Monday, January 6, 2014

ரகசிய குறிப்பேட்டிலிருந்து...


அழகிய நெடு நீள மரங்கள், நெடு நாட்களாய் பெய்த மழையில் சற்று தாழ்வான பள்ளத்தில் நிரம்பி கிடக்கும் கருப்பு நிற மழை நீர், மழைநீரோடு உறவாட எண்ணம் கொண்டு தேங்கிய மலை நீரில் குதித்துவிட்ட மரத்தில் நிலைத்திட தயங்கிய இலைகள், இத்தணைக்கும் மத்தியில் மரத்தில் செய்யப்பட்ட பழைய இருக்கை.

மெதுவாய் இருக்கையில் அமர முயற்சிக்கையில் அறிந்துகொண்டேன், மனிதன் மட்டும் காதல் எனும் உணர்வை அனுபவிப்பதில்லை மரங்களும், இலைகளும் தான் என. மன்னித்துவிட கூறிவிட்டு இருக்கையில் எனக்கு முன்பே உறவாடிக்கொண்டு இருக்கும் இலைகளை நகர்த்திவிட்டு அமர்ந்தேன். கடிகார முல்லை உற்று நோக்கினேன், நேரம் மாலை ஆறு மணி ஆகிவிட்டதை உணர்த்தியது. பாதையை உற்றுநோக்கி கொண்டிருந்தேன் ஏதோ யோசனையில்.

நீண்ட நேரத்திற்கு பிறகு அவளது உருவம் என் கண்களில் பதிந்தது தூரத்து பார்வையில். எச்சிலை விழுங்கிக்கொண்டு பேச தயாராகி கொண்டிருந்தேன். அவள் உருவம் எனது விளியருகே வருவதை உணர்ந்த்த தருணத்தில் சற்று நிமிர்ந்து அமர்ந்து இருக்கையில் சாய்ந்துகொண்டேன்.

அருகில் வந்தாள்,  அமைதியாய் அமர்ந்தாள் அருகில் தெளிவில்லா சிந்தனையுடன். "அப்புறம்" என்று ஆரம்பித்தாள் குனிந்த தலை நிமிராமல். "நீ தான் சொல்லணும்" என்ற வார்த்தையை நான் முடித்த நிமிடத்தில், "ஏன் உன்னிடம் ஏதும் இல்லையா சொல்வதற்கு" என்று நிமிர்ந்து நின்றாள் வார்த்தையிலும், நிஜத்திலும்.

முப்பது வருடம் பேசி கற்றுக்கொண்ட வார்த்தைகள் அப்பொழுது மறந்து ஊமையாகி நின்றன. வார்த்தைகள் ஊமைகள் ஆகிய தருணத்தில் பார்வையை மட்டுமே அவளது கேள்விக்கு பதிலாய் சமர்பித்தேன். "ம்ம் பதில் சொல்லு" என்றாள். "இல்லை" என்று கூறியதும் கன்னத்தில் அரைந்தாள் அழுதுகொண்டே.

முதல் முறை தொட்டாள் அரைதலின் வழியாக அந்த ஒருவருட புரிதல் பயணத்தில். "சரி இப்பொழுது என்ன செய்ய வேண்டும் உனக்காய்" என்றாள் கலங்கிய கண்களுடன். "நட்புடன் இருக்கலாம் என்ற சினிமா வசனங்களை நான் பேச தயாராக இல்லை உன்னிடம், காதல் என்ற புது வட்டமும் வேண்டாம், நட்பு என்ற பொய் வட்டமும் வரைந்துகொள்ள ஆசைப்படவில்லை நான், இனி நீ என்னுடன் பயணிக்க வேண்டாம் என் எழுத்தின் ரசிகையாய்" என்று முடித்ததும், வெடித்து அழுதுகொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள் சில காகிதத்தை என் கைகளில் திணித்து விட்டு. பிரித்து படிக்கிறேன் ஒருவித நடுக்கத்துடன்.



8-oct-2009
9.14 pm
அன்புள்ள உனக்கு,

நான் ஒரு புத்தக பைத்தியம் தான் இல்லை என்று பொய்யாய் கூற விருப்பமில்லை, ஆனால் அந்த நிகழ்வு தான் உன்னை எனக்கு அறிமுகப்படுத்தியது. வாழ்க்கையை சீர்படுத்தும் ஒப்பற்ற வழியை தேடி தேடி ஞானத்தை பெற்று கொள்ள ஏங்கிய பயணத்தில் தான் உன் எழுத்துகளை கண்டேன்.

