
நன்றிங்க ஐந்தாம் பாகத்தை படிக்க வந்ததிற்கு...
முதல் பாகம் இணைப்பு இங்கே : -
முதல் பாகம் இரண்டாம் பாகம் இணைப்பு இங்கே : -
இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் இணைப்பு இங்கே : -
மூன்றாம் பாகம் நான்காம் பாகம் இணைப்பு இங்கே : -
நான்காம் பாகம் எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லைங்க, 5 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன் , எழும்பொழுதே துக்கம் என் கன்னத்தோடு ஒட்டியிருந்தது, வாழ வந்தாச்சு வாழ்ந்து தான் ஆகணும், சிங்கம் இருக்கும் கூண்டில் தள்ளப்பட்டத்துக்கு அப்புறம் எதுக்கு சிந்தனை, பலம் இருக்கும் வரை மோதி உயிரை காப்பாத்த வேண்டியது தானே. அதை தான் நானும் பண்ணினேன், யாரும் வருவதிற்கு முன்னமே என் "கால்கள்" அந்த அலுவலகத்தை சுற்றி நடந்துகொண்டிருந்தது, "கண்கள்" யாராவது வருகிறார்களா என்று பாதையை நோக்கிக்கொண்டிருந்தது , "மூளை",பணம் கிடைக்குமா என கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தது , "மனது" அப்பா,அம்மா வருந்திக்கொண்டு இருப்பார்களோ என ஏங்கிக்கொண்டிருந்தது,
நேரம் மாற மாற ஏமாந்தவர்களின் கூட்டம் அதிகமாகியது, நீண்ட நேரப்போராட்டத்திற்கு பிறகு, நிறுவனத்தின் உரிமையாளரை பார்க்க முடிந்தது, கூடி நின்ற கூட்டங்களின் கோபத்தைப்பார்த்ததும், பணம் தருவதாய் ஒப்புக்கொண்டார், ஆனால் நாங்கள் விடுவதாய் இல்லை, "எப்போது" என்ற கேள்வியையும், "எப்படி" நம்புவது என்ற கேள்வியையும் முன்வைத்த பிறகு , நிறுவனத்தின் உருவம் பதித்த தாளில் எப்பொழுது தருகிறேன், என்ற விவரத்துடன் கையொப்பமிட்டு கொடுத்தார்..
ஏதோ பணம் வந்த திருப்தி எங்களுக்கு வந்திருந்தது, வாங்கிக்கொண்டு கிடைச்சுருமா?, ஓடாம இருப்பானா என 1000 கேள்விகள் நெஞ்சை சுட்டுக்கொண்டேயிருந்தன, அந்த தாள் அவ்வப்பொழுது மருந்து போட்டுக்கொண்டே இருந்தது சுடப்பட்ட என் நெஞ்சிற்கு.
வாரங்கள் கடந்து மாதம் ஆகின, பணத்தைத்திருப்பி தருவதாய் சொல்லியிருந்த தேதியும் வந்தது, எப்பொழுது எழுந்தேன் என்று தெரியாது , ஆனால் நான் 5 மணிக்கெல்லாம் நிறுவனத்தின் வாசலில் இருந்தேன், மணி 9 ஐ நெருங்கியதும் நிறுவனத்தின் காவலாளி வந்திருந்தார், மன்னித்துக்கொள் என்று அவர் ஆரம்பித்ததும் கண்கலங்க ஆரம்பித்தது, அதற்குள் அவர், இன்னைக்கு பணம் கொடுப்பதாய் அறிவிக்கப்பட்ட எல்லோரையும் நாளைக்கு வரச்சொல்லிவிட்டார்கள் என்று கூறினார்,
இல்லை என்று சொல்வதற்கு பதிலாக நாளை வா என்று கூறியது கொஞ்சம்,உயிரை மிச்சம் வைக்காமல் கொன்றதிற்கு பதில் வெறும் காயங்களுடன் வெட்டிச்சென்றது போலிருந்தது ..
