Wednesday, February 19, 2014

காலணி மந்திரம்..

சில நேரங்களில் சில மனிதர்கள் தோற்றுபோவதுண்டு சந்தோசமாய். வீழ்த்தியவன் எதிரியாகினும், அன்னியனாகினும் வீழ்ந்ததின் அர்த்தம் புரியும் தருணங்களில் தோல்வியும் கூட வெற்றியே. ஒவ்வொரு சராசரி மனிதனும் எமாற்றம் எனும் வாழ்வியல் கூறை முத்தமிட்டு இருக்கிறான் என்பதை உள்ளில் ஒப்புக்கொள்வான்.

நம்மையும் மீறிய சில திட்டமிடல்களில் சரிக்கி தான் போயிருப்போம், அப்படி தான் அன்றைக்கு முதல் நாள் திட்டமிடல் அன்று தோற்றுப்போனது. நாளை காலை 9 மணிக்கெல்லாம் புறப்பட்டு வீட்டை விட்டு கிளம்பிடனும் என்ற முதல் நாள் திட்டமிடல் தோல்வியை தழுவியது. சரி எப்படியோ 9 மணி என்பது 11ஐ நெருங்கியிருந்தது. வீட்டிற்கு தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கிவிட கடையை நெருங்கிய நேரம் போதுமானதாய் இல்லை. என்ற போதும் வேறு வழியின்றி அவசர அவசர தேடல்கள் தொடங்கியது கடையினுள்.

ஒன்றின் தேடல், மற்றதின் வழியாய் இழப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதை அப்பொழுது தான் உணர்ந்தேன். அவசர தேடலில் புத்தம் புதிய காலணி கூட அறுந்து, நிதானம் தேவை என்றதொரு பாடத்தை புகட்ட மறக்கவில்லை.எதிர்பாராத சூழல் நிகழும் போதே நமது சகிப்புத்தன்மையின் அளவு தரமாய் மதிப்பிடப்படும்.கொஞ்சம் கோபத்தின் உச்சிக்கே சென்றேன் என்பது, உயிரில்லா, பொறுப்பாளியாகமுடியாத காலணியை திட்டும்போது உணர்ந்துகொண்டேன்.”இந்த செருப்பு வேற நேரம் கெட்ட நேரத்துல அறுந்து போயி உயிரை வாங்குது ,அஹ அஹ அஹ….” திட்டிமுடித்து விட்டு மனைவியின் பக்கம் திரும்பி ” எல்லாம் உன்னால தான் கொஞ்சம் நேரத்துல கிளம்பி இருந்தா இவ்ளோ அவசரம் தேவை இல்லை “

என்று கூறி முடிப்பதற்குள் “அவள் , குழந்தையை நோக்கி, எல்லாம் உன்னால தான், நீ ஒழுங்கா விளையாடாம சீக்கிரம் சமத்தா சாப்பிட்டு இருந்தா இத்தனையும் நடந்திருக்காது” என்று காரணத்தை விளக்கிவிட்டாள். “சிறிது நேரத்தில் அவனும் அடுக்கிவைத்திருந்த பொம்மைகளை நோக்கி எதோ சைகையில் சிணுங்க ஆரம்பித்தான். புரிந்தது எனக்கு முப்பதுகளை தாண்டிய எங்களுக்கு தெரிந்திருக்கிறது தன் தவறுக்கு, யாரை கை காட்டவேண்டும் என, ஒரு வயதை மட்டுமே தாண்டிய அவனுக்கு தெரியவில்லை யாரை கை காட்ட வேண்டும் என, அதலால் பொம்மையை நோக்கி.

அய்யயோ பொம்மை யார கைகாட்ட போகுதோ, அதற்கு முன் நாமே சரி செய்து விடுவோம் என்று கடையை விட்டு வெளிவர எத்தனிக்கிறேன் சிறு புன்னகையுடன். ஒவ்வொரு கேள்விக்கும் பதில் நமது அருகிலே என்பது போல் எனக்கான பிரச்சனைக்கும் தீர்வு அந்த கடையின் முற்றத்திலே அமர்ந்திருந்த செருப்பு தைப்பவரை பார்த்ததும் புரிந்தது. அகமகிழ்ச்சியுடன் நெருங்கிய தருணத்தில், அவரை சுற்றி ஒரு தம்பதியும், அவருக்கு அருகே அவரை கட்டிபிடித்துகொன்டு ஏறக்குறைய 6 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி.

