ஒரு சாதாரண மனிதன் ஹீரோ ஆவதற்கு, தரையில் படாமல் ஆகாயத்தில் சுழன்று
சுழன்று அடிக்கவேண்டும், அழகிய பெண்களுடன் காதல் நடனம் ஆட வேண்டும்,
அனைவரின் கவனத்தை ஈர்ப்பதை போன்று கோடி கோடியாய் அள்ளிக்கொடுக்க வேண்டும்,
பொதுக்கூட்டங்களில் பேச வேண்டும், பொது நிகழ்வுகளில் அசத்த வேண்டும், இது
போன்ற ஹீரோ ஆவதற்கான இலக்கணங்களை எல்லாம் சுக்கு நூறாய் உடைத்தெறிந்து, ஒரு
ஆசிரியராய் இருந்தால் போதும், ஒரு தலைமுறையை உயர்த்திபிடித்து, தரமானதாய்
மாற்றுவதன் மூலம், அந்த தலைமுறைக்கே ஹீரோ வாகிவிட முடியும் என்று
நிரூபித்தவர், என் கணித ஆசிரியர் வாசுதேவன் சார் அவர்கள்.
எப்பொழதும் சிரித்த முகம்,பெல்பாட்டம் பேண்ட், எப்பொழுதும் தலைக்கு
குளித்து மிளிரும் அவரது தலைமுடி, அதிபட்ச நாட்களில் திருநீர்
வைத்திருக்கும் அவரது நெற்றி, எப்பொழுதும் உற்சாக நடை, பேச
ஆரம்பிக்கும்பொழுது முதல் வார்த்தை, "சொல்லுடா தம்பி " எனும் நெருக்கமான
கனிவான பேச்சு, அனைத்திற்க்கும் மேலாக உண்மையை கடைபிடிக்கும் அவரது சிறந்த
குணம், மாணவன் தவறுசெய்தால் கூட மன்னித்துவிடும் அவர், மாணவன் பொய்
சொல்வதாய் தெரிந்தால் கொதித்தெழும் அவரது நேர்மை, இவை எல்லாம் இவரது
அடையாளம்.
பள்ளி நாட்களில் அனைத்து பாடங்களிலும் சாதாரணமாய் 80
மதிப்பெண்களை தாண்டி விடும் எனக்கு, கணிதபாடத்தில் மட்டும் 80 மதிப்பெண்களை
தாண்டி விட கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும், எனக்கும் கணிதத்திற்கும்
அத்தனை தொலைவு என்றே சொல்லலாம். எட்டாம் வகுப்புவரை கணிதத்தை மனப்பாடம்
செய்து மதிப்பெண்களை அள்ளிக்கொண்டிருந்த்தேன். எனக்கும் கணிதத்திற்குமான
தொடர்பு அவ்வளவே. முதல்முறை ஒன்பதாம் வகுப்பில் அவரை கணிதவகுப்பில்
காண்கிறேன்.
அன்று முதல் நாள், வகுப்பில் நுழைகிறார், வகுப்பே
அமைதியாய் இருக்கிறது., முதல் வார்த்தை உதிர்க்கிறார் "இந்த பாருடா
தம்பிகளா, கணக்கும் ஒன்னும் இல்லடா, சந்தேகம்னா கேளு, எத்தனை டைம்
வேணும்னாலும் சொல்லித்தறேன், புரிஞ்ச மாதிரி தலை மட்டும் ஆட்டாத" என்று
சொல்லி முடித்ததும் நிமிர்ந்து உட்கார்ந்தேன், நான் மட்டும் அல்ல, அவரை
முதல் முறை வகுப்பில் சந்திக்கும் அணைவருமே. நடத்த ஆரம்பித்தார்.
எப்பொழுது ஒரு ஆசிரியர் தனது மாணவனை முதல் வகுப்பிலையே, தனது திறமையால்
கட்டிபோட்டுவிடுகிறாரோ அப்பொழுதே அவர் வென்றுவிடுகிறார். அப்படித்தான் அவர்
என்னை வென்றார், கொஞ்சம் குழப்பமான பார்வையில் மாணவன் பார்க்கும் அடுத்த
நிமிடமே, ஓடி சென்று எழுதியதை அழித்துவிட்டு, இருடா தம்பி, முதலில் இருந்து
வறேன் என்று மீண்டும் முதலில் இருந்து வருவார்.
ஒரே கணக்கிற்கு நான்கைந்து
முறைகளை வைத்து இருப்பார். கிட்டத்தட்ட அத்தனை தன்னைவருத்திக்கொண்டு
பசங்களுக்கு புரியணும் அது தான் முக்கியம் என தன்னை தயார்படுத்திக்கொள்ளும்
ஒரு சிறந்த ஆசிரியர். அவர் வகுப்பை முடித்து செல்லும் நேரம் chalk piece
துகள்களால் நனைந்திருப்பார், அதைப்பற்றி ஒரு நொடிகூட என்னிப்பர்த்திருக்க
மாட்டார், முடிந்து செல்லும் பொழுதும் அத்தனை மனநிறைவோடு செல்வார்
எனக்கு தெரிந்து எந்த கணக்கையும் விட்டதில்லை அவர், என்னால் அடித்து
சொல்லமுடியும் கணிதத்தை வெறுக்கும் எவராக இருந்தாலும் சரி, அவரது முதல்
வகுப்பை சந்தித்து விட்டால் போதும் நிச்சயம் பட்டைய கிளப்ப முடியும்.
