Tuesday, August 17, 2010

என்னை எனக்கே அறிமுகம் செய்த அந்த நாட்கள்...



வாழ்க்கை புத்தகத்தின் "சந்தோசம் "எனும் ஒரு பக்கத்தை தேடிக்கொண்டிருந்த நாட்களில் நான் படிக்காமலே விட்டு சென்ற பக்கங்கள் ஏராளம், அப்படி இருந்தும் வாழ்க்கையின் சில பக்கங்கள், வாழ்க்கையின் முக்கியத்துவத்தை கற்று தர மறக்கவில்லை,வாழ்க்கையை கற்று தந்த பக்கங்களைத்தான் இப்பொழுது உங்களுக்காய் திறந்து வைக்கிறேன்.மிகச் சிறந்த மனிதனில்லை நான், சரித்திரங்களும், சாதனைகளும் இருப்பதற்கு. இயல்பான மனிதன், என் வாழ்க்கை பக்கத்தில் படிக்க போகும் யாவும் உங்களுக்குள் கடந்த சென்ற ஒன்றாகத்தான் இருக்கும்.

என்னை பொறுத்தவரை அனைத்து நாட்களும் ஒன்று தான், நான் என் வாழ்க்கையை தேடிய அந்த 2007 ஆம் ஆண்டில். அவசர அவசரமாய் உடுத்தும் ஆடைகளை பையில் திணித்துக்கொண்டு, "சரி வருகிறோம், அலுவலகத்திலிருந்து அப்படியே (சொந்த) ஊருக்கு போய்விடுவோம்" என்று அதிகாலையில் அறை தோழர்கள் சொல்லி முடிக்கும் பொழுது, அன்றைய தினம் வெள்ளிகிழமை என்பது புரிந்திருக்கும் என் மனதிற்கு, இரவு பகல் என அனைத்து நேரங்களிலும் தனது சந்தோசத்தை கணினியோடு பகிர்ந்துவிட்டு, நிஜ சொந்தங்களோடு பகிர்ந்துகொள்ள அத்தனை ஆனந்தமாய் விடியும் ஒவ்வொரு வெள்ளிகிழமைகளும் அவர்களுக்கு. வேலை கிடைத்த பின்பு தான் ஊருக்கு செல்வேன் என்று முடிவை மூச்சாய் சுவாசிக்கும் எனக்கு, நீ தனிமை படுத்தபடுகிறாய் என்பதை சொல்லும் ஒவ்வொரு வெள்ளிகிழமைகளும் எனக்குள் கற்றுத்தந்த பாடங்களை பத்திரமாய் இருக்கி கட்டியணைத்து வைத்து இருக்கிறேன் இன்றும். அப்படி தான் அந்த வெள்ளிகிழமையும், எனக்கான ஒரு பாடத்தையும், உணர்வு பரிமாற்றத்தையும் கையில் வைத்து காத்து கொண்டிருந்தது...

நண்பர்கள் அலுவலகத்திற்கு கிளம்பும் வரை எழுவதில்லை நான், அதற்கான காரணங்கள் மிகப்பெரியதாய் ஒன்றுமில்லை, சென்னையில் வாடகை வீட்டில் தங்கும் அனைவரும் சந்திக்கும் ஒன்று தான், குளியலறையும், கழிவறையும் ஒன்றாக கட்டி, ஒரே கதவில் காசை மிச்சபடுத்தி இருக்கும் நுட்பம் தெரிந்தவர்கள் வீட்டுசொந்தக்காரர்கள் என்று பெருமூச்சை மட்டுமே விட்டுசெல்லும் சராசரி மனிதனில் தான் நானும் .

அன்றும் வழக்கம் போல், பொய்யாய் கண்விழித்த சிறிது நேரத்தில்,அனைத்தையும் முடித்துவிட்டு, காலை உணவு என்பதை சாலையோர தேனீர் கடையின் ஒற்றை கோப்பை தேநீரில் வழக்கம் போல் முடித்தேன், மதிய உணவு என்பதும் தூக்கத்தில், படித்ததை திரும்ப திரும்ப நேர்முகத்தேர்விற்காய் முயற்சி செய்த தருணத்தில் முடிந்தது. எங்கெங்கோ அமைதிக்காய் தெருக்களை தனிமையில் சுற்றி, சில இடங்களில் அமர்ந்து சுமைகளை துளைத்ததாய் நினைத்து, சுற்றி முடித்து வீடு திரும்பினேன்,

