Tuesday, February 11, 2014

திருத்தலும், அடித்தலும்…


எழுத்தின் வழியாய் அனைத்து பாதைகளிலும் பயணிக்க வேண்டும் என்ற ஆவல் என்னில் இருந்ததுண்டு. சிலரது எதிர்பார்ப்புக்காய் “இல்லறம்” என்ற பாதையில் பயணிக்க முற்படுகிறேன் இப்பொழுது.

குறைந்தது 26 வருடங்கள் தனிமையிலும், அவ்வப்பொழுது சில நண்பர்களுடனும், பயணித்த எனது வாழ்க்கை, புதிதாய் ஒரு துணையுடன் வாழ்நாள் முழுவதும் நகரப்போகிறது என்பதை உணர்ந்த தருணத்தில், எதோ அழகிய கற்பனையும், நெஞ்சை கனக்க வைக்கும் பயமும், சிறியதாய் ஏதோ எதிர்பார்ப்பும் என்னில் கனந்து கொண்டே இருந்தன.

திருமணம் முடிந்து, இல்லற வாழ்க்கையும் நன்றாக நகர்ந்துகொண்டிருந்தது. நாட்கள், வாரங்களாய் மாறின. வாரங்கள் மாதங்களாய் மாறும் தருணத்தில் அன்றொருநாள்,

சிறியதாய் கருத்துக்கள் பரிமாறியதில் ஆரம்பித்து, பெரிய வாக்குவாதத்தில் நின்றது. முரண்பாடான எதிர்பால் விளக்கத்தை ஏற்க மறுத்தது உள்ளம் இருபுறமும். விளைவு விரிசல் விழத்தொடங்கியது அன்பில். பெரியவன்(ள்) யாரென்ற தொடர்ச்சியான விவாதத்தில் உடைந்தே போய்விட்டது அழகிய துணை இவன்(ள்) என்ற புதிதாய் அரும்பிய துளிர். சிறியதாய் மௌனம் நிலவிய தருணத்தில் தனியாய் கதவை தாளிட்டு அமர்ந்ததும் மனம் உடைய ஆரம்பித்தது.

பெரிய தவறு செய்ததாய் நினைவுகள் நெறித்தன மூளையை. பொருத்தமற்ற துணையை தேர்வு செய்ததாய் எண்ணி உதடுகள் திட்டிக்கொண்டன என்னுள்.ஒவ்வொரு நிகழ்வுகளையும் குறிப்பெடுக்கும் எனது நெருங்கிய பழக்கம் கூட என்னை விட்டுப்போனது இந்த சில மாதங்களில். மீண்டும் புதிய டைரி ஒன்றில் எனது மௌனத்தை எழுத தொடங்கினேன். தவறு செய்துவிட்டதாகவும், இவள் எனக்கு சரியான பொருத்தமானவள் அல்ல, இவளை விட்டு விலக வேண்டும் என்றெல்லாம் மனது உடைத்து போட்ட வார்த்தைகளால் நிரப்பினேன் டைரியின் பக்கத்தை.

பிறகு அவசரமாய் கிளம்ப ஆரம்பித்தேன் அலுவலகம். படிக்கட்டை தாண்டிய நேரத்தில் அவளது சத்தம் கேட்க, சமையலறை ஓடினேன். இருக்கிபிடித்த விரலில் ரத்தம் வடிய, கலங்கிப்போனேன். அவசர அவசரமாய் மருந்திட்டுவிட்டு நகர ஆரம்பித்த கணம், அன்பாய் பேசிவிட தோன்றிய உள்ளத்திற்கு உன் வாக்குவாதம் சரியே என்று உடலின் எங்கோ இருந்து வந்த சொல்லிற்கு தலையாட்டியது போல் கிளம்பிவிட்டேன் அன்பாய் பேசிவிடாமல்.

அழைப்பேசியை முடக்கம்செய்து வைத்தேன், நாட்கள் முழுவதும் எனது பார்வையிலே நகர்ந்தது. எப்பொழுதும் 8 மணிக்கு கிளம்ப முயற்சிக்கும் நான், அன்று இரவு உணவையும் அலுவலகத்திலே முடித்துவிட்டு கிளம்பினேன் 10 மணி அளவில் கிளம்பினேன். ஏதோ இருமனதில் பைக்கை நகர்த்தி, நினைவுகளை அங்கும் இங்கும் அலசிக்கொண்டு விரட்ட ஆரம்பித்தேன் பைக்கை வேகமாய்.

