Tuesday, January 7, 2014

ஒன்றுமில்லை, உன் அன்பைத்தாண்டி..


இந்த உலகம் தினந்தோறும் ஏதாவது ஒன்றை நமக்கு கற்பிதம் செய்ய மறப்பதில்லை என்பதை உணர்கிறோம், எப்பொழுதெல்லாம் நம் வாழ்க்கையின் நிகழ்வுகளை உற்று நோக்குகிறோமோ அப்பொழுதெல்லாம்.

குழந்தையை குளிப்பாட்டியதும் இதமான சூரிய ஒளியில் காண்பிக்க வேண்டும் என்பது பழங்கால பழக்க வழக்கங்களில் ஒன்று. அதற்காக தினமும் நான் குடியிருக்கும் வீட்டின் முன்பு உள்ள வீதியில் சற்று நடப்பது வழக்கம் என் குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும். அப்படி தான் இன்றும் நடந்தேன் அங்கும் இங்கும் வேடிக்கை காட்டிக்கொண்டு.

பார்க்கும் ஒவ்வொரு பொருளும் நிகழ்வும் அவனுக்கு புதிதாய் தோன்றும். அவன் ரசிப்பதை அவன் சிரிப்பில் அறிவேன். அவன் வெறுப்பதை அவன் அழுகையில் அறிவேன். அவன் ஆர்வத்தை அவன் துள்ளி கீழ் இறங்க முயற்சிக்கும் அவனது செய்கையில் அறிவேன். இந்த தருணங்களில் நானும் உலகத்தை ரசிக்க கற்று கொண்டு இருக்கிறேன் என்பதே உண்மை.

வீதியின் ஓரம் இருக்கும் ஒற்றை மரத்தடியில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். அவனை பார்த்த மறு நிமிடமே அறிய முடியும் அவன் ஏழ்மையில் இருக்கிறான் என, ஏனென்றால் அவனது உடையும், சோகம் தேய்ந்த முகமும், வரண்ட தலையும், அழுக்கு படிந்த கால்களும், மாற்று சோடி செருப்புகளை அணிந்த அவனது பாதமும் உணர்த்தின அவனது நிலையை தெளிவாய்.

அதுமட்டும் அல்லாமல் ஒரு மூன்று சக்கர தள்ளுவண்டி அவன் அருகில். தள்ளுவண்டி சுமந்து கொண்டிருந்தவைகள் யாதெனில் பழைய பொருட்கள், பழைய பிளாஸ்டிக், பழைய பால் கவர், பழைய குளிர்பான பாட்டில்கள், பழைய மதுபாட்டில்கள். அவனது உருவம் என்னை ஈர்த்ததை விட எனது குழந்தையை அதிகமாய் ஈர்த்தது போல.

அவனது அருகே போகவேண்டும் என அடம்பிடித்தான் எனது மகன். ஏதாவது உதவி செய்யனும் என்ற எண்ணத்தின் தோரணையில் அவனருகே சென்றேன்.

"தம்பி பழைய பிளாஸ்டிக் எங்க வீட்ல இருக்கு வேணும்னா எடுத்துக்கொள்" என்றேன்.

"இல்லைங்க அண்ணா நாங்க வீதியில் கிடக்குறத மட்டும் தான் எடுப்போம், வீட்டுல இருக்குறத வாங்குறது இல்ல". என்றான்

 "ஏன் வாங்க மாட்ட வீட்ல இருக்குறத எல்லாம்?" என்றேன்.

 "வீட்ல இருக்குறத வாங்கின அதோட எடைக்கு தகுந்தமாதிரி காசு கொடுக்கணும், அதான் வீதில, தெருவோரத்துல கிடக்கறத மட்டும் எடுப்போம்."என்றான்.

"அப்படியா, எனக்கு காசு வேண்டாம் எடுத்துக்க" என்றேன்.

"வேண்டாம் அண்ணா" என்று திட்டவட்டமாய் மறுத்தான், அவனை கட்டாயப்படுத்த விருப்பம் இல்லாமல் விட்டுவிட்டு அவனை பற்றி தெரிந்து கொள்ள முனைந்தேன்.

"நீ படிக்கலையா தம்பி?" என்றேன். அவனது பதில் கொஞ்சம் இதயம் கணக்க வைத்தது.

