மெதுவாய் நகர ஆரம்பிக்குறேன் நத்தைக்கு சொந்தக்காரனாய். வண்டுகளின் ரீங்காரமும், குருவிகளின் கூச்சல்களும், மெதுவாய் என்னை பயமுறுத்த முயற்சிக்கின்றன..அந்த தூரத்து குடிசைவீட்டை ஏதோ ஒரு அசைக்கமுடியா நம்பிக்கையில் நெருங்குகிறேன். நிலாவின் வெள்ளிப்புன்னகையும்,குடிசைவீட்டின் ஒற்றை மின்சார விளக்கும் எனக்குள் எதோ ஒருநம்பிக்கை தொடுக்க, தொடர்ந்து முயற்சிக்கிறேன். நெருங்கிவிட்டேன்., கிளுவம் மரத்திலான அந்த வீட்டின் வேலி என்னுள் ஒரு இருபது வருடம் காலம் பின்னோக்கி நகர்த்தியது சட்டென்று. என் கிராமத்தின் சாயலும் அடையாளமும் அதுவாய் தான் இருந்தது. ஒரு இரவில், பரிட்சயம் இல்லாத ஒரு குடிசையின் வாசலில் இருந்து சத்தமிட உள்ளுள் எதோ ஒன்று தயக்கத்தை கொடுக்க., சத்தமிடாமல் இருப்பது அதையும் தாண்டிய ஒரு முரணை ஏற்படுத்திவிடும் என்பதற்காய்,உதட்டை விரித்து அழைக்க முயற்சிக்கையில், எழுபதுகளைத்தாண்டிய ஒரு வயதான உருவம் குடிசைவீட்டின் வாசலை குனிந்து கடந்து,பின் நிமிர்ந்து என்னை நோக்குகிறது. யாரு, என்ன வேணும் என கேட்க?, சட்டென்று கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழிக்க, மெதுவாய் தள்ளாடியபடி நெருங்குகிறார்.
ஒரு வேலையாய் இங்கே வந்தேன் பெரியவரே, இருட்டாகிடுச்சு, அதான் கடைசி பஸ் இங்க இருந்து எத்தனை மணிக்கு என கேட்க?.என்னை மேலும் கீழும் உற்றுநோக்கி, உண்மையில் நான் யார் என்பதை தெரிந்துகொள்ள முயற்சிக்கிறார். சற்றே ஈரம் காய்ந்த தலைமுடி,முதல் இரண்டு பொத்தான் இல்லாத மேல் சட்டை, துளியும் ஈரம் காயாத, தரையில் உரசி தேய்ந்து போன ஒரு கால் சட்டை,கருப்பும் வெள்ளையும் கலந்த ஒரு காலனி.. அவருள் எதோ ஒரு சந்தேகத்தை விதைத்திருக்கிறது போலும்., அத்தனை கேள்விகளை அடுக்கடுக்காய் வைத்தார் ஒரு சில நிமிடங்களில்..கடைசியில் எதோ நம்பிக்கை வந்தவராய்,மீனாட்சி என்றழைத்து குடிக்க தண்ணீர் கொண்டு வர சொல்கிறார். கிட்டத்தட்ட ஒரு இமாலய சாதனை செய்துவிட்ட திமிர் என்னுள் புன்முறுவலை திணிக்க. சுற்றியும் உற்று நோக்குகிறேன் ஒரு கணம்.
