகிறார் என்று தெரிந்த மனசு அப்பொழுது பயங்கரமாய் வலித்தது,
ஏமாந்து விட்டேன் என்று சொல்வது எவ்வளவு கஷ்டமான ஒரு விசயம் என்பது எனக்கு புரிந்தது, அளவுக்கு அதிகமா கஷ்டத்த அனுபவிக்கும் பொழுது அழுகை அதிகமாகி சிரிப்பு வர ஆரம்பிக்கும் அப்டின்னு சொல்வாங்களே அதை அப்பொழுது அனுபவிச்சேன்..

அங்க இருந்தவங்க பணத்தை திருப்பி கொடுக்க சொல்லி போராடினாங்க, நானும் சேர்ந்து கொண்டேன், அன்று இரவு வரை அதற்க்கு ஒரு தீர்வும் கிடைக்கல,மீண்டும் அடுத்த நாள் கூடினோம், போராடினோம், உண்ணவே இல்லை நான், மறந்துவிட்டது..அன்றும் இரவு வரை போராடினோம், முடிவு கிடைக்கவில்லை..பாதிபேர் ஏமாற்ற பட்டுவிட்டோம் என ஒப்புக்கொண்டு , கிளம்பிவிட்டனர்..

ரெண்டு நாளுக்கு அப்புறம் எனது கைபேசியை செயல் பெற செய்கிறேன், அப்பாவை அழைக்கிறேன்.எப்படி இருக்க?, கம்பெனில சேர்ந்து விட்டாயா ?, எப்படி இருக்கு கம்பெனி?.... என கேள்விகளை கேட்ட என் அப்பாவிடம் நான் எப்படி சொல்ல நடந்ததை,அழுகை என் மௌனத்தை உடைத்தெறிந்தது, நடந்ததை கூறினேன்..நிச்சயம் என் அப்பாவிற்கு தெளிவாய் புரிந்து இருக்க வாய்ப்பே இல்லை,என் அழுகை தான் தெளிவாய் புரிந்து இருக்கும்,

என் அப்பாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, என் அம்மாவை அழைத்து பையன் அழுகிறான் என்று கூறினார், அம்மா என்னிடம் காரணம் கேட்கவில்லை ,"ஆம்பிள பையன் அழகூடாது, தைரியாமா இருக்கணும் என சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே, அப்பா என்னிடம் கூறிய வார்த்தை பிரமிக்க வைத்தது,

" காசுபோனா போய்ட்டுபோது உடனே கிளம்பி வந்துடு" ...

அப்பா,கஷ்டப்பட்டு பனைமரம் ஏறி பதநீர் விற்று பார்த்து பார்த்து சம்பாதித்த காசுங்க,அம்மா வெய்யலில் களைவெட்டி சம்பாதிச்ச காசுங்க, ஒரு நிமிடத்துல, போனா போயிட்டு போகுது நீ ஊருக்கு கிளம்பிவா அப்டின்னு அப்பா சொல்லும்போது எப்படிங்க அழாம இருக்க முடியும்?...ஐந்தாம் பாகம் இணைப்பு இங்கே : -
ஐந்தாம் பாகம்                                                                                         
                                             

