Friday, February 14, 2014

பிப் 14 …

மிக வேகமாய் உருண்டோடிக்கொண்டிருக்கும் நமது வாழ்க்கை பயணத்தில் சில முக்கியமான பயணிகளை ஏற்றிக்கொள்ள மறந்துவிடுகிறோம், சில சமயங்களில் மறுத்தும் விடுகிறோம். நுகர்ந்துவிட மறந்துவிட்டோம் என்பதற்காய் பூக்கள் வாடுவதில்லை என்றாலும், சில பூக்கள் மரித்தே விடுகின்றன என்பதை தெளிவாய் உணர்ந்தவனாய் எழுத ஆரம்பிக்கிறேன். 

அலுவலுகத்தில் அவ்வப்பொழுது வருச கடைசியில கிடைக்குற அதே உற்சாக ரேட்டிங்க்ஸ் இந்த வருசமும் வந்துச்சு, எதிர்ப்பார்ப்பில் கொஞ்சம் குறைச்சும் கூட்டியும் வந்துச்சு. மெதுவா நகர்ந்த அந்த நேரத்தில் எனது அழைப்பேசி கத்த தொடங்கியது. “அமுதா” அக்காகிட்ட இருந்து வந்த அந்த அழைப்பை ஏற்க தொடங்கியதும், ” எதிர்முனைக்குரல் கதறி அழுதுகொண்டே பேச ஆரம்பித்தது, “செல்லம்மாள்” மருந்துகுடிசுட்டா தம்பி, ஹாஸ்பிட்டல்ல சேத்து இருக்கோம். “உடனே உன்ன பாக்கணும் அப்டின்னு அடம்பிடிக்கிறா தம்பி என்றதும், உடைந்த மனதுடன் அழைப்பை துண்டித்துவிட்டு வேகமாய் கிளம்பி சேலம் பேருந்தை பிடித்து அமர்ந்து எதிர்நோக்கினேன் எனது தாய்மண்ணை. 

“செல்லம்மாள்” என்பவள் வேறு யாரும் இல்லை எனது அக்காள் மகள். எங்க ஆச்சி பேரைத்தான் வைக்கனும்னு என் அக்கா சாதிச்ச பிடிவாதத்தின் வெற்றி தான் இந்த “செல்லம்மாள்”.என்னைவிட நான்கு வயது சின்னவள். “செல்லம்மாள்” அப்டிங்கற பெயர்  fancyஅஹ இல்ல அப்டின்னு தினமும் அடம்பிடிச்சவ. என் ஊருக்கும், அவ ஊருக்கும் ரொம்ப தூரம்லாம் கிடையாது. ஒவ்வொருநாளும் அதிகபட்சம் ஐந்து முறையாவது எங்களை தொந்தரவு பண்ணாம தூக்கத்தை பெற்று இருக்கமாட்டாள். 

சிறிய வயதிலிருந்து எங்க வீட்டு திண்ணையை விளையாடி தேய்த்து தேய்த்து வாசல் ஆக்கிவிட்ட பெருமை அவளையே சேரும். பல்துலக்க போறதுல இருந்து பள்ளிக்கூடம் கிளம்புற வரைக்கும், எங்க கிளம்பிட்ட மாமா, எங்க கிளம்பிட்ட மாமா என்ற அவளது கேள்வியை கேட்டு கேட்டு மண்டையே வெடிச்சிரும். 

அச்சாங்கல் ஆடும்போதும் சரி, திருடன் போலீஸ் ஆடும்போதும் சரி, கண்ணாமூச்சி ஆடும்போதும் சரி, சதுரங்கம் ஆடும்போதும் சரி, கேரம் விளையாடும்போதும் சரி., நான்,  மாமா பக்கம் தான் கூட்டு, மாமாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன் என்று அத்தனை அன்பை கொட்டுவாள். “நீங்க எல்லோரும் செல்லம்மாள் அப்டினே கூப்பிடுங்க”, எங்க மாமா மட்டும் என்னை செல்லமா “செல்லம்” அப்டின்னு கூப்பிடட்டும் என்பாள். 

