Saturday, September 4, 2010

தனலஷ்மி - பாசம் என்றால்....



இரண்டு மாதத்துக்கு முன்பே , நல்லவனாய், பவ்வியமாய் நின்று , என் மேல் அதிகாரியிடம் இரண்டு நாள் விடுமுறை கேட்டு, சரி என்ற அனுமதியும் வாங்கிவிட்டேன். நாளை விடுமுறை என்று வகுப்பாசிரியர் மாலை நேரத்தில் வாசிக்கும் தகவல் அறிக்கை கடவுளாய் தெரிந்து, தகவல் அறிக்கைக்கு நன்றி சொல்லிவிட்டு அருகில் அமர்ந்து இருக்கும் நண்பனை சந்தோசத்தில் அடித்துவிட்டு, நாளை என்ன செய்யலாம் என்ற ஓராயிரம் திட்டங்களை தீட்டும் பள்ளி நாட்களை ஞாபகப்படுத்தியது, சரி விடுமுறை எடுத்துகொள் என்று என் மேல் அதிகாரி கூறிய அந்த நிமிடத்தில் .

நிச்சயம் சந்தோசம் இருக்கத்தானே செய்யும்,ஆறேழு மாதத்துக்கு பிறகு சொந்த ஊருக்கு, அப்பா, அம்மாவை பார்க்க போகிறேன், முக்கியமாய் என் தனலஷ்மியை பார்க்க போகிறேன், "நீ திருவிழாவுக்கு கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என்ற தனலஷ்மியின் ஆணைக்கு தான் இந்த விடுமுறையே" . யார் இந்த தனலஷ்மி?, தான் ஒரு பெண்ணாய் இருந்தாலும் ,தன் கணவனோடு சேர்ந்து புழுதி க்காட்டிலும், சேற்றிலும்,வெய்யலிலும் வியர்வை சொட்ட சொட்ட விவசாயம் பார்க்கும் தருவாயிலும் கூட,என்னை சாப்பிட்டியா?, நல்லா சாப்பிட்டியா?,என்ன சாப்பிட்ட?, நல்ல உணவை சாப்பிட்டியா?,பார்த்து சூதனமா போகனும், பேருந்தில் தொங்கிக்கொண்டு போககூடாது.

நம்ம அப்பா, அம்மாவோட அலைபேசியில் பேசினியா?,உடற்பயிற்சி செய்யும்போது பார்த்து செய்யனும், அதிகஎடை தூக்கக்கூடாது, ரொம்ப நேரம் அரட்டை அடிச்சுட்டு நேரம் கழிச்சு தூங்கமா, சரியான நேரத்துல தூங்கணும் என்று ஆயிரம் அக்கறையை, அன்போடு அடுக்கடுக்காய் என் மேல் திணிப்பவள். அக்கா என்ற ஒற்றை உறவில் உலகம் காட்டியவள், அக்கா என்ற வார்த்தைக்கு அம்மா என்றொரு அர்த்தம் இருப்பதாய் பாசத்தால் உணர்த்தியவள்,

அம்முமா, புஜ்ஜிமா,தங்கம், செல்லம், மயிலு, என்று பாசத்தை- செல்ல பெயர்களாய் என் மீது ஒட்டிவிட்டவள், பூஜா, தினேஷ் என்ற அழகிய அவள் செல்லங்களுக்கு மூத்தவனாய், முதல் பையன் நீ என்று பூரிப்போடு புன்னகைத்து என்னை மார்போடு பாசமாய் அனைத்து ஆனந்த கண்ணீர் வடிப்பவள். அவள் பாசத்தை நம்பிக்கையாய் எழுத ஆரம்பித்துவிடலாம்,முடிக்கமுடியாது என்று

ஆசையாய் காத்திருந்த நாள், நிஜத்தில் நிழலாடும் தருணமாய் மலர்ந்தது . அவசர அவசரமாய், அலுவலக வேலைகளிடம் எனக்காய் நான்கு நாட்கள் காத்துஇருக்கும்படி கூறிவிட்டு , என்னோடு வாருங்கள் என் அக்காவை காணலாம் என்று என் உடைகளிடம் சொல்லிக்கொண்டே, அவைகளின் அனுமதியின்றி திணித்துக்கொண்டு புதன்கிழமை இரவு ஓடி சென்று சேலம் பேருந்தை பிடித்து இருக்கையில் அமரும்பொழுது வியர்வை துளிகள் அழகாய் கண்சிமிட்டி, என் தேகம் சுற்றி பார்க்க கிளம்பிவிட்டன. மனது மட்டும் ஏனோ என் அக்காவின் பாசத்தை நினைவில் நிரப்பிக்கொண்டிருக்க மறக்கவில்லை, நிச்சயம் ஒரு 100 பேரிடமாவது சொல்லி இருப்பாள்,என் தம்பி வருகிறான், தம்பி வருகிறான் என்று. என்னையும் மீறிய ஆவல் ஓட்டுனரின் வேகத்தை பார்த்து சலித்துகொண்டது அவ்வப்போது.

