Friday, March 21, 2014

முதல் பார்வையின் உச்சம் – 2மெதுவாய் நகர ஆரம்பித்தேன்., “சீக்கிரம் ஓடிடும் இந்த நாலு மாதமும்., தேர்வு முடிந்ததும் இங்கு மறக்காமல் வந்திட வேண்டும்” என்று பலமுறை என்னுள் புலம்பிக்கொண்டிருந்தது இதயம்.ஏதோ ஒரு அழகிய உணர்வு மெதுவாய் கனக்க ஆரம்பித்தது, சுமந்து செல்ல முடியாமல் திணறியபடி ஊர் வந்து சேர்ந்தேன்.ஜன்னல் ஓர பயணத்தில், கண்கள் ஏதோ ஏதோ காட்சிகளை  காண, உள்ளம் மட்டும் அடுத்த விடுமுறைநாட் கனவிலே ஒட்டிக்கொண்டு, வெளிவர அடம்பிடித்தது ஒவ்வொரு நிமிடமும்.
வீடுவந்து சேர்ந்திருந்த போது மூச்சு விட சிரமப்படுத்தியது கருணைமலரின் பிரிவு. எப்படியோ இரண்டு மூன்று நாட்கள் சமாளித்து கொண்டு, பள்ளி சென்றேன். விடுமுறை நினைவுகளை அசைபோட்டுக்கொள்ள அனுமதி அளித்தது போல், காலை நேர வகுப்பு ஆசிரியர் விடுப்பு எடுத்திருந்தார்.. ஒவ்வொரு நண்பனாய், விடுமுறை நாட்கள் குதூகலப்படுத்திய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டிருந்தனர்.
ஏதோ ஒரு நண்பன், புதிதாய் சொந்தகார பெண்ணை கண்டதாகவும், வெகுநேரம் பேசியதாகவும் பகிர்ந்து கொள்ள, கூடி இருந்த நண்பர்கள் கூட்டம், கேலி செய்தும், அப்பெண்ணின் பெயரையே அவனக்கு சூட்டியதும், கொஞ்சம் என்னை எச்சரிக்கை செய்தது, "உனக்காகவும் சில ரகசியங்களை மறைத்து வைத்துக்கொள் , அதை யாரிடமும், எப்பொழுதும் சொல்லாதே" என. வழக்கமாய் பொழுதுபோக்க நினைக்கும் நேரங்களில், புத்தகத்தை எடுத்து, அதில் உள்ள ஏதாவது ஒரு படத்தை தேர்வு செய்துகொண்டு,  Natraj ரப்பரை எடுத்து, நன்றாய் எண்ணெய் தலையில் தேய்த்து, படத்தின் மீது வைத்து, புத்தகத்தை மூடி, ஒவ்வொரு பக்கமாய் திறந்து, ஒரு குத்து விடுவோம் அத்தனை பக்கத்தோடு சேர்த்து ரப்பரின் மேல்.ஒவ்வொரு பக்கமும் இப்படி செய்து கடைசியில் காணும்போது ரப்பரில் அந்த படம் இருக்கும் ஒட்டிக்கொண்டு. படத்திற்கு பதில் "கருணை மலர்" என பென்சிலில் அழுத்தி எழுதி, ரப்பரில் ஒட்டவைத்து பார்த்து, உள்ளம் உவகையுற்றேன்.
அவள் பெயரை எழுதி எழுதி பார்த்து, அடித்து வைத்த புத்தகத்தின் பக்கங்கள் அத்தனை அழகாய் இருந்தது. புத்தகத்தை எடுத்துகொண்டு தனியாய் மரத்தடியில் அமர்ந்துபடிக்கும்பொழுது, மூன்றாவது ரேங்க் வாங்கும் என்னைப்பார்த்து முதல் ரேங்க் வாங்கும் நண்பன் கூட கொஞ்சம் பயந்து போயி தான் இருந்தான், "கொஞ்சம் ஓவரா படிக்கிறானே, நம்மள முந்திபோய்டுவான் போல இருக்கே"  என்று.சரி அவனக்கு எப்படி தெரியும் இனம் புரியா உணர்வு என்னை ஆட்டிப்படைத்ததென்று. "எனக்கும் ஒரு ஆள் இருக்கு" என்று ஒவ்வொருவனாய் பெருமிதம்கொள்ளும் நேரங்களில் கூட, உண்மை சொல்லாமல் உள்ளுள் அனுபவித்தேன் அந்த அழகிய உணர்வை. 
