Thursday, February 27, 2014

நான் ஹீரோ(வுடன்)….

ஒவ்வொரு சராசரி மனிதனுக்குள்ளும் ஹீரோ என்ற அசைக்கமுடியா ஏதோ ஒரு ஒற்றை உருவம் பதிந்திருக்கும் என்பது கொஞ்சம் மறுக்க முடியா உண்மை தான். அந்த உருவத்தை கண்ணெதிரே காணும் நேரங்களில் திக்குமுக்கடித்தான் போவோம்.

எனது ஹீரோவும் என்னை சிறுவயதிலிருந்தே பாதித்தவர் தான்.அதீதப்பட்ட இளைஞர்களை பாதித்தவர் என்றே தெளிவாய் கூறிவிடலாம். சச்சின் இது பெயரல்ல – ஒரு சாம்ராஜ்யம். அவரை பார்த்துவிட வேண்டும்,பேசி விட வேண்டும் என்று வெகுநாட்களாய் ஏங்கியிருக்கிறேன். காலத்திற்காய் காத்திருந்தேன் ஒரு நாள் நிச்சயம் கனியுமென்று.

அன்றொருநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருப்பதாய் அறிந்தேன். நடக்கவிருக்கும் ஒரு பந்தையத்திற்கு ஒருநாள் முன்பே வந்துவிட்டதை அறிந்தேன். அதுமட்டுமன்றி பந்தையத்திற்கு முந்தைய நாள் பயிற்சி ஆட்டம் ஆடுவதாக அறிந்தவுடன் மைதானம் நோக்கினேன். மைதான அலுவலகத்துக்கு விரைந்தேன். மன்றாடினேன் காணவேண்டுமென. அலுவலரோ, இந்த பயிற்சி ஆட்டத்தை யாரும் பார்க்க முடியாதென்றும், யாருக்கும் அனுமதி இல்லை என்றும், கூறி முடித்த பிறகும், வெகுநேரமாய் கவலை தேய்ந்த முகத்துடன் காத்திருந்தேன்.தீடிரென என்னை அழைத்து “ட்ரிங்க்ஸ்” கொடுக்க போவாங்க பசங்க, அவுங்க கூட போயிட்டு வந்திடு என்றார்.ஒன்றும் புரியவில்லை, சந்தோசத்தில் மைதானத்தின் உள்ளே சென்றேன் குதித்துக்கொண்டே. வீரர்களை நெருங்க நெருங்க, அத்தனை அதிகபட்ச சந்தோசம், சுவாசம்விட சிரமப்படுத்தியது.

எனது ஹீரோவை நெருங்கிவிட்டேன். கண்ணிமைக்காமல் பார்த்தேன்,அத்தனை அழகு. இந்த கரங்களா இத்தணை ரன்களை அடித்தது என்று பிரம்மித்த நொடியில், பேசிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஓடி ஓடி நின்றேன் அவர் முன்பு. என்னை கவனித்த அவர் புன்னகை செய்தபடி அருகில் பிடித்து என்னை நிறுத்தினார். ஐயோ அத்தனை சந்தோசம், என்ன சொல்ல?-வார்த்தைகளற்று நின்றேன். என்ன பண்றீங்க?, எப்படி இருக்கீங்க?, என்ற தமிழ் வார்த்தைகளை அவர் உதிர்க்க உதிர்க்க ஓடி பிடித்துகொண்டிருந்தேன் அவர் உதிர்த்த வார்த்தைகளை.சந்தர்பத்தை நழுவவிடக்கூடாதென ஒரு வேண்டுகோள் விடுத்தேன் அவரிடம், one snap please ? என்றதும், சரி என்றவரிடம் என் மட்டற்ற மகிழ்ச்சியை உதிர்த்துவிட்டு, எனது செல்போனில் படம் பிடித்துகொண்டேன் வேறொருவர் உதவியுடன்.

“One minute” என்று சச்சின்,அவரது செல்போனை நீட்டினார் படம்பிடிக்கும் நபரிடம். எதற்கு என்ற கேள்வியுடன் பார்த்த என்னை நெருக்கமாய் அணைத்துக்கொண்டு please one snap என்றார். அவ்வளவு தான் அவ்வளவு நீளமாய் சிரித்ததில்லை என நினைக்கிறேன். போட்டோ எடுத்து முடித்ததும்,நான் பேச ஆரம்பித்தேன் அவரிடம்., நான் facebookல போட்டு கலக்கபோரேங்க என் friends கிட்ட காட்டி,ஆனா நீங்க எடுத்த போட்டோவ என்ன செய்ய போறீங்க? என்ற, எனது கேள்விக்கு புன்னகையை மட்டும் உதிர்த்தார் பதில் பேசாமல்.