எப்படியோ வீடு சென்றுவிட்டது மனமும், உடலும் வியாழக்கிழமை அதிகாலையில் . அப்பா, அம்மாவோடு சந்தோசமாய் சில மணித்துளிகள்.சிறிதுநேரத்தில் அக்காவிடம் இருந்து அழைப்பு, எப்பொழுது இங்கே வருகிறாய் என்று, சிறிது விளையாட்டாய், நான் ஊருக்கு நாளைக்கு தான் வருவேன் என்றதும், அழுகையுடன் துண்டிக்கப்பட்டது அழைப்பு. அவசரமாய் புறப்பட்டு, அக்காவீட்டின் முன் நின்றேன், அக்கா கடைக்கு பொருள்கள் வாங்க போயிருப்பதாய் உணர்ந்தத தருணத்தில் உறவினர்களின் வரவேற்பு அனைத்தும் முற்றுபெராமல் தொக்கிநின்றது என் அக்காவின் பாச வரவேற்ப்பு இல்லாமல்.


வாசலை உற்றுநோக்கியே தோய்ந்த என் உடலும், மனுமும் மௌனமாய் கனத்துகொண்டே தூக்கத்தை கட்டிக்கொண்டது, அக்காவின் வருகையை உணர்ந்த தருணத்தில் பூத்த ஆவலை அழகாய் அக்காவிடம் கொண்டு சேர்க்க ஓடி சென்று அக்காவின் அருகே அமர்ந்து, சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என்று புன்னகைபூத்த என் உதடுகூட சுருங்கிகொண்டது அக்காவின் கலங்கிய கண்களை பார்த்ததும். என்ன சொல்ல?, அழகாய் சொல்லிவிட்டாள் என் அக்கா என் மேல் வைத்து இருக்கும் பாசத்தை கலங்கிய கண்ணீர்துளியால்,

அம்முமா எப்படி இருக்க?, என்பதில் ஆரம்பித்தது எப்பொழுது முடிந்தது என்று கணக்கில் வைத்து கொள்ளவில்லை,அத்தனை வேலைக்கு மத்தியிலும் ஓடி வந்து "சாப்பிடு விஜிமா" என்று கெஞ்ச மறக்கவில்லை என் அக்கா. எவ்வளவு பாசமுங்க என் அக்காவுக்கு என்மேல, இந்த பாசத்துக்கு தாங்க உலகத்துல அத்தனை உயிரும் ஏங்குதுங்க,என் கையை பிடிச்சு கூடவே சின்ன குழந்தை மாதிரி கூட்டிக்கிட்டு, சமைக்கிறதுல இருந்து, சாப்பாடு போடறது, துவைக்கிறது, பாத்திரம் கழுவறது, சொந்தகாரங்கள வரவேற்கிறது வரைக்கும் அத்தனை வேலையையும் சலிக்காம செய்ததுங்க.

சின்னதாய் என்னை யாரவது வேலை செய்ய சொன்னாகூட, ஓடி வந்து உன்னை யாரு விஜிமா செய்ய சொன்னது, நான் பார்த்துக்கிறேன், நீ ஒன்னும் செய்யகூடாதுன்னு சொல்றப்ப கண்ணீர் சொட்டுமுங்க, கண்ணீர துடைச்சு எரிந்துட்டு, அடம்பிடிச்சு என் அக்காவீட்டு திருவிழாவுல நானும் என்னால முடிஞ்சவேலை செய்யணும்னு செய்தபோது, கொஞ்சம் பெருமையா தான் என் அக்கா எல்லோர்கிட்டயும் சொல்லிகிட்டா "என் தம்பி பாரு ,முன்னாடி நின்னு எடுத்துக்கட்டி வேலை பார்க்கிறான்னு". .

எது சரி, எது தவறு அப்டின்னு பிரிச்சு பார்க்கிற பக்குவம் என்கிட்ட இருக்குங்க, யோசிச்சுமுடிவு எடுக்க தெரியுமுங்க, ஆனா இது எல்லாம் மறந்துபோகுமுங்க சிலநேரங்களில்,அந்த மாதிரி தருணங்கள் நிறையா உண்டு, அதுல ஒண்ணு தான் நான் அப்போகடந்து போனேன். சின்ன குழந்தைல ஆரம்பிச்சு, வயசாகி சாகுற மனுஷன் வரைக்கும் தன்னை நேசிக்கிற அம்மா, அல்லது நேசிக்கிற மனைவி, நேசிக்கிற பையன், நேசிக்கிற பொண்ணு, நேசிக்கிற அக்கா, நேசிக்கிற அண்ணா இவுங்க தன்னை தான் அதிகம் நேசிக்கணும் அப்டிங்கற ஒரு இனம்புரியா, பாசத்துல மிதக்குற ஒரு பிடிவாத உணர்வு இருக்கும்.

அதேதாங்க எனக்கும், என் அக்கா ,என்னை கவனிக்க தவறிய சில நிமிடங்கள், உறவினர்களை சிரிசுகிட்டே வரவேற்கிற தருணங்கள் என்று நிறையா தருணங்கள் என் பிடிவாதத்தை அதிகரிக்க தான் செய்தது, என் அக்கா என்னை மட்டும் தான் நேசிக்கணும், என்னை கவனிக்க தவறக்கூடாது என்ற பிடிவாதம் , ஓவ்வொரு மனிதனுக்குள்ளும் குழந்தைதன பிடிவாதங்கள் சில நேரங்களில் இருக்கத்தான் செய்கிறது, ஆயிரம் பேர் அறிவுரை கூறலாம். அம்மாகிட்ட போயி தீருவேன்னு அடம்பிடிக்கிறதும் ,அம்மாகிட்ட வேறஒருத்தங்க குழந்தை கையில இருக்குறப்ப வர பிடிவாதமும், சின்ன குழந்தைல இருந்தே ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் உயிராய் கலந்துவிடுகிற, தவிர்க்க முடியாத ஒரு உணர்வு.

