Tuesday, April 1, 2014

அழகென்றால் நீ…


உன்னுள், என்னை வளர்த்து பெருமிதம் காணும் உனைப்புரிந்துகொள்ள, சில ஆண்டுகள் பிடிக்கும் என்பதை நீயறிவாய். விட்டுப்பிடித்தலும், விட்டுக்கொடுத்தலும் தான், நீ எனக்காக சேர்த்து வைத்த ரகசியம் என அறிவேன்.
 
எப்பொழுதும் இன்னொரு கரம் இருக்கமாய் பற்றியே பள்ளி செல்ல பழகியவன் நான். நரம்பு பையை தோளில் போட்டுவிட்டு, ம்ம்ம் பிடித்துக்கொள் கெட்டியாக என்று, தன் கரத்தை எனக்கு தாரை வார்த்துவிட்டு முன்னே அடியெடுத்து வைக்கும் அக்காவிற்கு தெரியும், அன்போ, பயமோ ஏதோ ஒன்று அவளிடத்தில், என்னை இருக்கமாக்கியிருக்கிறதென்று.
 
எத்தனை அடி என்னிடம் வாங்கியிருந்தாலும், கம்பீரமாய் மிரட்டியிருக்கிறாள் பள்ளி அழைத்துசெல்லும் போதுமட்டும். ஏனென்றால் அவளது ராஜ்ஜியம் அங்கே தொடங்கிவிடும் அந்த 50 நிமிட பள்ளி நோக்கிய பயணத்தில். அவ்வப்பொழுது என்னிடம் கேள்விகளை வைப்பாள், “அடுத்த வருடம் ஆறாம் வகுப்பு வேற பள்ளிக்கு போய்டுவேன், அப்போ எப்படி போவ தனியா” என்பாள். ம்ம்ம் அதெல்லாம் போய்விட எனக்கு தெரியும், நீ தான் பெரிய சீமையா இந்த உலகத்துல, எனக்கே போகத்தெரியும் என்று சீரும் இடத்திலெல்லாம் அமைதிகாப்பாள்..ம்ம்ம் என்று பெருமை கொள்ளும் எனக்கு தெரியாது, என்மீதான பாசம் கலந்த பிரிவு, அவளை மௌனிக்க வைத்திருக்கிறதென்று.
 
“அம்மா, இன்னைக்கு மட்டும் நீ கொண்டு வந்து விடு” என்ற போது, “நீயே பயப்படாம போயிக்கிறதா அக்காட்ட சொன்னதா சொன்னாளே”என்றவளிடம்., ஆமா சொன்னேன் அதுக்கிப்போ என்ன?” என்றேன்.”இல்ல கண்ணு நீ தான் இனி போயிக்கணும், அக்காவும் வேற ஸ்கூல் போறா, அம்மாவுக்கு எத்தனை வேலை இருக்குன்னு தெரியும்ல, நீயே போயிக்க கண்ணு இந்த ஒரு வருஷம் மட்டும், அப்புறம் நீயும் அக்கா கூடவே போகலாம் ஆறாம் வகுப்பு அடுத்த வருடம்” என்றதும், மள மளவென கண்ணீர் கொட்டியது., நரம்பு பையை தரையில் போட்டுவிட்டு, கீழே விழுந்து உருண்டு புரண்ட போது, சற்று கண்ணை சுருக்கிக்கொண்டு அம்மாவை பார்த்த போது, கொஞ்சம் கலங்கித்தான் போயிருந்தாள். எப்படியும் கொண்டு வந்து விடுவாள் பள்ளியில் என்றொரு நம்பிக்கை பிறந்தது.
 
நன்றாய்த்தெரியும், வயல்காட்டில் வேலைசெய்து வியர்வையில் குளித்து இருக்கும் அவளுக்கு உண்ணக்கூட நேரம் இருக்காது என்று. எனக்காக இதைகூட செய்யமாட்டாள என்ற ஏதோ ஒரு பிடிவாதத்தில் அவளின் அசௌகரியங்களை நினைத்துப்பார்க்கவில்லை.”சரி சரி அம்மா வறேன் அழக்கூடாது” என்று அப்படியே வயல் அழுக்கோடு வந்தாள் என்னோடு.
 
அத்தனை சந்தோசத்தோடு, கரம்பிடித்து குதித்துக்கொண்டு, இது என்னாதும்மா, இது என்னாதும்மா என்று ஒவ்வொன்றாய் வழிநெடுக கேட்க, செல்ல கோபம் கொண்டாள்., “இத்தனை நாள் இப்டியேதான வந்த அக்கா கூட, இது தெரியாத உனக்கு” என்றாள். “ஒன்பதாவது வாய்ப்பாடு சொல்லு, பதினைஞ்சாவது வாய்ப்பாடு சொல்லுன்னு, அடிஸ்கேளுல மண்டை மண்டையா கொட்டினாம்மா, இது தெரியல இது தெரியலன்னு திட்டினா” என்று ஒவ்வொன்றாய் அக்காவை பற்றி புகார் தொடுத்துக்கொண்டே போக , கொஞ்சம் வாய்விட்டு சிரித்தே விட்டாள்.”சரி சரி என்று காணும் ஒவ்வொன்றையும் விவரிப்பதில் தொடங்கி, குட்டிகதைகள் கூறி முடிப்பாள்.
 
