Monday, January 27, 2014

மெர்சலாயிட்டேன்னு நினிச்சியா?..எப்பொழுதெல்லாம் நமது நிகழ்காலத்தில் சலிப்பு தட்டுகிறதோ அப்பொழுதெல்லாம் சிறிய மாற்றத்தை நோக்கி பயணிப்பது என்பது இயல்பான ஒன்றே. அதுபோன்ற வகைப்படுத்தப்பட்ட மாற்றங்களில் சில வகைகள் தான் நண்பர்கள் சங்கமம், சினிமா, சுற்றுலா, தேநீர் விருந்து, மதிய விருந்து...

நண்பனை காண நேற்று செம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். எப்பொழுதும் நாம் காத்திருக்கும், நமக்கு தேவையான பேருந்தை தவிர அத்தனையும் கடந்து போகும் நமது பேருந்து நிறுத்தத்தை. அப்படி தான் சலித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தேன்.

"நைனா, சைதாபேட்டைக்கு இன்னா பஸ் போகும்?" சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பினேன், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மனிதர். வேஷ்டி சட்டை அணிந்திருந்த அவர் சற்று தடுமாற்றத்துடன் அருகில் நின்று கொண்டிருந்தார். அவரைப்பற்றி யூகிப்பதற்கு முன்பே அவரது தள்ளாடிய நிலை உணர்த்திவிட்டது, மது அருந்திருக்கிறார் என்பதை.

என் வாழ்க்கை பயணத்தில் பல மனிதர்களை சந்தித்து இருக்கிறேன் இது போன்று நிலையில் இருக்கும் மனிதர்களை. அதாலால் அவர்களை ஒதுக்குவதில்லை எப்பொழுதும்.

மெதுவாய் பக்குவமாய் கூறுகிறேன் 5A பேருந்து சைதாபேட்டைக்கு போகும் என்று.

“சரி நைனா, என்னாண்ட பொஞ்சாதி சொல்லுச்சு 5A போகும்னு, அவகிட்ட இன்னாத்துக்கு பேச்சு வைச்சுகினு.அதுக்கு தான் அப்பால இருந்து நின்னுகிட்டே இருக்கேன் யாரண்டையாவது கேட்டுகினு ஏறிக்கலாம்னு.” ஓ அப்படீங்களா?..

ம்ம் 5A பஸ் போகும். அவுங்க சொன்னது சரி தான். அவரே பேச ஆரம்பிச்சார், குழந்தைய போல ஒன்னு விடாம ஒப்பித்து கொண்டே இருந்தார்.

முந்தாநாளு வந்தேன் நைனா இங்க பெரியப்பா வீட்டாண்ட. இன்னாத்துக்கு வந்தேன் தெரியுமா?.. ஊடு கட்டுராங்கல்ல அதுநாண்ட கம்பி கட்டுறது, கலவை கலக்குறது வேலை பாக்குறேன் நைனா. அப்டியே அடிச்சு கிடாசி போட்ட மாறி வலிக்கும் உடெம்பெல்லாம். வலிக்கோ சொல்ல எதுனாதும் குடிச்சா தான கம்முனு இக்கு உடம்பு, அதால குடிச்சேன்.பொஞ்சாதி இருக்கல்ல அவ திட்டிகினே இருக்கா. அதா அடிச்சு போட்டுன்னு வந்திட்டேன் இங்க பெரியப்பா வீட்டாண்ட.

வெறும் வார்த்தைக்கு அப்டிங்களா அப்டின்னு மட்டும் கேட்காம, குடிக்கிறது அவுங்களுக்கு பிடிக்கல போல இருக்கு அதான் திட்டி இருப்பாங்க அப்டின்னு பளிச்சுன்னு சொன்னேன்.

அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு. இன்னத்தா சொல்ற நீ, குடிச்சா தப்புன்னு என்னாண்ட சொல்றியா?.எவன் குடிக்கல சொல்லு?.இந்தா நிக்குறானுகளே இவனுங்க யாரும் குடிக்கலையா?.இன்னாத்த பேசுற நீ?.

கோபமா கேட்டவரு என்ன நினைச்சாருனு தெரியல, சத்தமா சிரிச்சாரு. மறுபடியும் பேச தொடங்கினாரு.

இன்னாத்துக்கு அதெல்லாம், first நீ இன்னா பண்ற?. படிச்சுகினு இருக்கியா?. இந்தா பஸ்காருனுங்க இன்னா பண்றானுங்க. ஒரு பஸ்ச கூட காணோம்..

