Wednesday, February 5, 2014

கதவு எண் 8/242, கண்ணகி தெரு..


இதயம் பாதித்த நிகழ்வுகளை பகிர்தலின் ஊடே சில கேள்விகளை சமுதாயத்தை நோக்கி ஆணித்தரமாய் அறைந்துவிடுதல் போல் கேட்டுவிடுவதில் ஒரு ஆத்ம திருப்தி. அதைத்தான் எழுத்தால் பதிய முற்படுகிறேன்..

பள்ளியறை தின்றது போக மீதமான நேரங்களில், விளையாடுவதில் அத்தனை ஆர்வம் தெரியும் எனது சக பள்ளிகூட நண்பர்களின் கண்களில், என்னையும் சேர்த்து தான். அவசர அவசரமாய் வீடுவந்து புத்தக்கப்பை எனும் பாவச்சுமையை தூக்கிஎரிவதில் அத்தனை சுகம்.அடுத்த கணம் எதையாவது உண்டுவிட்டு ஓட ஆரம்பிப்போம். நண்பர்கள் ஒன்று சேரும் தருணத்தை அனுபவிக்க ஊர் முற்றத்து கோவிலும் கூட காத்திருக்கும் எங்களுக்காய், ஏன் சில நேரங்களில் கடவுளும் காத்திருந்தது உண்டு பிஞ்சுகுழந்தைகளின் கபடமற்ற உரையாடல்களை கேட்க.

அவன் வந்துட்டான?, இவன் வந்துவிட்டான?, அமுதா வந்துவிட்டாளா?,, தேவி வந்துவிட்டாள?. என்ற எண்ணிக்கை சத்தத்திற்கு பிறகு ஒரு அமைதி நிலவும். சரி இவன் எல்லாம் என் பக்கம், அவன் எல்லாம் உன் பக்கம் என்று பாகபிரிவினை நடக்கும் போதே, கட்டி உருண்டு கொண்டு இருப்பான் சில பேரு, நான் அவன் பக்க போக மாட்டேன், உன் பக்கம் வரேன் அப்டின்னு..ஒவ்வொன்னா சமாதானப்படுத்தி விளையாட்ட ஆரம்பிப்பதற்குள்ள கடவுளே confuse ஆகிடுவாரு(பாவம் அவரே confuse ஆகிட்டாரு).

ஆட்டம் ஆரம்பிக்கும், ஆட்டத்தோட பேரு திருடன் போலீஸ்..சரி நீங்க எல்லாம் போயி ஒளிஞ்சுக்குங்க அப்டின்னு தலைவன்கிட்ட இருந்து அனுமதி கிடைத்ததும் சிட்டாய் பறப்போம்.அவ்வப்போது கடவுளும் கெஞ்சியதுண்டு என நினைக்கிறேன்,திருடனாய் இருக்க. அது என்னமோ தெரியல கடவுளோட கெஞ்சல் கடைசி வரைக்கும் எங்க காதுல விழவே இல்லை. சிறிது நேரத்திற்கு பிறகு போலீஸ் நகர ஆரம்பிக்கும் தேடலை தொடங்க. கிட்டத்தட்ட ஆறேழு தெருக்கலையெல்லாம் தாண்டியும் கூட சில நேரங்களில் இந்த தேடலும், மறைதலும் நடக்கும்.

கொஞ்ச நேரத்துல ஏதாவது ஒரு நண்பனோட அம்மா இப்படி கத்துவாங்க ” கண்ணகி தெரு” பக்கம் போகாம விளையாடு, மீறி போன அப்டினா காலுக்கு சூடு வைச்சிடுவோம் அப்டிங்கற எச்சரிக்கை மணி கேட்டுகொண்டே இருக்கும் சில நேரம் தேவி அம்மாவிடம் இருந்து, சில நேரம் கார்த்திக் அம்மாவிடம் இருந்து.. மணி ஒலிக்கும் திசை வேறாக இருக்கலாம் அவ்வப்பொழுது, ஆனால் ஒலித்துகொண்டே தான் இருக்கும் இந்த எச்சரிக்கை மணி.

துரத்தலில் சில சமயம் இந்த நிகழ்வு நடந்து விடுவதுண்டு, கண்ணகி தெருப்பக்கம் போகும் சூழ்நிலை அதுவும் கதவு எண் 8/242 ல் ஒளிந்துவிடும் சந்தர்ப்பம். அவ்வளவு தான் அடுத்த ஒருவாரத்துக்கு அந்த நண்பன் விளையாட்டுல இருக்க மாட்டான், கால் காயத்தோடு வீட்டில் அமர்ந்திருப்பான் ஏனென்றால் அம்மாவின் கரத்தில் இருக்கவேண்டிய தோசை திலுப்பி, இவன் காலில் பதிந்து இருக்கும் அத்தனை சூட்டோடு…

