Tuesday, February 4, 2014

ஆண்மையும் பெண்மையும்..


எத்தனை பேர் வாசித்தார்கள் என்பதிலில்லை ஒரு எழுத்தின் வெற்றி, எத்தனை பேர் வாங்கினார்கள் உள், என்பதிலே அடங்கியிருக்கிறது எழுத்தின் விருட்சம். அப்படிப்பட்ட எழுத்தை கொடுக்க மிகத்தெளிவான ஆழ்சிந்தனையை மனதினில் விதைத்திருக்கவேண்டும் என்பது நன்றாகத் தெரியும். சரி பதிவிற்கு செல்வோம்.

” குடும்பத் தகாராறில் மனைவி தற்கொலை”, ” விஷம் குடித்தார் கணவர் குடும்ப சண்டையில்”. ” காஞ்சிபுரம் கலெக்டர் மனைவியை பிரிந்து காதலியை கரம் பிடித்தார்”. ” மனைவி கண்ணெதிரே கள்ளக்காதலனை வெட்டி சாய்த்தார் கணவர்” .. இவைகள் நாம் வாசிக்கும் தினநாளிதழ்களின் ஏதாவது ஒரு பக்க செய்தி.

இத்தனை நிகழ்வுகளின் காரண காரியங்கள் வெவ்வேறு வகையாய் இருக்கலாம் அனால் மையப்புள்ளி காரணம் ஒன்றே. பயணமும் ஒன்றே. அது அன்பைத்தேடி என்ற புதிய தேடலை நாடியே என்பது அசைக்க முடியாத உண்மை. மனிதஇனத்தில் ஆண், பெண் என்பதே இருபெரும் பிரிவுகள். இதில் ஒன்றிரண்டு தப்பியிருக்கலாம்.

ஆண்- ஆண்மை என்பது வெறும் உடல் வலிமையை மட்டும் பொறுத்தது அல்ல. நெஞ்சை பிளந்துவிடும் காளையை எதிர்கான நேரிட்டாலும் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் வீரம் எனும் உடல் வலிமையை தாண்டிய மன வலிமை எனும் ஆசாத்திய தைரியம், பயம் எனும் நரம்பை பிய்த்து எறிந்துவிட்டு,புருவம் சாய்க்காமல் கண்களை கூர்மையாய், கைகளை வேல்கம்பாய் நிறுத்தி வெற்றியையே சாய்க்கும் உடல் வலுவும் உள்ள வலுவும் ஒன்று சேர்ந்து நிற்கும் ஆயிரம் காளைக்கு சமாமான ஆண்மை.

பெண்- பெண்மை என்பது இறகை விட மென்மையானதாய். இந்த உலகத்தை ஒற்றை தலைமுறையோடு தேங்கிவிடாமல் அடுத்த தலைமுறைக்கு எடுத்துசென்ற மிகப்பெரிய நற்செயலை விதைத்த, உணவிற்காகவும், மனித உடலிர்க்ககவும் ஒன்றில் ஒன்று மோதி அழிந்த உலகத்தை மென்மையான அன்பால் மாற்றும்.நேசம் கற்றுத்தந்து மனித இனத்தை தழைக்க செய்யும் ஒப்பற்ற சக்தியே பெண்மை. ஒற்றை வார்த்தையில் பெண்மை என்றால் அன்பு.

அத்தனை முரட்டுத்தன ஆண்மையும் பெண்மையிடம் மண்டியிட்டது. பெண் பொறுப்பானவள், அன்பானவள், மென்மையானவள் இந்த புரிதலாலோ என்னவோ கிட்டத்தட்ட பல நூற்றாண்டுக்கு முன்னதாகவே தன்னை ஒப்படைத்து மட்டுமல்லாமல் தன் குடும்பத்தையும் அவளிடம் ஒப்படைத்து விட்டு, தேடிய உணவை அவளிடம் கொடுத்து பாதுகாக்கவும், இனம் தழைக்கவும் நாடி இருக்கிறான் பெண்மையை. நன்றாகவே சென்ற இந்த வாழ்க்கை சுழற்சியில் சின்ன சின்னதாய் பரிமாண வளர்ச்சி சில நூற்றாண்டுகளை தாண்டிய போது.

விருப்பத்தில் பயணித்த இந்த வாழ்க்கை சுழற்சியில் சில நிகழ்வுகள் புதிதாய் முளைக்க ஆரம்பித்தன.அதன் விளைவே பெண் என்பவள் காலம் காலமாய் கற்று வந்த பாடங்களிலிருந்து மாறுபட்டு யோசிக்க ஆரம்பித்தாள் ,ஆண் என்பவன் மட்டுமே ஆண்மை என்றால் பெண் சலித்தவள் அல்ல, அதை மாற்றி காட்ட முற்பட்டபோது ஆண் எனும் ஆளுமையால் தாங்கிக்கொள்ள முடியாத தருணத்தில் அடக்குமுறை எனும் வழக்கத்திற்கு மாறான ஒன்றை திணிக்க ஆரம்பித்தான் பெண்களின் மீது. பெண் என்பவளும் சகித்துக்கொள்ள ஆரம்பித்தாள் விருப்பமின்றி. விளைவு, உடைய ஆரம்பித்தது கட்டுக்கோப்பு எனும் வாழ்வியல் பாத்திரம்.ஒவ்வொன்றாய் வெளிவரத்தொடங்கியது வாழ்வியல் நெறிகள் -புதுமை பெண்ணாய். என் பாரதி போன்ற இன்னும் சிலரது எழுத்துக்களால், கொஞ்சம் கொஞ்சமாய் மாற ஆரம்பித்தது வாழ்வியல் எனும் பாத்திரத்தின் வடிவம் புதுமையான கொஞ்சம் முரண்பாடான வடிவத்தில்.