Monday, June 21, 2010

காதலியை கள்ளத்தனமாய் சந்தித்த சந்தோஷத்தில்...
வயது 26 ஐ தொட்டுவிட்டு அடுத்து நகர ஆரம்பித்துவிட்டது,
இன்னும் ஒவ்வொரு மழை தூறும் மாலை பொழுதையும்,
கைகளை நான் மட்டுமே இருக்க கட்டிக்கொண்டு ரசித்து கொண்டு செல்கிறேன்..
என் கரங்களை இன்னொரு கரம் பற்றிக்கொண்டு நடக்க விரும்பவில்லை,
மழையின் வாசத்தையும், தீண்டலையும், விலகளையும் நான் மட்டும் ரசிக்க வேண்டும் என்ற சுயநலமாய் இருக்கலாம்,என் உணர்வுகளை புரிந்து கொள்ளாத கரமாய் இருந்துவிட்டால் என்ற அச்சமாய் இருக்கலாம்,
இலக்கு இல்லாத பயணத்திற்கு எதற்கு இன்னொரு கரம், இருக்க
கட்டிக்கொண்டு செல்வதே மேல் என்ற என்னமாய் இருக்கலாம்,
சரி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், என் உடல் தீண்ட முயற்சிக்கும் மழை துளிக்கு வழிவிட முயற்சிக்கிறேன்,
"மழையில் நனையாதே" என்று திட்ட அம்மா அருகே இல்லை, "நீ பைத்தியகாரனா மழையில் நனையற" என்று திட்ட நண்பன் அருகே இல்லை, ஓடி வந்து குடைபிடிக்க காதலி இல்லை,நான் அர்த்தமற்றவனா என்ற ஆராய்ச்சிக்கான நேரம் அல்ல, அதிர்ஷ்டக்காரன் என்று மழை இதழ் முததமிடும் நேரம்,
மலை இடுக்குகளில்,சரிவான பாதைகளில் ஓடி, விழும் துளிகளை என் மீது வாங்கிகொள்ளும் முயற்சியில் தோற்கவில்லை நான்,
தேகம் தீண்ட வாடும் மழைதுளிக்கு தடைவிதிப்பதில்லை, உடைகளை களைகிறேன் என் நெற்றியில் விழுந்து,என் பாதத்தில் மரிக்க..
என் உடல் மறுக்கும் வரை மழைதுளியை என் தேகம் தீண்ட அனுமதிக்கிறேன்,
மறுத்த நொடியில் என் தேகம் சுருக்கி, பாறை இடுக்குகளில் பதுங்கி கொள்கிறேன்.
தீண்டலில் தாகம் அடங்கிய என் உடல், பார்வையில் காதல் கொள்கிறது, நடுக்கத்துடன் கண்ணிமைக்காமல் காதல் கொள்கிறேன், ரசிக்கிறேன் ஒவ்வொரு துளியையும்.

என் உடலை பிரிய மறுக்கும் ஈரத்தை இருக்கமாய் கட்டியணைத்து,என் சுவாசத்தின் வெப்பம் பாறை இடுக்குகளை பற்றி எரிய செய்கிறேன்,என் கண்கள் மரணிக்க முயற்சித்து, வெற்றியும் பெறுகின்றன. எனக்கும் மழைக்குமான காதல் மறித்து மௌனம் பரவத்தொடங்க, மழையும் நின்று, என்னிடம் தோற்றுப்போனதை ஒப்புக்கொள்கிறது,

காலை கண்விழித்ததும் அவசர அவசரமாய் வீடு வந்துசேர்கிறேன் , என் காதலியை கள்ளத்தனமாய் சந்தித்த சந்தோஷத்தில்...

                                                                                         
                                             

Friday, June 18, 2010

நானும் உங்களை மாதிரி தானுங்க ......நானும் உங்களை மாதிரி தாங்க பத்து மாசம் சுமக்கபட்டேன்,
நல்லா தாங்க பிறந்தேன் , நல்லா தாங்க வளர்ந்தேன்,
எட்டாம் வகுப்பு படிக்கரவரைக்கும் எனக்கு "செல்வன்" அப்டிங்கற பெயர் தாங்க.

என்னமோ தெரியலைங்க பொண்ணுங்கள மாதிரி இருக்கணும்னு தோனுச்சு,முகத்துக்கு பூச்சு,கண்ணிற்கு மை,காதிற்கு தோடு இப்படி ஆசை வந்துச்சு,
நான் மாறிகிட்டே வருவது கூட படிக்கிற பசங்க கேலி பண்ணும்போது தாங்க புரிய ஆரம்பிச்சுது, என்ன பண்றதுன்னு தெரியல,

நான் அப்பா அம்மாகிட்ட அதிகம் பேசறது இல்ல சின்ன வயசுல இருந்தே,அதனால என் பிரச்சனைய அவுங்ககிட்ட சொல்லவும் முடியல.
ரொம்ப வலிச்சுது கூட படிக்கிற பசங்க கிண்டல் பண்ணும்போது , பல பெயர்களை வைச்சு என்னை அழைக்கிற போது , என்ன பண்றதுன்னு தெரியல, எங்க அப்பாவும், அம்மாவும் எவ்வளவு நாள் தான் கேட்கறவங்க கிட்ட எல்லாம் சொல்லி சமாளிப்பாங்க, அவுங்க கஷ்டப்படுரத பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சுங்க,அதான் ஒரு நாள் சென்னைக்கு யாருக்கும் தெரியாம பஸ் பிடிச்சு வந்துட்டேன் .

