உன்னுடன் பகிர்ந்து கொள்ள நினைத்ததை இப்படி தான் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன்.உணவுக்காக ஓடிய மனிதப்பரிமானம் இப்பொழுது சுயகௌரவம்,குடும்ப கடன்,சமுதாய அந்தஸ்து,தன்குடும்பம்,தன்குழந்தை என்ற பந்தயத்தில் வேகமாய், நானும் தான் ஓடிக்கொண்டு இருக்கிறேன் எனக்கான அடையாளத்திர்க்காய் என்ன செய்ய.
எனக்கு தெரியும் உனக்கும் எனக்குமான முகவரி சினிமா தாய்களை போன்றது அல்ல. அன்பு காட்டியதில் தொடங்கி,அடித்து ஒழுக்கநெறியை கற்பிதம் செய்தது வரை அத்தனையிலும் உன் பாசத்தை கண்டு இருக்கிறேன்....
ஒற்றை கையில் என்னையும்,மற்றொரு கையில் உழைப்பையும் பிடித்து இன்றும் உனக்கென தனி அகராதியை எழுதி இருக்கிறாய் ... சத்தியமாய் சொல்லிவிடமுடியும் கண்ணீரோடு, உன் கால் தடம் பதியாத வயல்கள் நம் கிராமத்தில் இல்லை என, அத்தனை உழைப்புகளை கொட்டி இருக்கிறாய் எனக்காய், களை எடுத்ததில் தொடங்கி,பருத்தி எடுத்து இருக்கிறாய்,சோள தட்டுகளை அறுத்து இருக்கிறாய்,நாற்று நட்டு இருக்கிறாய்,மண் சுமந்து இருக்கிறாய்,கடலை பறித்து இருக்கிறாய்,பணை வெள்ளம் காய்ச்சி இருக்கிறாய்,கள் விற்று இருக்கிறாய்,நெறிமுறையோடு அனைத்து கூலி தொழில்களையும் செய்து இருக்கிறாய், நான் இப்படி குளிர் அறையில் இருந்து பட்டனை தட்டுவதற்காய்...
பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறி விட்டு உன்னை அழைக்கிறேன் தொலைபேசியில்,அம்மா, எனக்கு பிறந்த நாள் மறந்து விட்டாயா என, ஐயோ மறந்தே போய்ட்டேன் குமாரு,நல்லா இரு குமாரு என்றாய்,அத்தனை சந்தோசத்தையும் அடுத்த ஐந்து வினாடியில் அழித்தாய் அம்மா, " இரு குப்பாயி நானும் வந்துடுறேன்,இந்த போன் எப்படி கட் பண்றதுன்னு தெரில,இன்னைக்கு எங்க மண் சுமக்கணும் பள்ளிகூடத்து பின்னாடி இருக்குற ஓடை கிட்டயா"....
ஐம்பது வயதிலும் உன் உழைப்பில் வாழ நினைக்கும் உன் வைராக்கியம் என்கிற கர்வம் தான் நீ எனக்கு ஊட்டிய முதல் மார்பு சீம்பால்...
0 comments:
Post a Comment