இயல்பாய் பயணிக்கும் உன் எழுத்துக்களுடன் நானும் பயணித்தேன். எழுத்துகளை கொட்டிய உன்னிடம் ஏதாவது பேசி பேசி, எழுத்தை படைத்தவனக்கும் எனக்கும் தூரங்கள் இல்லை என்று அனைவரிடமும் கூறி பெருமை கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு தான் உன் அத்தணை எழுத்துகளிலும் என் எண்ணங்கள் இருக்கும் பின்னூட்டமாய்.

உன் எழுத்துகளுக்கு கொட்டி இருக்கும் அனைத்து பின்னூட்டத்தை போலவே என் பின்னூட்டத்தையும் சராசரியாகவே எண்ணி, எனக்கும் மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு என்று முடித்து இருப்பாய். அப்பொழுதெல்லாம் அமர்ந்து யோசித்திருக்கிறேன் சராசரியாய் இருக்ககூடாதென்று. அதன் பிரதிபலிப்பாய், உன் கட்டுரைபற்றிய கருத்துகளுக்கு பதிலாய் " I need help, this is my mail id ******@gmail.com" என்ற பின்னூட்டத்தை அனுப்பிவிட்டு ஓராயிரம் முறை மின்னஞ்சலை பார்த்து கொண்டு இருந்தேன்.

 உனது மெயில் வந்த அந்த தருணத்தில் அத்தனை சந்தோசத்தில் என்னைப்பற்றி விவரத்தை எழுதி அனுப்பினேன், நீ சற்றும் யோசிக்காதவானாய் பதில் அனுப்பினாய் "என்ன உதவி வேண்டும்" என்று ஒற்றை வார்த்தையில். காரணங்களை தேடினேன், தேடினேன், உன் ஒற்றை பதில் என்னை சரியான காரணத்தை தேர்ந்தெடுக்க வைத்தது..

யோசனையின் முடிவில் அனுப்பினேன் உன் ஒற்றை கேள்விக்கு பதிலாய் " நான் இன்னும் 6 மாதத்தில் வேலை தேட போகிறேன், உங்களைபோன்று பொறியியல் தான் படிக்கிறேன், அதற்காக தான் எப்படி தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை தான் கேட்க விரும்புகிறேன் என்று" முடித்தேன்.

நீயும் ஏதோ சில புத்தகங்களை கூறிவிட்டு, படித்தால் போதும் என்று முடித்தாய் உரையாடாலை. இப்படி பல காரணங்களை உருவாக்கினேன் உரையாட. தேவையான அளவே பேசும் உன்னை போன்று இல்லை உன் எழுத்துக்கள், அவைகள் ஆயிரம் பேசின சமுதாய சிந்தணை, நட்பு, பாசம், காதல், தனிமை , மரணம் என அணைத்து வாழ்வியல்களையும்.

அன்று ஒருநாள் உன்னிடம் பேசியே பார்க்க வேண்டும் என்ற ஆவலில் மெயில் அனுப்பினேன் நேர்முகத்தேர்விற்கு செல்வதாகவும், ஏதாவது உதவி தேவைபட்டால் உங்களை அழைக்க வேண்டும் என்றும், அழைபேசி எண் வேண்டும் என கேட்ட பொழுது மறுத்த நீ, சிறிது நேரத்தில் கொடுத்தாய்.

அன்று மதியம் நேர்முகத் தேர்வில் இருப்பதாய் கூறி உன்னிடம் பேசி விடவேண்டும் என்று முடிவு கொண்டவளாய் நிமிர்ந்தேன். அத்தணை நடுக்கம், உன் தெளிவான எழுத்துகளை போன்று உன் வார்த்தைகள் இருந்துவிட்டால் எப்படி பேசுவது என்று எண்ணிக்கொண்டே பல குறிப்புகளை எடுத்தேன்.

கடைசியில் உன்னை அழைத்தேன் ஒரு வித தைரியத்துடன்.

"ஹலோ" என்றாய்.

நானும் பதிலுக்கு "ஹலோ" என்றேன்.

