அலுவலகத்தில்
விடுமுறை கேட்டுவிட்டு, சொந்த ஊரிற்கு, கல்லூரிமாணவர்கள் சந்திப்பிற்கு சென்றிருந்தேன்.கிட்டத்தட்ட
கல்லூரி முடித்து ஒன்றரை வருடங்கள் கழித்து, தொடர்பில் இல்லாமல் தொலைந்து போன நண்பர்களை
கண்டெடுக்கவும், தொலைப்பேசி தொடர்பில் இருக்கும் நண்பர்களை நேரில் கண்டு ஒருவரையொருவர்
முகம்மலர்ந்து, அகம்மலர்ந்து, நலம் விசாரிக்கவும்., எங்கள் நலனுக்காய், எங்கள் விருப்பமின்றி
எங்களை செதுக்க பாடுபட்ட, ஆசான் எனும் சிற்பிகளை மீண்டுமொருமுறை காணவும் ஏற்பாடு செய்யப்பட்டது. கல்லூரிக்கு சில மைல்களே அப்பால் இருக்கும் எனது
வீட்டிலிருந்து பைக்கில் கிளம்ப ஆரம்பித்தேன்.,ஒரு சில தொடர்பில் இருக்கும் நண்பர்களிடம்
நான் வந்து சேரும் சரியான நேரத்தை கூறிவிட்டு, கல்லூரியை நோக்கி..
வேகமாய்
பறந்து சென்றாலும், சரியாக அடையாளம் கண்டுவிடும் ஒரு சில உறவினர்களின் கண்களிலிருந்து
தப்ப முடியாது. அப்படி தான் நானும் மாட்டிக்கொண்டேன் அப்பொழுது.ஏதோ ஏதோ கேள்விகளை தொடுத்துக்கொண்டே
போனார், "முடியல" என்ற என் உள்மனதின் சத்தம் அவருக்கு கேட்டபோதும் விடவில்லை.
"எப்படிப்பா இருக்கு சென்னை?" என்றதில் ஆரம்பித்து, "எப்போ கல்யாணம்
" என்பதில் கொண்டு வந்து நிறுத்தினார்.கிட்டத்தட்ட எனக்கான அரைமணி நேரத்தை விழுங்கியிருந்தார்
என் அனுமதியின்றி. என்ன சொல்ல?., மிச்சம் வைத்தவரைக்கும் லாபம் என்று பறக்க ஆரம்பித்தேன்.கல்லூரியை
அடைந்து பைக்கை நிறுத்திவிட்டு, நடைகட்ட ஆரம்பித்த நிமிடத்தில் அத்தனை எதிர்பார்ப்புகள்,
ஆசைகள் என ஒவ்வொரு காலடியிலும் ஒரு மிகப்பெரிய தேடல் இருந்தது.
தூரத்தில்
நண்பர்கள் கூட்டம் தெரிய, ஒரு சில எட்டிகள் அதிகம் வைத்து ஓட ஆரம்பித்தேன். ரமேஷ்,
மாணிக்கம், செந்தில், கலையழகன், சந்துரு, ஜெகன், வடிவேல், பிரபாகரன், எழில், கேசவமூர்த்தி
என ஓவ்வொரு முகமும் ஒவ்வொன்றாய் என் விழியில் வந்து விழ,தாங்கிக்கொள்ள திராணியற்று
வழிந்தோடியது எனது விழி, கண்ணீராய்.கைகுலுக்கி அன்பை பரிமாறும் அதே நேரத்தில்,
"போன் பண்ண கூட நேரம் இல்லையா உனக்கு, என செல்ல அடிகள் விழ, ஆசையோடு சுமந்தேன்".
ஒவ்வொருவரின் தற்போதைய நிலையை அறிந்துகொண்டதில் அத்தனை ஆனந்தம்.
ஒழுக்கத்திலும்
சரி, உழைப்பிலும் சரி எப்பொழுதும், முதல் நான் தான் என்று பாடுபடும் "மாணிக்கம்"
எனக்கு பிடித்த நண்பன். இத்தனை கலாட்டாக்களிலும், பவ்வியமாய், ஓரமாய் நின்றுகொண்டு
கூச்சத்தோடு ரசித்துகொண்டிருந்த நண்பனை இழுத்து, எப்படி இருக்கிறாய்? என கேட்க.அதே
புன்னகை, அதே கூச்சம் பேச்சில், அதே அமைதி, அதே நேர்மை ,உழைத்து உழைத்து, இரும்பாய்
மாறி இருக்கும் அதே கரங்கள் என அவனுக்கான அடையாளங்கள் மறையாமல் நின்றான் என் கண்ணெதிரே.
"என்னடா
மாணிக்கம், உன் நம்பர்க்கு எப்போ call பண்ணினாலும், Not Reachable அப்டினே வருது?. என்று முடிப்பதற்குள்,
"நம்பர் மாத்திட்டேன்" என அவன் கூற, கோபத்தின் உச்சிக்கே சென்று "ஏன்டா
நம்பர் மாத்தினா கொடுக்கமாட்டியா” என்று திட்ட ஆரம்பித்தேன். அவனோ எப்பொழுதும் அவனுக்கே
உரிய மெதுவான, தெளிவான குரலில் பேச ஆரம்பித்தான்."