என் அறைகதவை திறக்க முயற்சி செய்கிறேன், கதவருகே வாழ்க்கையின் நிமிடங்களை எண்ணிக்கொண்டு இருக்கிறது அணில்குட்டி, கால்கள் அடிபட்ட நிலையிலும் என்னை கண்டதும், நகர்ந்து ஓட முயற்சிக்கும் அதன் இயலாமையை கண்டதும் கண்கள் கலங்கித்தான் போகின, அதன் கூரிய கண்களில் தான் அதன் வலியை என்னால் உணர முடிந்தது, அவ்வளவு முயற்சித்தும் நகர்ந்த தொலைவு மிகக்குறைவே, ரத்தம் கசியும், வலியை தாங்கமுடியா அந்த தருணத்தில் கூட இன்னொரு ஜீவன் ஆதாயம் தேடுகிறது இந்த அணில்குட்டியிடமிருந்து, என் அத்தனை கோபமும், அணில்குட்டியின் காயத்தில் ஆதாயம் தேடிய எறும்புகளின் மீது திரும்பியது, அவசரமாய் காப்பாற்றும் எண்ணத்தில் என் அறிவுக்கு எட்டாமல் போய்விட்டது அணில்குட்டிக்கு கடிக்க தெரியும் என்று, ரத்தம் சொட்டும் அளவுக்கு கடித்துவிட்டது, அவசரமாய் அறைக்குள் ஓடி, கைகள் முழுக்க துணியை கட்டிக்கொண்டு, அணில்குட்டியை கையிலெடுத்து எறும்புகளை தட்டிவிட்ட நேரத்தில் அதற்க்கு புரிந்ததோ இல்லையோ நான் காப்பாற்ற வந்தவன், கொல்லவந்தவன் அல்ல என்பது, காப்பாற்றிவிட்டேன் என்ற சந்தோசத்தில் ஓரிரு நிமிடம் நகர்ந்தது எனக்கு.

இப்படி காப்பாற்ற பாடுபடும் நான் உண்மையில் எப்படி பட்டவன்?..

பள்ளிவிடுமுறை நாட்களை, பயிற்சிவகுப்புகள் தின்ற மீதியை, அணில்பிடிக்கவும், ஓனாய் அடிக்கவும் உபயோகபடுத்துபவன், இடுப்பில் நிற்க அடம்பிடிக்கும் கால்சட்டையை,அரைஞான்கயிறைக்கொண்டு இருக்கி கட்டிவிட்டு, மேல்சட்டை இல்லாமல், கால்களில் காலனி இல்லாமல், நெறிஞ்சி முற்களையும், தீயாய் சுடும் காட்டு மண்ணிலும், சுட்டெரிக்கும் வெய்யலிலும்,துரு துருவென ஓடி, துரத்தி துரத்தி கொல்வதில், சாதித்த திமிரு ஒட்டிக்கொண்டு மீண்டும் அடுத்த விடுமுறைக்கு வித்திடும் கொஞ்சம் கொடூரமான மிருகம் தான் நானும், அணில்களை பிடிப்பதற்காக, தந்திரமாய் யோசித்து வலைகளை விரித்து வைத்துவிட்டு, துரத்தி வந்து வலையில் விழ செய்து சாதித்ததாய் பெருமிதம் கொள்ளும் திமிர்பிடித்த சிறுவன் தான் நானும். அவற்றை என் நண்பர்கள் கொன்று பையினுள் போடும்பொழுது கொஞ்சம் கனக்கத்தான் செய்யும் அந்த கணங்களில், ஆனாலும் அவ்வளவாய் பாதிப்பதில்லை அந்த சாவுகள்,இப்பொழுது மட்டும் இவ்வளவு கனமாய் கனக்கிறது ஏன்?, காயத்தை கண்ட அந்த கணத்தில்.

அறைக்குள் அங்கும் இங்கும் ஓடி ஒரு அட்டை பெட்டியை கண்டுபிடித்துவிட்டேன், அதற்குள் அணில்குட்டியை விட்டுவிட்டு, பதற்றத்தில் யோசிக்க ஆரம்பித்தேன் , என்ன செய்வது, எப்படி காப்பாற்றுவது என்று ஆயிரம் கேள்விகள் , அங்கும் இங்கும் அறைக்குள் ஓடுகிறேன், அவசர அவசரமாய் அனைத்தும் நடக்கிறது, வெட்டு காயத்திற்கு போடும் மருந்தை நீண்ட நேரத்திற்கு பிறகு கண்டுபிடித்ததில் அத்தனை சந்தோசம், மருந்தை காயத்தின் மேல்இட்டுவிட்டு, அதற்கு சாப்பிட தக்காளி பழத்தை சிறு துண்டுகளாக்கி அட்டைபெட்டியில் வைத்துவிட்டு, சாப்பிடு சாப்பிடு என்று கெஞ்சுகிறேன், வலியின் வேதனையில் சாப்பிட மறுக்கிறது அணில்குட்டி, கொஞ்சமாவது சாப்பிடு என்று கெஞ்சுகிறேன், சிறிது நேரத்தில், தக்காளியை அணில் உண்ணாதோ என்ற கேள்வி?,என்னை அடுத்து ஒரு முயற்சிக்கு அவசரப்படுத்தியது, அடுத்த நாள் காலை உணவிற்கு என தேற்றிவைத்து இருந்த தேநீருக்கான சில்லரைகள் அவசரமாய் சாலையோர கொய்யாக்காய் விற்கும் பாட்டியிடம் சேர்க்கப்பட்டது, சேர்த்துவைக்கப்பட்ட சில்லரைகளின் தியாகத்திற்கு இணையாய் கொய்யாக்காய் என் கைகளில். ஓட்டமும் நடையுமாய் வந்து சேர்ந்தது என் உயிர், இறந்துவிடக்கூடாது மற்றொரு உயிர் என்ற நினைவில்.

