Tuesday, April 8, 2014

எனதானவனின் மொழி..


கட்டிச்சோற்றை கட்டிக்கொண்டு காடு மேடல்லாம் திரிந்திருப்போம் ஏதோ ஒன்றுக்காய்., அனால் அது கடைசியில் வீட்டின் கொல்லைப்புறத்தில் கொட்டிக்கிடக்கும்.அதுவே வாழ்க்கையின் சாராம்சமும் கூட., தொலைத்துவிட்டு எங்கெங்கோ தேடி இருப்போம், அருகில் இருப்பதையறியாமல்.
 
அவன் பெயர் வேண்டாம் என நினைக்கிறேன்.நினைத்த நிமிடத்தில் மன்னிக்கவும் என மனதில் கூறிக்கொண்டு எனது பெயரை பதிவு செய்ய விரும்புகிறேன் “தேவி” என. மெட்ராஸ் கிளம்பும்போது தெரியாது அவனைச்சந்திப்பேன் என, அதற்காகவோ என்னவோ,”மெட்ராஸ்” லாம் போக வேண்டாம்., ஒரு நல்ல பையன பாத்துவைச்சு இருக்கோம் உன் திருமணத்திற்கு” என்ற எனது தாயின் குரலை தாண்டி, எனக்கென கால்தடம் பதிக்க கிளம்பினேன் மெட்ராஸ் நோக்கி.
 
மெட்ராஸ் எனும் உச்சரிப்பு மறந்து சென்னை என்று உச்சரிக்க பழகும் அளவிற்கு சென்னையின் அனைத்து இடங்களுக்கும் பொழுதுபோக்கிற்காகவும், வேலைக்காகவும் அலைந்து திரிந்திருக்கிறேன்.அப்படி தான் வழக்கமான தேடலில் அந்த அலுவலகத்தை முகாமிட்டிருந்தேன் அதிகாலையிலே., எனது தங்கும்விடுதியிலிருந்து கிட்டத்தட்ட நான்கு தோழிகள் என்னுடன் காத்திருந்தனர் அந்த நிறுவனத்தில் எப்படியாவது கால்பதிக்க.
 
சிறிது நேரத்தில் அவன் சில நண்பர்களுடன் வந்திருந்தான் என் முதல் பார்வை அவன் மீது விழவேண்டும் என விதியில் இருந்ததை விஸ்வரூபமாக்க…அத்தனை அமைதி அவன் கண்களில்.,முதல் பார்வையே என்னுள் ஏதோ செய்ய., பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு., அங்கும் இங்கும் சுழற்றிவிட்டு கடைசியில் “quantitive aptitude ” புத்தகத்தின் மீது பதித்தேன். அன்றாடம் ஆயிரம் முகங்கள் நமது கண்களில் விழுந்தாலும், ஏதோ ஒரு சில முகங்கள் மட்டும் கண்களில் பதிந்துகொண்டு, அழிந்துவிட அடம்பிடிக்கும்., அப்படி தான் உணர்ந்தேன் அப்பொழுது.
 
என்னையறியாமல் என் செயல்பாடுகள் அமைந்ததாலோ என்னவோ., உள்ளே எழுத்து தேர்வுக்கு அனைவரையும் அழைத்தபோது, ஒன்றன் பின் ஒன்றாய் செல்லும் பொழுது என்னையும் அறியாமல் அவனுக்கு அடுத்து செல்லவேண்டியதாயிற்று., ஒவ்வொருவராய் அமர., அவனது இருக்கைக்கு அருகாமையிலான மற்றொரு இருக்கையில் அமர்ந்தேன்., சிறிது நேரத்தில் கூட்டியும் கழித்தும் போராடினேன் எனக்கான அங்கீகாரத்துக்காய்., ஒரு சில வினாக்களை தாண்டி, மீதமுள்ள அனைத்திற்கும் பதிலடி தந்தேன் சரியான விடையில்.,விடைத்தாளை மூடிவைத்துவிட்டு காத்திருக்க., அவனும் எழுதிவிட்டு சரிபார்த்துக்கொண்டிருக்க., ஏதோ ஒரு சந்தேகத்தில் நிரப்பி வைத்த சில வினாக்களுக்கு மட்டும் அவனது விடைத்தாளில் விடை தேட, கண்களை சுழற்றினேன் அவனது விடைத்தாளின் பக்கம்., கிட்டத்தட்ட அனைத்து சரியான விடைகளும் அவனது விடைத்தாளிளிருக்க, ஏதோ ஒரு குருட்டு தைரியம் அவன் சரியே அனைத்து கேள்விகளிலும் என நினைக்க., அவனது விடைகளை நிரப்பி வைத்தேன் எனது விடைத்தாளில்.
 
