
நீ அழகாய் கட்டிய மணல்வீடுகளையும், குச்சிவீடுகளையும் விளையாட்டாய் இடித்தெறியும் என்னை,ராட்சசியாய் மாறி என்முடியை பிடித்து இழுத்து அடித்துவிடுவாய்,
நான் உன்தம்பி அல்லவா,வலித்தாலும் சிரிப்பேன் ,
நீயோ என்னை அடித்துவிட்டு, அழுது கொண்டுபோவாய் நம் அம்மாவிடம்,
அங்கேயும் திட்டே மிஞ்சும் உனக்கு,சின்ன பையனை ஏன் அடித்தாய் என்று,
அன்று உன் அழுகையை பார்த்து ரசித்தேன்..
காலங்கள் கடந்தன, நாட்கள் நகர்ந்தன....
இன்றைய தேதியில் உனக்கு திருமணம் நடந்து பத்து ஆண்டுகள் கடந்து இருக்கும்.
நான் இப்பொழுது பொறியியல் படிப்பை முடித்து
சென்னையில் வேலை தேடிக்கொண்டுஇருக்கிறேன்.
இன்று நானே அழுகிறேன் ஒவ்வொரு நாளும்,
எனக்கு வேலை கிடைக்கவேண்டும் என்று
நீ அழகாய் பார்த்து பார்த்து வளர்த்த உன் முடியை காணிக்கை செய்கிறேன் என்று கடவுளிடம் கைகூப்பி வணங்கிய போது நீ தான் எனக்கு தெரிந்தாய் கடவுளாய்,
எத்தனையோ நாட்கள் உனக்குமுன் பள்ளியில் இருந்து ஓடிவந்து உன் உணவையும் சேர்த்து சாப்பிட்டு இருக்கிறேன்,அன்றெல்லாம் எனக்கு தெரியாது அக்கா, நான் முழுவதையும் நன்றாக உண்ணவேண்டும் என்பதற்காகவே துரத்திக்கொண்டுவந்து இருக்கிறாய் என்று.
வாரத்தில் நான்குநாட்கள் விரதம் இருக்கிறாய் நான் நல்லபடியாக சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று,
மாதத்திற்கு ஒருமுறை முட்டிக்காலில் கோவிலை சுற்றிவருகிறாய், தீ மிதிக்கிறாய், என் பயணங்கள் சரியாக அமைய வேண்டும்என்று..
மாமாவோடும், உன் குழந்தைகளோடும் சந்தோசமாக இருக்க வேண்டிய நேரங்களில் கூட " வேலை கிடைத்துவிடும், நம்பிக்கையாய் இரு, அக்கா நான் உன்னோடு இருக்கிறேன்" என்ற குறுந்தகவல் அனுப்பமறந்ததில்லை,
நல்லா சாப்பிட்டியா?, எதைப்பற்றியும் கவலைப்படாம நன்றாக தூங்கணும், சரியா? என்று அலைபேசியில் நீ பேசும்போது, நான் என்ன சின்னகுழந்தையா என்று, நான் கேட்க தொடங்கும்முன்பே நீ கூறுவாய் எத்தணை வயதானாலும் நீ எனக்கு மூன்று மாதகுழந்தை தான் என்பாய், அப்பொழுதெல்லாம் தொலைபேசியை ஓரமாய் வைத்துவிட்டு தேம்பி தேம்பி அழுது இருக்கிறேன்.
நான் நேர்முகத்தேர்விற்கு செல்லும்பொழுது நண்பர்கள் சொல்வார்கள் "ஆல் தி பெஸ்ட் " என்று, அப்பாவும் ,அம்மாவும் சொல்வாங்க "பாத்து பண்ணு" என்று , நீ மட்டும் தான் சொல்வாய் மறக்காம சாப்பிட்டுட்டு போமா என்று.
நான் உன் அழைப்பை ஏற்க்கவில்லை என்றால் என் நண்பர்களை அழைத்து என்தம்பி எப்படி இருக்கிறான் என்று பதறுகிறாய்,
நான் உன்னோடு தொலைபேசியில் பேசிகொண்டு இருக்கும்பொழுதெல்லாம் நண்பர்கள் கிண்டலடிப்பார்கள் பெண் தோழியுடன் பேசிபழகு அக்காவிடம் பேசுவதை விட்டுவிட்டு என்று சொல்லும் அவர்களுக்கு தெரியாது
எனக்கு முதலும் கடைசியுமான இவ்வுலகின் மிகச்சிறந்த தோழியும் நீ தான் என்று..
உன் வயிற்றில் நான் சுமக்கப்படவில்லை , உன் மார்பில் பால் அருந்தியதில்லை இதை தவிர வேறு வித்தியாசம் காண முடியவில்லை என்னால் உனக்கும், நம் அம்மாவிற்கும்.
இப்பொழுதெல்லாம் நீ அம்மாவாகவே தெரிகிறாய் ,
உன்னை அம்மா என்று தான் அழைக்கிறேன் ...
அம்மா...