சிறு சிறு துண்டுகளாக்கி வைத்துவிட்டு, ஒன்றையாவது சாப்பிடு, ஒன்றையாவது சாப்பிடு என்று ஏங்கிக்கொண்டு இருக்கிறது ஏதோ ஒன்று என்னுள் , உண்டால் உயிர்பிழைத்துவிடும் என்று எதேதோ கணக்கு போட்டுகொண்டு இருக்கிறது, உயிர் போகும் வலியை உணர்ந்துகொண்டு இருக்கும் அதனால் உண்ண முடியாது என்பதை ஏதோ ஒன்று ஏற்க மறுக்கிறது, சாப்பிடு சாப்பிடு என்று அதனுள் திணிக்க முயற்சிக்குறேன் தோல்வி தான் கிட்டும் என்று தெரிந்தும். முட்டாள் தனமாய் யோசிக்க செய்தன என்னுள் அந்நேரத்தில்,தனியாக விட்டால் சாப்பிடுமோ என்ற ஏதோ ஒரு நப்பாசையில் ஒளிந்துகொண்டு பார்த்தேன், சாப்பிடுமோ என்று.

என் அனைத்து திட்டமும் பலிக்கவில்லை, நேரம் கடக்க என்னுள் ஏதோ ஒரு இனம் தெரியா சோகம் என் கன்னத்தோடு ஒட்டியிருந்ததை என்னால் உணரமுடிந்தது, ஏனோ சாப்பிட பிடிக்கவில்லை, நேர்முகத்தேர்வுக்கான பயிற்சியும், படித்தலும் நடக்கவில்லை, எண்ணங்கள் முழுதும் நிரம்பியிருந்தது அதன் மேல் மட்டுமே, பெட்டியை என் படுக்கைக்கு பக்கத்தில் வைத்துகொண்டே கவனித்துக்கொண்டே உறங்கிப்போனேன், திடீரென கண்விழித்த தருணத்தில் எறும்புகள் மீண்டும் ஆதாயம் தேடிக்கொண்டு இருந்தன உயிருக்கு போராடும் அணில்குட்டியின் காயத்திலிருந்து ,இரவு முழுவதும் பெட்டி இடம் மாற்றம் செய்ய பட்டுகொண்டேயிருந்தது, கண்கள் திறக்கும் தருனங்களிளெல்லாம் அதன் நிலையை அறிய முயற்சிக்க மறக்கவில்லை.

அடுத்த நாள் கண்விழிப்பில், அவசர அவசரமாய் பெட்டியை பார்த்த எனக்காய், கண்ணீரை விட்டு சென்று இருக்கிறது அந்த அணில்குட்டி, என் அத்தனை முயற்சியும் தோற்றுவிட்டது, நான் உறங்கிக்கொண்டு இருந்த எந்த நிமிடத்தில் தன் உயிரை விட்டதோ?, அசைவுகளோடு பாவமாய் உற்று நோக்கிய அதன் கண்கள், அசைவற்று.. அழுதுகொண்டே எனக்குள் கேட்டுக்கொண்டேன் , அன்று அறியா வயதில் உயிரை எடுக்கும் உரிமை கிடைத்த எனக்கு, இன்று அறிந்த வயதில் உயிரை கொடுக்கும் உரிமை இல்லாமல் போயிற்று, எனக்குள்ளும் மனிதம் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக்கிடக்கிறது என்று புரிய வைக்க ஒரு உயிர், உயிரை விட்டு இருக்கிறதா?, பற்களை கடித்துக்கொண்டு துரத்தி துரத்தி கொன்ற கொடூரன் இப்பொழுதில்லை, என்னுள் மனிதம் துளிர்க்கசெய்து ,மரித்துவிட்டது அணில்குட்டி. இதயம் கனக்கிறது...இன்னும் மறையாமல்...

                                                                                         
                                             

50 comments:

Ramesh said...

கிளாசிக் பதிவு விஜய்...நெஞ்சை கணக்கச் செய்தது...உங்கள் பதிவு....

ஜீவன்பென்னி said...

//எனக்குள்ளும் மனிதம் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக்கிடக்கிறது என்று புரிய வைக்க ஒரு உயிர், உயிரை விட்டு இருக்கிறதா?//

உயிருள்ள வரிகள். ஆனால் விடை தெரியாக் கேள்வி.

விஜய் said...

மிக்க நன்றி அன்பின் ரமேஷ் ,

என் அணைத்து பதிவையும் படித்து, என்னை ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி ரமேஷ்...

பதிவுகளை தாண்டியும் ஒரு அழகான உங்கள் நட்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி...உங்கள் ஊக்குவிப்பு என் எழுத்துகளை அழகானதாய் மாற்றும் என்று கூறி கொள்கிறேன் ரமேஷ் ..