என் முகத்தில் இருக்கும் கோபத்தை புரிந்து, ஓடி வந்து,

"விஜிமா, எதுக்கு கோபம்?." என்ற கேள்வியை கேட்கும்பொழுதே தெரிந்திருக்கும் என் அக்காவிற்கு எதற்காய் என் கோபம் போராடுகின்றன என்று?. இது முதல் முறை அல்ல, ஆச்சர்யபடுவதற்கு, பல லட்சகணக்கான முறை பார்த்த பிடிவாதம் தான். என் அருகே அமர்ந்து, என் கன்னங்களை பிடித்து,

"விஜிமா, நான் உன் அம்மா, நீ தான் எனக்கு முதல்,அப்புறம் தான் இந்த உலகமே, மற்றவர்களிடம் சிரிச்சு பேசுவதாலோ, உன்னை சில நேரங்களில் கவனிக்க தவருவதாலோ உன்மேல் என் பாசம் குறைஞ்சுடுச்சு என்று அர்த்தம் இல்லை விஜிமா "என்று கூறிமுடித்து, கன்னத்தில் முத்தம் இடும்பொழுது கண்ணீர் சிந்தியது என் கண்கள்.

விஜிமா எதுக்கு அழுகுற?, அழகூடாது, என்று என் கண்ணீரை துடைத்துவிட்டு, அவள் கண்கள் கலங்குவதை காணும்பொழுது இதயம் கனக்க செய்தது, வா விஜிமா, இனிமேல அம்மா உன்னை கவனிக்க தவறமாட்டேன் என்று, என்னை கூடவே கைபிடிச்சு சுத்தினது , இந்த உறவுகாரங்களால புரிஞ்சுக்க முடிஞ்சுதான்னு தெரியல, "இந்த பையன் என்ன குழந்தையா இப்படி கூடவே சுத்துறான், இந்த பொண்ணுக்காவது அறிவுவேணாம் , இப்படியா கூடவே கூட்டிகிட்டு சுத்துறது" என உறவுகாரங்க மனசுக்குள்ள கேட்ட கேள்விகளுக்கெல்லாம் என் அக்கா சத்தமா சொன்னா பதில் "விஜிமா என் முதல் பையன், எத்தனை வயசானாலும் 3 மாச குழந்தை தான் இவன் எனக்கு"

அழகாய்,சந்தோசமாய் நகர்ந்த மூன்று நாட்களும், என்னை சோகமாய் நான்காம் நாளின் கையில் ஒப்படைத்தது. என் அக்காவை விட்டு பிரிந்து செல்ல போகிறேன், என் அக்காவோட பாசத்துல கலங்கிபோன என் மனசு அடம்பிடிச்சுது அங்கிருந்து புறப்பட்டு செல்ல, அவ்வளவு பாசம் காட்டின என் அக்காகிட்ட, போயிட்டு வருகிறேன் என்று சொல்லிட்டு, திரும்பிபார்க்காம வீட்டுக்குவந்து தேம்பி தேம்பி அழுது, சொட்டிய ஒவ்வொரு கண்ணீரிலும் என் அக்காவோட பாசத்தை பார்க்க முடிஞ்சுது.சேலத்துல இருந்து சென்னைக்கு பேருந்து புடிச்சு அமர்ந்து, அக்காகிட்ட அலைபேசியல் அழுதஅழுகை பேருந்தில தூங்கிக்கொண்டு இருந்தவங்கலோட காதுகளை எட்டி இருக்கும்,


இயல்பு வாழ்க்கைக்கு வர மூன்று நாட்கள் பிடித்தது, பார்த்து பார்த்து சாப்பிடு, தூங்கு, அங்க போகாத, அந்த வேலை செய்யாத என்று பாசம் காட்டிய அம்மா அருகே இல்லை எனும்பொழுது, இந்த வாழ்க்கை எதுக்கு?,பாசத்தை பத்திரமாய் வீட்டில் மடித்துவைத்து விட்டு இங்கே எதைதேடுகிறேன் என்ற ஆயிரம் கேள்விகள் மனதை இன்னும் கனப்படுத்தியது . இந்த மூன்று நாட்களும் அக்காவை அழைக்கும் பொழுதெல்லாம் , அக்கா கூறிய முதல் வார்த்தை " நீ எங்கு இருந்தாலும், அம்மா நான் உன்னோடு இருக்கிறேன்".நான் அனுப்பிய அதிக குறுந்தகவல் "I Love U Akka, I Miss U Akka" .இந்த ஒற்றை வார்த்தையால் என் அக்காவின் பாசத்தை அடக்கிவிடமுடியாமல், உணர்த்தமுடியாமல்,சரியாக சொல்லிவிட முடியாமல் தவித்ததின் விளைவாய் "தனலஷ்மி -பாசம் என்றால்." இதுவும் முழுமையாய் உணர்த்தியாதாய் ஏற்றுகொள்ளமுடியாமல் கனத்த இதயத்தோடு சுற்றிகொண்டிருக்கிறேன்...