வந்தோம்,வேலை செய்தோம் என்று சென்றவர்களுக்கு மத்தியில், தன் ஆத்ம
திருப்தியோடு சேர்த்து, எப்படியாவது தன் மாணவனுக்கு உணர்த்திவிட விட
வேண்டும் , கணிதம் பயம் கொள்ளும் அளவிற்கு பெரிய பேய் இல்லை என்று
உழைத்தவர்.
இன்னும் கூட என பத்தாம் வகுப்பு மொத்த மதிப்பெண்கள்
சற்று வித்தியாசத்தில் 400 யை தொடமுடியாமல் போனதை நினைவு கூறுகையில்
எல்லாம், என் வாசுதேவன் சார் அவர்கள் பத்தாம் வகுப்பில் எனது பி பிரிவிற்கு
வர முடியாமல் போனதே காரணம் என உள்ளுள் உணர்ந்துகொண்டு தான் இருக்கிறேன்.
பாடங்களை தாண்டி ஒவ்வொரு மாணவனும் உண்மை பேச வேண்டும் என்றும், ஒழுக்கம்
நிறைந்தவனாய் வர வேண்டும் என்றும் தாகத்தோடு திரிந்தவர். அத்தனை
சொல்லிகொண்டே போகலாம், அவ்வளவு பெரிய பாடம் தான் என் வாசுதேவன் சார்
அவர்கள்.
இன்று அவர் சமூக வலைதளத்தில் இருக்கிறார் என்பதையறிந்து,
அவரை கண்டறிந்து, அவருக்கு அழைப்புவிடுத்து அவரது ஒப்புதலுக்கு
காத்திருக்கிறேன். ம்ம் என்னைப்போல் பல லட்சகணக்கான மாணவனை
செதுக்கியிருக்கிறார், இதில் நான் என்பதை எப்படி அவரால் கண்டறிய முடியும்.
இருந்தும் அவரது ஒப்புதலுக்காய் காத்து இருக்கிறேன். ஒவ்வொரு மனிதனும்
சமூகத்தில் சிறந்த மனிதராய் இருக்கும் ஒருவரை தன்னோடு
தொடர்புபடுத்திக்கொள்ள முற்பட்டு, நண்பன் என்றோ, சொந்தக்காரன் என்றோ, தன்
சமூகத்தை சேர்ந்தவன் என்றோ, எனக்கு தெரிந்தவன் என்றோ எதோ ஒரு புள்ளியில்
தன்னோடு அந்த சிறந்த மனிதரை தொடர்புபடுத்திக்கொள்ள முயற்சிப்பதுண்டு.
என்னை செதுக்கிய, என்னுள் கணிதத்தை விதைத்த, நன்னெறிகளை வித்திட்ட என்
ஆசிரியர் வாசுதேவன் சார் அவர்களை என்னோடு சேர்த்துக்கொண்டு பெருமைகொள்ள
விரும்பும் யதார்த்த மனிதனில் தான் நானும் இருக்கிறேன். அவரோடு என் தம்பி
உரையாடிவிட்டு அதைப்பற்றி சொல்லும் நாட்களில் எல்லாம் அத்தனை பொறாமை கொண்டு
இருக்கிறேன், பட்டென்று பேசிவிடும் யதார்த்த இயல்பு என்னிடம் இல்லாதாலோ
என்னவோ அவருடன் இதுவரை பேசியதில்லை.இனியும் பேசுவேனோ என்று தெரியாது,
அதனாலென்ன என் தந்தையிடம் கூட நான் அதிகம் பேசியதில்லை, அதற்காய் அவரின்
மீதான் அன்பும், மாரியாதையும் எப்பொழுதும் குறைந்ததில்லை, அதுபோலத்தான்
எனக்கும் என் ஆசானாகிய வாசுதேவன் சார் அவர்களுக்கும்.
“The Legend”
என்ற வார்த்தை மிக கச்சிதமாய் பொருந்தகூடிய சில மாமனிதர்களுள் ஒரு
அசாத்திய மனிதராய் என் வாசுதேவன் சார் அவர்களும் இருக்கிறார் என்று காலரை
தூக்கி பெருமை கொள்ளும், அவர் செதுக்கிய பல லட்சகணக்கான ஒளிரும் சிலைகளில்
நானும் ஒருவன்.
நான்,உம்மைப்போல் ஒரு நாளாவது வாழ்ந்துவிட்டு மடிந்துவிடவேண்டும் - என்னுள் நெருடிக்கொண்டிருக்கும் நெடுநாள் ஆசை.
0 comments:
Post a Comment