குடிசைக்கு சற்று தொலைவில் ஒரு பெரிய கிராமம் இருப்பதை மின்விளக்குகள் அப்பட்டமாய் காட்டியது. எதோ ஒரு கணக்கை போட்டுக்கொண்டு திரும்ப, அதே எழுபதுகளைத்தாண்டிய ஒரு ஒல்லியான தேகம், கையில் தண்ணீரோடு வந்து நிற்க., சட்டென்று இந்த வயசில் நானெல்லாம் இருப்பேனா என்று தெரியவில்லையே என உள்ளில் முனகிக்கொண்டு, தண்ணீரை வாங்குகையில், யாரு?, காங்கேயம் மவனா? என கேட்க., அட இவ ஒருத்தி, அந்த தம்பி ஒரு சோலியா இந்த பக்கம் வந்து இருக்காப்டி, பஸ் எப்போன்னு கேட்கவந்து இருக்காப்டி அப்டினு சொல்லி முடித்தார்..இந்நேரத்துல ஏது பஸ்சு,ஆவரங்காடு போனாதான் பஸ்சு என்று சொல்லிமுடிக்க, அது எவ்வளவு தூரமுங்க என கேட்கிறேன், அதுபோகணும் ஐஞ்சாறு கல்லுன்னு சொல்ல. ரொம்ப தூரம்னு மட்டும் புரிந்தது. சரி, நிலா நடை நமக்கொன்றும் புதிதில்லை என உள்ளுள் நிறுத்திக்கொண்டு, சரி நான் வருகிறேன் நன்றிங்கய்யா, நன்றிங்கம்மா என்று புன்னகையோடு பதிலளித்துவிட்டு நகருகையில், இப்படியே போகலாமுங்களா என ஒற்றையடிப்பாதையை நோக்கி எனது கேள்வியை நீட்டுகிறேன்
எனது கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன், பெரியவர் ஏதோ ஒன்றை கேட்க எத்தனிக்கிறார்.. சொல்லுங்கய்யா என்று அவருக்கு வழிவிடுகிறேன். அஞ்சாறு கல்லு தூரத்துக்கு மேல போகணும், இந்நேரத்துல போயிடுவியா தம்பி?..இதெல்லாம் பழக்கப்பட்டது தான் பெரியவரே., வேற என்ன பண்றது இங்கேவா தூங்குறது என்று விளையாட்டாய்க்கூறியதை பிடித்துக்கொண்டனர்., வேணும்னா இருந்துட்டு காலைல போறாதா இருந்தா கூட போ என்று கூறி முடிக்க.. என்ன சொல்ல சில நேரங்களில் இப்படியும் நடக்கும் கிராமத்தில் மட்டுமே. இந்த விலாசம் எப்படி போகணும் என்று அவசரமாய் நீட்டும் ஏதோ ஒரு ஊழியனுக்கு விவரம் தெரிவிக்க கூட நேரமில்லாத, பயப்படும் நகரத்தை தூக்கி மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிடுகிறது என் தேசத்து கிராமத்தின் அப்பழுக்கற்ற அன்பின் அடையாளம்.
ஒன்று மட்டும் நன்றாய்ப்புரிந்தது, சில நேரங்களில், சில தாங்கிக்கொள்ளமுடியா அழுத்தம் நிறைந்த தருணங்களில் இருந்து தப்பிக்க நினைத்தால் மட்டும் போதுமானதாகிவிடாது, அதிலிருந்து வெளியில் வர முயற்சிக்க வேண்டும், அந்த முயற்சி புதியதொரு அனுபவத்தை உருவாக்கித்தருவதோடு , அந்த அழுத்தத்திற்கான தீர்வாகவும் கூட மாறிவிடுகிறது. அப்படி பட்ட தருணத்தை தான் உணர்ந்தேன் அப்பொழுது.,ஒரு அறிமுகமில்லாத மனிதர்களை தன் வசப்படுத்தி தன் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதே ஒரு அலாதி சுகம் தான். கிட்டத்தட்ட நட்பு, காதல், காமம்., அழகாகவும், ஆழமாகவும் இருப்பதற்கு அறிமுகமில்லாதவர்களிடத்தில் ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் இந்த அழகியல் கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.
அவர்கள் வார்த்தை விழுந்த நேரத்தில் எதோ ஒரு மரியாதையும், தயக்கமும் என்னை தடுமாற வைத்தது. விளையாட்டாய் கேட்டதாகவும், நான் கிளம்புகிறேன் என்றும் கூறுகிறேன்,உள்ளுக்குள் எதோ ஒன்று இருந்துவிட்டு போக நினைக்க., அவர்களின் ஒரு சில வற்புறுத்தலிலே சரி என்று கூறிவிட்டு தயக்கமாய் அமர்கிறேன் குடிசையின் திண்ணையில். சாப்பிட்டியா தம்பி என்று ஆரம்பிக்கும் முன்னரே , சாப்பிட்டுவிட்டதாகவும், பசிக்கவில்லை என்று சத்தமாய் கூற, பரவால்ல சாப்பிட்டாலென்ன கொஞ்சம் சாப்பிடுங்க என்ற வார்த்தை பசிக்க செய்தது. அதற்குமேல் வேண்டாமென்று அடம்பிடிக்க எனது பசி அனுமதிக்கவில்லை. பட்டென்று சரி கொஞ்சமாய் என்று முடிக்கும் பொழுது தான் யோசித்தேன், சாப்பாடு இருக்கான்னு தெரியாம சொல்லிவிட்டோமே என்று சங்கடமாய் போக., பசிக்கலங்க வேண்டாமென்று மீண்டும் ஒருமுறை அழுத்தமாய் கூறுகிறேன்.