ஒரு வார்த்தையிலும், ஒரு பதிவிலும் முடிந்துவிடுவதாய் உணரமுடியவில்லை என் அக்காவின் பாசம் ...ஜென்மங்கள் தாண்டியது ...


                                                                                         
                                             

Tuesday, August 17, 2010

என்னை எனக்கே அறிமுகம் செய்த அந்த நாட்கள்...



வாழ்க்கை புத்தகத்தின் "சந்தோசம் "எனும் ஒரு பக்கத்தை தேடிக்கொண்டிருந்த நாட்களில் நான் படிக்காமலே விட்டு சென்ற பக்கங்கள் ஏராளம், அப்படி இருந்தும் வாழ்க்கையின் சில பக்கங்கள், வாழ்க்கையின் முக்கியத்துவத்தை கற்று தர மறக்கவில்லை,வாழ்க்கையை கற்று தந்த பக்கங்களைத்தான் இப்பொழுது உங்களுக்காய் திறந்து வைக்கிறேன்.மிகச் சிறந்த மனிதனில்லை நான், சரித்திரங்களும், சாதனைகளும் இருப்பதற்கு. இயல்பான மனிதன், என் வாழ்க்கை பக்கத்தில் படிக்க போகும் யாவும் உங்களுக்குள் கடந்த சென்ற ஒன்றாகத்தான் இருக்கும்.

என்னை பொறுத்தவரை அனைத்து நாட்களும் ஒன்று தான், நான் என் வாழ்க்கையை தேடிய அந்த 2007 ஆம் ஆண்டில். அவசர அவசரமாய் உடுத்தும் ஆடைகளை பையில் திணித்துக்கொண்டு, "சரி வருகிறோம், அலுவலகத்திலிருந்து அப்படியே (சொந்த) ஊருக்கு போய்விடுவோம்" என்று அதிகாலையில் அறை தோழர்கள் சொல்லி முடிக்கும் பொழுது, அன்றைய தினம் வெள்ளிகிழமை என்பது புரிந்திருக்கும் என் மனதிற்கு, இரவு பகல் என அனைத்து நேரங்களிலும் தனது சந்தோசத்தை கணினியோடு பகிர்ந்துவிட்டு, நிஜ சொந்தங்களோடு பகிர்ந்துகொள்ள அத்தனை ஆனந்தமாய் விடியும் ஒவ்வொரு வெள்ளிகிழமைகளும் அவர்களுக்கு. வேலை கிடைத்த பின்பு தான் ஊருக்கு செல்வேன் என்று முடிவை மூச்சாய் சுவாசிக்கும் எனக்கு, நீ தனிமை படுத்தபடுகிறாய் என்பதை சொல்லும் ஒவ்வொரு வெள்ளிகிழமைகளும் எனக்குள் கற்றுத்தந்த பாடங்களை பத்திரமாய் இருக்கி கட்டியணைத்து வைத்து இருக்கிறேன் இன்றும். அப்படி தான் அந்த வெள்ளிகிழமையும், எனக்கான ஒரு பாடத்தையும், உணர்வு பரிமாற்றத்தையும் கையில் வைத்து காத்து கொண்டிருந்தது...

நண்பர்கள் அலுவலகத்திற்கு கிளம்பும் வரை எழுவதில்லை நான், அதற்கான காரணங்கள் மிகப்பெரியதாய் ஒன்றுமில்லை, சென்னையில் வாடகை வீட்டில் தங்கும் அனைவரும் சந்திக்கும் ஒன்று தான், குளியலறையும், கழிவறையும் ஒன்றாக கட்டி, ஒரே கதவில் காசை மிச்சபடுத்தி இருக்கும் நுட்பம் தெரிந்தவர்கள் வீட்டுசொந்தக்காரர்கள் என்று பெருமூச்சை மட்டுமே விட்டுசெல்லும் சராசரி மனிதனில் தான் நானும் .

அன்றும் வழக்கம் போல், பொய்யாய் கண்விழித்த சிறிது நேரத்தில்,அனைத்தையும் முடித்துவிட்டு, காலை உணவு என்பதை சாலையோர தேனீர் கடையின் ஒற்றை கோப்பை தேநீரில் வழக்கம் போல் முடித்தேன், மதிய உணவு என்பதும் தூக்கத்தில், படித்ததை திரும்ப திரும்ப நேர்முகத்தேர்விற்காய் முயற்சி செய்த தருணத்தில் முடிந்தது. எங்கெங்கோ அமைதிக்காய் தெருக்களை தனிமையில் சுற்றி, சில இடங்களில் அமர்ந்து சுமைகளை துளைத்ததாய் நினைத்து, சுற்றி முடித்து வீடு திரும்பினேன்,