எங்களை பொருத்தவரை அபாயகரமானபகுதி அந்த தெருவும், அந்த வீடும், அவ்வளவு தான் தெரியும் அப்பொழுது. காரணங்கள் புரிய சில வருடங்கள் பிடித்தன. யமுனா என்பது அவளது பெயர், அவளது ரத்தத்தோடு தொடர்புற்ற உறவினர்கள் யாரும் இல்லை அவளது வீட்டிற்கு அண்மையில். கூடப்பொறந்த சாதிசனமும் பக்கத்துல இல்லை அவளுக்கு. நன்மையையும் தீமையையும் எடுத்துசொல்ல, உதவுவதற்கு. தனியாய் பயணித்து வந்து இருக்கிறாள் இந்த கண்ணகி தெருவிற்கு எப்படியோ, என்ன கனவோடு வந்தாளோ தெரியாது. ஆனால் அவளுக்காய் எழுதிய தீர்ப்பும் விதியும் ஒன்றே, அது கேட்க நாதியற்று போக வேண்டும் இவள் என்ற கொடூரமான வரமே.

தனது காதலன் ராமனாய் இருப்பான் என்றொரு எண்ணத்தில் தன் சொந்த வனத்தை விட்டே, பல ஊர்களை தாவ்வி இருக்கிறாள் இவனோடு. இவளும் சேர்ந்தே பயணித்து இருக்கிறாள்,ஆசை அறுபது நாள், மோகம் 30 நாள் என்ற கணக்கில் வாழும் மனித மிருகத்தின் கோரப்பற்களில் பிடிபட்டு இருக்கிறோம் என்று தெரியாமல். கடைசியாய் அந்த மிருகம் உமிழ்ந்து விட்டு போன இடம் தான் இந்த கண்ணகி தெரு,கதவு எண் 8/242.

ஒற்றைக் குழந்தையை கையில் வைத்துகொண்டு தனியாய் நின்றாள், போராடினாள். கரம் கொடுப்பதாய் நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்து உதிர்த்து ஒவ்வொரு மிருகமாய் கடந்து போயிருக்கிறது அவளது உணர்வுகளை கொன்று உச்சத்தை அடைந்துகொண்டு. கடைசியில் இவளுக்கு கிடைத்த பட்டம் மட்டுமே மிச்சம். கிடக்கும் உடலின் உள்ளம் அறியாமல், உணர்வு அறியாமல் உறவுகொண்டு உச்சம் பெற்றதில் கொளுத்து திமிர்த்துப்போன இவர்களுக்கு பெயர் பெரியமனிதன், தூய்மை அரசியல்வாதி.,இவளுக்கு பெயரோ ஒழுக்கம் கெட்டவள், தே…., வே..,

பார்த்துகொண்டிருக்கும் என் சமூகத்திற்கு ரத்தம் கொதித்தல்லவா இருந்திருக்க வேண்டும்,உதவி அல்லவா செய்து இருக்கவேண்டும்.. நீ இங்க இருந்தா ஊர் கேட்டு போய்டும், வீட்டை காலி பண்ணு என்று கூறியவர்களிடம் எல்லாம் வருத்தம் தேய்ந்த முகத்துடனே கூறி இருக்கிறாள்,” நான் மட்டும் என்ன விருப்பத்துடனா செய்கிறேன், இந்த ஊரு பெரிய மனுசக தான் சொல்றாங்க எங்க போனாலும் கொன்னுபுடுவேன்னு”. , எப்படியோ மூட்டை கட்டி எறிந்துவிட்டனர் அவளை மீள முடியா பாதாளத்தில். எப்படியாவது எழுந்து இருப்பாள் ஒரே ஒரு ராமன் கிடைத்து இருந்தால்..கிடைக்க வாய்ப்பில்லை என்ற போதும் காத்திருந்தாள்…என்ன சொல்ல, ராமனுக்கு அங்கு என்ன வேலை?…

ஒரு வாரத்திற்கு முன்பு சென்று இருந்தேன் சொந்த ஊருக்கு.ஏதோ உரையாடலுக்கு நடுவே என் அம்மா கூறினாங்க. யமுனா இறந்துவிட்டாள், பிணத்தை யாரும் நெருங்க கூட இல்ல. அப்புறம் யாரோ போலீஸ்கு சொல்லி அவுங்க தான் வந்து தூக்கிட்டு போனாங்க.,பாவம் செய்தா இப்படி தான் தொட கூட எவனும் வரமாட்டான், சரி அது எதுக்கு நமக்கு ?.,நீ கிளம்பு ஊருக்கு, நேரம் ஆகிடுச்சு என்று கூறி முடித்துவிட்டு அடுத்த வேலைய பார்க்க சென்ற கணம் கனத்தது இதயம்.

விருப்பமில்லாமல் எடுக்கப்படும் ஒவ்வொரு உரிமையும் கொலைக்கு நிகரானதே.முதல் தேர்வு சரியாக இருந்திருந்தால் முற்றும் மாறியிருக்கும்.என்ன செய்ய?.நிச்சயம் பாதுகாத்து வைத்திருந்திருப்பாள் கற்பை, கடைசிவரை ஒரே ஒரு ராமனுக்காய்…

வேகமாய் பேருந்தை பிடிக்க செல்கிறேன், சட்டென கண்ணில் படுகிறது அந்த தெருவின் பெயர் பலகை..”கண்ணகி தெரு”.



0 comments:

Post a Comment