மருமவ கொண்டாந்து கொடுத்துட்டு போனது அப்டியே தான் இருக்கு,, இவருக்கு இதெல்லாம் புடிக்கிறது இல்ல, கரைச்சி தான் குடிப்பாங்க தம்பி..சாப்பாடு இருக்கு நீ சாப்பிட்டு என்று உணவோடு வந்து நிற்க ,எவ்வளவு அழகான உலகம் இது, தேடிப்பிடித்து நரகத்தில் அமர்ந்துகொண்டு குத்துது, குடையுது என்பதில் எப்படி நியாயம் இருக்க முடியும்..வெறும் நீரைக்கொண்டு கரைத்து வைத்திருக்கும் ஆகாரத்தில் அவ்வளவு திருப்தி அடைகிறார்கள், நமக்கோ விதவிதமான காய்கறிகளை உணவாய் பார்க்கும்பொழுது கூட உண்ணதோணாமல் அலுவலக வேலைகளும், அவன் அண்ணாநகர்ல ஒரு வீடு வாங்கிட்டான், நம்ம இப்படி இருக்கோம், என்னமோ வாழ்க்கை என்று, அந்த உணவிற்கான ஒரு மரியாதையை கொடுக்க தவறிவிடுகிறோம் என்பது என்னில் உறுத்தியது..
நடப்பதை நம்பிவிடாமல் இருக்கமுடியவில்லை என்பது போல் என்னில் எதோ ஒரு தயக்கமோ,சந்தோசமோ என்னில் திரும்ப திரும்ப ஓடியது. மெதுவாய் தயக்கத்தை என் கையோட கழுவிவிட்டு அமர்கிறேன் அத்தனை நன்றியோடு அவர்கள் முன். ஒவ்வொரு பருக்கையும் அவர்கள் மீது ஒரு நன்றி உணர்வை ஏற்படுத்த, ஒரு வித சிலிர்ப்போடு உண்டுவிட்டு எழுகிறேன். அதற்குப்பிறகான உரையாடலில் என் முழுமையும், அவர்களின் முழுமையும் அறிந்து நெருங்கினோம் அன்பால். எத்தனையோ நாட்கள் அன்பை கொடுப்பதற்கு முன் வாங்குவதிலேயே குறியாக இருந்திருக்கிறேன், முதல் முறை கற்கிறேன் முதலில் கொடுப்போம்,பிறகு பெறுவோம் என்று.. ஆசையாய் இருக்கிறது கற்றுக்கொள்ள,எவையெல்லாம் அழகென்று திரிந்து,தழுவி,உருகி முடித்தோமோ அவையெல்லாம் சுருங்கி,தளர்ந்து, வீழ்ந்து போவதும், திகட்ட
திகட்ட கொட்டிய காதல் மட்டும் அப்படியே மறையாமல் ஒவ்வொரு நொடியும் புதிது
புதிதாய் முளைத்து ஆயிரமாய் பெருக்கெடுப்பதை உணர்கிறேன்.இந்த வாழ்க்கை இதையல்லவா கற்றுக்கொடுத்து இருக்கவேண்டும் , மாறாக அழுத்தத்தையும், போட்டி என்ற பொய்யான பிம்பத்தில் பொறாமையையல்லவா வளர்த்துவிட்டுள்ளது, பணம் பணம் என்றே என்னை அழுத்திக்கொன்றுள்ளது. சில நேரங்களில் என்ன பிரச்சினை என்றே என்னால் யூகிக்க கூட முடியாமல் உயிரோடு சமாதியாக்கியிருக்கிறது.
பேசிக்கொண்டிருக்கையில் சட்டென்று....
தொடரும்...