Monday, February 10, 2014

எப்பொழுது வருவாய்?….. :(


உன் கரம் பிடித்து சாலையில் நடக்கும்பொழுதெல்லாம் குட்டிக்கதைகளை, கொஞ்சி கொஞ்சி என் மழலை மொழியில் ஊட்டி விடுவாய். கடைவீதி பொம்மைகளை பார்த்து நான் கை நீட்ட முனைகையிலெல்லாம் நாளை வாங்கித்தருகிறேன் என்று கெஞ்சி ஒப்பேற்று விடுவாய்.

எதற்காகவோ அழுது அடம்பிடிக்கும் தருணங்களிலெல்லாம், “செல்லம் நீ அப்படியே அப்பாவின் சாயல் என்பாய்”.அப்பா என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், அப்பா என்றால் யாரம்மா? என்ற கேள்வியை தொடுக்கும்பொழுதெல்லாம்,ஏனோ மௌனத்தை மட்டுமே தருவாய் பதிலாய்.

என் சொந்தம் நீ மட்டும் என நன்றாய் புரிந்துவிட்டது எனக்கு, இந்த சாலையோர நமது சேலை வீட்டிலிருந்தே… நான் கண்விழிக்கும் பொழுதெல்லாம்,சேலை தலைப்பை எனதருகே வீசிக்கொண்டே, திட்டிக்கொண்டு இருப்பாய்- என்னில் காயம் பதிக்கும் பூச்சிகளையும், ராட்சச கொசுக்களையும்.

பசிக்கிறது என்று எச்சிலை விலுங்கும்பொழுதெல்லாம், இதோ வருகிறேன் செல்லம், அதுவரை சமத்தாய் இருக்கணும் என்று அருகில் இருக்கும் பேருந்து நிறுத்த சிக்னலை நோக்கி சிட்டு குருவியாய் பறப்பாய்.என்ன செய்வாய் என்று தெரியாது, சில மணி நேரங்களில் பாலும் ரொட்டியுடனும் வந்து, உண்ணு முடிக்கும் வரை என் முகம் பார்த்து மகிழ்வாய்.

இன்றும் அப்படித்தான் காலையிலே கிளம்பிவிட்டாய், இன்னும் உன்னைக்காண முடியவில்லை.குடலைத்தின்னும் பசி மறைந்து விட்டது எப்பொழுதோ. எத்தனையோ நாட்களில் என் முகம் பார்த்து நீ பசியாறி இருப்பாய், இன்று எனது முறையாய் இருந்துவிட்டு போகட்டும். உன்னைக்காணும் ஏக்கத்தில் காத்திருக்கிறேன் அம்மா. சீக்கிரம் வந்துவிடு பயமாய் இருக்கிறது…

எப்பொழுது வருவாய்?…

இடம்: அரசு மருத்துவமணை,பிணவறை.

“யோவ் மருதமுத்து, சாப்பிட்டுட்டு வரேன், அதுவரைக்கும் பாத்துக்கையா இந்த பிணத்தை, சிக்னல்ல அடிபட்டு முடிஞ்சுருச்சு, இங்க தான் கிடக்கு காலைல இருந்து, ஒருத்தரும் வருல,எதோ அனாதை போல இருக்கு, “.



0 comments:

Post a Comment