Friday, February 21, 2014

கிறுக்கி மவ கிறங்கித்தான் போவா எம்மேல..




சில நேரத்துல எல்லாம் கோவிச்சுகிட்டு இருக்கேனுங்க, இந்த பால போன வருமை என் படிப்பை தின்னு ஏப்பம் விட்டுடுச்சுங்களே, இது இல்லைனா எப்படியாவது மேல வந்திருப்பனுங்களே, என்ன சொல்றது சொல்லுங்க?,அன்னாடங்காட்சி வயித்துல பொறந்ததுக்கு பண்ணையாரு வீட்டு நாயா பொறந்திருக்கனும்னு நினைச்சிருக்கேனுங்க.அது எல்லாமே  அவள பாக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் தானுங்க.

கிழக்கு கண்மாய் ஓரம் சுட்டெரிக்கும் வேகாத வெய்யலிலும்,குத்தவைச்சு குந்தி குந்தி தேய்ந்துபோன இடுப்பு கயித்துல, தண்ணிய கட்டிக்கிட்டு ஆடு மாட்ட மேய்ச்சுகிட்டு காஞ்சி போகும் எங்களுக்கெல்லாம் ஏதுங்க கஞ்சி?, ஆடுமாடுக அது வயிறு நிரையிற வரைக்கும்.சொந்த பந்தம் தொலைச்சு பண்ணயத்துல பாதி வயச தொலைச்சுபுட்டு பக்கியா திரியற எங்களுக்கு ஏதுங்க ஆசை பாசம்லாம்.

காலம் கடந்த பாதியில, காத்தா வந்தாலையா அந்த ஒத்த சாமந்தி நெத்திபொட்டலகி. 

“உங்க ஆடுமாடு மேயாம என் ஆடுமாட்ட கெடுக்குதுங்க, கொஞ்சம் தனியா ஓட்டி போரிகலா, இல்ல நான் போகவான்னு” 

எடுத்த எடுப்புல பட்டுன்னு கேட்டுபுட்டுவ அவ தானுங்க.
“நீ எந்த ஊருகாரி இங்க வந்து அதிகாரம்பண்றவ?”, 

கேட்ட கேள்விக்கு நறுக்குன்னு பதில போட்டவ. 

“இந்தாரு அவ இவனு சொன்னீகன்னா பண்ணையாருகிட்ட சொன்ன அவ்ளோ தான்”. 

சொல்றப்பவே நம்ம சாதி இவ தான் புரிஞ்சுபுட்டேன்.ஆச பாசமா பேசுலாம்னு அடங்கி போக ஆரம்பிச்சேனுங்க.

“கொஞ்சம் தண்ணி இருக்குமுங்கலா?, இந்த முரட்டு கருவாயன் முரண்டு புடிச்சு பறந்து வர முந்தானைல முடிச்சுவைக்குர தண்ணிய மறந்துட்டு வந்துட்டேனுங்கன்னு,”

கொம்பை காட்டி மிரட்ட கருவாயனும் பறந்தடிச்சு ஓடுவான், அவ கோவ கண்ணா பாத்து, இத்தன வருசமா இடுப்புகையித்துல கிடக்குற தண்ணிக்கு கூட நல்ல நேரம் வருது நமக்கு வர மாட்டிங்குதே என்னத்த செய்ய, கூவிகிட்டே தண்ணியகொடுக்க. 

“நாளைக்கு வாங்கிக்கோங்க, மருவாதை தெரிஞ்சவ நானு பாத்துகிடங்கன்னு”, வேயக்கானம் பேசுனவ அவ.

“நீங்க எந்த ஊருக்காரங்கன்னு கேட்டதுக்கு, தெரிஞ்ச என்ன செய்ய போறீக?., பொண்ணு பாக்கவா வரப்போறீங்கன்னு”

எகத்தாளம் பேசிபுட்ட போனவள. சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன், இந்த நக்கல் எல்லாம் என்கிட்டே வேண்டாம் தாயி, உன் சோலிய பாருன்னு ஒரு பக்கம் கோவமா சொன்னாலும், எதோ சொகமாத்தான் கிடந்தது நெஞ்சுக்குள்ள அவ பேசின எகத்தாளம் எல்லாம். காலம் கொஞ்சம் கொஞ்சமா காத்துல பறக்க என்பக்கம் வந்தா காதலோட, அட நிசமாத்தான் சொல்றேனுங்க.

