வாழ்க்கை புத்தகத்தின் "சந்தோசம் "எனும் ஒரு பக்கத்தை தேடிக்கொண்டிருந்த நாட்களில் நான் படிக்காமலே விட்டு சென்ற பக்கங்கள் ஏராளம், அப்படி இருந்தும் வாழ்க்கையின் சில பக்கங்கள், வாழ்க்கையின் முக்கியத்துவத்தை கற்று தர மறக்கவில்லை,வாழ்க்கையை கற்று தந்த பக்கங்களைத்தான் இப்பொழுது உங்களுக்காய் திறந்து வைக்கிறேன்.மிகச் சிறந்த மனிதனில்லை நான், சரித்திரங்களும், சாதனைகளும் இருப்பதற்கு. இயல்பான மனிதன், என் வாழ்க்கை பக்கத்தில் படிக்க போகும் யாவும் உங்களுக்குள் கடந்த சென்ற ஒன்றாகத்தான் இருக்கும்.
என்னை பொறுத்தவரை அனைத்து நாட்களும் ஒன்று தான், நான் என் வாழ்க்கையை தேடிய அந்த 2007 ஆம் ஆண்டில். அவசர அவசரமாய் உடுத்தும் ஆடைகளை பையில் திணித்துக்கொண்டு, "சரி வருகிறோம், அலுவலகத்திலிருந்து அப்படியே (சொந்த) ஊருக்கு போய்விடுவோம்" என்று அதிகாலையில் அறை தோழர்கள் சொல்லி முடிக்கும் பொழுது, அன்றைய தினம் வெள்ளிகிழமை என்பது புரிந்திருக்கும் என் மனதிற்கு, இரவு பகல் என அனைத்து நேரங்களிலும் தனது சந்தோசத்தை கணினியோடு பகிர்ந்துவிட்டு, நிஜ சொந்தங்களோடு பகிர்ந்துகொள்ள அத்தனை ஆனந்தமாய் விடியும் ஒவ்வொரு வெள்ளிகிழமைகளும் அவர்களுக்கு. வேலை கிடைத்த பின்பு தான் ஊருக்கு செல்வேன் என்று முடிவை மூச்சாய் சுவாசிக்கும் எனக்கு, நீ தனிமை படுத்தபடுகிறாய் என்பதை சொல்லும் ஒவ்வொரு வெள்ளிகிழமைகளும் எனக்குள் கற்றுத்தந்த பாடங்களை பத்திரமாய் இருக்கி கட்டியணைத்து வைத்து இருக்கிறேன் இன்றும். அப்படி தான் அந்த வெள்ளிகிழமையும், எனக்கான ஒரு பாடத்தையும், உணர்வு பரிமாற்றத்தையும் கையில் வைத்து காத்து கொண்டிருந்தது...
நண்பர்கள் அலுவலகத்திற்கு கிளம்பும் வரை எழுவதில்லை நான், அதற்கான காரணங்கள் மிகப்பெரியதாய் ஒன்றுமில்லை, சென்னையில் வாடகை வீட்டில் தங்கும் அனைவரும் சந்திக்கும் ஒன்று தான், குளியலறையும், கழிவறையும் ஒன்றாக கட்டி, ஒரே கதவில் காசை மிச்சபடுத்தி இருக்கும் நுட்பம் தெரிந்தவர்கள் வீட்டுசொந்தக்காரர்கள் என்று பெருமூச்சை மட்டுமே விட்டுசெல்லும் சராசரி மனிதனில் தான் நானும் .
