Wednesday, December 25, 2013

உடைந்த ஏக்கங்கள்...அன்றைய காலை பொழுது விடிந்தது 15-மார்ச்-2007 என்ற அடையாளத்தை சுமந்து கொண்டு, பாதி கனவின் விழிப்பும் ஏதோ செய்து கொண்டிருந்தது விழித்த பின்னரும்,ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாய் வேகவேகமாய் கிளம்ப ஆரம்பித்தேன், பயணத்திற்கும் தயாராகும் ஒவ்வொரு கணமும் இரு சிந்தனைகள் மனதை துளைத்த வண்ணம் இருந்தன.

ஒன்று, இருபத்து மூன்று வருடங்கள் கட்டப்பட்ட கடிவாளத்துடன் நேர்ப்பாதையில் ஓடி,தனக்கான ஒரு அங்கீகாரத்தை எழுப்பி,அதற்கான சரியான வேலையில் அமர கடந்து இரண்டு வருடங்களாய் சென்னை நகரத்தின் சாலைகளை தேய்த்திருக்கிறேன்,அந்த தேடலை இன்றோடு கைவிட போகிறோமா?. 

மன்றொன்று, அவ்வப்பொழுது பொழுதுபோக்காய் எழுதியதின் பயனாய்,புதியதாய் அமையப்போகும் வழியைத்தேடி பயணிக்கும் வழியின் வலியை சந்திக்கபோகிறோமா? இரட்டை எண்ணச்சிந்தனையின் நடுவே எப்படியோ கிளம்ப தயாராகி கிளம்பிவிட்டேன்,பொழுதுபோக்கிற்காய் எழுதிய தாள்களை சுமந்துகொண்டு புறப்பட்டுவிட்டேன், கடந்த இரு ஆண்டுகளின் பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட பயணம் இப்பயணம், சன்னலோர காட்சிகளில் கண்கள் பதிய,எண்ணங்கள் எங்கோ சுற்றி திரிய பயணப்பட்டேன். 

என் கைகளுக்குள் அடைபட்டிருந்த பாதுகாப்பு அட்டைக்குள் இம்முறை சுயவிவர தாள்களுக்கு பதிலாய் பொழுதுபோக்கிற்காய் எழுதிய தாள்கள், ஒவ்வொன்றாய் படித்துக்கொண்டு செல்லும் வேலையில் வந்து சேர வேண்டிய இடமும் நெருங்கிக்கொண்டு இருந்தது.என்னையும் என் எண்ணங்களையும் சரி செய்துகொண்டு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அந்த பிரபல திரைப்பட இயக்குனரின் இல்லத்தை நெருங்கினேன். 

பெரிய இரும்பு கம்பி கதவுகளை நெருங்கிய சமயத்தில், காவலாளி என்னருகே நெருங்கினார், ஒரு வித பதட்டத்தினை மறைத்துக்கொண்டு, இயக்குனர் சார் அவர்களை பார்க்கணும், அவரை பார்த்து கொஞ்சம் பேசனும் அவரிடம் உதவி இயக்குனரா சேருவதை பத்தி கொஞ்சம் பேச வந்து இருக்கேன் என நான் முடிப்பதற்குள் அவர் பேச தொடங்கினார், 

அவரின் பதிலை ஆவலுடன் கேட்க முற்படுகிறேன், என் அலைபேசி சிணுங்கியது அந்த நொடியில்,அலைபேசியை செயல்பெற செய்யும் முன் அலைபேசி எண்ணை நோக்கினேன், பார்த்த நொடியிலே அழைப்பை துண்டித்தேன் மனதில் முனகியவாறு " ஆமா நேர்முகத்தேர்வுக்கு வா வா அப்டின்னு கூப்பிடுவாணுக, அங்க போனதும் காசுகட்டனும் வேலைக்கு அப்டினுவாணுக, இல்லைனா கேள்விகேட்டுபுட்டு உங்கள அப்புறம் அழைக்கிறோம் அப்டினுவாணுக, இல்லைனா சுயவிவரம் அடங்கிய தாள வாங்கிகிட்டு அப்புறம் கூப்பிடுறோம் அப்டினுவாணுக, ரெண்டு வருசமா தேடியாச்சு ஒன்னும் கிடைக்கல, படிச்ச அந்த வேலையே வேண்டாம்னு தானே இங்க வந்திருக்கோம் இங்க, இப்பவும் நிம்மதியா விட மாட்டானுக".. 