சிறுமியை பார்த்ததும் தெரிந்துவிட்டது அவரின் பேத்தியாய் இருக்கலாமென்று. “சிலேட்டு பென்சில் வாங்க காசு இருந்தா கொடு தாத்தா” என்ற அவளது கோரிக்கை உறுதி செய்து விட்டது பேத்தியே தான் இவள் என்று.

அவள் கெஞ்சிக்கொண்டிருக்க, எனக்கு முன் அவரை நெருங்கிய தம்பதியர் அவரிடம் காலணி கொடுத்து தைத்துகொடுக்க கோரினர். செய்யும் வேலையை திருத்தமாய் செய்ய முயலும் சில மனிதர்களில் இவர் என புரிய வைத்தது அவரது தெளிவான தையல்கள். “அவ்ளோ எல்லாம் தையல் போட வேண்டாம், அசிங்கமா இருக்கும்,சும்மா அந்த செருப்பு கடைக்கு போகுற வரைக்கும் தாங்கினா போதும்” என்று கொஞ்சம் தமிழும் ஆங்கிலமும் கலந்த அவர்களது வார்த்தைகளில் தெரிந்தது, வறுமைக்கோட்டை பற்றி கனவிலும் கேள்விபட்டிறாத மிக உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் என.

“இல்ல சாமி தையல் முழுசா போட்ட தான் செருப்பு அறுந்து போகமா , ரொம்ப நாளைக்கு வரும் ” என்று முடிப்பதற்குள் “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சும்மா லைட்டா பண்ணுங்க” போதும் என்று முடித்தனர்.அரை மனதுடன் அவர்கள் கேட்டது போன்றே தைத்து முடித்தார் பெரியவர்.இடை இடையே சிறுமி தனது கோரிக்கையை நினைவு படுத்த மறக்கவில்லை,”தாத்தா, தாத்தா” என்று.தைத்து முடித்ததும், “இந்தாங்க சாமி, 20 ரூவா ஆச்சு”. என முடிப்பதற்குள் இருவரும் உரத்த குரலில், 20 ரூபாயா?, அநியாயமா இருக்கே என திட்ட ஆரம்பித்த நிமிடத்தில் பெரியவர் குறிக்கிட்டு பேச ஆரம்பித்தார். ” செருப்பு முழுசா தையல் போட்டா 20 ரூவா வாங்குறேன் சாமி, நீங்க தான் வேண்டாம்னு சொல்லிட்டீங்க, சரி 10 ரூவா கொடுங்க என்றார்..

அதெல்லாம் முடியாது என பல ஆயிரங்களை தாண்டிய மதிப்புமிக்க தனது பணப்பையிலிருந்து தேடிப்பிடித்து ஒரு ஐந்து ரூபாய் மதிப்புள்ள நாணயத்தை வீசினார் அவரை நோக்கி..” என்னங்க சாமி 5 ரூவா தரீங்க என்று வாழ்க்கையில் ஏழ்மை இருந்த போதும், வார்த்தைகளில் ஏழ்மை இன்றி மரியாதையாய் கெஞ்சினார். இதுவே அதிகம் என்று கர்ஜித்து விட்டு காரில் ஏறி விற்ரென பறந்தனர்.

கனத்த இதயத்துடன் அவர் முன் நெருங்க ஆரம்பித்தேன் “அதிகமாய் கொடுக்ற அந்த பத்து ரூபாய்ல “ஆடி காரும், ஐம்பது லட்ச ரூபாய் பிளாட்டுமா வாங்க போறாரு பாவம், மிஞ்சி மிஞ்சி போன ஒரு பத்து சிலேட்டு பென்சில் சேர்த்து வாங்கி தருவாரு பேத்திக்கு” என எண்ணிக்கொண்டே.

கலங்கிய அவரிடம் எனது காலணியை கொடுத்து, ” நிறையா தையல் விடுங்க, பத்து இருபது சேர்த்துகூட வாங்கிக்கங்க பெரியவரே. எப்படி தையல் போடணுமோ அப்படி போடுங்க என்றேன்”.

புன்னகையுடன் தைக்க ஆரம்பித்த அவரது நிறைவான தொழில் பக்தி என்னுள் ஊடறுவ ஆரம்பித்தது மிகச்சிறந்த காலணி மந்திரமாய்…



0 comments:

Post a Comment