என் அறைகதவை திறக்க முயற்சி செய்கிறேன், கதவருகே வாழ்க்கையின் நிமிடங்களை எண்ணிக்கொண்டு இருக்கிறது அணில்குட்டி, கால்கள் அடிபட்ட நிலையிலும் என்னை கண்டதும், நகர்ந்து ஓட முயற்சிக்கும் அதன் இயலாமையை கண்டதும் கண்கள் கலங்கித்தான் போகின, அதன் கூரிய கண்களில் தான் அதன் வலியை என்னால் உணர முடிந்தது, அவ்வளவு முயற்சித்தும் நகர்ந்த தொலைவு மிகக்குறைவே, ரத்தம் கசியும், வலியை தாங்கமுடியா அந்த தருணத்தில் கூட இன்னொரு ஜீவன் ஆதாயம் தேடுகிறது இந்த அணில்குட்டியிடமிருந்து, என் அத்தனை கோபமும், அணில்குட்டியின் காயத்தில் ஆதாயம் தேடிய எறும்புகளின் மீது திரும்பியது, அவசரமாய் காப்பாற்றும் எண்ணத்தில் என் அறிவுக்கு எட்டாமல் போய்விட்டது அணில்குட்டிக்கு கடிக்க தெரியும் என்று, ரத்தம் சொட்டும் அளவுக்கு கடித்துவிட்டது, அவசரமாய் அறைக்குள் ஓடி, கைகள் முழுக்க துணியை கட்டிக்கொண்டு, அணில்குட்டியை கையிலெடுத்து எறும்புகளை தட்டிவிட்ட நேரத்தில் அதற்க்கு புரிந்ததோ இல்லையோ நான் காப்பாற்ற வந்தவன், கொல்லவந்தவன் அல்ல என்பது, காப்பாற்றிவிட்டேன் என்ற சந்தோசத்தில் ஓரிரு நிமிடம் நகர்ந்தது எனக்கு.

இப்படி காப்பாற்ற பாடுபடும் நான் உண்மையில் எப்படி பட்டவன்?..

பள்ளிவிடுமுறை நாட்களை, பயிற்சிவகுப்புகள் தின்ற மீதியை, அணில்பிடிக்கவும், ஓனாய் அடிக்கவும் உபயோகபடுத்துபவன், இடுப்பில் நிற்க அடம்பிடிக்கும் கால்சட்டையை,அரைஞான்கயிறைக்கொண்டு இருக்கி கட்டிவிட்டு, மேல்சட்டை இல்லாமல், கால்களில் காலனி இல்லாமல், நெறிஞ்சி முற்களையும், தீயாய் சுடும் காட்டு மண்ணிலும், சுட்டெரிக்கும் வெய்யலிலும்,துரு துருவென ஓடி, துரத்தி துரத்தி கொல்வதில், சாதித்த திமிரு ஒட்டிக்கொண்டு மீண்டும் அடுத்த விடுமுறைக்கு வித்திடும் கொஞ்சம் கொடூரமான மிருகம் தான் நானும், அணில்களை பிடிப்பதற்காக, தந்திரமாய் யோசித்து வலைகளை விரித்து வைத்துவிட்டு, துரத்தி வந்து வலையில் விழ செய்து சாதித்ததாய் பெருமிதம் கொள்ளும் திமிர்பிடித்த சிறுவன் தான் நானும். அவற்றை என் நண்பர்கள் கொன்று பையினுள் போடும்பொழுது கொஞ்சம் கனக்கத்தான் செய்யும் அந்த கணங்களில், ஆனாலும் அவ்வளவாய் பாதிப்பதில்லை அந்த சாவுகள்,இப்பொழுது மட்டும் இவ்வளவு கனமாய் கனக்கிறது ஏன்?, காயத்தை கண்ட அந்த கணத்தில்.

அறைக்குள் அங்கும் இங்கும் ஓடி ஒரு அட்டை பெட்டியை கண்டுபிடித்துவிட்டேன், அதற்குள் அணில்குட்டியை விட்டுவிட்டு, பதற்றத்தில் யோசிக்க ஆரம்பித்தேன் , என்ன செய்வது, எப்படி காப்பாற்றுவது என்று ஆயிரம் கேள்விகள் , அங்கும் இங்கும் அறைக்குள் ஓடுகிறேன், அவசர அவசரமாய் அனைத்தும் நடக்கிறது, வெட்டு காயத்திற்கு போடும் மருந்தை நீண்ட நேரத்திற்கு பிறகு கண்டுபிடித்ததில் அத்தனை சந்தோசம், மருந்தை காயத்தின் மேல்இட்டுவிட்டு, அதற்கு சாப்பிட தக்காளி பழத்தை சிறு துண்டுகளாக்கி அட்டைபெட்டியில் வைத்துவிட்டு, சாப்பிடு சாப்பிடு என்று கெஞ்சுகிறேன், வலியின் வேதனையில் சாப்பிட மறுக்கிறது அணில்குட்டி, கொஞ்சமாவது சாப்பிடு என்று கெஞ்சுகிறேன், சிறிது நேரத்தில், தக்காளியை அணில் உண்ணாதோ என்ற கேள்வி?,என்னை அடுத்து ஒரு முயற்சிக்கு அவசரப்படுத்தியது, அடுத்த நாள் காலை உணவிற்கு என தேற்றிவைத்து இருந்த தேநீருக்கான சில்லரைகள் அவசரமாய் சாலையோர கொய்யாக்காய் விற்கும் பாட்டியிடம் சேர்க்கப்பட்டது, சேர்த்துவைக்கப்பட்ட சில்லரைகளின் தியாகத்திற்கு இணையாய் கொய்யாக்காய் என் கைகளில். ஓட்டமும் நடையுமாய் வந்து சேர்ந்தது என் உயிர், இறந்துவிடக்கூடாது மற்றொரு உயிர் என்ற நினைவில்.