தெருவோர கடைகளில் காதல் பாட்டுகள் ஒலிக்கும்பொழுதெல்லாம்,ஒரு நிமிடம் நின்று, குறைந்தது ஒரு 5 வரிகளையாவது மனப்பாடம் செய்ய வைத்தது அவள் மீதான இனம் புரியாத உணர்வு. அவளின் நினைவில் அந்த 5 வரிகளை, காலம் நேரம் இல்லாமல் முணுமுணுத்த போது, நிச்சயம் அந்த பாடல் வரிகள் கூட அழுது இருக்கும், இப்படி வந்து இவனிடம் மாட்டிக்கொண்டோமே என நினைத்து. இனம் புரியாத அந்த உணர்வு வரும்பொழுதெல்லாம் மீதமுள்ள நாட்களை எண்ணி எண்ணி, கைவிரல்கள் களைத்தே போயிருக்கும்.
அழகிய உணர்வு புது தெம்பாய் தானிருந்தது என்னுள், தேர்வுக்கு என்னை தயார்செய்த பொழுது கூட. ஒவ்வொரு தேர்வாய் ஆசையில் எழுதி, ஆவலில் முழ்கியிருந்தேன் விடுமுறைக்காய். கடைசி தேர்வு எழுதும்பொழுதெல்லாம் ஒருமுறை வாசித்த பாடங்கள் கூட ஒவ்வொன்றாய் ஞாபகம் வர, புரிந்துகொண்டேன் இதயம் இலகும்போழுது,எதுவும் சாத்தியமே என்று..
"என்ன கண்ணு இந்த முறை, முதல் மார்க் வாங்கிடுவ தானே!!!!... நல்லா மார்க் வாங்கின அப்டினா, பதினொன்னாம் வகுப்புக்கு கொங்கு பள்ளிகூடத்துல சேத்துறதா அப்பா சொல்லி இருக்காரு" என்ற அம்மாவின் வார்த்தையை கேட்கும்பொழுது, அத்தனை ஆனந்தம். "வாங்கிவிடுவேன் என்று நம்பிக்கையாய் கூறிவிட்டு செல்லும்பொழுது கொஞ்சம் பயமும் ஒட்டிக்கொண்டு தான் இருக்கும். "அம்மம்மா வீட்டுக்கு போறேன் நாளைக்கு" என்று கூறிய நிமிடத்தில், அம்மா குறிக்கிட்டு "அங்க எல்லாம் போக வேண்டாம், ஒழுங்கா வீட்டுலையே இரு, கிரிக்கெட் விளையாட போறேன்னு ஊர் ஊரா சுத்திரியாம்" என்று கூறிய வார்த்தை ஏதோ பயம் திணிக்க என்னுள், வழக்கமான எனது அஸ்திரத்தை தொடுத்தேன், " அம்மா, அம்மா, இந்த ஒருமுறை மட்டும் சரியா, அதுக்கப்புறம் எங்கேயும் போக மாட்டேன் நீயே சொன்னாலும், பன்னிரெண்டாவது எல்லாம் நல்லா படிக்கணும்ல, சரி சொல்லுமா, சரி சொல்லுமா" என முந்தானை பிடித்து கெஞ்ச, "சரி பத்திரமா இருக்கணும்" என்று புன்னகையுடன் உத்தரவு கொடுத்தாள். அது என்னவோ, மகனின் கெஞ்சல் ரசித்து, பிறகு அனுமதிப்பதில் அத்தனை ஆனந்தம் ஒவ்வொரு தாய்க்கும்...