"நாலாப்பு படிக்கிறப்போ அப்பா இறந்து போயிட்டாரு, ஐந்தாவது வரை படிச்சேன், அம்மா கஷ்டப்பட்டத பார்த்து அம்மாகிட்ட எனக்கு படிக்க விருப்பம் இல்லைன்னு சொன்னேன், அம்மா படிடா படிச்சு பெரிய ஆளாகுட அப்டின்னு சொன்னாங்க. மறுபடியும் பள்ளிக்கூடம் போனேன், ஆனா பழைய மாதிரி படிப்பு ஏறுல. போகமாட்டேன்னு அடம் பிடிச்சதும் அம்மா அடிச்சு பார்த்தாங்க. நான் போகல.

கடைசியில அம்மாகூடவே பழைய பொருள் பொறுக்க வந்துட்டேன்". சிறிது நேரம் மௌனம் காத்தேன். அடுத்த கேள்வி கேட்க மனது தடுமாறியது. பிறகு அவனே தொடர்ந்தேன்.

 "அம்மா, இப்போ மகாகவி தெரு இருக்குல அங்க போயி இருக்காங்க பழைய பொருள பொறுக்க, அதான் நான் இங்க உட்கார்ந்து இருக்கேன் அவுங்க வர வரைக்கும்.” என்றான்.

"அண்ணா, சரி, குழந்தை பையனா பொண்ணா?, பேரு இன்னா"?. உங்க குழந்தையா? என்று அடுக்கடுக்காய் கேள்விகளை தொடுத்தான்.

"என் குழந்தை தான் தம்பி, பையன் பேரு "யாழின்". என்றேன்.

சிரித்துகொண்டே குழந்தைய இங்க கொடுக்கிறீங்களா என்றான்.

ஏதோ ஒரு தயக்கத்தில் ஏதாவது காரணம் சொல்லிவிட்டு கிளம்பிட தோன்றிய எண்ணத்தை தாண்டியும் மனிதம் என்னுள் குழந்தையை அவனிடம் கொடுக்க தூண்டியது.

குழந்தையை அவன் கையில் கொடுத்ததும் அவனது முகத்தில் அத்தணை சந்தோசம், சிரிப்பு, அவனுக்கு தெரிந்த எத்தனையோ செய்கைகளை காட்டி சிரிக்க வைத்தான் குழந்தையை.

தூரத்தில் அவன் அம்மாவின் குரல் ஒலித்தது, ஒலித்ததும் அவசரமாய் என்கைகளில் குழந்தையை ஒப்படைத்துவிட்டு, அவனது கால்சட்டை பையில் கையை விட்டு ஒரு சாந்து பொட்டை எடுத்து குழந்தையின் நெற்றியில் வைக்க முயற்சித்தான். வேண்டாம் தம்பி, இதெல்லாம் இவனுக்கு வைச்சு பழக்க படுத்துள, அதானால வேண்டாம் என்றதும், சரிங்க அண்ணா நீங்க வைக்கிறப்ப வைங்க, இந்தாங்க வைச்சுக்கங்க என்று திணித்துவிட்டு ஓடினான் தள்ளுவண்டி அருகே.

இவற்றை எல்லாம் தூரத்தில் இருந்த கவனித்த எனது உறவுக்காரர் எனது அருகே வேகமாய் வந்து, என் கையிலிருந்த சாந்து போட்டு டப்பாவை பிடுங்கி எறிந்தார். கண்டதெல்லாம் பொறிக்கு கொண்டு வந்து கொடுக்குறாங்க அதை எல்லாம் வாங்கி வைச்சுகிட்டு என்றார்.

அவன் என்ன நினைப்பானோ, அவன் சென்று இருக்க வேண்டும் என்று திரும்பி பார்த்தேன்.

அத்தணை வலியோடு ஓடிவந்து சாந்து பொட்டு டப்பாவை எடுத்துகொண்டு அவன் உதிர்த்துவிட்டு போன வார்த்தை என் உறவுக்காரரை மட்டும் அல்ல என் மனதையும் நோறிக்கிவிட்டு போனது.

 "பொறுக்குகிற பொருளையெல்லாம் குழந்தைகிட்ட கொடுப்பேனுங்களா, இது என் தங்கச்சி பாப்பாவுக்காக வாங்கினது".

சொல்லி முடித்துவிட்டு அவன் தள்ளுவண்டியில் ஏறி மிதியடியை மிதிக்க ஆரம்பித்ததும்

"அழ ஆரம்பித்தான் எனது மகன் கைகளை நீட்டி சிறுவன் செல்லும் திசையை நோக்கி"..

தேம்பி தேம்பி அழத்தொடங்கினான், சிறுவனின் பிம்பம் எனது மகனின் பார்வையில் மறைய மறைய.



                           ஒன்றுமில்லை உன் அன்பைத்தாண்டி ...


0 comments:

Post a Comment