சிறு சிறு துண்டுகளாக்கி வைத்துவிட்டு, ஒன்றையாவது சாப்பிடு, ஒன்றையாவது சாப்பிடு என்று ஏங்கிக்கொண்டு இருக்கிறது ஏதோ ஒன்று என்னுள் , உண்டால் உயிர்பிழைத்துவிடும் என்று எதேதோ கணக்கு போட்டுகொண்டு இருக்கிறது, உயிர் போகும் வலியை உணர்ந்துகொண்டு இருக்கும் அதனால் உண்ண முடியாது என்பதை ஏதோ ஒன்று ஏற்க மறுக்கிறது, சாப்பிடு சாப்பிடு என்று அதனுள் திணிக்க முயற்சிக்குறேன் தோல்வி தான் கிட்டும் என்று தெரிந்தும். முட்டாள் தனமாய் யோசிக்க செய்தன என்னுள் அந்நேரத்தில்,தனியாக விட்டால் சாப்பிடுமோ என்ற ஏதோ ஒரு நப்பாசையில் ஒளிந்துகொண்டு பார்த்தேன், சாப்பிடுமோ என்று.

என் அனைத்து திட்டமும் பலிக்கவில்லை, நேரம் கடக்க என்னுள் ஏதோ ஒரு இனம் தெரியா சோகம் என் கன்னத்தோடு ஒட்டியிருந்ததை என்னால் உணரமுடிந்தது, ஏனோ சாப்பிட பிடிக்கவில்லை, நேர்முகத்தேர்வுக்கான பயிற்சியும், படித்தலும் நடக்கவில்லை, எண்ணங்கள் முழுதும் நிரம்பியிருந்தது அதன் மேல் மட்டுமே, பெட்டியை என் படுக்கைக்கு பக்கத்தில் வைத்துகொண்டே கவனித்துக்கொண்டே உறங்கிப்போனேன், திடீரென கண்விழித்த தருணத்தில் எறும்புகள் மீண்டும் ஆதாயம் தேடிக்கொண்டு இருந்தன உயிருக்கு போராடும் அணில்குட்டியின் காயத்திலிருந்து ,இரவு முழுவதும் பெட்டி இடம் மாற்றம் செய்ய பட்டுகொண்டேயிருந்தது, கண்கள் திறக்கும் தருனங்களிளெல்லாம் அதன் நிலையை அறிய முயற்சிக்க மறக்கவில்லை.

அடுத்த நாள் கண்விழிப்பில், அவசர அவசரமாய் பெட்டியை பார்த்த எனக்காய், கண்ணீரை விட்டு சென்று இருக்கிறது அந்த அணில்குட்டி, என் அத்தனை முயற்சியும் தோற்றுவிட்டது, நான் உறங்கிக்கொண்டு இருந்த எந்த நிமிடத்தில் தன் உயிரை விட்டதோ?, அசைவுகளோடு பாவமாய் உற்று நோக்கிய அதன் கண்கள், அசைவற்று.. அழுதுகொண்டே எனக்குள் கேட்டுக்கொண்டேன் , அன்று அறியா வயதில் உயிரை எடுக்கும் உரிமை கிடைத்த எனக்கு, இன்று அறிந்த வயதில் உயிரை கொடுக்கும் உரிமை இல்லாமல் போயிற்று, எனக்குள்ளும் மனிதம் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக்கிடக்கிறது என்று புரிய வைக்க ஒரு உயிர், உயிரை விட்டு இருக்கிறதா?, பற்களை கடித்துக்கொண்டு துரத்தி துரத்தி கொன்ற கொடூரன் இப்பொழுதில்லை, என்னுள் மனிதம் துளிர்க்கசெய்து ,மரித்துவிட்டது அணில்குட்டி. இதயம் கனக்கிறது...இன்னும் மறையாமல்...

                                                                                         
                                             

Sunday, August 1, 2010

வாழ்க்கை(வலி)ன்னா என்ன? --இலக்கை நோக்கிய பயணத்தில் (பாகம் - 6 )



நன்றிங்க ஆறாம் பாகத்தை படிக்க வந்ததிற்கு,
சரிங்க, கண்டிப்பாக ஆவலோடு வந்து இருப்பீங்கன்னு தெரியும், அப்படி என்ன தான் என் அம்மாவிடம் சொல்லிவிட்டு வந்தேன், ஏன் வழக்கமானதை விட அதிகமா அழுதாங்க ?..உங்கள் கேள்விக்கான விடை கீழே.......

முதல் பாகம் இணைப்பு இங்கே : -
முதல் பாகம்

இரண்டாம் பாகம் இணைப்பு இங்கே : -
இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம் இணைப்பு இங்கே : -
மூன்றாம் பாகம்

நான்காம் பாகம் இணைப்பு இங்கே : -
நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம் இணைப்பு இங்கே : -
ஐந்தாம் பாகம்


வாழ்க்கையோடு போராடிய வலியும், வாழ்க்கைல ஜெயிக்கணும் அப்டிங்கற தீயும் எரிஞ்சுக்கிட்டு இருந்தது மனசுக்குள்ள,என்னை அப்படி பேச வைத்ததும் அதுவே தான் "இனி இந்த மண்ணில் காலெடுத்து வைக்கமாட்டேன் - வேலை கிடைப்பதற்கு முன், உங்களையும் கூட இனி காண வரமாட்டேன், வேலை கிடைப்பதற்கு முன் வந்தால், இறந்து தான் வந்து இருக்கிறேன் என புரிந்துகொள்ளுங்கள் அம்மா", என்று சொல்லிவிட்டு பேருந்தில் அமர்ந்தேன்.