அவ்வளவு தான், ஐந்து நிமிடத்தில் பயணத்துக்கு தேவையான அனைத்தும் தயாராகிவிட்டது.அந்த இரவுப்பொழுது நாளைய பயணத்தை எண்ணியே கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்தது பிறைநிலவு போல். அடுத்த நாள் பயணத்தில், ஆயிரம் கேள்விகள் என்னில், "விடுமுறைக்கு இங்கு தான் வருவாள?, இல்லை அங்கேயே இருந்துவிடுவாள?" என்று துளைத்துகொண்டே இருந்தது. எப்படியோ போய் சேர்ந்தேன், அம்மம்மாவை கண்டு நலம் விசாரித்து விட்டு, அவசர அவசரமாய் நண்பர்களை காணப்போவாதாய் கூறிவிட்டு, தெருக்களை மேய ஆரம்பித்தேன் படபடப்புடன்.
காணமுடியாத ஏக்கத்துடன் முடிவெடுத்தேன், அம்மம்மாவிடம் எப்படியாவது கருணை மலர் விடுமுறைக்கு வரும் வீடு எது என்று கேட்டுவிட வேண்டும், என்ற எனது தைரியத்திற்கு பரிசாய்., "சிவன் தெரு, கைஓடு போட்ட நாலாவது வீடு" என்று தெரிந்த நிமிடத்தில் உடல்முழுவதும் மென்மையாய் பரவும் அழகிய உணர்வை அறியமுடிந்தது.அவ்வளவு தான், அந்த தெரு, நாய்கள் கூட அத்தனை முறை கால்பதித்திருக்காது என நம்புகிறேன்.
அத்தனை முறை சுற்றி சுற்றி வந்தேன் பம்பரமாய். ஒவ்வொரு நாளும் காலையில் தேடிபார்த்து, அவள் இல்லா வீட்டை பலமுறை உற்று நோக்கிவிட்டு, நிச்சயம் மதியம் வந்துவிடுவாள் என்ற சமாதானத்துடன் கிளம்பும் எனக்கு தெரியும், மதியமும் இதே தான் நடக்கும் என. ஒரு வாரம் முழுதாய் ஓடியது. ஏதோ சோகம் முகத்தில் தொற்றிக்கொள்ள, ஏதோ ஏக்கம் நினைவில் தொற்றிக்கொள்ள,சுமக்க முடியா பாரத்துடன் இதயம் கனக்க, வாடும் என்னை, மலரச்செய்ய, நடந்துவந்தாள் அவள் வீடு நோக்கி தெருவில்.
சந்தனநிற தாவணியில், படியவாரி உச்சி வகுந்தெடுத்து, கொத்து மல்லிகையை வைத்து, நீண்டு வரும் புருவங்களை அத்தோடு நிற்கவும் என்று தடுத்து நிறுத்தும் குங்குமச்சிவப்பு நிற பொட்டு, அவள் கால் பிடித்து, கதைகள் பேசும், ஜல் ஜல் கொலுசு. அடையாளத்துடன் அவள் வருகையை உணர்ந்த தருணம், உடல் முழுவதும் ஓராயிரம் மாற்றங்கள் ஒரு நிமிடத்தில் அரேங்கேற, சொக்கித்தான் போனேன். ஆணிற்கும் வெட்கம் வரும் என்பதை தலைகுனிந்து தலைகுனிந்து அவளை ஓரப்பார்வையில் காண முயற்சித்த போது உணர்ந்தேன், அவளிடம் பேசிவிட வேண்டும் என்று எங்கிருந்தோ வந்த அசட்டு தைரியத்தில் ஓடினேன் அவளை நோக்கி. யாரென அவள் திரும்பி பார்த்த நொடியில் அத்தனை தைரியமும் என்னை விட்டு தெறித்து ஓட, செய்வதறியாது அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு நடையை கட்டிய என்னைப்பார்த்து இதழோரம் சிரிப்பை உதிர்த்தாள்.
அவ்வளவு தான் :):) மறுகணமே, உலகம் மறக்க, உள்ளம் பூரிக்க, உணர்வுகள் உடைந்து தேகம் சிலிர்க்க, முதல் முறை பூத்ததடி உடல்முழுவதும் ஏதோ...என்னதென்று பெயர்சூட்ட, மறுபடியும் வருவேனடி உனைக்கான, என என்னுள் எண்ணி, அவளில் நினைவை வைத்துவிட்டு, வழியில் பாதம் வைத்தேனடி பார்வையற்று...    
 
 


0 comments:

Post a Comment