விளையாட்டாய் “மாமா நாளைக்கு கல்யாணங்கட்டிக்கிட்டு மெட்ராஸ் போய்ட்டா அப்போ யாருகூட விளையாடுவ, யாருக்கு சப்போர்ட் பண்ணுவ” என அக்கா கூறும்போதெல்லாம் “ம்ம்ம் அப்படியா, அப்போ பாத்துக்கலாம்” என்பாள். துருதுருவென கேள்வியை கேட்டு என்னை அறிவில் கொஞ்சம் நிமிர்ந்து நிக்க செய்தவள்.பத்தாம் வகுப்பை தாண்டிய பொழுது தனது குரும்பை கட்டிபோட்டுவிட்டாள், அனால் தொந்தரவு செய்வதை நிப்பாட்டவில்லை அடக்கத்துடன். 

ஒருவழியாய் பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் பள்ளிக்கூட சிறந்த மாணவன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டு கல்லூரியை நோக்கி பயணமானேன். நன்றாய் படித்துவிடவேண்டும் என்ற இலக்கில் தவறவில்லை கடைசி வருடம் வரை. கேம்பஸ் இண்டர்வீவ்ல எப்படியாவது தேர்வு ஆகிடவேண்டும் என்ற எண்ணமும் செயலும் வெற்றி அடைய செய்தது. 

கிட்டத்தட்ட இந்த ஆறு வருடங்களில் அதிகபட்சமாய் ஒரு ஆறேழு முறை பார்த்திருப்பேன் செல்லம்மாவை. வேலை நிமித்தமாய் மாற்றாலாகி தூரத்து ஊருக்கு குடிபெயர்ந்திருந்தார்கள் அக்காவும், மாமாவும், செல்லம்மாவும். கிட்டத்தட்ட கல்லூரி முடியும் தருணம், வேலைக்கு தயாராகும் தருணம், வந்தாள் திரும்பி “செல்லம்மாள்” அத்தணை அமைதியுடன், அடக்கத்துடன்.. மாமா உங்களுக்கு வேலை கிடைச்சுருசாமே, வாழ்த்துக்கள் மாமா என்றாள். சரி என்று அவசர அவசரமாய் கிளம்பிய என்னிடம் எப்போ வருவீங்க மாமா என்றாள்.6 மணிக்கு என்று பதிலை கூறி விட்டு ஓடினேன். 

இந்த நான்கு வருட கல்லூரி வாழ்க்கையில் அவ்வப்பொழுது ஏதாவது ஒரு காரணத்தை கைகாட்டி அவள் (தேவி) என்னிடம் பேசியதுண்டு , நானும் பேசியதுண்டு. ஒரே கல்லூரி வகுப்பில் படித்தாலும் சில சமயங்களில் மட்டுமே பேசியதுண்டு உதடுகளும், கண்களும். அப்பொழுதெல்லாம் பல காதல்கள் நண்பர்கள் விளையாட்டாய் முருக்கிவிடும் உற்சாகத்தில் தான் வளர்ந்தது என்றே அடித்து கூறிவிடலாம்.அப்படி தான் அந்த எனக்கான நாளும் நெருங்கியது. 

மச்சி கலக்குற கேம்பஸ்லையே செலக்ட் ஆகிட்ட, இனி அடுத்தது என்ன, லவ் அஹ சொல்லிடவேண்டியது தானே, அதுவும் பிப் 14 வருது, என்ற நண்பர்களுக்கு, யாருடா, யாருக்குடா சொல்றது என்ற என்னை, அந்த பெண்ணுடன் சேர்த்து வைச்சு முருக்க ஆரம்பித்தார்கள்.விளைவு, என்னிடம் அதிகம் பேசாத அந்த பெண்ணிடம் காதலை தெரிவிக்க ஆயுத்தமானேன். 

அடுத்த நாள் ஏதோ ஒருவித பயங்கர ஆவலுடன், எதிர்பார்ப்புடன் கிளம்பிய தருணத்தில் வந்து நின்றாள் செல்லம்மாள். கல்லூரி கிளம்பிட்டீங்களா மாமா என்றாள்,ஆமா செல்லம் என்றவனிடம், பிப் 14 ,ஏதாவது இன்னைக்கு special உண்டா மாமா என்றவளிடம் , கொஞ்சம் மறைக்க முயற்சித்து கடைசியில் உண்மையை அவளிடம் ஒப்பித்தேன். சற்று நிமிடம் காத்திருங்க என்ற கூறிவிட்டு வீட்டினில் ஓடி சென்று திருநீரை வைத்துவிட்டாள், வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று ஆசிர்வதித்தாள்.ரெட் ரோஸ் வேண்டாம் மாமா, வெள்ளை ரோஸ் கொண்டு போயி கொடுங்க என்றவள். அவள் ஆசிர்வாதமோ என்னவோ இன்று அந்த பெண் என்னோடு இருக்கிறாள் மனைவியாய் . 