பேருந்து புறப்பட ஆரம்பித்தது, பழைய அறை நண்பர்களுக்கு எனது கைபேசியில் அழைப்பு விடுத்தேன், சென்னை வருகிறேன் என்றேன்,அறை நண்பன் கூறியது - மனதை ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்தது, "நாங்கள் அறையை காலி செய்து விட்டு என்னுடன் வேலை செய்யும், சக ஊழியனின் அறைக்கு மாற்றலாகிவிட்டோம் ." கைபேசியை அணைத்துவிட்டு எங்கே செல்வது என்று யோசித்தேன்,நான் அமர்ந்திருந்த பேருந்திற்கு கூட தெரிந்து இருக்கும் அது எங்கே போய் சேரவேண்டும் என, அதில் அமர்ந்திருக்கும் எனக்கு தெரியவில்லை எங்கே செல்வது என.

ஏறக்குறைய கைபேசியில் இருக்கும், அனைத்து சென்னையில் தங்கியிருக்கும் நண்பர்களையும் அழைத்துவிட்டேன், பதில்கள் அனைத்தும் என்னை ஏமாற்றம் செய்வது போலவே அமைந்தது, என்ன செய்ய?..மீண்டும் ஒரு முறை முயற்சி செய்தேன் ," ஒரு வாரம் மட்டும் தங்கிகொள்வதாய்" , சரி என ஒரு நண்பனிடம் இருந்து வந்த பதில் ,நிஜமாய் நான் எங்கே செல்ல வேண்டும் என்ற இலக்கை பேருந்திடம் துணிச்சலாய் சொல்லிக்காட்டி கொண்டு இருந்தது.


சென்னை மண்ணை மிதித்தேன், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாய், திரும்பிச்செல்ல இனி வழி கிடையாது என்னிடம். என் வாழ்வையும் சாவையும் இந்த மண் தான் தீர்மானிக்க வேண்டும். நண்பன் அறைக்கு சென்றதும் என் அத்தியாவசிய தேவைகளை முடித்த பின், மீண்டும் படிப்பும், செய்தித்தாளில் வேலை விளம்பரத்தை புரட்டுவதுமாய் அந்த நாளும், வாரமும் கழிந்தன ,கூர்மையற்ற கத்தியால் 10 மணி நேரம் ஒரு மரத்தை வெட்டுவதைவிட, கத்தியை கூர்மையாக்க 8 நேரம் செலவழித்துவிட்டு 1மணிநேரத்தில் வெட்டுவதே கூர்மையான அறிவு சார்ந்த வழியாகும். அதை தான் நானும் செய்தேன், படித்து படித்து கற்றுக்கொண்டு இருந்தேன் எனக்கான நேர்முகத்தேர்வுக்கான வாய்ப்பு கிடைக்கும் வரை.

எனது ஒரு வேலை உணவை நான் தான் வாங்கிக்கொள்ள வேண்டும் இனி, என்று முடிவு செய்த ஓரிரு நாட்களில் படிப்பிற்கும், வேலைக்கும் சம்பந்தம் இல்லாத ஒரு பகுதிநேர வேலையில் அமர்ந்தேன், என் முயற்சியை, எனக்குள் எறிந்த தீயை வேறுதிசை நோக்கி பயணிக்க செய்ததை போல் உணர்ந்தேன்,அங்கிருந்து வெளியே வந்தேன் எனக்கான இலக்கை இனி அடையாமல் வீழப்போவதில்லை என்று.மீண்டும் தேட ஆரம்பித்தேன், ஆரம்பித்த சில நாட்களிலேயே

இனி வாய்ப்பே கிடைக்காது என்பதை நாட்காட்டியின் தேதி உறுதி செய்தது, ஆம் நான் கல்லூரி முடித்து ஒருவருடம் ஆகிவிட்டது,இதற்குமேல் புதிதாய் கல்வியை முடித்துவரும் அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்,நிறுவனங்களால்..கொஞ்சம் துவண்டு தான் போய்விட்டேன். இருப்பினும் வாழ்ந்து ஆகவேண்டும், ஜெயித்தாக வேண்டும் என்ற எண்ணம் என்னை யோசிக்க வைத்தது, யோசனையின் முடிவு என்னவாய் இருந்து இருக்கும் என்று ஒவ்வொரு மென்பொருள் வல்லுனருக்கும் தெரியும்.ஆம் அதுவே தான்,("fake"-ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதாய் "பொய்" சொல்வது. தன் திறமையை நிரூபித்து, பணிபுரிவதற்கான சான்றிதழ்களை காட்டி மற்றொரு நிறுவனத்தில் சேருவது).