இங்க வந்து ஒரு கார்த்திக் உணவகம்,தி.நகர்ல வேலைக்கு சேர்ந்தேன்,கொஞ்ச நல்ல வேலை பார்த்தேன்,இங்கயும் அதே தொந்தரவு ஆரம்பிச்சுது,என்ன பண்றதுன்னு தெரியலங்க, என்னை மாதிரி பிறந்தவங்க எல்லோரும் உங்களால வினோதமா பார்க்க படுகிறோம்ங்க, கிண்டல் பண்ண படுகிறோம், இன்னும் சில பேரு வினோதமா பார்ப்பதற்கும் கொஞ்சம் மேல போயி படுக்க கூப்பிடுறாங்க,

ஆணாவும், பெண்ணாவும் பிறந்த உங்களுக்கு எங்கள மாதிரி பிறந்தவங்கலோட வலி தெரியலைங்க, உலகம் தெரியா குழந்தைங்க கூட எங்கள பார்த்து கிண்டல் பண்ற மாதிரி உங்களை போன்ற உயிர்களை கொண்ட எங்களை வேடிக்கை பார்க்க உதவும் பொருளாய் மாற்றி விட்டீர்கள்.

அண்ணா நகர்ல என்னை மாதிரி பிறந்த மனிதஉயிர்கள் இருக்கிறதா கேள்விபட்டு அங்கே போனேன்.ஒவ்வொருத்தர் கதைய கேட்குறப்ப மனசு வலிச்சுது, யாரும் எங்களுக்கு வேலை கொடுக்கறது இல்ல, வேலை கொடுக்கறவங்க எதுக்கு கொடுக்றாங்க அப்டின்னு உங்களுக்கு சொல்லி தான் புரியணும்னு அவசியம் இல்ல.


எங்களுக்கும் வயிறுன்னு ஒன்னு இருக்குதுங்களே என்ன பண்றது, சில பேரு உடம்பவிக்குறோம், சிலபேரு மனச விக்குறோம், இதோ 6.30 ரயில்ல உங்ககிட்ட பிச்சை கேட்கிறோம், ஆண் ,பெண் அப்டிங்கற தகுதிய தவிர எல்லாமே எங்ககிட்ட இருக்குங்க, ஆனா இந்த சமுதாயம் எங்களை பிச்சை எடுக்கவும், இச்சையை களித்துகொள்ளவும் உபயோகப்படுதுறாங்க....

தயவு செய்து குழந்தைங்க கிட்ட தப்பு தப்பா சொல்லி வைக்காதீங்க,.உயிர்களை மதிக்க கற்று கொடுங்க...
சரி இதை எல்லாம் கேட்குறீங்களே , நீங்க எங்களுக்காக என்ன பண்ண போறீங்க,

சரிங்க நான் வரேன், அடுத்த ரயில் வர நேரம் ஆகிடுச்சுங்க,


என் பெயர் இப்ப "செல்வி"ங்க ...உங்க பெயர் என்னங்க..


என் பெயர் "விஜய்" ங்க அக்கா....

                                                                                         
                                             

Thursday, June 10, 2010

வாருங்கள், வதம் செய்தே தீர வேண்டும் --- நிறைவுப்பாகம்
நன்றிங்க நிறைவுப்பாகத்தை படிக்க வந்ததிற்கு...


