Thursday, December 12, 2013

உடைந்த குடைக்கம்பியாய்...
இரவு உறக்கத்தின் நிம்மதியிழந்து, கண்விழித்த காலையில் தன் குடும்பங்களின் தேவையை அங்குமிங்கும் தாவி தாவி பூர்த்தி செய்கிறான், கட்டளையிடாமல் செய்து முடிக்கும் கூலியாளாய். பருக்கைகளை எண்ணி வயிற்றுக்குள் போட்டுக்கொள்ள மட்டுமே மணித்துளிகள் ஆணையிட்டதை நினைவில் கொண்டு,நிஜத்தில் செய்துவிட்டு ஓடுகிறான் -தூக்கிசெல்லும் தொலைதூர வண்டிக்காய்..


பயணச்சீட்டில் செல்லரிக்கும் செல்களாய் திரியும் நடத்துனரிடம் ,சண்டையிட்டும், மண்டியிட்டும், அரிப்பதற்கு முன் தன் சட்டைப்பையில் பிடிங்கிப்போட்டதும் சிரிக்கும் ஒரு ரூபாய் சில்லறையை பார்த்து பெருமூச்சு விட்டு, மூச்சுமுட்ட கூட்ட நெரிசலில் பயணிக்கிறான் பணியிடம் நோக்கி..


முகம் தெரியா வெளிநாட்டு எஜமானின், கண்டகனவுகளையும் , காணாத கனவுகளையும், சாத்தியமில்லா கனவுகளையும், சாத்தியமாக்க, சத்தியமாக்க அங்கும் இங்கும் தேடுகிறான் கணினி வலையில் பிணம் தேடும் கழுகாய்..


இரவுகள் கூட இவனுக்காய் நிற்பதில்லை, கடிகாரத்தின் முட்கள் இவனை விட வேகமாய் ஓடியதுண்டு, மனிதர்கள் தூங்கியிருக்கும், மிருகங்கள் விழித்தெழும்,நிலவொளியில் ஒளிரும் விண்மீன்கள் பார்க்க இவன் நடையிருக்கும் தன் வீடு நோக்கி, உறக்கத்தில் உதடுகளை குவித்து, தொட்டிலில் பால் தேடும் மகனை உற்று பார்த்து புன்னகை உதிர்த்துவிட்டு ,பெருமூச்சு விட்டு, அரைத்தூக்கத்தில் இருக்கும் அவளையும் உற்று நோக்கி சைகையில் சொல்கிறான், நான் பரிமாறி உண்டுகொள்கிறேன் நீ தூங்கவும் என்று..

இப்படியாய் வாரங்களை தாண்டுவான், வாழவேண்டும் என்ற வாழக்கையை தொலைத்து,பிழைத்து போக ஒரு வாய்ப்பை கொடுக்கும் இந்த வாரத்தின் முதல் மற்றும் கடைசி நாளை ,இவனும் வாழ நினைத்ததுண்டு, நினைத்தது மட்டுமே..

உழைத்து பலகியவனல்லவா, உட்கார்ந்திட உடல் சம்மதிப்பதில்லை,காய்கறிகள் வாங்குவதில் தொடங்குகிறான், வாழ்ந்துகொள்ள வழங்கிய அந்த இரண்டு நாட்களில் ,புன்னகைபுரியும் தன்குழந்தை தூக்கத்திலும் முகம் சுளிக்காமலிருக்க அவனுக்கானதாய் தேடி தேடி பதசுவடுகள் பதிக்கிறான்- பளீரென மின்னும் கடைகளில் தொடங்கி, குடிசை வேய்ந்திருக்கும் பெட்டிக்கடைகள் வரை..

தூக்கம் மறந்து கூச்சலிடும் இளங்குருவியை,அங்கும் இங்கும் தூக்கியும், கோமாளியாய் மாறியும் கதைபாடுகிறான் அசைக்கமுடியா பருந்தாய் மாற்ற, பாவம். பாடவும் செய்கிறான் எதை எதையோ பாடலாய் .

தனக்கென தாளாது நிற்கும் ,கனல் ததும்பும் எட்டிபிடிக்க நினைக்கும் மைல் கற்களான இலட்சியத்தையும் தள்ளிவைக்கிறான் பிறகு பார்த்துக்கொள்வதாய்,காய்கறிகள் நறுக்குவதில் தொடங்கி,பாத்திரம் பளிச்சிட வைப்பதுவறைக்கும் சமையலறை சங்கீதங்களை ஏதோ பாடுகிறான் தாளங்கள் இல்லாமலே. சிதறிப்போன சின்ன சின்ன சில்லறைகளை அடுக்குவதுபோல்,வாரம் முழுவதும் சிதறிய பொருட்களை அதன் இடம் கொண்டு சேர்க்கிறான் பத்திரமாய் அலமாரியிலும், மேசைகளிலும். ..

தன்மகன் சுவடு பதித்த வீட்டுதரைகளை அளித்திட மனமில்லாமல் அளிக்கிறான் அத்தனை கிருமிநாசினிகளை கலந்து, தன்மகன் அடுத்த கால்தடம் பதிக்க...

வாழ்ந்துகொள்ள கொடுத்த இரண்டு நாட்களையும் இப்படி கொடுத்துவிட்டு இரண்டாம் நாள் இரவு உணவை மனைவியின் கரங்களில் பரிமாறி சாப்பிட பாவியாய் அமர்கிறான்.

நியாமான வேலைகளை அவள் செய்துகொண்டிருந்தாலும், தனக்கென கேட்கிறான் பரிமாறிவிட்டு செல்ல-அவள் சொல்கிறாள் சைகையில் பாரிமாரி சாப்பிட்டு கொள்ளவும் ....

ஆசைகள் இடிந்ததாய் அமர்ந்து சாப்பிடும் அவனிடம் சொல்கிறாள் -எதை எதையோ உனக்காய் இழந்து வந்து இருக்கிறேன் என பட்டியலிட்டு சொல்லிக்கொண்டே அழுகிறாள், எதற்காக அழுகிறாள் என யூகிப்பதர்க்குள் வாழ்க்கையில் சந்தோசம் தொலைத்தேன், சொந்தங்களை தொலைத்தேன், உணவுபரிமார முடியாமல் போனதற்கு இப்படி கோவிக்கிறாய் என்று, ஏதோ ஏதோ சொல்கிறாள் ,வார்த்தைகளை கொட்டுகிறாள் அழுகையோடு கலந்து, தான் குடும்பத்திற்க்காய் உழைப்பதை...

அவளுக்காய் மட்டுமே வாழ்வதை ,தான் தொலைத்த லட்சியங்களையும், தான் தொலைத்த வாழ்க்கையும் சொல்லமுடியாமல் ,சொல்ல விரும்பாமல் இரவு உணவு நனைக்கா வெற்றுக்குடளுடன்,முகம் புதைத்து கலங்கிய கண்களுடன் படுக்கையறை தாளிட்டு தொங்குகிறான் கயிற்றில், உடைந்த குடைக்கம்பியாய் .....

0 comments:

Post a Comment