இது நிஜமாய் குற்றம்தாங்க, ஆனா வேற வழியில்லை, என்னை மாதிரி தமிழ் வழிகல்வியில் பயின்று, ஆங்கிலத்தை தடுமாறி உச்சரிக்கும், யார் உதவியும் கிடைக்காம, தானாய் புதியதொரு ஊரில், பெற்றோர்களின் 1500 ரூபாய் பணத்தில் ஒரு மாதத்தை கழிக்கவேண்டும் என்று போராடுபவர்களுக்கு வேற வழியில்லை, நாட்கள் நீள நீள, அம்மாவின் ஒவ்வொரு நகையும் வங்கிக்கு சொந்தாமாகி போயி கொண்டு இருக்கும் தருணங்களில் நியாயம் எது, அநியாயம் எது என்று யோசிக்க நேரமில்லைங்க.

சரி என்ன பண்றதுன்னு யோசிச்சா இன்னொரு வருடம் போயிடும்னு தெரியும், உடனே செயலில் இறங்க ஆரம்பிச்சேன், பல தேடல்களுக்கு பிறகு அனைத்தையும் தயார் செய்தேன், வேலை கிடைத்தவுடன், பொய் சான்றிதழ் வாங்க பணம் கொடுத்தால் போதும் என்பது உறுதியானது, சரி இனி திறமையை நிரூபித்து நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும், ஒரு வருடம் பணிபுரிந்ததை போன்ற திறமையோடு பேச வேண்டும், அனைத்து விதமான கேள்விக்கும் பதிலளிக்க வேண்டும்,

சரி பணிபுரியும் நண்பர்களிடம் நிறுவனத்தில் என்ன நடக்கும்,எப்படி ஒரு வேலையை செய்து முடிக்கிறார்கள் என்பதை கேட்டால் ஒவ்வொருவரின் பதிலும் வித்தியாசமாய் இருக்கும், ஒருவன்,வேலையே கிடையாது மச்சி, சும்மா தான் உட்கார வைச்சு இருக்கிறான் என்பான், இன்னொருவன் நான் செய்யுற வேலையை 12 ஆம் வகுப்பு முடிச்சவன் பண்ணுவான் என்பான், இன்னொருத்தனை கேட்டா,அவன் என்ன சொல்றான்னே புரியாது, புரியுற மாதிரி சொல்லுடா மச்சி என்றால், உனக்கு புரியாதது மாதிரி தான், எனக்கும் ஒன்னும் புரியாது மாப்புள என்பான்,

சரி இனி யாரையும் நம்பி பலனில்லை என தோன்றியது,ஒரு வருட அனுபவம் உள்ளவர்களுக்கு எப்படி நேர்முகத்தேர்வில் கேள்விகளை தொடுக்கிறார்கள் என்பதை தேடிப்படித்தேன் வலைத்தளங்களில் இருந்து,நன்றாக படித்தேன், அதற்குள் நான் ஒருவாரம் மட்டும் தங்குவதாய் கேட்டுவந்திருந்த நாட்களை தாண்டி பல வாரங்கள் ஓடிவிட்டன, நண்பர்கள் ஒன்றும் சொல்லவில்லை, இருந்தபொழுதும் மனதின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒன்று தவறு என உணர்த்தியது, குறைந்த வாடகையில் வீடு தேட ஆரம்பித்தேன், வீட்டின் ஆரம்ப வாடகையே 1500 ரூபாயில் ஆரம்பித்தது, முன்பணம் பல ஆயிரங்களை சாதாரணமாய் தாண்டியது, சாப்பாட்டிற்கே வீட்டில கையேந்துகிறேன், இதில் எப்படி இவ்வளவு ரூபாயில் வாடகை, சரி கொஞ்சம் தன்மானத்தை விட்டுவிட்டு நண்பர்களிடம், இன்னும் சிறிது காலம் தங்கிக்கொள்வதாய் கேட்ட அடுத்த நொடியே, மறுப்பு சொல்லாமல் தங்கிக்கொள் என்றார்கள்,

எப்படியோ அங்கேயே அட்டை போல் ஒட்டிக்கொண்டேன், வேறவழி இல்லைங்க என்ன பண்றது நீங்களே சொல்லுங்க, எல்லோரும் தன் ஊதியம் பத்தவில்லை என நிறுவனங்களிடம் வாதாடி கொண்டு இருக்கும் வேளையில் நானும் வாதாடினேன் என் அம்மாவிடம் 1000 ரூபாய் மட்டும் கொடுங்க அம்மா போதும், நான் சமாளிச்சுக்கிறேன் என. அம்மா அப்பாவோட ரத்தத்தை உறிவதைப்போன்ற உணர்வு ,நான் அவர்களிடம் மாதம் மாதம் பணம் கேட்கும் பொழுதெல்லாம்..

சண்டைக்கு தேவையான அனைத்தையும் தயார்செய்து விட்டேன், இனி போர்களத்தில் குதிப்பது தான் மீதம், எனது சுயவிவரம் , பணிபுரிந்துகொண்டு இருக்கும் அனுபவம், நிறுவனத்தின் விவரம் என அனைத்து விவரங்களையும் ,வேலை வாய்ப்பு வலைதளத்தில் பதிவு செய்துவிட்டேன். பதிவு செய்த சில மணி நேரங்களிலேயே எனது கைபேசி ஒலிக்கத்தொடங்கியது,

என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் காண்போம்...