பேசிக்கொண்டு இருக்கும்பொழுதே அவரது அழைப்பேசி ஒலிக்க தொடங்கியது, அவர் தள்ளாடிக்கொண்டே பார்த்துட்டு அழைப்பை ஏற்கவில்லை. மறுபடியும் ஒலித்தது துண்டித்தார். துண்டித்துவிட்டு மறுபடியும் என்னுடன் பேச ஆரம்பித்தார்.

பொஞ்சாதி தான் கால் பண்றா. இன்னாத்துக்கு கால் பண்றா?, குடிச்சு செத்துபோ ன்னு சொன்னா என்கிட்டே அப்போ, இப்போ இன்னாத்துக்கு கால் பண்றா?.. மறுபடியும் ஒலித்தது, இந்த முறை பதிலளித்தார். தெரியாமல் loud speaker on செய்து விட்டு பேச ஆரம்பித்தார்.

" இன்னாத்துக்கு சும்மா சும்மா தொல்ல கொடுக்ற, "ஏய்யா, இன்னா பண்றா ஊட்டாண்ட வாராம. மகேஷ் அழுதுக்கினே கிடக்கான், உன்னாண்ட இன்னாத்த சொன்னேன் குடிக்க வேணான்னு தானே, அப்பாலே ஊட்டாண்ட வந்து சேர்லனா கண்ணாலே ரெண்டு பேரையும் பாக்க மாட்ட, ஆமா சொல்லிபுட்டேன்."

"அய்ய வந்துக்கினு இக்குறேன், இன்னாத்துக்கு கத்திக்குனு இக்குற. இந்தா சைதாபேட்டை பஸ்க்கு தான் காத்துக்குனு இக்குறேன். "

அழைப்பை துண்டித்து விட்டு "நைனா, இம்மா நேரம் ஆகும் வரதுக்கு, வேறு எதனாவ்து பஸ் இருக்கா?."

"இருக்குங்க.இதோ இந்த பஸ்கூட போகும்". என்று கூறி முடித்ததும் கிளம்ப ஆரம்பித்த பேருந்திற்கு முன் போயி நின்றார் தடுமாறியபடி, பேருந்தும் நகர ஆரம்பித்தது, பேருந்தின் முன் நிற்கும் அவரை பிடித்து இழுப்பதற்கும், பேருந்து நகருவதர்க்கும் சரியாக இருந்தது. ஒருநிமிடம் அதிர்ந்துவிட்டேன். வியர்த்துவிட்டது. பேருந்தில் இருப்பவர்கள், ஓட்டுனர், நடத்துனர், அணைவரும் அவரை திட்டுவதுடன் நில்லாமல் அடிக்கவும் வந்து விட்டனர். சாகுறதா இருந்தா வேற பஸ்ல போயி விழு அப்டின்னு திட்டினார்கள்.

ஒருவழியாய் சமாதானப்படுத்தி பேருந்தை அனுப்பிவைத்துவிட்டேன். பேருந்து கிளம்பிவிட்டது.

இன்னா நைனா, மெர்சலாயிட்டேன்னு நினிச்சியா?..இன்னாத்துக்கு பயந்துக்கினு, எவனும் ஒன்னியும் பண்ண முடியாது.பொஞ்சாதிக்கு தெரிஞ்சிது இவனுகள வெட்டிபுடுவா. இன்னா நினைசுக்கினு இருக்கானுக.?.

சண்டையிடும் வரை மட்டுமே கோபங்களும், தவறுகளும். எப்பொழுது சமாதானம் நிகழ முயற்சிக்கிறோமோ அப்பொழுதே காதல் வந்து ஒட்டிக்கொள்ளும் கெட்டியாய் நம்முள். காதலை போன்று அழகிய வார்த்தையும் இல்லை இவ்வுலகில் உள்ளங்களை இணைக்க. காதலை போன்ற அசுர வார்த்தையும் இல்லை இப்பூமியில் யுத்தங்கள் அரங்கேருவதற்க்கும். காதல் இருபுற கூர்மையான ஆயுதம், நடுவில் பிடிக்கத்தெரிந்தவன் ஜெயிக்கிறான் எப்பொழுதும். மணைவி என்பவள் அசைக்கமுடியாத, அசுரத்தனமான நம்பிக்கையாய் இருக்கிறாள் ஒவ்வொரு கணவனின் உள்ளும் என்பதை விதைத்துவிட்டார் என்னுள்.

அடுத்த பேருந்தில் அவரை அமர்த்திவிட்டு நகரும்போதும் அதே கேள்வியை கேட்டார் என்னிடம், "இன்னா நைனா, மெர்சலாயிட்டேன்னு நினிச்சியா?.

". அவரை பத்திரமாய் அனுப்பிவைத்துவிட்டு என்னுள் முனகிக்கொண்டேன்

" மெர்சலானது நீ இல்ல நைனா, நான் ..... :) ".

0 comments:

Post a Comment