மனிதன், தான் பயணிக்கும் வாழ்க்கை நிகழ்வுகளில் அத்தணையையும் மனிதிலும் நினைவிலும் அடைத்துவைத்துக் கொள்வதில்லை என்ற போதும் சிற்சில நிகழ்வுகள், தானாய் சிம்மாசனம் அமைத்து தங்கிவிடும் மனதிலும், நினைவிலும்.
தனக்கென சுய வாழ்க்கையை அமைத்தே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில், கல்லூரிப்படிப்பை முடித்து சென்னை திரும்பிய நாளில், அத்தனை தெளிவாய் தெரியாது வாழ்க்கை என்பது எத்தணை கடினமான, எளிதான ஒன்று என்று.
"போயிட்டு வா ராசா, கெட்ட பழக்கம் ஏதும் பழகிக்காத, நம்ம உண்டு நம்ம வேலை உண்டு அப்டின்னு இருக்கணும் , என்ன புரிஞ்சுதா, நான் சொல்றது?" என்று எப்பொழுதும் வாழ்க்கையில் நெறிமுறை தவற முயற்சிக்க கூடாது என்று உள்ளத்தில் பதிய வைத்து விட்டு, அனுப்பி வைக்கும்போது கொஞ்சம் கலங்கித்தான் போனாள்.
சரி என்று தலையை ஆட்டிவிட்டு,எத்தணை முறை தான் சொல்லுவியோ என்று சலித்துக்கொண்டு பேருந்தை பிடித்த போது கூட தெரியவில்லை,வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது என்று. நண்பர்கள் இருக்கிறார்கள், பத்தோடு பதினொன்னாய் இருக்கபோகிறோம் அவ்வளவு தான், எதற்கு பயம்?. எல்லோரும் போக போறான், நம்மளும் கூட போகபோறோம். வேலை கிடைக்க போகுது அவ்வளவு தான் என்று பயணித்த பயணம், என்னை எத்தணை சீர்படுத்த வேண்டும் என்பதை நிச்சயம் தெரிந்திருக்கும். எத்தணை சுரேஷ், ரமேஷ் கள பார்த்து இருக்கும்,சென்னை நோக்கி பறந்தவர்களையும், வீழ்ந்தவர்களையும். நான் மட்டும் என்ன விதிவிலக்கா?.
எத்தணை கற்றல்கள் சென்னையில் கால் பதித்தது முதல் என எண்ணிக்கையைத் தொடங்கினால் வாரங்களில் தொடங்கி மாதங்களில் முடியும், அத்தணை கற்றல்கள். மணிக்கொருமுறை அழைபேசியில் என்னை அழைத்து நலம் விசாரித்த அம்மாவின் அன்பை கூட கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, போராடும் குணத்தை கற்றுகொடுத்தது சென்னை.
என் கால்தடம் பதிந்து பதிந்து சென்னை வீதிகள் தேயத்தொடங்கின எனக்கான அங்கீகாரத்தை தேடிய நேரங்களில்.
ஒவ்வொருவனும் வேலை கிடைக்கபெற்று தனக்கான அங்கீகாரத்தை தக்கவைத்துகொள்ளும் தருணங்களில், ஏதோ ஒரு இனம் தெரியாத கரடு முரடான வெறி கொண்ட தேடலிலும் வெற்றியை ருசிக்க முடியாத சமயங்களில் கொஞ்சம், பயம் கூட மனதில் ஒட்டி இருந்தது என்பதே நிதர்சனமான உண்மை. கூட்டியும் கழித்தும் வேலைக்கான தேர்வுகளில் போராடும் நிலைகளில், இதயம் கொஞ்சம் இரும்பாய் கூட மாறி இருந்தது என்பது மறுக்கமுடியாத ஒன்றே. தைரியம் மட்டுமே உனக்கான அங்கீகாரத்தை கொடுக்கும் என என்னுள் விதைத்துக்கொண்டு மீண்டும் பயணிக்க தொடங்கிய எனக்கு இந்த சென்னை நிறைய கற்றுக்கொடுக்க மறக்கவில்லை.