விஜய் said...

மிக்க நன்றி அன்பின் ஜீவன் ,

வாழ்கையின் ஒவ்வொரு வினாடியும் நமக்கு ஏதோ ஒன்றை கற்று கொடுக்கிறது என்பது சில இழப்புகளுக்கு, சில சாதித்தல்களுக்கு பிறகு தான் நம் மனதோடு உணர வைக்கிறது..ஒன்றன் இழப்பில் இன்னொரு கற்றல் ஆரம்பமாகிறது ,என்ன செய்ய , உணரத்தான் முடிகிறது, இயற்கையின் முடிவை மாற்ற சில நேரங்களில் முடிகிறது, சில நேரங்களில் இயல்வதில்லை..

அருண் பிரசாத் said...

அருமையான பதிவு.

வாழ்த்துக்கள் விஜய்

விஜய் said...

மிக்க நன்றி அன்பின் அருண் ,

என் ஒவ்வொரு பதிவுகளிலும் உங்கள் பின்னூட்டத்தை பார்க்கிறேன் , மிக்க நன்றி அருண். இது போன்ற உங்கள் கருத்துரை மிக்க அவசியம் எனக்கு ..
நன்றி அருண்

Chitra said...
This comment has been removed by the author.
dheva said...

ஒரு எழுத்து, ஒரு வாசிப்பு, ஒரு பக்குவம், ஒரு மனிதாபிமானம், ஒரு பொறுமை, ஒரு ஆனந்தம்.....

பல பரிணாமங்களில் என் தம்பி விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்திருக்கிறாய். அன்பு செலுத்த எதுவாய் இருந்தால் என்ன...அணில் குட்டியின் வலியை நீ வாங்கி எழுத்தில் பரவிட்டிருக்கிறாய்...

கலக்கமாய்...கண்கள் கலங்கசெய்து விட்டது உன் பதிவு....

படைப்பாளிக்கு என் வாழ்த்துக்கள் !

Chitra said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.....
அருமையான எழுத்து நடையில், மனதை கனக்க வைக்கும் அளவுக்கு இருக்குதுங்க.... உங்களிடம் நல்ல திறமை இருக்கிறது. பாராட்டுக்கள்!

விஜய் said...

மிக்க நன்றி சித்ரா அக்கா ,

நீங்கள் இங்கே விட்டு செல்கிற கருத்துரை நிச்சயம் அடுத்தமுறை என் எழுத்துக்களை இன்னும் அழகானாதாய் மாற்றி இருக்கும் என்றே நம்பிக்கை கொள்ளுங்கள் .

மிக்க நன்றி அக்க உங்கள் பின்னூட்டத்திற்கு

விஜய் said...

ஆயிரம் நுணுக்கங்களை கற்றுகொடுத்துவிட்டு, தூரமாய் அமைதியாய் நின்று வேடிக்கை பார்க்கும், குருவாய், தோழனாய், சகோதரனாய் உங்களை காண்கிறேன்..

இங்கே கிடைக்கும் அணைத்து வாழ்த்துக்கும் நேர்முகமாய் நான், மறைமுகமாய் நீங்கள் ....

விஜய் said...

இங்கே கிடைக்கும் அணைத்து வாழ்த்துக்கும் நேர்முகமாய் நான், மறைமுகமாய் நீங்கள் ....தேவா அண்ணா

சௌந்தர் said...

எனக்கு அணில் என்றால் ரொம்ப புடிக்கும் கண் கலங்குகிறது...உங்கள் மனது மிகவும் மென்மையானது

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான பதிவு.

விஜய் said...

மிக்க நன்றி ஜெயந்த்,
உங்கள் வருகைக்கும், உங்களது பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஜெயந்த்...மீண்டும் வருக

விஜய் said...

அன்பின் சௌந்தர்,

:) ..

ரொம்ப மென்மையானவன் அப்டின்னு இல்ல சௌந்தர், ஒவ்வொருத்தர் மனதிற்குள்ளும், ஒரு நல்லவனும், கெட்டவனும் இருக்கிறான் என்பதை படித்து இருக்கிறேன், அது மிகவும் உண்மையான ஒன்று என்பதை நான் புரிந்து கொண்ட அந்த தருணத்தை தான் இங்கு நான் பதிவின் மூல வெளிப்படுத்தி இருக்கிறேன் சௌந்தர்...மிக்க நன்றி சௌந்தர் உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்

செல்வா said...

