Wednesday, March 12, 2014

வங்கியில் ஒருநாள்….


வழக்கம்போல் இன்றும் வங்கி ஒன்பது மணிக்கு சரியாக திறக்கப்பட்டது.ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து வங்கி ஊழியர்களும் வந்து சேர இன்னும் அரைமணி நேரம் பிடித்தது.திறப்பதற்கு முன்பு இருந்தே இந்த கிராமத்து கூட்டம் அலைமோதியது, பணம் எடுக்கவும், பணம் பாதுகாக்கவும், கடன் பெறவும், கடனை அடைக்கவும் இப்படி ஏதோ ஏதோ காரணங்களுக்காய்.காத்திருக்கும் மக்களுக்கு வேண்டுமென்றால் பதட்டமும் அவசரமும் இருக்கலாம், அனால் எனது வங்கி ஊழியர்கள் எப்பொழுதும் நிதானத்தையும், பொறுமையையும் கைவிட்டதில்லை.

“லட்சுமியம்மா, சீக்கிரம் டீ வாங்கிட்டு வாங்க” என்று ஒவ்வொரு ஊழியராய் மனு கொடுத்துக்கொண்டே இருந்தார்கள் வங்கி உதவி பணியாளரிடம்”. அவரும் இதோ வருகிறேன் என்று அவசர அவசரமாய் ஓடுவார், அவர் வரும்வரை காத்திருந்து, டீ பருகியவுடன் மட்டுமே தனது வேலை நோக்கி செல்வார்கள்.அதுவரை பதட்டத்துடனோ, அவசரத்துடன் வந்து கெஞ்சும் சாமன்ய கிராமத்து மனிதன் “அர்ச்சனை” வாங்கிகொண்டு அமர்ந்திருக்கும் சூழல் மட்டுமே இங்கே வழக்கமாய் நிகழும்.

இன்றும் அப்படி தான் நடந்தது.சாமன்ய கிராமத்து மனிதனுக்கு எப்படி இத்தனை விதிமுறைகளும், படிவங்களும், பூர்த்தி செய்யும் முறை தெரிந்திருக்கும்?.. தெரிந்திருக்காதல்லவா, அதனால் அவன், எனது வங்கி கடவுள்களிடம் “அர்ச்சனை” வாங்கியே தீரவேண்டும் சாமான்ய பக்தனாய். வேறு வழியில்லை என்பது இந்த நிகழ்வுகளை கடந்து செல்லும் அவர்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும் இது புதிதல்ல என்று..சில நேரங்களில் அவமானங்களை தாங்கியே ஆக வேண்டிய கட்டாயங்கள் இருக்கிறதல்லவா.

ஏறக்குறைய 50 வயதுகளை தாண்டிய,உடைகளில் ஏழ்மை காட்டும், கிழிந்த உடைகளில் அங்கம் மறைக்க பாடுபடும், கிட்டத்தட்ட ஒரு 30 தாய்மார்கள் கையில் வங்கி அட்டையுடன், வங்கி திறப்பதற்கு முன்பே காத்திருந்தனர். “காசு எடுக்கணும் சாமி” என்று கெஞ்சிய ஒரு முதியவளிடம் எனது வங்கி ஊழியர் ஒரு படிவத்தை கிழித்து கொடுக்க, “அப்படியே புல்லப் பண்ணிகொடுங்க சாமி” என்ற கெஞ்சியவளிடம், “ம்ம் அப்படியே பண்ணிடறேன், நீ வந்து என் இடத்துல உட்கார்ந்துகிறியா, நான் வேணும்னா வெளிய போய்டுறேன், வந்துட்டாங்க சாமி, பூமினுகிட்டு ” என்று கர்ஜித்தார். அவமானத்தை சுமந்தாலும் ஒவ்வொருவராய் கெஞ்ச இதே அர்ச்சனை தான் கிடைத்தது அனைவரிடமும். பாவமாய் கைகளில் ஏந்திக்கொண்டு அங்கும் இங்கும் அத்தனை தாய்மார்களும் அலைந்துகொண்டே தான் இருந்தார்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்.

வரிசையில் நின்ற மற்ற மனிதர்களும் தனக்கான வேலைகளை முடித்துவிட முண்டியடித்துகொண்டிருந்த நேரத்தில், கெஞ்சும் இவர்களை கவனிக்க விரும்பவில்லை என்பது தெளிவாய் தெரிந்தது. இது தினந்தோறும் அரங்கேறும் நிகழ்வு தான் இது ஒன்று புதிது இல்லை எனது வங்கிக்கு. சிறிது நேரத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன், கையில் தனது குழந்தை, மனைவி, அப்பாவுடன் வந்து இருந்தான்.

