Thursday, December 12, 2013

ஏனென்றால் நான் ஆணல்லவா ...



உன்னை ஊரில் விட்டுவிட்டு, திரும்பி வந்து கதவை திறக்கிறேன். முதல் காலடியை எடுத்துவைக்கிறேன்....

வழக்கமாய் அதிகாலை நேரத்தில் நீ என் நெற்றியில் இடும் முத்தங்கள்,

எவ்வளவு சிறியதாய் உண்ணக்கொடுத்தாலும்,போதும் என்று மீதம் வைக்கும் தருணங்களில் நீ கோபித்துகொள்ளும் கோபங்கள்,

குளித்து ஈரத்தில் மிதக்கும் என் தலைமுடியை துடைத்துவிடும் அன்புமிகுந்த அக்கறைகள்,

விடுமுறை நேரத்து மாலை நேரத்தில் உன் கண்கள் பேசும் காதல்கள், தெரிந்தவர்களிடம் பேசும்போதும் என்னை விட்டுக்கொடுக்காமல் நீ பேசும் வார்த்தைகள்,

துவண்டு நிற்கும் தருணங்களில் தோல்கொடுக்கும் உனது கைகள், எதிர்காலம் பற்றிய திட்டமிடலில் உனது நம்பிக்கையான அறிவுரைகள்,

வீடு முழுவதும் நிரம்பிக்கிடக்கும் இத்தனையும் என் முதல் காலடியில் உன்னை தேடுகின்றன,உன் வழியே என்னை வந்து சேர. பாவம் அவைகளுக்கு தெரிய நிச்சயம் வாய்ப்பே இல்லை நீ திரும்பி வர குறைந்தது ஆறேழு மாதங்களுக்கு மேல் ஆகும் என்று.

ஒவ்வொரு அறையாய் சென்று பார்த்தேன் நீ இருக்கமாட்டாய் என்று தெரிந்தும் , மெதுவாய் தண்ணீரை பருகினேன் குடல் மறுத்த போதும், மெதுவாய் படுக்கையில் அமர்ந்தேன்,இதயம் கணக்க தனிமையை போர்த்திக்கொண்டு உன் நினைவில் உறங்க பழகினேன்.

காலை எழுந்ததும் கட்டிபிடித்து உறங்கிக்கொண்டு இருக்கும் தனிமையை பிரித்து எறிந்துவிட்டு மெல்ல அலுவலகம் கிளம்பினேன், உனக்காய் காத்து இருக்கும் அனைத்திடமும் உண்மையை சொல்லாமல், காத்திருக்கும்படி அறையை பூட்டிவிட்டு வந்துவிட்டேன்.

பேருந்து நிறுத்தம் செல்லும் வழியில் உன்னை அழைத்தேன் அலைபேசியில், நான் பேச ஆரம்பிப்பதற்குள் உன்னிடமிருந்து அழுகை சத்தத்தை மட்டும் மொழியாய் அனுப்பிவைத்தாய் என்பக்கம். நீ பெண் என்பதால் எளிதில் அழுது உன் அன்பை தெரிவித்துவிட்டாய்,

நானோ எச்சில் விழுங்குவதையும்,கண்சிமிட்டல்களையும்,உதடுகளை கடித்துக்கொண்டும் பேச ஆரம்பிக்குறேன்,"நல்லா இருக்கிறேன்" என்று அழுகையை மறைத்துக்கொண்டு,....

 ஏனென்றால் நான் ஆணல்லவா....

0 comments:

Post a Comment