Wednesday, January 29, 2014

கண்கள் இரண்டில்…


மிகச்சிறந்த எழுத்து என்பது நட்பு, காதல், அன்பு, நேசம், காமம், தனிமை, உணர்வுகள், புரட்சி, விழிப்புணர்வு இப்படி அனைத்து பாதைகளிலும் பயணிக்க வேண்டும் என்பதை நன்கு அறிவேன். ஆதாலால் மாறுபட்ட பாதையில் இன்று பயணிக்க நினைத்த எனக்கு, இன்றைய ஒரு நிகழ்வு மீண்டும் யாதார்த்த உணர்வுகள் பாதையிலே பயணிக்க வைத்தது. எனக்கும் , நான் தினந்தோறும் பயணிக்கும் பேருந்திர்க்குமான உறவு – மாணவனுக்கும் ஆசிரியருக்குமான உறவு போன்று பதிகிறது என்னுள், காரணம் ஒன்றும் மிக ரகசியமான ஒன்று இல்லை, வழக்கமான கற்றலும் கற்பித்தலும் என்பதே.

இன்றும் அதே பேருந்து, அனால் புதுமையான நிகழ்வுகள். செம்பாக்கம் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த எனக்கு, சைகை காட்டி கண்சிமிட்டி கொஞ்சம் கத்தி, வந்து அமரும் படி அழைப்பை விடுத்தது அந்த பேருந்து. அமர்ந்து இளைப்பாறிய கொஞ்ச நேரத்தில் அடுத்த பேருந்து நிறுத்தம் வந்தது. இரண்டு முதிய வயது தம்பதிகள் ஒருவரை ஒருவர் இறுகப்பற்றிக்கொண்டு படிக்கட்டில் தட்டித்தடுமாறி ஏறினர். பார்த்ததும் அவசர அவசரமாய் நானும் எனது பக்கத்தில் அமர்ந்திருந்த நல் உள்ளம் கொண்ட அறிமுகம் இல்லா பேருந்து நண்பரும் அவர்களை அமரும்படி கூறிவிட்டு அருகே நின்று கொண்டோம்.

கசங்கிய சட்டை, தலை முழுவதும் காயத்தழும்புகள், பார்வை பறிபோய்விட்டது என்பதை உணர்த்தும் கருப்புநிற கண்ணாடி,உழைத்து இழைத்துவிட்டதை உணர்த்தும் ஒள்ளிய தேகம் இவை அவரின் அடையாளங்கள். துணிச்சலான பார்வை, தனியாய் சாதித்த தைரியம், சற்று தளர்ந்த பார்வையும் உடலும், தள்ளாடும் வயதிலும் சேலையில் தன் உடல்மறைத்து தன்மானம் காக்க முயலும் ஒழுக்க நெறிகள், இவைகள் தான் தன்னம்பிக்கையில் தன் வயதை மறைத்து வைத்து இருக்கும் அந்த வயதான அம்மையாரின் அடையாளங்கள்.

மெதுவாக பேச ஆரம்பித்தார் அந்த அம்மையார்.

“தம்பி குமரன் நகர் தாலுக்க ஆபீஸ் போகணும்.எப்படி போகணும்னு கொஞ்சம் சொல்றியா?.”

“இந்த பேருந்து சோழிங்கநல்லூர் வரை தாங்க போகும், அங்க இறங்கி குமரன் நகர் பேருந்து ஏறனும். நான் அந்த வழியா தான் போகிறேன். நான் கூட வருகிறேன்”.


“நீயும் அங்க தான் போறியா, ரொம்ப சந்தோசம் தம்பி. “.

கொஞ்ச நேரம் நான் அவரை உற்று கவனித்ததை அந்த அம்மா பார்த்துவிட்டார்கள் என நினைக்கிறேன். நான் கேட்காத கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க தொடங்கினார்.