முதல் பாகம் இணைப்பு இங்கே : -
முதல் பாகம்


மூன்றாம் காரணம்-- ஊடகங்கள், செய்தித்தாள்கள், திரைப்படைதுறைகள் - இந்த ஊடகங்கள் மக்களுக்கு இப்பொழுது என்ன ஊட்டிக்கொண்டு இருக்கிறது?,

தொடர்கள் (கள்ளக்காதல், ஒருத்தன் மனைவிமீது இன்னொருவன் ஆசைப்படுவது, போட்டி போட்டு ஒரு இளைஞனை பல பெண்கள் காதலிப்பது, ஜூம் மந்திர காலி மாதிரி வித்தை காட்டுவது, என்னும் எத்தனையோ அசிங்கங்களை விளம்பரத்தோடு காட்டுவது),

செய்திகள் (சாமியார்கள் செய்த தவற்றை வினாடிக்கு ஒருமுறை விளம்பரபடுத்தி, நமது வீட்டிற்குல்லையே வந்து சிறுகுழந்தைகளின் மனதில் விஷமத்தை வளர்ப்பது).

நடன போட்டிகள் (சிறு பிஞ்சு குழந்தைகளுக்கு திரைப்படத்துறை மட்டும் தான் வாழ்க்கை என்று பிஞ்சு நெஞ்சில் விஷம் ஊட்டுவது,தொடர் நயாகிகள் கொஞ்சமும் வெட்கப்படாமல் மேடைகளில் தன் அங்கங்களை காட்டியும்,அழுதும், அதற்கும் சேர்த்து மறைமுகமாக பணத்தை வாரிக்கொண்டு செல்வது).

விருது வழங்கும் விழாக்கள் (கதையே இல்லாத படத்திற்கு ,கதை இருக்கிறது , அங்கே சிரிக்க வைத்து இருக்கிறோம்,இங்கே அழ வைத்து இருக்கிறோம், லண்டனில் பாடல்களை ஒளிப்பதிவு செய்து இருக்கிறோம்,மயிர்கூச்செறியும் சண்டைகளை படமாக்கி இருக்கிறோம், முக்கியமாக இப்பட நாயகனையும், நாயகியையும் சிரமப்பட்டு நடிக்க வைத்து இருக்கிறோம், கடைசியாக படத்தை பார்க்கவைத்து உங்களையும் முட்டாள் ஆக்க இருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்லி , தனக்கு தானே விருதும் வழங்கிக்கொள்கிறார்கள் , இவற்றை அணைத்தையும் நொடிக்கொரு முறை விளம்பரம் செய்து பணமீட்டுகிறார்கள் இந்த பாழாய் போன ஊடங்களை சேர்ந்தவர்கள்.)

திரைப்படைதுறைகள்-- 2 ரிப்பன்களை மட்டும் உடைகளாய் கட்டிக்கொண்டு 5 பாடல்களுக்கு ஆடுவது, ஒரே அடியில் உயர பறக்க வைப்பது, படிப்பதை விட்டுவிட்டு எப்படி தறுதலையாய் சுற்றுவது, காதலிப்பது, இப்படி அர்த்தமற்ற படங்களை இயக்கிவிட்டு நானும் பெரிய இயக்குனர் என்று விழா எடுத்து கொள்வது, இப்படி அல்லவா செல்கிறது இந்திய திரைப்படத்துறை, சில நல்ல கருத்துகளை சொல்கின்ற படங்கள் ஒன்றிரண்டு வரத்தான் செய்கின்றன. திரைப்படத்தின் மூலம் ஒரு ஒளிமயமான இந்தியாவை உருவாக்க கூடிய ஒரு துறை இப்படியா மக்களை மடச் சாம்பிரானிகலாக்குவது,

செய்தித்தாள்கள் -- இவைகள் முதல் பக்கத்தில் சிந்தும் செய்தி என்னவாக இருக்கிறது என்றால்?, எப்போதோ வெளியிடப்படும் படத்தின் விளம்பரம், அல்லது மொக்கையாக ஓடிக்கொண்டு இருக்கும் படத்தின் விளம்பரம், அரைகுறை ஆடையுடன் நிற்கும் உள்ளாடை விளம்பரங்கள், தலைவனை புகழ்ந்து வண்ணப்படமும், வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம் என்கிற பழைய புளிச்சு போன வசனம்.