அவனது விடைத்தாளை அவனது நண்பர்களுக்காய் உயர்த்திபிடிக்க, என்னுள் முடிவுசெய்து கொண்டேன் அவன் நிச்சயம் சரியே என., அவர்கள் எதோ சொல்ல., இவனும் ஏதோ சைகையில் காட்ட., புரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன்., எதேச்சையாய் அவனது பார்வை என் மீது திரும்ப., செய்வதறியாது நானும் உற்று நோக்க., அத்தனை பேசியது அவன் கண்கள்., ஒருசில நிமிடம் என்னுள் ஓராயிரம் கேள்விகள் ஒரு பார்வை, இத்தனை செய்யமுடியுமா என்னுள் என?.,என்னிடமும் அதே செய்கையில் என்ன?? என்பதை போல் புருவம் உயர்த்தி செய்கையில் ஏதோ கேட்க, ஒன்றும் இல்லை என தலையசைத்து உறுதிப்படுத்தினேன் அவனுக்கு.,
 
விடைத்தாள்களை ஒவ்வொருவராய் ஒப்படைத்துவிட்டு வெளியில் வர முயற்சிக்கையில்., தேர்வானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதாய் கூறிவிட்டு., இப்பொழுது கிளம்பலாம் அனைவரும், என்று முடிக்கையில்., அனைவரும் வெளியேறினோம் ஒன்றன் பின் ஒன்றாய்., அவனை தேடியது கண்கள்., நண்பர்களுக்கு கையசைத்து வழியனுப்பிகொண்டிருந்தான் தூரத்தில்., தோழிகளை வேகமாய் நடக்க அவசரப்படுத்தினேன் பேருந்து நிறுத்தத்தை நோக்கி., பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அவனிற்கு அருகாமையில் நெருங்க., எங்கிருந்தோ வந்த ஒரு பெண் அவனைதட்ட., திரும்பியவன் புன்னைகை உதிர்த்துவிட்டு கைகளை திருப்பினான் மெதுவாய்.,
 
இருவரின் விரல்களும் ஆயிரம் மொழிகள் பேச., சிரிப்பும், கோபமும், கிண்டலும்., கேள்விகளும் மாறி மாறி அவர்களிடம் கண்டேன், காதைபிளக்கும் சத்தங்களுக்கு நடுவே சத்தமேயில்லாமல் அழகாய்., அவர்களது காதுகள் வேலைகலற்று கிடக்க., உதடுகள் அவ்வப்பொழுது சத்தமில்லாத சிரிப்புகளை உதிர்க்க மட்டுமே உதவியது., கண்களும், விரல்களும் மட்டுமே பேசியது கண்களில் கண்ணீரை வரவழைத்தது என்னில், கடவுளை திட்டிக்கொண்டே.
 
என்னையும் அறியாமல் கண்ணீர் சொட்ட சொட்ட அவனையே உற்று நோக்கினேன்., இன்னும் இருக்கமாய் இதயம் அவனிடம் ஒட்டிக்கொண்டு வர மறுத்தது., தோழிகள் அனைவரும் அவனை நோக்கி ‘பாவம்’ என்ற ஒற்றை வார்த்தை உதிர்த்த போதும்., நான் மட்டும் தீவிரமாய் யோசித்துகொண்டிருந்தேன்., எப்படி இந்த விரல் மொழிகளை கற்றுக்கொள்வதென?., கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து அவனுக்கு மிக அருகாமையில் நின்றுகொண்டு கவனித்துகொண்டிருந்தேன். எப்படி?, பாவம் என்ற ஒற்றை வார்த்தை மட்டும் என்னால் உதிர்க்க முடியும்?., என்ன கணக்கோ, எப்படியோ தெரியாது முதல் பார்வையிலையே என்னிடம் ஏதோ திருடியவன்.,அசைக்க முடியா பந்தம் எனக்கும்., அவனுக்கும்., எந்நிலையிலும் மாறாத என் மனதிலிருந்து, எப்படி “பாவம்” என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் உதிர்த்துவிட்டு நகருவேன் அந்த இடத்திலிருந்து.,
 
தோழிகள் பேருந்து வந்துவிட்டதாய் கூறி பேருந்தை நோக்கி ஓட, நான் மட்டும் அங்கேயே நிற்க.. பிறகு மீண்டும் ஓடினேன் .,அவனும் அதே பேருந்தை நோக்கி ஓடிய பொழுது. எப்படியோ உள்ளே சென்று அவனருகே நின்ற பொழுது., சைகை காட்டினான் கிளம்புவதாய், உள்ளிருந்து வெளியே அந்த பெண்ணை நோக்கி. பேருந்து மெதுவாய் கிளம்ப., என்னை உற்றுநோக்கினான் மீண்டும்., எனக்கானவனாய் அவன் தோன்ற.,அவன் பேசா உதடுகளும், கேட்கா காதுகளும் தெரியவில்லை என் கண்களுக்கு., நானும் உற்று நோக்க ஆரம்பித்தேன் அவன் கண்களை., காதலிக்கும் முடிவுடன் …
 
“தாம்பரம் ஒரு டிக்கெட்”., அவன் உதடுகளில் இருந்து வார்த்தைகள் ஒலிக்க., ஆச்சர்யத்தில் உடல் முழுவதும் வியர்த்து, அப்பொழுது உதடும் காதல் மொழி பேச ஆரம்பித்தது…

0 comments:

Post a Comment