"சொல்லுங்க என்ன விசயம்" என்றாய்?.

முதல் சுற்றில் வெற்றி பெற்றதாகவும், இரண்டாம் சுற்றி எப்படி அணுகுவது என்றேன் போலியாய், நீயும் ஏதோ பேசினாய் எண்ணை எப்படியாவது வெற்றி பெற செய்துவிட வேண்டும் என்று, அத்தணை முயற்சிகள் உன் பேச்சில். அணைத்தும் ரசித்தேன் ஏமாற்றுகிறோம் என்ற குற்ற உணவில்.


அப்படி தான் ஆரம்பித்தது உனக்கும் எனக்குமான நிகழ்வுகள். நெற்றிப்பொட்டில் அடிப்பது போன்று தான் பேசினாய் எப்பொழுதும் தெளிவாய், இயல்பாய், கண்ணியமாய்.

இந்த இயல்பான நிகழ்வுகளை தாண்டியும் உன்னோடு பயணிக்க வேண்டும் என்ற ஆவலில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் போலியாய் உருவாக்கினேன். எழுத்துகளை தாண்டியும் உன்னோடு பயணிக்க தோன்றிய எண்ணங்களின் பிரதிபலிப்பு தான் இந்த செயற்கையான நிகழ்வுகளை உருவாக்கும் நிகழ்வுகள் அரங்கேறின..

எழுத்து எண்ணம் செயல் நீ என ஆகும் தருணத்தில் உணர தொடங்கினேன் உன்னை என் அருகாமையில் இருக்க வைத்துகொள்ளும் முயற்சிகள் என்னுள் தொடங்குகிறது என. இருந்த நிலையிலும் அணைத்து மாற்றங்களையும் மாற்ற முயற்சித்தேன். இதே மாற்றங்கள் உன்னுள்ளும் நிகழும் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் அன்று உன்னை அழைத்தேன்..

உன்னை பிடித்து இருப்பதாய் முதன் முறையாய் அழைபேசியில் கூறினேன்.கூறிவிட்டு உன் பதிலுக்காய் காத்திருந்த அந்த வினாடியில் தடுமாறிய இதயம் தன்னுள் இயல்புக்கு மீறிய அளவில் வெடித்தது பலமுறை சில நொடிகளிலேயே...

வார்த்தை ஏதும் கூறாமல் துண்டித்தாய் அழைப்பை. இமைகள் விலக, கண்கள் அங்கும் இங்கும் சுழன்று கலங்க ஆரம்பித்தன.அழைபேசியில் உனது எண்ணை உற்றுபார்த்துகொண்டே செயலற்று போனேன், மூலையில் எண்ணங்கள் தோன்றி மறைந்துகொண்டே எண்ணை செயலற்று ஆக்கின. தவறு செய்ததாய் உணர்ந்த தருணத்தில் இருண்டு போனது என் எண்ணங்களும்,என் நினைவும்..

மீண்டும் முயற்சித்தேன், அழைபேசி அணைத்துவைக்கபட்டு இருந்தது.பலமுறை முயற்சித்தேன். மூன்று நாட்களும் தனிமை என்னை தின்றது, தின்றதின் மிச்சத்தை நீ அனுப்பிய அந்த குறுந்தகவல் தின்றது. .


' உன்னிடம் இருந்து சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை, நீ தவறான பாதையில் பயணிப்பதாய் உணர்கிறேன், திரும்பி போகவேண்டும் என எதிர்பார்க்கிறேன், என்னுடைய தவறு இதில் இருப்பதாய் நீ உணர்ந்தால் அதற்காய் என்னை கேள்விகள் கேட்கலாம்.' என்று முடித்து இருந்தாய்..

கேள்விகள் கேட்க சொல்லி இருக்கிறாய் குறுந்தகவலில், நிச்சயம் வருகிறேன் நாளை மாலை ஆறு மணிக்கு, உண்மை பேசும் உன் விழிகளிடம் மட்டும் பேச வேண்டும் நான்.



இப்படிக்கு,
உன் நிழல் ரசிகை.


கண்கள் கலங்க படித்துவிட்டு வானம் உற்று நோக்கிக்கொண்டு என்னுள் கேட்க ஆரம்பிக்கிறேன் "காதல் என்றால் என்ன?".




0 comments:

Post a Comment