நாங்க அந்த வித்யா மந்திர் பள்ளிகூடத்துக்கு முன்னாடி தான் பெட்டிக்கடை வைச்சு இருந்தோம் தம்பி, 9 வருசத்துக்கு முன்னாடி ஒரு பெரிய விபத்துல லாரி இவர் தலைமேல ஏரி தலை நசுங்கி, எப்படியோ கடவுள் அருளால உயிரோட திருப்பிகிட்டு வந்திட்டோம், ஆனா ரெண்டு கண்ணும் போய்டுச்சு. அப்படியே ஒடிஞ்சு போயி உட்கார்ந்துட்டார் மனுஷன். ரெண்டு பொண்ணுங்க எங்களுக்கு. அவுங்கள கரை சேத்தனும்ல அதான் பயந்துட்டாரு.இவரை வீட்ல உட்கார வைச்சிட்டு கடையும் பாத்துகிட்டு கொஞ்சம் வீட்டு வேலைக்கும் போயி, இதோ இப்பதான் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிவைச்சு கரை சேத்தினேன் தம்பி.

படபடத்த இதயமும் ரெண்டு பொண்ணுங்களையும் நல்லபடியா கல்யாணம் பண்ணிவைசிட்டாங்க அப்டினதும் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுச்சு.

என்னமோ தெரியல தம்பி கொஞ்ச நாள் எனக்கு கண் பார்வை வேணும், எல்லாத்தையும் பார்க்கனும்னு ஆசை படுறாரு தம்பி.அதான் போனவாரம் கண்ணு ஹாஸ்பிட்டல்க்கு போனோம். நரம்பு எல்லாம் நல்லபடியா இருக்காம், கண்ணு பொருத்தினா கண்ணு தெரிய வாய்ப்பு இருக்குனு சொன்னாரு தம்பி. சந்தோசமா போய்டுச்சு எனக்கு. அவருகிட்டையே என் கண்ண எடுத்து பொருத்துங்க தம்பி, எவ்ளோ செலவாகும்னு கேட்டேன் . அதுக்கு டாக்டர் சொன்னாரு அப்டில்லாம் நீங்க சொல்றபடி எல்லாம் பொறுத்த முடியாது, உங்க கண் அவருக்கு பொருந்தனும், அதுமட்டும் இல்லாம நிறையா விதிமுறைகள் இருக்கு உங்க கண்ண பொறுத்த, ஏனெனில் நீங்க உயிரோட இருக்கும்போது பண்ணின தப்பாகிடும். இதுக்கு ஒரு மனு எழுதி கையெழுத்து வாங்கிட்டு வாங்கன்னு சொன்னாங்க தம்பி, அதான் தாலுக்கா ஆபீஸ் வந்து இருக்கோம்னு சொன்னாங்க.

ஒரு நிமிடம் பேச வார்த்தைகளற்று நின்று போனேன்.

என் தேச மயானங்கள், எத்தனையோ கண்களை தின்றிருக்கிறதே சத்தமே இல்லாமல் உயிரோடு, இன்னும் எத்தனையோ…

பிறந்ததில் தொடங்கி, இறந்தது வரை எத்தனை மனித உயிர்கள் இவ்வுலகை காண ஏங்கி, கடைசி வரை இருண்ட கற்பனை உலகிலேயே மறித்ததோ.

மயானங்கள் தின்றது போதும், இனியாவது மனிதங்கள் தழைக்க வித்திடுவோம் நமது கண்களில்.

இறங்க வேண்டிய இடமான சோழிங்கநல்லூர் நெருங்கிக்கொண்டு இருந்தது.அழகாய் அவரது காதில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பொறுமையாய் அந்த அம்மா விளக்கிக்கொண்டு இருந்தது. காதல் என்பது கண்களை தாண்டிய இதயத்தில் வாழ்கிறது என்பதை என்னுள் ஆழமாய் வேரூன்றி நிற்க வைத்து விட்டது.

சிறிய நிகழ்வுகளுக்கெல்லாம் சினம் கொள்ளும் என்னைபோன்ற இளம் தலைமுறைக்கெல்லாம் நேசத்தை கற்றுக்கொடுக்கும் பல உதாரண மனிதர்களில் இருவரை கண்டுவிட்டேன் என்ற பெருமிதத்துடன்


அவர்கள் இருவரின் கரங்களை பிடித்து சாலையை கடக்க முயற்சிக்குறேன் – அவர்களின் அளவு கடந்த அன்பினில் சிறிதளவாவது என்னுள் கலந்துவிடட்டும் என்று பற்றிகொள்கிறேன் இன்னும் இருக்கமாய் கரங்களை.

1 comments:

karthickarts said...

unarvupoorvamana pathivu.....arumai vijay..vaalthukal.

Post a Comment