தனிமைப்படுத்துதல் (நிராகரிக்கப்படுதல்) என்பது அணு அணுவாய் ஒரு மனிதனை உயிரோடு துண்டு துண்டாய் வெட்டி எறிவதற்கு சமம் என்று தனிமையை உணர்ந்த(வாழ்ந்த) ஒவ்வொரு மனிதனுக்கு தெரியும் என நம்புகிறேன்.தனிமை என்ற ஆயுதம் மட்டுமே, சதைகளை தாண்டி, மனதை துளைத்து, உணர்வை,சொட்டு சொட்டாய் உருக்கி, நிலைகுலையச்செய்து, சாய்த்துவிடும் ஒரு கொடிய ஆயுதம்.
பெண்மை என்ற அழகிய கதாபாத்திரத்தை சுமந்து கொண்டு இந்த உலக மேடைக்கு வந்து இருப்பாய் என்று எனக்கு நன்றாகத்தெரியும். பதின்வயதுகளை கடந்து, பல உலக இன்னல்களையும், பெண்மை என்ற கதாபாத்திரத்திர்கே உரிய அந்த நாட்கள் என்ற இன்னலையும் கடந்து வந்து இருப்பாய் சர்வமும் தாங்கும் ஒப்பற்ற சக்தியாய்.விரும்பியோ அல்லது விரும்பாமலோ, மணவாழ்க்கை என்றொரு புதிய கதாபாத்திரத்தையும் சேர்ந்தே சுமந்திருப்பாய். கட்டயமாவோ அல்லது காமத்தோடு தாம்பத்யம் சமர்பித்திருப்பாய் என அறிவேன்.
அந்த நாட்கள் அடங்கி, உன்னுள் விழுந்திருப்பேன் நான் விதையாய், அந்த கணமே அம்மா என்றொரு இன்னொரு கதாபாத்திரத்தையும் சேர்ந்தே சுமந்திருப்பாய் ஆசையாய். உன்னுள் மாறிய ஒவ்வொரு உணர்வு மாற்றத்தையும், உடல் மாற்றத்தையும் கண்டு ரசித்திருப்பாய், உன்னுள் அசௌகரியத்தை ஏற்படுத்திய போதும்.
திகட்டிய போதும் தேடி தேடி உண்டு இருப்பாய் நான் வளர.கொஞ்சம் நிறைஞ்சும், கொஞ்சம் சிந்தியும் ஆயிரம் இன்னல்களை தாங்கி இருப்பாய் எனக்காய். உன் வயிறு தடவி உள்ளம் மகிழ்ந்திருப்பாய், என்னை தொட்டு பார்க்கும் ஆசையில். ஆளில்லா தருணங்களில் அன்பாய் பேசி இருப்பாய் என்னிடம், ஆர்வத்தில் வார்த்தைகளில் கொஞ்சி இருப்பாய், “என் உயிர், நீ தான்” என்று.ஏதோ ஒரு இரவில் தெரியாமல் நீ குறுக்கி தூங்கியதற்கு உன்னை நீயே திட்டிக்கொண்டிருப்பாய். அப்பாவின் அந்தரங்க தேவையை கூட மறுத்திருப்பாய் என் நலனுக்காய். வாரங்கள் மாதங்கள் ஆக ஆக நீ தேய்ந்தே போகி இருப்பாய் என்னைக்கானும் ஏக்கத்தில் பிறை நிலவாய்..
பத்து திங்கள் பறந்தோடிட உன்னுள் கனவுகள் ஏராளம் கண்டு இருப்பாய். என்னை வளர்க்க இயற்கை தந்த உணவாய்,உன் மார்பு மாற்றங்களை, உடல் சிலிர்த்து, உள்ளம் பூரித்து கர்வமாய் ஏற்று இருப்பாய் தாய்மையாய். என் ஒவ்வொரு அசைவுகளிலும், எட்டி உதைத்த நொடிகளிலும், கண்கள் கலங்கி, மீண்டும் உதைக்கும் தருனத்திற்க்காய் காத்திருந்திருப்பாய். உன் ஓருடலில், என் உடலை சேர்த்து, ஈருடலும் ஓருடலே என்று தாய்மைக்கே உரிய இலக்கணத்தை நீயும் ஒருமுறை நிரூபித்திருப்பாய் நெஞ்சை நிமிர்த்தி. நான் வெளிவர துடித்த கடைசி நாட்களில், உள்ளம் உவகையுற்று,கடவுளிடம் மன்றாடியிருப்பாய் எனக்காய்.