ஒரு ஊடகம் சமுதாய முன்னற்றதிற்காக இல்லாமல், மக்களை மந்திகளாக்கி,நாளை என்ன ஆகும் என்று புதிது புதிதான கேவலமான தொடர்களை காண மக்களை அவரவர்கள் வீட்டிலே கட்டிபோடும் நிலையை செய்து கொண்டு இருக்கிறது. எப்படி தெரியும் எங்கு எங்கோ நடக்கும் பட்டினி சாவுகளும், பசி கொடுமைகளும், ஏழை ஒருவனுக்கு இழைக்கப்படும் அநீதி,பேருந்தில் தொங்கிக்கொண்டு உயிரை, பேருந்தின் படிக்கட்டில் வைத்து பயணம் செய்யும் அடிப்படை இந்திய குடிமகனின் வலி. இலங்கையில் ஒரு இனமே அழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது , அவைகளை மக்களுக்கு எடுத்து சொல்லி உண்மை நிலையை அறியவைத்து, மக்களை ஒருமைப்படுத்தி அதற்கு ஒரு தீர்வு காணச்செய்யாத ஒரு ஊடகம், ஒரு மிகப்பெரிய தலைவனக்கு பாராட்டு விழா, அதில் குத்தாட்டம் போடும் மானம்கெட்ட பிச்சைகாரிகள், அதையும் அமர்ந்து உற்று நோக்கும் தமிழனத்தலைவர்கள், இப்படி மனிதனை சிந்திக்க விடாமல் மந்திகலாகவே வைத்து தனது காரியங்களை சாதித்து கொள்கிறது.

ஒரு திறமையான, உண்மையான ஊடகம் என்ன செய்ய வேண்டும்? என்பதை படிப்பறிவு இல்லாதவனை கேட்டால் கூட சொல்வான். அப்படி இருக்க ஊடகம் நடத்துவோருக்கு தெரியவில்லை என்றால் அவர்கள் ஊடகம் நடத்த அருகதை அற்றவர்கள் என்று நேரடியாகவே திட்டலாம்.சரி , ஊடகம் என்ன செய்யவேண்டும்?.எங்கே அநீதி இலைக்கபடுகிறதோ அங்கே சென்று உண்மை நிலையை ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கை எடுக்க அரசியல்வாதிகளை உந்த வேண்டும்.

மக்கள், இப்படிப்பட்ட உறவுகளை தவறாக காட்டும் தொடர்களையும் , இப்படிப்பட்ட காமவெறிகள் நிறைந்த செய்திகளையும், ஆடைகள் குறைத்து ஆடப்படும் நடனப்போட்டிகளையும், தகுதியே இல்லாத தரம்கெட்ட படங்களின் விருதுகள் வழங்கும் விழாக்களையும் தான் காண விரும்புகிறார்கள் அதனால் தான் இப்படி ஒளிபரப்புகிறோம் என்று தயவு செய்து என் தேசமக்களை நோக்கி உங்கள் அசுத்த கரங்களை நீட்டி விடாதீர்கள், என் தேசமக்கள் பிறக்கும்போதே தொடர்களையும்,செய்திகளையும்,விருதுகள் வழங்கும் விழாக்களையும் பார்த்து வளரவில்லை, தவறான ஊடகங்கள் தான் என்தேச மக்களை தன் பாதைக்குள் வரவழைத்து , அடிமையாக்கிவிட்டன. அதனால் அணைத்து ஊடகங்களும் ஒன்றுபோல் மாறவேண்டும், நாட்டின் உண்மை நிலையை துல்லியமாக படம் பிடித்து காட்ட வேண்டும் .

ஆடைகள் இருந்தும் குறைவான ஆடைகளை உடுத்தி நடனமாடும் நமீதா, இன்னும் எத்தனையோ மீதா-க்களை படம் பிடித்து காட்டும் நேரங்களில் உடுத்த ஆடை இல்லாமல் மானம் காப்பாற்ற தவிக்கும் என் சகோதரிகளின் , சகோதர்களின் வலிகளை ஊடகங்களின் வழியாக நாட்டு மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உணர்த்த வேண்டும். தவறு செய்யும் அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான இன்னொரு பக்கத்தை ரகசியமாய் பதிவு செய்து அம்பலப்படுத்த வேண்டும். செய்தித்தாள்களில் சாதித்தவர்களின் முகவரியை முன்னுரையாக கொடுத்து நம் தேசத்தின் பெயரை,உலக ஏட்டில் முதன்மை பெற உறுதுணையாக இருங்கள், சாதித்த தூய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுங்கள், தேவை இல்லாத செய்திகளை கடைசி பக்கத்தில் போடுங்கள் .நான்காம் காரணம்-- பல பொறுப்பற்ற இளைஞர்கள் (என்னையும் சேர்த்துதான்).