மன்னிக்கவும் ,என்ன சொன்னீங்க அண்ணே என்று காவலாளிய கேட்பதற்குள் மறுபடியும் அலைபேசி கூச்சலிட கோபத்தில் அலைபேசிய முற்றிலும் அணைத்துவிட முற்படும் நொடியில் "அப்பா" என்று எழுத்தை பார்த்த நொடியில் அய்யயோ அப்பா என்று சற்று தொலைவு விலகிவந்து பேச ஆரம்பிக்கிறேன், 

சொல்லுங்கப்பா , எப்படி இருக்கீங்க, என்ன விஷயம் சொல்லுங்க அப்பா... அது ஒன்னும் இல்லப்பா, என்ன பண்ற அப்டின்னு சும்மா நலம் விசாரிக்க தான், இப்போ சின்னபையன் மாமா இருக்காருல அவரு வீட்டுக்கு கோவில் திருவிழாவுக்கு வந்தேன், சும்மா பேசிகிட்டு இருந்தோம், உன்னைபத்தி கேட்டாரு ,அதான் உன்கிட்ட பேசலாம்னு,முக்கியமான விசியம்லாம் ஒண்ணும் இல்லப்பா ,நீ வெச்சிட்டு படிகிற வேலைய பாருப்பா.. ஏதோ நினைவில் அப்படியா வைத்துகொண்டு இருக்கிறேன் அழைப்பை துண்டிக்காமல் ..மறுமுனையில் அவரின் சத்தம் கேட்கிறது.. 


பாருடா சின்னபையா, இந்த பையன் வேலை வாங்கியே தீருவேன் அப்டின்னு இந்த சென்னைல தனியா ஒண்டியா கிடந்து கஷ்டப்பட்டுகிட்டு கிடக்கான், எப்படியும் இந்த கம்ப்யூட்டர் கம்பனில வேலை வாங்கியே தீருவான் என் பையன்,அதுவரைக்கும் யார் சொன்னாலும் மாற மாட்டான். நல்ல பையனுகள பெத்துபுட்டேன் அதான் இப்படி கவலை இல்லாம சுத்துறேன். கொஞ்ச நாளுல என் பையன் எனக்கு கம்ப்யூட்டர் கம்பனில வேலை கிடைச்சுருச்சு, கை நிறைய சம்பளம் அப்டினுகிட்டு ஓடி வருவான், அதை பார்க்குறப்ப என் உயிர் போன கூட தூசுக்கு சமம் ..... 

கலங்கிய கண்களுடன், இணைப்பை துண்டித்துவிட்டு, 

வேகமாய் சற்று முன் வந்த நேர்முகத்தேர்வு அழைப்பு விடுப்பு எண்ணை தொடர்புகொண்டு கூறுகிறேன்,Yes Madam I am on the way to your company.. 

அப்பொழுது காவலாளியின் வார்த்தைகளும் என் காதில் விழுகிறது தொலை தூரத்திலிருந்து "கொஞ்ச நாள் கழிச்சு வா தம்பி, இயக்குனர் இப்போ ஊர்ல இல்ல,திரும்பி வர ஆறு மாசத்துக்கு மேல ஆகும் ... 


எத்தணை இயக்குனர்கள் இன்னும் கணினியை தட்டிக்கொண்டு இருக்கிறார்களோ அப்பாக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்காய்.....

1 comments:

Dhivya Chinnasamy said...

Sambavangalin vulooora pesapadum karuthukal yaavum anubavapattulen, aanaal sambavangal mattum veru vidhamaga nadanthavai....padikkum pozhudhu kadandhu vandha paadhai ninaivin orum...

Post a Comment