சென்னைல
வேலை தேடி கிடைக்கலைன்னு, ஊருக்கு வந்தேன்ல., அப்போ அப்பாவுக்கு உடம்புக்கு முடியாம
போய்டுச்சு கொஞ்ச நாளுல., காட்டுல வெங்காயம், கீரை, இஞ்சி, மஞ்சள், நெல்லு அப்டி இப்டினு
நிறையா போட்டு இருந்தாங்க.அப்படியே விட்டு வர மனசு இல்லாம, நான் தான் பாத்துகிட்டேன்,
அப்போ வயலுக்கு தண்ணி பாய்ச்சுரப்ப விழுந்துடுச்சு போல, நானும் தேடி தேடி பார்த்தேன்
கிடைக்கல.அப்புறம் தான் ரெண்டு நாலு கழிச்சு கண்டெடுத்தேன் வயல்ல இருந்து, ஒண்ணுக்கும்
ஆகுல cellphone .,அப்புறம் தான் புதுசு வாங்கினேன். யார் நம்பரும் ஞாபகம் இல்ல. நானும்
ஞாபகப்படுத்த விரும்புல அப்படியே விட்டுபுட்டேன் என அவன் முடிக்க.
கொஞ்சம்
தழு தழுத்த குரலில், அப்போ சென்னை வருலையா நீ மறுபடியும் என்று நான் கேட்டுமுடிப்பதற்குள்,
தெளிவாய் கூறினான். "இப்போ விவசாயம் தான் பாக்குறேன்" என கூறினான்... அவன்
மீண்டும் சென்னை வந்து சாதிக்கவில்லை என்று ஏதோ ஒரு ஏக்கம் என்னுள் இருந்தபோதும், கொஞ்சம்
பெருமிதம் உள்ளுள் மலரச்செய்தது , விவசாயம் பார்க்கிறேன் என்ற அவனது பதில்." எல்லோரும்
Third year computer classக்கு வாங்க என்ற சத்தம் வந்ததும் நகர ஆரம்பித்தோம்.
ஒன்றாய்
அமர்ந்தோம் நானும் அவனும். ஒவ்வொருவராய் தான் பணிபுரியும் நிறுவனம், அதில் தனது பணி
என்ன என்று விவரித்துச்சென்றனர். அனைவரும் கைதட்டி பாராட்டினர் ஒவ்வொருவருக்கும். இப்பொழுது
மாணிக்கத்தின் முறை, பேச ஆரம்பித்தான்," நான் அப்பாவோட Business பார்க்கிறேன், கொஞ்சம் அப்பாவுக்கு முடியாததால
இப்போ நான் பார்த்துகிறேன்" என அவன் முடித்த பொழுது , எதற்காக இப்படி businessன்னு சொன்னான் என யோசிப்பதற்குள்,
என் முறை வர, எழுந்து சென்று பேச ஆரம்பித்தேன்.
ஒரு
பெரிய தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை வாங்கிவிட்டதாகவும், தனது நிறுவனம் மிகச்சிறந்தது
என்றும், நிறையா பேசினேன் நிறுவனத்தை பற்றி பெருமையாய்.அத்தனை கைதட்டல்கள்.., முடித்துவிட்டு
வந்து அமரும்பொழுது மெதுவாய் புரிய ஆரம்பித்தது, என்னையும் அறியாமல் என்னுள் கர்வம்
ஒட்டியிருந்தது, நிறுவனத்தை பற்றிய பெருமையான பேச்சில்.”இதில் என்ன இருக்கு, நம்ம சாதிச்சத
சொன்னோம்”, என நியாயத்தை ஒருபுறம் மூளை எடுத்துவைத்த பொழுது, பெருமை விரும்புகிறாய்
என்று உள்ளம் அடித்து கூறியது ...விரும்பி செய்யும் வேலையாய் இருந்த பொழுதும் சமுதாய
அந்தஸ்துக்காய் கொஞ்சம் கூட்டி சொல்லவேண்டி இருக்கிறது என உணர்ந்த தருணத்தில்,
"மாணிக்கத்தின் பேய்ச்சின் மீது உருவாகிய businessஅஹ எனும் "அதிருப்தி",
திருப்தியானது.
மதிய
உணவு, சிறிய விளையாட்டுகள் என அனைத்தும் முடிந்து கிளம்பும் தருவாயில், மாணிக்கம் கேட்ட
கேள்வி கொஞ்சம் எதிர்பார்க்காது தான் .," என்ன விஜய்,அப்படியே சென்னைலையே செட்டில்
ஆகிடுவியா?., "அப்படியே, வெளிநாடு கிளம்பிடுவ" . என மாணிக்கம் கேட்க, பதில்
கூற ஆரம்பித்தேன். "எங்கே போனாலும் ஒரு ஆறு வருசத்துல என் மண்ணுல வந்து கிடப்பேன்"
என.