இப்படி என்மீது அக்கறையை கொட்டியவளை தான், அத்தணை கண்ணீரோடு, வழிநெடுக காணும் தெய்வங்களை எல்லாம் கெஞ்சிக்கொண்டு செல்கிறேன்.வேகமாய் சென்றடைந்தேன் மருத்துவமணையை.அத்தணை அழுகையோடு அங்கும் இங்கும் பதட்டத்துடன் நடமாடும் அக்காவை சந்தித்து நடந்ததை கேட்டறிந்தேன். ” என்ன தம்பி பண்ண சொல்ற எங்கள, இத்தனை வருசமா கல்யாணம் கட்டிக்க மாட்டேன்னு அடம்பிடிச்சா சரி, இப்போ வயசாகுதுல்ல, இப்படியே தள்ளிப்போட்ட யாரு கல்யாணம் பண்ணிப்ப வயசாகுதுல அப்டின்னு, நேத்து இவளுக்கே தெரியாம நிச்சியம் பண்ணினோம்”. அதுக்கு மருந்த குடிச்சிட்டா தம்பி, என்புள்ள பொளைச்சா போதும்னு இருக்கு” 

“ஏன் லூசு மாதிரி பண்ணுனீங்க” என்ற கோபத்துடன் நான் “செல்லத்தை” பாக்கணும் என்றேன். ” கண்ணா முளிக்கிறா, அப்புறம் எதுவும் பேசாம கிடக்குறா தம்பி, டாக்டர் வேற அரைமணி நேரத்திற்கு பிறகுதான் எதையும் சொல்லமுடியும், பாக்கலாம்னு இருக்காரு தம்பி” என்ற அக்காவிடம் நான் பாத்தே ஆகணும் என்று உள்ளே சென்று, சிறிதுநேர காத்திருத்தலுக்கு பிறகு கண்விழித்த அவளிடம் “மாமா வந்திருக்கேன் செல்லம், ஒன்னும் பயப்பட தேவை இல்லை” என்றேன்.எனக்கு தெரியும் மாமா எவ்ளோ நேரம் இருப்பேன் என கலங்கிய அவளிடம் “ஒன்னும் ஆகாது என்றேன்”. 

“நல்லா இருக்கீங்களா  எல்லோரும்” என்றாள்.. எங்களுக்கென்ன நல்லா இருக்கோம் என்றேன். ” மாமா, நான் பிழைக்கமாட்டேன் ” என்றதும் என்னையும் மீறிய அழுகை வெடித்தது. “மாமா ,அழாதீங்க.கொஞ்சம் கிட்ட வாங்க என்றாள், அருகே சென்ற என்னிடம் “தப்பா எடுத்துக்காதீங்க, என்று என் கன்னத்தில் முத்தம் பதித்தவளிடம்”., நான் ஆச்சர்ய கேள்வியை கேட்பதற்கு முன்பே பேச ஆரம்பித்தாள் தடுமாறியபடி ,” எப்பவோ ஆசைப்பட்டேன், வெட்கம் மறைத்து விலகுவதற்குள் பிப் 14 வந்துவிட்டது, அனைத்தும் மாறியது ஒற்றை நாளில் என்றாள். மேலும் பேச ஆரம்பித்த அவளின் சுவாசம் தடுமாறியது. கண்கள் மேலும் கீழும் உருண்டோட துடிக்க ஆரம்பித்த அவளிடம் “ஒன்னும் ஆகாது செல்லம்” என்றபடி டாக்டரை அழைத்தேன். அரைமணி நேரம் காத்திருந்தேன் அவளிடம் திரும்ப பேச.அவள் காத்திருக்கவில்லை என்னிடம் பேச.கடைசியாய் என்னை பார்த்த கண்களை இமைக்க கூட மனமில்லாமல் திறந்தே மரித்திருந்தாள் “செல்லம்”. 

இன்னும் எத்தனை, ஒரு(தலை) காதல்களை அழித்து, மற்றொரு காதலை புதுப்பிக்குமோ இந்த பிப் 14. 

0 comments:

Post a Comment