ஐ.டி துறை இளைஞர்கள்- அதாவது பணத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாத அளவுக்கு பணம் அதிகமீட்டும் திறமை மிகுந்தவர்கள், தன் இளமையை அந்நிய நாட்டிற்கு விற்றவன்.சரி இவர்கள் செய்யும் தவறு என்ன?.நிறையா தவறுகள் இருக்கின்றன, அதில் சில- மாதங்களில் பல 1000 ரூபாய் ஈட்டும் இவன், அதே பல 1000 ரூபாய் ஈட்டும் உடன் பணிபுரிவோரிடம் தொட்டதுக்கெல்லாம் பல 1000 ரூபாய் செலவழித்து விருந்து உபசரிப்புகள் நடத்துகிறார்கள், வெளி உலகத்தில் நடக்கும் அவலங்கள் தெரியாமல் இருக்க தோழிகளிடம் பேசுவதிலும், ஒலி நாடக்களில் பாடல் கேட்பதிலும் தங்களது நேரங்களை சுருக்கி கொள்கிறார்கள்.(ஒரு சில பொறுப்புள்ள ஐ.டி துறை இளைஞர்களும் இருக்கிறார்கள், நான் அவர்களை பற்றி எழுதவில்லை இங்கே)

அறிவியல் துறைசார்ந்த இளைஞர்கள்-- தனது அறிவின் திறமையால் நிலவிலும், கண்ணுக்கு தெரியா கிரகங்கள் கண்டறிவதிலும், புதிய புதிய மருந்துகள் தயாரிப்பதிலும் கில்லாடிகளான இளைஞர்கள் இவர்கள் தான். சரி இவர்கள் செய்யும் தவறு என்ன?. இந்திய மண்ணில் படித்து அறிவை பெருக்கிக்கொண்டு, அயல் மண்ணில் வேலை செய்யும் கொஞ்சம் சுயநலம் கொண்ட இளைஞர்கள்..(ஒரு சில பொறுப்புள்ள அறிவியல் துறைசார்ந்த இளைஞர்களும் இருக்கிறார்கள், நான் அவர்களை பற்றி எழுதவில்லை இங்கே)

படிப்பறிவில்லா இளைஞர்கள்-- கல்லையும் உடைத்து தூளாக்கும் பலம் கொண்டவர்கள்,மழையிலும், பணியிலும்,வெய்யலிலும் ஓய்வின்றி உழைப்பவர்கள். சரி இவர்கள் செய்யும் தவறு என்ன?. குடித்துவிட்டு மானம்கெட்டு தெருக்களில் கிடக்கிறார்கள்,சமுதாய சிந்தனை இல்லாமல் கெட்டு குட்டிசுவராய் போகிறார்கள், இவர்களால் குடும்பத்தில் சண்டை தான் மிச்சமாய் இருக்கிறது. ..(ஒரு சில பொறுப்புள்ள படிப்பறிவில்லா இளைஞர்களும் இருக்கிறார்கள், நான் அவர்களை பற்றி எழுதவில்லை இங்கே)

ஹீரோக்களின் ரசிகன்கள்-- தனது ஹீரோக்களை பற்றி தவறாக பேசும்பொழுது ஒருவனாய் நின்று தனது ஹீரோ சிறந்தவன் என்று சமாளிக்கும் திறமை படைத்தவன், தனது ஹீரோவின் உயர்ந்த பட விளம்பரங்களை தனது உயிரை துச்சமாய் நினைத்து இரும்பு கம்பிகளில் தொங்கி கட்டி முடிப்பவன்.முண்டியடித்து முதல் நாளே தனது ஹீரோவின் மொக்கை படங்களையும் பார்ப்பவன்.சரி இவர்கள் செய்யும் தவறு என்ன?. இவர்களைப்பற்றி மேலே பெருமையாய் சொன்னவைகள் தான் இவர்கள் செய்யும் தவறுகள், தனது வீட்டிற்கு மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் நிற்காதவன் ,தன்னை யாரென்றே தெரியாத ஒரு ஹீரோவுக்காக உயிரை கொடுக்க துணியும் முட்டாள் தனம் தான் இவர்கள் செய்யும் தவறு . ..(ஒரு சில பொறுப்புள்ள ஹீரோக்களின் ரசிகன்கள் இருக்கிறார்கள், நான் அவர்களை பற்றி எழுதவில்லை இங்கே)