கொஞ்சம் நாகரிகமான உடை, வழக்கமாய் நிற்கும் கிராமத்து வேட்டி, சட்டைகளுக்கு மத்தியில் கொஞ்சம் வேறுபட்டிருந்தது. அந்த வயதான மனிதரைப் பார்த்ததும் அலுவலர்கள், “வாங்க” என்று புன்னைகைத்துவிட்டு, “என்ன இந்த பக்கம்” என்ற கேள்வியை வைத்தவரிடம், ” மருமகள் வந்து இருக்காங்க, பேங்க் லாக்கர்ல கொஞ்சம் நகைகள் வைக்கணும்” என்ற பெரியவரிடம்.” சரிங்க கொஞ்சம் காத்திருங்க, நான் முடிச்சுதறேன்” என்று பவ்வியமாய் பதுங்கினார் ஒரு அலுவலர்.

அந்த நேரத்தில் மீண்டும் கெஞ்ச ஆரம்பித்தது அந்த தாய்மார்கள் கூட்டம் ஒரு அலுவலரிடம், மீண்டும் அதே அர்ச்சனை . இந்த முறை “என்ன உங்க பிரச்சனை” என்று ஒரு குரல் கேட்க, அவர்களுடன் நானும் பார்த்தேன் யாரென்று ஆவலாய்.அந்த இளைஞன் கையில் குழந்தையுடன் அவர்களை நெருங்கினான். “இதை புல்லப் பண்ணனும் சாமி, காலைல இருந்து நிக்குறோம்” என்று கூறியதும், வேகமாய் குழந்தையை மனைவியிடம் ஒப்படைத்து விட்டு, “வாங்க நான் முடிச்சுதறேன்” என்று பேனாவை எடுத்ததும், அலுவலர் “தம்பி நீங்க எதுக்கு இந்த வேலைலாம் பாக்குறீங்க, அவுங்களுக்கு வேற வேலை இல்லை, சும்மா நம்ம உயிரை வாங்குங்க, விடு தம்பி” என்று அலுவலர் கூறிய நிமிடத்தில். “இதுல்ல என்னங்க சிரமம்” என்று கூறினான் இளைஞன். கோபத்தின் உச்சிக்கு சென்ற அலுவலர், “வெளிய போயி சத்தம் போடுங்க, தம்பி நீயும் கிளம்புப்பா என்றதும், சரியென்று கிளம்பினான் அவர்களை கூட்டிக்கொண்டு வெளியே.

(நண்பரின் உதவியுடன் வெளியில் நடந்ததை உங்களுக்கு மீண்டும் பகிர்கிறேன்).” ஒவ்வொருத்தரா கொடுங்கம்மா, எழுதித்தறேன்”. என்றான் அவன். இடையிடையே கேள்விகளை கேட்டான் அவர்களை நோக்கி ,” இதுக்கு முன்னாடி யார் எழுதி தருவாங்க” என்றான் .” ஒவ்வொரு மாதமும் இப்படி தான் தம்பி திட்டு வாங்கிகிட்டு தான் இருப்போம், வீட்டுல யாரையாவது கூட்டிட்டு வரலாம்னு பாத்தா, இங்க வந்தா ஒரு நாள் வீணா போகிடும் தம்பி.அதான் ஆம்பிளைங்க இங்க வரது இல்ல. ஒரு நாள் கூலியாவது மிச்சம் ஆகும்ல அதான் நாங்களே வந்துடுவோம். இந்த கவர்ன்மெண்ட் தான் தம்பி வேலை செஞ்ச காச கைல கொடுக்காம இப்படி பேங்க்ல போட்டு எங்கள கொல்றாங்க” என்று முடித்ததும், கொஞ்சம் பெருமூச்சு விட்டுவிட்டு உங்களை மாதிரி யாரவது வந்தா நாங்க பொழச்சோம் தம்பி, இல்லைனா அவ்ளோ தான்”. என்றார் அந்த முதியவள்.”சரி உங்களில் யாருக்காவது எழுத படிக்க தெரியும் என்றால் கூறுங்கள், நான் சொல்லித்தருகிறேன்” என்றான் அவன். அனைவரும் ஒன்றாய் கூறிய அந்த வாக்கியம் ,” எழுத படிக்க தெரிஞ்சா நாங்க ஏன் சாமி இவுங்ககிட்ட இப்படி திட்டு வாங்குறோம்”.