வேலைத்தேடும் நேரத்தில் இப்படி ஒரு பிரச்சனை நமக்கு தேவையா என்று மனசு சொல்லிக்கொண்டேயிருக்கும் ..எப்படியோ விடிந்தது , சரியான நேரத்தில் அங்கே இருந்தேன், அந்த நாளில் 100 பேருக்கு மட்டும் கொடுப்பதாய் அறிவித்திருந்தார்கள், சிறிது நேரத்தில் நிறுவன உரிமையாளர் வந்தார், சிறிய உருவம், சரியாக சாப்பிடவில்லை, இப்படி நான் இருந்தாலும் , என் பெற்றோர்கள் கஷ்டப்பட்ட பணம் பரிபோகக்கூடாது என்று கூட்டத்தில் முண்டியடித்து 4 ஆம் இடத்தைப்பிடித்தேன், ஒவ்வொருவராய் அறைக்குள் அழைக்கப்பட்டு காசோலை வழங்கப்பட்டது, அதை நான் வாங்கிய நிமிடத்தில், கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு நன்றி தெரிவித்துவிட்டு வெளியேறினேன்...
அப்பொழுது யாரென்றே தெரியாத ஒரு நண்பர் என்னை அழைத்து சீக்கிரம் வங்கிக்கணக்கு ஆரம்பித்து காசோலையை உன் கணக்கில் போட்டுவிடு, ஒரு வேலை நிறுவனத்தின் கணக்கில் பணம் குறைவாகக்கூட இருக்கலாம் என்றார்...
சொல்லி முடிப்பதற்குள் வேகமாகிவிட்டேன், நான் தங்கியிருந்த அறைக்கு கூட செல்லவில்லை, ஒவ்வொரு வங்கியின் படியை மிதித்த அடுத்த சில நிமிடங்களில் ,சுவற்றில் எறியப்பட்ட பந்தினை போல் எறியப்பட்டு இருப்பேன்,நிரந்திர இருப்பிட முகவரி சான்றிதழை அளிக்க வேண்டும் என்ற காரணத்தினால் துப்பி எறியப்பட்டேன், அனைத்து வங்கிகளிலும் சொல்லி வைத்தாற்போல். ஒரே ஒரு வங்கியில் மட்டும், இந்த வங்கியில் கணக்கு வைத்து இருக்கும் பிரபலமான ஒருவர் கையொப்பமிட்ட இருப்பிட சான்றிதல் இருந்தால் வங்கிக்கணக்கை துவக்கி தருகிறோம் என்றார்,
யாரைத்தேடுவது , யாரைப்பிடிப்பது என்று தெரியாமல் வங்கியின் வாசலில் அமர்ந்து அழ ஆரம்பித்தது இன்னும் இதயத்தைக்கலங்கச்செய்யும்.நண்பனிடம் பென்சில் வாங்கவே பல நூறு முறை யோசித்து விட்டு, கடைசியில் கடன் வாங்க பிடிக்காமல் ஆசிரியரிடமே அடி வாங்கிக்கொள்வது மேல் என்று செல்பவன் நான், இப்பொழுது யாரை, எங்கே கேட்பது எனக்கு உதவி செய் என்று, முதல் முறையாய் மனசாட்சி சொல்வதை கேட்க மறுத்துவிட்டு வங்கிக்கு வரும் சிலபேரிடம் கெஞ்சிப்பார்த்தேன், விவரத்தை கூறியும் பார்த்தேன், ஒருவரும் உதவ முன்வரவில்லை, உண்ண வேண்டும் என்ற ஒன்றே எனக்கு மறந்து போயிருந்தது.
மாலையில் எனது அறைக்குத்திரும்பினேன், கோவிந்தராஜ் என்ற ஒரு அண்ணன் அங்கே தங்கியிருந்தார், நிலைமையறிந்த அவர் எனக்குத்தெரிந்த ஒருவர் இருக்கிறார் என்று என்னை அழைத்துச்சென்று , நான் அவரிடம் ஓட்டுனராக வேலை செய்கிறேன் என்றும், இந்த விலாசத்தில் தான் தங்கியுள்ளான் என்றும் ஒரு கடிதம் எழுதி கையொப்பமிட்டு கொடுத்தார்,
எப்படியோ கணக்கை ஆரம்பித்து காசோலையையும் கணக்கில் போட்டுவிட்டேன், இன்னும் 5 நாள் கழித்து வாருங்கள் என்று சொன்னார்கள். இந்த 5 நாளும் காலையில் 2 தேனீர் , மதியம் 3 தேனீர் , இரவு 2 பரோட்டா என்று நகர்ந்தது... உறங்கும் பொழுது ரம்பா, சிம்ரன்லாம் கனவுல வரவேண்டிய வயசுங்க, ஆனா வேலை கிடைக்குற மாதிரியும், நேர்முகத்தேர்வில் தோற்கிற மாதிரியும், ஜெயிக்கிற மாதிரியும் காண்கிற கனவுல , இந்த ஐந்து நாட்களில் பணம் கிடைக்குற மாதிரியும், கிடைக்காத மாதிரியும் சேர்ந்துகிடுசுங்க .இரவுளையும் என்னைச்சுத்தி அவ்வளவு வெளிச்சமுங்க, கண்ணை இருக்கிமூடித்தூங்கினா கூட தோல்வியும், ஏமாற்றமும் துருத்துசுங்க கனவா வந்து.
