Thursday, February 6, 2014

நட்பிற்கும் காதலிற்கும்…ஒவ்வொரு மனிதனையும் சில இனம் புரியாத உறவுகளும், உணர்வுகளும் கடந்து சென்றிருக்கும். இன்னதென்று அறிவதற்குள் மின்னலாய் மறைந்திருக்கும் நம்முள் காயத்தை பதித்துவிட்டு. காயங்களும், தழும்புகளும் நம்மை விட்டு மறைந்திருந்தாலும், அவ்வப்பொழுது நம்மில் வந்து போவதுண்டு அந்த அழகிய நினைவுகள்.

இயற்கையில் பெண்ணும் ஆணும் கவரப்பட வேண்டும், இணைதல் நடைபெற வேண்டும், இனம் தழைக்க வேண்டும் என்ற காரணத்தினாலோ என்னவோ ஆணைக்கானும் தருணத்தில் பெண்ணுள்ளும், பென்னைக்கானும் தருணத்தில் ஆணுள்ளும் சில வேதியியல் மாற்றம் அரங்கேற இயற்கை வழி செய்திருக்கிறது. ஆனால் அந்த மாற்றத்தை எதுவரை கொண்டு செல்ல வேண்டும் என்பது அதன் ஆணையும் பெண்ணையும் பொறுத்தே என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.

புதிதாய், நிறுவனத்தில் சேர்ந்து சில நாட்கள் தான் இருக்கும். ஒரு இரண்டு நாட்களுக்கு பிறகு வந்து சேர்ந்தாள் அவள்.அவள் என்பதை விட அவுங்க என்று மரியாதையாய் சொல்லுமளவிற்கு அமைதியான நடை உடை பாவனைகள். கடந்து போகையில் திரும்ப நினைக்கும் மனதை சில நாட்கள் மட்டுமே கட்டுக்குள் வைக்க முடிந்தது. பெண் என்பவளிற்கு மட்டும் ஏனோ அத்தனை பெரிய சக்திகளை கொடுத்து இருக்கிறது இயற்கை என்று எனக்குள் பலமுறை கேள்விகள் கேட்டு இருக்கிறேன்.

நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், என்னையும் நகரவைத்தது இயற்கை, அவளருகே. ஹலோ என்றதில் ஆரம்பித்தது. என்ன இன்னைக்கு நேரத்திலே வந்துட்டீங்க என்ற சாங்கிய சம்பிரதாய வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளும் அளவிற்கு மெதுவாய் வளர்ந்தது. சில உதவிகள், சில தியாகங்கள், நட்பு என்ற வட்டத்தில் கொண்டு வந்துவிட்டது எங்களை.

அத்தனை அழகாய் உதவினாள் எதிர்பார்ப்பு இல்லாமல். இதே உதவியை தான் என் ஆண் நண்பனும் ஆயிரம் தருணங்களில் கொடுத்து இருப்பான். உணர்வுகள் வேறாய் இருந்தது. பிரித்தறிய தடுமாறினேன், எங்கோ கொண்டு சென்றுவிடும் என்பதின் பயத்தினாலோ என்னவோ, ஒவ்வொருமுறையும் நட்பு என்ற வட்டத்தை சரிபார்த்துகொண்டே இருந்தேன். நாட்கள் நகர ஆரம்பித்த நேரங்களில் ஒவ்வொரு உதவிகளும், தியாகங்களும் இன்னும் அழுத்தமாய் எதோ ஒரு உரிமையுடன்.

திடீரென ஒருநாள்,டெல்லிக்கு மாற்றலாகி போகிறோம் என்றாள்.எதற்காக, என்ன ஆச்சு என்ற கேள்விக்கு, பதிலாய் சில அலுவலக பிரச்சனைகளால என்றாள்.எப்போ?, என நான் முடிப்பதற்குள்,நாளை முதல் வர மாட்டேன், வேலைய விடுறதா முடிவுபண்ணிட்டேன் என்றாள். சரி என்று தலையாட்டிவிட்டு, திரும்பிக்கொண்டு எனக்குள் விசாரிக்க தொடங்கினேன். ஏதோ இனம் புரியாத பிரிவை உணர்ந்த உள்ளத்தில் சில கேள்விகளை வைத்து தெளிவாக்கிக்கொள்ள தொடங்கினேன். நிச்சயம் காதல் இல்லை என்னுள். உணர்வுகளைத்தாண்டி உடல்களும் ஒன்றாகும் நிலையை எதிர்பார்த்தது இல்லை அவளிடத்தில் எப்பொழுதும்.

காதல் என்பது உணர்வுகளை தாண்டி, உடல்கள் இணைய சம்மதிக்க தயாராகும் நிலையின் ஆரம்பம் என்று நன்றாய் தெரியும். உன்னிலும் என்னிலும் பேதம் இல்லை. என்னில் உள்ள உன்னை உயிராய் நேசிக்கிறேன், உன்னில் உள்ள என்னை உயிராய் நேசிப்பாய் என்ற அசைக்கமுடியாத ஒரு உன்னத நிலை தான் காதல்.இந்த உன்னத நிலையின் அடுத்த கட்டம் என்பதை விட, மிக நெருங்கிய நிலை என்றே அழுத்தமாய் சொல்ல முடியும் அதுவே உணர்வுகளோடு உடலையும் தந்துவிடும் கடைசி நிலை.

நட்பை தாண்டி விட்டேன் என்று சரியாகச்சொல்லமுடியும். காதலை தொடவில்லை, தொடவிரும்பியதில்லை என்று சத்தியமாய் சொல்ல முடியும்.

உணர்வுகளை மட்டும் பரிமாறும் நட்புநிலைக்கும், உயிருடன் உடலையும் பரிமாறிக்கொள்ளும் காதல் நிலைக்கும் நடுவில், பெயரே சூட்டப்படாத, இன்னதென்று அறியாத, அறியமுடியாத அழகிய நிலை ஒன்று இருப்பதாய் உணர்கிறேன்.0 comments:

Post a Comment