///ரத்தம் கசியும், வலியை தாங்கமுடியா அந்த தருணத்தில் கூட இன்னொரு ஜீவன் ஆதாயம் தேடுகிறது இந்த அணில்குட்டியிடமிருந்து, என் அத்தனை கோபமும், அணில்குட்டியின் காயத்தில் ஆதாயம் தேடிய எறும்புகளின் மீது திரும்பியது///
ஐயோ.. அப்படியே சிலிர்க்க வச்சுட்டீங்க அண்ணா..
//முட்டாள் தனமாய் யோசிக்க செய்தன என்னுள் அந்நேரத்தில்,தனியாக விட்டால் சாப்பிடுமோ என்ற ஏதோ ஒரு நப்பாசையில் ஒளிந்துகொண்டு பார்த்தேன், சாப்பிடுமோ என்று.///
சில நேரங்களில் நானும் அப்படித்தான். குருவிக் குஞ்சைப் பிடித்து சாப்பாடு வைப்பது , பொன்வண்டினைப் பிடித்து விளையாடுவது எல்லாமே அந்த வயதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.

AltF9 Admin said...

அருமையான பதிவு விஜய் , இதையெல்லாம் கடந்துவந்தவன் என்ற வகையில் உனது வலிகளை என்னால் உணர முடிகிறது, தொடரு நண்பா உனது பயணத்தை...

விஜய் said...

மிக்க நன்றி செல்வா தம்பி,

இவைகள் நம்மில் பலபேர் கடந்துவந்த பாதை தான் தம்பி, நிச்சயம் இந்த பதிவை படிக்கும் பொழுது கடந்து வந்த குறும்புகள் நிறைந்த அந்த காலம் நிச்சயம் மனதோடு மௌனமாய் படரும் என நான் நம்புகிறேன் ..

நன்றிப்ப உன் வருகைக்கும், கருத்துரைக்கும் ...

விஜய் said...

மிக்க நன்றி அன்பின் சிவா,

என் பதிவுகள் சரியான பாதையில் பயணிக்கிறது என்பதை உங்களின் கருத்துரையிலிருந்து அறிவதில் மிக்க மகிழ்ச்சி தோழா சிவா, கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து போனாதாய் உணர்ந்த தருணங்களை தான் இங்கே பதிவை பகிர்ந்து இருக்கிறேன், நான் எழுதிய விதம் சரியாக சென்றுல்லாதா என்பதை உங்கள் கருத்துரையிலிருந்து அறிகிறேன்.

மிக்க நன்றி சிவா

அமைதி அப்பா said...

//இடுப்பில் நிற்க அடம்பிடிக்கும் கால்சட்டையை,அரைஞான்கயிறைக்கொண்டு இருக்கி கட்டிவிட்டு, மேல்சட்டை இல்லாமல், கால்களில் காலனி இல்லாமல், நெறிஞ்சி முற்களையும், தீயாய் சுடும் காட்டு மண்ணிலும், சுட்டெரிக்கும் வெய்யலிலும்,துரு துருவென ஓடி, துரத்தி துரத்தி கொல்வதில், சாதித்த திமிரு ஒட்டிக்கொண்டு மீண்டும் அடுத்த விடுமுறைக்கு வித்திடும் //

கிராமத்து சிறுவர்களையும், அவர்களின் செயல்களையும் கண் முன் நிறுத்திவிட்டீர்கள்.

வளர்ந்தபின் உங்களிடம் ஏற்பட்ட மாற்றம், எல்லோரிடமும் ஏற்பட்டால் சமூகத்தில் அமைதி நிலவும் என்பதில் சந்தேகமில்லை.

நல்ல பகிர்வு. பாராட்டுக்கள்.

நேரம் கிடைத்தால் இதைப் படித்து கருத்துச் சொல்லவும்.
http://amaithiappa.blogspot.com/2010/08/blog-post.html

விஜய் said...

மிக்க நன்றிங்க அன்பின் அப்பா,

நிச்சயம் நீங்கள் நினைப்பதுபோல் நடக்கும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும், எத்தனையோ நல்உள்ளங்கள் வளர்ந்து கொண்டு தான் வருகின்றன, உதாரணம் உங்கள் பதிவிலிருந்தே சொல்ல முடியும், நிச்சயம் வலிமையான பாரதம் உருவாகும், இது வெறும் வார்த்தைக்கான வாக்கியம் இல்லை , உண்மையான ஒன்று தான் அப்பா ..

க ரா said...

ரொம்ப நல்ல எழுத்து...

கருடன் said...

விஜய்!! இது மாதிரி சின்ன சின்ன விஷயம் எல்லார் வாழ்க்கைலயும் நடக்கரது சகஜம். ஆன அந்த வலி மத்தவங்க உனர்கின்ற அலவு எழுதர உன் திறமை, எழுத்து நடை நன்று!!!

ஜில்தண்ணி said...

//// அன்று அறியா வயதில் உயிரை எடுக்கும் உரிமை கிடைத்த எனக்கு, இன்று அறிந்த வயதில் உயிரை கொடுக்கும் உரிமை இல்லாமல் போயிற்று, எனக்குள்ளும் மனிதம் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக்கிடக்கிறது என்று புரிய வைக்க ஒரு உயிர், உயிரை விட்டு இருக்கிறதா? ////

அண்ணா அணில் தானே என்று அசட்டுத்தனமாக பார்க்கும் பார்வை வேறு, அணிலையும் நம்மை போன்ற உயிராக பார்ப்பது மனிதத்தின் உச்சம்,அது எல்லோருக்கும் வராதல்லவா

அந்த உயிரின் வலியை உணர்ந்து எழுதிய எழுத்துக்களுக்கு ஒரு சலாம் :)

உங்கள் தேர்ந்த மனதையும் அனுபவத்தையும் இந்த சாமான்ய தம்பிங்களுக்கு தொடர்ந்து ஊட்டுங்க :)

Unknown said...

