Tuesday, April 13, 2010

நினைவு தெரிந்த முதல் நாள்.....




இன்று என் அம்மா என்னை அழகுபடுத்தி,
ஏதேதோ என் காதில் சொல்லி என்னை,
என் அக்காவின் கையில் ஒப்படைக்கிறாள்,
என் அக்காவும் என்னை புஜ்ஜிமா, அம்முமா,
என்றெல்லாம் கொஞ்சம் அதிகமாய் கொஞ்சுகிறாள்,
சிரித்தேன், என் அம்மாவும், அக்காவும் சிரித்தார்கள்.
என் அக்கா என்னை "சமத்து" என்று சொல்லி, சரி போகலாமா ? என்றாள்.


சரி போகலாம் என்று சொல்லி, சிறிது தூரம் நடந்திருப்பேன்,
அம்மாவை காணோம், திரும்பி பார்த்தால் கலங்கிய கண்களுடன்,
பார்த்து போகும்படி சொல்லி கொண்டு இருந்தாள்..
எதற்காக அழுதாள் என தெரியாமலே நானும் அழுதுகொண்டு
திரும்பி ஓட முயன்ற, மறுகணம் என் அக்காவின் கைகள் எனக்கு பூட்டப்பட்ட விலங்காய் மாறி இருந்தன..

அந்த நிமிடம் எனக்கு தெரிந்த மிகப்பெரிய எதிரி என் அக்கா தான்,
அழுதுகொண்டே நடந்தேன், நடுநடுவே கோபத்தோடு அக்காவை பார்ப்பேன்,சிரிப்பாள்,முகத்தை கடித்து வைத்துவிடவேண்டும் போல்தோன்றும்.
நானும் அழுதும், அடம்பிடுத்தும், கிழேவிழுந்து புரண்டும் பார்த்துவிட்டேன், என் அக்கா என்னை விடுவதாய் இல்லை...

பள்ளியை நெருங்கிவிட்டேன், என்னைப்போல் அடித்து அழைத்துவரப்பட்ட கைதிகளை பார்த்தேன், அவர்களும் என்னைப்போல் பாவமாய்...
சிலபேர் மிட்டாய்களை காட்டி மிரட்டி அழைத்து வரப்பட்டிருந்தார்கள், அவர்கள் மிட்டாயை வாயில் வைத்தபடி அழுதுகொண்டிருந்தார்கள், இன்னும் சிலபேர் குச்சிகளைக்காட்டி மிரட்டி அழைத்து வரப்பட்டிருந்தார்கள், அவர்கள் குச்சியை தூக்கும் பொழுதெல்லாம் அழுதுகொண்டிருந்தார்கள்,

கொஞ்சம் அழுகை நின்றுருந்தது, இருந்தாலும் வேண்டுமென்றே அழுதேன்...
என் அக்காவோ, அவள் தோழிகளிடம் என்தம்பி என்று சொல்லி, சிரித்துக்கொண்டு இருக்கிறாள்.அவர்களும் சிரிக்கிறார்கள் நான் அழுவதை பார்த்து.
எனக்கோ அனைத்தும் புதிதாய்...

மணி அடித்தும், அவசர அவசரமாய் என் அக்கா என்னிடம்
அங்க போயி நிக்கணும், பாட்டு பாடுவாங்க, முடிந்ததும்
உன் வகுப்பறைக்கு போகிடனும், இடைவேளையில் அக்கா உன்னை வந்துபார்க்கிறேன் என்றாள். நிஜமாய் சொல்லிமுடித்ததும் நான் அழுத அழுகை இன்னும் மறக்காமல் இருக்கிறது.


அப்பொழுதுதான் என் அக்காவின் அருமை புரிகிறது,
அவள் பின்னாடி ஓடினேன், என்னை பிடித்துவந்து முதல்வகுப்பு
வரிசையில் நிற்கவைத்துவிட்டு கலங்கிய கண்களுடன் மூன்றாம்வகுப்பு வரிசையில் ஓடிநின்றுகொண்டாள்,
அழுதுகொண்டே அவளைத்தேடி கொண்டிருந்தேன்..


தேசியகீதம் முடிந்ததும் என்வகுப்பிற்கு சென்றேன், கன்னங்களில் கண்ணீர் வடிந்ததழும்போடு, அருகே அமர்ந்திருந்தவளை பார்க்கிறேன்,அவளோ சிரித்துக்கொண்டு இருக்கிறாள், அவளை பார்த்ததும் மெதுவாய் என் அழுகையை குறைத்தேன்.

இருந்தும் என் கவனம்முழுவதும் என் அக்காவை காணவேண்டும் என்பதிலே இருந்தது.
இடைவேளை முடிந்ததும் என் அக்கா ஓடிவந்து என்னை
இருக்ககட்டியணைத்துக்கொண்டு எதுக்கு அழுகிறாய்
என்று கேட்டதை நான் இன்னும் மறக்கவில்லை.

இடைவேளை முடிந்ததும் அவளுடனே ஓடிசென்று அவள்வகுப்பில் அமர்ந்து கொண்டேன், பாவம் அழாதகுறையாய் கெஞ்சினாள்,நான் இருக்கமாய் பிடித்துகொண்டேன்,ஆசிரியை வந்ததும் இழுத்துவரப்பட்டு முதல்வகுப்பில் கொண்டுவந்துவிடப்பட்டேன் பாவமாய்..
சிறிது நேரத்தில் பசிக்க ஆரம்பத்திவிட்டது,

மணி அடித்தது, வேகமாய் ஓடிவந்து பசிக்குதாமா என்று ,உணவை சாப்பிட கொடுத்து, இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு போகிடலாம் என்று சொன்னபொழுது நிஜமாய் என்உலகம் விடிந்ததாய் உணர்ந்தேன்.
மாலை மணி அடித்தும், அக்காவின் வகுப்பிற்கு ஓடிப்போனேன், அக்காவின் தோழிகள் சிரித்தார்கள். அக்காவோ என் கையைபிடித்து வா வீட்டிற்கு போகலாம் என்றாள்.
நிஜமாய் அந்த நிமிட சந்தோசம் இதுவரை நான் அனுபவித்தது இல்லை.


வீட்டிற்கு சென்றதும் அம்மாவை இருக்கமாய் பிடித்துக்கொண்டேன், நிறையா என்னை பற்றி சொல்லிக்கொண்டு இருந்தாள் அக்கா.ஆனால் என் அம்மாவிற்கு தெரிந்து இருக்கும் என் இருக்கமான பிடிப்பிலிருந்து, "இவன் என்னை விட்டு போக மறுக்கிறான், போக பிடிக்கவில்லை என்று".

என் தலைகோதி என்ன கற்றுகொண்டாய் இன்றைக்கு என்றாள்?.அன்று சரியாக சொல்ல தெரியவில்லை "அம்மாவோட பாசம் எவ்வளவு பெரியது என்று கற்றுக்கொண்டேன் என " ..இருந்தாலும் என் அழுகையில் புரிந்து கொண்டு இருப்பாள்,என் தாயல்லவா அவள்......

                                                                                         
                                             

4 comments:

Anonymous said...

Very Nice lines...Reminds my childhood days..keep posting

Shiva sky said...

realy great ya....

விஜய் said...

நன்றி Anonymous ...மிக்க நன்றி உங்கள் கருத்துகளுக்கு ..........

விஜய் said...

நன்றி C. .மிக்க நன்றி உங்கள் கருத்துகளுக்கு ..........

Post a Comment