தீடிரென எனக்குள் ஒரு சந்தேகம், இப்போ நடப்பதெல்லாம் உண்மை தான, என்று கில்லிபார்த்துகொண்டேன்-உண்மை தான் என்று புரிந்தது.சரி நகரலாம் என்ற நேரத்தில் அத்தனை ஏக்கம் ஏனோ நெஞ்சில் ஒட்டி இருந்தது. வேகமாய் ஓடி அவரிடம் நிச்சயம் நானும் உங்கள மாதிரி celebrity ஆவேன் என கூறி முடிக்கும்பொழுது அத்தனை நம்பிக்கை என்னுள் இருந்தது. சச்சின்,”Surely you will update this photo in ur profile that time” என்று அவரிடம் கூறிவிட்டு கிளம்பிவிட்டேன்.

திரும்பி நடந்துவரும்பொழுது செல்போனில் எடுத்த போட்டோவை பார்த்தேன். திடுக்கிட்டேன், என்ன எடுத்து வைச்சுஇருக்கான்?, எதோ morphing பண்ணின மாதிரி இருக்கு, இதை Facebookல போட்ட எவனாவது நம்புவான? என்ற எனது கவலையில் அடுத்த போட்டோ நன்றாக இருந்ததில் அத்தனை சந்தோசம். போட்டோவை பார்த்த கொண்டே வந்தபொழுது நிலைதடுமாறி கீழே விழுந்தேன் தீடிரென.

திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தேன். ஒரு நிமிடத்தில் அனைத்தும் மாறியிருந்தது. கையில் செல்போனே இல்லை, இருட்டாய் இருந்தது. அறைகாற்றாடியின் சப்தம் அனைத்தையும் உடைத்தது என்னுள் , இத்தனையும் கனவு என்று ஏற்றுகொள்ள மனம் அடம்பிடித்தது.கண்ணீர்சிந்தாத நிலை மட்டுமே. அத்தனை ஏமாற்றம் என்னுள் உடைந்து உருகத்தொடங்கியது ஒவ்வொரு நிகழ்வாய்..கில்லி எல்லாம் பாத்தோமே அப்புறம் எப்படி என்ற எனது கேள்வியிலேயே பதில் இருந்தது கனவில் கில்லினால் வலிக்காதென்று.. celebrityயாக ஆகுவேன் என்று வாக்குறுதியெல்லாம் கொடுத்தோமே என்று நினைக்கையில் அத்தனை நிகழ்வும், கனவு எனும் நிகழ்வில் ஏமாற்றியிருக்கிறது என்பதை தெளிவாய் உணர்ந்தேன். மெதுவாய் படுக்க ஆரம்பித்தேன் ஏக்கத்தில்.

கனவு, களையும் நிமிடங்களில் ஒவ்வொரு மனிதனும் நொறுங்கித்தான் போகிறான் ஒரு சில நிமிடங்களுக்கு.எட்டிபிடிக்க முடியா சிகரங்களை எட்டிபிடித்து விட்டதாய் சந்தோசத்தில் திளைக்கும் நேரத்தில் கனவென்ற ஒற்றை யதார்த்தத்தில், மிச்சம் வைக்காமல் தூக்கியெறிய, உடைந்து போகிறது உள்ளம்.

எனது ஹீரோவுடன் நடந்ததை நினைத்துகொண்டே உறங்க மறுத்தது உடல்.மெதுவாய் புரண்டுபடுத்தேன். சிறிது நேரத்தில் என்னை இருக்கமாய் பிஞ்சுவிரல்களால் அழுத்திபிடித்து, பிஞ்சுகால்களை என்மீது இட்டு இருக்கமாய் பிண்ணிக்கொண்டு, என் முகமருகே அவனது முகம் வைத்து, முனக ஆரம்பித்தான் தூக்கத்தில், யாழின் எனும் ஒருவயது நிரம்பிய எனது மகன்.

சந்தோஷ பூரிப்பில் மெதுவாய் உறங்க ஆரம்பித்தேன், இப்பொழுது நானும் ஒரு celebrity என்பதை தெளிவாய் உணர்ந்தவனாய்.0 comments:

Post a Comment