சிறிய தடுமாற்றம் நினைவிலும், நிஜத்திலும். பாடரென்று மோதினேன் சாலையோர விளக்கு கம்பத்தில் வேகமாய். தூக்கிஎறியப்பட்டு கணுக்கால், கணுக்கை என பல இடங்களில் குருதி கொட்டத்தொடங்கியது.மெதுவாய் அனைத்தையும் துடைத்துவிட்டு வலியை சுமந்து கொண்டு வீட்டை நோக்கினேன். வீட்டிற்குள் நுழைந்த மறுநிமிடம், பதறியடித்து ஓடிவந்து என்னை அமரச்செய்து, அழுதுகொண்டே காயங்களுக்கு மருந்தை தடவினாள் மளமளவென சிந்தும் கண்ணீரை துடைக்க நேரமில்லாமல், கண்ணீரையும் சேர்த்தே மருந்திட்டாள் காயங்களுக்கு. இடை இடையே தன்னையும் திட்டிக்கொண்டாள், தன் தவறென்று தன்னையே குற்றம் சாட்டிகொண்டாள்.

உடனே மருத்துவமணை கிளம்பலாம் என்று கெஞ்சியவளிடம், உடலில் வலி கொஞ்சம் குறைவு தான் உள்ளத்தில் இருப்பதை விட என்று சொல்லாமல் சொல்லிவிட்டு , கொஞ்சம் ஓய்வு வேண்டும் என்று கூறிவிட்டு நகர ஆரம்பித்தேன் படுக்கையறை நோக்கி, சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுங்கள் என்று அவள் கெஞ்சியதையும் நிராகரித்துவிட்டு..

அவள் அன்பை கண்ணீரில் பார்த்துகொண்டே கதவை தாளிட்டு, கலங்கிய கண்களுடன் டைரியை தேடிப்பிடித்து நேற்றைய அத்தனை எழுத்துகளையும் அடித்து திருத்துவிட்டு, தாளையும் கிழித்து கசக்கி எறிந்தேன். அவள் அன்பில் வலிக்க ஆரம்பித்தது இதயம். எனக்கான சரியான துணை இவள் என்ற நினைவில் உறங்க ஆரம்பித்தேன்.

அதற்குபிறகு மீண்டும் இதே போல் சண்டைகள் முளைப்பதும், கலையப்படுவதும் மாறி மாறி நிகழ்ந்தன. இல்லறம் என்பது அடித்தலும் திருத்தலும் கலந்த கலவை என்பதை கொஞ்சம் கொஞ்சமாய் அறியத்தொடங்கினேன்.இல்லறம், இல்லத்தரசி என்பவள் சாமான்ய மனிதனையும் சர்வமும் தாங்கும் சரித்திர நாயகனாய் மாற்றுபவள் என்பதை உணர ஆரம்பித்தேன்.

சில வருடங்களுக்கு பிறகு….இன்று எனது மகள் சுவரில் கிறுக்கிக்கொண்டு இருந்தாள். கிறுக்கிகொண்டிருந்த அவளிடம் சுவற்றில் கிறுக்காதே, உள்ள போயி ஏதாவது notebook கிடந்தா எடுத்துவந்து அவற்றில் எழுதிப்பழகு என்றேன்.

சரிப்பா என்றவள் கை நிறைய டைரிகளோடு வந்து நின்றாள். ஒவ்வொன்றாய் விரித்து பார்த்துவிட்டு என்னிடம் முறையிட ஆரம்பித்தாள், ” அப்பா, ஒரு டைரியில் கூட தாளே இல்லை, எல்லாத்தையும் யாரோ கிழிச்சுட்டாங்க போல இருக்கு, நான் எப்படி எழுதி பழகுறது என்றாள்?….”

சிறிய புன்னைகையுடன் மனதில் முனகிக்கொண்டேன், “அப்பா வாழ்க்கையை வாழ பழகிக்கொண்டு இருந்தேன், எப்படி கூறுவேன் உன்னிடம், அத்தனை முறை வாழ்க்கையை அப்பா கற்று பழகி இருக்கிறார் என்று.. இன்று காலையிலும் கூட இன்னொரு புதிய டைரியில் எழுதிவைத்துவிட்டு தான் வந்து இருக்கிறேன், “நான் தவறான முடிவு எடுத்துவிட்டேன்” என.

:) இல்லறம் என்பது புதிதாய் கற்றலே..0 comments:

Post a Comment