எவ்வளவு அழகா எழுதியிருக்கீங்க விஜய்.. ரொம்ப நல்லாயிருக்கு..

படிக்க படிக்க அடுத்து என்னாகுமோன்னு ஒரு நிலையை ஏற்படுத்தறது ரொம்ப கஷ்டம்.. அது உங்க எழுத்தக்கள்ல இருக்கு.. வாழ்த்துக்கள்..

விஜய் said...

மிக்க நன்றிங்க அன்பின் இராமசாமி கண்ணண்,

நீங்கள் என் வலைதளத்துக்கு வந்து , எனது பதிவை படித்து உங்களது கருத்தை பகிர்ந்து கொண்டதிற்கு மிக்க நன்றிங்க ..நிச்சயம் இனி வரும் பதிவுகள் உங்கள் கருத்துரைகளால், நிச்சயம் இன்னும் தரமானதாய் இருக்கும் அன்பின் இராமசாமி கண்ணண்,அவர்களே..

மிக்க நன்றி உங்கள் வருகைக்கு

விஜய் said...

மிக்க நன்றிங்க அன்பின் TERROR-PANDIYAN(VAS)

நான் நீங்க சொல்லுகிற அளவுக்கு எழுதி இருக்கிறனா என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் ஓன்று நிச்சயம் உங்கள் ஊக்கமிகு கருத்துரையால் எனக்கான பொறுப்புகள் அதிகமானதாய் உணருகிறேன்..நீங்கள் இப்பொழுது விட்டு செல்லும் கருத்துரை நான் சரியானா பாதையில் செல்வதாய் உணர்த்துகிறது ...

மிக்க நன்றிங்க அன்பின் பாண்டியன் ...

விஜய் said...

அன்பின் ஜில் தண்ணி தம்பி

உங்களுக்கு கற்பிதம் ஊட்டும் அளவுக்கு நான் இன்னும் வளருல தம்பி, நானும் இன்னும் கத்துக்குட்டி தான் பா.நான் உங்களை மாதிரி தம்பிகிட்ட இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறையா இருக்குப்பா ..

மிக்க நன்றிப்ப உன் வருகைக்கும், வாழ்த்துக்கும்

விஜய் said...

அன்பின் பாபு

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும்,
வாழ்த்துக்கும்.

என்ன ரொம்ப நாளா பதிவை போட காணோம், நீங்க போடுகிற படவிமர்சனம் பார்த்து தான் நான் இங்கிலீஷ் படங்களா தேடி தேடி பார்க்க ஆரபிச்சு இருக்கேன், அடுத்து ஒரு பட விமர்சனம் சீக்கிரம் உங்ககிட்டு இருந்து எதிர்பார்க்கிறேன், நீங்க எழுதுறத பாதிக்கும் பொழுதே அந்த படத்த பாக்கணும் போல இருக்கும் ...

நிலாமதி said...

சிறுவயதுக் குறும்பு .........அனுபவ பாடத்தில் உங்களை இத்ததனை தூரம் சிந்திக்க் வைத்து இருக்கிறது .அழகான் தமிழ் எழுத்து நடை. வாழ்த்துக்கள் .

விஜய் said...

மிக்க நன்றிங்க அன்பின் நிலாமதி அக்கா,
பக்குவம் அடைஞ்சுட்டேன் அப்டின்னு சொல்ற அளவுக்கு இன்னும் வரல நான், ரொம்ப நன்றிங்க அக்கா உங்க பின்னூட்டத்திற்கு, நான் அழகா எழுதுறேன் அப்டின்னு யாரவது பாராட்டினாங்க அப்டினா, அதுல உங்கள் ஊக்குவிப்பும் கலந்து இருக்கும்,....இன்னும் அழகாய் எழுத முயற்சிக்குறேன்..

மீண்டும் ஒருமுறை நன்றி உங்க வருகைக்கும், வாழ்த்துக்கும் அக்கா ...

எஸ்.கே said...

மனதை ஏதோ செய்கிறது உங்கள் பதிவு!

mkr said...

வலி உங்கள் எழுத்துகளில் தெரிகிறது.அருமையான பதிவு.(அப்புறம் பான்ட் பிரச்சனை இருப்பதால் உங்களது பதிவில் சில எழுத்துகள் தெரிவதில்லை)

நான் நான்தான் !... said...

ஹாய் விஜய்!...