அன்றும் வழக்கம் போல், பொய்யாய் கண்விழித்த சிறிது நேரத்தில்,அனைத்தையும் முடித்துவிட்டு, காலை உணவு என்பதை சாலையோர தேனீர் கடையின் ஒற்றை கோப்பை தேநீரில் வழக்கம் போல் முடித்தேன், மதிய உணவு என்பதும் தூக்கத்தில், படித்ததை திரும்ப திரும்ப நேர்முகத்தேர்விற்காய் முயற்சி செய்த தருணத்தில் முடிந்தது. எங்கெங்கோ அமைதிக்காய் தெருக்களை தனிமையில் சுற்றி, சில இடங்களில் அமர்ந்து சுமைகளை துளைத்ததாய் நினைத்து, சுற்றி முடித்து வீடு திரும்பினேன்,
என் அறைகதவை திறக்க முயற்சி செய்கிறேன், கதவருகே வாழ்க்கையின் நிமிடங்களை எண்ணிக்கொண்டு இருக்கிறது அணில்குட்டி, கால்கள் அடிபட்ட நிலையிலும் என்னை கண்டதும், நகர்ந்து ஓட முயற்சிக்கும் அதன் இயலாமையை கண்டதும் கண்கள் கலங்கித்தான் போகின, அதன் கூரிய கண்களில் தான் அதன் வலியை என்னால் உணர முடிந்தது, அவ்வளவு முயற்சித்தும் நகர்ந்த தொலைவு மிகக்குறைவே, ரத்தம் கசியும், வலியை தாங்கமுடியா அந்த தருணத்தில் கூட இன்னொரு ஜீவன் ஆதாயம் தேடுகிறது இந்த அணில்குட்டியிடமிருந்து, என் அத்தனை கோபமும், அணில்குட்டியின் காயத்தில் ஆதாயம் தேடிய எறும்புகளின் மீது திரும்பியது, அவசரமாய் காப்பாற்றும் எண்ணத்தில் என் அறிவுக்கு எட்டாமல் போய்விட்டது அணில்குட்டிக்கு கடிக்க தெரியும் என்று, ரத்தம் சொட்டும் அளவுக்கு கடித்துவிட்டது, அவசரமாய் அறைக்குள் ஓடி, கைகள் முழுக்க துணியை கட்டிக்கொண்டு, அணில்குட்டியை கையிலெடுத்து எறும்புகளை தட்டிவிட்ட நேரத்தில் அதற்க்கு புரிந்ததோ இல்லையோ நான் காப்பாற்ற வந்தவன், கொல்லவந்தவன் அல்ல என்பது, காப்பாற்றிவிட்டேன் என்ற சந்தோசத்தில் ஓரிரு நிமிடம் நகர்ந்தது எனக்கு.
இப்படி காப்பாற்ற பாடுபடும் நான் உண்மையில் எப்படி பட்டவன்?..
பள்ளிவிடுமுறை நாட்களை, பயிற்சிவகுப்புகள் தின்ற மீதியை, அணில்பிடிக்கவும், ஓனாய் அடிக்கவும் உபயோகபடுத்துபவன், இடுப்பில் நிற்க அடம்பிடிக்கும் கால்சட்டையை,அரைஞான்கயிறைக்கொண்டு இருக்கி கட்டிவிட்டு, மேல்சட்டை இல்லாமல், கால்களில் காலனி இல்லாமல், நெறிஞ்சி முற்களையும், தீயாய் சுடும் காட்டு மண்ணிலும், சுட்டெரிக்கும் வெய்யலிலும்,துரு துருவென ஓடி, துரத்தி துரத்தி கொல்வதில், சாதித்த திமிரு ஒட்டிக்கொண்டு மீண்டும் அடுத்த விடுமுறைக்கு வித்திடும் கொஞ்சம் கொடூரமான மிருகம் தான் நானும், அணில்களை பிடிப்பதற்காக, தந்திரமாய் யோசித்து வலைகளை விரித்து வைத்துவிட்டு, துரத்தி வந்து வலையில் விழ செய்து சாதித்ததாய் பெருமிதம் கொள்ளும் திமிர்பிடித்த சிறுவன் தான் நானும். அவற்றை என் நண்பர்கள் கொன்று பையினுள் போடும்பொழுது கொஞ்சம் கனக்கத்தான் செய்யும் அந்த கணங்களில், ஆனாலும் அவ்வளவாய் பாதிப்பதில்லை அந்த சாவுகள்,இப்பொழுது மட்டும் இவ்வளவு கனமாய் கனக்கிறது ஏன்?, காயத்தை கண்ட அந்த கணத்தில்.
அறைக்குள் அங்கும் இங்கும் ஓடி ஒரு அட்டை பெட்டியை கண்டுபிடித்துவிட்டேன், அதற்குள் அணில்குட்டியை விட்டுவிட்டு, பதற்றத்தில் யோசிக்க ஆரம்பித்தேன் , என்ன செய்வது, எப்படி காப்பாற்றுவது என்று ஆயிரம் கேள்விகள் , அங்கும் இங்கும் அறைக்குள் ஓடுகிறேன், அவசர அவசரமாய் அனைத்தும் நடக்கிறது, வெட்டு காயத்திற்கு போடும் மருந்தை நீண்ட நேரத்திற்கு பிறகு கண்டுபிடித்ததில் அத்தனை சந்தோசம், மருந்தை காயத்தின் மேல்இட்டுவிட்டு, அதற்கு சாப்பிட தக்காளி பழத்தை சிறு துண்டுகளாக்கி அட்டைபெட்டியில் வைத்துவிட்டு, சாப்பிடு சாப்பிடு என்று கெஞ்சுகிறேன், வலியின் வேதனையில் சாப்பிட மறுக்கிறது அணில்குட்டி, கொஞ்சமாவது சாப்பிடு என்று கெஞ்சுகிறேன், சிறிது நேரத்தில், தக்காளியை அணில் உண்ணாதோ என்ற கேள்வி?,என்னை அடுத்து ஒரு முயற்சிக்கு அவசரப்படுத்தியது, அடுத்த நாள் காலை உணவிற்கு என தேற்றிவைத்து இருந்த தேநீருக்கான சில்லரைகள் அவசரமாய் சாலையோர கொய்யாக்காய் விற்கும் பாட்டியிடம் சேர்க்கப்பட்டது, சேர்த்துவைக்கப்பட்ட சில்லரைகளின் தியாகத்திற்கு இணையாய் கொய்யாக்காய் என் கைகளில். ஓட்டமும் நடையுமாய் வந்து சேர்ந்தது என் உயிர், இறந்துவிடக்கூடாது மற்றொரு உயிர் என்ற நினைவில்.