பள்ளி நெருங்கியதும், “சரி கண்ணு போய்ட்டுவா, அம்மா இப்படியே கிளம்புறேன்” எனும்போது உண்மையாய் அழுதேன் , பள்ளியின் நுழைவு வாயிலை தாண்டியும் வர வேண்டும் என., “அம்மா அழுக்கா இருக்கேன் கண்ணு, நல்ல சேலை கூட கட்டுல , நீ போய்ட்டுவா சாமி” என்று கெஞ்சிய போதும், விடாப்பிடிவாதத்தால் உள்ளே அழைத்து வந்து, சில நிமிடங்கள் இருக்க வைத்து போக வைத்தேன். “இவுங்கள உங்க அம்மா”, என்று சகமாணவர்கள் கேட்க , “ஆம்” என்ற போது., அதில் ஒருவன் “ஏன் அழுக்கா வந்து இருக்காங்க” என்று கேட்க., அத்தனை கோபம் அம்மாவின் மீது.,அந்தவயதிலையே கௌரவம் கற்றுத்தந்த இந்த சமூகம், யார் மீது கோபப்பட வேண்டும் என்று கற்றுத்தர மறந்துவிட்டது. “அம்மா அழகாக இருந்திருந்தால் இப்படி கேட்டு இருக்கமாட்டான்ல என்ற எதோ ஒரு வேகம் என்னுள் பரவியிருந்தது.
 
அடுத்த நாள் அதே நேரம், அதே இடம் அம்மாவை நிறுத்தி, காத்திருந்தேன் அந்த சக மாணவனுக்காய்.இந்த முறை முற்றிலும் வித்தியாசமாய்., “ஏன்டா கண்ணு, என்னடா ஆச்சு உனக்கு, ஏன் இப்டியெல்லாம் பண்ற” என்ற தொடர்ச்சியான அம்மாவின் கேள்விக்கு., “நீ சும்மா இருமா உனக்கு ஒன்னும் தெரியாது” என்று கோபம் பறக்கும் கண்களுடன் நின்றிருந்தேன்.,”நேரம் ஆச்சு கண்ணு அம்மாவுக்கு, இன்னும் மூணு வயலு தண்ணி பாய்க்காம கிடக்கு, அப்பா வந்தா திட்டுவாரு” என்ற அம்மாவின் கெஞ்சல்கள் காதில் விழுந்ததோடு சரி, அதற்கான பதில்களை தரும் நேரம் இல்லை., எனது பார்வையெல்லாம் அந்த சக மாணவனுக்காய் மட்டுமே இருந்தது.
 
இதற்கிடையில் தோழி சுதா, அருகே வந்து “என்ன விஜய், உங்க அம்மாவ இவுங்க என்றாள், ஆம் என்று பெருமிதத்தோடு சொன்ன என்னிடம்., இவ்ளோ அழகா இருக்காங்க,தினேஷ் எதோ உங்க அம்மா அழுக்கா வந்ததா சொன்னானே என்றாள்., “நல்லா பாத்துக்க, தினேஷ்கிட்ட சொல்லு போயி, எங்க அம்மா எவ்ளோ அழகு என்று என்று முடித்தேன்.
 
கண்கள் கலங்க, மெதுவாய் சிரித்தாள் என் தலை களைத்து., “அட இதுக்கா சாமி. சின்ன வேலை சொன்னாகூட கேட்காத என் கண்ணு, நேத்து சாயங்காலமே, நம்ம தோட்டத்து பூவ பறிச்சு, கட்ட சொல்லி நாளைக்கு நீ வைக்கணும் அம்மான்னு சொல்லி, அதிகாலையிலே குளிக்க சொல்லி., எண்ணெய் வைத்து, தலைவார சொல்லி., பூவைக்க சொல்லி., நல்ல புடவை கட்ட சொல்லி உருண்டு புரண்டு அழுது, இப்டி கொண்டு வந்து நிறுத்துனது இதுக்குதான?., என்றவளிடம்., “ஆம் என்றதும்”., ” ஏன் கண்ணு அம்மா அழகுபடுத்திகிட்டு,சினிமாவ நடிக்க போறேன், வயக்காட்டுல தான சாமி கிடக்க போறேன்னு” சொன்ன போது., “அதெல்லாம் முடியாது இனி நீ தான் பள்ளிக்கூடம் வரணும் என்று நான் முடிக்கும்போது., “என் மகனல்லவா இவன், எப்படி விட்டுகொடுப்பான் என்னை?” என்ற பெருமிதம், அவள் கண்களில் ஒட்டியிருந்தது..

0 comments:

Post a Comment