சிரித்துக்கொண்டே
பேச ஆரம்பித்தான் .,"இந்த மாதிரி சினிமா டயலாக் பேசுறவங்க நிறையா பேர பார்த்துட்டோம்,
இப்படி தான் சொல்வாங்க, கொஞ்சம் லைப் ஸ்டைல் மாறினதும், ஆளே மாறிடுவாங்க, ஊர்ல வந்து
எப்படி சமாளிக்கிறதுன்னு கேட்பாங்க, அது என்ன ஆறு வருஷம்?, வரணும்னு நினைக்கிறவன் இப்பவே
வரலாமே, அதென்ன ஆறு வருசக்கணக்கு" என ஏதோ ஏதோ கேட்டான்.
என்னவாகப்போற
அப்டின்னு எட்டாவது படிக்கிறப்ப வாத்தியார் கேட்க, ஒவ்வொரு பயலுகளா "டாக்டர்",
"Engineer" ஆக போறோம்னு சொல்ல சொல்ல.,Very good, very goodனு வாத்தியாரும்,
மத்த பசங்களும், பொண்ணுங்களும் பயங்கரமா, கைதட்ட..,
நாமளும் அதையே சொல்லிடலாம், அப்போ தான் நம்மளையும் பெருமையா நினைப்பாங்க என பொய்யாய்
"Engineer " என கூற ஆரம்பித்தது, பிறகு யார் கேட்டாலும் இப்படியே சொல்லி
பெருமைப்பட என்னுள் பதிந்ததோடு நில்லாமல், என் விவசாய அப்பாவிற்குள்ளும் பதிந்து, என்னை
உயர்த்திபிடிச்சு, பையன் கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சு எப்படியோ கல்லூரி சேர்த்தி
அகமகிழ்ந்தார்.
அப்பாவின்
உழைப்பை உயர்த்திபிடிக்க, உண்மையாய் படிச்சு, வேலையெல்லாம் வாங்கிபுட்டேன். "
வயலோடு வாழ்ந்து, விவசாயத்தோடு கலந்து, பயிரோடு
உரையாடி, ரசித்து ரசித்து உழைத்த அவரது விவசாயம் மட்டுமே என்னுள் இனித்தபோதும்.,பிடிக்காத
வேலையை,கட்டிப்பிடித்து உறவாடிக் கொண்டிருக்கிறேன்., "என் புள்ள engineer .,கை
நிறையா சம்பாதிக்கிறான், வெளிநாடு எல்லாம் போவான்" என, காணும் மனிதரிடமெல்லாம்
பெருமிதம் கொள்ளும் எனது அப்பாவுக்காய்…அவரது ஆசைக்கு ஆறுவருடம் போதும். “எனக்கப்புறம்
யார்பார்த்துக்குவா இந்த வயல? விற்று
விட வேண்டிய நிலைமை வந்துவிடுமோ!!!!, என சத்தமே இல்லாமல் சலனப்பட்டு கண்ணீர்விடும்
அவரது ஏக்கத்திற்கு, பதிலாய் தரப்போகிறேன் எனது resignation letter யை பணிபுரியும்
நிறுவனத்திடம்.
கேள்வியற்ற
எஜமானன், துளிரும் பயிரை கானும்பொலுதெல்லாம் தானும் ஒரு கடவுளாய்.,உழைத்து கலைத்து,
வயிற்றை கிழிக்கும் பசிக்கு, பழையசோறு நீரும், கடிச்சுக்க வெங்காயமும் அத்தனை ருசியாய்.
இரவு கயித்து கட்டிலில் சாய்ந்து, நிலவை, கண்கள் முத்தமிட்ட நொடியில், தூக்க தேவதை
நெஞ்சில் கலக்க, பிணத்தை போன்றொதொரு அசையா தூக்கம் எங்கு கிடைக்கும் இங்கேயன்றி..
என்னை
ஆளாக்க, என் அப்பாவிற்கு பலம் கொடுத்த, என் தாய்(தந்தை) மண்ணின் தேகத்தை துண்டு துண்டாய்,
உதிரம் சொட்ட சொட்ட, கூறு போட்டு விற்க ஒருபோதும் விடமாட்டேன். என் உதிரத்தில் ஊறிய
விச(வசா)யம் அல்லவா, எப்படி மறப்பேன்?..விரைவில்
வந்து விழுவேன் என் தாய்(தந்தை)மண்ணில். என பதில் கூறிவிட்டு பைக்கை மெதுவாய் நகர்த்தினேன்.
கண்ணில் பட்டது அந்த விளம்பரம்.
"
கொங்கு பள்ளிக்கு அருகே, திருச்செங்கோடு, நாமக்கல் பிரதான சாலையில் "கோல்டன்"
வீட்டுமனைகள் உள்ளது. சதுர அடி ரூ 250 மட்டுமே". முந்துங்கள்"...
"ஆறு
வருடம் என்பதே, அதிகமோ!!!! " என்ற வினா என்னுள் விழுந்தது விதையாய்..
0 comments:
Post a Comment