//மனிதம் துளிர்க்கசெய்து ,மரித்துவிட்டது அணில்குட்டி//

சிறு வயதில், நம்முடைய ஆசைகளும், விருப்பங்களும் மட்டும்தான் நமது கண்களுக்கு புலப்படும்.
நம் சந்தோசத்திற்காக நாம் பல உயிர்களை கஷ்டப்படுத்தியதுண்டு. ஆனால் தெளிந்த வயதில் நாம், நமக்கு தெரிந்து யாருக்கும் தீங்கு நினைப்பதில்லை. அதை சரியாக சொல்லியிருக்கிறீர்கள், உங்கள் நிகழ்வின் மூலம்.

மற்றவர்களின் நலனை பெரிதாய் நினைக்கும் உங்களுக்கு, நலம் மட்டுமே சேரட்டும்.

வாழ்த்துக்கள்.

இவண்:
உங்கள் ரசிகன்

விஜய் said...

மிக்க நன்றிங்க அன்பின் எஸ்.கே,

நீங்கள் என் எழுத்து மனதை சலனப்படுத்துவதாக சொல்லி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது..

படிப்பவர்களை சலனபடுத்தும் அளவிற்கு என் எழுத்துகள் இருக்கிறதா என்று தெரியவில்லை, இருப்பினும் இன்னும் நன்றாக எழுத முயற்சி செய்கிறேன் தோழரே ..

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் எஸ்.கே, தோழரே

விஜய் said...

மிக்க நன்றிங்க அன்பின் mkr ,

மிக்க நன்றிங்க mkr ..உங்கள் ஊக்குவிப்பு தான் எனக்கு கிடைக்கும் பெரிய பரிசுகளாய் எண்ணுகிறேன் . font பிரச்சனையை சரி செய்ய முயலுகிறேன் நிச்சயம் mkr ... உங்க பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றிங்க ...

மீண்டும் வருக

விஜய் said...

ஹை சந்துரு,,

வாங்க வாங்க, ரொம்ப நாளா உங்களை காணோம்னு பார்த்தேன், நாம் அலுவலகத்தில் அமர்ந்து இருப்பது, பக்கத்து இருக்கைகள் தான் என்றாலும், ஒவ்வொரு பதிவிற்கும் உங்களுது கருத்துகளை மறக்காமல் பின்னோட்டம் மூலமாவும், நேரடியாகவும் சொல்வது மிக்க மகிழ்ச்சி சந்துரு, அதுமட்டும் இல்ல, நீங்க பார்த்து சரி சொல்றதுக்கு அப்புறம் தான் என்னுடைய நிறையா பதிவுகள் வெளி வருது ..ஆஹா ஹ ஹாஹ் ..

.படிச்சுட்டு போறது மட்டும் இல்லாம தவறுகளை திருத்த சொல்றது நிஜமா அருமை..

அதனால அதுல நான் உங்க ரசிகன் ....

vasan said...

விஜ‌ய்,
அந்த‌ந்த‌ வ‌யதில் அப்ப‌டிய‌ப்ப‌டித்தான் ம‌ன‌து அலையும்.
அப்பாவையே எதிரியாய்,தான் ம‌ட்டுமே ச‌க‌ல‌க‌லா வல்ல‌வ‌னாக‌, ச‌க‌வ‌ய‌து பெண்க‌ளையெல்லாம் காத‌லியாக‌, நினைப்ப‌து நிய‌திதான். கால‌ம்,எல்லாவ‌ற்றையும் கொஞ்ச‌மாய் அல்ல‌து முழுமையாய் மாற்றி அவ‌ர‌வ‌ரிய‌‌ல்புக்கு த‌க்க‌ உருமாற்றி விடும்.அதீத‌ உண‌ர்ச்சியுள்ள‌வ‌ர்க‌ள் அன‌வ‌ரும் க‌ட‌ந்த‌ இய‌ல்பான‌ பாதைக‌ள் தான் இவை. ம‌ன‌வோட்ட‌த்தை அப்ப‌டியே எழுத்துந‌டை காட்டுகிற‌து. ஓட்ட‌ம், ந‌டையான‌து தான் இய‌ல்பின் அழ‌கு.

விஜய் said...

முதலில் நன்றி வாசன் அய்யா என் வலைதளத்திற்கு வந்ததிற்கு ,

ஆம் அய்யா, இளமை சொட்டும் அந்த வயதில் , வெற்றிகளை மட்டுமே கணக்கிட்டு, பெண்களை கவருவதில் கவனம் செய்து, பாடங்களை மனபாடம் செய்து, வாழ்க்கை என்பது இவைகள் மட்டும் தான் என்று இந்த குறுகிய வட்டத்தில் வேகமாய் பயணம் செய்து கலைத்துவிடுகிறோம்.வாழ்க்கை புரிய ஆர்ம்பிக்குறது இவைகள் மட்டுமில்லை என்ற உணரும் தருணத்தில், உலக விசயங்கள் பல அனுபவப பாடங்களாய் மாறுகின்றன ..வாழ்க்கை ரசிக்க படுகிறது அனுபவத்தை ரசிக்க தெரிகையில், வாழ்க்கை ஏமாற்ற படுகிறது உணரமுடியா தருணத்தில் ..