உன் உடல் உடைத்து, இவ்வுலகை காண நான் செய்த முயற்சியில், உன்னை காயம் செய்த போதும், என்னை ஆசை ஆசையாய் முத்தமிட்டு இருப்பாய். உன் கரம் தொட்ட நொடியினில் கண்டுகொண்டிருப்பேன் நீ என் அம்மா என. சந்தோசத்தில் நீயும் உறங்க, நானும் உறங்க.., தண்டிக்கபெற்றேன்.
என் தேகம் கிழிந்து ரத்தம் கொட்டியபோதும், என்னை சுற்றி நாற்றம் அடித்தபோதும் கதறாத நான், நீ அருகில் இல்லை வெகுநேரம் என்றுணர்ந்த தருணத்தில் நான் கதறிய என் குரல், சாலையோர குப்பைத்தொட்டியை மட்டுமே தாண்டி ஒலித்தது. வெறும் உணவை கொட்டும் இடமாய் உணராமல் உனக்குமெனக்குமான பிணைப்பாய் எண்ணி, உன் மார்பைத்தேடி, வாய் பிளந்த என் உதடுகள் காய்ந்து போனது நீ இன்றி.
வெகுநேர கதறலுக்கு பிறகு எங்கோ போய் சேர்ந்தேன் . கதறி இருப்பாய் நெருப்பாய், கொதித்திருப்பாய் எனக்காய். உன் கதறல் அடக்க கோடி கோடி உக்திகளை கையாண்டிருப்பார்கள் உன்னிடம். மனமுடைந்து பித்துபுடித்து உண்ண மறுத்து, தூக்கம் மறந்து, என்னை நினைத்து வெடித்தழுதிருப்பாய் பாவம் என் முகம் காண மீண்டுமொருமுறை.
மாதங்கள் நகர்ந்து வருடங்கள் ஓட, எனக்கானதை நானே செய்துகொண்டேன் நீயின்றி. தாய் தலைவார குழந்தை தலையசைக்க காட்சிகளை பார்த்தொனரும் தருணங்களில் கண்ணீர் சொட்டுகிறதடி தாயே உனைக்கான. தன் மகள் அழுக்காக்கிய துணிகளை திட்டிக்கொண்டே துவைக்கும் தாயை காணும் கணத்தில் எங்கிப்போகுதடி உள்ளம் உன் மொழி தேடி. முந்தானையில் மறைத்து, தன் மார்பில், மகள் உதடு பதித்து,தன் முகம் மலரும் தாயை காணுகையில், ஓராயிரம் மையில்களாய் இருந்தாலும் ஓடி வந்து உன் மடி தேடி விழுவேன் தாயே.
தெரிந்தோ தெரியாமலோ தனிமைப்படுத்தப்பட்டேன் பாவமாய்.அன்பெனும் உணர்வை வெறும் வார்த்தையாய் காதிலும், காகிதத்திலும் மட்டுமே உணர்கிறேன்.வெளியாட்கள் கேட்கும்பொழுது சமாளித்துவிடுகிறேன், அம்மா ஊரிலிருப்பதாய். ஆனாலும் பழகிய பத்துநிமிடங்களில் புரிந்துகொள்கிறார்கள் அனாதையென்று, அன்பறியா என் முரடுத்தனத்திலிருந்து.என்ன செய்ய, நானும் தேடுகிறேன் கற்பனையில் உன் முகம் வைத்து ஒவ்வொரு பெண்ணிற்கும்.
அனாதை தழும்பை உடைக்க,முகம் தெரியாமல் உனைத்தேடும் நானும், தாய்மை பந்தம் பதிக்க, உயிரில்லாது எனைத்தேடும் நீயும், எப்படி சந்திப்போம் தாயே?. எப்பொழுதாவது சந்திப்போமா!!!!!!!! …ஏக்கத்துடன் காத்திருக்கிறேன் மடி சாய்ந்து கதைகள் பேச….
0 comments:
Post a Comment