மீண்டும் சில நூற்றாண்டுகள் உருண்டோடி இப்பொழுது இங்கு வந்து நிற்கிறோம். உருண்டோடிய நூற்றாண்டுகளில் பெண்மையை ஆண்மைக்கு நிகராக கொண்டு வந்து நிறுத்திவிட்டோம். ஆண்மைக்கு நிகராக வருவதிலே கவனத்தை செலுத்திவிட்டோம், செலுத்திவிட வேண்டிய கட்டாயமும் கூட.

இந்த நிகராக்கும் செயலில் பெண்மையை கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றி ஆண்மைக்கு கொண்டு வந்துவிட்டோம். அதன் வெளிப்பாடு அன்பிற்கு இனிய என் தேசத்து பெண்மை, அன்பு எனும் பெண்மைக்கே உரிய அழகிய பண்பாட்டை தவற விட்டுக்கொண்டே வந்திருக்கிறது என்பதே நிதர்சனமான, கொஞ்சம் ஏற்றுக்கொள்ள கடினமான, கசப்பான உண்மையும் கூட.

இந்த மனித இனம் அன்பு என்ற ஒன்றை சுற்றியே பின்னப்பட்டு, உயிர்பெற்று வாழ்ந்துகொண்டிருந்தது. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாய் கட்டவிழ்ந்து ,தான், என்னால், சுயநலம், பிடிவாதம் என்ற கட்டுக்குள் சென்று கொண்டது .

குடும்பம்- சண்டை எனும் நிகழ்வில் செல்லும்பொலுதெல்லாம் அன்பாய், மிகத்தெளிவாய், நிதானமாய் கையாண்டு, விட்டுகொடுத்தல் எனும் உயரிய, மரியாதையான பண்பை தானே ஏற்றுக்கொண்டு சரிசெய்து அழகிய பாதைக்கு எடுத்து சென்ற பெண்மை, இப்பொழுது அவனுக்கு நிகர் நான் என்று ஒற்றை பிடிவாதத்தில் மாற்றிப்போட்டுவிட்டது ஆண்மையை போன்று.

இதன் விளைவு என்னவென்றால் ஆண்மை , புதியதொரு அன்பைத்தேடி பயணிக்க ஆரம்பித்ததின் விளைவே இந்த முரண்பாடான தவறான உறவுகள், பிரிவுகள், தற்கொலைகள், இன்னும் சில… அடிப்படையான உண்மை யாதெனில் எத்தனை காதல்களை எழுதினாலும், பாடினாலும் ஆண் என்பவன் நிச்சயம் மென்மையானவன் அல்ல. எப்பொழுதும் தான் மட்டும் மேலே எனும் உணர்வைக்கொண்டவன், அப்படித்தான் படைக்கபெற்று இருக்கிறான் இயற்கையால்.

பெண் என்பவளும் அன்பை கோடி கோடியாய் கொட்டித்தருபவள்,பாசம் நேசம், கருணை இப்படி எண்ணற்ற மென்மையான அதிசயங்களை ஒருங்கே பெற்ற, தோற்றத்தில் மென்மையும்,அன்பில் சிறந்த வலுவையும் கொண்ட ஆணிற்கு நிகரான பெண்மை , அப்படி தான் இயற்கையால் படைக்கபெற்றும் இருக்கிறாள் என்பதே நிதர்சனமான உண்மை.

எப்பொழுதெல்லாம் அதீதமான அன்பு உண்மையாய் பகிரப்படுகிறதோ அப்பொழுது தனது துணை இன்னொரு இணையை தேடி செல்ல சாத்தியம் இல்லை, அது காதலில் ஆகட்டும், நட்பில் ஆகட்டும், திருமண வாழ்க்கையில் ஆகட்டும்..

அன்பு என்பதை பெண்மையால் மட்டுமே அதிகமாய் பகிரமுடியும் ஆண்மையை விட. காளையை சாய்த்து மண்டியிட வைக்கும் கரடு முரடான கோபத்தின் உச்சத்தில் திளைக்கும் ஆண்மை கூட பெண்மையின் அன்பான, கனிவான வார்த்தைகளில் மண்டியிட்டே தீரும்…

பெண்மை எப்பொழுதெல்லாம் அன்பை பகிர தடுமாறுகிறதோ, மறுக்கிறதோ அப்பொழுதெல்லாம் இந்த தவறான நிகழ்வுகள் நமது தினசரி செய்தித்தாள்களில் எட்டிப்பார்த்து கொண்டே தான் இருக்கும்.

0 comments:

Post a Comment