அவர்கள் சொன்ன அந்த நாளில் முதல் ஆளாய் வங்கியின் வாசலில் நின்றேன், வங்கியும் திறக்கப்பட்டது, ஓடி விசாரித்தேன், உங்கள் கணக்கில் 10,000 வந்துவிட்டது என்றார்கள்... நிச்சயமாய் அந்த கணம் உணர்ந்த சந்தோசம் , நான் கல்லூரியில் 96% எடுத்து முதல் மாணவனாய், மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து, மாநில அளவில் நான்காம் இடத்தை பிடித்து, செய்தித்தாளில் எனது பெயரை அப்பா எனது தெருவில் உள்ளவர்களிடம் காட்டிய பொழுது இருந்ததை விட மிகப்பெரிய சந்தோசமாய் இருந்தது..
இதைப்படிக்கிற எத்தனைப்பேரால் இந்த வழிய புரிஞ்சுக்க முடியும்னு தெரியல, என்னை மாதிரி லட்சக்கணக்கில் இந்த சென்னையை தினமும் சுத்திசுத்தி வராங்க.உயிரை பணயம் வைத்து பனை மரத்தில்ஏரி, பதநீர்இறக்கி சம்பாதித்த பணம், காலை 8 மணியில் இருந்து 4 மணி வரை வெய்யலில் கலைவெட்டி அம்மா சம்பாதித்த பணம் என்னை விட்டுப்போகுல, என் கையில் தான் இருக்கு, பணத்தை எடுத்துக்கிட்டு கிளம்பிட்டேன் என் சொந்த மண்ணுக்கு,
ஏமாறவில்லை நான் அப்டிங்கற ஒரு சின்ன திமிரோட என் சொந்தமண்ணில கால் எடுத்துவைச்சேன், வீட்டுக்குப்போனதும் முதல் வேலையா பணத்தை எடுத்து அம்மா கையில் கொடுத்ததும் கொஞ்சம் கண் கலங்கிட்டேன், என் அம்மா பக்கத்து வீட்டு அக்காகிட்ட சொன்னங்க " பையன் இந்த காச வாங்கிறதுக்காக சாப்பிடமா கூட இருந்து இருக்கான் போல, காசு போனா கூட பரவாயில்லை, இப்படிப்பாவமாய் வந்து இருக்கானேன்னு" அழுதாங்க..
அடப்போங்க, அப்பா, அம்மா பாசத்த அடிச்சுக்க இந்த உலகத்துல எதுவுமே இல்லைன்னு மனசுல ஆழமா பதிஞ்சுபோய்டுச்சுங்க அந்த நேரத்துல.அன்று இரவே சென்னைத்திரும்ப முடிவு செய்துவிட்டேன், இரவு ஆனதும் பையைத்தூக்கிக்கொண்டு கிளம்பும்பொழுது ,அம்மா அழுதுகொண்டே இன்னும் ஒரு 2 வாரம் இருந்து நல்லா சாப்பிடுட்டு அப்புறம் போயி தேடுடா என்று சொன்னாங்க, அப்பாவும் பக்கத்துல நின்னுகிட்டு மெதுவா போலாம் ஒன்னும் அவசரம் இல்லைன்னு சொன்னாங்க,
ஆனா நான் இப்படி ஒரு வார்த்தை சொல்வேன், அவுங்கள அழ வைப்பேன்னு அவுங்க கனவுல கூட நினைச்சு இருக்க மாட்டங்க, அப்படி என்ன சொல்லிவிட்டு சென்னைக்கு வந்தேன்?..
ஆறாம் பாகம் இணைப்பு இங்கே : -
ஆறாம் பாகம்