ரோமியோக்கள்-- ஒருமுறை தன்னை பார்த்து கண் இமைத்தவளுக்காக, பல இரவுகள் கண்விழித்து கனவில் காத்திருப்பவன், பேருந்து படிக்கட்டுகளில் தன் உயிரை வைத்துவிட்டு தலைகீழ் சாகசம் செய்து தன் காதலியை அசத்துபவன்.சரி இவர்கள் செய்யும் தவறு என்ன?.நினைத்தவள் கிடைக்கவில்லை என்று குடித்துவிட்டு, தாடியோடும்,தண்ணியோடும் அலைவதை பெருமையாய் கருதிக்கொண்டு இருப்பது, சமூக சிந்தனை இல்லாமல் சுயநலத்தில் தன்னை மாய்த்துகொள்வது.

சரி இவர்கள் என்ன செய்ய வேண்டும்?எப்படி செய்ய வேண்டும்?.இதற்க்கான தீர்வு என்ன?

ஐ.டி துறை இளைஞர்கள்: இவர்கள் வெட்டியாய் விருந்து உபசரிப்பு மற்றும் பலவகைகளில் விரயம் செய்யும் பணத்தை ஒரு நாள் உணவிற்கு தடுமாறும் ஏழைகளுக்கு கொடுத்து உதவ வேண்டும்.தனது வலைதளங்களில் கஷ்டப்படும் ஏழைகளை பற்றி மக்களுக்கு தெரியபடுத்தும் பொறுப்புள்ள செயல்களை செய்ய வேண்டும்.

அறிவியல் துறைசார்ந்த இளைஞர்கள்: இவர்கள் தாய் நாட்டிற்காக தன் சுயநலத்தை தியாகம் செய்து இந்தியாவில் அறிவியலை மேன்மை அடையசெய்ய வேண்டும்.

படிப்பறிவில்லா இளைஞர்கள்: இவர்கள் குடும்பத்தின் நிலைமை அறிந்து குடும்பத்தின் தரத்தை உயர்த்த வேண்டும்.அவ்வப்பொழுது தங்களை சமூக பணிகளிலும் ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்.

ஹீரோக்களின் ரசிகன்கள்: தன்னை யார் என்றே தெரியாத ஒருவனுக்காக உயிரை பணயம் வைப்பதைவிட்டுவிட்டு , தன்னை சார்ந்த ஊர் மக்களின் குறைகளை கேட்டு அதற்கான நல்வழிகளை செம்மைப்படுத்தவேண்டும்.

ரோமியோக்கள்: காதலை இழந்தவர்களும் சரி,காதல் செய்பவர்களும் சரி , தன் காதலோடு சேர்த்து சமூக அக்கறையும் எடுத்துக்கொண்டால் ,உங்கள் காதல் வளர்வது போல் நம் இந்தியாவும் வளரும் அல்லவா.இதை இவர்கள் செய்ய வேண்டும்


கடைசியாக அணைவரும் நம் பாரதியின் பாடலை நினைவில் வைத்துகொண்டு வாழ்ந்தால் போதும் வலிமையான இந்திய தேசத்தை படைக்கலாம்...

தேடி சோறு நிதம் தின்று பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி மானம்வாடி
துன்பம் மிக உலான்ற்று பிறர்வாழ
பல செயல்கள் செய்து நரைகூடி
கிழப் பருவம் எய்தி -கொடும்கூற்றுக்கு
இரையென மாயும்பல வேடிக்கை
மனிதரை போல நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?


வாருங்கள் புதியதோர் இந்தியாவை படைப்போம்...நீங்கள் இல்லாமல் நம் இந்தியதேசம் இல்லை..