
நான் சந்தியா,
உன்னை எனக்கு நன்றாய் தெரியும் நீ என் அத்தை மகன் என்பதால்,என் ஒவ்வொரு பள்ளி கோடை விடுமுறையும் - என் அம்மாவின் அம்மாவை காண ,என்னைச் சுமந்து வரும் - உன் வீட்டிற்கு,உன்வீட்டிற்கு வர கொஞ்சம் தயக்கம் தான்,
அப்படி தான் அந்த பத்தாம் வகுப்பு கோடை விடுமுறைக்கும், வெட்கத்தை வென்றுவிடும் ஆர்வத்தை, மறைக்க முடியாமல் வந்து விழுந்தேன் உன் வீட்டில் - காற்றில் ஊதிவிடப்பட்ட வேலிச்செடியின் பட்டுஇறகாய்.- நான்கைந்து ஆண்டுகளுக்கு பிறகு ,உன் வீட்டை நெருங்க நெருங்க எதோ ஒன்று மூச்சு விட சிரமப்படுத்தியது,அது சந்தோசமாய் இருக்கலாம், அளவுக்கு மிஞ்சிய வெட்கமாய் இருக்கலாம், நீண்ட நாட்களுக்கு பின் உன்னை காணும் ஆர்வமாய் இருக்கலாம்.எது என்று உணரும் முன் உன் வீட்டை அடைந்து விட்டேன்,
உன் அம்மாவிடம் பேசும்பொழுதே, என் கண்கள் நீ எங்கே? என்று கேட்டுக்கொண்டிருந்தது - அதற்கு தெரிந்த ஏதேதோ பாவனைகளில் பாவமாய், பாவம் உன் உன் அம்மாவிற்கு தான் புரியவில்லை,உடை மாற்றிக்கொண்டு வருவதாய் சொல்லி, உன் வீட்டின் அனைத்து அறைகளையும் தேடிவிட்டேன்,
என் கலங்கிய கண்கள் நீ காணவில்லை என்பதை உணர்த்தியது,உன்னை கண்டதும் எதுவும் பெரிதாய் பேசிவிடப்போவதில்லை என்பது என் உதட்டிற்கு தெரியும் தான் ,என் கண்களுக்கு தெரியவில்லை என்ன செய்ய...
எப்படி கேட்க உன் அம்மாவிடம் நீ எங்கே என்று?, எப்படி சொல்ல என் இதயம் கனக்கிறது என்று.என் கைபிடித்து இழுத்து, சாப்பிட அழைத்த உன் அம்மாவிற்கு தெரியாது கனத்த இதயத்தில் காற்று நுழைவதே கடினம் என்று, இதில் சாப்பாடு எப்படி.....
நான் வருவது தெரியாது உனக்கு, எங்கே சென்று இருப்பாய் என்ற கேள்வி, உணவோடு சேர்ந்து என் உடலுக்குள் சென்றது,சிறிது நேரத்தில் உன் சத்தம் கேட்டது "அம்மா பசிக்குது, சீக்கிரம் சாப்பாடு போடு, திரும்பவும் விளையாட போகணும்",வார்த்தைகள் உணர்ந்த அடுத்த கணம், வெட்கம், சந்தோசம் , சொல்ல முடியா உணர்வுகள் ஒருபுறம் இருக்க, கைகள் தானாய் முகத்தை, தலைமுடியை சரி செய்தது, நீ சமையலறைக்குள் வந்த அந்த நிமிடம் என்னை அறியாமல் வெட்கம் என் முகத்தில் ஒட்டிக்கொண்டது,
என் பெண்மையை உணரவைத்தது, என் முகத்தில் ஒட்டி யிருந்த அத்தனை வெட்கமும்,
சமையறையில் வேகமாய் எடுத்துவைத்த உன் காலடி, வேகமாய் பின்னோக்கியது என்னைப் பார்த்ததும்,"அம்மா நான் அப்புறம் சாப்பிட்டுகொள்கிறேன் " என்ற சத்தம் மட்டும் தான் அங்கிருந்தது ,உன்னைத்தவிர. திட்டிகொண்டு இருந்தேன் , உன்னை காண முடியாமல் செய்த- என் வெட்கத்தை ,
உனக்காய் காத்துகொண்டு இருந்த என்னை, சிரிக்க வைத்தது உன் அம்மாவின் முனகல்
"என்ன ஆச்சு இவனக்கு இன்னைக்கு , சாப்பிடாம கூட விளையாட ஓடிட்டான் "
கண்கலங்க செய்ததது ,"சரி கிளம்புகிறோம்" என்ற என் அம்மாவின் விடை பெரும் வார்த்தை ."நாளைக்கு போகலாம்" என்று உன் அம்மா கூறிய வார்த்தையில் அமர்ந்து கொண்டு அடம்பிடித்தது என் இதயம்,
நீ வந்துவிட வேண்டும் என்று ஏங்கிய மனதை புரிந்தவன் போல வந்து நின்றாய் , நாங்கள் நகரப்போகிற அந்த நொடியில் ,இந்தமுறை முகத்தோடு ஒட்டி இருந்த வெட்கத்தை பிய்த்து, மனதுக்குள் புதைத்துகொண்டு உன்னை பார்த்தேன்,
உன் வெட்கத்தை மறைக்க உன் அம்மாவின் கழுத்தை இருக்கமாய் உன் அம்மாவின் பின்புறம் இருந்து பிடித்துகொண்டு ,உன் உதட்டை மெல்லியதாய் விரித்து, உன் பற்களை வெட்கத்தில் காட்டினாய், உன் கண்ணும் என் கண்ணும் தெரியாமல் மோதிக்கொண்ட அந்த சில நிமிடத்தில் உன்னிடம் பேச நினைத்த அனைத்தையும் பேசியதாய் தோன்றியது,
விடைபெற்ற அந்த வினாடியில் தான் தெரியும் , பேசியும் - தீராத வார்த்தைகள் என்னுள் இருக்கிறது என்று,நான் நகரும்பொழுது நீ கையசைத்து வழி அனுப்பி வைத்தது எதோ வலியை என்னுள் திணித்தது .
பேருந்தின் வேகம் என் கலங்கிய கண்ணீரினை காற்றுடன் கலக்க செய்தது ,
எத்தனை முறை உன் வீட்டிற்கு வந்து இருக்கிறேன், இதற்கு முன் என்றாவது உன் வெட்கத்தை காட்டி ,இப்படி அழ செய்ததுண்டா?.என்ற கேள்வியோடு என் வீட்டை அடைந்தேன்.
காதலிக்கும் வயதுமில்லை, காமமறியும் வயதுமில்லை அது , இதயம் கனத்த அந்த வினாடிகள், இன்றும் என்னுள் இனிமையாய், காதலும் இல்லாமல், காமமும் இல்லாமல் கண்ணியமாய் பசுமை நிறைந்த கனவாய் மட்டும் ....