மிக்க நன்றி ஐயா உங்கள் வருகைக்கும், உங்கள் வாழ்த்துக்கும்

ஹேமா said...

கழுகின் பக்கமாக உங்கள் பக்கம் வந்தேன் விஜய்.அணில் பதிவு மனிதத்தோடு மனதை நெகிழவைத்தது.சரியென்று அதற்கு முன் பதிவைப் படித்தேன்.கலங்கியே விட்டேன்.நல்லதே நடக்கும் விஜய்.
நினைவுகளையும் நாங்கள் செய்வதையும் நல்லதாய் வைத்திருப்போம் தோழா.

Yoganathan.N said...

மனிதனோ அணில் குட்டியோ, வலி என்பது எல்லோருக்கும் ஒன்று தானே...
எப்படியும் அந்த அணில் குட்டி கொய்யாத் துண்டை தின்று உயிர் பிழைக்கும் என்று எண்ணி தொடர்ந்து படித்தேன். ஏமாந்து போனேன். :(
மனதை வருடியது உங்களது இந்த பதிவு. வாழ்த்துகள். :)

அரிஅரவேலன் (Ariaravelan) said...

அறியாது செய்யத பிழைகளுக்கு கழுவாய் தேடிக்கொள்ள கிடைத்த வாய்ப்பும் பறிபோகும் பொழுது ஏற்படும் மனதின் தவிப்பை நன்றாகவே படம் பிடித்திருக்கிறீர்கள்! பாராட்டுகள்!!

விஜய் said...

மிக்க நன்றி அன்பின் ஹேமா,

உங்களை என் வலைத்தளத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சிங்க.

.மிக்க நன்றி பதிவை படித்து ரசித்தற்கு, ரசிக்க தெரிஞ்சு இருக்கு என்றால் நிச்சயம் அழகாய் எழுதவும் தெரிந்து இருக்கும்.நேரம் கிடைக்கும் தருணங்களில் நிச்சயம் உங்கள் வலைதளத்து பக்கம் நிச்சயம் வருகிறேன். மிக்க நன்றி உங்கள் ஊக்கத்திற்கு ...மீண்டும் வருக..உங்கள் பின்னூட்டமும் என் எழுத்தை இன்னும் அழகானதாய் மாற்ற முயற்சி செய்யும்..

மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு அன்பின் ஹேமா

விஜய் said...

மிக்க நன்றி அன்பின் Yoganathan.N

உங்க நல்ல மனசு இதுல புரியுது நண்பரே , நானும் அப்படி தான் எதிர்பார்த்தேன், பாடம் கற்பிக்க மரித்ததாய் இன்று வரை உணருகிறேன் தோழரே ..

வாழ்க்கையின் சில தருணங்கள் நமக்கு பாடங்களை புகட்ட சில உயிர்களை தியாகம் செய்ய தான் செய்கின்றன...

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் .மீண்டும் வாருங்கள் இளைப்பாற நினைக்கும் தருங்களில்

மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு அன்பின்
Yoganathan.N

விஜய் said...

மிக்க நன்றி அன்பின் யரலவழள

நீங்கள் சொல்வது மிகசரியான ஒன்று தான் தோழரே, கழுவாய் தேட முயற்சிக்கும் தருவாயில் இப்படி நடப்பது சற்று மனதை கலங்க செய்வது உண்மை தான் ..மிக்க சந்தோசம் என் பதிவை படித்து, பின்னோட்டம் இட்டு என்னை உற்சாகபடுத்தியதற்கு தோழரே

மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு அன்பின் யரலவழள

Chittoor Murugesan said...

பாஸ் !
கழுகு வலைச்சரத்துல வெளியான வல்லரசு கனவுகளை படிச்சு கமெண்ட் போட்டிருந்திங்க. அந்த திட்ட சுருக்கத்தையாச்சும் பத்து பேருக்கு ஷேர் பண்ணலாமே

Dhanalakshmi said...

என் அன்புத் தோழரே உங்கள் பதிவை இன்று முழுதாய் முதலாய் படித்தேன். அருமையயாக இருந்தது. தொடருங்கள்....

விஜய் said...

அன்பின் Chittoor.S.Murugesan அவர்களே,

உங்கள் பதிவை படித்து முடித்த அத்தினமே என் நண்பர்களிடம் கூறி படிக்கவும் மற்றும், மற்ற நண்பர்களுக்கு அனுப்பவும் சொல்லிவிட்டேன், மிக அருமையான பதிவு தோழரே,

இது போன்று பயனுள்ள இன்னும் நிறைய தகவல்களையும் கருத்துகளையும் என்னோடு பரிமாறிக் கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன் தோழரே ..

விஜய் said...

மிக்க நன்றி gunalakshmi ,

என் பதிவுகளை படித்து என்னை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி, உங்களை போன்றோரின் ஊக்கம் என்னை இனியாவது அழகாய் எழுத முயற்சிக்க செய்யும் என நம்புகிறேன் ....
நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு

Post a Comment