சிறு சிறு துண்டுகளாக்கி வைத்துவிட்டு, ஒன்றையாவது சாப்பிடு, ஒன்றையாவது சாப்பிடு என்று ஏங்கிக்கொண்டு இருக்கிறது ஏதோ ஒன்று என்னுள் , உண்டால் உயிர்பிழைத்துவிடும் என்று எதேதோ கணக்கு போட்டுகொண்டு இருக்கிறது, உயிர் போகும் வலியை உணர்ந்துகொண்டு இருக்கும் அதனால் உண்ண முடியாது என்பதை ஏதோ ஒன்று ஏற்க மறுக்கிறது, சாப்பிடு சாப்பிடு என்று அதனுள் திணிக்க முயற்சிக்குறேன் தோல்வி தான் கிட்டும் என்று தெரிந்தும். முட்டாள் தனமாய் யோசிக்க செய்தன என்னுள் அந்நேரத்தில்,தனியாக விட்டால் சாப்பிடுமோ என்ற ஏதோ ஒரு நப்பாசையில் ஒளிந்துகொண்டு பார்த்தேன், சாப்பிடுமோ என்று.
என் அனைத்து திட்டமும் பலிக்கவில்லை, நேரம் கடக்க என்னுள் ஏதோ ஒரு இனம் தெரியா சோகம் என் கன்னத்தோடு ஒட்டியிருந்ததை என்னால் உணரமுடிந்தது, ஏனோ சாப்பிட பிடிக்கவில்லை, நேர்முகத்தேர்வுக்கான பயிற்சியும், படித்தலும் நடக்கவில்லை, எண்ணங்கள் முழுதும் நிரம்பியிருந்தது அதன் மேல் மட்டுமே, பெட்டியை என் படுக்கைக்கு பக்கத்தில் வைத்துகொண்டே கவனித்துக்கொண்டே உறங்கிப்போனேன், திடீரென கண்விழித்த தருணத்தில் எறும்புகள் மீண்டும் ஆதாயம் தேடிக்கொண்டு இருந்தன உயிருக்கு போராடும் அணில்குட்டியின் காயத்திலிருந்து ,இரவு முழுவதும் பெட்டி இடம் மாற்றம் செய்ய பட்டுகொண்டேயிருந்தது, கண்கள் திறக்கும் தருனங்களிளெல்லாம் அதன் நிலையை அறிய முயற்சிக்க மறக்கவில்லை.
அடுத்த நாள் கண்விழிப்பில், அவசர அவசரமாய் பெட்டியை பார்த்த எனக்காய், கண்ணீரை விட்டு சென்று இருக்கிறது அந்த அணில்குட்டி, என் அத்தனை முயற்சியும் தோற்றுவிட்டது, நான் உறங்கிக்கொண்டு இருந்த எந்த நிமிடத்தில் தன் உயிரை விட்டதோ?, அசைவுகளோடு பாவமாய் உற்று நோக்கிய அதன் கண்கள், அசைவற்று.. அழுதுகொண்டே எனக்குள் கேட்டுக்கொண்டேன் , அன்று அறியா வயதில் உயிரை எடுக்கும் உரிமை கிடைத்த எனக்கு, இன்று அறிந்த வயதில் உயிரை கொடுக்கும் உரிமை இல்லாமல் போயிற்று, எனக்குள்ளும் மனிதம் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக்கிடக்கிறது என்று புரிய வைக்க ஒரு உயிர், உயிரை விட்டு இருக்கிறதா?, பற்களை கடித்துக்கொண்டு துரத்தி துரத்தி கொன்ற கொடூரன் இப்பொழுதில்லை, என்னுள் மனிதம் துளிர்க்கசெய்து ,மரித்துவிட்டது அணில்குட்டி. இதயம் கனக்கிறது...இன்னும் மறையாமல்...