கல்லப்பருப்ப தொலிச்சு முந்தானைல முடிச்சு வந்தா எனக்காக. கடிச்சுக்க கருப்பட்டியும் கொண்டு வந்தா. 

“இந்தாருங்க தெரியாம கொண்டு வந்து இருக்கேன், பண்ணையாருக்கு தெரிஞ்சா  ஊருக்கு கிளம்புன்னு ராவோடு ராவ ஊர்பக்கம் அனுப்பிவைசிருவாக. ஆத்தாளும் அப்பனும் கொன்னே போற்றுவாக என்ன, கஞ்சிக்கு தவிச்சுகிடக்குரப்ப காதல் கேட்குதாடின்னு.”

அவ வார்த்த கேட்டு கண்ணுகலங்க,”எதுக்கு அழுரீகன்னு” அவ கேட்க கருவேலங்காட்டு கருக்குருவிக கூட கத்துரத நிருத்திபுடுமுங்க. அத்தன காதல கண்ணுல காட்டிபுட்டு, “உன்ன எவ காதலிப்பானு” பொய் சொல்லி ஓடிப்போரப்ப எல்லாம் உடம்பு முழுசும் அத்தனை சொகம் சொக்கவைக்கமுங்க.ஆடு மாடு மேய்க்கவா பொறந்தோம்னு நினைச்ச மனசுகூட, குளிர்ந்துபோகுமுங்க அவ முகத்த பாத்து, அவ மடியில படுத்தா.”எப்போ பொண்ணு பாக்க வரீக எங்க ஊருக்குன்னு” அவகேட்க, நான் வரமாட்டேன்னு சொல்ல,அழுதுகிடக்கும் அவமுகத்த தொடைச்சு சும்மா சொன்னேன்னு சொல்லும்போதும் மனசு கனமா கனக்குமுங்க.

அவளக் கானத இந்த ரெண்டு நாளும் சொடுங்கிப்போயி நடந்து தவிச்சேனுங்க.உச்சி மரமேறி, தூரத்து அவ உருவம் தேட தேட, மனசுடைஞ்சு பாவி வெய்யில்ல காஞ்சிப்போனேன் கருவாடா.பாவி மக்கா ஆட்டை பாதியிலே விட்டுபுட்டு பண்ணையாரு வீடு தேடி பறந்து போனேன் என் உசிர தேடி. அவ முகம் பாத்துபுட்டா அத்தனையும் மறந்துபோவும், முல்லுதச்ச காலுகூட முழுசா மாறிப்போவும். தூரத்து பண்ணையாரு வீட்ட பாக்கும்போதே படபடக்குது பாவிமனசு அவமுகத்த பாத்துபுட. மாட்டுகொட்டாயி தாண்டி மதில் மேல ஏறிபார்த்தப்ப அப்படியே நொறுங்கிப்போச்சி மனசு சுக்கு சுக்கா. பாவி மக்கா, பச்ச புள்ளைய, பல்லு இல்லா பண்ணையாருக்கு பங்கா கொடுக்க பாக்குறீங்களே. அழுதழுது வீங்கிப்போன அவ முகம் பாக்கவா பல மைல் பறந்துவந்தேன்.

எட்டிகுதித்து அவ முன்ன நின்னேன், எட்டிகரம்பிடித்து தைரியமா சொன்னேன், என் பொஞ்சாதி இவதான்னு. முகம்மலர்ந்து அவகொடுத்த முத்தத்துல அத்தனை பேரையும் அடிச்சு சாய்ச்சேன். எனைக்காக்க வந்த சாமி நீதான்னு அவ சொன்ன வார்த்தைல, என் உசிரு நீ தான்னு கரம் பிடிச்சு காத்தா பறந்தோம்.

நான் மேய்ச்ச ஆடு வீடுபோயி சேர, நான் போயி சேர்ந்தேன் அவளோட பல ஊரு.ஐஞ்சு புள்ள பெத்துபுட்டோம் ஆசைக்கு ஒண்ணா..அவ மடியில நான் தூங்க, கிறுக்கி மவ கிறங்கித்தான் போவா எம்மேல..

1 comments:

vasan said...

ஆடு மாடு மேய்க்கைல மானைப் புடுச்ச மச்சானோ!!

Post a Comment