அன்றைய புதியமுயர்ச்சியும் அப்படிதான் எதிர்நோக்கி இருந்தது எனக்காய். " தம்பி, என்ன கண்ணு ஒருவாரமா போன் பண்ணினா எடுக்க மாட்டுற, என்ன ஆச்சுடா?. வேலை இல்லைன்னு கலங்கிபோயிட்டியா?, அம்மா இருக்கேன் கண்ணு, நம்ம குல சாமி கைவிடாது. அதுக்காக போன் பண்ணினா எடுக்காம, சாப்பிடாமகொள்ளாம இருக்காதடா". என்றவளிடம், சரி நான் பாத்துக்கிறேன், இண்டர்வீவ்க்கு போகணும் நேரம் ஆச்சு, அப்புறம் பேசுறேன். என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டு கிளம்ப செய்யும் நிலைக்கு இரும்பாய் மாறி இருந்தது மெல்லிய மனம் கூட.
ஒவ்வொரு படியாய் மேலே நகர ஆரம்பித்தேன் வெற்றியுடன் அந்த நேர்முகத்தேர்வில்.கடைசி சுற்றை முடித்துவிட்டு காத்திருக்கையில் கடந்த வினாடிகளில் என்னுள் நகர்ந்த உணர்வுகளை ஒவ்வொரு வேலை தேடிய மனிதனும் அனுபவித்திருப்பான். சிறிது நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்பதை அறிந்த நொடியில் அத்தனை கர்வமும், ஆணவமும் தலைக்கேறி மொத்தமும் அடங்கிப்போக ஒரு சில நிமிடங்கள் பிடித்தது.
அவசர அவசரமாய் தெரிவிக்க அம்மாவை அழைத்த நிமிடத்தில் அத்தணை மெல்லியதாய் மென்மையானதாய் மாறியது இதயம்.
"அம்மா, வேலை கிடைச்சிருச்சு , இப்ப தான் செலக்ட் ஆனேன்". என்று வென்றதை தெரிவித்தேன்.
" கண்ணு, செலக்ட் ஆகிட்டியா?, சந்தோசம். நான் சொல்லுல, நம்ம குல சாமி கைவிடாதுன்னு, பாத்தியா. சரி சீக்கிரம் கிளம்பி வா ஊருக்கு,அம்மா உனக்கு சுத்திபோடனும். எல்லைக்கருப்பனார்க்கு கெடா வெட்டனும்.வந்திடு இந்த வாரம்". என்று சொல்லி முடிக்க முடிக்க நீ அழுத அழுகையில் புரிந்தது, "வேலை வாங்கிகிட்டே ஊருக்கு வா ஒன்னும் அவசரம் இல்ல "அப்டின்னு நீ கூறிய ஒவ்வொரு வார்த்தையும் பொய் வார்த்தைகள் என்று. மகன் ஜெயித்துவிட உன் மனதை தோற்க்க செய்து இருக்கிறாய் என்று புரிந்த நிமிடத்தில், துடைத்த என் விரல்களை நனைத்தது கண்ணீர்.
பிறகென்ன, உனக்காய் ஒரு உள்ளம் அழுது துடிக்கையில் , இரும்பு மனிதனையும் நொடியினில் சாய்த்து, உள்ளம் உருகி உடைத்துக்கொண்டு வெளிவரும் அன்பிற்கோ, காதலிற்கோ, நட்பிற்கோ மறுபெயர் தான் "கண்ணீர்"..
"மறந்துடாத கண்ணு, முதல்ல பக்கத்துல ஏதாவது கோயில் இருக்கான்னு கேட்டு, சாமிய பாத்து கையெடுத்து கும்பிட்டுட்டு, அப்புறம் போ கண்ணு ரூம்க்கு. சாமியே இல்லைன்னு எப்பவும் போல எகத்தாளம் பேசிகிட்டு போகமா விட்றாத " என கெஞ்சிய அம்மாவிடம், சரிம்மா என என முனகிக்கொண்டே
"மெதுவாய் சட்டைப்பையில் கைவிட்டு பணப்பையை எடுத்து விரித்து, நிழற்படத்தில் உன் முகம் பார்த்து வணங்க ஆரம்பித்தேன் "அம்மா, தெய்வம் நீ அல்லவா, வேறெங்கு தேட உனையன்றி ".
1 comments:
தாயே தெய்வம்...!
Post a Comment