பேசிக்கொண்டு இருந்த அந்த நிமிடம் அந்த இளைஞனின் அப்பா, உள்ளிருந்து அழைத்தார்.இவனோ “கொஞ்சம் பொறுங்கப்பா, முடிசிட்டு வரேன்” என்ற பதிலை தன் அப்பாவை நோக்கி அனுப்பிவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.சிறிதுநேரத்தில் உள்ளிருந்து குழந்தை கதறும் சத்தம் நோக்கி அலுவலகமே திரும்ப, அவனது மனைவி உள்ளிருந்து வந்தாள்,கதறிய குழந்தையுடன், “என்னங்க, பத்து நிமிசத்துல முடிஞ்சிடும்னு குழந்தைக்கு பால் கூட எடுத்து வரல, அதான் அழுகுது” என்ற மனைவியிடம், கொஞ்சம் பொறுத்துக்க, வந்துவிடுகிறேன் என்று மீண்டும் எழுத ஆரம்பித்தான். வேகமாய் முடித்துவிட்டு, “கவலைப்படாதீங்கம்மா, உங்க பிரச்சனையை பத்தி அதிகாரியிடம் பேசுகிறேன்” என்று கூறிவிட்டு வந்தான் உள்ளே.

வந்த வேலையை முடித்துவிட்ட வெளி வர முயற்சிக்கையில், வங்கி அலுவலர் மீண்டும் ஒருமுறை கூறினார்.”ஏன் தம்பி, நீங்க வந்த நேரத்துக்கு, எப்பவே வீட்டுக்கு போயிருக்கலாம், குழந்தையும் அழுவாது, நமக்கு எதுக்கு தம்பி இதெல்லாம், இவுங்க எல்லாம் இப்படி தான் எப்பவும், அதுகெல்லாம் கவலைப்பட்டா, நம்ம வேலை தான் கேட்டு போகும்” என்றவரிடம், ” இதுல என்னங்க இருக்கு, நம்ம அப்பா அம்மா இப்படி கெஞ்சினா அப்படியேவா விட்டுட்டு போய்டுவோம்?” என்ற பதிலால் கன்னத்தில் அறைந்தான்.

மீண்டும் மேலதிகாரி அறைக்குள் நுழைந்து ஏதோ எதோ பேசினான். எனக்கு நன்றாய் தெரியும், இப்படி எத்தனை பேர் அவரிடம் பேசினாலும், அவர் கூறும் ஒரே வார்த்தை “ஓபீசுல இதெல்லாம் சாதாரணம்” என்று தனக்கே உரிய மலையாள வாடையில் பதில் சொல்லி இருப்பார். ஏதோ திருப்தியுடன் அறை வெளியே வந்த அவன், திடீரென என்னை நோக்கி உரக்கமாய் கூறினான்,

“எப்பா மேலதிகாரிகளா, கொள்ளை, ரத்தம் சிந்தும் கொலைக்கு மட்டும் தான் இதை கவனிப்பீங்களா?, அநீயத்துக்கும், அவமான கொலைக்கு எல்லாம் இதை கவனிச்சு நடவடிக்கை எடுக்க மாட்டீங்களா”?. கூறி முடித்துவிட்டு அழுதுகொண்டிருக்கும் தனது குழந்தையை கையில் வாங்கி தட்டிகொடுத்துகொண்டே கிளம்ப ஆரம்பித்தவனிடம், ” மவராசனா இருக்கணும் தம்பி, நீ” என்று கைபிடித்த முதியவளிடம், வெறும் புன்னைகையை மட்டும் உதிர்த்துவிட்டு வெளியேறினான்.

இவன் ஒருவனால் மொத்த தேசத்தையும் திருப்பி போட்டு விடமுடியாது என்று தெரிந்தாலும், சில உள்ளங்களை மகிழச்செய்ய முடியும் என்பதை உணர்ந்தவனாய், நானும் எனது நண்பனும் உள்ளம்கனிந்த நன்றியை தெரிவித்து கொண்டு, இவனைப் போன்றொரு இன்னொரு மனிதனுக்காய் காத்திருக்கிறோம் மீண்டும்

நட்புடன்,
Camera 02,Camera 05
இந்தியன் வங்கி,2 comments:

நிலாமதி said...

கதைப் ப கிர்வுக்கு என் பாராட்டுக்கள். இப்படி எத்தனை உள்ளங்கள் வாழ்கிறார்கள் மனித உருவில் தெய்வமாய்....? இதைப்பார்த்தாவது மனிதர் திருந்துவார்களா...?>

இராஜராஜேஸ்வரி said...

Camera 02,Camera 05
இந்தியன் வங்கி,

காமிராக்களுக்கு இருக்கும் இதயம்
மனித்ர்களுக்கு இடம் மாறுவது எப்போது !!??

Post a Comment